Brighu and Agastya! | Anusasana-Parva-Section-99 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 83)
பதிவின் சுருக்கம் : மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் கிட்டும் பலன் குறித்த நஹுஷன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; பிருகு முனிவருக்கும் அகஸ்தியருக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவரே, மலர்கள், நறுமணப்புகைப்பொருட்கள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பவர்களால் வெல்லப்படும் பலன்களை நான் கேட்டேன். பலி அளிப்பதில் விதிகளை முறையாகப் பின்பற்றுவதில் உள்ள பலன்களைக் குறித்தும் நான் கேட்டேன். ஓ! பாட்டா, இது குறித்து மீண்டும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(1) உண்மையில், ஓ! ஐயா, நறுமணப்புகைப்பொருட்கள் மற்றும் விளக்குகளைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை மீண்டும் எனக்குச் சொல்வீராக. இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்த ஆசிரமத்தை} நோற்கும் மனிதர்களால் பலிகள் தரையில் இடப்படுவதேன்?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக நஹுஷன் {நகுஷன்}, அகஸ்தியர் மற்றும் பிருகு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) ஓ! ஏகாதிபதி, தவங்களையே செல்வமாகக் கொண்ட அரச முனி நஹுஷன், தன் நற்செயல்களின் மூலம் சொர்க்கத்தின் ஆட்சி உரிமையை அடைந்தான்.(4) ஓ! மன்னா, புலனடக்கத்துடன் சொர்க்கத்தில் வசித்த அவன், மனித மற்றும் தேவ இயல்பைக் கொண்ட பல்வேறு செயல்களைச் செய்வதில் ஈடுபட்டு வந்தான்.(5) ஓ! மனிதர்களின் தலைவா, அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியிடமிருந்தே பல்வேறு வகை மனிதச் செயல்களும் {கர்மங்களும்}, பல்வேறு வகைத் தெய்வீகச் செயல்களும் தோன்றின.(6) ஓ! ஏகாதிபதி, வேள்வி நெருப்பு, புனித விறகு, குசப்புல் {தர்ப்பை}, மலர்கள் ஆகியவற்றைத் திரட்டுவது, (மாவாக்கப்பட்ட) நெற்பொரியால் அலங்கரிக்கப்பட்ட உணவைக் கொண்ட பலி அளிப்பு, நறுமணப்புகைப்பொருள் மற்றும் விளக்குகளைக் காணிக்கையளிப்பது போன்ற அனைத்துக்கும் தொடர்புடைய பல்வேறு சடங்குகள், அந்த உயர் ஆன்ம மன்னன் சொர்க்கத்தில் வசித்தபோது நாள்தோறும் உண்டானவையே ஆகும். உண்மையில், அவன் சொர்க்கத்தில் வசித்திருந்தாலும், யப {ஜப} வேள்வியையும் (அமைதியாக மந்திரங்களை ஓதுவதையும்), தியான வேள்வியையும் செய்து வந்தான்.(7,8)
ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, நஹஷன் {நகுஷன்}, தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும், பழங்காலத்தில் தான் செய்து வந்ததைப் போலவே உரிய சடங்குகள் மற்றும் விழாக்களுடன் தேவர்கள் அனைவரையும் அவன் வழிபட்டு வந்தான்.(9) சில காலம் கழிந்த பிறகுதான் நஹுஷன் தான் தேவர்களின் அனைவரின் தலைவன் என்ற நிலையை உணர்ந்தான். இதனால் அவன் செருக்கில் நிறைந்தான். அந்தக் காலம் முதல் (இங்குச் சொன்ன வகையிலான) அவனுடைய செயல்கள் {கர்மங்கள்} அனைத்தும் நின்று போயின.(10) தேவர்கள் அனைவரிடம் இருந்தும் தான் பேற்ற வரத்தின் விளைவால் ஆணவத்தில் நிறைந்திருந்த நஹுஷன், முனிவர்களையே தங்கள் தோள்களில் அவனைச் சுமக்கச் செய்தான். எனினும் அறச்சடங்குகள் அனைத்தையும் அவன் கைவிட்டதன் விளைவால் அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களில் முதன்மையானோரைத் தன் வாகனங்களைச் சுமக்கச் செய்வதைத் தொடரும் அளவுக்கு நஹுஷன் மிக நீண்ட காலம் செருக்கால் நிறைந்திருந்தான்.(12) அவன் முனிவர்களை அவமதிக்கும் வகையில் இந்த வேலைகளை அவர்களைச் செய்ய வைத்தான். ஓ! பாரதா, ஒரு நாள் அகஸ்தியர் அவனுடைய {நகுஷனுடைய} வாகனத்தைச் சுமக்கும் நாள் வந்தது.(13)
அந்தக் காலத்தில், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான பிருகு, ஆசிரமத்தில் அமர்ந்திருந்த அகஸ்தியரின் முன்பு சென்று அவரிடம்,(14) "ஓ! பெருந்தவசியே, தேவர்களின் தலைவனாகியிருக்கும் இந்தத் தீய ஆன்மா கொண்ட நஹுஷனால் நம்மீது இழைக்கப்படும் இத்தகைய கண்ணியமின்மைகளுக்கு நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்" என்று கேட்டார்.(15)
அகஸ்தியர் {முனிவர் பிருகுவிடம்}, "ஓ! பெரும் முனிவரே, நஹுஷனை சபிப்பதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? வரங்களை அளிப்பவரே {பிரம்மரே}, நஹுஷனுக்குச் சிறந்த வரங்களை எவ்வாறு கொடுத்தார் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.(16) சொர்க்கத்திற்கு வந்த நஹுஷனால் வேண்டப்பட்ட வரம், தன் பார்வையில் பட்ட அனைத்தும் அதன் சக்தியனைத்தையும் இழந்து தன் ஆளுகைக்குள் வர வேண்டும் என்பதாகும்.(17) சுயம்புவான பிரம்மன் இவ்வரத்தையே அவனுக்கு அளித்திருக்கிறார். இந்தக் காரணத்தினாலேயே உம்மாலோ, என்னாலோ அவனை எரிக்க இயலவில்லை. முனிவர்களில் முதன்மையான வேறு யாராலும் அவனை எரிக்கவோ, அவனது உயர்ந்த நிலையில் இருந்து தள்ள இயலாததும் இந்தக் காரணத்தினாலேயே ஆகும்.(18) ஓ! தலைவரே, முன்பொரு சமயம் நஹுஷன் குடிப்பதற்காகப் பிரம்மனால் அமுதம் கொடுக்கப்பட்டது. இந்தக் காரணத்தினாலும் நாம் அவன் எதிரில் பலமற்றவர்களாகிறோம்.(19) அந்தப் பரமதேவன், உயிரினங்கள் அனைத்தையும் துயரத்திற்குள் மூழ்கடிக்கவே நஹுஷனுக்கு அவ்வரத்தை அளித்ததாகத்தெரிகிறது. மனிதர்களில் இழிந்தவனான அவன் பிராமணர்களிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறான்.(20) ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இந்நிலையைக் கருத்தில் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்குச் சொல்வீராக. உமது அறிவுரைப்படியே நான் செயல்படுவேன் என்பதில் ஐயமில்லை" என்றார்{அகஸ்தியர்}.(21)
பிருகு {அகஸ்தியரிடம்}, "பெரும் சக்தி கொண்டவனும், ஆனால் விதியால் மயக்கப்பட்டிருப்பவனுமான நஹுஷனின் பலத்திற்கு எதிர்ச்செயல் செய்யும் நோக்கில் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலேயே நான் இங்கே வந்திருக்கிறேன்.(22) தேவர்களுக்குத் தலைவனாகியிருக்கும் தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன் இன்று உம்மையே அவனுடைய தேரில் பூட்டப் போகிறான். அவன் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்ததன் விளைவாலும், என் சக்தியின் துணையுடனும் அவன் இந்திரனின் நிலையில் இருந்து என்னால் வீசியெறியப்படப் போகிறான்.(23) நான் இன்று உம் பார்வையிலேயே தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான நஹுஷனை இந்திரனின் இருக்கையில் இருந்து வீசியெறிந்து, நூறு வேள்விகளைச் செய்தவனான உண்மையான இந்திரனை அதில் அமர்த்தப் போகிறேன்.(24) தேவர்களின் தலைவனாக இருக்கும் அந்த நேர்மையற்றவன், விதியால் பீடிக்கப்படிருக்கும் அவனது புத்தியின் விளைவால் அவனது வீழ்ச்சியைக் கொண்டு வரும்பொருட்டு ஓர் உதையின் மூலம் இன்று உம்மை அவமதிக்கப் போகிறான்.(25)
அத்தகைய அவமதிப்பால் சினமடையும் நான், பிராமணர்களின் எதிரியும், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த இழிந்தவனிடம், "நீ ஒரு பாம்பாவாயாக" என்று இன்று சபிக்கப் போகிறேன்.(26) ஓ! பெருந்தவசியே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ச்சீ ச்சீ என்று சொல்லப்படுவதன் விளைவால் சக்தி அனைத்தையும் இழந்திருக்கும் தீய ஆன்மாகக் கொண்ட நஹுஷனை நான் இந்து பூமிக்கு வீசப் போகிறேன்[1].(27) உண்மையில், தலைமைத்துவம் மற்றும் சக்தியால் மயங்கியிருப்பவனும், நியாயமற்ற செயல்களைச் செய்யும் அற்பனுமான நஹுஷனை நான் இன்று வீசியெறியப் போகிறேன். ஓ! தவசியே, உமக்கு ஏற்புடையதென்றால் நான் இதைச் செய்வேன்" என்றார் {பிருகு}.(28)
[1] "கிருத யுகத்தில் குற்றவாளியை ச்சீ என்று சொல்வது மட்டுமே தண்டனை என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறு பிருகுவால் சொல்லப்பட்டவரும், மித்ராவருணனின் மகனும், மங்கா மகிமையும் பலமும் கொண்ட அகஸ்தியர், உயர்ந்த நிறைவை அடைந்து அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டார்" என்றார் {பீஷ்மர்}.(29)
அநுசாஸனபர்வம் பகுதி – 99ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |