Code of conduct! | Anusasana-Parva-Section-104 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 104)
பதிவின் சுருக்கம் : ஆயுள் குறைபாடு அல்லது நீண்ட ஆயுளுக்கான காரணங்கள்; செய்யப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்; நன்மைகளுக்குக் காரணமான ஆசாரங்கள், அதாவது ஒழுக்கவிதிகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மனிதன் நூறு வருடங்கள் நீளும் வாழ்வுக்காலத்தையும், சக்தியையும், கருத்தில் கொள்ளத்தக்க அளவு வலிமையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறது. ஓ! பாட்டா, அப்படியிருக்கையில் ஏன் மனிதர்கள் மிக இளமைக் காலத்திலேயே {சிறு வயதிலேயே} இறக்கிறார்கள்?(1) எதன் மூலம் ஒரு மனிதன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்? எதன் மூலம் குறைந்த வாழ்நாளைப் பெறுகிறான்? எதன் மூலம் ஒரு மனிதன் பெருஞ்சாதனைகளைச் சார்ந்திருக்கும் புகழை அடைகிறான். எதன் மூலம் அவன் செல்வத்தையும், செழிப்பையும் அடைகிறான்?(2) தவங்கள், பிரம்மச்சரியம், அமைதியாகப் புனித மந்திரங்களை உரைத்தல், மருந்து ஆகியவற்றில் எதன் மூலம் இது நேர்கிறது? செயல்கள், மனம், அல்லது வாக்கில் எது அதற்குக் காரமாகிறது ஓ! பாட்டா இதை எனக்கு விளக்குவீராக" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நீ கேட்பதை நான் சொல்லப் போகிறேன். உண்மையில், ஒருவன் குறுகிய காலம் வாழ்வதற்கும், நெடுங்காலம் வாழ்வதற்கும் உரிய காரணத்தைச் சொல்லப் போகிறேன்.(4) பெருஞ்சாதனைகளினால் உண்டாகும் புகழை அடைவதில் ஒருவன் வெல்லும் காரணத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் அடையும் காரணத்தையும் சொல்லப் போகிறேன். உண்மையில், ஒருவன் நன்மையை அடைய வேண்டி வாழ வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(5) ஒழுக்கத்தின் மூலமே ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான், மேலும் ஒழுக்கத்தின் மூலமே அவன் செல்வத்தையும், செழிப்பையும் அடைகிறான். உண்மையில், ஒழுக்கத்தின் மூலமே அவன் பெருஞ்சாதனைகளைச் சார்ந்திருக்கும் புகழை இம்மையிலும், மறுமையிலும் அடைகிறான்.(6) முறையற்ற, அல்லது தீய ஒழுக்கத்தைக்கொண்ட மனிதன் ஒருபோதும் நீண்ட வாழ்நாளை அடைவதில்லை. அத்தகைய மனிதனை அனைத்து உயிரினங்களும் அஞ்சுகின்றன, அவனால் ஒடுக்கப்படுகின்றன.(7) எனவே, ஒருவன் முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பினால், அவன் முறையான நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மங்கலமற்ற நிலையையும், பாவம் நிறைந்த ஒருவனின் துன்பத்தையும் அகற்ற வல்லது நல்லொழுக்கம்[1].(8)
[1] "அஃதாவது, ஒரு பாவம் நிறைந்த மனிதன் தன் ஒழுக்கத்தைச் சீர் செய்து கொண்டால், தன் பாவங்களின் விளைவால் உண்டான துன்பங்கள் மற்றும் தீமைகளைக் களைவதில் வெல்வான். சீர்செய்யவில்லையெனில் தோற்பான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அறமானது தன் குறியீடாக ஒழுக்கத்தையே கொண்டிருக்கிறது {ஒழுக்கத்தினால் அறியப்படுவது அறம்}. நல்லவர்களாகவும், அறம்சார்ந்தவர்களாகவும் இருப்பவர்கள், தாங்கள் பின்பற்றும் ஒழுக்கதின் விளைவாலேயே அவ்வாறிருக்கிறார்கள். மேலும், நல்லொழுக்கத்தின் குறியீடுகள் நல்லோர் அல்லது அறவோரின் செயல்களின் மூலமே விளைகின்றன.(9) நியாயமாகச் செயல்படுபவனும், நற்செயல்களைச் செய்பவனுமான மனிதனை மக்கள் காணவில்லையென்றாலும், {அவனைக் குறித்துக்} கேள்விப்படுவதால் மட்டுமே கூட அவனை மதிப்பார்கள்.(10)
நாத்திகர்களாக இருப்பவர்கள், செயல்கள் ஏதும் அற்றவர்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள், சாத்திர ஆணைகளை மீறுபவர்கள், கடமைகளைக் குறித்து அறியாதவர்கள், அவற்றை நோற்காதவர்கள், தீய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் குறுகிய வாழ்நாளை வாழ்வார்கள்.(11) முறையற்ற நடத்தை கொண்டவர்கள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவர்கள், பாலினக் கலவியில் பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள் ஆகியோர் குறுகிய வாழ்நாளே வாழ்ந்து மறுமையில் நரகிற்குச் செல்வார்கள்.(12) எந்தச் சாதனையுமற்றவர்களாக இருந்தாலும் நம்பிக்கையுள்ளவர்களாகவும், வன்மத்திலிருந்து விடுபட்டவர்களுமாகி ஒழுங்குமுறையையும், அறவொழுக்கத்தையும் பின்பற்றும் மனிதர்கள் நூறு வருடங்கள் வாழ்வார்கள்.(13) கோபத்தில் இருந்து விடுபட்டவனும், வாக்கில் வாய்மை நிறைந்தவனும், அண்டத்திலுள்ள எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் தீங்கிழைக்காதவனும், வன்மமற்றவனும், நெறியுள்ளவனும், நேர்மையாளனுமான ஒருவன் நூறு வருடங்கள் வாழ்வதில் வெல்கிறான்.(14) எப்போதும் மண் ஓடுகளை உடைப்பவன், காலுக்கடியில் வளரும் துரும்பைக் கிள்ளுபவன், நகங்களைக் கடிப்பவன், எப்போதும் தூய்மையற்றிருப்பவன், மனத்தடுமாற்றம் கொண்டவன் ஆகியோர் ஒருபோதும் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்லமாட்டார்கள்.(15)
ஒருவன், பிரம்மமுகூர்த்தம் என்றறியப்படும் நேரத்தில் உறக்கத்தில் இருந்து விழித்து, அறம் மற்றும் பொருள் குறித்துச் சிந்திக்க வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் அவன் தன் முகத்தையும், வாயையும் கழுவிய பிறகு, மதிப்புமிக்க மனநிலையுடன் தனது கரங்களைக்கூப்பிக் காலை வேண்டுதல்களை {துதிகளைச்} சொல்ல வேண்டும்[2].(16) இதே வழியில் மாலைவேளை வரும்போதும் அவன் (வேறு மக்களிடம்) பேச்சைத் தவிர்த்து மாலை வேண்டுதல்களைச் சொல்ல வேண்டும். ஒருவன் உதிக்கும் சூரியனையோ, மறையும் சூரியனையோ பார்க்கக்கூடாது[3].(17) கிரகணக் காலத்திலோ, நீரின் பிம்பத்திலோ, நடுப்பகலில் நடுவானிலோ உள்ள சூரியனையும் அவன் ஒருபோதும் பார்க்கக்கூடாது. முனிவர்கள், பெரும் முறைமையுடன் இரு சந்திப்பொழுதுகளிலும் துதிப்பதன் விளைவால் அவர்கள் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறார்கள்.(18) எனவே, ஒருவன் பேச்சைத் தவிர்த்து, இரு சந்திப்பொழுதுகளிலும் முறையாகத் தன் வேண்டுதல்களைச் சொல்ல வேண்டும் {துதிக்க வேண்டும்}. இரு சந்திப்பொழுதுகளிலும் தங்கள் வேண்டுதல்களைச் சொல்லாத பிராமணர்களைப் பொறுத்தவரையில், ஓர் அறம்சார்ந்த மன்னன் சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வதில் அவர்களை நிறுவ வேண்டும். அனைத்து வகையை {வர்ணங்களைச்} சார்ந்த மனிதர்களும் அடுத்தவர் மனைவிகளுடன் ஒருபோதும் பாலினக் கலவி கொள்ளக்கூடாது.(19,20)
[2] "பிரம்ம முகூர்த்தம் என்பது காலையில் சூரியன் அடிவானத்திற்குக் கீழே உள்ள காலமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அதாவது சூரிய உதயத்திற்கு முன்னுள்ள ஒன்றரை மணிநேரம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகிறது.[3] "காலை மற்றும் மாலை வேண்டுதல்கள், சந்தி வேளைகள் இரண்டையும் துதிப்பதாகச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அடுத்தவர் மனைவிகளுடன் பாலினக்கலவி புரிவதைவிட வாழ்நாளை மிகத் தீவிரமாகக் குறைப்பது வேறேதும் இல்லை.(21) பிறன்மனைநயப்பவன், தான் குற்றமிழைத்த பெண்களின் உடல்களில் உள்ள வியர்வைத்துளைகளின் எண்ணிக்கை அளவுக்குப் பல்லாயிரம் வருடங்கள் நரகில் வாழ்வான்.(22) ஒருவன் பிற்பகலில், தன் மயிரைச் சீர்படுத்தி, தன் கண்களுக்கு அஞ்சனந்தீட்டி, பற்களைக் கழுவியபிறகு தேவர்களை வழிபடவும் வேண்டும்.(23) ஒருவன் சிறுநீரையோ, மலத்தையோ பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது, அல்லது அதில் நடக்கக்கூடாது, அல்லது தன் பாதத்தால் தீண்டக்கூடாது. ஒருவன் விடியற்காலையிலோ, நடுப்பகலிலோ, மாலை சந்தி காலத்திலோ,(24) அறியாத தோழனுடனோ, ஒரு சூத்திரனுடனோ, தனியாகவோ பயணம் புறப்படக்கூடாது. ஒருவன் சாலையில் நடந்து செல்லும்போது, {எதிர்ப்படும்} பிராமணன், பசுக்கள், மன்னர்கள்,(25) முதியவர், சுமை தூக்கி வருபவர், கருவுற்றிருக்கும், பெண் மற்றும் பலவீனர் ஆகியோருக்கு எப்போதும் வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்.
ஒருவன் அறியப்பட்ட ஒரு பெரிய மரத்தைக் காணும்போது அதை வலம் வர வேண்டும். ஒருவன் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு வரும்போது, தனது பயணத்தைத் தொடரும் முன்பு அதை வலம் வர வேண்டும். நடுப்பகலிலோ, நள்ளிரவிலோ, பொதுவாக இரவிலோ,(26) இரு சந்திப் பொழுதுகளிலோ நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களுக்கு ஒருவன் செல்லக்கூடாது. ஒருவன் மற்றொருவரால் அணியப்பட்ட காலணிகளையோ, ஆடைகளையோ ஒருபோதும் அணியக்கூடாது.(27) ஒருவன் எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்க வேண்டும், தன் கால்களை ஒருபோதும் பின்னிக் கொள்ளக்கூடாது. ஒருவன் புது நிலவு {அமாவாசை} நாளிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாளிலும், இரு பிறை அரைமாதங்களிலும் {வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில்} வரும் எட்டாவது சந்திர நாளிலும் {அஷ்டமியிலும்} பிரம்மச்சரிய நோன்பை நோற்கவேண்டும். ஒருவன் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது. ஒருவன் ஒரு விலங்கின் முதுகில் உள்ள இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது. ஒருவன் பிறரை நிந்திப்பதையும், பிறரைக் குறித்து அவதூறு பேசுவதையும், அனைத்து வகை வஞ்சக நடத்தைகளையும் தவிர்க்க வேண்டும்[4].(28-30)
[4] "ஒருவன் பிரம்மச்சரிய நோன்பை எப்போதும் நோற்க வேண்டும் என்பது, ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியரிடம் உரிய காலத்தில் தவிர வேறு பாலினக் கலவியைத் தவிர்ப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒருவன் மற்றொருவரை சொற்கணைகளால் துளைக்கக்கூடாது. உண்மையில், ஒருவன் எந்தவிதமான கொடூரப் பேச்சையும் பேசக்கூடாது. தாழ்ந்த மற்றும் இழிந்த மனிதனிடம் இருந்து ஒருபோதும் கொடைபெறக்கூடாது. வேறு மக்களுக்குத் தொல்லையைக் கொடுக்கத் தகுந்தவையோ, மங்கலமற்றவையோ, பாவம்நிறைந்தவையோவான சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது.(31) சொற்கணைகள் வாயில் இருந்து பாய்கின்றன. அவற்றால் துளைக்கப்பட்டவன் பகலும், இரவும் வருந்துகிறான். ஞானமுள்ள மனிதன், வேறு மக்களின் முக்கிய அங்கங்களைத் துளைப்பதற்காக ஒருபோதும் அவற்றை ஏவக்கூடாது.(32) கணைகளால் துளைக்கப்பட்ட, அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும்வளரும். எனினும், விவேகமில்லாமல் பேசப்படும் சொற்களால் துளைக்கப்பட்ட மனிதன், மரணத்திற்கு வழிவகுக்கும் சீழ் பிடித்த புண்ணுக்குப் பலியாகிறான்.(33) கர்ணிகள், நாளீகங்கள், நாராசங்கள் ஆகியவற்றை உடலில் இருந்து பிடுங்கிவிட வல்லவையாகும். எனினும், சொற்கணைகள் இதயத்திலேயே பதிந்து கிடப்பதால் அவற்றை ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது.(34) அங்க குறையுள்ளவனையோ, அங்கம் அதிகமுள்ளவனையோ, கல்வியற்றவனையோ, துன்பத்திலிருப்பவனையோ, கோரமானவனையோ {அழகற்றவனையோ}, பலமற்றவனையோ ஒருவன் குற்றங்கூற {பரிகசிக்கக்} கூடாது.(35)
நாத்திகம், வேதங்களை அவதூறு செய்வது, தேவர்களை நிந்திப்பது, வன்மம், செருக்கு, ஆணவம், கடுமை ஆகியவற்றை ஒருவன் தவிர்க்க வேண்டும்.(36) ஒருவன் கோபத்தினால் பிறரைத் தாக்க தண்டக்கோலை {தடியை} எடுக்கக்கூடாது. கற்பித்தல் நோக்கத்தில் மகன், அல்லது சீடனை மட்டுமே மென்மையாகத் தண்டிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.(37) ஒருவன் பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசக்கூடாது; அதேபோல நட்சத்திரங்களை விரல் நீட்டிச் சுட்டிக் காட்டக்கூடாது. கேட்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாளின் சந்திர நாளை {பக்ஷத்தின் திதியை} ஒருவன் சொல்லக் கூடாது. அதைச் சொல்வதன் மூலம் ஒருவனுடைய வாழ்நாள் குறுகுகிறது.(38) இயற்கை அழைப்புகளுக்குப் பதிலளித்த பிறகோ, சாலையில் நடந்து வந்த பிறகோ ஒருவன் தன் பாதங்களைக் கழுவ {அலம்ப} வேண்டும். வேதங்கள் உரைக்க அமர்வதற்கோ, உணவை உண்பதற்கோ முன்பு ஒருவன் தன் பாதங்களைக் கழுவ வேண்டும்.(39) அறியப்படாததும் {பிறரால் பார்க்கப்படாததும்}, நீரினால் கழுவப்பட்டதும், நன்றாகப் பேசப்பட்டதுமான {வாக்கினால் புகழப்பட்டதுமான} இம்மூன்று மாசுகளும் தூய்மையானவை, புனிதமானவை, பிராமணர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவை எனத் தேவர்கள் கருதுகின்றனர்.(40)
ஸம்யாவம் {அரிசிச் சோறு}, கிருஸரம், இறைச்சி, சஸ்குலீ {முறுக்கு}, பாயஸம் ஆகியவற்றை ஒருவன் ஒருபோதும் தனக்காகச் சமைத்துக் கொள்ளக்கூடாது. இவை எப்போது சமைக்கப்பட்டாலும், தேவர்களுக்கே காணிக்கை அளிக்கப்பட வேண்டும்[5].(41) ஒருவன் ஒவ்வொரு நாளும் தன் நெருப்பைக் கவனிக்க {அக்னிஹோத்ரம் செய்ய} வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் பிச்சையிட வேண்டும். அவன், பேச்சைக் கட்டுப்படுத்திப் பற்குச்சியினால் பற்களைத் தூய்மை செய்ய வேண்டும்.(42) ஒருவன் சூரியன் எழுந்த பிறகும் ஒருபோதும் படுக்கையில் கிடக்கக்கூடாது. எந்த நாளிலாவது அவன் சூரியனுக்கு முன் எழத் தவறினால், அவன் பாவக்கழிப்பைச் செய்ய வேண்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் அவன் முதலில் தன் பெற்றோரையும், ஆசான்களையும், மதிக்கத்தகுந்த பெரியோரையும் வணங்க வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான். பற்குச்சியின் வேலை முடிந்ததும் அதைக் கைவிட்டு ஒவ்வொரு நாளும் புதியதையே பயன்படுத்த வேண்டும்.(43,44) ஒருவன் புதுநிலவு {அமாவாசை} மற்றும் முழு நிலவு {பௌர்ணமி} நாட்களில் அனைத்து வகை உணவையும் கைவிட்டு, {மற்ற நாட்களில்} சாத்திரங்களால் விலக்கப்படாத உணவையே உண்ண வேண்டும். அவன் தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இயற்கையின் அழைப்புகளுக்கு வடக்கு நோக்கிப் பதிலளிக்க {சிறுநீர், மலம் கழிக்க} வேண்டும்[6].(45)
ஒருவன் முதலில் தன் பற்களைக் கழுவாமல் தேவர்களை வழிபடக்கூடாது. மேலும் முதலில் தேவர்களை வழிபடாமல், தன் ஆசானையோ, வயதில் முதிர்ந்த ஒருவரையோ, ஓர் அறவோரையோ, ஞானம் கொண்டவரையோ தவிர்த்து வேறு யாரிடமும் செல்லக்கூடாது. ஞானமுள்ளவர்கள், பளபளப்பாக்கப்படாத, மாசுள்ள கண்ணாடியில் ஒருபோதும் தங்களைக் காணமாட்டார்கள்.(46,47) ஒருவன் தான் அறியாத பெண்ணுடனோ, கருவுற்றிருக்கும் பெண்ணுடனோ பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.(48) ஒருவன் வடக்கிலோ, மேற்கிலோ தலைவைத்து ஒருபோதும் உறங்கக்கூடாது. அவன் உடைந்ததும், தளர்ந்ததுமான படுக்கையில் படுக்கக்கூடாது.(49) ஒருவன் விளக்கின் உதவியுடன் முதலில் படுக்கையைச் சோதிக்காமல் அதில் படுக்கக்கூடாது. மேலும் தன் அருகில் (மனைவி போன்ற) மற்றொருவருடன் சேர்ந்து படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் குறுக்குத் திசையில் படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் நாத்திகர்களுக்கு அடங்கியிருக்கக்கூடாது, அல்லது அவர்களுக்கு இணக்கமான எதையும் செய்யக்கூடாது[7].(50)
ஒருவன் ஓர் இருக்கையைத் தன் காலால் இழுத்து அதில் அமரக்கூடாது. ஒருவன் நிர்வாண நிலையிலோ, இரவிலோ ஒருபோதும் நீராடக்கூடாது.(51) புத்தியுள்ள ஒருவன் நீராடிய பிறகு தன் உறுப்புகளைத் தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது. முதலில் நீராடாமல் ஒருபோதும் {சந்தனம் போன்ற} களிம்புகளைத் தன் உடலில் பூசக்கூடாது. நீராடிய பிறகு அவன் ஒருபோதும் தன் ஆடையை (காய வைக்கும் நோக்கில்) காற்றில் அசைக்கக்கூடாது.(52) ஒருவன் ஒவ்வொரு நாளும் ஈரமான ஆடைகளை உடுத்தக்கூடாது. அவன் தான் அணியும் மலர்மாலைகளை எடுக்கக்கூடாது. அதேபோல வெளிப்புற ஆடைகளுக்கு மேல் அத்தகைய மாலைகளை ஒருபோதும் அணியக்கூடாது.(53) ஒருவன் பெண்ணுக்கான இயக்க மாறுபாட்டு {வீட்டுக்கு விலக்கான} காலத்தில் அவளுடன் பேசவும் கூடாது. அவன் இயற்கையின் அழைப்புகளுக்கு (பயிர் விளையும்) களத்திலோ {வயலிலோ}, மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அருகிலோ பதிலளிக்கக்கூடாது {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடாது}[8].(54) ஒருவன் நீர்வெளியில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. ஒருவன் எந்த உணவையும் உண்ணும் முன்பு மூன்று முறைகள் தன் வாயைக் கழுவ வேண்டும்.(55)
உணவு உண்டு முடித்த பிறகு அவன் மூன்று முறையும், மீண்டும் இரண்டு முறையும் {ஆக மொத்தம் ஐந்து முறைகள்} தன் வாயையைக் கழுவ வேண்டும். ஒருவன் பேச்சைக்கட்டுப்படுத்திக் கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ணும் உணவை நிந்திக்காமல் உண்ண வேண்டும்.(56) ஒருவன் தான் உண்பதற்காகத் தனக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் உணவில் எப்போதும் மிச்சம் வைக்க வேண்டும். தன் உணவை உண்டு முடித்ததும் ஒருவன் நெருப்பை மனத்தால் தீண்ட வேண்டும்[9]. ஒருவன் கிழக்குத் திசை நோக்கி உண்டால் அவன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாவான். தெற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெரும் புகழை அடைவான்.(57) மேற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செல்வத்தை அடைகிறான். வடக்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பேச்சில் வாய்மை நிறைந்தவனாகிறான். ஒருவன் தன் உணவை உண்ட பிறகு மேலுடலின் துளைகள் அனைத்தையும் நீரால் துடைக்க வேண்டும்.(58) அதே போல அனைத்து அங்கங்களையும், உந்தியையும், உள்ளங்கைகளையும் நீரால் கழுவ வேண்டும். ஒருவன் உமியின் மீதோ, மயிரின் மீதோ, சாம்பலின் மீதோ, எலும்புகளின் மீதோ ஒருபோதும் அமரக்கூடாது.(59) ஒருவன், மற்றொருவன் நீராடிய, பயன்படுத்தி நீரை எக்காரணத்தினாலும் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் தேவர்களைத் தணிவைடையச் செய்வதற்கு ஹோமத்தை எப்போதும் செய்து, சாவித்திரி மந்திரங்களையும் உரைக்க வேண்டும்.(60)
ஒருவன் எப்போதும் அமர்ந்தே உண்ண வேண்டும். ஒருபோதும் நடந்து கொண்டே உண்ணக்கூடாது. ஒருவன் நின்ற நிலையில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. சாம்பலிலோ, மாட்டுக் கொட்டிலிலோ அவன் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது.(61) ஒருவன் உண்ண அமர்வதன் முன்னர்த் தன் பாதங்களைக் கழுவ வேண்டும். ஒருவன் ஈரக்கால்களுடன் ஒருபோதும் அமரவோ, உறங்குவதற்காகப் படுக்கவோ கூடாது. கால் கழுவிய பிறகு அமர்ந்து உண்ணும் ஒருவன் நூறு வருடங்கள் வாழ்கிறான்.(62) ஒருவன் தூய்மையற்ற நிலையில் இருக்கும்போது, பெருஞ்சக்தி கொண்ட நெருப்பு, பசு மற்றும் பிராமணன் என்ற மூவரையும் ஒருபோதும் தீண்டக்கூடாது. இந்த விதியைக் கடைப்பிடிப்பதால் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்.(63) மாசுள்ள நிலையில் இருக்கும்போது பெருஞ்சக்தி கொண்ட சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் மூன்றிலும் கண்களைச் செலுத்தக்கூடாது.(64) ஓர் இளைஞனின் வீட்டிற்கு, மதிக்கத்தகுந்த ஒரு முதியவர் வந்தால், அவனுடைய {அந்த இளைஞனின்} உயர் மூச்சுகள் மேல்நோக்கிச் செல்கின்றன. அவன் எழுந்து நின்று, தன் விருந்தினரை முறையாக வணங்கும்போதே அதைத் திரும்பப் பெறுகிறான்.(65)
முதியவர்கள் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் அவர்களைக் கண்டதும் தன் கரத்தால் இருக்கை அளிக்க வேண்டும். அந்த முதியவர் அமர்ந்த பிறகு, தானும் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் இருக்க வேண்டும். ஒரு பெரியவர் சாலையில் செல்லும்போது அவன் அவரைப் பின்தொடர வேண்டுமேயன்றி அவருக்கு முன் நடக்கக்கூடாது.(66) ஒருவன் கிழிந்த, அல்லது உடைந்த இருக்கையில் அமரக்கூடாது. அவன் உடைந்த வெண்கலப் பாத்திரத்தை மீண்டும் பயன்படுத்தாமல் அதைக் கைவிட வேண்டும். ஒருவன் மேலாடை அணிந்து தன் உடலை மூடாமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவன் நிர்வாண நிலையில் ஒருபோதும் நீராடக் கூடாது. நிர்வாண நிலையில் ஒருபோதும் உறங்கக்கூடாது[10].(67) அடுத்தவர் உணவில் எஞ்சியவற்றையும், தட்டுகளையும் ஒருவன் ஒருபோதும் தீண்டக்கூடாது. உயிர் மூச்சுகள் அனைத்தும் தலையிலியே குவிந்திருப்பதாகச் சாத்திரங்களில் சொல்லப்படுவதால், ஒருவன் தான் தூய்மையற்ற {மாசுள்ள} நிலையில் இருக்கும்போது ஒருபோதும் மற்றொருவனின் தலையைத் தீண்டக்கூடாது.(68) ஒருவன் ஒருபோதும் மற்றொருவரின் தலையைத் தாக்கவோ, மற்றொருவனின் மயிரைப் பற்றவோ கூடாது. இரண்டு கைகளையும் சேர்த்து ஒருவன் தன் தலையைச் சொறியக்கூடாது.(69) ஒருவன் நீராடும்போது, மீண்டும் மீண்டும் தன் தலையை நீரில் மூழ்கச் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது ஒருவனுடைய வாழ்நாளைக் குறைக்கும். நீரில் தலை மூழ்கி நீராடியவன் அதன் பிறகு தன்னுடலின் எந்தப் பகுதியிலும் எண்ணெய் பூசக் கூடாது.(70)
ஒருவன் சிறிதளவு எள்ளை உண்ணாமல் ஒருபோதும் உணவு உண்ணக்கூடாது[11]. ஒருவன் தூய்மையற்றிருக்கும் காலத்தில் ஒருபோதும் (வேதங்களையோ, வேறு சாத்திரங்களையோ) கற்பிக்கக்கூடாது. அதேபோலத் தூய்மையற்றிருக்கும்போது ஒருவன் கற்கவும் கூடாது.(71) புயல் எழும்போது, சுற்றுச்சூழலில் கெட்ட வாடை ஊட்புகும்போதோ ஒருவன் வேதங்களைக் குறித்து நினைக்கக்கூடாது. பழைய வரலாற்றை அறிந்தவர்கள் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட காதையை உரைக்கிறார்கள். தூய்மையற்றவனாயிருக்கையில் ஓடுபவனோ, அத்தகைய சூழ்நிலையில் வேதங்கற்பவனோ, உண்மையில் மறுபிறப்பாள பிராமணனே ஆனாலும் தகாத காலங்களில் வேதம்படிப்பவன் தன் வேதத்தை இழந்து தன் வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான்.(72-74) எனவே, தடைசெய்யப்பட்ட காலங்களில் குவிந்த கவனத்துடன் ஒருவன் ஒருபோதும் வேதங்கற்கக்கூடாது.
சூரியனை நோக்கியோ, சுடர்மிக்க நெருப்பை நோக்கியோ, பசுவை நோக்கியோ, ஒரு மறுபிறப்பாள மனிதனை நோக்கியோ, சாலையிலோ இயற்கையில் அழைப்புக்குப் பதில் சொல்பவன் குறைந்த காலமே வாழ்கிறான். பகல் வேளையில் இயற்கையின் அழைப்புகள் இரண்டுக்கும் வடக்கு நோக்கி பதிலளிக்க வேண்டும் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டும்}.(75,76) இரவில் அவ்வழைப்புகளுக்குத் தெற்கு நோக்கி பதிலளிக்கலாம். இவ்வாறு செய்வதால் ஒருவன் தன் வாழ்நாளைக் குறைத்துக் கொள்வதில்லை. நீண்ட நாள் வாழ விரும்பும் ஒருவன், பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் பாம்பு ஆகிய மூன்றும் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் ஒருபோதும் அலட்சியம் செய்யவோ, அவமதிக்கவோ கூடாது. இம்மூன்றும் கடும் நஞ்சுமிக்கவையாகும். பாம்பு கோபமடைந்தால் தனக்குக் குற்றமிழைத்தவனைத் தன்னுடைய ஒரே ஒரு பார்வையால் மட்டுமே கூட எரித்துவிடும்.(77,78) க்ஷத்திரியன் கோபப்பட்டாலும் தன் கோபத்துக்குத் தகுந்த பொருளாக இருப்பவனைக் கண்டவுடன் தன் சக்தியால் எரித்துவிடுவான். இவ்விருவரை விடப் பலவானான பிராமணன், தன் கோபத்திற்குரிய பொருளாக இருப்பவனை மட்டுமல்லாமல் அவனுடைய மொத்த குலத்தையும், பார்வையால் மட்டுமல்லாமல் எண்ணத்தாலேயே அழித்து விடுவான்.(79) எனவே, ஞானம் கொண்ட ஒருவன், இம்மூவரிடமும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஒருவன் தன் ஆசானிடம் ஒருபோதும் எந்தச் சச்சரவிலும் ஈடுபடக்கூடாது. ஓ! யுதிஷ்டிரா, ஆசான் கோபமடைந்தால் உரிய கௌரவங்களுடன் அவர் தணிவடையச் செய்யப்பட வேண்டும். ஆசான் சொல்வது மொத்தமும் தவறாக இருந்தாலும், ஒருவன் அவரைப் பின்பற்றிக் கௌரவிக்கவே வேண்டும்.(81) ஆசானுக்கு எதிராக அவதூறு பரப்புவது அவ்வாறு செய்பவர்களின் வாழ்வை ஐயமில்லாமல் எரிக்கும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவாகச் சென்று இயற்கையின் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே தன் கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்.(82) ஒருவன் தன் உணவில் எஞ்சியவற்றையும், பாத்திரங்களையும் {இலைகளையும்} தன் வசிப்பிடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் வீச வேண்டும். உண்மையில் தன் நன்மையில் விருப்பம் உள்ளவன் இவை யாவற்றையும் செய்ய வேண்டும். ஒருவன் சிவப்பு மலர்களாலான மாலைகளை அணியக்கூடாது. உண்மையில் ஞானம் கொண்ட வருவன் வெள்ளை நிற மலர்களாலான மாலைகளையே அணிய வேண்டும்.(83) ஓ! பெரும் வலிமையுள்ளவனே, தாமரையையும், அல்லியையும் புறக்கணித்தாலும், நீரியில் விளைவதாக இருந்தால் ஒருவன் தன் தலையில் சிவப்பு மலரையும் சூடலாம்[12].(84) தங்கத்தாலான மாலை எந்தச் சூழ்நிலையிலும் தூய்மையற்றதாகாது. ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு நீரில் கலந்த நறுமணப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.(85)
ஒருவன் அடி உறுப்புகளை மறைப்பதற்கு மேலாடையையும், மேல் உறுப்புகளை மறைப்பதற்குக் கீழாடைகளையும் ஒருபோதும் அணியக்கூடாது. அதே போலப் பிறர் உடுத்திய ஆடைகளையும் ஒருபோதும் அவன் அணியக்கூடாது. மேலும், பக்கவாட்டில் இரு விளிம்புகள் இல்லாத ஆடைகளை ஒருவன் உடுத்தக்கூடாது.(86) ஓ! மன்னா, ஒருவன் படுக்கைக்குச் செல்லும்போது வேறு உடையை உடுத்த வேண்டும். சாலையில் பயணிக்கும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும். அதே போலத் தேவர்களை வழிபடும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும்.(87) புத்தியுள்ள மனிதன் தன் அங்கங்களில் பிரியங்கு {தினை}, சந்தனம், வில்வம் {வில்வக்காய்}, தகரம் {ஒரு நறுமணப்பொருள் / நந்தியார்வட்டை}, கேஸரம் {கரிசலாங்கண்ணி} ஆகியவற்றாலான களிம்புகளைப் பூச வேண்டும்.(88) உண்ணாவிரதம் நோற்கும் ஒருவன், நீராடுவதன் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஆபரணங்கள் மற்றும் களிம்புகளால் தன் மேனியை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் எப்போதும் பாலினக்கலவியைத் தவிர்க்க வேண்டும்.(89) ஓ! ஏகாதிபதி, ஒருவன் தன் சொந்தக்காரனாகவே இருந்தாலும், ஒரே பதவி கொண்டவனாகவே இருந்தாலும் ஒரே தட்டில் ஒருபோதும் உண்ணக்கூடாது. விலக்கப்பட்ட காலத்தில் உள்ள பெண்ணால் தயாரிக்கப்பட்ட உணவையும் ஒருபோதும் உண்ணக்கூடாது.(90)
ஒருவன் சாறு எடுக்கப்பட்ட எந்த உணவையும் உண்ணவோ, அப்படிப்பட்ட பானத்தைப் பருகவோ கூடாது. அதே போல, ஒருவன் உண்ணும் உணவை விருப்பத்துடன் பார்க்கும் மனிதர்களுக்கு ஒரு பகுதியைக் கொடுக்காமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தூய்மையற்ற ஒருவனுடைய அருகில் அமரக்கூடாது. அதே போல அறத்தில் முதன்மையானவர்கள் அருகிலும் அவன் அமரக்கூடாது.(91) அறச்செயல்களில் தடை செய்யப்பட்டிருக்கும் உணவுகள் அனைத்தையும் வேறு சந்தர்ப்பங்களிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், அரசமரக் கனி மற்றும் ஆலங்கனிகளையும், சணல் இலைகளையும் மற்றும் அத்திக்கனிகளையும் ஒருபோதும் உண்ணக்கூடாது. வெள்ளாடுகள், பசுக்கள் மற்றும் மயிலின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது.(92,93) உலர்ந்த இறைச்சியையும், பழைய இறைச்சியையும் ஒருவன் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் எவனும் உப்பைத் தன் கையில் எடுத்து ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போல, இரவில் தயிர் மற்றும் கரைத்தமாவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருவன் தவிர்க்க வேண்டும். ஒருவன் காலையில் ஒரு முறையும், மாலையில் ஒருமுறையும் தவிர உள்ள இடைவெளியில் உணவனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(94,95)
மயிர் காணப்படும் எந்த உணவையும் ஒருவன் ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போலப் பகைவனின் சிராத்தத்திலும் ஒருவன் உண்ணக்கூடாது. ஒருவன் அமைதியாக உண்ண வேண்டும்; மேலாடையால் தன் மேனியை மறைத்துக் கொள்ளாமல், அமராமல் ஒருபோதும் உண்ணக்கூடாது.(96) எந்த உணவையும் வெறுந்தரையில் இட்டு உண்ணக்கூடாது. அமர்ந்த நிலை தவிர வேறு எந்த நிலையிலும் ஒருபோது உண்ணக்கூடாது. ஒருவன் உண்ணும்போது எந்த ஒலியையும் உண்டாக்கக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தன் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு முதலில் நீரையும், உணவையும் காணிக்கை அளித்து, இவ்வாறு விருந்தினருக்குத் தொண்டாற்றிய பிறகே தான் உண்ண அமர வேண்டும். நண்பர்களுடன் வரிசையில் அமர்ந்து, நண்பர்களுக்குக் கொடுக்காமல் எந்த உணவையும் உண்பவன் கடும் நஞ்சை உண்பதாகச் சொல்லப்படுகிறது. நீர், பாயஸம், மாவு, தயிர், நெய், தேன் ஆகியவற்றைப் பொறுத்தவரையில்,(97-99) ஒருவன் பருகிய பிறகு, அல்லது உண்டபிறகு எஞ்சியவற்றை ஒருபோதும் பிறருக்குக் கொடுக்கக்கூடாது. ஓ! மனிதர்களின் தலைவா, ஒருவன் எந்த உணவையும் ஐயத்துடனே உண்ணக்கூடாது[13].(100)
நன்மையை விரும்பும் ஒருவன், உணவை நிறைவு செய்த பிறகு ஒருபோதும் தயிரைக் குடிக்கக்கூடாது. உணவு உண்ட பிறகு ஒருவன் தன் வாயையும் முகத்தையும் தன் (வலக்) கரத்தால் மட்டுமே கழுவிக் கொண்டு, சிறிதளவு நீரை எடுத்து வலக்காலின் பெருவிரலை அதில் மூழ்கச் செய்ய வேண்டும்.(101) கழுவிய பிறகு, உச்சந்தலையைத் தன் (வலக்) கரத்தால் தீண்ட வேண்டும். அடுத்ததாகக் குவிந்த கவனத்துடன் நெருப்பைத் தீண்ட வேண்டும்.(102) இந்த விதிமுறைகள் அனைத்தையும் நோற்பது எவ்வாறு என்பதை அறிந்த மனிதன், தன் உற்றார் உறவினரில் முதன்மையான இடத்தை அடைவதில் வெல்கிறான். உணவை உண்டு முடித்த ஒருவன், தன் மூக்கு, கண்கள், காதுகள், உந்தி மற்றும் தன் இரு கரங்களையும் நீரால் கழுவ வேண்டும்.(103) எனினும், அவன் தன் கரங்களை ஈரமாக வைத்துக் கொள்ளக்கூடாது. கட்டைவிரலின் நுனியில் இருக்கு அடிவரை உள்ள இடத்தில் பிரம்மம் என்றறியப்படும் புனிதமான தீர்த்தம் இருக்கிறது.(104) சுண்டு விரலின் {கட்டைவிரலில் இருந்து ஐந்தாம் விரலின்} பின்பகுதியில் தேவ தீர்த்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதா, கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் {ஆட்காட்டி விரல்}ஆகியவற்றுக்கிடையில் உள்ள இடைவெளியானது, விதிப்படி நீரைத் தீண்டிய பிறகு பித்ரு சடங்குகளைச் செய்வதில் பயன்படுத்தப்பட வேண்டும்[14]. ஒருவன் பிறரை அவதூறு செய்வதில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. அதேபோல ஏற்பில்லா {இனிமையற்ற} எதையும் சொல்லக் கூடாது.(105, 106)
தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், பிறரின் கோபத்தைத் தூண்ட ஒருபோதும் முனையக்கூடாது. ஒருவன், தன் வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட ஒருவனிடம் உரையாட முனையக்கூடாது. அத்தகைய மனிதனைப் பார்ப்பதே தவிர்க்கப்பட வேண்டும்.(107) ஒருவன் வீழ்ந்துவிட்ட மனிதனிடம் ஒருபோதும் தொடர்பு கொள்ளக்கூடாது. அத்தகைய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் அவன் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறான். ஒருவன் பகல் வேளையில் பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. கன்னிகை, வேசி அல்லது மலடியுடன் ஒருபோதும் கலவி கொள்ளக்கூடாது.(108) விலக்குக் காலம் முடிந்து நீராடாத ஒரு பெண்ணுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடக்கூடாது. அறச்செயல்களின் நோக்கில் பல்வேறு அங்கங்களைக் கழுவிய பின்னர் ஒருவன் தன் உதடுகளை மும்முறையும், மீண்டும் இருமுறையும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அவன் தூய்மையடைந்து அறச்சடங்குகளுக்குத் தகுந்தவனாகிறான். பல்வேறு புலனுறுப்புகளையும் ஒருமுறை கழுவி விட்டு, மொத்த உடலிலும் நீர் தெளிக்கப்பட வேண்டும்.(110) இதைச் செய்த பிறகு ஒருவன் வேத விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும்.
ஓ! குரு குலத்தவனே, ஒரு பிராமணனுக்குரிய நன்மைக்கும், தூய்மைக்குமான துப்புரவு செயல்கள் எவை என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்பதற்கு முன்பும், பின்பும், தூய்மை தேவைப்படும் அனைத்துச் செயல்களிலும் ஒரு பிராமணன், பிரம்ம தீர்த்தம் என்றைழைக்கப்படும் பகுதியில் நீரை வைத்து ஆசமனம் செய வேண்டும்[15].(112) தொண்டையில் இருந்து ஒரு துகளை வெளியேற்றினாலோ, உமிழ்ந்தாலோ ஒருவன் வாயைக் கழுவினால்தான் தூய்மையடைவான். ஒருவன் முதிர்ந்தவராக உள்ள உறவினரையோ, ஏழையாக உள்ள நண்பனையோ தன் வீட்டில் நிறுவி, அவரும் தன் குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு அவரை ஆதரிக்க வேண்டும்[16]. இதைச் செய்வதன் மூலம் ஒருவன் புகழையும், நீண்ட வாழ்நாளையும் பெறுவதில் வெல்கிறான். ஒருவனுடைய வீட்டில் புறாக்கள் {பாராவதங்கள் / மாடப்புறாக்கள்} மற்றும் ஆண், பெண் கிளிகள் நிறுவப்படும்போது அஃது {அவ்வீடு} அருள் நிலையால் நிறையும்.(114) ஒருவனுடைய வீட்டில் இருந்தால், துயரை விலக்குவதில் இவை வெல்லும். கரப்பான்பூச்சிகளும் அதையே செய்யும். மின்மினிப்பூச்சிகள், பினந்தின்னிக் கழுகுகள், காட்டுப்புறாக்கள் {கபோதங்கள்}, வண்டுகள் ஆகியன(115) ஒருவனுடைய வீட்டுக்குள் நுழையவோ அங்கு வசிக்கவோ முனைந்தால், தேவர்களைத் தணிவடையச் செய்யும் செயல்கள் செய்யப்பட வேண்டும். அவையும், மீன்கொத்திகளும் தீய சகுனங்களைக் காட்டும் உயிரினங்களாகும்.(116)
ஒருவன் உயர் ஆன்ம மனிதர்களின் ரகசியங்களை வெளியிடக்கூடாது; அவன் தடைசெய்யப்பட்ட பெண்களுடன் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது. மேலும் மன்னனின் மனைவியிடமோ, ராணியின் நண்பர்களுடனோ அத்தகைய கலவியில் ஈடுபடக்கூடாது.(117) ஓ! யுதிஷ்டிரா, மருத்துவர்கள், பிள்ளைகள், முதிர்ந்தவர்கள், பணியாட்கள் ஆகியோரிடம் ஒருபோதும் நெருக்கம் பாராட்டக்கூடாது. நண்பர்கள், பிராமணர்கள் மற்றும் தன்னிடம் பாதுகாப்பு நாடுபவர்கள் ஆகியோரை எப்போதும்அவன் ஆதரிக்க வேண்டும். ஓ! மன்னா, இதைச் செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஞானம் கொண்ட ஒருவன் தன் நன்மையில் விருப்பம் கொண்டவனாக இருந்தால், ஒரு பிராமணர்கள் மற்றும் தொழிலில் திறன்மிக்க ஒரு பொறியாளர் {சிற்பி} ஆகியோரின் துணையுடன் கட்டப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும்[17]. ஓ! மன்னா, மாலை சந்திப் பொழுதில் ஒருவன் உறங்கக்கூடாது. அத்தகைய காலத்தில் ஒருவன் எத்துறையின் ஞானத்தையும் அடையப் படிப்பதிலும் ஈடுபடக்கூடாது.(118-120) புத்திமானான ஒருவன் அத்தகைய நேரத்தில் ஒருபோதும் உண்ணக்கூடாது. இவ்வழியில் செயல்படுவதால் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஒருவன் பித்ருக்களைக் கௌரவிக்கும் எந்தச் சடங்கையும் ஒருபோதும் இரவில் செய்யக்கூடாது. ஒருவன் உணவு உண்ட பிறகு தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.(121) தன் முன்னேற்றத்தில் விருப்பமுள்ள ஒருவன் இரவில் நீராடக்கூடாது. ஓ! பாரதா, இரவில் மாவை உண்பதையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(122)
உணவு மற்றும் பானங்களில் எஞ்சியவையும், தேவர்களுக்கு வழிபாடு செய்யப் பயன்படுத்திய மலர்களையும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இரவில் விருந்தினரை அழைத்து, நிறைவடையும் அளவுக்கு உண்ணச் சொல்லி அதீத மதிப்புடன் அவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது. அதே போல, தானும் நிறைவடையும் அளவுக்கு இரவில் உண்ணக்கூடாது.(123) ஒருவன் ஒரு பறவைக்கு உணவூட்டிய பிறகு (அதை உண்பதற்காகக்) கொல்லக்கூடாது. ஞானம் கொண்ட ஒருவன், ஓ! பாரதா, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவளும், மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், சரியான வயதைக் கொண்டவளுமான ஒரு கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும். அவளிடம் பிள்ளைகளைப் பெற்று, அந்த வழிமுறையின் மூலம் தன் குலத்தைத் தழைக்கச் செய்து,(124,125) ஓ! ஏகாதிபதி, தன் மகன்கள் பொது அறிவையும், குடும்பப் பழக்க வழக்கங்களின் அறிவையும் அடைவதற்காக அவர்களை ஒரு நல்ல ஆசானிடம் அனுப்பி வைக்க வேண்டும். ஒருவன் பெறும் மகள்களை, மதிப்பிற்குரிய குடும்பங்களைச் சார்ந்தவர்களும், புத்தி கொண்டவர்களுமான இளைஞர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.(126) ஓ! பாரதா, குடும்ப மரபுரிமைகளில் ஒரு பகுதியை மகன்களுக்கான வாழ்வாதாரமாகக் கொடுத்து அவர்களை அவற்றில் நிறுவ வேண்டும். பித்ருக்கள் அல்லது தேவர்களைக் கௌரவிக்கும் எந்தச் செயலில் ஈடுபடும் முன்பும் ஒருவன் தன் தலையை நீரில் மூழ்கச் செய்து நீராட வேண்டும்.(127)
ஒருவன் தன் சொந்த திதியில் {தான் பிறந்த அதே திதியில்} ஒருபோதும் சிராத்தம் செய்யக்கூடாது. ஓ! பாரதா, (முந்தைய அல்லது பிந்தைய) பாத்ரபதங்கள் {பூரட்டாதி, உத்தரட்டாதி ஆகிய} இரண்டிலும், கிருத்திகை நட்சத்திரத்திலும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது.(128) கடுமையானவையாகக் கருதத்தக்க (அஷ்லேஷம் {ஆயில்யம்} முதலிய) நட்சத்திரங்களிலும், கணக்கீட்டில் பகையாகத் தெரிபவை எதனிலும் ஒருபோதும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது. உண்மையில் இவ்வகையில் கணிய {ஜோதிட} சாத்திரங்களில் தடை செய்யப்பட்ட இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் {சிராத்தம் செய்வதற்குத்} தவிர்க்கப்பட வேண்டும்.(129) ஒருவன் நாவிதர் முடி மழிக்கும்போது கிழக்கையோ, வடக்கையோ நோக்கி இருக்க வேண்டும். ஓ! பெரும் மன்னா, அவ்வாறு செய்வதால் நீண்ட வாழ்நாளை அடைவதில் அவன் வெல்கிறான்.(130) ஓ! பாரதர்களின் தலைவா, ஒருவன், பிறரைக் குறித்த அவதூறு பேசுவது, தன்வெறுப்பில் தன்னைத் தானே கடிந்து கொள்வது ஆகியவற்றில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறரை அவதூறு செய்வதும், தன்னையே தூற்றிக் கொள்வதும் பாவம் நிறைந்த செயல்களாகும்.(131) அங்கக் குறைபாடு உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஒரு கன்னிகையே இருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரே பிரவரங்களைக் கொண்ட {ஒரே கோத்திரத்தில் பிறந்த} பெண் தவிர்க்கப்பட வேண்டும்; ஒழுங்கற்ற உறுப்புகளைக் கொண்ட பெண்ணும், தன் தாய் சார்ந்த குலத்தில் பிறந்த பெண்ணும் தவிர்க்கப்பட வேண்டும்.(132)
ஞானம் கொண்ட ஒருவன், முதிய பெண், காட்டு வாழ்க்கை வாழ இல்லற வாழ்வுமுறையைக் கைவிட்டவள், கணவனுக்கு உண்மையுள்ள பெண், நலமற்ற பிறப்புறுப்புகளைக் கொண்டவள் ஆகியோரிடம் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது.(133) மஞ்சள் நிறம் கொண்டவள், தொழுநோயால் பீடிக்கப்பட்டவள், வலிப்புநோய் உள்ள குடும்பத்தில் பிறந்தவள், பிறப்பு மற்றும் பழக்க வழக்கங்களில் தாழ்ந்தவள்,(134) சிவித்ரி (தொழுநோய்} என்றழைக்கப்படும் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள், விரைவில் மரணம் நேரும் குலத்தில் பிறந்தவள் ஆகியோரையும் திருமணம் செய்து கொள்வது தகாது. மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், பல்வேறு வகைத் தகுதிகளை நிறைவு செய்பவளும்,(135) ஏற்புடையவளும் {இனிமையானவளும்}, அழகானவளுமான ஒரு கன்னிகையே திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தன்னை விட உயர்ந்த குடும்பம் அல்லது குறைந்தது சமமான குடும்பத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.(136) தன் செழிப்பை விரும்பும் ஒருவன், தாழ்ந்த வகை {வர்ணப்} பெண்ணையோ, தான் பிறந்த வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட பெண்ணையோ ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. கவனமாக நெருப்பை மூட்டும் ஒருவன், வேதங்கள் அறிவித்திருக்கும், அல்லது பிராமணங்கள் {வேதசடங்குகள்} விதித்திருக்கும் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்ற வேண்டும். ஒருவன் ஒருபோதும் பெண்களுக்குத் தீங்கிழைக்க முனையக்கூடாது. மனைவிகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.(137,138)
வன்மம் எப்போதும் வாழ்வைக் குறுக்கும். எனவே, ஒருவன் வன்மம் வளர்ப்பதை எப்போதும் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதில் உறக்கம் வாழ்வைக் குறுக்குகிறது. சூரியன் எழுந்த பிறகும் உறங்குவது வாழ்வை குறுக்குகிறது.(139) சந்திப் பொழுதுகள், இரவின் தொடக்கத்திலும் உறங்குபவன், தூய்மையற்ற நிலையில் உறங்கச் செல்பவன் ஆகியோர் தங்கள் வாழ்வைக் குறைத்துக் கொள்கின்றனர். பிறன்மனைநயத்தல் எப்போதும் வாழ்வைக் குறுக்குகிறது. ஒருவன் சவரம் செய்த பிறகு தூய்மையற்ற நிலையில் இருக்கக்கூடாது[18].(140) ஓ! பாரதா, மாலைப்பொழுதில் ஒருவன் படிப்பதையோ, வேதம் உரைப்பதையோ, உண்பதையோ, நீராடுவதையோ கவனமாகத் தவிர்க்க வேண்டும்.(141) மாலை சந்தி வரும்போது ஒருவன் எச்செயலையும் செய்யாமல் தியானத்திற்காகத் தனது புலன்கள் அனைத்தையும் திரட்ட வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு பிராமணர்களை வணங்க வேண்டும்.(142)
உண்மையில் ஒருவன் தேவர்களை வழிபடுவதற்கு முன்னரும், ஆசானை மரியாதையாக வணங்குவதற்கு முன்னரும் நீராட வேண்டும். ஒருவன் அழைக்கப்படாமல் ஒருபோதும் வேள்விக்குச் செல்லக்கூடாது. உண்மையில், ஒருவன் வேள்வி எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் காண்பதற்கு மட்டுமே விரும்பினால் அவன் அழைப்பில்லாமலேயே அங்கே செல்லலாம். ஒருவன் (ஏதோ ஓர் காரணத்திற்காக) அழைப்பில்லாமல் ஒரு வேள்விக்குச் சென்றாலும், அவ்வகையில் வேள்வி செய்பவனிடம் இருந்து அவன் உரிய வழிபாட்டைப் பெறவில்லையெனில் அவனுடைய வாழ்வுக் காலம் குறைகிறது. அந்நியர் பகுதிகளுக்கு ஒருவன் தனித்துப் பயணம் செல்லக்கூடாது. அதே போல இரவில் எந்த இடத்திற்கும் தனித்துச் செல்லக்கூடாது.(143,144) மாலை வருவதற்கு முன்பே ஒருவன் தன் வீட்டிற்குத் திரும்பி அதற்குள்ளேயே இருக்க வேண்டும். ஒருவன் தனது தாய், தந்தை மற்றும் ஆசானின் ஆணைகள் நன்மை விளைவிக்குமா, இல்லையா என்று தீர்மானிக்காமலேயே அவற்றுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் பெருங்கவனத்துடன் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் கவனிக்க வேண்டும்.(145,146) ஓ! மன்னா, யானை, குதிரை மற்றும் தேர் ஏற்றப் பயிற்சிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். இவற்றைக் கவனமாகக் கவனிக்கும் மனிதன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(147)
