Gift of kine! | Anusasana-Parva-Section-69 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 69)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க பசுக்கொடை, நிலக்கொடை ஆகியவற்றைக் குறித்து மீண்டும் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, கொடைகள் குறித்த சிறப்பு விதிகளையும், முக்கியமாக நிலக்கொடை குறித்தும் எனக்கு மீண்டும் சொல்வீராக.(1) அறச்செயல்களைச் செய்யும் பிராமணனுக்கு ஒரு க்ஷத்திரியன் நிலக்கொடை அளிக்க வேண்டும். அத்தகைய பிராமணன் உரிய சடங்குகளுடன் அக்கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், க்ஷத்திரியனைத் தவிர வேறு எவனும் நிலக்கொடையளிக்கத் தகுந்தவனல்ல.(2) இப்போது, பலனை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்த மனிதர்கள் கொடையளிக்ககூடிய பொருட்கள் யாவை என்பதைச் சொல்வதே உமக்குத் தகும். இக்காரியம் குறித்து வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மூன்று கொடைகள் ஒரே பலன்களை உண்டாக்கவல்லவையாக, ஒரே பெயரைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. உண்மையில் அம்மூன்றும் அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கவல்லவையாகும். அத்தகைய குணங்களைக் கொண்டவை பசு, நிலம் மற்றும் அறிவு {கல்வி} என்ற மூன்று பொருட்கள் ஆகும்.(4) வேதங்களில் இருந்து பெறப்பட்ட அறச் சொற்களைத் தன் சீடர்களுக்குச் சொல்லும் மனிதன், நிலம் மற்றும் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டுவதற்கு இணையான பலனை அடைகிறான்.(5) அதே போல, பசுக்களும் (கொடைக்குத்தகுந்த பொருட்களாக) புகழப்படுகின்றன. அவற்றைவிட உயர்ந்த கொடையாக வேறு எந்தப் பொருளும் இருப்பதில்லை. பசுக்கள் உடனே பலனை அளிக்கவல்லவையாக இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய கொடை பெரும்பலனுக்கு வழிவகுக்குமேயன்றி வேறில்லை.(6) பசுக்கள் அனைத்து உயிரினங்களுக்கு அன்னைகளாகின்றன. அவை அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் அளிக்கின்றன. தன் செழிப்பை விரும்பும் ஒருவன் எப்போதும் பசுக்கொடையளிக்க வேண்டும்.(7) எவனும் பசுவை உதைக்கவோ, பசுக்களுக்கு மத்தியில் செல்லவோ கூடாது. பசுக்கள், மங்கல இல்லங்களான தேவிகளாக இருக்கின்றன. இதன் காரணமாகவே எப்போதும் அவை வழிபடத்தகுந்தவையாக இருக்கின்றன.(8)
[1] "பசு, பூமி மற்றும் வாக்கு ஆகியன {சம்ஸ்கிருதத்தில்} கோ என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பழங்காலத்தில தேவர்கள் ஒரு வேள்வியைச் செய்வதற்காக நிலத்தை உழுதபோது கலப்பையில் பூட்டப்பட்ட இளங்காளைகளைத் தாக்க சாட்டையைய்ப பயன்படுத்தினர். எனவே, அத்தகைய நோக்கத்திற்கு நிலத்தை உழும்போது, காளைகள் மீது சாட்டையைப் பயன்படுத்துவது நிந்தனையையோ, பாவத்தையோ ஈட்டாது. எனினும், வேறு செயல்களில் காளைகள் ஒருபோதும் சாட்டையால் தாக்கப்படக்கூடாது.(9) பசுக்கள் மேயும்போதோ, கிடக்கும்போதோ எவரும் எவ்வழியில் அவற்றை எரிச்சலூட்டக்கூடாது. தாகமாக இருக்கும் பசுக்களுக்குத் தண்ணீர் கிட்டாதபோது, (அவை குளத்திற்கோ, தடாகத்திற்கோ, ஆற்றுக்கோ செல்வதைத் தடுப்பதன் விளைவாக) {அவற்றை எரிச்சலூட்டும்} அத்தகைய மனிதனை வெறுமனே பார்ப்பதன் மூலமே அவற்றால் அவனையும், அவனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிட முடியும்.(10) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சிராத்தங்களில் அல்லது தேவர்களை வழிபடும் இடங்களில் உள்ள பீடங்களே கூடப் பசுஞ்சாணம் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு, புனிதப்படுத்தப்படுகின்றன எனும்போது பசுவை விடப் புனிதமான விலங்குகள் வேறு எவை இருக்கக்கூடும்?(11) தான் உண்பதற்கு முன்பாக, வேறு ஒருவனுக்குச் சொந்தமான பசுவுக்குக் கைப்பிடி நிறையப் புல்லைக் கொடுக்கும் மனிதன், அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் நிலையை அளிக்கும் நோன்பை நோற்பவனாகக் கருதப்படுகிறான்.(12) அத்தகைய ஒருவன் பிள்ளைகளையும், புகழ், செலவம், செழிப்பு ஆகியவற்றையும் அடைந்து, அனைத்துத் தீமைகளையும், தீய கனவுகளையும் விலக்குகிறான்" என்றார் {பீஷ்மர்}.(13)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கொடையளிக்கத்தகுந்த பசுக்களுக்கான குறியீடுகள் என்னென்ன? கொடைகளாகக் கொடுக்கக்கூடிய பசுக்கள் என்னென்ன? பசுக்கொடை கொடுக்கப்பட வேண்டிய மனிதர்களின் குணங்கள் என்னென்ன? மேலும், யார் யாருக்கெல்லாம் பசுக்கள் கொடுக்கப்படக்கூடாது?" என்று கேட்டான்.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒழுக்கத்தில் நேர்மையற்ற ஒருவனுக்கோ, பாவம் நிறைந்தவனுக்கோ, பேராசை நிறைந்தவனுக்கோ, வாக்கில் பொய்மை கொண்டவனுக்கோ, பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்குக் காணிக்கையளிக்காதவனுக்கோ பசுவை ஒருபோதும் கொடுக்கக்கூடாது.(15) வேதங்களைக் கற்றவனும், உலகம்சார்ந்த செல்வத்தில் வறியவனும், பல பிள்ளைகளைக் கொண்டவனும், இல்லற நெருப்பைக் கொண்டவனுமான ஒரு பிராமணனுக்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற பேரின்ப உலகங்களை அடைகிறான்.(16) ஒரு மனிதன், வேறு ஒருவரிடம் இருந்து கொடையாகப் பெற்றதைத் துணையாகக் கொண்டு பலன் நிறைந்த செயல் எதைச் செய்யும்போதும், அச்செயலால் உண்டாகும் பலனில் ஒரு பகுதியானது, எவனுடைய செல்வத்தைக் கொண்டு அச்செயல் செய்யப்பட்டதோ அவனுக்குரியதாகிறது.(17) ஒருவனை உற்பத்தி செய்தவன் {தந்தை}, ஒருவனைக் காப்பாற்றியவன், ஒருவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்கியவன் ஆகியோர் மூன்று தந்தைமாராகக் கருதப்படுகிறார்கள்.(18) ஆசானுக்குக் கடமையுணர்வுடன் செய்யும் தொண்டு பாவத்தை அழிக்கிறது. செருக்கானது பெரும்புகழையும் அழித்துவிடும். மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது பிள்ளையில்லாப் பழியை அழிக்கிறது, பத்துப் பசுக்களை உடைமையாக்கிக் கொள்வது வறுமைப் பழியை அகற்றுகிறது.(19)
வேதாந்தத்தில் அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் கல்வியைக் கொண்டவனும், ஞானம் நிறைந்தவனும், புலன்களில் முழுக்கட்டுப்பாடு கொண்டவனும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவனும், உலகம் சார்ந்த அனைத்துப் பற்றுகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களிடமும் இனிமையான சொற்களைச் சொல்பவனும், பசியால் உந்தப்பட்டாலும் ஒருபோதும் தீச்செயல் ஏதும் செய்யாதவனும், மென்மையானவனும், அமைதியான மனநிலையைக் கொண்டவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனுமான ஒரு பிராமணனுக்கு, அதே நடத்தைகளைக் கொண்டவனும், பிள்ளைகள் மற்றும் மனைவிகளைக் கொண்டவனுமான ஒரு மனிதன் வாழ்வாதாரங்களைக் கொடுக்க வேண்டும்.(20,21) தகுந்த மனிதனுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் எவ்வளவு பலன் கிட்டுமோ, அதே அளவு பாவம் ஒரு பிராமணனுக்கு உரியதைக் களவாடுவதன் மூலம் கிட்டுகிறது. அனைத்துச் சூழ்நிலைகளிலும் பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிடுவது தவிர்க்கப்பட வேண்டும், அவனது மனைவிகள் தொலைவில் வைக்கப்பட வேண்டும்[2]" என்றார் {பீஷ்மர்}.(22)
[2] கும்பகோணம் பதிப்பில் இதன்பிறகும் இன்னும் சொல்லப்பட்டிருக்கிறது, அது பின்வருமாறு, "பிராம்மணன் மனைவியும், பொருளும் அபகரிக்கப்பட்டபோது, சக்தியினால் காப்பாற்றினவர்களுக்கும் அதற்காக உயிர்விட்டவர்களுக்கும் நமஸ்காரஞ்செய்கிறேன். அவர்கள் துன்பஞ்செய்யப்படும்போது, காப்பாற்றாதவரைச் சூரியன் புத்திரனான யமன் எக்காலமும் தண்டித்துக் கொண்டும், பயமுறுத்திக் கொண்டும் நரகத்திலிருந்து விடுவதில்லை. அப்படியே கோக்களைக் காப்பதிலும், பீடிப்பதிலும் நன்மையும், தீமையும் முறையே வருகின்றன. பிராம்மணர்களின் கோக்களையும், மனைவிகளையும் ரக்ஷிப்பதில் விசேஷ புண்ணியம் உண்டாகிறது" என்றிருக்கிறது. கங்குலியின் பதிப்பில் எங்கு நிறைவடைந்ததோ, அங்கேயே பிபேக்திப்ராயின் பதிப்பிலும் நிறைவடைந்துவிடுகிறது. கும்பகோணம் பதிப்பில் உள்ள அதிகப்படியான இந்த வரிகள் இல்லை.
அநுசாஸனபர்வம் பகுதி – 69ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |