Gift of water! | Anusasana-Parva-Section-67 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 67)
பதிவின் சுருக்கம் : தண்ணீரைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன்களை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, நீர் சொன்ன பல்வேறு வெகை கொடைகளின் பலன்களைக் கேட்டேன். ஓ! பாரதரே, குறிப்பாக உணவுக்கொடையே மெச்சத்தகுந்தது, உயர்வானது என நான் புரிந்து கொள்கிறேன்.(1) எனினும், நீர்க்கொடை அளிப்பதன் பெரும்பலன்கள் என்னென்னன? ஓ! பாட்டா, நான் இதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன்.(3) ஓ! பாவமற்றவனே, கொடைகளைக் குறித்து நீர் தொடங்கி உனக்குச் சொல்லப் போகிறேன். உணவுக்கொடை மற்றும் நீர்க்கொடை மூலம் ஒரு மனிதன் அடையும் பலனை, வேறு எந்தக் கொடையினாலும் அடைய இயலாது என்றே நான் நினைக்கிறேன். எனவே, உணவு அல்லது நீர் கொடுப்பதைவிட மேன்மையான கொடை வேறேதும் இல்லை. உணவாலேயே அனைத்து உயிரினங்களாலும் நீடித்திருக்கமுடிகிறது.(4,5)
இந்தக் காரணத்தினாலேயே உலகங்கள் அனைத்திலும் உணவே மிக மேன்மையான பொருளாகக் கருதப்படுகிறது. உணவிலிருந்தே உயிரினங்களுக்குப் பலமும் சக்தியும் நிலையாக அதிகரிக்கிறது.(6) எனவே, உணவுக்கொடையே மிக மேன்மையான கொடை என உயிரினங்கள் அனைத்தின் தலைவனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். ஓ! குந்தியின் மகனே, (உணவுக்கொடை குறித்து) சாவித்திரி சொன்ன மங்கலச் சொற்கள் என்னென்ன என்பதை நீ கேட்டிருக்கிறாய்.(7) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அச்சொற்கள் சொல்லப்படுவதற்கான காரணமென்ன, அச்சொற்கள் என்னென்ன, புனித மந்திரங்களின் போக்கில் அவை சொல்லப்பட்டதெவ்வாறு என்பதை நீ அறிவாய். உணவுக்கொடை அளிப்பதன் மூலம் ஒரு மனிதன் உயிரையே கொடையாக அளிக்கிறான்.(8)
உயிர்க்கொடையைவிட இவ்வுலகில் மேன்மையான கொடை வேறேதுமில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, லோமசர் சொன்ன வாக்கியத்தை நீ அறியாதவனல்ல.(9) ஓ! ஏகாதிபதி, முற்காலத்தில் மன்னன் சிபி ஒரு புறாவுக்கு உயிரளித்ததன் விளைவால் அடைந்த கதியானது, ஒரு பிராமணனுக்கு உணவை அளிக்கும் கொடையாளியால் அடையப்படுகிறது.(10) எனவே, உயிரைக் {கொடையாகக்} கொடுப்பவர்கள் மறுமையில் மிக மேன்மையான இன்ப உலகங்களை அடைவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஓ! குருக்களில் சிறந்தவனே, உணவானது {உணவுக்கொடையானது}, நீருக்கு {நீர்க்கொடைக்கு} மேன்மையானதாகவோ, அல்லாததாகவோ இருக்கலாம்.(11) நீரின் துணையின்றி எதனாலும் நீடித்திருக்க இயலாது. கோள்கள் அனைத்தின் தலைவனான சிறப்புமிக்கச் சோமனே {சந்திரனே} நீரில் இருந்துதான உதித்தான்.(12)
அமுதம், சுதை, ஸ்வதை, பால், அனைத்து வகை உணவு, இலையுதிர் மூலிகைகள், செடிகொடிகள் ஆகியன நீரில் இருந்தே உண்டாகின்றன.(13) ஓ! மன்னா, இவற்றில் இருந்தே அனைத்து உயிரினங்களின் உயிர் மூச்சுகளும் உண்டாகின்றன. தேவர்கள் அமுதத்தையே தங்கள் உணவாகக் கொள்கின்றனர். நாகர்கள் சுதையை உணவாகக் கொள்கின்றனர்.(14) பித்ருக்கள் ஸ்வதையைத் தங்கள் உணவாகக் கொள்கின்றனர். விலங்குகள் செடி கொடிகளைத் தங்கள் உணவாகக் கொள்கின்றன. அரிசி முதலியன மனிதர்களின் உணவாக அமைகின்றன என ஞானிகள் சொல்கின்றனர்.(15) ஓ! மனிதர்களின் தலைவா, இவை அனைத்தும் நீரில் இருந்தே உண்டாகின்றன. எனவே, நீர்க்கொடைக்கு மேலான கொடை வேறேதும் இல்லை.(16)
ஒரு மனிதன் செழிப்படைய விரும்பினால் அவன் எப்போதும் நீர்க்கொடை அளிக்க வேண்டும். நீர்க்கொடையானது மிகவும் புகழத்தக்கதாகும். அது கொடையாளிக்கு பெரும் புகழையும் நீண்ட வாழ்நாளையும் அளிக்கிறது.(17) ஓ! குந்தியின் மகனே, நீர்க்கொடையாளியானவன், எப்போதும் தன்னுடைய பகைவர்களின் தலைகளுக்கு மேலேயே இருப்பான் {அவர்களைவிட உயர்ந்தவனாக இருப்பான்}. அத்தகைய ஒருவன் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைந்து, என்று நீடித்திருக்கும் புகழையும் ஈட்டுகிறான்.(18) ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! பேரொளி கொண்டவனே, அந்தக் கொடையாளி தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் தூய்மையடைந்து, சொர்க்கத்திற்குச் செல்லும்போது மறுமையில் முடிவிலா இன்பத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் மறுமையில் வற்றாத அருள் உலகங்களை ஈட்டுகிறான் என மனுவே சொல்லியிருக்கிறார்" என்றார் {பீஷ்மர்}.(19)
அநுசாஸனபர்வம் பகுதி – 67ல் உள்ள சுலோகங்கள் :19
ஆங்கிலத்தில் | In English |