Kapila cow! | Anusasana-Parva-Section-77 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 77)
பதிவின் சுருக்கம் : பசுக்கொடையின் சிறப்பு மற்றும் கபிலைப் பசுக்களின் வரலாறு குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்}, "பணிவுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் சந்தனுவின் அரசமகனிடம் {பீஷ்மரிடம்} பசுக்கொடை குறித்து விரிவாகக் கேள்வி எழுப்பினான்.(1)
மன்னன் {யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, பசுக்கொடையின் பலன்களை இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. ஓ! வீரரே, அமுதம் போன்ற உமது வார்த்தைகளைக் கேட்பது எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை" என்றான்".(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, பசுக்கொடையின் பலன்களைக் குறித்தும் விரிவாக மீண்டும் சொல்லத் தொடங்கினார்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கன்றுடன் கூடியதும், பணிவானதும், வேறு நற்குணங்களைக் கொண்டதும், வயதில் இளமையானதுமான ஒரு பசுவை துணியால் சுற்றிலும் மூடி ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாகிறான்.(4) (நரகத்தில்) சூரியனற்ற பல உலகங்கள் இருக்கின்றன. பசுக்கொடையளிக்கும் ஒருவன் அங்கே செல்லமாட்டான்.(5) எனினும், பருகவும், உண்ணவும் இயலாததும், பால் வற்றியதும், பலவீனமான புலன்களைக் கொண்டதும், நோய்வாய்ப்பட்டதும், முதுமையடைந்ததும், நீர் வற்றிய குளத்தைப் போன்றதுமான பசுவை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பதன் மூலம், அவனுக்குத் துன்பத்தையும், ஏமாற்றத்தையும் அந்த மனிதன், காரிருள் நரகில் நிச்சயம் நுழைவான்.(6) கோபம் நிறைந்த, தீய, அல்லது நோய்வாய்ப்பட்ட, அல்லது பலவீனமான, அல்லது ஏற்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் வாங்கப்பட்ட, அல்லது ஏற்போனான மறுபிறப்பாளனை துன்பத்தாலும், ஏமாற்றத்தாலும் பீடிக்கச் செய்யும் பசுவை ஒருபோதும் கொடையளிக்கக்கூடாது. அத்தகைய மனிதன் (செய்த வேறு அறச்செயல்களின் வெகுமதியாக) அடையும் உலகங்கள் அவனுக்கு எந்த மகிழ்ச்சியையோ, எந்தச் சக்தியையோ அளிக்காது.(7) பலமானதும், நன்னடத்தைக் கொண்டதும், வயதில் இளையதும், நறுமணத்துடன் கூடியமான பசுக்கள் மட்டுமே (கொடையளிக்கும் காரியத்தில்) அனைவராலும் மெச்சப்படுகின்றன. உண்மையில், கங்கையே அனைத்து ஆறுகளிலும் முதன்மையானவளாக இருப்பது போலவே பசுக்கள் அனைத்திலும் முதன்மையானதாகக் கபிலைப் பசு ஆகும்" என்றார்.(8)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கொடையளிக்கப்படும் நல்ல பசுக்கள் அனைத்தும் சமமாகவே கருதப்படும் போது கபிலைப் பசுவைக் கொடையளிப்பது (அதிகப் பலனைத் தருவதாக) அறவோரால் ஏன் மெச்சப்படுகிறது? ஓ! பெரும்பலம் கொண்டவரே, கபிலைப் பசுவின் தனித்தன்மை என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், இக்காரியம் குறித்து எனக்குச் சொல்லத் தகுந்தவர் நீரே" என்றான்[1].(9)
[1] "கபிலை என்பது கறக்கப்படும்போதெல்லாம் அபரிமிதமான பாலைத் தருவரும், பல்வேறு பிற சிறப்புகளையும் குணங்களையும் கொண்ட பசுவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பொதுவாகக் கபிலை என்பது கருஞ்சிவப்பு நிறத்தைக் குறிக்கும், அல்லது பல நிறங்கள் சேர்ந்த கலவையைக் குறிக்கும்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, கபிலைப்பசு படைக்கப்பட்ட சூழ்நிலை குறித்த இந்த வரலாற்றைப் பழங்கால மனிதர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அந்தப் பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(10)
பழங்காலத்தில், சுயம்புவான பிரம்மன் முனிவர் தக்ஷரை அழைத்து, "உயிரினங்களைப் படைப்பாயாக" என்றான். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய தக்ஷர் முதலில் உணவைப் படைத்தார்.(11) ஓ! பலமிக்கவனே, தேவர்கள் அமுதத்தைச் சார்ந்திருப்பதைப் போலவே, தக்ஷர் நிர்ணயித்த உணவைச் சார்ந்தே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன.(12) அசைபவை {உயிருள்ள} மற்றும் அசைவற்ற {உயிரற்ற} பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் அசைபவையே {உயிருள்ளவையே} மேன்மையானவை. அசையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்களே மேன்மையானவர்கள். வேள்விகள் அனைத்தும் அவர்களிலேயே நிறுவப்பட்டுள்ளன.(13) வேள்வியின் மூலமே சோமம் (அமுதம்) கிடைத்தது. வேள்வியானது பசுக்களில் நிறுவப்பட்டுள்ளது[2]. தேவர்கள் வேள்விகளின் மூலமே நிறைவடைகின்றனர். படைப்பைப் பொறுத்தவரையில், வாழ்வாதார வழிமுறைகளே முதலில் தோன்றின, அடுத்துதான் உயிரினங்கள் வந்தன.(14) உயிரினங்கள் பிறந்ததும் அவை உணவுக்காக உரக்க அழத் தொடங்கின. அவை அனைத்தும், தாயையோ, தந்தையையோ அணுகும் பிள்ளைகளைப் போல உணவைத் தரும் படைப்பாளனை அணுகின.(15)
பழங்காலத்தில், சுயம்புவான பிரம்மன் முனிவர் தக்ஷரை அழைத்து, "உயிரினங்களைப் படைப்பாயாக" என்றான். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய தக்ஷர் முதலில் உணவைப் படைத்தார்.(11) ஓ! பலமிக்கவனே, தேவர்கள் அமுதத்தைச் சார்ந்திருப்பதைப் போலவே, தக்ஷர் நிர்ணயித்த உணவைச் சார்ந்தே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன.(12) அசைபவை {உயிருள்ள} மற்றும் அசைவற்ற {உயிரற்ற} பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் அசைபவையே {உயிருள்ளவையே} மேன்மையானவை. அசையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்களே மேன்மையானவர்கள். வேள்விகள் அனைத்தும் அவர்களிலேயே நிறுவப்பட்டுள்ளன.(13) வேள்வியின் மூலமே சோமம் (அமுதம்) கிடைத்தது. வேள்வியானது பசுக்களில் நிறுவப்பட்டுள்ளது[2]. தேவர்கள் வேள்விகளின் மூலமே நிறைவடைகின்றனர். படைப்பைப் பொறுத்தவரையில், வாழ்வாதார வழிமுறைகளே முதலில் தோன்றின, அடுத்துதான் உயிரினங்கள் வந்தன.(14) உயிரினங்கள் பிறந்ததும் அவை உணவுக்காக உரக்க அழத் தொடங்கின. அவை அனைத்தும், தாயையோ, தந்தையையோ அணுகும் பிள்ளைகளைப் போல உணவைத் தரும் படைப்பாளனை அணுகின.(15)
[2] "பாலில் இருந்து உண்டாகும் நெய் இல்லாமல் வேள்வியேதும் செய்ய முடியாது. இங்கே குறிப்பிடப்படும் "ஸ" என்பது சோமத்தையும் குறிக்கலாம் ஆனால் வேள்வியையே குறிக்கிறது என்பது வெளிப்படையான பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அனைத்து உயிரினங்களின் நோக்கத்தை அறிந்தவரும், அனைத்து உயிரினங்களின் புனிதமான தலைவருமான தக்ஷர், தாம் படைத்த அவற்றுக்காக அமுதத்தில் பெரும்பகுதியை தாமே குடித்தார்.(16) அவர் தாம் குடித்த அமுதத்தில் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வந்த ஏப்பத்தில் சுற்றிலும் சிறந்த நறுமணம் கமழ்ந்தது. அந்த ஏப்பத்தின் விளைவால் சுரபி என்ற பெயரைக் கொண்ட ஒரு பசுப் பிறந்ததைத் தக்ஷர் கண்டார். எனவே இவ்வகையில் அவருடைய மகளான இந்தச் சுரபி அவரது வாயில் இருந்து உண்டானாள்.(17) சுரபி என்றழைக்கபடும் அந்தப் பசு, உலகத்தின் தாய்மாராகக் கருதப்படும் எண்ணற்ற மகளை ஈன்றெடுத்தாள். அவற்றின் நிறம் பொன்னைப் போல இருந்தது. அவை அனைத்தும் கபிலைகளாக இருந்தன. அவை உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாதார வழிமுறைகளாக இருந்தன.(18) ஆற்றில் அலைகள் ஒன்றோடொன்று மோதும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அபரிமிதமான நுரை உண்டாவதைப் போலவே அமுதத்துக்கு ஒப்பான நிறத்தைக் கொண்ட அந்தப் பசுக்கள் பால் பொழியத் தொடங்கிய போது, அந்தப் பாலின் நுரை எழுந்து, அனைத்துப் புறங்களிலும் பரவத் தொடங்கின[3].(19)
[3] கும்பகோணம் பதிப்பில், "அமிருதத்திற் பிறந்தவையும், நான்கு பக்கங்களிலும் அமிர்தத்தைப் பெருக்குகின்றவையுமான அந்தப் பசுக்களின் அமிருதத்திலிருந்து நதிகளின் அலைகளிலிருந்து உண்டாவது போல நுரையுண்டாயிற்று" என்றிருக்கிறது.
பாலை உறிஞ்சி கொண்டிருந்த கன்றுகளின் வாயில் இருந்த நுரைகள், அப்போது பூமியில் அமர்ந்திருந்த மஹாதேவனின் தலையில் விழுந்தது. பலமிக்க மஹாதேவன், கோபத்தால் நிறைந்து, தன் கண்களை அந்தப் பசுக்களின் மேல் செலுத்தினான்.(20) அவனது நெற்றியை அலங்கரித்திருந்த மூன்றாவது கண்ணால் அவன் அவற்றைப் பார்ப்பது, அவற்றை எரிப்பதைப் போலத் தெரிந்தது. மேகங்களைப் பல வண்ணங்களில் ஒளிரச் செய்யும் சூரியனைப் போலவே, மஹாதேவனின் மூன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட சக்தியானது, அந்தப் பசுக்களில் பல்வேறு நிறங்களை உண்டாக்கியது. எனினும், சோமலோகத்தில் நுழைந்ததன் மூலம் மஹாதேவனின் பார்வையில் இருந்து தப்பித்தவையின் நிறத்தில் எந்த மாற்றமும் உண்டாகததால் அவை பிறந்த போது இருந்த நிறத்துடனேயே இருந்தன.(21,22)
உயிரினங்கள் அனைத்தின் தலைவரான தக்ஷர், மஹாதேவன் பெருங்கோபம் கொண்டதைக் கண்டு, அவனிடம்,(23) "ஓ! பெருந்தேவா, நீ அமுதத்தால் நனைந்திருக்கிறாய். தாயிடம் பால் பருகும் கன்றுகளின் வாயில் இருந்து விழும் பாலோ, நுரையோ தூய்மையான எச்சமாக[4] ஒருபோதம் கருதப்பட்டதில்லை. அமுதத்தைப் பருகும் சந்திரமாஸ் {சந்திரன்}, மீண்டும் அதைப் பொழிகிறான். எனினும், அது தூய்மையற்றதாகப் பார்க்கப்படுவதில்லை.(24) அதே போலவே, பசுக்கள் தரும் பாலும், அமுதத்தில் இருந்தே பிறந்ததால், (கன்றின் வாயால் மடி தீண்டப்பட்டதால்) அஃது ஒருபோதும் தூய்மையற்றாகக் கருதப்படக்கூடாது. காற்று ஒருபோதும் தூய்மையற்றதாகாது. நெருப்பு ஒருபோதும் தூய்மையற்றதாகாது. பொன் ஒருபோதும் தூய்மையற்றதாகாது. கடல் ஒருபோதும் தூய்மையற்றதாகாது.(25) அமுதமானது, தேவர்களால் பருகப்பட்டாலும் கூட ஒருபோதும் தூய்மையற்றதாகாது. அதே போலவே, பசுவின் பாலும், கன்றால் மடி உறிஞ்சப்பட்டாலும் ஒருபோதும் தூய்மையற்றதாகாது. இந்தப் பசுக்கள், தாம் தரும் பாலின் மூலமும் அதிலிருந்து உண்டாகும் நெய்யின் மூலம் மூன்று உலகங்களையும் ஆதரிக்கப் போகின்றன.(26) அமுதத்தோடு அடையாளங்காணப் படக்கூடிய பசுவின் மங்கலச் செல்வத்தை அனைத்து உயிரினங்களும் அனுபவிக்க விரும்புகின்றன" என்றார் {தக்ஷர்}. உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, மஹாதேவனுக்கு ஒரு காளையையும், பசுவையும் கொடையளித்தார்.(27)
[4] "உச்சிஷ்டம்" என்பது ஹிந்து மட்டுமே புரிந்து கொள்ளும் கருத்தாகும். இதை வேறெந்த மொழியிலும் சொல்ல முடியாது. ஒருவன் உண்டதில்எஞ்சியது அனைத்தும் உச்சிஷ்டம் என்றே கொள்ளப்படுகிறது. கன்று தன் தாயிடம் பால் அருந்துகிறது. எனினும், மடியில் இருந்து வெளிவரும் பால் தூய்மையற்றதாகாது என்பதால் பசுவைக் கறப்பதற்கு முன்பு {கன்று பாலருந்திய} அம்மடி கழுவப்படுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தக் கொடையின் மூலம் தக்ஷர், ருத்திரனின் இதயத்தை நிறைவடையச் செய்தார். இவ்வாறு நிறைவடைந்த மஹாதேவன், தன் வாகனமாக அந்தக் காளையை அமைத்துக் கொண்டான். அந்தப் பசுவின் வடிவத்தைக் கொண்டே மஹாதேவன் தன் போர்த்தேரில் மிதக்கும் கொடிமரத்தின் பொறியை அமைத்துக் கொண்டான். இந்தக் காரணத்தினாலேயே ருத்திரன், காளைக்கொடி தேவன் என்று அறியப்படுகிறான்.(28) அந்நிகழ்வில்தான் தேவர்கள் அனைவரும் கூடி மஹாதேவனை விலங்குகளின் தலைவனாக நிறுவினர். உண்மையில் பெரும் ருத்திரன் பசுக்களின் தலைவனாகி, காளைக்கொடி தேவனென்றும் பெயரிடப்பட்டான்.(29)
எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பசுக்கொடையளிக்கும் காரியத்தில், பெருஞ்சக்தி கொண்டதும், (வெண்மையிலிருந்து) மாறா நிறம் கொண்டதுமான கபிலைப்பசுவே அடிப்படையில் விரும்பப்படும் கொடையாகக் கருதப்படுகிறது.(30) இவ்வாறே உலகத்தின் உயிரினங்கள் அனைத்திலும் பசுக்களே முதன்மையானவையாக இருக்கின்றன. அவற்றில் இருந்தே உலகங்கள் அனைத்திற்கும் தேவையான வாழ்வாதாரங்கள் தோன்றின. அவை ருத்திரனையே தங்கள் தலைவனாகக் கொண்டவையாகும். அவை பாலின் வடிவில் சோமத்தை (அமுதத்தைக்) கொடுக்கின்றன. அவை மங்கலமானவையாகவும், புனிதமானவையாகவும், அனைத்து விருப்பங்களையும் அருள வல்லவையாகவும், உயிரைக் கொடுக்கவல்லவையாகவும் இருக்கின்றன. ஒரு பசுவைக் கொடையளிப்பவன், மனிதர்களால் விரும்பப்படும் அனுபவிக்கத்தக்க அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(31) செழிப்பை அடைய விரும்பும் மனிதன், தூய இதயத்துடனும், தூய உடலுடனும் பசுவின் தோற்றத்தைக் குறித்த இந்த ஸ்லோகங்களைப் படித்தால், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, செழிப்பு, பிள்ளைகள், செல்வம் மற்றும் விலங்குகளை அடைகிறான்.(32) ஓ! மன்னா, பசுக்கொடையளிப்பவன் ஹவ்ய மற்றும் கவ்ய கொடைகளுக்குரிய பலன்களையும், பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துவதற்குரிய, அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும் வேறு அறச்செயல்களுக்குரிய, வாகனங்கள் மற்றும் துணிமணிகளைக் கொடையளிப்பதற்குரிய, பிள்ளைகள் மற்றும் முதியோரைப் பேணிவளர்ப்பதற்குரிய பலன்களையும் அடைவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}".(33)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவனும், பிருதையின் மகனுமான அசரன் யுதிஷ்டிரன், தன் பாட்டனின் இச்சொற்களைக் கேட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, முதன்மையான பிராமணர்களுகு பல்வேறு நிறங்களிலான காளைகளையும், பசுக்களையும் கொடையளிக்கத் தொடங்கினான்.(34) உண்மையில், மறுமையில் இன்பலோகங்களை வெல்வதற்கும், இம்மையில் பெரும்புகழை அடைவதற்கும், மன்னன் யுதிஷ்டிரன் பல வேள்விகளைச் செய்து, பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களை வேள்விக் கொடையாக அளித்தான்".(35)
அநுசாஸனபர்வம் பகுதி – 77ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |