Vows and observances! | Anusasana-Parva-Section-75 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 75)
பதிவின் சுருக்கம் : நோன்பு, நியமம், கற்றல், அடக்கம், வேதம் மறவாமை, கற்பித்தல், உரிய கடமைகளைச் சிறப்பாகச் செய்தல் முதலியவற்றின் பலன் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பலமிக்கவரே, கடமைகளைக் குறித்து என்னிடம் நீர் சொல்வதன் மூலம் எனக்குப் பெரிதும் நம்பிக்கையுண்டாகிறது. எனினும், நான் கொண்டுள்ள சில ஐயங்களைச் சொல்கிறேன். ஓ! பாட்டா, அவற்றை விளக்குவீராக.(1) மனிதர்கள் நோற்கும் நோன்புகளுக்காக {விரதங்களுக்காக} சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பலன்கள் என்னென்ன? ஓ! பெரும் காந்தி கொண்டவனே, வேறு வகை நியமங்களை நோற்பதற்குண்டான பலன்களின் இயல்பென்ன? மேலும், வேதங்களை முறையாகக் கற்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்கள் என்னென்ன?[1](2) கொடைகளின் பலன்கள் என்ன? வேதங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் உள்ள பலன்கள் என்ன? வேதங்களைக் கற்பிப்பதில் கிட்டும் பலன்கள் என்ன? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்.(3)
[1] "விரதங்கள் என்பன குறிப்பிட்ட நடைமுறைகளைச் செய்வது அல்லது தவிர்ப்பதுடன் சேர்த்து சில வழிபாடுகளையும் சேர்ந்ததாகும். நியமம் என்பது வெறும் செயல் அல்லது தவிர்த்தல் மட்டுமே ஆகும். இதுவே இவை இரண்டுக்குள் உள்ள வேறுபாடு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பாட்டா, இவ்வுலகில் கொடைகளை ஏற்காமல் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன? அறிவைக் கொடையளிப்பதில் தெரியும் பலன்கள் என்ன?(4) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் மனிதர்களுக்கும், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடாத வீரர்களுக்கும் கிட்டும் பலன்கள் என்ன? தூய்மை மற்றும் பிரம்மச்சரிய ஒழுக்கம் ஆகியவற்றால் கிட்டும் பலன்கள் என அறிவிக்கப்பட்டவை என்னென்ன?(5) தாய் தந்தையருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? ஆசான்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன? கருணை மற்றும் அன்புக்குரிய பலன்கள் என்ன?(6) ஓ! பாட்டா, ஓ!சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரே, இவை யாவற்றையும் உண்மையாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இதில் நான் கொண்டிருக்கும் ஆவல் பெரியதாகும்" என்று கேட்டான்.(7)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு விரதத்தை (நோன்பை) முறையாகத் தொடங்கி ஒரு தடையும் இல்லாமல் அதைச் சாத்திரங்களின் படி நிறைவடையச் செய்யும் ஒருவன் நித்திய இன்ப உலகங்களைத் தனதாகக் கொள்கிறான்.(8) ஓ! மன்னா, நியமங்களின் பலன்கள் இம்மையிலேயே காணக்கிடைக்கின்றன. நீ வென்றுள்ள இந்த வெகுமதிகள் அனைத்தும் நியமங்கள் மற்றும் வேள்விகளுக்குரியவையாகும்.(9) வேத கல்வியின் பலன்கள் இம்மையிலும், மறுமையிலும் காணப்படுகின்றன. வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் இவ்வுலகத்திலும், பிரம்மலோகத்திலும் இன்பமாகத் திளைத்திருப்பதே காணப்படுகிறது.(10)
ஓ! மன்னா, தற்கட்டுப்பாட்டின் பலன்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக. தற்கட்டுப்பாடு கொண்டவர்கள் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தற்கட்டுப்பாடுடையவர்கள், ஆசையற்றதனால் அல்லது ஆசையை அடக்குவதனால் உண்டாகும் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.(11) தற்கட்டுப்பாடுடையவர்கள் பகைவர்கள் அனைவரையும் அழிக்கவல்லவர்களாவர். தற்கட்டுப்பாடுடையவர்கள் தாங்கள் நாடும் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தற்கட்டுப்பாடுடையவர்கள் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைகிறார்கள். தவங்கள் மற்றும் (கர) வலிமையின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தில் இன்புறும் மகிழ்ச்சியானது தற்கட்டுப்பாடும், மன்னிக்கும் தன்மையும் கொண்டோரின் உடைமையாகிறது.(13) கொடையை விடத் தற்கட்டுப்பாடே பலன்மிக்கதாகும். ஒரு கொடையாளி, பிராமணர்களுக்கு ஒரு கொடையை அளித்தபிறகு கோபவசப்படக்கூடும். எனினும், தற்கட்டுப்பாடுடைய மனிதன் ஒருபோதும் கோபவசப்பட மாட்டான். கோபவசப்படாமல் கொடையளிக்கும் மனிதனே நித்திய இன்பலோகங்களை அடைவதில் வெல்கிறான். கோபமானது கொடையின் பலனை அழிக்கிறது. எனவே தற்கட்டுப்பாடே கொடையைவிட மேன்மையானதாகும். (14-16)
ஓ! ஏகாதிபதி, சொர்க்கத்தில் பத்தாயிரக்கணக்கில் கண்ணுக்குத்தெரியாத பல்வேறு இடங்கள் இருக்கின்றன. சொர்க்கத்தில் உள்ள இந்த இடங்கள் யாவும் முனிவர்களுக்கு உரியனவாகும். இவ்வுலகை விட்டு அகலும் மனிதர்கள் அவற்றை அடைந்து, தேவர்களாக மாறுகிறார்கள்.(17) ஓ! மன்னா, பெரும் முனிவர்கள் தங்கள் தற்கட்டுப்பாட்டின் துணையால் மட்டுமே அங்கே செல்கின்றனர், பிறகு தங்கள் முயற்சிகளின் கதியாக மேலான மகிழ்ச்சிமிக்க உலகங்களை அடைகின்றனர். எனவே, தற்கட்டுப்பாடே (திறனில்) கொடையை விட மேன்மையானதாகும்.(18) ஓ! மன்னா, (வேதங்களைக் கற்பிப்பதற்காக) ஆசானாக ஆகிறவனும், நெருப்பை முறையாக வழிபடுபவனுமான மனிதன், இவ்வுலகத் துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மலோகத்தில் வற்றாத இன்பநிலையை அனுபவிப்பான்.(19) வேதங்களைக் கற்று, அறம்சார்ந்த சீடர்களுக்கு அந்த அறிவைக் கற்பித்தவனும், தன் ஆசானின் செயல்களைப் புகழ்பவனுமான மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(20)
வேத கல்வி கற்பவனும், வேள்விகளைச் செய்பவனும், கொடையளிப்பவனும், போரில் பிறரின் உயிர்களைக் காப்பவனுமான ஒரு க்ஷத்திரியனும் அதே போன்ற பெரும் கௌரவங்களைச் சொர்க்கத்தில் அடைகிறான்.(21) தன் வகைக்கான கடமைகளை நோற்பவனும், கொடைகளை அளிப்பவனுமான ஒரு வைசியன், மகுடம் சூடும் வெகுமதியாக அக்கொடைகளுக்கான பலன்களை அறுவடை செய்கிறான். தன் வகைக்கான கடமைகளை (மூன்று வகையினருக்கான தொண்டுகளை) முறையாக நோற்பவனான ஒரு சூத்திரன் தன் தொண்டுகளுக்கான வெகுமதியாகச் சொர்க்கத்தை வெல்கிறான்.(22)
(சாத்திரங்களில்) பல்வேறு வகை வீரர்கள் பேசப்படுகின்றனர். அவர்கள் அடைந்த வெகுமதிகள் என்னென்ன என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. வீர குலத்தைச் சார்ந்த ஒரு வீரனுக்கு வெகுமதிகள் நிலையானவையே.(23) வேள்வி வீரர்கள், தற்கட்டுப்பாட்டு வீரர்கள், வாய்மை வீரர்கள், வீரன் என்ற பெயருக்குத் தகுந்த பிறர் என்று பலர் இருக்கின்றனர். போர்க்கள வீரர்கள், மனிதர்களுக்கு மத்தியில் கொடைவீரர்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.(24) சாங்கிய நம்பிக்கை கொண்ட வீரர்கள் என்றழைக்கப்படும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், யோக வீரர்கள் என்றழைக்கப்படும் வேறு பலரும் இருக்கிறார்கள். காட்டு {வானப்பிரஸ்த} வாழ்வில், வீட்டு {கிருஹஸ்த} வாழ்வில், துறவு (அல்லது சந்நியாச) வாழ்வில் என வீரர்களாக வேறு சிலர் கருதப்படுகின்றனர்.(25)
அதே போலவே புத்திவீரர்கள் மற்றும் பொறுமைவீரர்கள் என்றழைக்கப்படுவோரும் உண்டு. அமைதிநிலையில் வாழ்பவர்களும், அறவீரர்களாகக் கருதப்படும் பிற மனிதர்களும் இருக்கிறார்கள்.(26) பல்வேறு வகை நோன்புகளையும், நியமங்களையும் பயிலும் பல்வேறு வகை வீரர்களும் இருக்கிறார்கள். வேதகல்வி வீரர்கள், அதையே கற்பிப்பதில் அர்ப்பணிப்புள்ள வீரர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.(27) மேலும், அர்ப்பணிப்புடன் ஆசான்களுக்குத் தொண்டாற்றுவதில் வீரர்கள், தங்கள் தந்தைமாரை மதிப்பதில் வீரர்கள் எனவும் சில மனிதர்கள் கருதப்படுகிறார்கள். தாய்க்குக் கீழ்ப்படிவதில் வீரர்கள், தாங்கள் நோற்கும் பிச்சைக்கார வாழ்வில் வீரர்களும் இருக்கிறார்கள்.(28) காட்டுத்துறவியாக {வானப்ரஸ்தராக} அல்லது இல்லறவாசியாக {கிருஹஸ்தராக} வாழ்ந்தாலும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பும் வீரர்களும் இருக்கிறார்கள். இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் செயல்களுக்காக வெகுமதியையும் அடையும் வகையில் மேன்மையான இன்ப உலகங்களை அடைகிறார்கள்.(29)
வேதங்கள் அனைத்தையும் நினைவில் கொள்வது, அல்லது புனித நீர்வெளிகள் அனைத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்வது ஆகியவை, ஒருவன் நாள்தோரும் வாய்மை பேசுவதற்கு இணையானவையாகவோ அல்லாதவையாகவோ இருக்கலாம்.(30) ஒரு காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் ஒரே தராசில் எடைபார்க்கப்பட்டன. அப்போது வாய்மையே ஓராயிரம் குதிரைவேள்விகளைவிட எடைமிக்கதாகத் தெரிந்தது.(31) வாய்மையினாலேயே சூரியன் வெப்பத்தைத் தருகிறான்; வாய்மையாலேயே நெருப்புச் சுடர்விடுகிறது; வாய்மையாலேயே காற்று வீசுகிறது; உண்மையில் அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(32)
தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களை வாய்மையே நிறைவடையச் செய்கிறது. வாய்மையே உயர்ந்த கடமையெனச் சொல்லப்படுகிறது. எனவே எவனும் ஒருபோதும் வாய்மையெனும் வரம்பை மீறக்கூடாது.(33) முனிவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களது ஆற்றல் வாய்மையைச் சார்ந்தே இருக்கிறது. அவர்கள் வாய்மையின் மூலமே உறுதியேற்கிறார்கள். எனவே வாய்மையே மேன்மையானதாகும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வாய்மை நிறைந்த மனிதர்கள் அனைவரும் தங்கள் வாய்மையின் மூலமே சொர்க்கத்தை அடைவதில் வென்று, அங்கே இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள்.(34) வாய்மை தரும் வெகுமதியே தற்கட்டுப்பாடாகும். நான் முழு இதயத்துடன் அதுகுறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். தற்கட்டுப்பாடுடையவனும், எளிய இதயம் கொண்டவனுமான மனிதன், நிச்சயம் சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளை அடைகிறான்.(35)
ஓ! பூமியின் தலைவா, பிரம்மச்சரியத்தின் பலன்களை உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன் இப்போது கேட்பாயாக. ஓ! மன்னா, பிறப்பிலிருந்து மரணம் வரை பிரம்மச்சரிய நோன்பைப் பயிலும் மனிதனால் அடையமுடியாதது எதுவுமில்லை என்பதை அறிவாயாக. பல கோடி முனிவர்கள் பிரம்மலோகத்தில் வசிக்கின்றனர்.(36,37) இங்கே இருந்தபோது, அவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், உயிர்வித்தை மேலிழுத்தவர்களாகவும் இருந்தனர். ஓ! மன்னா, ஒரு பிராமணனால் பிரம்மச்சரிய நோன்பு முறையாக நோற்கப்பட்டால் அவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்துவிடுவான். அந்தப் பிராமணன் சுடர்மிக்க நெருப்பெனச் சொல்லப்படுகிறான். தவங்களில் அர்ப்பணிப்புள்ள அந்தப் பிராமணர்களில் நெருப்பு தேவன் {அக்னி} காணப்படுகிறான்.(38,39) ஒரு பிரம்மசாரியானவன் சிறு கோபத்தை அடைந்தாலும் தேவர்களின் தலைவனே அச்சத்தில் நடுங்குவான். இதுவே முனிவர்களால் நோற்கப்படும் பிரம்மச்சரிய நோன்பில் காணப்படும் பலனாகும்.(40)
ஓ! யுதிஷ்டிரா, தந்தை தாயை வழிபடுவதில் உள்ள பலனைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! மன்னா, எதனிலும் குறுக்கிடாமல் தன் தந்தைக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றும் ஒருவன், அதே போலத் தன் தாய்க்கோ, தன் அண்ணனுக்கோ, வேறு பெரியோருக்கோ, ஆசானுக்கோ தொண்டாற்றும் ஒருவன் ஆகியோர் சொர்க்கவாசத்தை ஈட்டுகிறார்கள் என்பது அறியப்பட வேண்டும். தூய்மையடைந்த ஆன்மைவைக் கொண்ட மனிதன், பெரியோர்களுக்குச் செய்யும் இத்தகைய தொண்டின் விளைவாக அவன் நரகை ஒருபோதும் காணவும் மாட்டான்" என்றார் {பீஷ்மர்}.(41,42)
அநுசாஸனபர்வம் பகுதி – 75ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |