The glory of Fasting! | Anusasana-Parva-Section-103 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 103)
பதிவின் சுருக்கம் : உபவாஸத்தின் சிறப்பு மற்றும் பிராமண வாக்கின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்துப் பிரம்மனுக்கும் பகீரதனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பல்வேறு வகைக் கொடைகள், ஆன்ம அமைதி, வாய்மை, கருணை, ஒருவன் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவடைவது, கொடையின் பலன்கள் ஆகியவற்றைக் குறித்து நீர் எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, தவங்களைவிட யாருடைய பலமும் மேன்மையானதல்ல என்பதை நீர் அறிவீர். உயர்ந்த தவமாக அமைவது எது என்பதைக் குறித்து எங்களுக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் நோற்கும் தவ வகையானது அவன் அடையும் இன்பலோகத்திற்குத் தொடர்புடையதாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே, உணவைத் தவிர்ப்பதைவிட மேன்மையான தவம் வேறேதும் இல்லை என்றே நான் கொள்கிறேன்.(3) இது தொடர்பாகப் பகீரதனுக்கும், சிறப்புமிக்க (படைப்பின் பெரும்பாட்டனான) பிரம்மனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை சொல்லப்படுகிறது.(4) ஓ! பாரதா, பகீரதன், தேவலோகம், கோலோகம், முனிவர்களின் உலகம் {ரிஷிலோகம்} ஆகியவற்றையும் கடந்த உலகத்தை அடைந்ததாக நாம் கேள்விப்படுகிறோம்.(5)
ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட பெரும்பாட்டன் பிரம்மன், பகீரதனிடம், "ஓ! பகீரதா, அடைவதற்கரிதான இந்த லோகத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?(6) ஓ !பகீரதா, கடுந்தவங்களைப் பயிலாமல் தேவர்களோ, கந்தர்வர்களோ, மனிதர்களோ இங்கே வருவதில் வெல்வதில்லை. உண்மையில் இவ்வுலகத்தை நீ எவ்வாறு அடைந்தாய்?" என்று கேட்டான்.(7)
பகீரதன் {பிரம்மனிடம்}, "எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் பிராமணர்களுக்கு நான் நூறாயிரம் பொற்காசுகளைக் கொடையாக அளித்தேன். ஓ! கல்விமானே, அந்தக் கொடைகளின் பலனாக நான் இவ்வுலகை அடையவில்லை.(8) நான் ஏகராத்ரி வேள்வியைப் பத்துமுறையும், பஞ்சராத்ரி வேள்வியைப் பல முறையும் செய்திருக்கிறேன். ஏகாதசராத்ரி வேள்வியைப் பதினோரு முறை செய்திருக்கிறேன். ஜோதிஷ்டோமம் என்னால் நூறு முறை செய்யப்பட்டிருக்கிறது. எனினும், அவ்வேள்விகளின் பலன்களால் நான் இந்த இன்பலோகத்தை அடையவில்லை[1].(9) கடுந்தவங்களைப் பயின்றவாறு புனிதமான ஜானவியின் {கங்கையின்} அருகில் நூறு ஆண்டுக் காலம் தொடர்ந்து வாழ்ந்து வந்தேன். அங்கே ஆயிரம் ஆண்களையும் மற்றும் எண்ணற்ற பெண் அடிமைகளையும் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன்[2].(10) புஷ்கரத் தடாகத்தின் அருகில் நூறாயிரம் முறை நூறாயிரம் குதிரைகளையும், இருநூறாயிரம் பசுக்களையும் பிராமணர்களுக்குக் கொடையளித்திருக்கிறேன்.(11) பேரழகுடையவர்களும், தங்க நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஆயிரம் காரிகையரையும், பசும்பொன்னாலாய ஆபரணங்களுடன் கூடிய இன்னும் அறுபதாயிரம் பேரையும் நான் கொடையளித்திருக்கிறேன். எனினும், இந்தச் செயல்களின் பலன்களால் நான் இவ்வுலகத்தை அடைவதில் வெல்லவில்லை[3].(12)
[1] "ஏகராத்ரி, பஞ்சராத்ரி, ஏகாதசராத்ரி வேள்விகள் உண்ணாநோன்புகளைச் செய்வதையும், ஓரிரவு, ஐந்து இரவுகள், பதினோரு இரவுகள் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் கால அளவுக்குரிய கொடைகளையும் கொடுப்பதையும் கொண்டனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஏகராத்ரமென்னும் யாகங்கள் பத்தையும், பஞ்சராத்ரமென்னும் யாகங்கள் பத்தையும், ஏகாதசராத்ரயாகங்கள் பதினொன்றையும், ஜோதிஷ்டோமம் நூற்றையும் நான் செய்தேன். அவற்றிற்காகவும் நான் இங்கே வரவில்லை" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "நூறு வருஷகாலம் தவம் செய்து கொண்டு கங்கைக்கரையில் நித்தியமாக வாஸம் செய்தேன். அங்கே, ஆயிரம் கோவேறு கழுதைகளையும், கன்னிகைகளையும் தானம் செய்தேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கும்பகோணம் பதிப்பில் உள்ளவாறே இருக்கிறது. எனவே ஆண், பெண் அடிமைகள் என்ற குறிப்பு இவ்விரண்டு பதிப்புகளிலும் இல்லை. மூலத்தில், "யச சாவஸம்ʼ ஜாஹ்னவீதீர நித்ய꞉; ஶதம்ʼ ஸமாஸ தப்யமானஸ தபொ (அ)ஹம அதா³ம்ʼ ச தத்ராஶ்வதரீ ஸஹஸ்ரம்ʼ; நாரீ புரம்ʼ ந ச தேனாஹம ஆகா³ம" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "புஷ்கர க்ஷேத்திரத்தில் நூறாயிரம் குதிரைகளையும் இரண்டு லக்ஷம் கோக்களையும், நூற்றுக்கணக்கும் ஆயிரக்கணக்குமான ப்ராம்மணர்களுக்குக் கொடுத்தேன். பொன்மயமான சந்திரனென்னும் ஆபரத்தைச் சிரசில் தரித்த ஆயிரம் சிறந்த கன்னிகைகளையும், சிறந்த பொன்னாபரணங்கள் பூண்ட அறுபதினாயிரம் கன்னிகைகளையும் கொடுத்தேன். அதனாலும் வரவில்லை" என்றிருக்கிறது.
ஓ! அண்டத்தில் தலைவா, கோஸவம் என்ற பெயரில் அறியப்படும் வேள்விகளைச் செய்து, தங்கள் கன்றுடன் கூடியவையும், காலத்தில் பால் தரவல்லவையும், தங்கப்பாத்திரத்துடன் கூடியவையும், பால் கறப்பதற்கான வெண்கலப்பாத்திரம் ஒன்றுடன் கூடியவையுமான பத்துப் பசுக்களை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுப்பது என்ற வீதத்தில் பத்து அற்புதங்கள் அளவுக்குப் பசுக்களைக் கொடையளித்தேன்.(13) சோமவேள்விகள் பலவற்றைச் செய்து, பால் தரவல்லவையும், முதல்கன்றை ஈன்றவையுமான பத்துப் பசுக்களை ஒவ்வொரு பிராமணர்களுக்கும் கொடுத்து, ரோஹிணி என்ற பெயரில் அறியப்படும் வகையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பசுக்களையும் அவர்களுக்குக் கொடையளித்தேன்.(14) மேலும் பால் தரும் பசுக்களை இருபது பிரயுதங்கள் அளவுக்குப் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். ஓ! பிரம்மா, அந்தக் கொடைகளின் பலனால் நான் இந்த இன்பலோகத்தை அடைவதில் வெல்லவில்லை.(15) வெண்ணிறம் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பால்ஹீக இனத்தைச் சேர்ந்தவையுமான நூறாயிரம் குதிரைகளையும் நான் கொடையளித்தேன். எனினும், அச்செயல்களுக்கான பலன்களின் மூலம் நான் இந்த உலகத்தை அடையவல்லை.(16) ஓ! பிரம்மா, எட்டு கோடி தங்கநாணயங்களை மேலும் மற்றொரு பத்து கோடியையும் நான் செய்த ஒவ்வொரு வேள்வியிலும் கொடுத்திருக்கிறேன். எனினும், அந்தக் கொடைகளின் பலனால் நான் இந்த இன்பலோகத்தை அடையவில்லை.(17)
ஓ! பெரும்பாட்டனே, மேலும் நான் பச்சை நிறம் கொண்டவையும், கருப்பு காதுகளைக் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான பதினேழு கோடி {17,00,00,000} குதிரைகளைக் கொடையளித்திருக்கிறேன்.(18) மேலும், பேரளவு கொண்டவையும், உழுமுனையை {கொழுவைப்} போன்ற பெரும்பற்களைக் கொண்டவையும், பத்மங்கள் என்றழைக்கப்படும் சுழிகளைத் தன் உடலில் கொண்டவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான பதினேழாயிரம் {17,000} யானைகளையும் கொடையளித்திருக்கிறேன்.(19) ஓ! பெரும்பாட்டா, தங்கத்தாலான அங்கங்களைக் கொண்டவையும், பல்வேறு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பத்தாயிரம் {10,000} தேர்களையும் நான் கொடையளித்திருக்கிறேன்.(20) குதிரைகள் பூட்டப்பட்ட வேறு தேர்கள் ஏழாயிரமும் {7,000} நான் கொடையளித்திருக்கிறேன். அவற்றில் பூட்டப்பட்ட குதிரைகள் யாவும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் வேள்வி தக்ஷிணைகளாகவும், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதே வகையைச் சார்ந்தவையாகவும் இருந்தன.(21) ஆற்றல் மற்றும் செய்த வேள்விகளால் தீர்மானிக்கப்படுபவர்களும், இந்திரனின் பலத்தைக் கொண்டவர்களுமான ஓராயிரம் வீரர்களை நான் செய்த பத்து பெரும் வாஜபேய வேள்விகளில் கொடையளித்திருக்கிறேன்.(22) ஓ! பெரும்பாட்டனே, பெருமளவில் பணத்தைச் செலவு செய்து எட்டு ராஜசூய வேள்விகளைச் செய்து, (அவற்றைச் செய்து கொடுத்த பிராமணர்களுக்கு) போரில் வெல்லப்பட்டவர்களும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தைக் கொண்டவர்களுமான ஆயிரம் மன்னர்களைக் கொடையளித்தேன்[4]. எனினும், அச்செயல்களால் கிட்டிய பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(23,24)
[4] கும்பகோணம் பதிப்பில், "தக்ஷிணைகளைச் சேர்ந்தவைகளாக வேதங்களிற் சொல்லப்பட்டவை இன்னும் என்னவுண்டோ அவற்றையெல்லாம் பத்து வாஜபேய யாகங்களிற் கொடுத்தேன். பிரம்மதேவரே, யாகத்தினாலும், பராக்கிரமத்தினாலும் இந்திரனுக்குச் சமமான மகிமையுள்ளவர்களும், கழுத்துக்களிற் பொன்மாலை அணிந்தவர்களுமாகிய ராஜகுமாரர்கள் ஆயிரவரை யுத்தத்தில் ஜயித்து நிரம்பிய திரவியங்களோடு எட்டு ராஜஸூய யாகங்களைச் செய்து அவற்றில் அவ்வரசர்களைத் தக்ஷிணைகளாகக் கொடுத்தேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ப்ராம்மணர்களுக்குத் தங்கள் தங்கள் கிரயத்தைக் கொடுத்து அவரவர் தேசங்களுக்குத் திரும்பிச் செல்லும்படி செய்வது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மேலும் தங்க அலங்காரத்துடன் கூடிய குதிரைகள் பூட்டப்பட்ட ஏழாயிரம் தேர்களும் அதில் இருந்தன. இவற்றை நான் செய்த பத்து குதிரை வேள்விகளில் வேதங்களில் சொல்லியுள்ளபடியே தக்ஷிணைகளாகக் கொடுத்தேன். செய்த வேள்விகளால் நான் சக்ரனுக்கு இணையான சக்தியையும், ஆற்றலையும் கொண்டிருந்தேன். ஓ பெரும்பாட்டனே, நான் செய்த எட்டு ராஜசூய வேள்விகளால் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, கழுத்துகளில் ஆயிரக்கணக்கான தங்க நாணயங்கள் கட்டப்பட்ட அவர்களை அவற்றில் தக்ஷிணையாகக் கொடுத்தேன்" என்றிருக்கிறது.
ஓ! அண்டத்தின் தலைவா, அந்த வேள்விகளில் நான் கொடுத்த கொடைகள் கங்கையின் ஓடையைப் போல அபரிமிதமாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டாயிரம் யானைகளையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அதே அளவு குதிரைகளையும், சிறந்த வகையிலான நூறு கிராமங்களையும் நான் ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுத்தேன்.(25) உண்மையில், நான் இவற்றை அடுத்தடுத்து மூன்று முறை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடுத்தேன். இமயச் சாரலில் தடுக்கப்பட முடியாத ஓடையாக (சொர்க்கத்தில் இருந்து பாய்ந்து) மஹாதேவனின் தலையில் தாங்கப்பட்ட கங்கையின் அருகில் தவம் செய்து கொண்டும், அமைதியான ஆன்மாவைப் பின்பற்றியும், பேச்சைக் கட்டுப்படுத்தியவாறும், முறைப்படுத்தப்பட்ட உணவுமுறையில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தேன். ஓ! பெரும்பாட்டனே, இந்தச் செயல்களின் பலன் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(27) சமியை {சமியென்று சொல்லப்படும் வன்னிமரக் கட்டைகளை வீசி), பௌண்டரீகம் தவிர, ஒரே நாளில் நிறைவடையக்கூடிய, பனிரெண்டு நாட்களில் மற்றும் பதிமூன்று நாட்களில் முடிவடைக்கூடிய {திரயோதசாஹம், துவாதசாஹாம்} வேள்விக்கூட்டங்களைச் செய்து நான் தேவர்களைத் துதித்தேன். அந்த வேள்விகளில் எவற்றின் பலனினாலும் நான் இவ்வுகலை அடையவில்லை[5].(28)
[5] "பழங்காலத்தில் ஒன்றுக்கொன்று சிறு இடைவெளிகளை விட்டு எழுப்பப்பட்ட பீடங்களில் மன்னர்கள் வேள்விகளைச் செய்தார்கள் என்று சாந்திபர்வத்தில் சொல்லப்படுகிறது. இந்தத் தொலைவுகள் சமி என்றழைக்கப்படும் கனத்த மரத்துண்டை வீசுவதன் மூலம் அளக்கப்படும். இவ்வாறு ஒரு வேள்விப்பீடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டும் சமி விழுந்த இடத்தில் புதிய பீடம் உண்டாக்கப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வெண்ணிறம் கொண்டவையும், அழகிய திமில்களைக் கொண்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டவையுமான எட்டாயிரம் {8,000} காளைகளை நான் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். அவற்றும் கழுத்து நிறையத் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மனைவிகளையும் {பசுக்களைக்} கொடுத்தேன்[6].(29) மேலும் நான் பொற்குவியல்களையும், பிறவகைச் செல்வங்களையும் கொடையளித்தேன். உண்மையில், நான் ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்புமிக்கக் கற்களின் மலைகளைக் கொடையளித்தேன். செல்வங்களும், தானியங்களும் நிறைந்தவையான ஆயிரக்கணக்கான கிராமங்கள் என்னால் கொடையளிக்கப்பட்டன.(30) நான் செய்த பெரும் வேள்விகள் பலவற்றில், முதல் கன்றை ஈன்றவையான நூறாயிரம் பசுக்களை என் தன்நினைவுடன் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன். எனினும், அச்செயல்களினால் கிட்டிய பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(31) பதினோரு நாட்களில் நிறைவடையும் வேள்வி {ஏகாதசாஹம்} ஒன்றில் நான் தேவர்களைத் துதித்தேன். பனிரெண்டு நாட்களில் முடிவடையும் வேள்விகளில் {த்விர்த்வாதசாஹம்} இருமுறை நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். பல முறை நடைபெற்ற குதிரைவேள்விகளிலும் நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். ஆர்காயண வேள்வியை நான் பதினாறு முறை செய்திருக்கிறேன். அச்செயல்களின் பலன்கள் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(32)
[6] கும்பகோணம் பதிப்பில், "ப்ராம்மணர்களுக்குப் பெருங்கொண்டைகள் உள்ளவையும், ஒவ்வொரு கொம்பும் பொன்னால் அணியப்பவையுமான எண்ணாயிரம் வெள்ளை ரிஷபங்களையும், அவைகளுக்குப் பத்நிகளும் கழுத்திற் பொன்மாலையணிந்தவைகளுமான பசுக்களையும் கொடுத்தேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
ஒரு யோஜனை நீள அகலம் கொண்டதும், ரத்தினங்களாலும் பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட காஞ்சன மரங்களைக் கொண்டதுமான காட்டை ஒவ்வொரு பிராமணருக்கும் கொடையளித்தேன். அந்தச் செயலின் பலனால் நான் இவ்வுலகை அடையவில்லை.(33) மேன்மையான தகுதியைக் கொண்ட துராயண நோன்பை முப்பது வருடங்கள் நோற்றுக் கோபத்தில் இருந்து முற்றிலும் விடுபட்ட நான், ஒவ்வொரு நாளும் தொள்ளாயிரம் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தேன்.(34) உண்மையில், ஓ! அண்டத்தின் தலைவா, நான் கொடுத்த அந்தப் பசுக்கள் ஒவ்வொன்றும் ரோகிணி இனத்தைச் சார்ந்தவையும், அந்த நேரத்தில் பால் தருபவையாகவும் இருந்தன. ஓ! தேவர்களின் தலைவா, அந்தச் செயல்களின் பலன்கள் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(35) ஓ! பிரம்மாவே, நான் ஒவ்வொரு நாளும் முப்பது நெருப்புகளை வழிபட்டேன். விலங்குகள் அனைத்தின் கொழுப்பும் நெருப்பில் ஊற்றப்பட்ட எட்டு வேள்விகளில் {ஸர்வமேதயாகங்களில்} நான் தேவர்களைத் துதித்திருக்கிறேன். மனிதக்கொழுப்பை நெருப்பில் ஊற்றிச் செய்யப்பட்ட ஏழு வேள்விகளில் {நரமேதயாகங்களில்} நான் அவர்களைத் துதித்திருக்கிறேன்.(36) ஆயிரத்து இருபத்தெட்டு விஸ்வஜித் வேள்விகளிலும் நான் அவர்களைத் துதித்திருக்கிறேன். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவரே, அந்த வேள்விகளின் பலன்களின் மூலம் நான் இவ்வுலகை அடையவில்லை.(37) சரயூ, பாஹுதை, கங்கை ஆகியவற்றின் கரைகளிலும், நைமிசக் காடுகளிலும் நான் கோடிக்கணக்கான பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடையளித்திருக்கிறேன்.(38)
உண்ணா நோன்பெனும் விரதம் இந்திரனால் அறியப்பட்டிருந்தது. எனினும் அவன் அதை ரகசியமாக வைத்திருந்தான். பிருகுவின் வழித்தோன்றலான சுகரன், தவங்களினால் அடைந்த ஆன்மப் பார்வையின் மூலம் அந்த அறிவை அடைந்தார். சுடர்மிக்க சக்தியைக் கொண்ட உசானஸே இது குறித்து அண்டத்திற்கு அறிவித்தார். ஓ! வரமளிக்கும் தேவா, நான் அந்நோன்பை நோற்றிருக்கிறேன்.(39) நான் மிக மேன்மையான அந்நோன்பை நிறைவேற்றிய போது பிராமணர்கள் அனைவரும் என்னிடம் நிறைவடைந்தார்கள். ஓராயிரம் முனிவர்கள் அங்கே வந்தனர்.(40) ஓ! பலமிக்கத் தலைவா, அந்தப் பிராமணர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் என்னிடம் நிறைவடைந்தவர்களாக, "நீ பிரம்ம லோகத்திற்குச் செல்வாயாக" என்றனர். அந்நோன்பு பலனின் விளைவாலேயே நான் மிக மேன்மையான இன்பத்தைக் கொண்ட இந்த உலகை அடைவதில் வென்றேன். இதில் எந்த ஐயமும் இல்லை.(41) அனைத்துப் பொருட்களின் பரம ஆணையாளனால் காட்கப்பட்டு உண்ணாவிரதத்தின் பலன்களை முறையாக நான் விளக்கிச் சொன்னேன். என் கருத்தின்படி, உண்ணா நோன்பை {உபவாஸத்தை} விட உயர்ந்த தவம் ஏதும் கிடையாது. ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, நான் உம்மை வணங்குகிறேன். என்னிடம் நிறைவடைவீராக" என்றான் {பகீரதன்}".(42)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், இவ்வாறு சொன்னவனும், மதிப்பனைத்திற்கும் தகுந்தவனுமான மன்னன் பகீரதன் தன் பேச்சை முடித்த போது அக்காரியத்திற்காக விதிக்கப்பட்ட சடங்குகளின் படி பிரம்மனால் அவன் கௌரவிக்கப்பட்டான்.(43) எனவே, ஓ! யுதிஷ்டிரா, உண்ணாநோன்பை நோற்று ஒவ்வொரு நாளும் பிராமணர்களை வழிபடுவாயாக. பிராமணர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் இம்மையிலும், மறுமையிலும் அனைத்தையும் நிறைவேற்றும்.(44) உண்மையில், ஆடைகள், உணவு, வெண்ணிற பசுக்கள், வசிப்பதற்கு நல்ல வீடுகள் மற்றும் மாளிகைகளைக் கொடையளிப்பதன் மூலம் பிராமணர்கள் நிறைவடையச் செய்யப்பட வேண்டும். பேராசையில் இருந்து விடுபட்டு, அனைவராலும் அறியப்பட்ட மிக மேன்மையான இந்த நோன்பை நீ பயில்வாயாக" {என்றார் பீஷ்மர்}.(45)
அநுசாஸனபர்வம் பகுதி – 103ல் உள்ள சுலோகங்கள் : 45
ஆங்கிலத்தில் | In English |