Regions of Felicity! | Anusasana-Parva-Section-102 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 102)
பதிவின் சுருக்கம் : புண்ணிய உலகங்கள் அனைத்தையும் குறித்து கௌதமருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, அறவோர் அனைவரும் மரணத்திற்குப் பிறகு ஒரே உலகத்தையே அடைவதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதரே, அவர்களுக்கிடையிலான நிலையில் உண்மையில் வேறு இருக்கிறதா?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, "ஓ! பிருதையின் மகனே, பல்வேறு செயல்களின் மூலம் மனிதர்கள் பல்வேறு உலகங்களை அடைகின்றனர். அறவொழுக்கம் கொண்டவர்கள் இன்பலோகங்களை அடைகின்றனர், அதே வேளையில் பாவம் நிறைந்தவர்கள், துன்பம் நிறைந்த உலகங்களை அடைகின்றனர்.(2) ஓ! மகனே, இதுதொடர்பாகத் தவசியான கௌதமருக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(3) கௌதமர் என்ற பெயரையுடையவரும், மென்மையானவனும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவரும், புலன்கள் அனைத்தையும் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவருமான குறிப்பிட்ட பிராமணர், தாயை இழந்து உற்சாகமற்ற நிலையில் இருந்த ஒரு யானைக்குட்டியைக் கண்டார்.(4) கருணை நிறைந்தவரும், நோன்புகள் நோற்பதில் உறுதியானவருமான அந்தத் தவசி அந்த யானைக் குட்டியை வளர்த்தார். நீண்ட காலம் கழித்து அந்தச் சிறு விலங்கு பெரிய, வலிமைமிக்க யானையாக வளர்ந்தது.(5)
ஒருநாள், இந்திரன், மன்னன் திருதராஷ்டிரனின் வடிவை ஏற்றுக் கொண்டு, மலையைப் போன்று பெரிதாக இருந்ததும், மதநீர் பெருகி வழிந்ததுமான அந்த வலிமைமிக்க யானையை அபகரித்தான்.(6) இழுத்துச் செல்லப்படும் யானைக் கண்டவரும், கடும் நோன்புகள் நோற்பவருமான பெரும்பதவசி கௌதமர், மன்னன் திருதராஷ்டிரனிடம்,(7) "ஓ! நன்றிகெட்ட திருதராஷ்டிரா, என் யானைக் களவாடாதே. பெரும் துன்பத்துடன் நான் அஃதை என் மகனைப் போலவே வளர்த்து வந்தேன். அறவோருக்கிடையில் ஏழு சொற்கள் பரிமாறப்படுவதிலேயே நட்பு உதிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, ஒரு நண்பனுக்குத் தீங்கிழைக்கும் பாவம் உன்னை அண்டாது பார்த்துக் கொள்வாயாக.(8) ஓ! மன்னா, எனக்காக விறகும், நீரும் கொண்டு வருவதும், நான் வெளியே சென்றிருக்கும்போது ஆசிரமத்தைப் பாதுகாப்பதும், கற்றுக் கொடுப்பவருக்குக் கீழ்ப்படிவதும், அடக்கமானதும், ஆசானின் ஆணைகளைச் செய்வதில் கவனமுள்ளதும், மென்மையானதும், நன்கு பயிற்சி பெற்றதும், நன்றிநிறைந்ததும், எனக்கு மிகவும் அன்பானதுமான இந்த யானையைக் கொண்டு போகாதே. என்னுடைய எதிர்ப்பையும், கதறல்களையும் அலட்சியம் செய்து அதைக் கொண்டுபோகாதே" என்றார்.(9,10)
திருதராஷ்டிரன் {கௌதமரிடம்}, "நான் உமக்கு ஓராயிரம் பசுக்களையும், நூறு பணிப்பெண்களையும், ஐநூறு தங்க நாணயங்களையும் தருகிறேன். மேலும், ஓ! பெரும் முனிவரே, பல்வேறு வகைச் செல்வங்களையும் உமக்குத் தருகிறேன். யானைகளைக் கொண்டு பிராமணர்களுக்கு என்ன பயன் ஏற்படப்போகிறது?" என்று கேட்டான்.(11)
கௌதமர் {திருதராஷ்டிரனான இந்திரனிடம்}, "ஓ! மன்னா, உன் பசுக்கள், பணிப்பெண்கள், தங்கநாணயங்கள், பல்வேறு ரத்தினங்கள் மற்றும் பல்வேறு வகைச் செல்வங்களையும் நீயே வைத்துக் கொள்வாயாக. ஓ! ஏகாதிபதி, செல்வத்தைக் கொண்டு பிராமணர்களுக்கு ஆவதென்ன?" என்று கேட்டார்.(12)
திருதராஷ்டிரன், "யானைகளைக் கொண்டு பிராமணர்களுக்குப் பயனேதுமில்லை. ஓ! கல்விமானான பிராமணரே உண்மையில் யானைகள் அரச வகையினருக்கானவையே. யானைகளில் முதன்மையான இந்த விலங்கை என் வாகனப் பயன்பாட்டுக்காகக் கொண்டு செல்வதால் நான் எந்தப் பாவத்தையும் இழைத்ததாகக் கருதமுடியாது. ஓ! கௌதமரே, நீர் இவ்வாறு என்னைத் தடுக்காதீர்" என்றான்.(13)
கௌதமர், "ஓ! சிறப்புமிக்க மன்னா, அறவோர் இன்பமாகவும், பாவிகள் துன்பத்துடனும் வாழும் யமலோகத்திற்குச் சென்றாவது நான் என் யானையை உன்னிடம் இருந்து பெறுவேன்" என்றார்.(14)
திருதராஷ்டிரன், "(அறச்) செயலேதும் செய்யாதவர்கள், நம்பிக்கையற்றவர்கள், நாத்திகர்கள், பாவம் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்கள், எப்போதும் புலன்களை நிறைவடையச் செய்பவர்கள் ஆகியோர் மட்டுமே யமலோகம் சென்று துன்பத்தை அனுபவிப்பார்கள். திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான், உயர்ந்த உலகத்திற்கே செல்வான்" என்றான்.(15)
கௌதமர், "யமலோகத்தில் மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அங்கே பொய்யேதும் சொல்ல முடியாது. அவ்விடத்தில் உண்மை மட்டுமே நிலைத்திருக்கும். அங்கே வலியோரை பலவீனர் தண்டிக்கிறார்கள். அங்கே {ஸம்யமினி எனும் அந்த யமபட்டணத்திற்குச்} சென்று நான் உன்னிடம் இருந்து இந்த யானையைப் பலவந்தமாகப் பெறுவேன்" என்றார்.(16)
திருதராஷ்டிரன், "ஓ! பெருந்தவசியே செருக்கால் போதையுண்டிருக்கும் மனிதர்களும், தமக்கை, தந்தை, தாய் ஆகியோரிடம், பகைவரிடம் நடந்து கொள்வது போல நடப்பவர்களும்தான் அத்தகைய உலகத்திற்குச் செல்வார்கள். உண்மையில், நான் அங்கே செல்லப் போவதில்லை உயர்ந்த உலகத்திற்கே செல்வேன்" என்றான்.(17)
கௌதமர், "அனைத்து வகை இன்பங்களுக்கும், வசதிகளுக்கும் தகுந்த உயர்ந்த அருளைக் கொண்ட மனிதர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் மன்னன் வைஸ்வரணனுடைய {குபேரனுடைய} உலகத்தை அடைகிறார்கள். (அங்கே வசிப்பவர்களுக்குத் தங்கள் ஆடல் பாடல்களால் மகிழ்வூட்டிக் கொண்டு) கந்தர்வர்களும், யக்ஷர்களும், அப்சரஸ்களும் அங்கே வாழ்கிறார்கள். ஓ! மன்னா, அங்கேயும் சென்று என் யானையைத் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்" என்றார்.(18)
திருதராஷ்டிரன், "விருந்தினருக்கான விருந்தோம்பலை நோன்பாகக் கருதுவோரும், (வேறு நோக்கங்களைக் கொண்ட) நல்ல நோன்புகளை நோற்போரும், பிராமணர்களுக்கு உறைவிடமளிப்பவர்களும், தங்களைச் சார்ந்திருப்போர் அனைவருக்கும் பகிர்ந்தளித்தபிறகு எஞ்சியிருப்பதை உண்பவர்களும், குபேரனின் மந்தாகினி என்றழைக்கப்படும் உலகத்தை அலங்கரிப்பார்கள். (எனக்கு) ஓர் உயர்ந்த உலகம் ஒதுக்கப்பட்டிருப்பதால் நான் அங்கே செல்ல மாட்டேன்" என்றான்.(19)
கௌதமர், "கின்னரர்களின் இனிய குரலை எதிரொலிப்பதும், பரந்து விரிந்த கிளைகளைக் கொண்ட {ஸுதர்சனை என்றழைக்கப்படும்} அழகிய ஜம்பு {நாவல்} மரங்களால் அருளப்பட்டதும், மலர்கள் நிறைந்ததுமான மேருவின் {மேரு மலையில்} சிகரத்திலுள்ள இனிமைநிறைந்த காடுகளுக்கு நீ சென்றால், நான் அங்கேயும் வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன் " என்றார்.(20)
திருதராஷ்டிரன், "ஓ! பெரும் முனிவரே, மென்மையான இயல்புகளைக் கொண்டவர்களும், வாய்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், சாத்திரப் பெருங்கல்வி கற்றவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களும், வரலாறுகள் அனைத்துடன் கூடிய புராணங்களைப் படிப்பவர்களும், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும், பிராமணர்களுக்குத் தேனைக் கொடையளிப்பவர்களுமான பிராமணர்களே அத்தகை உலகங்களுக்குச் செல்வார்கள். நான் உயர்ந்த உலகத்திற்கே செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்ல மாட்டான். வேறு இன்பலோகம் எதையும் நீர் நன்கறிந்திருந்தால் அது குறித்து எனக்குச் சொல்வீராக, {இவ்வளவு வேகமாகச் செல்லும்} நான் அங்கேயும் செல்லலாம்" என்றான்.(21,22)
கௌதமர், "நாரதருக்குரியதும், அவரால் மிகவும் விரும்பப்படுவதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும், கின்னர இளவரசனின் மெல்லிசைப் பாடல்களின் எதிரொலியுடன் கூடியதும், கந்தர்வர்களுக்கும் அப்சரஸ்களுக்கும் நித்திய வசிப்பிடமாக இருப்பதுமான காட்டுக்கு நீ சென்றால், நான் அங்கேயும் உன்னைப் பின்தொடர்ந்து வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்குக் கட்டாயப்படுத்துவேன் " என்றார்.(23)
திருதராஷ்டிரன், "ஒருபோதும் பிச்சை கேட்காதவர்களும், இசையையும், நடனத்தையும் விளைவிப்பவர்களும், இன்பமாகத் திரிபவர்களுமாக இருப்பவர்கள் அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். ஓ! பெரும் முனிவரே, நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில், திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்" என்றான்.(24)
கௌதமர், "ஓ! மன்னா, எங்கே உத்தரக் குருக்கள் அழகுடன் சுடர்விட்ட படியே தேவர்களின் துணையுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்துகிறார்களோ, எங்கே நெருப்பில் பிறந்தவர்களும், நீரில் பிறந்தவர்களும், மலைகளில் பிறந்தவர்களும் மகிழ்ச்சியாக வசிக்கிறார்களோ,(25) எங்கே அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையைச் சக்ரன் பொழிகிறானோ, எங்கே பெண்கள் போக்குவரத்து மற்றும் ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தும் எவ்வகை விதிகளாலும் கட்டுப்படுத்தப்படாமல் முற்றான சுதந்தரத்துடன் வாழ்கிறார்களோ, எங்கே இரு பாலினத்தவர்களிடமும் பொறாமையுணர்வு இல்லையோ அங்கே நீ சென்றால், நான் அங்கேயும் வந்து இந்த யானையை என்னிடம் தருவதற்கு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்" என்றார்.(26)
திருதராஷ்டிரன், "ஓ! பெரும் முனிவரே, இன்பநுகர் பொருட்கள் அனைத்திலும் உள்ள ஆசைகளில் இருந்து விடுபட்டவர்களும், இறைச்சியைத் தவிர்த்தவர்களும், தண்டக்கோலை ஒருபோதும் எடுக்காதவர்களும் {தண்டிப்பதைக் கைவிட்டவர்களும்}, அசைவன மற்றும் அசையாதனவற்றுக்கும் ஒருபோதும் துன்பம் செய்யாதவர்களும், உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாவாகத் தம்மை நினைப்பவர்களும்,(27) ஓ! பெரும் முனிவரே, எவருக்கும் ஆசி கூறுவதன் மூலம் பிறரை ஒருபோதும் அழைக்காதவர்களும், ஆணவம் என்ற கருத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவர்களும், அனைத்து வகைப் பற்றுகளையும் கைவிட்டவர்களும், ஈட்டல் இழப்புகளையும், இகழ்ச்சி புகழ்ச்சிகளையும் இணையாக நினைப்பவர்களுமான மனிதர்களால் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்ல முடியும். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்" என்றான்.(28)
கௌதமர், "இவற்றுக்கு அடுத்ததாக, சிறந்த நறுமணங்களால் மணங்கமழ்பவையும், அனைத்து வகை ஆசைகள் மற்றும் கவலையிகளில் இருந்து விடுபட்டவையும், அழகியவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. அவை உயர்ஆன்ம மன்னன் சோமனின் வசிப்பிடங்களாக இருக்கின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் நான் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்" என்றார்.(29)
திருதராஷ்டிரன், "எக்கொடையும் பெறாமல் எப்போதும் கொடையளிப்பவர்களும், பிறரிடம் இருந்து எத்தொண்டையும் ஒருபோதும் ஏற்காதவர்களும், தகுந்த மனிதருக்குக் கொடுக்க முடியாத எந்தப் பொருளையும் கொள்ளாதவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்பவர்களும், அனைவருக்கும் கருணை காட்டுபவர்களும்,(30) மன்னிக்கும் இயல்புகளைக் கொண்டவர்களும், பிறரைக் குறித்துத் தீங்கு பேசாதவர்களும், கருணை காப்புறை வீசி அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பவர்களும், எப்போதும் நடத்தையில் அறம்சார்ந்தவர்களுமான மனிதர்களால் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்ல முடியும். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்" என்றான்.(31)
கௌதமர், "இவற்றுக்கு அடுத்ததாக, ஆசை, இருள் மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவையும், உயர் ஆன்ம சூரிய தேவனின் காலடியில் கிடப்பவையும், அழகில் சுடர்விடுபவையும், நித்திமானவையுமான வேறு உலகங்கள் இருக்கின்றன. நீங்க அங்கே சென்றால், அங்கேயும் நான் வந்து, இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்" என்றார்.(32)
திருதராஷ்டிரன், "ஓ! பெரும் முனிவரே, வேத கல்வியில் கவனமாக இருப்பவர்கள், ஆசான்களின் தொண்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், தவங்கள் மற்றும் சிறந்த நோன்புகளை நோற்பவர்கள், வாய்மையில் உறுதியானவர்கள், கீழ்ப்படியாமை, அல்லது ஆசான்களிடம் பகை என்ற மணம் கொண்ட எதையும் ஒருபோதும் சொல்லாதவர்கள், எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள், பெரியோர்கள் மற்றும் ஆசான்களுக்குத் தொண்டு செய்ய எப்போதும் ஆயத்தமாக இருப்பவர்கள், (மனத்திலும், உடலிலும்) தூய்மையாக இருப்பவர்கள், ஆன்மத் தூய்மை கொண்டவர்கள், வாக்கை அடக்கியவர்கள், வாய்மையில் உறுதியாக இருப்பவர்கள், வேதங்களை நன்கறிந்தவர்கள் ஆகியோர் அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்" என்றான்.(33,34)
கௌதமர், "அதற்குமடுத்து, அழகில் சுடர்விடுபவையும், சிறந்த நறுமணங்களால் மணங்கமழ்பவையும், ஆசையில் இருந்து விடுபட்டவையும், கவலைகள் ஏதும் அற்றவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. அவை உயர் ஆன்ம மன்னன் வருணனின் வசிப்பிடமாக இருக்கின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து, இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்" என்றார்.(35)
திருதராஷ்டிரன், "சாதுர்மாஸ்யம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்றுத் தேவர்களை வழிபடுபவர்களும், நூற்றுப்பத்து வேள்விகளைச் செய்பவர்களும், வேதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடைய வகையில் மூன்று வருடங்கள் நாள்தோறும் அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவர்களும்,(36) அனைத்துக் கடமைகளின் சுமையைவிட்டு விலகாமல் சுமப்பவர்களும், அறவோரால் நடக்கப்பட்ட பாதையில் உறுதியாக நடப்பவர்களும், அற ஆன்மா கொண்டோரால் பின்பற்றபட்ட ஒழுக்க நடைமுறைகளை உறுதியாகப் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் மட்டுமே அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்" என்றான்.(37)
கௌதமர், "அவற்றுக்கும் மேல், ஆசை மற்றும் கவலையில் இருந்து விடுபட்டவையும், அடைதற்கரியவையும், அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படுபவையுமான இந்திரனின் உலகங்கள் இருக்கின்றன. ஓ! மன்னா, வலிமையும், சக்தியும் கொண்ட இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாவது எனக்கு இந்த யானையைத் தருமாறு உன்னைக் கட்டையாப்படுத்துவேன்" என்றார்.(38)
திருதராஷ்டிரன், "நூறு வருடங்கள் வாழ்பவர்களும், வீரம் நிறைந்தவர்களும், வேதங்கற்றவர்களும், பக்தியுடன் வேள்விகளைச் செய்பவர்களுமான மனிதர்களே சக்ரனின் உலகத்திற்குச் செல்வார்கள். நான் இன்னும் உயர்ந்த உலகத்திற்குச் செல்வேன். உண்மையில், திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்" என்றான்.(39)
கௌதமர், "சொர்க்கங்களுக்கு மேலே, மேன்மையான இன்பத்தைக் கொண்டவையும், அனைத்து வகை மகிழ்ச்சியாலும் நிறைந்தவையும், கவலை இல்லாதவையுமான பிரஜாபதிகளின் உலகங்கள் இருக்கின்றன. எவரிடம் இருந்து படைப்பு உண்டானதோ அந்தப் பலமிக்கவர்களுக்குச் சொந்தமான அவை அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படுகின்றன. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னைக் கட்டாயப்படுத்துவேன்" என்றார்.(40)
திருதராஷ்டிரன், "ராஜசூய வேள்வியின் நிறைவில் நீராடியவர்களும், அற ஆன்மா கொண்டவர்களும், தங்கள் குடிமக்களை உரிய முறையில் பாதுகாத்தவர்களும், குதிரை வேள்வியின் நிறைவில் புனித நீரால் தங்கள் அங்கங்களைக் கழுவியவர்களுமான மன்னர்களே அத்தகைய உலகங்களுக்குச் செல்வார்கள். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்" என்றான்.(41)
கௌதமர், "அவற்றுக்கு அடுத்து, இனிய நறுமணங்களால் மணங்கமழ்பவையும், ஆசையிலிருந்து விடுபட்டவையும், கவலைகள் அனைத்தையும் கடந்தவையும், அழகில் சுடர்விடுபவையுமான நித்திய உலகங்கள் இருக்கின்றன. ஒடுக்குமுறைகளே ஒருபோதும் இல்லாதவையும், அடைவதற்கரியவையுமான அவை கோலோகங்களாகும் {கோ=பசு_க்களின் உலகம்}. நீ அங்கே சென்றால், அங்கேயும் வந்து இந்த யானையை எனக்குத் தருமாறு உன்னை நான் வற்புறுத்துவேன்" என்றார்.(42)
திருதராஷ்டிரன், "ஆயிரம் பசுக்களைக் கொண்டவனும், ஒவ்வொரு வருடமும் நூறு பசுக்களைக் கொடையளிப்பவனும், அல்லது நூறு பசுக்களைச் சொந்தமாகக் கொண்டு தன் சக்திக்குத் தக்கபடி வருடத்திற்குப் பத்துப் பசுக்களைக் கொடையளிப்பவனும், அல்லது பத்தோ, ஐந்தோ பசுக்களை மட்டுமே சொந்தமாகக்கொண்டு, அவற்றில் இருந்து ஒன்றைக் கொடையளிப்பவனும்,(43) நாள்தோறும் பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று முதிய வயதை அடைந்தவர்களும், வேத அறிவிப்புகளுக்குக் கீழ்ப்படிபவர்களும், மனோசக்தி கொண்டவர்களும், புனித நீர்நிலைகள் மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்பவர்களும் இன்பத்துடன் கோலோகத்தில் வசிக்கிறார்கள்.(44) பிரபாஸம், மானஸம் {மானஸஸரோவரம்}, புஷ்கரத் தடாகங்கள், மகாஸரஸ் என்றழைக்கப்படும் பெருந்தடாகம், நைமிசமெனும் புனிதக்காடுகள், பாஹுதை, கரதோயை,(45) கங்கை, கயசிரஸ், விபாசை, ஸ்தூலபாலுகை, கிருஷ்ணா, (பஞ்சாபின்) ஐந்து ஆறுகள், {தூஷ்ணீங்கங்கை, சனைர்க்கங்கை}, மஹாஹ்ரதம் என்றழைக்கப்படும் பெரிய தடாகம்,(46) கோமதி, கௌசிகி, சம்பை, ஸரஸ்வதி, திரஷத்வதி, யமுனை ஆகியவற்றுக்குச் செல்லும் சிறப்புமிக்கவர்களும், நோன்புகளை உறுதியாக நோற்பவர்களும், இந்தப் புனித நீர்நிலைகளுக்குப் பயணிப்பவர்களுமான பிராமணர்கள் நீர் சொன்ன உலகங்களுக்குச் செல்வார்கள். தெய்வீக உடல்களுடன் கூடியவர்களும், தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் எப்போதும் இனிய நறுமணங்களை வெளிப்படுத்தியபடியே இன்பத்திலும், மகிழ்ச்சியிலும் அவ்வுலகங்களுக்குச் செல்வார்கள். உண்மையில் திருதராஷ்டிரன் அங்கே செல்லமாட்டான்" என்றான்.(47,48)
கௌதமர், "அவற்றுக்கு அடுத்ததாக, குளிருக்கோ சிறிதும் அச்சமில்லாதவையும், வெப்பமோ, பசியோ, தாகமோ, துன்பமோ, கவலையோ, இன்பமோ இல்லாதவையும்,(49) ஏற்புடைய, ஏற்பில்லாத எவரும் இல்லாதவையும், நண்பனோ, பகைவனோ அற்றவையும், முதுமையோ, மரணமோ இல்லாதவையும், அறமோ, பாவமோ இல்லாதவையுமான உலகங்கள் இருக்கின்றன. ஆசையில் இருந்து விடுபட்டதும், ஒரே மாதிரியான மகிழ்ச்சி நிறைந்ததும், ஞானம் உள்ளதும், சத்வ குணம் கொண்டதுமான சுயம்புபிரம்மனின் புனித வசிப்பிடத்திற்கே சென்றாலும், இந்த யானையை எனக்குத் தருமாறு நான் உன்னை வலியுறுத்துவேன்" என்றார்.(50,51)
திருதாரஷ்டிரன், "பற்றுகளில் இருந்து விடுபட்டோரும், தூய ஆன்மாக்களைக் கொண்டோரும், முதன்மையான நோன்புகளை நோற்பதில் உறுதியானவர்களும், மன அமைதி சார்ந்த யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், (இப்பிறவியிலேயே) சொர்க்கத்தின் மகிழ்ச்சியை அடைந்தவர்களும், சத்வ குணம் கொண்டவர்களுமான மனிதர்கள் புனிதமான பிரம்மலோகத்தை அடைகிறார்கள். ஓ! பெருந்தவசியே, உம்மால் திருதராஷ்டிரனை அங்கே காண இயலாது" என்றான்.(52,53)
கௌதமர், "எங்கே முதன்மையான ரதந்தரங்கள் பாடப்படுகின்றவோ, எங்கே பௌண்டரீக வேள்விகளைச் செய்வதற்காகப் புனிதக் குசப் புற்கள் விரவிய பீடங்கள் இருக்கின்றனவோ, சோமம் பருகும் பிராமணர்கள் எங்கே சிறந்த வாகனங்களில் பயணிக்கிறார்களோ, அங்கே சென்றாலும், இந்த யானையைத் தருமாறு நான் உன்னை வற்புறுத்துவேன்.(54) அண்டத்திலுள்ள உலகங்கள் அனைத்தின் ஊடாக உலவும் நீ, நூறு வேள்விகளைச் செய்தவனும், விருத்திரனைக் கொன்றவனுமான தேவன் {இந்திரன்} என்று நினைக்கிறேன். நான் மனோபலவீனத்துடன் உன்னிடம் பேசிய சொற்களினால் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்" என்றார்.(55)
நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, "ஆம், நான் மகவத்தே {மகவானே}. நான் இந்த யானையைப் பிடிப்பதற்காக மனிதர்களின் உலகத்திற்கு வந்தேன். நான் உம்மை வணங்குகிறேன். எனக்கு ஆணையிடுவீராக. நீர், சொல்ல விரும்புபவை அனைத்தையும் நான் நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்" என்றான்.(56)
கௌதமர், "ஓ! தேவர்களின் தலைவா, வெண்ணிறம் கொண்டதும், பத்து வயதே கொண்ட குட்டியுமான இந்த யானையை எனக்குக் கொடுப்பாயாக. நான் இஃதை என் பிள்ளையாகவே வளர்த்தேன். இந்தக் காடுகளில் வசித்து என் கண் முன்னே வளர்ந்த இஃது என் அன்புக்குரிய தோழனாயிருக்கிறது. நீ பிடித்து இழுத்துச் செல்ல விரும்பும் என் பிள்ளையை விடுவிப்பாயாக" என்றார்.(57)
நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, "ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமது மகனாக இருக்கும் இந்த யானை, விருப்பத்துடன் உம்மைக் கண்டு உம்மிடம் வருகிறது. தன் துதிக்கையினால் உமது பாதத்தை நுகர்கிறது பார்ப்பீராக. உமக்கு என் வணக்கம். என் நன்மைக்கு வேண்டுவீராக" என்றான்.(58)
கௌதமர், "ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன் நன்மையையே நினைக்கிறேன். நான் எப்போதும் உன்னை வழிபடுகிறேன். ஓ! சக்ரா, நீயும் எனக்கு உன் அருளை வழங்குவாயாக. உன்னால் கொடுக்கப்படும் இந்த யானையை நான் ஏற்கிறேன்" என்றார்.(59)
நூறு வேள்விகளைச் செய்த தேவன், "உயர் ஆன்மாவைக் கொண்டவர்களும், வாய்மையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பவர்களும், தங்கள் இதயங்களில் வேதங்கள் நடப்பட்டவர்களுமான முதன்மையான முனிவர்கள் அனைவருக்கும் மத்தியில் உம்மால் மட்டுமே என்னை அடையாளம் காண முடிந்தது. இந்தக் காரணத்திற்காக நான் உம்மிடம் பெரும் நிறைவுடன் இருக்கிறேன்.(60) எனவே, ஓ! பிராமணரே, உமது மகனின் துணையுடன் நீர் விரைவில் என்னிடம் வருவீராக. பேரின்பம் கொண்ட பல்வேறு உலகங்களை எந்தத் தாமதமும் இல்லாமல் ஒரே நாளில் அடைவதற்கு நீர் தகுந்தவராவீர்" என்றான்".(61)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்தச் சொற்களைச் சொன்ன வஜ்ரதாரி {இந்திரன்}, கௌதமரையும், அவருடன் அவரது மகனான யானையையும் முன்னிட்டு அழைத்துக் கொண்டு தன்னுடன் அறவோராலும் அடைதற்கரிதான சொர்க்கத்திற்குச் சென்றான்.(62) இந்த வரலாற்றை ஒவ்வொரு நாளும் புலனடக்கத்துடன் கேட்பவன், அல்லது உரைப்பவன், (தன் மரணத்திற்குப் பிறகு) கௌதமரைப் போலவே பிரம்மலோகத்தை அடைவான்" {என்றார் பீஷ்மர்}.(63)
அநுசாஸனபர்வம் பகுதி – 102ல் உள்ள சுலோகங்கள் : 63
ஆங்கிலத்தில் | In English |