Nachiketa! | Anusasana-Parva-Section-71 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 71)
பதிவின் சுருக்கம் : யமன் பசுக்கொடை குறித்து நாசிகேதனுக்குச் சொன்ன சிறப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாவமற்றவரே, பசுக்கொடை அளிப்பதன் மூலம் அடையப்படும் பலன்களை இன்னும் விரிவாக எனக்குச் சொல்வீராக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது சொற்களில் ஒருபோதும் நான் தணிவடைவதில்லை" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழைய வரலாற்றில் முனிவர் ஔத்தாலகிக்கும் நாசிகேதன் என்றழைக்கப்பட்டவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2)
ஒரு காலத்தில் பெரும் நுண்ணறிவுடன் கூடிய முனிவர் ஔத்தாலகி தன் மகனான நாசிகேதனை அணுகி, அவனிடம், "நீ எனக்குப் பணிவிடை செய்து தொண்டாற்றுவாயாக" என்றார்.(3) தாம் நோற்றுவந்த நோன்பின் நிறைவுக்குப் பிறகு அந்தப் பெரும் முனிவர் மீண்டும் தமது மகனிடம், "தூய்மைச் சடங்கைச் செய்வதில் ஈடுபட்ட நான், வேத கல்வியில் ஆழமாக ஈர்க்கப்பட்டதால்,(4) விறகுகள், தர்ப்பை புற்கள், மலர்கள், நீர்க்குடுவை மற்றும் நான் சேகரித்து வைத்திருந்த கீரைகள் ஆகியவற்றைக் கொண்டுவர மறந்துவிட்டேன். ஆற்றங்கரையில் இருந்து அந்தப் பொருட்களை நீ என்னிடம் கொண்டு வருவாயாக" என்றார்.(5)
குறிப்பிடப்பட்ட அந்த இடத்திற்குச் சென்ற அந்த மகன், அந்தப் பொருட்கள் அனைத்தும் ஓடையால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டான். தன் தந்தையிடம் திரும்பி வந்த அவன், "அந்தப் பொருட்களை நான் காணவில்லை" என்றான்.(6)
பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தவரும், உயர்ந்த தவத்தகுதியைக் கொண்டவருமான முனிவர் ஔத்தாலகி, திடீரெனக் கோபமடைந்து, "நீ இன்று யமனைச் சந்திப்பாய்" என்று தன் மகனை சபித்துவிட்டார்.(7)
இவ்வாறு தன் தந்தையின் இடி வாக்கால் தாக்கப்பட்ட மகன், கூப்பிய கரங்களுடன் "என்னிடம் நிறைவடைவீராக" என்றான். எனினும், அவன் விரைவில் பூமியில் விழுந்து உயிரை இழந்தான்.(8)
பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் நாசிகேதனைக் கண்ட அவனது தந்தையும் துயரத்தால் தன் உணர்வுகளை இழந்தார். அவரும், "ஐயோ, நான் என்ன செய்துவிட்டேன்" என்று வருந்தி பூமியில் விழுந்தார்.(9) துயரத்தால் நிறைந்திருந்த அவர் அழுது புலம்பியதிலேயே எஞ்சிய நாள் முழுவதும் கடந்து இரவும் வந்தது.(10)
ஓ! குரு குலத்தவனே, அப்போது தன் தந்தையின் கண்ணீரால் நனைந்திருந்த நாசிகேதன், தான் கிடந்த தர்ப்பைப் புல் விரிப்பில் உயிர் திரும்புவதற்கான அறிகுறிகளை வெளியிட்டான். தந்தையின் கண்ணீரில் அவன் உயிர் மீண்டது, மங்கலமாரியில் நனைந்த வித்துகள் முளைப்பதற்கு ஒப்பானதாக இருந்தது.(11) அப்போதே நினைவு திரும்பியிருந்த மகன் இன்னும் பலவீனமாகவே இருந்தான். நறுமணக் களிம்புகள் பூசப்பட்ட உடலுடன் கூடிய அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து அப்போதுதான் எழுந்தவனைப் போலத் தெரிந்தான். முனிவர் {ஔத்தாலகி} அவனிடம்,(12) "ஓ! மகனே, உன் செயல்களின் மூலம் நீ மங்கல உலகங்களை அடைந்தாயா? நீ என்னிடம் மீண்டு வந்தது நற்பேறே. உன்னுடல் மானுட உடலாகத் தெரியவில்லையே" என்று கேட்டார்.(13)
இவ்வாறு உயர் ஆன்மாவான தந்தை கேட்டதும், தன் கண்களாலேயே அனைத்தையும் கண்ட நாசிகேதன், முனிவர்களுக்கு மத்தியில் பின்வரும் பதிலை அளித்தான்.(14) {அவன்}, "உமது ஆணைக்குக் கீழ்ப்படிந்து இனிமையான பிரகாசத்துடன் கூடிய பரந்த யமலோகத்திற்குச் சென்றேன். அங்கே ஆயிரம் யோஜனைகள் பரந்திருப்பதும், அனைத்துப் பகுதியிலும் பொன்னொளி வீசுவதுமான ஓர் அரண்மனையைக் கண்டேன்.(15) யமன், தன்னை முகம் நோக்கி வரும் என்னைக் கண்டதும், தன் பணியாட்களிடம், "இவனுக்கு நல்ல இருக்கையைக் கொடுப்பீராக" என்றான். உண்மையில் இறந்தோரின் மன்னனான அவன் உமது நிமித்தமாகவே அர்க்கியம் மற்றும் பிற பொருட்களுடன் என்னை வழிபட்டான்.(16)
யமனால் இவ்வாறு வழிபடப்பட்டு, அவனது அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்த நான், மென்மையாக அவனிடம், "ஓ! இறந்தோரின் நீதிபதியே {அறமன்னா}, நான் உன் வசிப்பிடத்திற்கு வந்திருக்கிறேன். என் செயல்களுக்குத் தகுந்த உலகங்களை எனக்கு ஒதுக்குவாயாக" என்றேன்.(17)
யமன் {நாசிகேதனிடம்}, "ஓ! இனியவனே, நீ இன்னும் இறக்கவில்லை. தவசக்தி கொண்ட உன் தந்தை "யமனைச் சந்திப்பாயாக" என்றார். உன் தந்தையின் சக்தி சுடர்மிக்க நெருப்பைப் போன்றதாகும். என்னால் அவரது வாக்கைப் பொய்யாக்க இயலாது.(18) நீ என்னைப் பார்த்துவிட்டாய். ஓ! குழந்தாய், இனி நீ செல்லலாம். உன் உடலை உண்டாக்கியவர் உனக்காக அழுது புலம்புகிறார். நீ என் அன்புக்குரிய விருந்தினனாவாய். உன் இதயத்தில் உள்ள விருப்பத்தைச் சொன்னால் நான் உனக்கு அருள்வேன். நீ வளர்க்கும் விருப்பம் எதையும் வேண்டுவாயாக" என்றான்.(19)
இறந்தோரின் மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட நான், அவனிடம், "எந்தப் பயணியும் திரும்பிச் செல்ல முடியாத உனது ஆட்சிப்பகுதிக்குள் நான் வந்துவிட்டேன். ஓ! இறந்தோரின் மன்னா, உண்மையில் நான் உன் கவனத்தை ஈர்க்கத்தகுந்தவனாக இருக்கிறேனெனில் அறச்செயல் செய்தோருக்கென ஒதுக்கப்படுபவையும், உயர்ந்த செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டவையுமான உலகங்களைப் பார்க்க விரும்புகிறேன்" என்றேன்.(20)
இவ்வாறு என்னால் கேட்டுக்கொள்ளப்பட்ட யமன், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட பிரகாசமிக்க ஒரு வாகனத்தில் என்னை ஏறச் செய்தான். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அந்த வாகனத்தில் என்னைச் சுமந்து சென்று அறவோருக்கென ஒதுக்கப்பட்ட இன்பம் நிறைந்த உலகங்களை எனக்குக் காட்டினான்.(21) நான் அந்த உலகங்களில் உயர் ஆன்ம மனிதர்களுக்காக ஒதுக்கப்படும் பெரும் பிரகாசமிக்க மாளிகைகள் பலவற்றைக் கண்டேன். அந்த மாளிகைகள் பல்வேறு வடிவங்களிலும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன.(22) சந்திர வட்டிலைப் போலப் பிரகாசமாக இருந்த அவை கிண்கிணி மணி வரிசையால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கானவை பல அடுக்குக் கொண்டவையாக இருந்தன. அவற்றுக்குள் இனிய தோட்டங்களும், காடுகளும், தெளிந்த நீர்த்தேக்கங்களும் இருந்தன.(23) வைடூரியம் மற்றும் சூரியப் பிரகாசத்தைக் கொண்டவையும், வெள்ளி மற்றும் பொன்னாலானவையுமான அவை தங்கள் நிறத்தில் காலைச் சூரியனுக்கு ஒப்பானவையாக இருந்தன.(24) அவற்றுக்குள் பல உணவு மலைகளும், அனுபவிக்கத்தக்க பொருட்களும், ஆட்கள் மற்றும் படுக்கைகளும் அபரிமிதமாக இருந்தன. அவற்றுக்குள் அனைத்து விருப்பங்கள் கனியும் நிலையையும் அருளவல்ல மரங்கள் பலவும் இருந்தன.(25)
அங்கே பல ஆறுகளும், சாலைகளும், பரந்த மண்டபங்களும், தடாகங்களும், பெரிய ஏரிகளும் இருந்தன. சடசடப்பொலி கொண்ட சக்கரங்களுடன் கூடியவையும், சிறந்த தேர்கள் பூட்டப்பட்டவையுமான ஆயிரக்கணக்கான தேர்கள் அங்கே காணப்படுகின்றன.(26) பாலோடும் ஆறுகள் பலவும், நெய்யாலான மலைகள் பலவும், தெளிந்த நீரைக் கொண்ட பெரிய நீர்த்தேக்கங்களும் அங்கே இருந்தன. உண்மையில் இதற்கு முன்பு என்னால் காணப்படாதவையும், இறந்தோரின் மன்னனால அங்கீகரிக்கப்பட்டவையுமான இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை நான் கண்டேன்.(27) அப்பொருட்கள் அனைத்தையும் கண்ட நான், பழைமையானவனும், பலமிக்கவனுமான அந்த இறந்தோரின் நீதிபதியிடம் {யமனிடம்}, "பாலும், நெய்யும் நித்தியமாக ஓடும் இந்த ஆறுகள் யாருடைய பயன்பாட்டுக்கும் அனுபவத்திற்கும் விதிக்கப்பட்டிருக்கின்றன?" என்று கேட்டேன்.(28)
யமன் {நாசிகேதனிடம்}, "நோய் தடுக்கும் பால் மற்றும் நெய்யாலான இந்த ஓடைகள் மனிதர்களின உலகில் கொடையளிக்கும் அறவோரின் இன்பத்திற்காக இருக்கின்றன என்பதை அறிவாயாக. அனைத்து வகைக் கவலைகளில் இருந்தும் விடுபட்ட மாளிகைகள் நிறைந்த வேறு நித்திய உலகங்களும் இருக்கின்றன. அவை பசுக்கொடை அளிப்பதில் ஈடுபடும் மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.(29) வெறுமனே பசுக்கொடை மட்டுமே புகழத்தக்கதன்று. பொருத்தமுடைமை, அல்லது பசுக்கொடை கொடுக்கப்படும் நபர், அந்தக் கொடைகளை அளிக்கும் காலம், கொடையாக அளிக்கப்படும் பசுவின் வகை, கொடையளிக்கும்போது நோற்கப்படும் சடங்குகள் ஆகியனவும் கருத்தில் கொள்ளத்தக்கனவாகும். பசுக்கொடையானது, (அவற்றைப் பெறும்) பிராமணர்கள் மற்றும் (கொடுக்கப்படும்) பசுக்கள் ஆகிய இரண்டின் குறிப்பிடத்தக்க தகுதிகளையும் உறுதிசெய்து கொண்டபிறகு கொடுக்கப்பட வேண்டும். எவனுடைய வசிப்பிடத்தில் நெருப்பு அல்லது சூரியனால் துன்பப்பட நேருமோ அவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(30)
வேதங்களை அறிந்தவனும், கடுந்தவங்களைச் செய்தவனும், வேள்விகளைச் செய்பவனுமான பிராமணனே பசுக்கொடை பெறுவதற்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான். துன்பம் நிறைந்த சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவை, அல்லது உணவூட்டவும் வளர்க்கவும் போதிய வழிமுறைகள் இல்லாத வறிய இல்லறவாசிகளால் கொடுக்கப்படுபவை ஆகிய பசுக்கள் இந்தக் காரணங்களுக்காகவே உயர்ந்த மதிப்புள்ளவையாகக் கருதப்படுகின்றன[1].(31) பசுக்கொடையளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகளுக்கு உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே பருகி வாழ்ந்து, வெறும் நிலத்தில் உறங்கி, அவற்றைப் பெறும் பிராமணர்களை (வேறு கொடைகளாலும்) நிறைவடையச் செய்த பிறகு கொடையளிக்க வேண்டும்.(32) கொடையளிக்கப்படும் பசுவுடன் அவற்றின் கன்றுகளும் துணையாகச் செல்ல வேண்டும். மேலும் அவை உரிய பருவகாலங்களில் நல்ல கன்றுகளை ஈனக்கூடியவையாக இருக்க வேண்டும். அவ்வாறு கொடையளிகப்படும்போது அவற்றோடு சேர்த்து பிற பொருட்களுக்கும் துணையாகக் கொடுக்கப்பட வேண்டும். கொடையளித்த பிறகு, அந்தக் கொடையாளி, பிறவகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து, நோய் தடுக்கும் பாலை மட்டுமே மூன்று நாட்கள் உண்டு வாழ வேண்டும்.(33)
[1] "அதாவது கிட்டத்தட்ட இத்தகைய பசுக்களே பிராமணர்களுக்குக் கொடுக்கப்படத் தகுந்தவையே அன்றி, கொடைக்காகப் பெறப்படும் மெலிய விலங்குகளல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
குற்றமற்றதும், உரிய இடைவெளிகளில் நல்ல கன்றுகளை ஈனக்கூடியதும், உரிமையாளரின் வீட்டில் இருந்து தப்பி ஓடாததுமான ஒரு பசுவுடன் துணையாகக் கறப்பதற்குரிய வெண்கல பாத்திரத்தையும் கொடையாக அளிக்கும் ஒருவன் அந்த விலங்கின் உடலில் உள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவுள்ள காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான். நன்கு பயிற்சியளிக்கப்பட்டதும், சுமைகளை இழுக்கவல்லதும், பலமுள்ளதும், வயதில் இளமையானதும், எந்தத் தொல்லையும் கொடுக்காததும், பெரிய வடிவில் உள்ளதும், சக்தியுடன் கூடியதுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் ஒருவன், பசுக்களைக் கொடையளிப்பவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், அறவோரால் அங்கீகரிக்கப்படுபவையுமான உலகங்களை அனுபவிக்கிறான்.(34)
பசுக்களிடம் மென்மையாக நடந்து கொள்பவனாக அறியப்படுபவனும், பசுக்களையே புகலிடமாகக் கொள்பவனும், நன்றி மறவாதவனும், தனக்கென வாழ்வாதாரம் ஏதுமற்றவனுமான ஒருவனே பசுக்கொடை பெறத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான். ஒரு முதிர்ந்த மனிதன் நோய்வாய்ப்படும்போதோ, ஒரு பஞ்சம் ஏற்படும்போதோ, ஒரு பிராமணன் ஒரு வேள்வியைச் செய்ய எண்ணும்போதோ, ஓர் உழவன் உழவுக்காக உழ விரும்பும்போதோ, பிள்ளை பெறும் நோக்கத்திற்காக ஹோமத் திறன் மூலம் ஒருவன் மகனைப் பெறும்போதோ,(35) ஒருவனுடைய ஆசானின் பயன்பாட்டிற்காகவோ, ஒரு குழந்தையை வளர்ப்பதற்காகவோ ஒருவன் தன் அன்புக்குரிய பசுவைக் கொடையளிக்கலாம். (பசுக்கொடை அளிக்கும் காரியத்தில்) காலம் மற்றும் இடம் குறித்த வகையில் மெச்சத்தகுந்த கருத்துகள் இவையே. பெருமளவு பாலைத் தருபவையோ, (பணிவு மற்றும் வேறு பண்புகளுக்கென) நன்கறியப்பட்டவையோ, விலைக்கு வாங்கப்பட்டவையோ, கல்விக்கான வெகுமதியாக அடையப்பட்டவையோ, (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) உயிரினங்களுக்கு மாற்றாகக் காணிக்கையாக அடையப்பட்டவையோ, கரங்களின் வலிமையால் வெல்லப்பட்டவையோ, (மாமனார் மற்றும் மனைவியின் உறவினர்களிடம் இருந்து) திருமண வரதட்சணையாகப் பெறப்பட்டவையோ அத்தகைய பசுக்களே கொடையளிக்கத் தகுந்தவை" என்றான் {யமன்}".(36)
நாசிகேதன் {தந்தை ஔத்தாலகரிடம்} தொடர்ந்தான், "வைவஸ்வதனின் இச்சொற்களைக் கேட்ட நான் மீண்டும் அவனிடம், "பசுக்களைப் பெற முடியாத போது, எந்தப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் கொடையாளிகள் பசுக்கொடை அளிக்கும் மனிதர்களுக்காக ஓதுக்கப்படும் உலகங்களை அடைய முடியும்" என்று கேட்டேன்.(37)
என்னால் கேட்கப்பட்டவனும், ஞானியுமான யமன், பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம் அடையப்படும் கதியை மேலும் விளக்கினான். அவன், "பசுக்கள் இல்லாத போது ஒரு மனிதன் பசுக்களுக்குப் பதிலாகக் கருதப்படுபவற்றைக் கொடையளிப்பதன் மூலம் பசுக்கொடை அளித்த பலனைப் பெறுகிறான்.(38) பசுக்கள் இல்லாத போது, நோன்பை நோற்று, நெய்யாலான ஒரு பசுவைக் கொடையளிக்கும் ஒருவன் தன் பயன்பாட்டுக்கு நெய் ஆறுகளை அடைவான். அவை அன்புக்குரிய தன் குழந்தையை அணுகும் அன்னையைப் போல அவனை அணுகும்.(39) நெய்யாலான பசுவும் இல்லாத போது, நோன்பை நோற்று எள்ளாலான பசுவைக் கொடையளிக்கும் ஒருவன், இவ்வுலகின் துன்பங்கள் அனைத்தையும் கடந்து, மறுமையில் நீ காணும் பாலாறுகளில் இருந்து எழும் பெரும் மகிழ்ச்சிகளை அனுபவிக்கிறான்.(40) எள்ளாலான பசுவும் இல்லாத போது, நீராலான பசுவைக் கொடையளிக்கும் ஒருவன், மகிழ்ச்சிமிக்க இந்த உலகங்களுக்கு வருவதில் வென்று, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருளவல்லதும், தெளிந்த நீரைக் கொண்டதும், குளுமையானதுமான இந்த ஆற்றையும் அனுபவிக்கிறான்" என்றான் {யமன்}.(41)
ஓ! மங்கா மகிமை கொண்டவரே, இறந்தோரின் மன்னன் {யமன்}, நான் அவனுடைய விருந்தினனாக இருக்கையில் இவையாவற்றையும் விளக்கிச் சொன்ன போது, அவன் காட்டிய அற்புதங்கள் அனைத்தையும் கண்டு பேரின்பத்தையே உணர்ந்தேன்.(42) இனி நான் உமக்கு நிச்சயம் ஏற்புடையதைச் சொல்லப் போகிறேன். நான் இப்போது அதிகச் செல்வம் தேவைப்படாத ஒரு பெரும் வேள்வியைப் பெற்றிருக்கிறேன். ஓ! தந்தையே, (பசுக்கொடையால் அமைந்த) அந்த வேள்வி என்னில் இருந்து உண்டாவதாகச் சொல்லப்படலாம். அதைப் பிறரும் அடைவார்கள். அது வேத விதிகளுக்கு இணக்கமற்றதல்ல.(43) இறந்தோரின் பெரும் மன்னனைக் காண இயன்றதால், நீர் என்னைச் சபித்தது எனக்குச் சாபமாக அமையாமல், உண்மையில் அருளாகவே அமைந்தது. அங்கே கொடைகளுக்குக் கிட்டும் வெகுமதிகளைக் கண்டேன். எனவே, ஓ! பேரான்மாவே, என் மனத்தில் ஐயமேதும் மறைந்திராமல் இனி கொடையெனும் கடமையைப் பயில்வேன்.(44)
ஓ! பெரும் முனிவரே, அறவோனான யமன், மகிழ்ச்சியால் நிறைந்தவனாக என்னிடம் மீண்டும் மீண்டும், "அடிக்கடி கொடையளிக்கும் ஒருவன் மனத்தூய்மையை அடைவதில் வென்ற பிறகு குறிப்பாகப் பசுக்கொடையை அளிக்கிறான்.(45) (கொடைகள் குறித்த) இவ்வுரை புனிதம் நிறைந்ததாகும். கொடைகள் குறித்த கடமைகளை ஒருபோதும் அவமதிக்காதே. மேலும், கொடைகளானவை தகுந்த மனிதர்களுக்கு, தகுந்த காலம் மற்றும் இடத்தில் வழங்கப்பட வேண்டும். எனவே, எப்போதும் நீ பசுக்கொடை அளிப்பாயாக. இக்காரியத்தில் ஒருபோதும் ஐயமேதும் கொள்ளாதே.(46) பழங்காலத்தில், கொடைகளின் பாதைகளில் அர்ப்பணிப்புள்ள உயர் ஆன்ம மனிதர்கள் பலர் பசுக்கொடைகளை அளித்துவந்தனர். கடுந்தவங்களைச் செய்வதற்கு அஞ்சிய அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கபடி கொடைகளை அளித்து வந்தனர்.(47) காலத்தில் அவர்கள் தங்கள் செருக்கு, பகட்டு ஆகிய மிகையுணர்வுகள் அனைத்தையும் கைவிட்டுத் தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தங்கள் மற்றும் அறச்செயல்கள் அனைத்திலும் ஈடுபடும் அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்க பசுக்கொடைகளை அளித்து, அச்செயல்களுக்கு வெகுமதியாகச் சொர்க்கத்தை அடைந்து, அத்தகைய அறத்திற்காகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.(48)
ஒருவன், காம்யாஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படும் சந்திரனின் எட்டாம் நாளில் (ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி) கொடைபெறுவோரின் தகுதியை உறுதி செய்து கொண்டு முறையாக ஈட்டப்பட்ட பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். கொடையளித்த பிறகு, ஒருவன் பத்து நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் (வேறு வகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து) பசுவின் பால், அவற்றின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ வேண்டும்.(49) ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன் தெய்வீகப் பசுவைக் கொடையளித்ததற்கு இணையானதாகும். இரு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வேதங்களின் தேர்ச்சி என்ற வெகுமதியை அடைகிறான். பசுக்கள் பூட்டப்பட்ட தேர்கள் மற்றும் வாகனங்களைக் கொடையாளிப்பதன் மூலம் ஒருவன் புனித நீர்நிலைகளில் நீராடிய பலனை அடைகிறான். கபிலை இனப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(50) உண்மையில், முறையான வழியில் அடையப்பட்டதும், கபிலை வகையைச் சார்ந்ததுமான ஒரே ஒரு பசுவைக் கொடையளிப்பதன் மூலம் தான் இழைத்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பசுத் தரும் பாலைவிட (சுவையில்) உயர்ந்தது வேறேதும் அல்ல. பசுக்கொடையே உண்மையில் மிக மேன்மையான கொடையாகக் கருதப்படுகிறது.(51) பசுவானது பாலைத் தருவதன் மூலம் உலகங்கள் அனைத்தையும் துன்பத்தில் இருந்து மீட்கிறது. மேலும், பசுவே உயிரினங்கள் உண்ணும் உணவை உண்டாக்குகிறது. பசுச் செய்யும் தொண்டின் அளவை அறிந்த ஒருவன் தன் இதயத்தில் அதன் மீது அன்பை வளர்க்கவில்லையெனில் அவன் நிச்சயம் நரகில் மூழ்கக் கூடிய பாவியாவான்[2].(52)
[2] "பசுவானது நிலத்தை உழத் துணை புரிவதனால் மட்டும் உணவை உண்டாக்கவில்லை, ஆனால் வேள்விகளைச் செய்யத் துணைபுரிவதன் மூலமும் உணவை உண்டாக்குகின்றன. வேள்வி நெருப்பில் சுடப்படும் நெய்யானது தேவர்களுக்கு உணவூட்டுகிறது. தேவர்கள் மழையைப் பொழிந்து பயிர்களை விளையச் செய்கின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒருவன் ஆயிரம், நூறு, பத்து, அல்லது ஐந்து பசுக்களைக் கொடையளிப்பவனும், உரிய இடைவெளிகளில் நல்ல கன்றுகளை ஈனும் ஒரே ஒரு பசுவை அறம் சார்ந்த ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவனுமான ஒருவன், அந்தப் பசுவை அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்யும் புனித நீர் கொண்ட ஆற்றின் வடிவில் நிச்சயம் சொர்க்கத்தில் காண்பான்.(53) பசு அளிக்கும் செழிப்பு மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தவரையில், பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் பசுக்கள் வழங்கும் பாதுகாப்புக் காரியத்தில் பசுக்கள் பூமியில் விழும் சூரியக் கதிர்களுக்கு இணையானவையாக இருக்கின்றன. பசுவைக் குறிக்கும் சொல், சூரியக்கதிர்களையும் குறிப்பதாக இருக்கிறது. பசுக்கொடையளிப்பவன், பூமியின் பெரும்பகுதியில் பரந்திருக்கும் ஒரு பெரிய குலத்தை உண்டாக்குவான். எனவே, பசுக்கொடையளிக்கும் ஒருவன் இரண்டாம் சூரியனைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்வான்.(54) பசுக்கொடை அளிக்கும் காரியத்தில் ஒரு சீடன் தன் ஆசானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய சீடன் ஒவ்வொருமுறையும் சொர்க்கத்திற்குச் செல்வதில் நிச்சயம் வெல்கிறான். (அறச் செயல்களைச் செய்யுங்காரியத்தில்) ஆசானைத் தேர்ந்தெடுப்பது, விதிகளுக்கு இணக்கமான மனிதர்களால் உயர்ந்த கடமையாகக் கருதப்படுகிறது. உண்மையில், இதுவே தொடக்க விதியாகும். (பசுக்கொடையைப் பொறுத்தவரையில்) அனைத்து விதிகளும் அதையே சார்ந்திருக்கின்றன.(55) ஆய்வுக்குப் பிறகு, பிராமணர்களுக்கு மத்தியில் தகுந்த மனிதனைத் தேர்ந்தெடுக்கும் ஒருவன், முறையான வழிமுறைகளில் அடையப்பட்ட ஒரு பசுவை அவனுக்குக் கொடையளித்து, அந்தக் கொடையை அவனை ஏற்கச் செய்ய வேண்டும். தேவர்கள், மனிதர்கள் மற்றும் நாமும், பிறருக்கு நல்லதை விரும்பும் காரியத்தில், "உன் அறத்தின் விளைவாகக் கொடைகளுக்குரிய பலன்கள் உனதாகாட்டும்" என்று சொல்கிறோம்" என்றான் {யமன்}.(56)
ஓ! மறுபிறப்பாள முனிவரே, இறந்தோரின் நீதபதி இவ்வாறே என்னிடம் பேசினான். பிறகு நான் அறவோனான அந்த யமனுக்குத் தலைவணங்கினேன். அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனது ஆட்சிப்பகுதிகளை விட்டகன்று உமது பாதங்களின் அடியில் வந்து சேர்ந்தேன்" என்றான் {நாசிகேதன்}[3].(57)
[3] மனித வாழ்வு, தோற்றம், மறைவு ஆகியவற்றைக் குறித்து இந்த நாசிகேதனுக்கும் யமனுக்கும் இடையில் நடந்த உரையாடலே நம்மிடையே கடோபநிஷத் எனும் உபநிஷதமாக உள்ளது.
அநுசாஸனபர்வம் பகுதி – 71ல் உள்ள சுலோகங்கள் : 57
ஆங்கிலத்தில் | In English |