The ordinances that regulate the gift of kine! | Anusasana-Parva-Section-76 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 76)
பதிவின் சுருக்கம் : பசுக்கொடைக்கு உரிய விதிமுறைகள் மற்றும் சிறப்புகள் முதலியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன பிருஹஸ்பதி...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, எவ்விதிகளின்படி (பசுக்) கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற நித்திய இன்பலோகங்களை அடைகிறானோ, {எவ்விதிகள்} பசுக்கொடைகளை ஒழுங்கு படுத்துமோ, அந்த உயர்ந்த விதிகளைக் குறித்து நீர் விரிவாகச் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, பலன்களைப் பொறுத்தவரையில் பசுக்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை. நியாயமான முறையில் அடையப்பட்ட ஒரு பசுவைக் கொடையளித்தால், அந்தக் கொடையாளியின் மொத்த குலமும் உடனே மீட்கப்படுகிறது.(2) அறவோரின் நன்மைக்கென உண்டான அந்தச் சடங்கு, அடுத்து அனைத்து உயிரினங்களுக்காக அறிவிக்கப்பட்டது. அந்தச் சடங்கு தொடக்கக் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அஃது அறிவிக்கப்படும் முன்பே இருந்தது. உண்மையில், ஓ! மன்னா, பசுக்கொடை குறித்த அந்தச் சடங்கைப் பற்றிச் சொல்கிறேன் கேட்பாயாக[1].(3) பழங்காலத்தில் எண்ணற்ற பசுக்கள் (கொடையளிப்பதற்காக) மன்னன் மாந்தாத்ரியிடம் {மாந்தாதாவிடம்} கொண்டுவரப்பட்ட போது, (உண்மையில் அவற்றைக் கொடையளிப்பதற்காக) நோற்கப்பட வேண்டிய சடங்குகளைக் குறித்த ஐயத்தால் நிறைந்த அவன், (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதியிடம் அந்த ஐயத்திற்கான விளக்கத்தை முறையாகக் கேட்டான்.(4)
[1] "அனைத்துச் சடங்குகளும் நித்தியமானவையே என்பது பழைய நம்பிக்கை. அஃதாவது, அவற்றை யாரும் அறிவிக்கும் முன்பே, அவற்றை யாரும் எழுதுவதற்கும் முன்பே அவை இருந்தன. பசுக்கொடைக்கான சடங்கும் இவ்வழியிலேயே தொடக்கக் காலத்திலேயே உண்டானது. அதன்பிறகே அஃது அறிவிக்கப்படவும், எழுதப்படவும் ஆனது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிருஹஸ்பதி {மந்தாதாவிடம்}, "பசுக்கொடையாளி {கொடையளிப்பதற்கு} முந்தைய நாளே முறையாகக் கட்டுப்பாடுகளை நோற்று, பிராமணர்களை முறையாகக் கௌரவித்து, கொடைக்கான (சரியான) நேரத்தைக் குறிக்க வேண்டும். கொடையளிக்கப்பட வேண்டிய பசுக்களைப் பொறுத்தவரையில் அவை ரோகிணி என்றழைக்கப்படும் வகையைச் சார்ந்தவையாக {சிவப்பு பசுக்களாக} இருக்க வேண்டும்.(5) அந்தப் பசுக்களிடம் சமங்கே {அங்கங்கள் நிரம்பியவளே}, வாஹுலே {அபிவிருத்தியடைகிறவளே} என்ற சொற்கள் சொல்லப்பட வேண்டும். பசுக்களை நிறத்தப்பட்டிருக்கும் இடத்திற்குள் நுழைந்து, பின்வரும் ஸ்ருதி சொல்லப்பட வேண்டும்,(6) "பசுவே என் அன்னை. காளை என் தந்தை. சொர்க்கம் மற்றும் பூமி சார்ந்த செழிப்பை (எனக்குக் கொடுப்பாயாக). பசுவே என் புகலிடமாக இருக்கிறாள்" {என்பதே அந்த ஸ்ருதி}. அங்கே நுழைந்து இவ்வழியில் செயல்படும் கொடையாளி அங்கேயே அந்த இரவைக் கழிக்க வேண்டும். மேலும் அவன் அந்தப் பசுவைக் கொடையளிக்கும்போதும் அந்தச் சூத்திரத்தை {மந்திரத்தைச்} சொல்ல வேண்டும்[2].(7) பசுவோடு இருக்கும் அந்தக் கொடையாளி, அவற்றின் சுதந்திரத்தைத் தடுக்கும் எதையும் செய்யாமல், (பசுக்களை எரிச்சலூட்டுவது போலத் தன்னையும் எரிச்சலூட்டும் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டாமல்) வெறும் தரையில் படுப்பவன், தன்னைச் சரியாகப் பசுவின் நிலைக்கே குறைத்துக் கொள்வதன் விளைவாக அவனது பாவங்கள் அனைத்தும் உடனே தூய்மையடைகின்றன.(8)
[2] "5ம் ஸ்லோகத்தில், ச்வ என்பதற்குப் பதில் ஸ்வ என்பது பின்பற்றப்பட்டால் அதன் பொருள் "தான் இறக்கப் போவதை அறிந்தாலும்" என்று வரும். ரோகிணி என்பது ஒரு சிவப்புப் பசுவாகும். சமங்கை மற்றும் வஹுலை என்ற சொற்கள் பசுக்களைக் குறிக்கும் வேதச் சொற்களாகும். உண்மையில் பசுக்கொடையில் சொல்லப்பட வேண்டிய மந்திரங்கள் சாத்திரங்களில் இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் அந்த மந்திரம் குறித்து, "ஆவே என் தாய்; ரிஷபம் என் தந்தை; ஆகாயம் நானிருக்கும் கர்ப்பம்; பூமி எனக்கு ஆதாரம்" என்னும் மந்திரத்தைச் சொல்லி இவ்வகையான பயபக்தியுடன் இரவெல்லாம் பசுக்களிடத்திலேயே வஸித்துப் பிறகு கோதானம்செய்வதைப் பற்றிய வாக்கைச் சொல்ல வேண்டும்.
காலையில் சூரியன் எழும்போது, கன்று மற்றும் காளையுடன் பசுவானது கொடையளிக்கப்பட வேண்டும். அத்தகைய செயலின் வெகுமதியாக, நிச்சயம் சொர்க்கமே உன்னால் அடையப்படுகிறது. மந்திரங்களில் குறிப்பிடப்படும் அருள் அனைத்தும் உனதாகும்.(9) மந்திரங்களில் "பசுக்கள் பலம் மற்றும் சக்தியுடன் கூடிய முயற்சி ஆகியவற்றைக் கொண்டனவாகும். பசுக்கள் தங்களிடம் ஞானத்தையும் கொண்டிருக்கின்றன. வேள்வி அடையும் அமரநிலையை {இறவாநிலையை} அவை கொண்டிருக்கின்றன. சக்திகள் அனைத்திற்கும் அவை புகலிடமாக இருக்கின்றன. உலகம் சார்ந்த செழிப்பை வெல்லும் படிநிலைகள் அவையே. அண்டத்தின் நித்திய நடைமுறைகளை அவையே கொண்டிருக்கின்றன. ஒருவனுடைய குலத்தைப் பெருக்குபவை அவையே.(10) (நான் கொடையளிக்கும்) பசுக்கள் என் பாவங்களை அழிக்கட்டும். அவை சூரியன் மற்றும் சோமனின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. நான் சொர்க்கத்தை அடைவதற்கு இவை துணைபுரியட்டும். ஒரு தாயானவள் தன் பிள்ளையைக் காப்பது போல இவை என்னைக் காக்கட்டும். நான் சொல்லும் மந்திரங்களில் இல்லாத அருள்களும் எனதாகட்டும்" என்று சொல்லப்படுகிறது.(11) காச நோய், அல்லது வேறு நோய்களை ஒழிப்பதிலும், உடலில் இருந்து விடுபடும் காரியத்திலும், பசுவின் ஐந்து பொருட்களை ஒரு மனிதன் எடுத்துக் கொண்டால், பசுவானது சரஸ்வதியாற்றைப் போல அவனுக்கு அருளை வழங்குகிறது.
(ஒரு கொடையாளி), "பசுக்களே, நீங்களே அனைத்து வகைப் பலன்களையும் அழிப்பவர்கள். என்னிடம் நிறைவடையும் நீங்கள் எனக்கு விரும்பத்தக்க கதியைக் கொடுப்பீராக.(12) நான் இன்று நீங்களாகவே ஆகிறேன். உங்களைக் கொடையளிப்பதன் மூலம், நான் என்னையே கொடுக்கிறேன்" (என்று சொன்னதும், கொடையைப் பெற்றுக் கொள்பவன்), "நீங்கள் இனி உங்களைக் கொடுப்பவர்களுக்கு உரிமையானவர்கள் இல்லை. நீங்கள் இப்போது எனதாகிறீர்கள். சூரியன் மற்றும் சோமனின் இயல்பைக் கொண்ட நீங்கள் கொடையாளியையும், கொடை பெறுபவனையும் அனைத்து வகைச் செழிப்பாலும் சுடர்விடச் செய்கிறீர்கள்" (என்று சொல்ல வேண்டும்).(13) (ஏற்கனவே குறிப்பிட்டது போல) கொடையாளி, மேற்கண்ட ஸ்லோகத்தின் முதல் பகுதியைச் சொல்ல வேண்டும். அதைப் பெறுபவனும், பசுக்கொடையை ஒழுங்குபடுத்தும் சடங்கை அறிந்தவனுமான மறுபிறப்பாளன் {பிராமணன்}, பசுவைக் கொடையாகப் பெறும்போது, (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) மேற்கண்ட ஸ்லோகத்தின் பிற்பாதியைச் சொல்ல வேண்டும்.(14)
ஒரு மனிதன், பசுக்கொடை அளிப்பதற்குப் பதிலாக அதற்குரிய விலையையோ, துணிமணிகளையோ, பொன்னையோ கொடையளித்தாலும் பசுக்கொடை அளித்தவனாகவே கருதப்படுகிறான். (பசுவுக்குப் பதிலாக) பசுவுக்குரிய விலையைக் கொடையளிப்பவன், "மேல்நோக்கும் முகம் கொண்ட இந்தப் பசுவானவள் கொடையளிக்கப்படுகிறாள். நீ இவளை ஏற்பாயாக" என்று சொல்ல வேண்டும். (பசுவுக்குப் பதிலாக) துணிமணிகளைக் கொடையளிப்பவன், "(இந்தக் கொடை பசுவாகக்கருதப்படட்டும் என்ற பொருள் படும்) பவிதவ்யா" என்ற சொல்லைச் சொல்ல வேண்டும். (பசுவுக்குப் பதிலாகப்) பொன்னைக் கொடையளிக்கும் மனிதன், "(நான் கொடுக்கும் இந்தப் பொன், பசுவின் இயல்பையும் வடிவையும் கொண்டதாகும் எனப் பொருள்படும்படி) வைஷ்ணவி" என்ற சொல்லைச் சொல்ல வேண்டும்.(15) மேற்குறிப்பிட்ட வகையில் கொடையளிக்கும்போது இவ்வார்த்தைகளே சொல்லப்பட வேண்டும். பிறருக்காக இத்தகைய பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம், {உண்மையான பசுக்கொடைக்கு} முப்பத்தாறாயிரம் {36,000} வருடங்களும், {பசுவுக்குப் பதிலாகத் துணிமணிகளைக் கொடையளித்தால்} எட்டாயிரம் {8,000} வருடங்களும், {பசுவுக்குப் பதிலாகப் பொற்கொடை அளித்தால்} இருபதாயிரம் {20,000} வருடங்களும் சொர்க்கவாசம் வெகுமதியாக அறுவடை செய்யப்படுகின்றன[3].(16)
[3] கும்பகோணம் பதிப்பில், "அந்தக் கொடுக்கப்பட்ட பசு வாங்குகிறவன் வீட்டுக்குப் போகும்போது ஒவ்வோர் அடிக்கும் ஆறு, எட்டு, இருபது, முப்பது ஆயிரமாகத் தானபலன் முறையே அதிகப்படுவதை அறிய வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அதன் பலன்கள் முறையே முப்பத்தாறாயிரம், எட்டாயிரம், இருபதாயிரமாக இருக்கின்றன" என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில் "இது மறைகுறிப்புடைய மற்றொரு ஸ்லோகமாகும். இது சொர்க்கவாசத்தைக் குறிக்கிறது. வருடங்கள் உட்பொருளைக் கொண்டவையாக இருக்கின்றன. முப்பத்தாறாயிரம் வருடங்கள் பசுவைக் கொடையளிப்பவனுக்கும், எட்டாயிரம் வருடங்கள் துணிமணிகளைக் கொடையளிப்பவனுக்கும், இருபதாயிரம் வருடங்கள் பொற்கொடையளிப்பவனுக்கும் எனக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
