Kshatrabandhu and a Chandala! | Anusasana-Parva-Section-101 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 101)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் பொருளைக் கவர்வதனால் உண்டாகும் பாவத்தைக் குறித்து க்ஷத்ரபந்துவுக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மனிதர்களின் தலைவரே, பிராமணர்களுக்குச் சொந்தமான பொருட்களைக் களவாடவோ, அபகரிக்கவோ செய்யும் மூடர்களும், அற்பர்களும், பாவம் நிறைந்தவர்களுமான மானிடர்கள் எங்கே செல்கிறார்கள்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக ஒரு சண்டாளனுக்கும், ஓர் இழிந்த க்ஷத்திரியனுக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் குறிப்பிடப்படுகிறது[1].(2)
[1] "க்ஷத்ரபந்து என்பது தாழ்ந்த அல்லது இழிந்த க்ஷத்திரியனைக் குறிக்கும்" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணர்களின் பொருளைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வது பாவங்களுள் பெரும்பாவம். அந்தச் சண்டாளர்கள் வம்சத்துடன் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து போவர். இந்த விஷயமாக க்ஷத்ரபந்துவென்னும் அரசனுக்கும் ஒரு சண்டாளனுக்கும் நடந்த ஸம்பாஷணையாகிய புராதன சரித்திரத்தைக் கூறுகின்றனர்" என்றிருக்கிறது. இங்கே இழிந்த க்ஷத்திரியன் க்ஷத்ரபந்து என்றில்லாமல் மன்னான க்ஷத்ரபந்து என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளது போன்றே இருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "க்ஷத்ரபந்து என்பது ஓர் இழிந்த க்ஷத்திரியனைக் குறிக்கும் அவன் பிறப்பால் க்ஷத்திரியனாக இருந்தாலும், செயலால் அவ்வாறல்லாதவன்" என்றிருக்கிறது.
அரச வகையைச் சார்ந்த அம்மனிதன் {க்ஷத்ரபந்து}, "ஓ! சண்டாளா, நீ வயதில் முதிர்ந்தவனாகத் தெரிந்தாலும், நடத்தையில் சிறுவனாகவே தெரிகிறாய். நாய்கள் மற்றும் கழுதைகளால் எழுப்பப்பட்ட புழுதியால் உன் உடல் பூசப்பட்டிருந்தாலும், அப்புழுதியைக் கவனத்தில் கொள்ளாமல், உன் உடலில் விழுந்த நோய்தடுக்கும் பாலின் சிறு துளிகளைக் குறித்துக் கவலைப் படுகிறாய்.(3) சண்டாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இத்தகைய செயல்கள் அறவோரால் நிந்திக்கப்படுக்கின்றன என்பது வெளிப்படை. உண்மையில், உன் உடலில் இருந்து பால்துளிகளை நீ ஏன் கழுவ முயல்கிறாய்?" என்று கேட்டான்[2].(4)
[2] "உனது உடலின் அத்தகைய பாகங்களை நீ ஏன் குளத்தில் நனைக்கிறாய் என்பது நேரடி சொற்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கோதூளியினால் கெடுக்கப்பட்ட அங்கத்தை ஜலத்தினால் கழுவுகிறாய். ஏன்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கால்நடையால் எழுப்பட்ட தூசியை மட்டுமே நீ ஏன் குளத்தின் நீரால் கழுவிக் கொள்கிறாய்?" என்றிருக்கிறது.
சண்டாளன் {க்ஷத்ரபந்துவிடம்}, "ஓ! மன்னா, முன்பொரு காலத்தில் ஒரு பிராமணருடைய குறிப்பிட்ட பசுக்கள் களவாடப்பட்டன. அவ்வாறு அவை அபகரிக்கப்படும் போது, அவற்றின் மடியில் இருந்து சிந்திய பால் சாலையோரத்தில் வளர்ந்த சில சோமக் கொடிகளில் விழுந்தது. பால்படிந்த அந்தச் செடிகளின் சாற்றைக் குடித்த பிராமணர்களும்,(5) அந்தச் சோமம் பருகப்பட்ட வேள்வியைச் செய்த மன்னனும் நரகில் மூழ்கினார்கள். உண்மையில், ஒரு பிராமணனுக்கு உரிய ஏதோவொன்றை அபகரித்தால் மன்னனும், அவனுக்குத் துணைபுரிந்த பிராமணர்கள் அனைவரும் நரகிற்குச் செல்ல வேண்டும்.(6) பிராமணனின் பசுக்களைக் களவு செய்த அரண்மனையில் உள்ள பால், நெய், தயிர் ஆகியவற்றைப் பருகிய மனிதர்க்ள அனைவரும், நரகத்தில் வீழ்வார்கள்.(7) களவு செய்யப்பட்ட பசுக்களும், தாங்கள் பெருங்கவனத்துடன் கவனிக்கப்பட்டாலும் தங்கள் உடல்களை அசைத்து, தங்களைக் களவு செய்தோரின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளையும், மன்னன் மற்றும் ராணியையும் தங்கள் பாலால் கொன்றுவிடுகின்றன.(8) ஓ! மன்னா, என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்வாறு களவு செய்யப்பட்ட பசுக்களை வைத்திருந்த இடத்தில் பிரம்மச்சரிய நோன்பை நோன்று வாழ்ந்து வந்தேன். நான் இரந்து பெற்ற உணவில் அந்தப் பசுக்களின் பால் தெளிக்கப்பட்டது.(9) ஓ! அரச வகையைச் சார்ந்தவனே, அந்த உணவை உண்டதால் நான் இப்பிறவியில் சண்டாளனானேன். ஒரு பிராமணனின் பசுக்களைக் களவு செய்த மன்னனும் புகழ்க்கேட்டுக்குரிய கதியையே அடைந்தான்.(10)
எனவே, எவனும் பிராமணனுக்குச் சொந்தமான எதையும் களவிடவோ, அபகரிக்கவோ கூடாது. ஒரு பிராமணனுக்குச் சொந்தமான பால் தெளிக்கப்பட்ட உணவை உண்டதன் விளைவால் நான் என்ன நிலையை அடைந்திருக்கிறேன் என்பதைக் காண்பாயாக.(11) இதன் காரணமாகவே ஞானம் கொண்ட மனிதனால் சோமக் கொடிகள் {சோமலதை} விற்கப்படக்கூடாது. சோமச்செடியை {சோமலதை} விற்பவனை ஞானிகள் நிந்திக்கிறார்கள்.(12) உண்மையில், ஓ! மகனே, சோமத்தை விற்பனை செய்பவன், வாங்குபவன் ஆகிய இருவரும் இவ்வுலகத்தில் இருந்து அகன்று யமலோகம் செல்லும்போது, ரௌரவன் என்றழைக்கப்படும் நரகில் மூழ்குகிறார்கள்.(13) வேதஞானம் கொண்ட மனிதன், சோமத்தை முறையாக விற்றால் தன் அடுத்தப் பிறவியில் வட்டிக்கு விடுபவனாகப் பிறந்து விரைவில் அழிவைச் சந்திக்கிறான்.(14) முன்னூறு முறை நரகில் மூழ்கும் அவன், மனிதக் கழிவை உண்டு வாழும் ஒரு விலங்காகிறான். தாழ்ந்த, இழிந்த மனிதருக்குத் தொண்டாற்றுபவன், செருக்குடையவன், நண்பனின் மனைவியைக் கற்பழிப்பவன் ஆகியோர்(15) ஒரே தராசில் எதிரெதிராக எடை பார்க்கப்பட்டால், அது கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்த செருக்கே கனமானதாக இருப்பதைக் காட்டும். பாவம் நிறைந்ததும், ஏற்பில்லாத நிறமும் கொண்டதும், மெலிந்திருப்பதுமான இந்த நாயைப் பார்ப்பாயாக.(16) (இது முந்தைய வாழ்வில் மனிதனாக இருந்தது). செருக்கின் மூலமே உயிரினங்கள் இத்தகைய பரிதாபகரமான கதியை அடைகின்றன. என்னைப் பொறுத்தவரையில், எனது முற்பிறவி ஒன்றில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து,(17) அறிவின் அனைத்துக் கிளைகளிலும், அறிவியல்கள் அனைத்திலும் தேர்ச்சியடைந்தவனாக இருந்தேன். இக்குற்றங்களின் ஆழத்தை அறிந்தவனாக இருந்தாலும், செருக்கின் வசப்பட்ட நான்,(18) குருட்டுத் தன்மையை அடைந்து, விலங்குகளின் முதுகெலும்பைப் பற்றியிருக்கும் இறைச்சியை உண்டேன். அத்தகைய நடத்தை மற்றும் அத்தகைய உணவின் விளைவால்,(19) நான் இந்நிலையை அடைந்தேன். காலம் கொண்டு வரும் நேர்மாறு நிலைகளைக் காண்பாயாக. ஆடையின் ஒரு முனையில் நெருப்புப் பற்றப்பட்ட மனிதனைப் போலவோ, வண்டுகளால் தொடரப்படுபவனைப் போலவோ,(20) புழுதி பூசப்பட்டு அச்சத்தால் நான் ஓடுவதைப் பார்.
இல்லற வாழ்வுமுறையை நோற்பவர்கள், வேத கல்வியின் மூலமும், ஞானிகளால் அறிவிக்கப்பட்ட பிற வகைக் கொடைகளின் மூலமும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுகிறார்கள். ஓ! அரச வகையைச் சார்ந்தவனே {க்ஷத்ரபந்துவே}, பாவம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு பிராமணன், அனைத்து வகைப் பற்றுகளையும் துறந்து, காட்டு வாழ்வுமுறையை {வானப்பிரஸ்த ஆசிரமத்தைப்} பின்பற்றினால் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் மீட்கப்படுவான். ஓ க்ஷத்திரியர்களின் தலைவா, நான் இப்பிறவியில் பாவம் நிறைந்த வகையில் பிறந்திருக்கிறேன்.(21-23) அனைத்துப் பாவங்களில் இருந்தும் என்னைத் தூய்மையாக்கிக் கொள்வதில் எவ்வாறு வெல்லப்போகிறேன் என்பதை நான் தெளிவாகக் காணத் தவறுகிறேன். முற்பிறவியில் செய்த ஏதோவொரு தகுதிமிக்கச் செயலின் விளைவால், முற்பிறவிகளின் நினைவை நான் இழக்காமல் இருக்கிறேன்.(24) ஓ! மன்னா, உன் கருணைக்கே நான் என்னை விடுகிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். என் ஐயத்தை நீ தீர்ப்பாயாக. எந்த மங்கல ஒழுக்க வழிமுறையின் மூலம் நான் என் விடுதலையை {முக்தியை} அடைய விரும்ப வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, எந்த வழிமுறைகளின் மூலம் நான் சண்டாளன் என்ற என் நிலையைக் கைவிடுவதில் வெல்வேன்?" என்று கேட்டான்.(25)
அதற்கு அந்த அரச வகையினன், "ஓ! சண்டாளா, நீ விடுதலையை {முக்தியை} அடையக்கூடிய வழிமுறையை அறிவாயாக. ஒரு பிராமணனுக்காக உன் உயிர்மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விரும்பத்தக்க கதியை அடையலாம்.(26) ஒரு பிராமணனின் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் ஆகுதியாக, விலங்குகள் மற்றும் பறவைகளின் இரையாக உன் உடலை வீசுவதன் மூலம், உண்மையில் இவ்வாறு உயிர் மூச்சைக் கைவிடுவதன் மூலம் நீ விடுதலையை {முக்தியை} அடையலாம். வேறு எந்த வழிமுறையின் மூலமும் உன்னால் அதை அடைவதில் வெல்லமுடியாது" என்றான்".(27)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பகைவர்களைச் சுடுபவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சண்டாளன், ஒரு பிராமணனின் செல்வத்தைக் காக்கும் நிமித்தமாகப் போரெனும் நெருப்பில் தன் உயிர் மூச்சை ஆகுதியாக ஊற்றியதன் விளைவாக மிக விரும்பத்தக்க கதியை அடைந்தான்.(28) எனவே, ஓ! மகனே, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ நித்திய இன்பத்தையே கதியா அடைய விரும்பினால் பிராமணர்களின் உடைமைகளை நீ எப்போதும் பாதுகாக்க வேண்டும்" {என்றார் பீஷ்மர்}.(29)
அநுசாஸனபர்வம் பகுதி – 101ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |