Nahusha, the giver of light! | Anusasana-Parva-Section-100 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 100)
பதிவின் சுருக்கம் : அகஸ்தியரின் சடையில் மறைந்திருந்த பிருகு; அகஸ்தியரைக் காலால் தாக்கிய நஹுஷன்; நஹுஷனைச் சபித்த பிருகு; தான் அளித்த கொடைகளால் சாபத்தில் இருந்து மீண்ட நஹுஷன்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "நஹுஷன் எவ்வாறு துன்பத்தில் மூழ்கினான்? அவன் எவ்வாறு பூமியில் வீசப்பட்டான்? உண்மையில் அவன் எவ்வாறு தேவர்களின் அரசுரிமையை இழந்தான்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிருகு மற்றும் அகஸ்தியர் ஆகிய முனிவர்கள் இருவரும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நஹுஷன் முதலில் தேவர்களின் தலைவனான போது நல்ல வழியிலேயே செயல்பட்டான் என்பதை ஏற்கனவே சொன்னேன். உண்மையில் மனித மற்றும் தெய்வீக இயல்புடைய அனைத்துச் செயல்களும் அந்த உயர் ஆன்ம அரச முனியிடமிருந்தே உண்டாகின.(2) விளக்குகள் கொடை மற்றும் அதே வகைச் சடங்குகள் அனைத்தும், பலிகளை முறையாக அளிப்பது, குறிப்பாகப் புனித நாட்களில் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும்(3) என இவை யாவும் தேவர்களின் அரசுரிமையில் அமர்ந்த உயர்ந்த ஆன்ம நஹுஷனால் முறையாக நோற்கப்பட்டன. பக்திச் செயல்பாடுகள் அனைத்தும் ஞானம் கொண்ட மனிதர்களாலேயே மனிதர்களின் உலகிலும், தேவர்களின் உலகிலும் எப்போதும் நோற்கப்படுகின்றன. உண்மையில், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அத்தகைய செயல்பாடுகள் நோற்கப்பட்டால், இல்லறவாசிகள் எப்போதும் செழிப்பையும், முன்னேற்றத்தையும் அடைவதில் வெற்றி அடைகிறார்கள். தேவர்களுக்கு விளக்குகள், நறுமணப்புகைப்பொருட்களைக் கொடையளிப்பதும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும் அவ்விளைவுகளையே ஏற்படுத்தும்.(4,5)
உணவு சமைக்கப்படும்போது, அதன் முதல் பகுதியானது ஒரு பிராமணருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பலி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட காணிக்கைகள் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அத்தகைய கொடைகளால் நிறைவடைகின்றனர்.(6) அத்தகைய காணிக்கைகளால் தேவர்கள் எவ்வளவு நிறைவடைகிறார்களோ அதற்கு நூறு மடங்களவுக்குப் பெரிதாக அந்த இல்லறவாசியைப் பதிலுக்கு அவர்கள் நிறைவடையச் செய்வார்கள்.(7) பக்தியும் ஞானமும் கொண்ட மனிதர்கள் நறுமணப்புகைப் பொருட்களையும், விளக்குகளையும் கொடையளித்து நெடுஞ்சாண்கிடையாக வணங்கவும் செய்வார்கள். அத்தகைய செயல்கள் அவற்றைச் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தையும், செழிப்பையும் எப்போதும் கொண்டு வரும்.(8) தூய்மைச் சடங்குகளின் போது, நீரின் உதவியுடன் தேவர்களுக்குப் பணிந்து செய்யப்படும் சடங்குகள் யாவும் தேவர்களை நிறைவடையச் செய்யவே உதவுகின்றன.(9) முறையான சடங்குகளுடன் வழிபடப்படும்போது உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்களும், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும், வீட்டில் வசிக்கும் தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(10)
தேவர்களின் அரசுரிமையை அடைந்தபோது, இத்தகைய கருத்துகளால் நிறைந்திருந்த பெரும் மன்னன் நஹுஷன், பெரும் மகிமையால் நிறைந்த இந்தச் சடங்குகள் மற்றும் கடமைகள் அனைத்தையும் பின்பற்றினான்.(11) சில காலம் கழித்து நஹுஷனின் நற்பேறு தேய்வடைந்ததன் விளைவாக அவன் இந்த நோன்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, நான் ஏற்கனவே சொன்னவாறு கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறிச் செயல்படத் தொடங்கினான்.(12) நறுமணப் புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் காணிக்களிப்பதில் உள்ள விதிகளை நோற்காமல் தவிர்த்ததன் விளைவாகத் தேவர்களின் தலைவனான அவனிடம் சக்தி குன்றத்தொடங்கியது.(13) அவனுடைய வேள்விச் சடங்குகளும், கொடைகளும் ராட்சசர்களால் தடுக்கப்பட்டன. இந்தக் காலத்தில்தான் அவன் முனிவர்களில் முதன்மையானவரான அகஸ்தியரைத் தன்தேரில் பூட்டினான்.(14) பெரும்பலம் கொண்ட நஹுஷன், சிரித்துக்கொண்டே, சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்து (தான் குறிப்பிட்ட இடத்திற்கு) வாகனத்தைச் சுமக்க அந்தப் பெருமுனிவருக்கு ஆணையிட்டு, அவரை அந்தப் பணியில் நிறுவினான்.
அந்நேரத்தில, பெருஞ்சக்தி கொண்ட பிருகு, மித்ராவருணனின் மகனிடம் {அகஸ்தியரிடம்),(15) "நான் உமது தலையில் உள்ள சடாமுடிக்குள் நுழைவது வரை நீர் உமது கண்களை மூடிக் கொள்வீராக" என்றார். மங்கா மகிமை கொண்டவரும், வலிமையும், சக்தியும் கொண்டவருமான பிருகு இதைச் சொல்லவிட்டு, சொர்க்கத்தின் அரியணையில் இருந்து நஹுஷனை வீசி எறிவதற்காக, மரக்கட்டையைப் போல அசையாமல் நின்றிருந்த அகஸ்தியரின் சடாமுடிக்குள் நுழைந்தார். விரைவில் நஹுஷன், தன் வாகனத்தைச் சுமக்க வரும் அகஸ்தியரைக் கண்டான்.(16,17)
தேவர்களின் தலைவனான அவனைக் கண்ட அகஸ்தியர், அவனிடம், "தாமதமில்லாமல் என்னை உன் வாகனத்தில் பூட்டுவாயாக. நான் உன்னை எந்த இடத்திற்குச் சுமந்து செல்ல வேண்டும்.(18) ஓ! தேவர்களின் தலைவா, நீ செல்ல விரும்பும் இடத்திற்கு நான் உன்னைச் சுமந்து செல்வேன்" என்றார். இவ்வாறு அவரால் சொல்லப்பட்ட நஹுஷன் அந்தத் தவசியைத் தன் வாகனத்தில் பூட்டினான்.(19) அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு, நஹுஷனின் இச்செயலால் பெரும் நிறைவடைந்தார். அவர் நஹுனனின் மீது தம் கண்களைச் செலுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்தினார்.(20) பிரம்மனிடம் இருந்து சிறப்புமிக்க நஹுஷன் பெற்றிருக்கும் வரத்தின் சக்தியை முழுமையாக அறிந்தவரான பிருகு இவ்வழியில் செயல்பட்டார். அகஸ்தியரும் நஹுஷனால் இவ்வாறு நடத்தப்பட்டாலும் கோபவசப்படாமல் இருந்தார்.(21) ஓ! பாரதா, அப்போது மன்னன் நஹுஷன் தன் அங்குசத்தைக் கொண்டு அகஸ்தியரைத் தூண்டினான். அந்த உயர் ஆன்ம முனிவர் அப்போதும் கோபவசப்படாமல் இருந்தார். தேவர்களின் தலைவன் கோபமடைந்தவனாகத் தன் இடதுகாலால் அகஸ்தியரின் தலையைத் தாக்கினான்.
அம்முனிவர் இவ்வாறு தலையில் தாக்கப்பட்ட போது, அகஸ்தியரின் சடாமுடிக்குள் இருந்த பிருகு,(22,23) சினத்தால் தூண்டப்பட்டவராக, பாவம் நிறைந்த ஆன்மாவான நஹுஷனைச் சபிக்கும் வகையில், "இந்தப் பெரும் முனிவரின் தலையை உன் காலால் நீ தாக்கியதால்,(24) ஓ! தீய புத்தி கொண்ட அற்பனே, பாம்பாக மாறி பூமியில் விழுவாயாக" என்றார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு காணப்படாதவராக இருந்த பிருகுவால் சபிக்கப்பட்ட நஹுஷன் உடனடியாகப் பாம்பாக மாறி பூமியில் விழுந்தான். ஓ! ஏகாதிபதி, நஹுஷன் பிருகுவைக் கண்டிருந்தால், அவரால் தன் சக்தியைக் கொண்டு அவனைப் பூமியில் வீழ்த்துவதில் வெற்றியடைந்திருக்க முடியாது. நஹுஷன் அளித்திருந்த பல்வேறு கொடைகள், அவன் செய்திருந்த தவங்கள் மற்றும் அற நோன்புகளின் விளைவாக,(25-27) ஓ! மன்னா, அவன் பூமியில் வீசப்பட்டால் தன் நினைவை இழக்காமல் இருப்பதில் வென்றான். அப்போது அவன் சாபத்தில் இருந்து வெளியே வரும் நோக்கில் பிருகுவை அமைதிப்படுத்தினான்.(28) கருணையில் நிறைந்த அகஸ்தியரும் சாபத்தை முடிவுக்குக் கொண்டுவர பிருகுவை அமைதிப்படுத்துவதில் நஹுஷனுடன் சேர்ந்து கொண்டார். இறுதியாக நஹுஷனிடம் கருணை கொண்ட பிருகு, அந்தச் சாபத்தில் இருந்து வெளியே வரும் வழியைச் சொன்னார்.(29)
பிருகு {நஹூஷனிடம்}, " குரு குலத்தின் முதன்மையானவனாக யுதிஷ்டிரன் என்ற பெயரில் (பூமியில்) ஒரு மன்னன் தோன்றுவான். அவனே உன்னை இந்தச் சாபத்தில் இருந்து விடுவிப்பான்" என்றார். இதைச் சொன்ன அம்முனிவர் நஹுஷனின் பார்வையில் இருந்து மறைந்தார்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட அகஸ்தியரும், நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனின் காரியத்தில் இவ்வாறு ஈடுபட்டு, மறுபிறப்பாள வகையினர் அனைவராலும் வழிபடப்பட்டுத் தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(31)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயே பிருகுவின் சாபத்தில் இருந்து நஹுஷனை மீட்டாய். உண்மையில் உன்னால் விடுவிக்கப்பட்ட அவன் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரம்மலோகத்திற்கு உயர்ந்தான்.(32) நஹுஷனை பூமியில் வீசியெறிந்த பிருகு பிரம்மலோகத்திற்குச் சென்று பெரும்பாட்டனிடம் அதைச் சொன்னார்.(33)
இந்திரனைத் திரும்ப அழைத்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தேவர்களிடம், "தேவர்களே, நான் கொடுத்த வரத்தின் மூலம் நஹுஷன் சொர்க்கத்தின் அரசுரிமையை அடைந்தான்.(34) எனினும், சினம் கொண்ட அகஸ்தியரால் அரசுரிமையை இழந்த அவன் பூமியில் வீசப்பட்டான். தேவர்களே, ஒரு தலைவன் இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாது.(35) எனவே, நீங்கள் மீண்டும் இந்திரனையே சொர்க்கத்தின் அரசுரிமையில் நிறுவுவீராக" என்றான்.
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மகிழ்ச்சியால் நிறைந்த தேவர்கள் தங்களிடம் இவ்வாறு சொன்ன பெரும்பாட்டனிடம் மறுமொழியாக "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னார்கள். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தெய்வீகப் பிரம்மனும் சொர்க்கத்தின் அரசுரிமையில் இந்திரனை நிறுவினான். மீண்டும் தேவர்களின் தலைவனான வாசவன், அழகிலும், பிரகாசத்திலும் ஒளிரத்தொடங்கினான். பழங்காலத்தில் நஹுஷனின் வரம்புமீறலால் நேர்ந்தது இதுவே.(36-38) எனினும், நான் குறிப்பிட்ட வகையிலான செயல்களின் மூலம் அடைந்த பலன்களால் இழந்த தன் நிலையை மீண்டும் அடைவதில் நஹுஷன் வென்றான். எனவே, மாலை வந்ததும், இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள் ஒளிக்கொடையளிக்க வேண்டும்.(39) ஒளியைக் கொடையளிப்பவன் நிச்சயம் மரணத்திற்குப் பிறகு தெய்வீகப் பார்வையை அடைவான். உண்மையில், ஒளியைக் கொடையளிப்பவர்கள் முழு நிலவைப் போலப் பிரகாசமடைவார்கள்.(40) ஒளிக்கொடையளிப்பவர்கள், எத்தனை இமைப்பொழுதுகள் அவ்விளக்குகள் எரியுமோ அவ்வளவு வருடங்கள் வடிவு அழகுடன் கூடியவர்களாக, பலம் கொண்டவர்களாக இருப்பார்கள்" என்றார் {பீஷ்மர்}.(41)
அநுசாஸனபர்வம் பகுதி – 100ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |