Other gifts! | Anusasana-Parva-Section-65 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 65)
பதிவின் சுருக்கம் : பொன், வெள்ளி, நீர், நெய், குடை, தேர் ஆகியவற்றைக் கொடையளிபதால் உண்டாகும் பலன்களையும், அவை குறித்த பெரியோர்களின் கருத்துகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும்பாட்டன் பிரம்மனின் மகனான சிறப்புமிக்க அத்ரி, "பொன்னைக் கொடையளிப்பவர்கள் இவ்வுலகில் அனைத்தையும் கொடையளிபவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்" என்றார்.(1)
மன்னன் ஹரிச்சந்திரன், "பொன்னைக் கொடையளிப்பது பாவத்தைப் போக்கவல்லது, நெடுநாள் வாழ்வுக்கு {நீடித்த ஆயுளுக்கு} வழிவகுப்பது, பித்ருக்களுக்கு வற்றாத பலனை உண்டாக்கவல்லது" என்றான்.(2)
மனு, "நீர்க்கொடையே அனைத்துக் கொடைகளிலும் சிறந்தது" என்றார். எனவே, ஒரு மனிதன் கிணறுகளையும், குளங்களையும், தடாகங்களையும் தோண்ட வேண்டும்.(3) பல்வேறு உயிரினங்கள் நீரைப் பெறும் நிறைந்த கிணறானது, அதைத் தோண்டிய மனிதனின் பாவச்செயல்களில் பாதியை நீக்கிவிடுவதாகச் சொல்லப்படுகிறது.(4) பசுக்களும், பிராமணர்களும், அறவோரும் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளப் பயன்படும் கிணறு, குளம் அல்லது தடாகங்களைத் தோண்டிய ஒரு மனிதன் சார்ந்த மொத்த குலமும் நரகம் மற்றும் பாவத்தில் இருந்து மீட்கப்படுகிறது.(5) கோடை காலத்தில் தடையில்லாமல் அனைவரும் நீர் பெறும் வண்ணம் கிணறு அல்லது குளத்தைத் தோண்டிய மனிதன் அனைத்து வகைப் பேரிடர்களையும் கடக்கிறான்.(6)
சிறப்புமிக்கப் பிருஹஸ்பதி, பூஷன், பகன், அஸ்வினி இரட்டையர்கள், நெருப்பு தேவன் {அக்னி} ஆகியோரை நெய் நிறைவடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது.(7) நெய்யானது உயர்ந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். அது வேள்விக்கான உயர்ந்த {மிக முக்கிய} தேவையாக இருக்கிறது. நீர்மங்கள் அனைத்திலும் அதுவே சிறந்தது. நெய்யைக் கொடையளிப்பது மிக மேன்மையான பலனை உண்டாக்குகிறது.(8) மறுமையில் இன்பத்தை வெகுமதியாக அடைய விரும்புபவனும், புகழையும் செழிப்பையும் விரும்புபவனுமான மனிதன், தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவுடன் பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்க வேண்டும்.(9) அஸ்வினி மாதத்தில் பிராமணர்களுக்கு நெய்க்கொடையளிக்கும் மனிதனிடம் நிறைவடையும் அஸ்வினிகள் அவனுக்கு மேனி அழகை அளிக்கின்றனர்.(10) பிராமணர்களுக்கு நெய்க் கலந்த பாயசத்தைக் கொடையாக அளிக்கும் மனிதனின் வசிப்பிடத்தை ராட்சசர்கள் தாக்குவதில்லை.(11)
நீர் நிறைந்த குடுவைகளைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் தாகத்தால் இறக்கமாட்டான். அத்தகைய மனிதன் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் அடைவான், அவன் எந்த வகைத் துன்பத்திற்கும் ஆளாகமாட்டான்.(12) பெரும் பக்தியுடனும், புலனடக்கத்துடனும் பிராமணர்களில் முதன்மையானோருக்கு கொடையளிக்கும் மனிதன், அந்தப் பிராமணர்கள் தங்கள் தவங்களின் மூலம் வென்ற பலன்களில் ஆறில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறான்.(13) பிராமணர்களுக்கு வாழ்வாதாரங்களையும், சமைப்பதற்கும், குளிர்விரட்டவும் உதவும் விறகுகளையும் கொடையளிக்கும் மனிதன், தன் நோக்கங்கள் அனைத்தும், செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவதைக் காண்பான். அத்தகைய ஒருவன், தன் பகைவர்கள் அனைவரையும் விட அதிகக் காந்தியுடன் ஒளிர்வது காணப்படுகிறது.(14,15) அத்தகைய மனிதனிடம் சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி} நிறைவடைகிறான். மற்றொரு வெகுமதியாக அவன் ஒருபோதும் கால்நடைகள் {விலங்குகள்} அற்றவனாக ஆவதில்லை, மேலும் போரில் அவன் நிச்சயம் வெற்றி அடைவான்.(16)
ஒரு குடையைக் கொடையளிக்கும் மனிதன், பிள்ளைகளையும் {சந்ததியையும்}, பெருஞ்செழிப்பையும் அடைகிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் கண் நோயால் பாதிக்கப்படுவதில்லை. ஒரு வேள்வியைச் செய்வதால் உண்டாகும் பலன் அவனுடையதாகிறது.(17) கோடை காலத்திலோ, மழைக்காலத்திலோ ஒரு குடையைக் கொடையளிக்கும் மனிதனின் இதயம், எக்காரணத்தினாலும் எரிச்சல் அடைவதில்லை.(18) அத்தகைய மனிதன் அனைத்து வகைக் கடினங்கள் மற்றும் தடைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் விரைவாக வெல்கிறான். ஓ! மன்னா, உயர்ந்த அருளைக் கொண்டவரும், சிறப்புமிக்க முனிவருமான சாண்டில்யர், அனைத்துக் கொடைகளிலும் தேர்க்கொடையே சிறந்தது" என்று சொன்னார்" என்றார் {பீஷ்மர்}.(19-20)
அநுசாஸனபர்வம் பகுதி – 65ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |