Mantras having reference to cow! | Anusasana-Parva-Section-80 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 80)
பதிவின் சுருக்கம் : பசுவைக் குறிக்கும் புனித மந்திரங்களை ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்...
வசிஷ்டர் {மன்னன் சௌதாசனிடம்}, "பசுக்கள் நெய்யையும், பாலையும் தருகின்றன. அவையே நெய்யின் ஊற்றுக்கண்ணாகவும், {அமுதம் போன்ற} நெய்யில் இருந்து உண்டானவையாகவும் இருக்கின்றன. அவையே நெய்யாறுகளாகவும், நெய்ச்சுழல்களாகவும் இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் வீட்டில் இருக்கட்டும்.(1) நெய்யே எப்போதும் என் இதயமாக இருக்கிறது. நெய்யானது என் தொப்புளிலும் நிறுவப்பட்டிருக்கிறது. நெய்யானது என் அங்கங்கள் யாவிலும் உள்ளது. நெய் என் மனத்தில் வசிக்கிறது.(2) பசுக்கள் எப்போதும் என் முன்னே இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் பின்னே இருக்கின்றன. என் மேனியின் அனைத்துப் பக்கங்களிலும் பசுக்கள் இருக்கின்றன. நான் பசுக்களின் மத்தியிலேயே வாழ்கிறேன்"(3) என்ற இந்த மந்திரத்தை நீரைத்தொட்டுத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு நாளும் ஒருவன் சொல்ல வேண்டும். இதனால் அந்த நாளில் தான் இழைக்கும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் அவன் விடுபடுவான்.(4)
ஆயிரம் {1,000} பசுக்களைக் கொடையளித்து இவ்வுலகத்தைவிட்டுச் செல்லும் ஒருவன், வசு என்றழைக்கப்படும் தெய்வீக கங்கை ஏங்கே பாய்கிறதோ, எங்கே பொன் மாளிகைகள் பல இருக்கின்றனவோ, எங்கே கந்தர்வர்களும், அப்சரஸ்களும் இருக்கின்றனரோ அந்த உலகங்களுக்குச் செல்கிறான்.(5) ஆயிரம் {1,000} பசுக்களைக் கொடையளித்தவர்கள், ஓடும் நீராகப் பாலையும், சேறாகப் பாலாடைக்கட்டிகளையும் {வெண்ணையையும்}, மிதக்கும் பாசியாகத் தயிரையும் கொண்ட பல ஆறுகள் எங்கே ஓடுகின்றனவோ அங்கே செல்கிறார்கள்.(6) சாத்திரங்களிலுள்ள சடங்குகளுக்கு ஏற்புடைய வகையில் நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையளிக்கும் மனிதன், (இம்மையில்) பெருஞ்செழிப்பை அடைந்து, சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(7) அத்தகைய மனிதன் தன் தந்தைவழி மற்றும் தாய்வழி மூதாதையரில் பத்து தலைமுறையினரை பேரின்பம் நிறைந்த உலகங்களை அடையச்செய்து தன் மொத்த குலத்தையும் புனிதப்படுத்துகிறான்.(8)
பசுக்கள் புனிதமானவை. அவை உலகில் உள்ள அனைத்திலும் முதன்மையானவை. அவையே உண்மையில் அண்டத்தின் புகலிடமாக இருக்கின்றன. அவையே தேவர்களின் அன்னையராகவும் இருக்கின்றன. அவை உண்மையில் ஒப்பற்றவையாகும். அவற்றை வேள்விக்கெனவே அர்ப்பணிக்க வேண்டும்.(9) ஒருவன் பயணம் புறப்படும்போது அவற்றுக்கு வலப்பக்கமாக (அவற்றைத் தனக்கு இடப்பக்கமாக வைத்துச்) செல்ல வேண்டும். சரியான காலத்தை உறுதிசெய்து கொள்ளும் அவர்கள் அவற்றைத் தகுந்த நபர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(10) பெருங்கொம்புகளைக் கொண்டதும், கன்றுடனும், கறப்பதற்கான வெண்கலப் பாத்திரத்துடனும் கூடியதும், துணியால் மறைக்கப்பட்டதுமான ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன், அச்சத்தில் இருந்து விடுபட்டவனாக, நுழையக் கடினமான யமனின் அரண்மனைக்குள் நுழைவதில் வெல்லலாம்.(11)
ஒருவன் எப்போதும், "பசுக்கள் அழகிய வடிவைக் கொண்டவை. பசுக்கள் பல்வேறு வடிவங்களிலானவை. அவை அண்டத்தின் வடிவம் கொண்டவை. அவையே அண்டத்தின் அன்னையராக இருக்கின்றன. ஓ! பசுக்கள் என்னை அணுகட்டும்" என்ற புனித மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.(12)
பசுக்கொடையைவிடப் புனிதமிக்க வேறு கொடையேதும் இல்லை. அதிக அருள் பலனைக் கொடுக்கவல்ல வேறு கொடையேதும் இல்லை. பசுவுக்கு இணையான வேறேதும் இல்லை, அதே போலவே பசுவுக்கு இணையான வேறேதும் இருக்கப் போவதுமில்லை.(13) பசுவின் தோல், மயிர், கொம்புகள், வால், பால், கொழுப்பு ஆகியவை அனைத்தும் வேள்வியை ஆதரிக்கின்றன. பசுவை விடப் பயன்மிக்கதாக இருப்பது வேறு எது?(14) கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் தாயும், அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய மொத்த அண்டத்தையும் மறைத்திருப்பதுமான பசுவுக்கு நான் மதிப்புடன் தலைவணங்குகிறேன்.(15) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, பசுத் தரும் உயர்ந்த பலன்களில் ஒரு பகுதியை மட்டுமே நான் உனக்கு உரைத்திருக்கிறேன். பசுக்கொடையைவிட மேன்மையான கொடை இவ்வுலகில் வேறேதும் இல்லை. பசுவை விட உயர்ந்த புகலிடமும் இவ்வுலகில் வேறேதும் இல்லை" என்றார் {வசிஷ்டர்}".(16)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்மா கொண்ட அந்த நிலக் கொடையாளி (மன்னன் ஸௌதாசன்) முக்கியமானவற்றில் முதன்மையான முனிவர் வசிஷ்டரின் இந்தச் சொற்களை நினைவுகூர்ந்து, புலனடக்கத்துடன் கூடியவனாகப் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மேலும், அக்கொடைகளின் விளைவாக அந்த ஏகாதிபதி மறுமையில் பல இன்பலோகங்களை அடைவதில் வென்றான்" {என்றார் பீஷ்மர்}.(17)
அநுசாஸனபர்வம் பகுதி – 80ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |