The region of cow! | Anusasana-Parva-Section-81 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 81)
பதிவின் சுருக்கம் : அருளப்பட்டவர்கள் அடையும் பசுக்களின் உலகத்தைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, புனிதப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் இவ்வுலகில் உயர்வானதும், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வேறு புனிதங்கள் யாவற்றையும் விட மிகப் புனிதமானது எது?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. அவை மிகப் புனிதமானவை மற்றும் அவையே மனிதர்களை (அனைத்து வகைப் பாவங்கள் மற்றும் துன்பங்களில் இருந்தும்) மீட்கின்றன. தாங்கள் தரும் பால், மற்றும் அதிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றின் மூலம் பசுக்களே அண்டத்தின் உயிரினங்கள் யாவற்றையும் தாங்கிப் பிடிக்கின்றன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பசுக்களைவிடப் புனிதமானது வேறேதும் இல்லை. மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் முதன்மையான பசுக்களே புனிதமானவையாகவும், பிறரைத் தூய்மைப்படுத்த வல்லவையாகவும் இருக்கின்றன.(3) பசுக்கள், தேவலோகத்தையும் விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன. கொடையளிக்கப்படும் போது தங்களைக் கொடையளித்தவர்களை அவை மீட்கின்றன. ஞானமுள்ள மனிதர்கள் பசுக்கொடைகளை அளிப்பதன் மூலம் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(4)
யுவனாஸ்வனின் மகன் மாந்தாத்ரி {மாந்தாதா}, யயாதி, (அவனது தந்தையான) நஹுஷன் ஆகியோர் ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தனர்.(5) அந்தக் கொடைகளின் வெகுமதியாக அவர்கள் தேவர்களாலும் அடைய முடியாத அத்தகைய உலகங்களை அடைந்தனர். ஓ!பாவமற்றவனே, இது தொடர்பாகப் பழங்காலத்தில் ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. அதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) ஒரு காலத்தில், நுண்ணறிவுமிக்கச் சுகர், தமது காலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, மன அடக்கத்துடன் கூடியவராக, தீவில் பிறந்தவரும், முனிவர்களில் முதன்மையானவரும், மேன்மை, கீழ்மை ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாட்டை அறிந்தவரும், தமது தந்தையுமான கிருஷ்ணரை {வியாசரை} அணுகி, அவரை வணங்கி, அவரிடம், "வேள்விகள் அனைத்திலும் முதன்மையானது என உமக்குத் தோன்றும் வேள்வி யாது?(7,8) ஞானமுள்ள மனிதர்கள் எச்செயலைச் செய்வதன் மூலம் உயர்ந்த உலகத்தை அடைவதில் வெல்கின்றனர்? புனிதமான எச்செயலைச் செய்ததன் மூலம் தேவர்கள் சொர்க்கத்தின் இன்பநிலையை அனுபவிக்கிறார்கள்?(9) எந்த வேள்விப் பண்பு வேள்வியாக அமைகிறது? {அதாவது, வேள்வியை நிறைவடையச் செய்வது எது?} வேள்வியானது எதைச் சார்ந்திருக்கிறது? தேவர்களால் சிறந்ததெனக் கருதப்படுவது எது? ஓ! ஐயா, அனைத்திலும் மிகப் புனிதமானது எது என்பதையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(10)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, தமது மகனின் இச்சொற்களைக் கேட்டவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசர் அவரிடம் பின்வருமாறு உரையாடினார்.
வியாசர் {சுகரிடம்}, "பசுக்களே அனைத்து உயிரினங்களின் ஆதாரமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கின்றன. பசுக்கள் புனிதமானவை, பசுக்களே அனைத்தையும் புனிதப்படுத்துபவையுமாகும்.(12) முன்பு பசுக்கள் கொம்பற்றவையாக இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொம்புகளைப் பெறுவதற்காக நித்தியமானவனும், பலமிக்கவனுமான பிரம்மனை அவை துதித்தன.(13) பலமிக்கப் பிரம்மன், பசுக்கள் பிராயத்தில் அமர்ந்து தங்கள் துதிகளைச் செலுத்துவதைக் கண்டு, அவை ஒவ்வொன்றும் விரும்பியதைக் கொடுத்தான்.(14) அதன் பிறகு அவற்றுக்குக் கொம்புகள் முளைத்தன, அவை ஒவ்வொன்றுக்கும் விரும்பியவை கிடைத்தன. ஓ! மகனே, பல்வேறு வண்ணங்களிலும் இருந்தவையும், கொம்புகளுடன் கூடியவையுமான அவை அழகில் ஒளிரத் தொடங்கின.(15)
வியாசர் {சுகரிடம்}, "பசுக்களே அனைத்து உயிரினங்களின் ஆதாரமாக இருக்கின்றன. பசுக்களே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கின்றன. பசுக்கள் புனிதமானவை, பசுக்களே அனைத்தையும் புனிதப்படுத்துபவையுமாகும்.(12) முன்பு பசுக்கள் கொம்பற்றவையாக இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொம்புகளைப் பெறுவதற்காக நித்தியமானவனும், பலமிக்கவனுமான பிரம்மனை அவை துதித்தன.(13) பலமிக்கப் பிரம்மன், பசுக்கள் பிராயத்தில் அமர்ந்து தங்கள் துதிகளைச் செலுத்துவதைக் கண்டு, அவை ஒவ்வொன்றும் விரும்பியதைக் கொடுத்தான்.(14) அதன் பிறகு அவற்றுக்குக் கொம்புகள் முளைத்தன, அவை ஒவ்வொன்றுக்கும் விரும்பியவை கிடைத்தன. ஓ! மகனே, பல்வேறு வண்ணங்களிலும் இருந்தவையும், கொம்புகளுடன் கூடியவையுமான அவை அழகில் ஒளிரத் தொடங்கின.(15)
பிரம்மனாலேயே வரமளிக்கப்படப் பசுக்கள் மங்கலமானவையாகவும், ஹவ்யகவ்யங்களைக் கொடுப்பவையாகவும் இருக்கின்றன. அவையே பலன்களின் உடல்வடிவமாக இருக்கின்றன. அவை புனிதமானவையாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. அவை சிறந்த வடிவங்களையும், குணங்களையும் கொண்டவையாக இருக்கின்றன.(16) பசுக்களில் உயர்ந்த மற்றும் சிறந்த சக்தி இருக்கிறது. பசுக்கொடை பெரிதும் மெச்சப்படுகிறது. செருக்கிலிருந்து விடுபட்டு, பசுக்கொடையளிக்கும் நல்லோர்(17) அறச்செயல்களைச் செய்பவர்களாகவும், அனைத்துப் பொருட்களையும் கொடையளித்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஓ! பாவமற்றவனே, அத்தகைய மனிதர்கள் உயர்ந்ததும் புனிதமானதுமான பசுக்களின் உலகத்தை அடைகிறார்கள்.(18) அங்குள்ள மரங்கள் இனிய கனிகளை உண்டாக்குகின்றன. உண்மையில் அம்மரங்கள் சிறந்த மலர்களாலும், கனிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஓ!மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அம்மலர்கள் தெய்வீக நறுமணத்துடன் கூடியவையாக இருக்கின்றன.(19) அவ்வுலகத்தில் உள்ள மொத்த நிலமும் ரத்தினங்களால் ஆனதாக இருக்கிறது. மண் யாவும் பொன்னாக இருக்கின்றன. ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் உரிய சிறப்பான தட்பவெப்ப நிலையே அங்கே நிலவுகிறது. அங்கே புழுதியோ, தூசியோ இருப்பதில்லை. உண்மையில் உயர்ந்த மங்கலம் நிறைந்ததாக அஃது இருக்கிறது.(20)
அங்கே பாயும் ஓடைகள், மலர்ந்த செந்தாமரைகளைத் தங்கள் மார்பில் தாங்கி, ரத்தினங்களையும் பொன்னையும் தங்கள் கரைகளில் தாங்கி காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(21) விலைமதிப்புமிக்க ரத்தின இதழ்களையும், பொன்மயமாகப் பிரகாசிக்கும் மகரந்தங்களையும் கொண்ட கருநெய்தல் மற்றும் தாமரை மலர்கள் கலந்து நிலையில் நிரம்பியிருக்கும் மடுக்களும் அங்கே நிறைந்திருந்தன.(22) சுற்றிலும் கொடிகளால் பின்னப்பட்டு மலர்ந்திருக்கும் அலரிக் காடுகளாலும், மலர்ச்சுமைகளுடன் கூடிய ஸந்தானக {ஸகஸ்ராவர்த்த} காடுகளாலும் அவை {அந்த மடுக்கள்} அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.(23) பிரகாசமான முத்துகள், மிளிரும் ரத்தினங்கள் மற்றும் ஒளிரும் பொன் ஆகியவற்றால் பல வண்ணங்களை அடைந்திருக்கும் கரைகளைக் கொண்ட ஆறுகளும் அங்கே இருக்கின்றன.(24) அந்த உலகத்தின் சில பகுதிகள் அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறந்த மரங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில பொன்னாலானவையாகவும், சில நெருப்பின் காந்தியை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.(25)
பொன் மலைகள் பலவும், ரத்தினங்களாலான குன்றுகள் மற்றும் கொடுமுடிகள் பலவும் அங்கே இருக்கின்றன. அனைத்து வகை ரத்தினங்களாலும் அமைந்த நெடுஞ்சிகரங்களின் விளைவால் அவை அழகில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.(26) அவ்வுலகதை அலங்கரிக்கும் மரங்கள் எப்போதும் மலர்களையும், கனிகளையும் விளைவிக்கின்றன, அவையும் எப்போதும் அடர்த்தியாக இருக்கும் இலைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா[1], அம்மலர்கள் எப்போதும் தெய்வீக நறுமணத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன, கனிகளும் பெரும் சுவைமிக்கவையாகவும் இருக்கின்றன.(27) ஓ! யுதிஷ்டிரா, அறச்செயல்களைச் செய்த மனிதர்க்ள எப்போதும் அங்கே இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். துன்பம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்ட அவர்கள் தங்கள் விருப்பங்கள் யாவும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டுத் தங்கள் காலத்தை அங்கே கழிக்கின்றனர்.(28) ஓ! பாரதா, அறச்செயல்களைச் செய்தவர்களும், புகழ் கொண்டவர்களுமான மனிதர்கள், பேரழகுடன் கூடிய இனிய வாகனங்களில் ஓரிடத்தில் இருந்து மறுஇடத்திற்குச் சென்று மகிழ்ச்சியில் அங்கே விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.(29) மங்கலமான அப்சரஸ் கூட்டங்கள், தங்கள் ஆடல் பாடல்களின் மூலம் அங்கே அவர்களை மகிழ்வித்துக் கொண்டு இருக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, உண்மையில் பசுக்கொடைகளை அளிப்பதற்கன வெகுமதியாக ஒரு மனிதன் அத்தகைய உலகத்திற்குச் செல்கிறான்.(30)
[1] வியாசர் இவை யாவற்றையும் சுகரிடம் சொல்லி வருகிறார். ஆனால் இங்கே இடையில் யுதிஷ்டிரனைக் குறிப்பது போலப் பாரதக் குலத்தின் தலைவா என்ற சொல் வருகிறது. அடுத்த ஸ்லோகத்தில் நேரடியாகவே யுதிஷ்டிரா என்று தொடர்கிறது. எனவே, பொருத்தமற்று வரும் இவ்வாக்கியத்தை, முன்னர் வியாசர் சுகரிடம் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு பீஷ்மரே இங்கே தொடர்வதாகக் கொள்ள வேண்டும். கும்பகோணம் பதிப்பில் இப்பிழை தென்படவில்லை. வியாசர் சுகரிடம் பேசும் நேரடி மொழியே அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் அடிக்குறிப்பில், "இங்கு, பீஷ்மர் யுதிஷ்டிரரை விளித்தனவாயுள்ள விளிகள் விடப்பட்டன" என்றிருக்கிறது.
பூஷன் மற்றும் பெரும்பலம் கொண்ட மருத்துகளைத் தங்கள் தலைவர்களாகக் கொண்ட உலகங்கள் பசுக்களைக் கொடையளிப்பவர்களால் அடையப்படுகின்றன. அரச வருணன் செல்வத்ததில் மேம்பட்டவனாகக் கருதப்படுகிறான். பசுக்கொடையாளியானவன், வருணனைப் போன்ற செல்வநிலையை அடைவான். ஒருவன், உறுதியான நோன்பு கொண்டவனாக, "யுகாந்தரா {காலத்தைத் தாங்குபவை}, சுரூபா {அழகான வடிவம் கொண்டவை}, பஹுரூபா {பல நிறங்களைக் கொண்டவை}, விஷ்வரூபா {அண்டந்தழுவியவை}, மாதரா {அன்னையராய் இருப்பவை ஆகிய பசுக்கள் என்னைக் காக்கட்டும்}" என்று (பசுக்களைப் பொறுத்தவரையில்) பிரஜாபதியாலேயே அறிவிக்கப்பட்ட இந்த மந்திரத்தை நாள்தோறும் சொல்ல வேண்டும்[2].(31,32)
[2] "இவை பசுக்களுக்குரிய பல்வேறு பெயர்களாகும். முதலில் வருவது, கலப்பை சுமக்கும் பசு, உழவுக்குப் பயன்படும் பசு என்றும், இரண்டாவது அழகிய வடிவம் கொண்டது என்றும், மூன்றாவது, அண்டத்தின் ஆதாரம் என்றும், நான்காவது பல வடிவங்களைக் கொண்டதென்றும், ஐந்தாவது தாயாகக் கருதப்படுவது என்றும் கொள்ளப்படலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் முற்றிலும் வேறு வகையில், "எவற்றிற்கு ஸூர்யன் ராஜாவோ, பலத்திற்குப் பலசாலியான வாயுவும், ஐசுவரியத்திற்கு வருணனும் அதிபதிகளோ காலத்தைத் தாங்குகின்றவையும், அழகான உருவமுள்ளவையும், பல நிறங்களுள்ளவையும், உலகத்திற்குக் காரணமாயிருக்கும் தாய்களும், பிரம்ம தேவருடைய அநுக்கிரகம் பெற்றவைகளுமான அந்தக் கோக்கள் என்னைக் காக்கக் கடவன" என்பதைத் தினந்தோறும் நியமத்துடன் ஜபம் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
மதிப்புடன் பசுக்களுக்குத் தொண்டாற்றுபவனும், பணிவுடன் அவற்றைப் பின் தொடர்பவனுமான ஒருவன், தன்னிடம் நிறைவடைந்த பசுக்களிடமிருந்து மதிப்புமிக்கப் பல வரங்களை அடைவதில் வெல்கிறான்.(33) ஒருவன் தன் இதயத்தாலும் {மனத்தாலும்} ஒருபோதும் பசுக்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது. உண்மையில் அவன் அவற்றுக்கு மகிழ்ச்சியையே அளிக்க வேண்டும். அவன் எப்போதும் பசுக்களை மதித்து, தலைவணங்கி அவற்றை வழிபட வேண்டும்.(34) புலனடக்கத்துடனும், உற்சாகத்துடனும் கூடிய ஒருவன் பசுவால் அனுபவிக்கக்கூடிய (பசுவால் மட்டுமே கொடுக்கப்படக்கூடிய) இன்பநிலையை அனுபவிப்பதில் வெல்கிறான். அவன் மூன்று நாட்கள் பசுவின் சூடான சிறுநீரைக் குடிக்க வேண்டும். அடுத்த மூன்று நாளைக்கு அவன் பசுவின் சூடான பாலைக் குடிக்க வேண்டும்.(35) இவ்வாறு மூன்று நாட்கள் சூடான பாலைக் குடிக்கும் அவன் அடுத்த மூன்று நாள் சூடான நெய்யைக் குடிக்க வேண்டும். இவ்வகையில் மூன்று நாள் சூடான நெய்யைக் குடித்த ஒருவன், அடுத்த மூன்று நாட்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ வேண்டும்.(36) {இவற்றின் மூலம்} இன்ப உலகங்களை அனுபவிக்கத் தேவர்களுக்குத் துணை செய்வதும், புனிதமான பொருட்கள் அனைத்திலும் மிகப் புனிதமானதுமான நெய்யானது தலையில் தாங்கப்பட வேண்டும்[3].(37)
[3] "வேள்வியில் தரும் பயனுக்காக நெய் அவ்வாறு புனிதமானதாகக் கருதப்படுகிறது. நெய்யின் துணை கொண்டே தேவர்கள் அவர்களுடைய நிலையை அடைந்தனர். மேலும் அதே வேளையில் தூய்மைப்படுத்தவும் செய்யும் அது புனிதமானதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மூன்று தினங்கள் உஷ்ணமான நெய்யைக் குடித்துப் பிறகு மூன்று தினங்கள் வாயுபக்ஷணம் செய்து கொண்டிருக்க வேண்டும். இந்தப் பரிசுத்தத்தினாலேதான் தேவர்கள் உத்தமமான உலகங்களை அனுபவிக்கின்றனர். பரிசுத்தங்களிலும் பரிசுத்தமான அந்த நெயைச் சிரசில் வைக்க வேண்டும்" என்றிருக்கிறது.
நெய்யின் துணை கொண்டே ஒருவன் ஆகுதிகளைப் புனித நெருப்பில் ஊற்ற வேண்டும். நெய்க்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பிராமணர்களைத் தனக்கு ஆசி கூறச் செய்ய வேண்டும். ஒருவன் நெய்யுண்டு, நெய்க்கொடை அளிக்க வேண்டும். இந்நடத்தையின் வெகுமதியாக அவன் பசுக்களுக்குச் செந்தமான செழிப்பை அடைவான்.(38) ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் பசுஞ்சாணத்தில் இருந்து யவங்கள் எனும் அரிசியை உண்பதால் ஒருவன் பிராமணனைக் கொன்ற பாவத்தைப் போன்ற கொடும்பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(39) தைத்தியர்களிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு தேவர்கள் பாவக்கழிப்பாக இதையே செய்தனர். இந்தப் பாவக்கழிப்பின் விளைவாகவே அவர்களால் தேவர்கள் என்ற தங்கள் நிலையை மீண்டும் பெற முடிந்தது. உண்மையில் இதன் மூலமே அவர்கள் தங்கள் பலத்தை மீண்டும் அடைந்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டனர்.(40) பசுக்கள் புனிதமானவை. அவை பலன்களின் {புண்ணியங்களின்} உடல் வடிவங்களாக இருக்கின்றன. அவை பாவங்களைப் போக்கவல்ல அனைத்திலும் எதிர்பார்க்கும் பலனைத் தரவல்லவையாகவும், உயர்வையாகவும்இருக்கின்றன. பிராமணர்களுக்குப் பசுக்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.(41) பசுக்களுக்கு மத்தியில் தூய நிலையில் வாழும் ஒருவன், நீரைத் தீண்டிய பிறகு, கோமதி என்ற பெயரால் அறியப்படும் புனித மந்திரங்களை மனத்தால் உரைக்க வேண்டும். இதைச் செய்வதால் ஒருவன் (பாவங்கள் அனைத்தில் இருந்து) தூய்மையடைந்து புனிதமடைகிறான்.(42)
அறச்செயல்களைச் செய்வோரும், அறிவாலும், வேத கல்வியாலும், நோன்புகள் நோற்பதாலும் தூய்மையடைந்தோருமான பிராமணர்கள், புனித நெருப்புகளின் மத்தியிலோ, பசுக்கள், அல்லது பிராமணக் கூட்டங்களின் மத்தியிலோ மட்டுமே வசித்து, அனைத்து வகையிலும் ஒரு வேள்வியைப் போன்றதாக இருக்கும் (கோமதி மந்திரம் விளைவிக்கும் பலனுக்காக) கோமதி மந்திரத்தின் அறிவைத் தங்கள் சீடர்களுக்குப் போதிக்க வேண்டும். ஒருவன் கோமதி மந்திர ஞானம் எனும் வரத்தை அடைவதற்காக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(43,44) ஒரு மகனை அடைய விரும்பும் மனிதன் இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் அஃதை அடைவான். செல்வத்தை அடைய விரும்பும் ஒருவன் இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் தன் விருப்பம் நிறைவேறப்பெறலாம். நல்ல கணவரை அடைய விரும்பும் பெண்ணானவள், இதே வழிமுறைகளின் மூலம் தன் விருப்பம் வெற்றியால் மகுடம் சூடப்படும் நிலையை அடையலாம். உண்மையில், இந்த மந்திரத்தைத் துதிப்பதன் மூலம் ஒருவன் தான் விரும்பும் எதுவும் கனியும் {தான் விரும்பும் எதையும் பெறும்} நிலையை அடையலாம்.(45) ஒருவன் பசுக்களுக்குச் செய்யும் தொண்டினால் அவனிடம் நிறைவடையும் அவை, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அருள வல்லவையாக நிச்சயம் இருக்கின்றன. பசுக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவை. அவையே வேள்விக்கான முக்கியத் தேவையாக இருக்கின்றன. அவை அனைத்து விருப்பங்களையும் அருளக்கூடியவை ஆகும். பசுவைவிட மேன்மையானது வேறேதும் இல்லை என்பதை அறிவாயாக" {என்றார் வியாசர்}.(46)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு தமது உயர் ஆன்மத் தந்தையால் சொல்லப்பட்டவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சுகர், அக்காலம் முதல் ஒவ்வொரு நாளும் பசு வழிபாட்டைச் செய்யத் தொடங்கினார். ஓ! மகனே, நீயும் அதே வழியில் உன்னை நடத்திக் கொள்வாயாக" {என்றார் பீஷ்மர்}.(47)
அநுசாஸனபர்வம் பகுதி – 81ல் உள்ள சுலோகங்கள் : 47
ஆங்கிலத்தில் | In English |