பசுவுக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் கொடைகளின் முறையான பலன்கள் இவையே. அதே வேளையில், உண்மையான பசுவையே கொடையளிப்பவனைப் பொறுத்தவரையில், பசுவுக்குப் பதிலாகக் கொடையளிப்பதில் உள்ள பலன்கள் அனைத்தும், கொடை பெறுவனின் (அவன் தன் இல்லம் நோக்கி எடுத்து வைக்கும்) எட்டாவது அடியிலேயே கொடையாளிக்குக் கிட்டிவிடுகிறது[4].(17) உண்மையான பசுவைக் கொடையளிப்பவன் இவ்வுலகில் அற நடத்தை கொண்டவனாக மாறுகிறான். பசுவுக்கான விலையைக் கொடையளிப்பவன் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறான். (உண்மைப் பசுவைக் கொடையளிப்பதற்குப் பதில் இவ்வழியில்) பசுக்கொடையளிப்பவன் கவலைகள் எதையும் அடையமாட்டான். {உண்மையான பசுவைக் கொடையளிப்பவன், பசுவுக்கான விலையைக் கொடையளிப்பவன், பசுவுக்குப் பதிலாக வேறு ஒரு பொருளைக் கொடையளிப்பவன் ஆகிய} இந்த மூவரும், அதிகாலையிலேயே முறையாகத் தங்கள் தூய்மைச் சடங்குகளையும் பிற {வழிபாட்டுச்} செயல்களையும் செய்பவர்களும், மஹாபாரதத்தை நன்கறிந்தவனும் விஷ்ணு மற்றும் சோமனின் உலகங்களை அடைகிறார்கள்[5].(18) ஒரு பசுவைக் கொடையளித்த பிறகு அந்தக் கொடையாளி மூன்று இரவுகளுக்கு நோய் தடுக்கும் பால் நோன்பை {கோவிரதத்தைப்} பின்பற்றிப் பசுக்களுடன் ஓரிரவைக் கழிக்க வேண்டும். அந்தப் பிறைநாள் {திதி} தொடங்கி, காம்யம் என்ற பெயரில் அறியப்படும் எட்டாம் நாளில் இருந்து பசுவின் பால், சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றை மட்டுமே உண்டு அவன் மூன்று இரவுகளைக் கழிக்க வேண்டும்[6].(19)
[4] "இவ்வரி சொற்செறிவு நிறைந்ததாக இருக்கிறது. கொடை பெறுபவன் தன் இல்லம் நோக்கிச் செல்லும் எட்டாவது அடியிலேயே உண்மையான பசுவைக் கொடையளிப்பவன் ஒருவன், அதற்குப் பதிலாகக் கொடுக்கப்படும் கொடைகளின் பலன்கள் அனைத்தையும் அடைந்து விடுகிறான் என்றால், அவன் இல்லத்தை அடையும்போது என்ன பலனைப் பெறுவான், அந்தப் பசுவில் இருந்து தன் இல்லறநெருப்பை வழிபடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும், மேலும் இவை போன்ற காரியங்களுக்கும் தேவையானவற்றையும் பெறுவான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] கும்பகோணம் பதிப்பில், "கோதானம் செய்பவன், நல்லொழுக்கமுள்ளவன், யுத்தத்தில் பயமற்றவன், பூஜ்யர்களைப் பூஜிப்பவன், கேட்பவர் வேண்டின திரவியங்களைக் கொடுப்பவன், காலையில் எழுந்திருப்பவன், பாரதமறிந்தவன் இவர்கள் துயரப்படார். அவர்களுக்குப் பெயர்பெற்ற விஷ்ணுலோகமும், சந்திரலோகமும் வரும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பசுக்கொடையளிப்பவன் நன்னடத்தையை அடைகிறான். அதற்கு இணையானதைக் கொடையளிப்பவன் அச்சத்திலிருந்துவிடுபடுகிறான். பசுவோ, செல்வமோ கொடுக்கப்படும்போது, ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே, அந்தக் கொடையாளி துன்பமடையாதிருக்கிறான். இவ்வாறு சொல்லப்படுவதை அறிந்தவர்கள் விஷ்ணு மற்றும் சந்திரனின் உலகங்களுக்கு உயர்கிறார்கள்" என்றிருக்கிறது. மேற்கண்ட வாசகத்தைப் பிருஹஸ்பதி மாந்தாதாவுக்குச் சொல்கிறார். மாந்தாதாவின் காலத்தில் மஹாபாரதம் இருந்திருக்க முடியாது. எனவே பிபேக் திப்ராயின் பதிப்பில் வரும் உரையே சரியாக இருக்க வேண்டும்.[6] "சந்திர பிறை நாட்களில் எட்டாம் நாள் அஷ்டமி திதியாகும். ஒவ்வொரு சந்திர மாதத்திலும் இரண்டு அஷ்டமிகள் வரும். ஒரு குறிப்பிட்ட அஷ்டமியானது காம்யம் அல்லது கோஷ்தம் என்று அறியப்படுகிறது. அந்த நாளில் பசுக்கள், சந்தனம், குங்குமம் மற்றும் மலர்மாலைகள் முதலியவற்றைக் கொண்டு வழிபடப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கோதானம் செய்த பின் மூன்றிரவுகள் ஆவின் பால் முதலியவற்றையே புசிப்பதாகிய கோவ்ரதமிருக்க வேண்டும். மற்றொரு ராத்திரி பசுக்களுடன் வசிக்க வேண்டும். விரதத்திற்காக நினைத்த அஷ்டமி முதல் மூன்றிரவுகள் ஆவின் தயிர், நெய் முதலியவற்றையாகிலும், கோமயத்தையாகிலும், கோமூத்திரத்தையாகிலும் உண்டிருக்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பசுக்கொடையளித்த கொடையாளி கால்நடை நோன்பை மூன்று இரவுகள் நோற்க வேண்டும். ஓரிரவு கால்நடைகளுடன் தனியாக வசிக்க வேண்டும். காம்யாஷ்டமிக்குப் பிறகான மூன்று இரவுகளுக்கு அவன் பசுவின் பால், பசுஞ்சாணம் மற்றும் பசுவின் சிறுநீர் ஆகியவற்றையே உண்ண வேண்டும்" என்றிருக்கிறது.
ஒரு காளையைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் தெய்வீக நோன்புக்கு (பிரம்மச்சரிய நோன்புக்கு) உரிய பலனை அடைகிறான். இரண்டு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் அவன் வேதங்களில் திறன் பெறுகிறான். ஒரு வேள்வியைச் செய்து, விதிப்படியான சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடையளிக்கும் மனிதன், மேன்மையான தன்மையிலான பல உலகங்களை அடைகிறான். எனினும், அந்தச் சடங்கைக் குறித்து அறியாத மனிதனால் (சாத்திர அறிவுப்புகளைக் காணாது பசுக்கொடையளிப்பவனால்) அவற்றை ஒருபோதும் அடைய முடியாது.(20) அபரிமிதமான பாலைத் தரும் ஒற்றைப் பசுவைக் கொடையளிக்கும் மனிதன், பூமியில் ஒன்றாகத் திரட்டப்படும் விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் கொடையளித்த பலனை ஈட்டுகிறான். எனவே, நிறைந்த மடியைக் கொண்டதன் விளைவால் ஹவ்யகவ்யங்களைத் தரும் அத்தகைய பசுக்கள் பலவற்றைக் கொடையளிப்பதைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? மேன்மையான எருதொன்றைக் கொடையளித்தால் உண்டாகும் பலனானது, பசுக்கொடையால் கிட்டும் பலனைவிடப் பெரியதாகும்.(21)
ஒருவன், தன் சீடனாக இல்லாத, அல்லது நோன்புகளை நோற்காத, அல்லது நம்பிக்கையற்ற, அல்லது கோணல் புத்தி கொண்ட மற்றொருவனுக்கு இந்தச் சடங்கைக் குறித்த அறிவைப் போதிக்கக்கூடாது. உண்மையில் இவ்வறம், வெகுமக்கள் அறியாத ஒரு புதிராகும். அதையறிந்தவன் அனைத்து இடங்களிலும் அதைக் குறித்துப் பேசக் கூடாது.(22) இவ்வுலகில் நம்பிக்கையற்ற மனிதர்கள் பலர் இருக்கின்றனர். மனிதர்களுக்கு மத்தியில் ஈனர்களும், ராட்சசர்களுக்கு ஒப்பானவர்களுமானவர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு இவ்வறத்தைப் போதிப்பது தீமைக்கே வழிவகுக்கும். நாத்திகத்தை உறைவிடமாகக் கொண்ட அத்தகைய பாவிகளுக்குப் போதிக்கப்பட்டால் அதற்கு ஈடான தீமையே விளையும்" என்றார் {பிருஹஸ்பதி}".(23)
{பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "ஓ! மன்னா, பிருஹஸ்பதியின் போதனைகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடையளித்து, பேரின்ப உலகங்களை அடைந்த அறம்சார்ந்த ஏகாதிபதிகளின் பெயரை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(24) உசீனரன், விஷ்வகசுவன், நிருகன், பகீரதன், யுவனாசுவன் மகனும் கொண்டாடப்பட்டவனுமான மாந்தாத்ரி {மாந்தாதா}, முசுகுந்தன், பூரித்யும்னன், நைஷதன், ஸோமகன்,(25) புரூரவன், பாரதர்களில் முதல்வனான பரதன், தசரதன் மகனும், வீரனுமான ராமன், மற்றும் பெரும் சாதனைகளைச் செய்த கொண்டாடப்பட்ட மன்னர்கள் பலரும்,(26) பரந்து அறியப்பட்ட செயல்களைச் செய்த மன்னன் திலீபனும், சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் பசுக்கொடை அளித்ததன் விளைவால் சொர்க்கத்தை அடைந்தனர். மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, வேள்விகள், கொடைகள், தவங்கள், அரச கடமைகள், பசுக்கொடைகள் ஆகியவற்றை எப்போதும் செய்து வந்தான்.(27) எனவே, ஓ! பிருதையின் மகனே, (பசுக்கொடை குறித்து) பிருஹஸ்பதி சொன்னதான, நான் உன்னிடம் சொன்ன போதனைகளை மனத்தில் கொள்வாயாக. குருக்களின் நாட்டை அடைந்ததும், உற்சாகமிக்க இதயத்துடன் நீ முதன்மையான பிராமணர்களுக்குப் பசுக்கொடையளிப்பாயாக" என்றார் {பீஷ்மர்}".(28)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு பீஷ்மரால், பசுக்கொடையை அளிக்கும் சரியான வழிமுறைகள் குறித்துச் சொல்லப்பட்டவனான மன்னன் யுதிஷ்டிரன், பீஷ்மர் விரும்பிய அனைத்தையும் செய்தான். உண்மையில், மன்னன் யுதிஷ்டிரன், தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, அரசன் மாந்தாத்ரிக்கு {மாந்தாதாவுக்குச்} சொன்ன அறம் முழுவதையும் தன் மனத்தில் கொண்டான்.(29) யுதிஷ்டிரன் அந்தக் காலத்தில் இருந்த பசுக்கொடைகளை அளிக்கவும், {அவ்வாறு பசுக்கொடையளிக்கும் போது} யவையரிசி நொய்களையும், பசுஞ்சாணத்தையும் தன் உணவாகவும் பானமாகவும் கொள்ளத் தொடங்கினான். மேலும் அம்மன்னன் அந்த நாள் முதலே வெறுந்தரையில் உறங்கத் தொடங்கி, ஆன்மக் கட்டுப்பாட்டுடனும், ஒரு காளையின் ஒழுக்கத்துடனும் முதன்மையான ஏகாதிபதியாக ஆனான்[7].(30) அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} அந்த நாள் முதலே பசுக்களைக் கவனிக்கவும், எப்போதும் அவற்றை வழிபடவும், அவற்றின்புகழைப் பாடவும் தொங்கினான். அந்த நாள் முதலே அம்மன்னன், பசுக்களைத் தன் வாகனங்களில் பூட்டும் நடைமுறையைக் கைவிட்டான். அவன் எங்குச் செல்ல நேர்ந்தாலும் நல்ல இனக் குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களிலேயே சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)
[7] கும்பகோணம் பதிப்பில், "ஜனமேஜய ராஜரே, ராஜசிரேஷ்டரான அந்தத் தர்மராஜர் கோதானம் செய்யும்போதெல்லாம் யவையரிசிநொய்களைக் கோமயத்துடன் சேர்த்து உட்கொண்டு மனத்தையடக்கி ஜடையைத் தரித்து விருஷபம் போலத் தரையில் படுத்திருந்தார்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 76ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |