Gold - as gift and dakshina! | Anusasana-Parva-Section-74 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 57)
பதிவின் சுருக்கம் : பசுக்கொடை, பசுத்திருட்டு, பசு விற்பனை, பொற்கொடை மற்றும் தக்ஷிணை தொடர்பாக இந்திரனுக்குப் பதிலளித்த பிரம்மன்...
இந்திரன் {பிரம்மனிடம்}, "ஓ! பாட்டா, தெரிந்தே பசுவைக் களவு செய்பவன் அல்லது பேராசையின் காரணமாக அதை விற்பவன் என்ன கதியை அடைகிறான் என்பதை அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1)
பெரும்பாட்டன் {பிரம்மன்}, "உணவுக்காகக் கொல்லவோ, செல்வத்திற்காக விற்கவோ, ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதற்காகவோ ஒரு பசுவைக் களவாடும் மனிதர்களுக்கு நேரும் விளைவுகள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக.(2) சாத்திரக் கட்டுப்பாடுகளை எண்ணிப் பார்க்காமல் ஒரு பசுவை விற்பவன், அல்லது கொல்பவன், அல்லது ஒரு பசுவின் இறைச்சியை உண்பவன், செல்வத்திற்காக ஒரு பசுவைக் கொல்லச் செய்பவன்(3) எனக் கொல்பவன், உண்பவன், கொலையை அனுமதிப்பவன் ஆகியோர் கொல்லப்பட்ட அந்தப் பசுவின் உடலில் உள்ள மயிரின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் நரகில் வாடுவார்கள்.(4) ஓ! பெரும்பலம் கொண்டவனே, இந்தக் குற்றங்களும், ஒரு பிராமணனின் வேள்வியைத் தடை செய்வதால் உண்டாகும் வகையிலான குற்றங்களும் பசுக்களை விற்பனை செய்வது மற்றும் களவாடுவது ஆகியனவற்றின் மூலம் {ஒருவனைப்} பற்றுகின்றன.(5) ஒரு பசுவைக் களவாடி அவளை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதன் அந்தக் கொடையின் வெகுமதியாகச் சொர்க்கத்தின் இன்ப நிலையை அனுபவித்தாலும், களவு செய்த பாவத்திற்காக நெடுங்காலம் நரகில் துன்பத்தை அனுபவிக்கிறான்.(6)
ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக் கொடையில் பொன்னே தக்ஷிணையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், வேள்விகள் அனைத்திலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகச் சொல்லப்படுகிறது.(7) பசுக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தன் மூதாதையரில் ஏழு தலைமுறையினரையும், வழித்தோன்றல்களில் ஏழு தலைமுறையினரையும் மீட்பதாகச் சொல்லப்படுகிறான். பொன் தக்ஷிணையுடன் பசுக்கொடையளிப்பதன் மூலம் ஒருவன் மேற்சொன்னதில் இரட்டிப்பு எண்ணிக்கையில் {பதினான்கு தலைமுறைக்கான} தன் மூதாதையரையும், வழித்தோன்றல்களையும் மீட்கிறான்.(8) கொடைகளில் சிறந்தது பொன் கொடையே. மேலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகவும் இருக்கிறது. ஓ! சக்ரா, பொன்னே தூய்மையடையச் செய்வதில் பெரியதாகும், மேலும் உண்மையில் தூய்மை செய்யும் பொருட்கள் யாவிலும் சிறந்ததுமாகும்.(9) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பொற்கொடையளிப்பவனின் மொத்த குலத்தையும் அந்தப் பொன்னே புனிதப்படுத்துகிறது. ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, இவ்வாறு நான் தக்ஷிணை குறித்து உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன்" என்றான் {பிரம்மன்}".(10)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதையே பிரம்மன் இந்திரனிடம் சொன்னான். இந்திரன் இதைத் தசரதனுக்கும், தசரதன் இதைத் தன் மகனான ராமனுக்கும் சொன்னார்கள்.(11) ரகுகுல ராமன் அதைத் தன் அன்புக்குரிய தம்பியும், பெரும்புகழைக் கொண்டவனுமான லக்ஷ்மணனுக்குச் சொன்னான். லக்ஷ்மணன் காட்டில் வசித்தபோது இதை முனிவர்களுக்குச் சொன்னான்.(12) அதன்பிறகு தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த அஃதை கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களும், பூமியின் அறமன்னர்களும் தங்களுக்கு மத்தியில் தாங்கிப் பிடித்தனர்.(13) ஓ! யுதிஷ்டிரா, என் ஆசான் இதை எனக்குச் சொன்னார். பிராமணர்களின் கூட்டங்களில், வேள்விகளில், அல்லது பசுக்கொடைகளில், அல்லது இருவர் சந்திக்கும்போது ஒவ்வொரு நாளும் இதை உரைக்கும் பிராமணன், மறுமையில் தேவர்களின் துணையுடன் வசிக்கும் வற்றாத இன்ப லோகங்கள் பலவற்றை அடைகிறான்.(14,15) உயர்ந்த தலைவனும், புனிதமானவனுமான பிரம்மன், (பசுக்கொடை குறித்து இந்திரனிடம்) இதையே சொன்னான்" என்றார் {பீஷ்மர்}.(16)
அநுசாஸனபர்வம் பகுதி – 74ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |