Sree in cow dung & urine! | Anusasana-Parva-Section-82 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 82)
பதிவின் சுருக்கம் : ஸ்ரீதேவிக்கும் பசுக்களுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பசுக்களின் சாணத்திலும், சிறுநீரிலும் அந்த ஸ்ரீதேவியே வசிப்பது குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்},[1] "பசுக்களின் சாணத்தில் ஸ்ரீ {லட்சுமி} இருக்கிறாள் என நான் கேட்டிருக்கிறேன். அஃது எவ்வாறு என்பதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, என் ஐயங்களை நீர் அகற்ற வேண்டும்" என்று கேட்டான்.(1)
[1] கும்பகோணம் பதிப்பில், இந்தக் குறிப்பிட்ட அத்யாயத்திற்கு முன்பு, "கோலோகம் அனைத்திற்கும் மேலிருப்பதன் காரணம்; சுரபியின் வழித்தோன்றல்கள்; இந்திரன் சுரபியின் பாலைக் குடித்ததால் இறவாமை முதலியவற்றை அடைந்தது; இந்திரன் வரம்பெற்று எல்லாத் தேவர்களோடும் கோக்களிடம் வசித்தது; யார் யார் கோக்களின் எந்தெந்த அங்கங்களில் வசிக்கின்றனர் என்றது; ஸுமித்ரர் பேனபரென்னும் பெயர் பெற்றது; ஸுமித்ரர் பசுக்கள் அவரைக் கொல்ல நிச்சயித்தது; கபிலைகள் பசுக்களுள் சிறப்புற்றது; கோமாதாக்கள் ஸுமித்ரரைக் கோலோகத்துக்குக் கொண்டு சென்றது; அவர் பசுக்கள் அவருடைய உடலை நசுக்கியது; பசுக்கள் சாபம் பெற்றது; ரந்திதேவன் வேள்வியில் பசுக்கள் சென்று பயன்பட்டது; உடன்பாட்டின்படி வேள்வி நிறுத்தப்பட்டது; பசுக்களின் சிறப்பைப் பற்றி வியாசருக்கும், சுகருக்கும் இடையில் நடந்த உரையாடல்; கபிலையைத் துன்புறுத்துபவர் அடையும் தீங்கு; பசுக்கள் கபில நிறம் பெற்று மேன்மையுற்றது; கபிலைகளின் உடற்குறியீடுகள்; அவற்றைத் துன்புறுத்துபவர் அடையும் கெட்ட கதி" ஆகியவை குறித்து 12 அத்தியாயங்களில், 20 அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கங்குலியின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் விடுபட்டிருக்கின்றன. ரந்திதேவன் வேள்வியில் பசுக்கள் பலியிட்ட கதையும் இதில் அடங்கியிருப்பதால் ஏதோ முக்கியச் செய்தியை விட்டுச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பிறகு வாய்ப்பு ஏற்படுகையில், பசுக்கொடை குறித்த தனி மின் புத்தகம் செய்யும்போது இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் இதை நினைவூட்டிக் கொள்ளவே இக்குறிப்பை இங்கே இடுகிறேன்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாகப் பசுக்களுக்கும், ஸ்ரீக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில் ஸ்ரீதேவி {லட்சுமி தேவி}, ஓர் அழகிய வடிவை ஏற்றுக் கொண்டு ஒரு பசுமந்தைக்குள் நுழைந்தாள். அவளது அழகெனும் செல்வத்தைக் கண்ட பசுக்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(3)
பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, "ஓ! தேவி, நீ யார்? பூமியில் ஒப்பற்ற இவ்வழகை நீ எங்கிருந்து பெற்றாய்? ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட தேவியே, உன் அழகெனும் செல்வத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியத்தால் நிறைகிறோம்.(4) நீ யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். உண்மையில், நீ யார்? நீ எங்கே செல்லப் போகிறாய்? ஓ! மிக மேன்மையான ஒளிமிக்க நிறத்தைக் கொண்டவளே, நாங்கள் அறிய விரும்பும் அனைத்தையும் எங்களுக்கு விரிவாகச் சொல்வாயாக" என்றன.(5)
ஸ்ரீ {பசுக்களிடம்}, "நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நான் உயிரினங்கள் அனைத்தின் அன்புக்குரியவள் ஆவேன். உண்மையில் நான் ஸ்ரீ என்ற பெயரால் அறியப்படுகிறேன். என்னால் கைவிடப்பட்ட தைத்தியர்கள் என்றென்றும் கெட்டுப் போனார்கள்.(6) இந்திரன், விவஸ்வத் {விவஸ்வான்}, சோமன், விஷ்ணு, வருணன், அக்னி ஆகிய தேவர்கள் என்னை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.(7) உண்மையில், முனிவர்களும், தேவர்களும் தங்களிடம் என்னைக் கொண்டிருக்கும்போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூடப்படுகின்றனர். பசுக்களே, எந்த உயிரினங்களுக்கு மத்தியில் நான் நுழையவில்லையோ அங்கே அழிவு நேருகிறது.(8) அறம், பொருள், இன்பம் ஆகியவை என்னுடன் சேர்ந்திருக்கும்போது மட்டுமே இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பசுக்களே, நான் அத்தகைய சக்தியைக் கொண்டவள் என்பதை அறிவீராக.(9) நான் உங்களில் ஒவ்வொருவரிடமும் வசிக்க விரும்புகிறேன். நானே முன்வந்து உங்களை வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் ஸ்ரீ உள்ளவர்களாவீராக" என்றாள்.(10)
பசுக்கள் {ஸ்ரீதேவியிடம்}, "நீ நிலையற்றவளாகவும், ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். மேலும் நீ பலரால் அனுபவிக்கப்படுபவளாகவும் இருக்கிறாய் {நீ பலருக்குப் பொதுவானவளாக இருக்கிறாய்}. நாங்கள் உன்னைக் கொள்ள விரும்பவில்லை. நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(11) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் நல்வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது? நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. (எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்ததன் மூலம்) நீங்கள் ஏற்கனவே எங்களை மிகவும் நிறைவடையச் செய்துவிட்டாய்" என்றன.(12)
ஸ்ரீ, "பசுக்களே, நீங்கள் என்னை வரவேற்காதது முறையா? நான் அடைதற்கரிதானவள். என்னை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்?(13) சிறந்த நோன்புகளைக் கொண்ட உயிரினங்களே, வேண்டாமல் மற்றொருவரிடம் செல்லும் ஒருவன் அவமதிக்கப்படுவது நிச்சயம் என்ற உலகமறிந்த இப்பழமொழி உண்மை என்றே தெரிகிறது.(14) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள் ஆகியோர் மிகக் கடுந்தவங்களைச் செய்தபிறகு மட்டுமே என்னை அடைவதில் வெல்கிறார்கள்.(15) இத்தகைய சக்தியைக் கொண்ட நீங்கள் என்னை ஏற்பீராக. இனியவர்களே, அசையும், மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகங்களிலும் ஒருபோதும் எவராலும் நான் அவமதிக்கப்படுவதில்லை" என்றாள்.(16)
பசுக்கள், "ஓ! தேவி, நாங்கள் உன்னை அவமதிக்கவில்லை. நாங்கள் உன்னை அவதூறு செய்யவும் இல்லை. நீ நிலையற்றவளாகவும், இதயத்தில் ஓய்வற்றவளாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக மட்டுமே நாங்கள் உன்னை விடுகிறோம்.(17) அதிகம் பேச என்ன இருக்கிறது? நீ தேர்ந்தெடுக்கும் இடத்திற்குச் செல்வாயாக. நாங்கள் அனைவரும் சிறந்த வடிவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறோம். ஓ! பாவமற்றளவே, உன்னால் எங்களுக்குத் தேவையென்ன இருக்கிறது?" என்று கேட்டன.(18)
ஸ்ரீ, "கௌரவங்களை அளிப்பவர்களே, இவ்வகையில் உங்களால் கைவிடப்படும் நான் நிச்சயம் உலகமெங்கும் அவமதிப்புக்குரியவளாக இருப்பேன். எனக்கு அருள் புரிவீராக.(19) நீங்கள் அனைவரும் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். உங்களிடம் பாதுகாப்பை நாடுவோரைப் பாதுகாக்க எப்போதும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பை வேண்டியே நான் உங்களிடம் வந்திருக்கிறேன். என்னிடம் குற்றமேதுமில்லை. (இந்நிலையில் இருந்து) என்னைக் காப்பீராக.(20) நான் எப்போதும் உங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்பதை அறிவீராக. உங்கள் உடலில் உள்ள இழிவான பகுதி ஒன்றிலாவது நான் வசிக்க விரும்புகிறேன். உண்மையில், நான் உங்கள் குதத்திலாவது வசிக்க விரும்புகிறேன்.(21) பாவமற்றவர்களே, நீங்கள் புனிதமானவர்களாகவும், உயர்ந்த அருளைப் பெற்றவர்களாகவும் இருப்பதால் உங்கள் உடலில் யாதொரு பாகத்தையும் அருவருக்கத்தக்கதாகக் கருதவில்லை. எனினும், என் வேண்டுதலை அருள்வீராக. உங்கள் உடல்களில் எந்தப் பகுதியில் நான் வசிக்க வேண்டும் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டாள்".(22)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஸ்ரீயால் இவ்வாறு சொல்லப்பட்டவையும், எப்போதும் மங்கலமாக இருப்பவையும், தங்களிடம் அர்ப்பணிப்புள்ளவர்களிடம் அன்பு பாராட்டுபவையுமான பசுக்கள், ஓ! மன்னா, ஒன்றோடொன்று ஆலோசித்து, ஸ்ரீயிடம் இந்தச் சொற்களைச் சொல்லின.(23)
பசுக்கள், "ஓ! பெரும்புகழைக் கொண்டவளே, நாங்கள் உன்னைக் கௌரவிக்க வேண்டும் என்பது நிச்சயம் விரும்பத்தக்கதே. நீ எங்களது சிறுநீரிலும், சாணத்திலும் வாழ்வாயாக. ஓ! மங்கல தேவியே, இவை இரண்டும் புனிதமானவையே" என்றன.(24)
ஸ்ரீ, " உதவ விரும்பி எனக்கு நீங்கள் அருள் புரிந்தது என் நற்பேறே. நீங்கள் சொன்னவாறே ஆகட்டும். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருப்பீராக. மகிழ்ச்சியை அளிப்பவர்களே, நான் உண்மையில் உங்களால் கௌரவிக்கப்பட்டேன்" என்றாள்".(25)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! பாரதா, பசுக்களுடன் இந்த உடன்படிக்கையைச் செய்து கொண்ட ஸ்ரீ, அங்கேயே, அப்போதே அந்தப் பசுக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னைக் காட்சியில் இருந்து மறைத்துக் கொண்டாள்.(26) ஓ! மகனே, இவ்வாறே நான் பசுஞ்சாணத்தின் மகிமை குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். பசுக்களின் மகிமை குறித்து மீண்டுமொருமுறை உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக" {என்றார் பீஷ்மர்}.(27)
அநுசாஸனபர்வம் பகுதி – 82ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |