The answer of Brahma! | Anusasana-Parva-Section-73 | Mahabharata In Tamill
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 73)
பதிவின் சுருக்கம் : பசுக்கொடை தொடர்பாக இந்திரன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரம்மன்...
பெரும்பாட்டன் {பிரம்மன், இந்திரனிடம்}, "ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பசுக்கொடை தொடங்கி, அவை குறித்து நீ கேட்ட கேள்விகள் மூவுலகிலும் வேறு யாராலும் சொல்ல முடியாதவையாக இருக்கின்றன.(1) ஓ! சக்ரா, நீ கூடக் காண முடியாத பலவகை உலகங்கள் இருக்கின்றன. ஓ! இந்திரா, அவ்வுலகங்கள் என்னாலும், கணவனுடன் பாசமாக உள்ள கற்புடைய பெண்களாலும் காணப்படுகின்றன.(2) பக்தி மற்றும் அறச்செயல்களின் மூலம் சிறந்த நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், அற ஆன்மாக்களான பிராமணர்களும் தங்கள் உடலுடன் அந்த உலகங்களுக்குச் செல்கிறார்கள்.(3) சிறந்த நோன்புகளை நோற்கும் மனிதர்கள், பிரகாசமான கனவுப்படைப்புகளுக்கு ஒப்பான அந்த உலகங்களைத் தங்கள் தூய்மையான மனங்களால் கண்டு, உடல் குறித்த தங்கள் நினைவை இழந்து (தற்காலிக) முக்தி நிலையை அடைவதில் வெல்கிறார்கள்[1].(4)
[1] "யோகம் அல்லது சமாதி நிலையில் உடல் குறித்த நினைவை இழக்கும்போது ஒரு தற்காலிக மோட்சம் அல்லது முக்தி நிலை அடையப்படுகிறது. தூய்மையடைந்த மனங்களைக் கொண்ட மனிதர்கள், அத்தகைய உயர்ந்த இன்பலோகங்களை அத்தகைய சமயங்களில் அடைகின்றனர். அத்தகைய இன்ப நிலை பிரம்மத்தின் இன்ப நிலையே ஆகும்" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! ஆயிரம் கண்களைக் கொண்டவனே {இந்திரா}, அந்த உலகங்களுக்குரிய பண்புகளை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. அங்க காலத்தின் நடைமுறை இருப்பதில்லை. அங்கே முதுமையோ, அண்டத்தில் எங்குமிருக்கும் நெருப்போ இருப்பதில்லை. அங்கே சிறு தீமையோ, நோயோ எந்த வகைப் பலவீனமோ கிடையாது.(5) ஓ! வாசவா, அங்கே வாழும் பசுக்கள், தங்கள் இதயங்களில் வளர்க்கும் ஆசைகள் அனைத்தும் கனியும் நிலையை அடைகின்றன.(6) விரும்பிய எங்கும் செல்ல இயன்று, உண்மையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிமையாகச் சென்று தங்கள் மனங்களில் எழும் விருப்பங்கள் அனைத்தும் கனியை நிலையை அவை அடைகின்றன. தடாகங்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் பல்வேறு வகைக் காடுகள், மாளிகைள், குன்றுகள் மற்றும் உயிரினங்களுக்கு உரிய இனிமை நிறைந்த பொருட்கள் அனைத்தும் அங்கே காணப்படுகின்றன. நான் சொல்லும் இவை அனைத்திலும் மேன்மையாக வேறு எந்த இன்ப உலகமும் இல்லை.(7,8)
ஓ! சக்ரா, அனைத்து உயிரினங்களிடமும் மன்னிக்கும் குணத்துடன் கூடியவர்களும், அனைத்தையும் தாங்கிக் கொள்ள வல்லவர்களும், அனைத்துப் பொருட்களிடமும் அன்புபாராட்டுபவர்களும், ஆசானிடம் கடமையுணர்வுடன் கீழ்ப்படிந்து நடந்து கொள்பவர்களும், செருக்கு மற்றும் பகட்டில் இருந்து விடுபட்டவர்களுமான முதன்மையான மனிதர்கள் உயர்ந்த இன்பநிலையைக் கொண்ட அவ்வுலகங்களுக்குச் செல்கிறார்கள்.(9) அனைத்து வகை இறைச்சியையும் தவிர்ப்பவனும், தூய்மையான இதயத்தைக் கொண்டவனும், அறமொழுகுபவனும், பெற்றோரை மதிப்புடன் வழிபடுபவனும், பேச்சு மற்றும் ஒழுக்கத்தில் வாய்மையைக் கடைப்பிடிப்பவனும், பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனும், குற்றமற்ற ஒழுக்கம் கொண்டவனும்,(10) பசுக்களிடமும், பிராமணர்களிடமும் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனும், அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புள்ளவனும், ஆசான்களிடம் மதிப்புடன் தொண்டாற்றுபவனும், மொத்த வாழ்வையும் வாய்மைக்கும், கொடைக்கும் அர்ப்பணித்தவனும், தனக்கு எதிரான வரம்புமீறல்கள் அனைத்தையும் எப்போதும் மன்னிப்பவனும், மென்மையானவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், தேவர்களிடம் மதிப்பு நிறைந்தவனும், விருந்தினர்கள் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவனும், கருணை நிறைந்தவனுமான ஒருவன், மாறும் இயல்பற்றதும், நித்தியமானதுமான கோலோகத்தை அடைவதில் வெல்வான்.(12)
பிறன்மனையுறவில் ஈடுபடுபவன் அத்தகைய உலகத்தைக் காண மாட்டான்; ஆசானைக் கொன்றவனும், பொய்மை பேசுபவனும், பகட்டான வெற்றுப் பேச்சுகளில் ஈடுபடுபவனும், பிறருடன் எப்போதும் சச்சரவு செய்பவனும், பிராமணர்களிடம் எப்போதும் பகைமை பாராட்டுபவனும் ஒருபோதும் அத்தகைய உலகத்தைக் காண மாட்டார்கள். உண்மையில், அத்தகைய குற்றங்களால் களங்கப்பட்டிருக்கும் தீய பாவியால் அந்த இன்பலோகங்களைக் காணவும்முடியாது;(13) நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், கபடம் நிறைந்தவன், நன்றி மறந்தவன், வஞ்சனை செய்பவன், ஒழுக்கக்கேடன், அறத்தை அலட்சியம் செய்பவன், பிராமணர்களைக் கொன்றவன் ஆகியோராலும் அவ்வுலகங்களைக் காணவும் முடியாது. அத்தகைய மனிதர்களால், அறச் செயல்களைச் செய்வோரின் வசிப்பிடமாக இருக்கும் கோலோகத்தைக் கற்பனையிலும் காண முடியாது.(14) ஓ! தேவர்களின் தலைவா, கோலோகத்தின் நுட்பமான விளக்கம் உட்பட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! நூறு வேள்விகளைக் செய்தவனே, இனி பசுக்கொடை அளிப்போர் அடையும் பலன்களைக் குறித்துக் கேட்பாயாக.(15)
நியாயமாக அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு அவற்றை விலைக்கு வாங்கிப் பசுக்கொடையளிப்பவன், அத்தகைய செயலின் கனியாக வற்றாத இன்பம் நிறைந்த உலகங்கள் பலவற்றை அடைகிறான்.(16) ஓ! சக்ரா, பகடையில் {சூதில்} வென்ற செல்வத்தைக் கொண்டு பசுக்கொடை அளிப்பவன் பத்தாயிரம் தேவ வருடங்களுக்கு இன்ப நிலையை அனுபவிக்கிறான்.(17) மூதாதையர் செல்வத்தில் தன் பங்காக ஒரு பசுவை அடையும் ஒருவன், அதை நியாயமாக அடைந்ததாகவே சொல்லப்படுகிறது. அத்தகைய பசுவையும் கொடையளிக்கலாம். அவ்வாறு அடைந்த பசுக்களைக் கொடையளிப்பவர்கள், வற்றாத நித்திய இன்ப உலகங்களை அடைகின்றனர்.(18) ஓ! சச்சியின் தலைவா, ஒரு பசுவைக் கொடையாக அடைந்தவன், தூய இதயத்துடன் அவளை {மீண்டும் வேறொருவனுக்கு} கொடையளித்தால் அவன் இன்பம் நிறைந்த நித்திய உலகங்கள் நிச்சயமாக அடைகிறான்.(19) பிறந்ததிலிருந்து (இறக்கும் காலம் வரையில்) புலனடக்கத்துடன் வாய்மையையே பேசுபவனும், ஆசான் மற்றும் பிராமணர்கள் செய்யும் அனைத்தையும் தாங்கிக் கொள்பவனும், பொறுமையைக் கடைப்பிடிப்பவனுமான ஒருவன் பசுவிற்கு இணையான கதியை அடைவதில் வெல்கிறான் {கோக்களுக்கும் அவற்றின் மீது தயையோடு இருப்பவனுக்கும் கதியொன்றே}.(20)
ஓ! சச்சியின் தலைவா, பிராமணர்களிடம் ஒருபோதும் முறையில்லாமல் {சொல்லத்தகாத சொல்லைப்} பேசக்கூடாது. மேலும் மனத்தாலும் ஒருவன் ஒரு பசுவக்கு எத்தீங்கையும் செய்யக் கூடாது. ஒருவன் பசுவின் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, பசுவிடம் கருணை காட்ட வேண்டும்[2].(21) ஓ! சக்ரா, வாய்மை எனும் கடமையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனுக்குக் கிட்டும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக. ஒருவன் ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்த ஒரு பசு ஆயிரம் பசுக்களுக்கு இணையானதாகிறது.(22) அத்தகைய தகுதிகளைக் கொண்ட {வாய்மையுடன் கூடிய} ஒரு க்ஷத்திரியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால் அவன் ஒரு பிராமணனுக்கு இணையான பலனைப் பெறுகிறான். ஓ! சக்ரா, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கும் அந்த ஒரு பசுவானது, அதே சூழ்நிலையில் ஒரு பிராமணன் கொடுக்கும் ஒற்றைப் பசுத் தரும் பலனைத் தருகிறது. இது சாத்திரங்களில் நிச்சயமான தீர்மானமாக இருக்கிறது.(23) அதேபோன்ற சிறப்புகளைக் கொண்ட ஒரு வைசியன் ஒரே ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தப் பசு ஐநூறு பசுக்களுக்கு இணையானதாகும் (ஐநூறு பசுக்களைக் கொடையளித்ததற்கு இணையான பலனைத் தரும்).(24)
[2] "இங்கே சொல்லப்படும் கோவ்ரிதி என்பது நாளைக்குச் சேர்த்து வைக்கும் காரியத்தில் பசுவைப் போல இருக்க வேண்டும் என்பதாகும். எனவே, ஒருவன் ஒருபோது நாளை குறித்துச் சிந்திக்காமல், எதிர்காலப் பயன்பாட்டுக்கு என எதையும் சேர்த்து வைக்கக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தவங்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புடனும், ஆசான்களிடம் கடமையுணர்வுடன் தொண்டாற்றுவதன் மூலம் (சாத்திரங்களிலும், அனைத்து செயல்களிலும்) திறனுடனும், மன்னிக்கும் மனநிலையுடனும், தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டும், அமைதியான ஆன்மாவுடனும், (உடல் மற்றும் மனத்தில்) தூய்மையுடனும், அறிவொளியுடனும், அனைத்துக் கடமைகளையும் நோற்றும், அனைத்து வகைத் தற்பெருமைகளில் இருந்தும் விடுபட்டும் இருக்கும் ஒரு மனிதன், ஒரு பிராமணனுக்கு ஒரு பசுவைக் கொடையளித்தால், உரிய சடங்குகளுடன் கொடையளித்த அந்தச் செயலின் மூலம் அவன் அபரிமிதமாகப் பாலைத் தரும் ஒரு பசு அடையும் பெரும் பலனை அடைகிறான். எனவே, ஒருவன் வாய்மையை நோற்று, தன் ஆசானிடம் பணிவுடன் தொண்டாற்றி, ஒற்றை அர்ப்பணிப்புடன் எப்போதும் பசுக்கொடையை அளிக்க வேண்டும்.(25,26) ஓ! சக்ரா, வேதங்களை முறையாகக் கற்று, பசுக்களிடம் மதிப்புள்ளவனாக, பசுக்களைப் பார்ப்பதாலேயே எப்போதும் மகிழ்ச்சியடைபவனாக, பிறவி முதல் பசுக்களிடம் எப்போதும் தலைவணங்குபவனாக உள்ள ஒருவன் அடையும் பலன்களைக் கேட்பாயாக.(27) ராஜசூய வேள்வி செய்வதனால் ஒருவன் அடையும் பலன், பொற்குவியல்களைக் கொடையளிப்பதால் ஒருவன் அடையும் பலன் ஆகிய உயர்ந்த பலன்களைப் பசுக்களிடம் மதிப்பு காட்டும் ஒருவன் அடைகிறான். அறம்சார்ந்த முனிவர்களும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயர் ஆன்ம மனிதர்களும் இவ்வாறே சொல்கின்றனர்.(28)
வாய்மையில் அர்ப்பணிப்புடனும், அமைதியான ஆன்மாவுடனும், பேராசையில் இருந்து விடுபட்ட நிலையுடனும், பேச்சில் எப்போதும் வாய்மையுடனும், பசுக்களிடம் மதிப்பு காட்டுவதை உறுதியான நோற்பாக நோற்று வருபவனும், தான் உணவு உட்கொள்வதற்கு முன் சீரான வகையில் பசுக்களுக்கு ஏதாவது உணவைக் கொடுத்து வருபவனுமான ஒரு மனிதன் அத்தகைய செயலின் மூலம் ஆயிரம் பசுக்களைக் கொடையளித்த பலனை அடைகிறான்.(29) ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு, மற்ற வேளை உணவுகளைப் பசுக்களுக்குக் கொடுப்பவனும், இத்தகைய கருணையையும், மதிப்பையும் அவற்றுக்குக் காட்டுபவனுமான மனிதன், பத்து வருடங்கள் அளவில்லாத இன்பத்தை அனுபவிப்பான்.(30) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, ஒரு நாளைக்கு ஒரேயொரு வேளை மட்டுமே உண்டு மற்ற வேளை உணவுக்கான பொருளைச் சேமித்து ஒரு பசுவை விலைக்கு வாங்கி, அதை (ஒரு பிராமணனுக்குக்) கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் மூலம் அந்த ஒரே ஒரு பசுவின் உடலில் உள்ள முடிகளின் எண்ணிக்கை அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்த பலனை ஈட்டுகிறான்.(31) பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் அடையும் பலன்களைக் குறித்த அறிவிப்புகள் இவையே. இனி க்ஷத்திரியர்கள் அடையும் பலன்களைக் கேட்பாயாக. இவ்வகையில் ஒரு பசுவை விலைக்கு வாங்கி அதை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் க்ஷத்திரியன் ஐந்து வருட காலத்திற்கான பேரின்ப நிலையை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு வைசியன் க்ஷத்திரியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான். அவ்வாறே நடந்து கொள்ளும் ஒரு சூத்திரன், வைசியன் அடையும் பலனில் பாதிப் பலனை அடைகிறான்.(32)
தன்னை விற்று அதன் மூலம் பசுக்களை விலைக்கு வாங்கி அவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் பசுக்கள் காணப்படும் காலம் வரை சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிப்பான்.(33) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, தன்னையே விற்று அதன் மூலம் அடையப்படும் பசுவில் உள்ள ஒவ்வொரு முடியிலும் வற்றாத இன்பத்தைத் தரும் ஓர் உலகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. போரிட்டுப் பசுக்களை அடைந்து அவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையளிக்கும் மனிதன்,(34) தன்னையே விற்று பசுவை அடைந்து அதைக் கொடையளிப்பதால் கிட்டும் பலனை அடைகிறான். பசு இல்லாத போது, புலனடக்கத்துடன் கூடிய எள்ளால் ஆன பசுவைக் கொடையளித்தால், அவன் அத்தகைய பசுவின் மூலம் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்து மீட்கப்படுகிறான். அத்தகைய மனிதன் பெரும் இன்பநிலையில் திளைத்திருக்கிறான்.(35) வெறும் பசுக்கொடை மட்டுமே பலனைக் கொடுத்துவிடுவதில்லை. கொடை பெறுபவனின் தகுதி, காலம், பசுவின் வகை, நோற்கப்படும் சடங்கு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒருவன் பசுக்கொடை அளிப்பதற்கான காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். (கொடையளிக்கப்படும்) பசுக்கள் மற்றும் (அவற்றைப் பெற்றுக் கொள்ளப் போகும்) பிராமணர்களின் குறிப்பிடத்தக்க தகுதிகளும் உறுதிசெய்யப்பட வேண்டும். நெருப்பு, அல்லது சூரியனால் துன்பத்துக்கு ஆளாகக் கூடிய வசிப்பிடம் கொண்ட ஒருவனுக்குப் பசுக்களைக் கொடுக்கக்கூடாது.(36)
வேதமறிந்தவனும், தூய குலத்தில் வந்தவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளவனும், பாவம் இழைக்க அஞ்சுபவனும், பல்வேறு வகை ஞானங்களைக் கொண்டவனும், பசுக்களிடம் கருணை கொண்டவனும், மென்மையான நடத்தையைக் கொண்டவனும், அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவனும், தனக்கென உறுதியான வாழ்வாதார வழிமுறைகள் இல்லாதவனுமான ஒருவன், பசுக்கொடை பெறத் தகுந்த மனிதனாகக் கருதப்படுகிறான்.(37) வாழ்வாதார வழிமுறைகள் ஏதும் அற்றவனும், (எடுத்துக்காட்டாக, பஞ்சகாலத்தில்) உணவில்லாமையால் பெரிதும் பீடிக்கப்பட்டவனுமான ஒரு பிராமணனுக்கு, உழவு காரியங்களுக்காகவோ, ஹோமத்தின் விளைவால் பிறந்த ஒரு பிள்ளைக்காகவோ, அவனுடைய ஆசானுக்காகவோ, (இயற்கையான நடைமுறையில்) பிறந்த ஒரு பிள்ளையைக் காப்பதற்காகவோ ஒரு பசுவைக் கொடையளிக்கலாம். உண்மையில், அந்தக் கொடையானது உரிய காலத்தில், உரிய இடத்தில் கொடுக்கப்பட வேண்டும்.(38) ஓ! சக்ரா, இயல்புகள் நன்றாக அறியப்பட்டவையும், அறிவுக்கான வெகுமதியாக அடையப்பட்டவையும், (செம்மறியாடு, வெள்ளாடு முதலிய) வேறு விலங்குகளுக்கு மாற்றாக விலைக்கு வாங்கப்பட்டவையும், கரங்களின் ஆற்றலால் வெல்லப்பட்டவையும், திருமணத்தில் வரதட்சணையாகப் பெறப்பட்டவையும், ஆபதான சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவையும், வறிய உரிமையாளர்களால் பராமரிக்கப்பட இயலாமல் வேறொருவனின் இல்லத்தில் வளர்த்துக் கொள்ளக் கொடுக்கப்பட்டவையுமான பசுக்களை உரிய கொடைப் பொருளாகக் கருதலாம்.(39) உறுதியான உடல்படைத்தவையும், நல்ல இயல்புகளைக் கொண்டவையும், இனிய நறுமணத்துடன் கூடியவையும், புகழத்தக்க கொடைகளாகக் கொள்ளப்படுகின்றன. ஓடைகள் அனைத்திலும் முதன்மையான கங்கையைப் போலவே மாட்டின விலங்குகள் அனைத்திலும் கபிலைப் பசுவே முதன்மையானதாகும்.(40)
பசுக்கொடை அளிக்க விரும்பும் ஒருவன், மூன்று இரவுகள் உணவு அனைத்தையும் தவிர்த்து, நீரை மட்டுமே உண்டு வாழ்ந்து, அதே காலத்திற்கு வெறும் தரையில் உறங்கி, பிராமணர்களுக்கு வேறு கொடைகளை அளித்து நிறைவடையச் செய்த பிறகு அவர்களுக்குப் பசுக்கொடை அளிக்க வேண்டும். குற்றங்குறையற்ற அத்தகைய பசுவும், மெலிந்ததாக இல்லாமல் நலமான கன்றுகளுடன் கொடுக்கப்பட வேண்டும். அந்தக் கொடையை அளித்த பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தக் கொடையாளி பசுத் தரும் பொருட்களை மட்டுமே உணவாக உண்ண வேண்டும்.(41) அமைதியாகப் பால் கறக்க விடுவதும், நலமிக்கக் கன்றுகளை ஈனுவதும், உரிமையாளரின் இல்லத்தில் இருந்து தப்பி ஓடாததுமான நல்ல இயல்பைக் கொண்ட ஒரு பசுவைக் கொடுப்பதன் மூலம், அந்தக் கொடையாளியானவன் அந்தப் பசுவின் உடலில் இருந்த மயிர்களின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் மறுமையில் இன்பத்தை அனுபவிப்பான்.(42) அதே போல, பெருஞ்சுமைகளை இழுக்க வல்லதும், இளமையானதும், பலமானதும், அடக்கமானதும், கலப்பையில் பூட்டப்படுவதை அமைதியாகப் பொறுத்துக் கொள்வதும், பெரும் உழைப்பைக் கோரும் பணிகளைச் செய்யும் சக்தி படைத்ததுமான ஒரு காளையை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கும் ஒருவன், பத்துப் பசுக்களைக் கொடையளித்தவன் அடையும் உலகங்களை அடைவான்.(43) காட்டில் பசுக்களையும் பிராமணர்களையும் (ஆபத்திலிருந்து) காக்கும் மனிதன், அனைத்து வகைத் துன்பத்தில் இருந்தும் மீட்கப்படுகிறான். அவன் அடையும் பலன்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(44)
அத்தகைய மனிதன் ஈட்டும் பலனானது, ஒரு குதிரை வேள்வி செய்த நித்திய பலனுக்கு இணையானதாகும். அத்தகைய மனிதன், மரணக் காலத்தில் தான் விரும்பும் கதியையே அடைவான்.(45) உண்மையில் அவன் த்ன இதயத்தில் எந்த வகை இன்பத்தை விரும்பினாலும், அவை அவனது செயலின் விளைவால் அடையத்தக்கதாகின்றன.(46) உண்மையில், பசுக்களால் அனுமதிக்கப்பட்ட அத்தகைய மனிதன், அனைத்து இன்ப லோகங்களிலும் கௌரவிக்கப்பட்டு வாழ்கிறான். இந்த நோக்கோடு காடுகளில் நாள்தோறும் பசுக்களைப் பின்தொடரும் மனிதன் ஒருவன்,(47) புல், சாணம் மற்றும் மரத்தின் இலைகளை உண்டு வாழ்ந்து, பலனில் உள்ள விருப்பத்தில் இருந்து விடுபட்டு, முறையற்ற பொருட்கள் ஒவ்வொன்றில் இருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அனைத்து வகைக் களங்கங்களில் இருந்து மனம் தூய்மையடைந்து, அவன் விரும்பும் எந்த உலகம், அல்லது மகிழ்ச்சியான வேறு எந்த உலகமாக இருந்தாலும், அங்கே ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வான்" என்றான் {பிரம்மன்}.(48)
அநுசாஸனபர்வம் பகுதி – 73ல் உள்ள சுலோகங்கள் : 48
ஆங்கிலத்தில் | In English |