Gomati Mantra! | Anusasana-Parva-Section-78 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 78)
பதிவின் சுருக்கம் : பசுக்களின் சிறப்புகளையும், கோமதி மந்திரத்தையும் சௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பழங்காலத்தில், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் சௌதாசன்[1], தன் குடும்பப் புரோகிதரும், முனிவர்களில் முதன்மையானவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரும், எங்கும் செல்ல வல்லவரும், பிரம்மத்தின் கொள்ளிடமும், நித்திய வாழ்வை {மரணமற்ற வாழ்வைக்} கொண்டவருமான வசிஷ்டரை அணுகி அவரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தான்.(1,2)
[1] இவனுக்குக் கல்மாஷபாதன் மற்றும் மித்ரஸகன் என்ற பெயர்களும் உண்டு. ஆதிபர்வம் பகுதி 178ல் இவனது கதை சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இக்கதை அநுசாஸன பர்வம் 6ம் பகுதியிலும் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
சௌதாசன் {வசிஷ்டரிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, மூவுலகங்களில் புனிதமானது எது? எப்போதும் உரைப்பதால் ஒரு மனிதனை உயர்ந்த பலனை அடையச் செய்வதும் எது?" என்று கேட்டான்".
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், " தம் முன்பு தலைவணங்கி நின்ற மன்னன் சௌதாசனிடம் கல்விமானான வசிஷ்டர், முதலில் பசுக்களை வணங்கி (உடலாலும், மனத்தாலும்) தம்மைத் தூய்மைசெய்து கொண்டு, அனைவருக்கும் உயர்ந்த நன்மைகளை விளைவிக்கும் பசுக்கள் குறித்த புதிரைக் குறித்து உரையாடினார்.(4)
வசிஷ்டர், "பசுக்கள் எபோதும் நறுமணமிக்கவை. குங்கிலியம் கசிவதன் மூலம் தோன்றும் நறுமணம் அவற்றின் உடலில் இருந்து வெளிப்படுகிறது. பசுக்களே அனைத்து உயிரினங்களின் பெரும்புகலிடமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்துக்குமான அருள் ஊற்றாக அமைகின்றன.(5) பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன. பசுக்களே வளர்ச்சியின் நித்திய ஊற்றாக இருக்கின்றன. பசுக்களே செழிப்பின் வேராக இருக்கின்றன. பசுக்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் தொலைந்து போவதில்லை.(6) பசுக்களே உயர்ந்த உணவாக அமைகின்றன. அவையே தேவர்களுக்குச் சிறந்த ஹவியாக இருக்கின்றன. ஸ்வாஹா மற்றும் வஷட் என்றழைக்கப்படும் மந்திரங்கள் பசுக்களிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கின்றன.(7) பசுக்கள வேள்விக்கனிகளாக அமைகின்றன. வேள்விகள் பசுக்களிலேயே நிறுவப்பட்டுள்ளன. பசுக்களே கடந்த காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கின்றன, அவற்றைச் சார்ந்தே வேள்விகளும் இருக்கின்றன.(8) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, ஹோமத்தில் பயன்படுத்தப்படும் ஹவியை முனிவர்களுக்குப் பசுக்களே காலையும், மாலையும் தருகின்றன.(9) ஓ! பெரும்பலம் கொண்டவனே, பசுக்களைக் கொடையளிப்போர், தாங்கள் இழைத்த பாவங்கள் அனைத்தையும் தாங்கள் வீழ நேரும் அனைத்து வகைத் துன்பங்களையும் கடக்கின்றனர்.(10)
தான் கொண்ட பத்துப் பசுக்களில் ஒரு பசுவைக் {10%} கொடையளிப்பவனும், நூறு பசுக்களில் பத்தைக் {10%} கொடையளிப்பவனும், ஆயிரம் பசுக்களில் நூறைக் {10%} கொடையளிப்பவனும் ஒரே அளவு பலனையே ஈட்டுகின்றனர்.(11) நூறு பசுக்களைக் கொண்டிருந்தாலும், நாள்தோறும் வழிபடுவதற்காக இல்லற நெருப்பை நிறுவாதவன், ஆயிரம் பசுக்களைக் கொண்டிருந்தாலும் வேள்விகளைச் செய்யாதவன், செல்வத்தைக் கொண்டிருந்தாலும் (கொடையளிக்காமல், விருந்தோம்பல் கடமைகளைச் செய்யாமல்) கஞ்சனாகச் செயல்படுபவன் ஆகிய மூவரும் மதிப்பெதற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்,(12) தீமையற்றவையும், துணிகளால் மறைக்கப்பட்டவையுமான கபிலைப்பசுக்களைக் கன்றுகளுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்களுடனும் கொடையளிக்கும் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைகிறார்கள்.(13) பலமிக்கப் புலன்களைக் கொண்டதும், நூற்றுக்கணக்கான மந்தையில் முதன்மையானதாகக் கருதப்படுவதும், (பொன் அல்லது வெள்ளியிலான) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடியதுமான இளங்காளையை வேத கல்வி கொண்ட ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கும் மனிதர்கள், இவ்வுலகில் பிறப்பெடுக்கும்போதெல்லாம் பெருஞ்செழிப்பையும், செல்வாக்கையும் அடைவதில் வெல்கிறார்கள்.(14,15)
ஒருவன் பசுக்களின் பெயர்களை உரைக்காமல் ஒருபோதும் படுக்கைக்குச் செல்லக்கூடாது. அதே போல, காலையில் பசுக்களின் பெயர்களைச் சொல்லாமல் ஒருபோதும் படுக்கையில் இருந்து எழவும் கூடாது. அவன் காலையும், மாலையும் பசுக்களிடம் மதிப்புடன் தலைவணங்க வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(16) பசுக்களின் சிறுநீர் மற்றும் சாணத்தில் அவன் ஒருபோதும் வெறுப்புணர்வு கொள்ளக்கூடாது. அவன் ஒருபோதும் பசு இறைச்சி உண்ணக்கூடாது. இதன் காரணமாக அவன் நிச்சயம் பெருஞ்செழிப்பை அடைவான்.(17) ஒருவன் எப்போதும் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும். அவன் ஒருபோதும் எவ்வகையிலும் பசுக்களை அவமதிக்கக்கூடாது. கெட்ட கனவுகளைக் கண்டால் மனிதர்கள் பசுக்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும்.(18) எப்போதும் பசுஞ்சாணம் பயன்படுத்தி நீராட வேண்டும். காய்ந்த பசுஞ்சாணத்திலே அமர வேண்டும். அவன் ஒருபோதும் பசுஞ்சாணத்தில் மலமும், சிறுநீரும் கழிக்கக்கூடாது, உமிழவும் கூடாது. அவன் ஒருபோதும் பசுவின் வழியில் தடங்கலேற்படுத்தக்கூடாது.(19) ஒருவன், நீரில் நனைத்துத் தூய்மை செய்யப்பட்ட பசுத்தோலில் அமர்ந்து, மேற்கு நோக்கிக் கண்களைச் செலுத்தி உண்ண வேண்டும். பேச்சை அடக்கி, வெறும் மண்ணை உணவாக்கி {தரையையே பாத்திரமாக்கி} அவன் நெய்யுண்ண வேண்டும். இத்தகைய செயல்களின் விளைவால் அவன் பசுக்களையே தோற்றுவாயாகக் கொண்ட செழிப்பை அடைவான்[2].(20)
[2] நீரில் நனைத்துத் தூய்மையாக்கப்பட்ட பசுத்தோலே ஈரமான பசுத்தோல் என உரையாசிரியர் விளக்குகிறார். "பௌமௌ" என்று சொல்லப்படுவது, பாத்திரங்களையோ, வெண்கலக் குடுவைகளையோ, வேறு உலோகங்களையோ தவிர்த்து பூமியையே பாத்திரமாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. "கவாம் புஷ்டிம்" என்பது பசுவினால் கிட்டும் செழிப்பு என நான் புரிந்து கொள்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நனைக்கப்பட்ட பசுத்தோலில் மேற்குமுகமாக உட்கார்ந்து கொண்டு மௌனமாக நெய்யுடன் தரையிலுண்பவன் பசுக்கள் நிறைந்திருத்தலை எப்போதும் அடைவான்" என்றிருக்கிறது.
ஒருவன் நெய்யைப் பயன்படுத்தி நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் நெய்யைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்களை ஆசி கூறச் செய்ய வேண்டும். அவன் நெய்க்கொடையளிக்க வேண்டும். அவன் நெய்யை உண்ணவும் வேண்டும். அத்தகைய செயல்களுக்கான வெகுமதியாக அவன் பசுக்கள் அழிக்கும் செழிப்பை நிச்சயம் அடைவான்.(21) கோமதி என்ற பெயரில் அழைக்கப்படும் வேத மந்திரங்களைச் சொல்லி எள்ளினாலான பசு வடிவத்தைச் செய்து, அனைத்து வகை ரத்தினங்களாலும் அஃதை அலங்கரித்துக் கொடையளிப்பவன், தான் செய்த செயல்கள் மற்றும் தவிர்த்த செயல்களின் காரணமாக எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(22) "பெரும் அளவில் பாலைத் தருபவையும், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையும், சுரபியின் மகள்களுமான பசுக்கள், பெருங்கடலை அணுகும் ஆறுகளைப் போலவே என்னை அடையட்டும்.(23) நான் எப்போதும் பசுக்களைக் காண்பேன். பசுக்களும் என்னைப் பார்க்கட்டும். பசுக்கள் எங்களுக்குரியவை. நாங்கள் அவற்றுக்குரியவர்கள் பசுக்கள் இருக்கும் இடத்திலேயே நாங்கள் இருப்போம்"(24) என்று {மேற்கண்ட கோமதி மந்திரத்தைப்}[3] பேரச்சம் நேரும் வேளைகளில் இரவிலோ, பகலிலோ, இன்பத்திலோ, துன்பத்திலோ ஒரு மனிதன் சொல்ல வேண்டும். இத்தகைய சொற்களைச் சொல்வதன் மூலம் அவன் நிச்சயம் அனைத்து அச்சங்களில் இருந்து விடுபடுவான்" என்றார் {வசிஷ்டர்}.(25)
[3] 22ம் ஸ்லோகத்தில் குறிப்பிடப்படும் கோமதி மந்திரமே 23 மற்றும் 24ம் ஸ்லோகங்களில் வருகிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 78ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |