The questions of Indra! | Anusasana-Parva-Section-72 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 72)
பதிவின் சுருக்கம் : பசுக்கொடை தொடர்பாகப் பிரம்மனிடம் இந்திரன் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, முனிவர் நாசிகேதர் பசுக்கொடை குறித்துப் பேசியதை நீர் எனக்குச் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, அந்தச் செயலின் பலனையும், முன்சிறப்புகளையும் குறித்தும் சொன்னீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கப் பாட்டா, ஒரே ஒரே பிழையின் விளைவாக உயர் ஆன்ம மன்னன் நிருகனுக்கு நேர்ந்த துன்பத்தின் அதீத விளவையும் எனக்குச் சொன்னீர்.(2) அவன் (ஓணானின் வடிவில்) நீண்ட காலம் துவாராவதியில் வசிக்க நேர்ந்ததையும், அவனது பரிதாபகரமான நிலையில் இருந்து கிருஷ்ணனால் எவ்வாறு மீட்கப்பட்டான் என்பதையும் சொன்னீர்.(3) எனினும், இதில் எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அது பசுக்கொடை குறித்ததாகும். நான் பசுக்கொடை அளித்தவர்கள் வசிப்பதற்காக ஒதுக்கப்படும் உலகங்களைக் குறித்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தொடக்ககாலத் தாமரையில் உதித்தவனுக்கும் {பிரம்மனுக்கும்}, நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5)
சக்ரன், "ஓ! பாட்டா {பிரம்மாவே}, கோலோகத்தில் வசிப்போர், தங்கள் பிரகாசத்தால் சொர்க்கலோகவாசிகளின் செழிப்பையும் விஞ்சியவர்களாக, (அவர்களைத் தாழ்ந்த நிலையடைந்தவர்களாக்கி) அவர்களைக் கடந்து நிற்பதாகக் காண்கிறேன். இஃது என் மனத்தில் ஓர் ஐயத்தை எழச்செய்கிறது.(6) ஓ! புனிதமானவரே, கோலோகங்கள் என்னவகைச் சார்ந்தவை? ஓ! பாவமற்றவரே, அவற்றைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. உண்மையில், பசுக்கொடை அளிப்போர் வசிக்கும் உலகங்களின் இயல்பு என்ன? அதை அறிய விரும்புகிறேன்.(7) அந்த உலகங்கள் என்ன வகைச் சார்ந்தவை? அவை என்ன பலன்களைக் கொடுக்கின்றன? அங்கே வசிப்பவர்கள் என்ன உயர்ந்த பொருளை அடைவதில் வெல்கிறார்கள்? அதன் குணங்கள் என்ன? மேலும் மனிதர்கள் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு அந்த உலகங்களை அடைவதில் எவ்வாறு வெல்கிறார்கள்?(8)
பசுக்கொடையளிப்பவன் தன் கொடையின் பலன்களை எவ்வளவு காலம் அனுபவிக்கிறான்? மனிதர்கள் எவ்வாறு பல பசுக்களைக் கொடையளிக்கலாம், மேலும் எவ்வாறு அவர்கள் கொடையளிக்கலாம்?(9) பல பசுக்களைக் கொடையளிப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? சிலவற்றை மட்டுமே கொடையளிப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? உண்மையில் எந்தப் பசுவையும் கொடையளிக்காமல் மனிதர்கள் எவ்வாறு பசுக்கொடையாளிகள் ஆகலாம்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக.(10) ஓ! பலமிக்கத் தலைவரே, பல பசுக்களைக் கொடையளித்தவனும், சில பசுக்களை மட்டுமே கொடையளித்தவனுக்கு இணையானவனாக ஆவது எவ்வாறு? சில பசுக்களை மட்டுமே கொடையளிப்பவன், பல பசுக்களைக் கொடையளித்தவனுக்கு இணையாவது எவ்வாறு?(11) பசுக்கொடையின் சிறப்புக்காக என்ன வகைத் தக்ஷிணை புகழ்பெற்றதாக இருக்கிறது? ஓ! புனிதமானவரே, வாய்மைக்கு ஏற்புடையவகையில் இவை யாவற்றையும் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான் {இந்திரன்}.(12)
அநுசாஸனபர்வம் பகுதி – 72ல் உள்ள சுலோகங்கள் : 12
ஆங்கிலத்தில் | In English |