Instructions by Yama on gifts! | Anusasana-Parva-Section-68 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 68)
பதிவின் சுருக்கம் : எள், விளக்கு, உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பது குறித்து யமனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, எள், இருள்விலக்கி ஒளிதரும் விளக்குகள், உணவு மற்றும் ஆடைகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தில் இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், யமனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட கதை குறிப்பிடப்படுகிறது.(2) கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் உள்ள நாட்டில், யாமுனை என்றழைக்கப்படும் {யமுனை உற்பத்தியாகும் களிந்த} மலையடிவாரத்தில் பிராமணர்கள் வசித்து வந்த ஒரு பெரிய நகரம் இருந்தது.(3) ஓ! மன்னா, பர்ணசாலை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட அந்த நகரம் தோற்றத்தில் மிக இனிமை நிறைந்ததாக இருந்தது. அங்கே கல்விமானான பிராமணர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர்.(4)
ஒரு நாள், இறந்தோரின் ஆட்சியாளனான யமன், கறுப்பு உடை உடுத்தியிருந்தவனும், குருதிச்சிவப்பான கண்களுடன் கூடியவனும், நட்டவகையில் நிற்கும் முடியுடன் கூடியவனும், காகம் போன்ற கண்களும், மூக்கும் பாதங்களும் கொண்டவனான தன் தூதுவனை {கிங்கரனை} அழைத்து,(5) "பிராமணர்கள் வசிக்கும் நகரத்திற்குச் சென்று, அகஸ்திய குலத்தில் பிறந்தவனும், சர்மின் {சர்மி} என்ற பெயரைக் கொண்டவனுமான மனிதனை இங்கே கொண்டு வருவாயாக.(6) மன அமைதியையே நோக்கமாகக் கொண்ட அவன் கல்விமானாகவும் இருக்கிறான். அவன் வேதங்களைக் கற்பிப்பதில் ஈடுபடும் ஆசானாகவும் இருக்கிறான், அவனது நடைமுறைகள் நன்கு அறியப்பட்டவையாக இருக்கின்றன. அங்கேயே வாழும் அதே குலத்தைச் சேர்ந்த வேறு எவனையும் என்னிடம் கொண்டு வராதே.(7) அந்த மற்றொருவனும், குணங்கள், கல்வி மற்றும் பிறவியில் அவனுக்கு இணையானவனே. பிள்ளைகள் மற்றும் ஒழுக்கக் காரியங்களில் இவனும் நுண்ணறிவு மிக்கச் சர்மினுக்கு ஒப்பானவனே.(8) நான் கருத்தில் கொண்டவனையே நீ கொண்டு வருவாயாக. அவன் (இங்கே மதிப்பில்லாமல் இழுத்து வரப்படுவதற்குப் பதிலாக) மதிப்புடன் வழிபடப்பட வேண்டும்" என்றான். அந்த இடத்திற்குச் சென்ற தூதன், அவன் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு முரணாகவே செயல்பட்டான்.(9) கொண்டுவரப்பட யமனால் தடுக்கப்பட்ட மனிதனைத் தாக்கி அங்கே கொண்டு வந்தான். பெருஞ்சக்தி கொண்ட யமன் அந்தப் பிராமணனைக் கண்டதும் எழுந்திருந்து, முறையாக அவனை வழிபட்டான்.(10)
பிறகு, அந்த இறந்தோரின் மன்னன் {யமன்} தன் தூதனை அழைத்து, "இவனைக் கொண்டு சென்று, மற்றொருவனைக் கொண்டு வருவாயாக" என்றான்.
இறந்தோரின் பெரும் நீதிபதியான அவன் {யமன்} இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, அந்தப் பிராமணன் அவனிடம், "நான் என் வேத கல்வியை முடித்துவிட்டேன். மேலும் நான் இப்போது உலகப் பந்தத்தோடு இல்லை. என் உயிர் இருப்புக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவற்றை இங்கே வசித்துக் கடத்த விரும்புகிறேன்" என்றான்.(11,12)
யமன், "ஒருவன் உயிர்வாழ, காலத்தால் விதிக்கப்பட்ட சரியான கால அளவை என்னால் உறுதி செய்ய முடியாது. எனவே, காலத்தால் தூண்டப்படாத என்னால் ஒருவனை இங்கே வசிக்க அனுமதிக்க முடியாது. நான் இவ்வுலகில் ஒருவன் செய்யும் அறச்செயல்களை {அல்லது மறச்செயல்களைக்} குறித்துக் கொள்கிறேன்.(13) ஓ! கல்விமானும், பேரொளியும் கொண்ட பிராமணா, உடனே உன் வசிப்பிடத்திற்குத் திரும்புவாயாக. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் மனத்தில் இருப்பது என்ன என்பதையும், நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன என்பதையும் எனக்குச் சொல்வாயாக" என்றான்.(14)
பிராமணன், "என்னென்ன செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் பலனை {புண்ணியத்தை} ஈட்டுகிறான். ஓ! அனைத்திலும் சிறந்தவனே, மூவுலகங்களில் (இக்காரியத்தில்) முதன்மையான அதிகாரங்களைக் கொண்டவன் நீயே" என்றான்.(15)
யமன், "ஓ! மறுபிறப்பாள முனியே, கொடைகள் குறித்த சிறப்புவிதிகளைக் கேட்பாயாக. எள்ளுக்கொடையளிப்பது மிக மேன்மையான கொடையாகும். அஃது என்றும் நிலைக்கும் பலனை உண்டாக்குகிறது.(16) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, ஒருவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எள்ளுக்கொடையை அளிக்க வேண்டும். நாள்தோறும் எள்ளுக்கொடையளிப்பதன் மூலம் தன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை நிச்சயம் அடைகிறான்.(17) சிராத்தங்களில் எள்ளுக்கொடையளிப்பது மெச்சப்படுகிறது. உண்மையில், எள்ளுக்கொடையானது மிக மேன்மையான கொடையாகும். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பாயாக.(18) வைசாக {வைகாசி} மாத முழு நிலவு நாளில் {பௌர்ணமியில்} ஒருவன், பிராமணர்களுக்கு எள்ளுக்கொடையளிக்க வேண்டும். ஒருவன் தன்னால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எள்ளை அவர்களை உண்ணச் செய்யவும், தீண்டச்செய்யவும் வேண்டும்.(19) தங்களுக்கு நன்மையை அடைய விரும்புபவர்கள், தங்கள் மொத்த ஆன்மாக்களுடன் தங்கள் வீடுகளில் இதைச் செய்ய வேண்டும்.[1] அதே போல மனிதர்கள் நீர்க்கொடை அளிக்கவும், குடிநீர் விநியோகிக்கும் ஓய்விடங்களை நிறுவவும் வேண்டும்[2].(20) ஒருவன் குளங்களையும், தடாகங்களையும், கிணறுகளையும் வெட்ட வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அத்தகைய செயல்கள் உலகில் அரிதானவையாகும்.(21) எப்போதும் நீர்க்கொடை அளிப்பாயாக. இச்செயல் புண்ணியம் நிறைந்ததாகும். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அத்தகைய கொடைகள் அளிப்பதற்காக நீ சாலையோரங்களில் நீர் பகிர்ந்து கொடுக்கும் ஓய்விடங்களை {நிழற்பந்தல்களை} நிறுவ வேண்டும்.(22) ஒருவன் உண்ட பிறகு, அவனுக்குக் குறிப்பாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடை குடிப்பதற்கான நீராகும்" என்றான் {யமன்}".(23)
[1] "அஃதாவது, எள் அதிகமுள்ள விருந்துக்குப் பிராமணர்களை அழைக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "வங்கத்தின் இன்று வரை இயன்றவர்களால் அதிலும் குறிப்பாகப் பக்திமிக்கப் பெண்மணிகளால் வைகாசி மாதத்தில் (வருடத்தின் வெப்பமான மாதத்தில்) சாலையோரங்களில் ஓய்விடங்கள் நிறுவப்பட்டு, குளிர்ந்த நன்னீர், நன்கு ஊறிய புல்லரிசி தானியங்கள் மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவை இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. பழைய பனாரஸ் சாலை, கிராண்ட் டிரங்க் சாலை ஆகியவற்றில் உள்ள இத்தகைய நிழற்குடைகள் பயணிகளைக் குறிப்பிட்ட அளவுக்குப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்கின்றன. இந்தச் சாலைகளில் மைல்கள் நெடுக நன்னீர் கிடைப்பது அரிது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். நம் தமிழகத்திலும் கோடைகாலத்தில் சில இயக்கங்கள் தண்ணீர்ப்பந்தல் நிறுவுவதை இன்றும் நாம் காண முடியும்.
பீஷ்மர் தொடர்ந்தார், "அவனிடம் {அந்தப் பிராமணனிடம்} இச்சொற்களை யமன் சொன்னதும், தூதுவன் அவனை மீண்டும் அவனது வசிப்பிடத்தில் கொண்டு விட்டான். அந்தப் பிராமணன் திரும்பியதும், தான் பெற்ற போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான்.(24) இவ்வாறு அவனை அவனது வசிப்பிடத்தில் திரும்ப விட்ட யமனின் தூதவன் {கிங்கரன்} யமனால் உண்மையில் வேண்டப்பட்ட சர்மினைப் பிடித்தான். சர்மினைக் கொண்டு சென்று தன் தலைவனிடம் {யமனிடம்} சொன்னான்.(25) பெருஞ்சக்தி கொண்டவனான அந்த இறந்தோரின் நீதிபதி {யமன்}, அறம்சார்ந்த அந்தப் பிராமணனை வழிபட்டு, சிறிது நேரம் அவனோடு உரையாடிவிட்டு, மீண்டும் அவனது வசிப்பிடத்திற்குக் கொண்டு செல்ல விடைகொடுத்தான். அவனிடமும் யமன் அதே போதனைகளையே சொன்னான். சர்மினும் மனிதர்களின் உலகிற்குத் திரும்பி வந்து யமன் சொன்ன அனைத்தையும் செய்தான்.(27) பித்ருக்குக்கு நன்மை செய்யும் விருப்பத்தின் மூலம் யமன் நீர்க்கொடையைப் போலவே, இருள் நிறைந்த இடங்களுக்கு விளக்கைக் கொடையளிப்பதையும் மெச்சுகிறான். எனவே, இருள்நிறைந்த இடத்தை ஒளியூட்ட விளக்கைக் கொடையளிப்பவன் பித்ருக்களுக்கு நன்மை செய்பவனாகக் கருதப்படுகிறான்.(28) எனவே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்ட ஒருவன் எப்போதும் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும். விளக்கைக் கொடையளிப்பது, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் சுயத்தின் பார்வைத்திறனை அதிகரிக்கிறது[3].(29)
[3] "விளக்கைக் கொடையளிப்பது என்பது மனிதர்கள் அடிக்கடி செல்லும் சாலைகள், மலைவழிகள் முதலியவற்றில் உள்ள இருண்ட பகுதிகளில் விளக்கை நிறுவுவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா, ரத்தினங்களைக் கொடையளிப்பது மிக மேன்மையான கொடை என்று சொல்லப்படுகிறது. ரத்தினக்கொடையேற்ற ஒரு பிராமணன், ஒரு வேள்வியைச் செய்வதற்காக அவற்றை விற்றால் எப்பிழையும் இழைத்தவனாகான்.(30) ரத்தினக் கொடையேற்று, அவற்றை மீண்டும் பிராமணர்களுக்கே கொடையளிக்கும் பிராமணன் வற்றாத பலனை ஈட்டி, அவன் உண்மையில் யாரிடம் இருந்து அவற்றைப் பெற்றானோ அவனுக்கும் வற்றாத பலனை அளிக்கிறான்.(31) அனைத்துக் கடமைகளையும் அறிந்த மனு, முறையான கட்டுப்பாடுகளை நோற்பவனான ஒருவன், முறையான கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு பிராமணனுக்கு ரத்தினக் கொடையளிக்கும்போது, தானும் வற்றாத பலனை ஈட்டி, அவற்றைப் பெறுபவனுக்கும் வற்றாத பலனை அளிக்கிறான்.(32)
தான் மணந்து கொண்ட மனைவியுடனே மனநிறைவுடன் இருப்பவனும், ஆடைகளைக் கொடையளிப்பவனுமான மனிதன், சிறந்த நிறத்தையும், தனக்கான சிறந்த ஆடைகளையும் ஈட்டிக் கொள்கிறான்.(33) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பசு, பொன், எள் ஆகியவற்றைக் கொடையளிப்பதால் கிட்டும் பலன்களை வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் பல்வேறு பணிப்பாணைகளுக்கு ஏற்புடைய வகையில் உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(34) ஒருவன் திருமணம் செய்து கொண்டு, தான் மணந்த மனைவியரிடம் சந்ததியை எழுப்ப {உண்டாக்க} வேண்டும். ஓ!குருகுலத்தின் மகனே, அனைத்து உடைமைகளைக் காட்டிலும் ஆண் குழந்தை {மகனைப்} பெறுவதே முதன்மையானதாகக் கருதப்படுகிறது" என்றார் {பீஷ்மர்}.(35)
அநுசாஸனபர்வம் பகுதி – 68ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |