Merits of gifts! | Anusasana-Parva-Section-66 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 66)
பதிவின் சுருக்கம் : காலணி, எள், நிலம், பசு, உணவு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, சுடு மணலில் நடக்கும்போது, பாதம் சுடும் பிராமணர் ஒருவருக்குக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன் என்ன பலன்களை அடைகிறான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிராமணர்களின் பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்குக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன், முட்கள் அனைத்தையும் நசுக்குவதில் வென்று, அனைத்து வகைக் கடினங்களையும் கடகிறான்.(2) ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய மனிதன் தன் எதிரிகளை அனைவரின் தலைகளுக்கு மேல் இருக்கிறான். ஓ! ஏகாதிபதி, கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டவையும், பொன் மற்றும் வெள்ளியாலானவையுமான வாகனங்கள் அவனுக்குக் கிடைக்கும். காலணிகளைக் கொடையளிப்பவன், நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வாகனத்தைக் கொடையளித்த பலனை ஈட்டுவதாகச் சொல்லப்படுகிறது" என்றார்.(3,4)
யுதிஷ்டிரன், "ஓ! பாட்டா, எள், நிலம், பசு மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடையளிப்பதால் கிட்டும் பலன்களை மீண்டும் விரிவாக எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)
பீஷ்மர், "ஓ! குந்தியின் மகனே, எள்ளைக் கொடையளிப்பதனால் கிட்டும் பலனென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் சொல்வதைக் கேட்ட பிறகு, விதிப்படி எள்ளைக் கொடையளிப்பாயாக.(6) எள்ளானது, பித்ருக்களுக்கான சிறந்த உணவாகச் சுயம்புவான பிரம்மனால் உண்டாக்கப்பட்டது. எனவே, எள்ளைக் கொடையளிப்பது பித்ருக்களை எப்போதும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. மாக {மாசி} மாதத்தில் பிராமணர்களுக்கு எள்ளைக் கொடையளிக்கும் மனிதன், அச்சுறுத்தும் அனைத்துவகை உயிரினங்களும் நிறைந்த நரகத்தை ஒருபோதும் காண வேண்டியதில்லை.(8) எள்ளைக் காணிக்கையளித்துப் பித்ருக்களைத் துதிக்கும் ஒருவன், அனைத்து வேள்விகளிலும் தேவர்களை வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். ஒருவன் எந்நோக்கமும் இல்லாமல் ஒரு சிராத்தத்தில் எள்ளைக் காணிக்கையளிக்கக்கூடாது[1].(9) பெரும் முனிவரான கசியபரின் அங்கங்களில் இருந்து எள் உண்டானது. எனவேதான் கொடை குறித்த காரியங்களில் அவை உயர்ந்த பலனைத் தரக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.(10)
[1] "பலனில் விருப்பமில்லாமல் செய்யப்படும் அகாமச் செயல்கள், பலனில் விருப்பத்துடன் செய்யப்படும் சகாமச் செயல்கள் என இருவகைச் செயல்கள் இருக்கின்றன. எள்ளுடன் கூடிய சிராத்தம் பலனில் விருப்பமில்லாமல் ஒருபோதும் செய்யப்படக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எள்ளைக் கொண்டு பித்ருயாகம் செய்பவன் ஸத்ரயாகங்களெல்லாஞ் செய்தவனாகிறான். சிரத்தையில்லாமல் எள்ளைக் கொண்டு சிராத்தம் செய்வது ஒருகாலும் தகாது" என்றிருக்கிறது.
எள்ளானது செழிப்பையும், மேனி அழகையும் கொடுத்து அந்தக் கொடையாளியைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையச் செய்கிறது. இந்தக் காரணத்தினால்தான் எள்ளைக் கொடையளிப்பது வேறு எந்தப் பொருளையும் கொடையளிப்பதைவிடச் சிறப்புமிக்கதாகிறது.(11) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ஆபஸ்தம்பர், சங்கர், லிகிதர், பெரும் முனிவரான கௌதமர் ஆகியோரனைவரும் எள்ளைக் கொடையளித்ததன் மூலமே சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(12) பாலினக் கலவியைத் தவிர்த்து பிரவிருத்தி அறங்கள் அல்லது செயல்களை நோற்று, எள் காணிக்கையுடன் ஹோமம் செய்யும் பிராமணர்கள் (தூய்மையிலும், திறனிலும்) தடுப்பு மருந்தான ஹவிக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்[2].(13) எள்ளுக்கொடையானது அனைத்துக் கொடைகளுக்கும் மேலானதாகப் புகழ்பெற்றது. கொடைகள் அனைத்தின் மத்தியிலும் எள்ளுக்கொடையானது வற்றாத பலனை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுகிறது.(14) பழங்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஹவி (தெளிந்த நெய்) கிடைக்காத போது, ஓ! பகைவர்களை எரிப்பவனே, முனிவர் குசிகர் தன் வேள்வி நெருப்புக்ள மூன்றுக்கும் எள்ளையே காணிக்கையளித்துச் சிறந்த கதியை அடைவதில் வென்றார்.(15) ஓ! குருக்களின் தலைவா, இவ்வாறே சிறந்த எள்ளுக்கொடை குறித்த விதிமுறைகளை உனக்குச் சொன்னேன். இந்த விதிமுறைகளின் விளைவாலேயே எள்ளுக்கொடையானது மிக மேன்மையான பலனைக் கொண்டது எனக் கருதப்படுகிறது.(16)
[2] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணர்களெல்லாரும் இந்திரியங்களை ஜயித்தவர்களாகி எள்ளை ஹோமஞ்செய்து கொண்டிருக்கின்றனர். எள்ளு பசுவின் நெய்க்குச் சமமானது; ஸந்ததி விருத்திக்கும் காரணமானது" என்றிருக்கிறது.
இதன்பிறகு நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி, ஒரு காலத்தில் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், சுயம்புவான பிரம்மனின் முன்னிலைக்குச் சென்றனர்.(17) பூமியில் ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவர்கள் பிரம்மனை சந்தித்து, "எங்கள் வேள்விக்காக இஃது எங்களுக்கு வேண்டும்" எனச் சொல்லி மங்கலப் பூமியில் ஓர் இடத்தை அவனிடம் இரந்து கேட்டனர்.(18)
தேவர்கள், "ஓ! சிறப்புமிக்கவரே, நீரே தேவர்கள் அனைவரின் மற்றும் பூமி அனைத்தின் தலைவராவீர். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, உமது அனுமதியுடன் நாங்கள் ஒரு வேள்வியைச் செய்ய விரும்புகிறோம்.(19) வேள்விப் பீடத்தை அமைக்கச் சட்டப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் பூமியைப் பெறாத மனிதன், தான் செய்யும் வேள்வியின் பலனை ஒருபோதும் ஈட்டுவதில்லை.(20) அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட அண்டமனைத்தின் தலைவன் நீரே. எனவே, நாங்கள் செய்ய விரும்பும் வேள்விக்காகப் பூமியில் ஒரு பகுதியை எங்களுக்கு அருள்வதே உமக்குத் தகும்" என்று கேட்டனர்.(21)
பிரம்மன், "தேவர்களில் முதன்மையானோரே, கசியபனின் மகன்களே, நீங்கள் நினைத்த வேள்வியை நீங்கள் எங்கே செய்வீர்களோ அந்த நிலப்பகுதியை நான் உங்களுக்குத் தருவேன்" என்றான்.(22)
தேவர்கள், "ஓ! புனிதமானவரே, எங்கள் விருப்பங்கள் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டன. நாங்கள் எங்கள் வேள்வியைப் பெரிய தக்ஷிணையுடன் இங்கே செய்யப் போகிறோம். எனினும், முனிவர்கள் இந்த நிலப்பகுதியை எப்போதும் துதிக்கட்டும்" என்றனர்.(23)
அப்போது அந்த இடத்திற்கு அகஸ்தியர், கன்வர், பிருகு, அத்ரி, விருஷாகபி, அசிதர் மற்றும் தேவர்கள் ஆகியோர் வந்தனர்.(24) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, அப்போது உயர் ஆன்ம தேவர்கள் அங்கே தங்கள் வேள்வியைச் செய்தனர். அந்த முதன்மையான தேவர்கள் அதை {அந்த வேள்வியை} உரிய நேரத்தில் நிறைவடையச் செய்தனர்.(25) மலைகளில் முதன்மையான இமயத்தின் சாரலில் தங்கள் வேள்வியை நிறைவடையச் செய்த தேவர்கள், தங்கள் வேள்வியில் இருந்து எழும் பலனில் ஆறில் ஒரு பகுதியை நிலக்கொடைக்குக் கொடுத்தனர்.(26) சாணளவு நிலத்தையாவது நம்பிக்கையுடனும், மதிப்புடனும் (ஒரு பிராமணனுக்குக்) கொடையளித்த மனிதன் எந்தக் கடின சூழ்நிலையிலும் ஒருபோதும் சோர்வடைய வேண்டியதில்லை, மேலும் அவன் எந்தப் பேரிடரையும் ஒருபோதும் சந்திக்க மாட்டான்.(27)
குளிர், காற்று, சூரியன் ஆகியவற்றை வெளியே வைப்பதும், ஒரு தூய நிலப்பகுதியில் நிற்பதுமான ஒரு வீட்டைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி தேவலோகத்தை அடைந்து, அவனது பலன் தீர்ந்தாலும் ஒருபோதும் அங்கிருந்து வீழாமல் இருப்பான்.(28) ஓ! மன்னா, ஞானம் கொண்ட ஒரு கொடையாளி, வசிப்பதற்குரிய ஒரு வீட்டைக் கொடையளிப்பதன் மூலம், சக்ரனின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான். அத்தகைய மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(29) புலனடக்கம் கொண்டவரும், வேதங்களை நன்கறிந்தவரும், பிறவியால் ஆசான்களின் குடும்பத்தைச் சார்ந்தவருமான ஒரு பிராமணர் எவனுடைய வீட்டில் மனநிறைவுடன் வசிக்கிறாரோ அவன் உயர்ந்த இன்ப உலகங்களை அடைவதில் வென்று இன்புற்றிருக்கிறான்[3].(30)
[3] "வசிப்பதற்குரிய ஒரு வீட்டை அத்தகைய ஒரு பிராமணனுக்குக் கொடுத்து, அதைப் பெற்றுக் கொண்டவர் அதில் வசித்தால் அந்தக் கொடையாளி மேற்குறிப்பிட்ட வெகுமதியை அறுவடை செய்வான். விருந்தோம்பலின் அடிப்படையில் ஒரு பிராமணனுக்கு அளிக்கப்படும் உறைவிடத்தை இது குறிக்கவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பாரதர்களில் சிறந்தவனே, குளிர் மற்றும் மழையை வெளியே வைப்பதும், கணிசமான அளவுக்குக் கட்டமைப்பைக் கொண்டதும், பசுவுக்கு உறைவிடமளிப்பதுமான ஒரு கொட்டகையைத் தானம் அழிப்பதன் மூலம் ஒரு கொடையாளி தன் குலத்தை ஏழு தலைமுறைக்கு (நரகத்திலிருந்து) மீட்கிறான்.(31) உழத்தகுந்த ஒரு நிலப்பகுதியைக் கொடையளிப்பதன்மூலம் அந்தக் கொடையாளி சிறந்த செழிப்பை அடைகிறான். கனிம வளம் உள்ள ஒரு நிலப்பகுதியைக் கொடையளிப்பதன் மூலம் அந்தக் கொடையாளி தன் குலம் மற்றும் குடும்பத்தின் செல்வாக்கைப் பெருக்குகிறான்.(32) தரிசு நிலத்தையோ, வறண்ட நிலத்தையோ ஒருவன் ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது; அதேபோலச் சுடலைக்கு அருகிலுள்ள நிலத்தையோ, அத்தகைய கொடையளிப்பதற்கு முன்னர் ஒரு பாவியால் அனுபவிக்கப்பட்டு, சொந்தங்கொண்டாடப்பட்ட நிலத்தையோ ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது.(33) ஒரு மனிதன், வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராதத்தைச் செய்யும்போது, அந்த நிலக்கொடையையும், சிராத்ததையும் பித்ருக்கள் கெட்டுப் போகச் செய்வார்கள்.(34) எனவே ஞானம் கொண்ட ஒருவன் சிறு நிலப்பகுதியையாவது விலைக்கு வாங்கி அதைக் கொடையளிக்க வேண்டும். முறையாக விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் ஒருவனுடைய மூதாதையர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் பிண்டம் வற்றாததாகிறது {அழிவடையாததாகிறது}.(35)
காடுகள், மலைகள், ஆறுகள், தீர்த்தங்கள் ஆகியவை உரிமையாளர்கள் அற்றவை எனக் கருதப்படுகின்றன. இங்கே சிராத்தம் செய்வதற்கு நிலமேதும் விலைக்கு வாங்கப்பட வேண்டியதில்லை.(36) ஓ! மன்னா, நிலக்கொடையின் பலன்கள் குறித்த காரியத்தில் இதுவே சொல்லப்படுகிறது. ஓ! பாவமற்றவனே, இதன் பிறகு, பசுக்கொடைகுறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(37) தவசிகள் அனைவரையும் விடப் பசுக்கள் மேன்மையானவையாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு இருப்பதாலேயே, இந்தக் காரணத்தினாலேயே தெய்வீகமான மஹாதேவன் அவற்றின் துணையுடன் தவங்களைச் செய்தான்.(38) ஓ! பாரதா, பசுக்கள் சோமனின் துணையுடன் பிரம்மலோகத்தில் வசிக்கின்றன. வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாள முனிவர்கள் உயர்ந்த கதியாக இருக்கும் இந்த உலகத்தை {பிரம்மலோகத்தை} அடையவே முயற்சிக்கிறார்கள்.(39) ஓ! பாரதா, பால், நெய், தயிர், சாணம், தோல், எலும்புகள், கொம்புகள் மற்றும் மயிர் ஆகியவற்றைக் கொடுத்துப் பசுக்கள் மனிதர்களுக்கு நன்மை செய்கின்றன.(40)
பசுக்கள் குளிரையோ, வெப்பத்தையோ உணர்வதில்லை. அவை எப்போதும் பணி செய்கின்றன. மழைக்காலங்களும் அவற்றைப் பாதிப்பதில்லை.(41) பசுக்கள், பிராமணர்களின் துணையுடன் உயர்ந்த கதியை (பிரம்மலோக வாசத்தை) அடைவதால், பசுக்களும், பிராமணர்களும் இணையானவர்கள் என ஞானிகள் சொல்கின்றனர்.(42) பழங்காலத்தில், மன்னன் ரந்திதேவனால் செய்யப்பட்ட ஒரு பெரும் வேள்வியில் பெரும் எண்ணிக்கையிலான பசுக்கள் கொன்று காணிக்கையளிக்கப்பட்டன. கொல்லப்பட்ட அவ்விலங்குகளின் தோல்களில் சுரந்த சாற்றிலிருந்து சர்மண்வதி என்ற பெயரில் அழைக்கப்படும் ஓர் ஆறே உண்டானது.(43) அதன் பிறகு, பசுக்கள் வேள்விக்குத் தகுந்த விலங்குகளாக கொள்ளப்படுவதில்லை[4]. அவை கொடைக்குத் தகுந்த விலங்குகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி முதன்மையான பிராமணர்களுக்குப் பசுக்கொடையளிக்கும் மன்னன், தனக்கு நேரும் ஒவ்வொரு இடரையும் நிச்சயம் கடப்பான். ஆயிரம் பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன் நரகத்திற்குச் செல்ல மாட்டான்.(44,45)
[4] கும்பகோணம் பதிப்பில், "ராஜனே, ரந்திதேவனென்னுமரசனுடைய யாகத்தில் ஆக்கள்தாம் யாகபசுக்களாகச் செய்யப்பட்டன. அந்தப் பசுத்தோல்களினின்றும் சர்மண்வதியென்னும் நதி பிரவகித்தது. அவை யாகபசுவாவதினின்று விடுவிக்கப்பட்டுத் தானத்திற்குரியவையாக விதிக்கப்பட்டன." என்றிருக்கிறது.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அத்தகைய மனிதன் எங்கும் வெற்றியை அடைகிறான். பசுவின் பால் அமுதமெனத் தேவர்களின் தலைவனே சொல்லியிருக்கிறான்.(46) இதன் காரணமாகப் பசுக்கொடை அளிக்கும் ஒருவன் அமுதத்தைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான். நோய் தடுக்கும் பாலில் இருந்து உண்டாக்கப்படும் நெய்யானது வேள்வி நெருப்பில் ஊற்றத்தக்க ஆகுதிகள் அனைத்திலும் மிகச் சிறந்ததென வேதங்களை அறிந்த மனிதர்கள் அறிவித்திருக்கிறார்கள்.(47) இக்காரணத்தினால், ஒரு பசுவைக் கொடையளிக்கும் மனிதன், வேள்விக்கான ஆகுதியைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான். காளை மாடானது சொர்க்கத்தின் உடல்வடிவமாகும். சிறப்புகளைக் கொண்ட ஒரு பிராமணனுக்கு ஒரு காளையைக் கொடையளிப்பவன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உயிரினங்களின் உயிர் மூச்சுகளாகப் பசுக்கள் சொல்லப்படுகின்றன.(48,49) எனவே, பசுக்கொடை அளிக்கும் மனிதன் உயிர்மூச்சுகளைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். வேதங்களை அறிந்த மனிதர்கள், வாழும் உயிரினங்களின் உயர்ந்த புகலிடமாகப் பசுக்கள் இருப்பதாகச் சொல்கின்றனர்.(50)
எனவே, பசுக்கொடையளிக்கும் மனிதன், அனைத்து உயிரினங்களுக்குமான உயர்ந்த புகலிடத்தைக் கொடையளிப்பவனாகச் சொல்லப்படுகிறான். பசுவானது கொல்லப்படுவதற்காக (அவளைக் கொல்பவனிடம்) ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது; அதே போல மண்ணை உழுபவனுக்கும் பசுவைக் கொடுக்கக்கூடாது; அதே போல ஒரு நாத்திகனிடமும் பசுவைக் கொடுக்ககூடாது. ஓ! பாரதர்களின் தலைவா, பசுவை வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டவனுக்கும் பசுக்கொடை அளிக்கப்படக்கூடாது[5].(51) {பசுவுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்} அத்தகைய பாவிகளுக்குப் பசுவைக் கொடுக்கும் மனிதன் எப்போதும் நீடிக்கும் நரகத்தில் மூழ்குவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(52) ஒருவன், உடல் மெலிந்ததோ, வாழும் கன்றை உண்டாக்காததோ, மலடாகவுள்ளதோ, நோய்வாய்ப்பட்டதோ, அங்கக் குறைபாடு கொண்டதோ, களைத்திருப்பதோவான பசுவை ஒரு பிராமணனுக்கு ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது.(53) பத்தாயிரம் பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன் சொர்க்கத்தை அடைந்து, இந்திரனின் துணையுடன் அருள்நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இலட்சக்கணக்கான பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன், வற்றாத இன்பலோகங்களை அடைவான்.(54) இவ்வாறே பசுக்கொடை மற்றும் எள்ளுக் கொடை மற்றும் நிலக்கொடை ஆகியவற்றின் பலன்களை உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதா, உணவுக்கொடை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(55)
[5] கும்பகோணம் பதிப்பில், "கொல்வதற்குப் பசுவைக் கொடுக்கலாகாது. அப்படியே உழவனுக்கும், நாஸ்திகனுக்கும், பசுவினால் ஜீவிப்பவனுக்கும் யாகத்திற்கு முக்கியமான ஆவின் பால்நெய் முதலியவற்றை விற்பவனுக்கும் கோதானம் செய்யலாகாது" என்றிருக்கிறது.
ஓ! குந்தியின் மகனே, உணவுக் கொடையானது மிக உயர்ந்த கொடையாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததன் மூலமே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(56) களைத்தவனும், பசித்தவனுமான ஒருவனுக்கு உணவுக்கொடையளிக்கும் மன்னன் சுயம்புவுக்குச் சொந்தமான உயர்ந்த இன்பலோகத்தை அடைகிறான்.(57) ஓ! பெரும்பலம் கொண்டவனே, உணவுக்கொடை அளிப்பவர்களுக்குக் கிட்டும் இன்ப நிலையைப் பொன், ஆடைகள், மற்றும் பிற பொருட்களைக் கொடையளிப்பதன் மூலம் கூட மனிதர்கள் அடையத் தவறுகிறார்கள்.(58) உண்மையில் உணவே முதல் பொருளாகும். உணவே உயர்ந்த செழிப்பாகக் கருதப்படுகிறது. உணவிலிருந்து உயிர் தோன்றுகிறது, சக்தியும், ஆற்றலும் பலமும் தோன்றுகின்றன.(59) எப்போதும் கவனத்துடன் அறவோருக்கு உணவுக்கொடையளிக்கும் ஒருவன் ஒருபோதும் எந்தத் துன்பத்திலும் வீழ்வதில்லை. பராசரரால் இதுவே சொல்லப்படுகிறது.(60)
தேவர்களை முறையாக வழிபட்ட பிறகு, உணவே முதலில் அவர்களுக்குப் படைக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, குறிப்பிட்ட மனிதர்கள் என்ன வகை உணவை உண்பார்களோ, அந்த மனிதர்களால் வழிபடப்படும் தேவர்களும் அதே வகை உணவையே உண்பதாகச் சொல்லப்படுகிறது[6].(61) கார்த்திகை மாத வளர்பிறையில் உணவுக்கொடையளிக்கும் மனிதன் இம்மையில் ஒவ்வொரு கடினத்தையும் கடப்பதில் வென்று, மறுமையில் வற்றாத இன்பநிலையை அடைகிறான்.(62) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தன் வசிப்பிடத்தில் பசியுடன் வரும் விருந்தினருக்கு உணவுக்கொடையளிக்கும் மனிதன், பிரம்மத்தை அறிந்த மனிதர்களுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அனைத்தையும் அடைகிறான்.(63) உணவுக்கொடையளிக்கும் மனிதன், அனைத்து கடினங்களையும், துன்பத்தையும் நிச்சயம் கடப்பான். அத்தகைய மனிதன் ஒவ்வொரு பாவத்தையும் கடந்து, ஒவ்வொரு தீச்செயலில் இருந்தும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான்.(64) இவ்வாறு உணவு, எள், பூமி {நிலம்} மற்றும் பசுக் கொடைகள் அளிப்பதன் பலன்களை நான் உனக்குச் சொன்னேன்" என்றார் {பீஷ்மர்}.(65)
[6] "ஒருவன் தான் உண்ணும் உணவைத் தவிர வேறு உணவு எதையும் தேவர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டாம். ராமாயணத்தில் ராமன் நாடுகடத்தப்பட்டுக் காட்டில் வாழ்ந்தபோது, துவர்ப்பான கனிகளையே பித்ருக்களுக்குக் காணிக்கையளித்தான். இக்கனிகளே அவனது உணவாக இருந்ததால் அவற்றையே தன் மூதாதையருக்கு அவன் காணிக்கையளித்தான். பிசாசங்கள் அழுகிய பிணங்களை உண்பதால், அவற்றையே தேவர்களுக்குப் படைக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 66ல் உள்ள சுலோகங்கள் : 65
ஆங்கிலத்தில் | In English |