அத்தகைய மன்னன் பகைவர்களால் வெல்லப்படமுடியாதவனாகி தன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரில் தன்னைவிடச் சிறந்தவன் யாருமின்றி அவர்களை ஆள்வதில் வெல்கிறான். அத்தகைய நிலைய அடைபவனும், குடிமக்களைக் காக்கும் கடமையைக் கவனமாகச் செய்பவனுமான மன்னன் ஒருபோதும் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டான்.(148) ஓ! மன்னா, காரண அறிவியல், சொல்லறிவியல், கந்தர்வர்களின் அறிவியல், கலை என்ற பெயரில் அறியப்படும் அறிவின் அறுபத்துநான்கு கிளைகளையும் {கலைகளையும்} நீ அடைய வேண்டும்.(149) ஒருவன் நாள்தோறும் புராணங்கள், இதிகாசங்கள், மற்றும் உயர் ஆன்மா மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள் ஆகியவற்றை மனத்தில் கொள்ள வேண்டும்.(150) ஒருவனுடைய மனைவி விலக்கப்பட்ட காலத்தைக் கடக்கும்போது ஒருவன் அவளுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடாமல், உரையாடுவதற்கு அவளை அழைக்காமலும் இருக்க வேண்டும். ஞானம் கொண்ட மனிதன், நான்காம் நாளில் தூய்மைக்காக நீராடிய பிறகே அவளுடைய தோழமையை ஏற்க வேண்டும்.(151) விலக்குக் காலம் முதலில் தோன்றியதில் இருந்து ஐந்தாம் நாளில் ஒருவன் கலவியில் ஈடுபட்டால் அவன் மகளைப் பெறுகிறான். ஆறாம் நாளில் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் மகனை அடைகிறான். ஞானம் கொண்ட மனிதன், கலவி காரியத்தில் (ஒற்றைப்படை, இரட்டைப்படை என்ற) இவ்விதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.(152)
திருமணத்தின் மூலமாக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். ஒருவன் தன் சிறந்த சக்தியின்படி வேள்விகளில் தேவர்களைத் துதித்து, பல்வேறு வகைப் பொருட்களை வேள்வி தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(153) ஓ! மன்னா, இல்லற வாழ்வுமுறைக்காக {கிருஹஸ்தாஸ்ரமத்திற்காக} விதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ஒருவன் காட்டுத்துறவியின் {வானப்ரஸ்தாஸ்ரம} வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். நீண்ட காலம் வாழ்வதில் வெல்லும் மனிதர்களின் குறியீடுக்ள அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்.(154) ஓ! யுதிஷ்டிரா, என்னிடம் இருந்து கேட்கப்படாமல் எஞ்சியிருப்பதை நீ மூன்றுவேதங்களையும் நன்கறிந்த மனிதர்களின் வாய்களில் இருந்து கேட்க வேண்டும். ஒழுக்கமே செழிப்பின் வேர் என்பதை நீ அறிய வேண்டும். ஒழுக்கமே புகழை அதிகரிக்கிறது.(155) ஒழுக்கமே வாழ்நாளையும் நீட்டிக்கிறது. ஒழுக்கமே தீமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் அழிக்கிறது. ஒழுக்கமே அனைத்து வகை ஞானங்களுக்கும் மேன்மையானது எனச் சொல்லப்படுகிறது.(156) ஒழுக்கமே அறத்தை உண்டாக்குகிறது, அறமே வாழ்வை நீட்டிக்கிறது. ஒழுக்கமே புகழையும், நீண்ட வாழ்நாளையும், சொர்க்கத்தையும் விளைவிக்கிறது. ஒழுக்கமே (அனைத்து வகை நன்மைகளையும் கொண்டு வருவதற்குத்) தேவர்களைத் தணிவடையச் செய்யும் பெருந் திறன்மிக்கச் சடங்காகும். சுயம்புவான பிரம்மனே ஒருவன் அனைத்து வகை மனிதரிடமும் கருணை காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(157)
[5] "ஸம்யாவம் என்பது நெய்யில் வறுக்கப்பட்டு {உலக்கையில்} குத்தப்பட்டு மீண்டும் சர்க்கரை மற்றும் மசாலா பொருட்களுடன் நெய்யில் வறுக்கப்பட்ட புளிப்பில்லாத ரொட்டியாகும். கிருஸரம் என்பது பால், எள், அரிசி, சர்க்கரை மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்துச் செய்யப்பட்ட ஒருவகை நீர்மை உணவாகும். சஸ்குலீ என்பது வேகவைத்த ஒருவகைத் துண்டமாகும். பாயஸம் என்பது சர்க்கரை கலந்த பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், ஸம்யாவம் என்பது "அரிசிச்சோறு" என்றும் சஸ்குலீ என்பது "முறுக்கு" என்றும் இருக்கிறது.
[6] கும்பகோணம் பதிப்பில், "சூர்யோதயமான பின் படுத்திருக்கலாகாது. அப்படியிருந்தால் பிராயச்சித்தத்திற்கு உரியவனாவான். தூங்கி எழுந்தவுடன் தாய் தந்தயரை முதலிலும், பிறகு ஆசாரியனையும், வேறு பெரியோரையும் வந்தனம் செய்ய வேண்டும். அதனால் தீர்க்காயுளை அடைவான். சாஸ்திரத்திற்கு விலக்கான பற்கொம்புகளை எப்போடும் விட்டுவிட வேண்டும். சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டவற்றை உபயோகிக்க வேண்டும். அவற்றையும் அமாவாஸை முதலி காலங்களில் விட வேண்டும். எப்போதும் வடக்கு முகமாகவே சௌசம் சய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
ஒருவன் முதலில் தன் பற்களைக் கழுவாமல் தேவர்களை வழிபடக்கூடாது. மேலும் முதலில் தேவர்களை வழிபடாமல், தன் ஆசானையோ, வயதில் முதிர்ந்த ஒருவரையோ, ஓர் அறவோரையோ, ஞானம் கொண்டவரையோ தவிர்த்து வேறு யாரிடமும் செல்லக்கூடாது. ஞானமுள்ளவர்கள், பளபளப்பாக்கப்படாத, மாசுள்ள கண்ணாடியில் ஒருபோதும் தங்களைக் காணமாட்டார்கள்.(46,47) ஒருவன் தான் அறியாத பெண்ணுடனோ, கருவுற்றிருக்கும் பெண்ணுடனோ பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.(48) ஒருவன் வடக்கிலோ, மேற்கிலோ தலைவைத்து ஒருபோதும் உறங்கக்கூடாது. அவன் உடைந்ததும், தளர்ந்ததுமான படுக்கையில் படுக்கக்கூடாது.(49) ஒருவன் விளக்கின் உதவியுடன் முதலில் படுக்கையைச் சோதிக்காமல் அதில் படுக்கக்கூடாது. மேலும் தன் அருகில் (மனைவி போன்ற) மற்றொருவருடன் சேர்ந்து படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் குறுக்குத் திசையில் படுக்கக்கூடாது. அவன் ஒருபோதும் நாத்திகர்களுக்கு அடங்கியிருக்கக்கூடாது, அல்லது அவர்களுக்கு இணக்கமான எதையும் செய்யக்கூடாது[7].(50)
[7] கும்பகோணம் பதிப்பில், "தெரிந்தவன் வடக்கும், மேற்கும் தலைவைத்துப் படுக்கலாகாது; கிழக்கும், தெற்கும் தலைவைத்துப் படுக்கலாம். உடைந்ததும், தளர்ந்ததுமான படுக்கையில் படுக்கலாகாது. மறைவானவிடத்திலும், ஜனங்களுள்ளவிடத்திலும் குறுக்காகவும் ஒருகாலும் படுக்கலாகாது. காரியத்திற்காகவாவது, உடன்படிக்கையினாலாவது நாஸ்திகர்களுடன் சேர்ந்து போகலாகாது" என்றிருக்கிறது.
ஒருவன் ஓர் இருக்கையைத் தன் காலால் இழுத்து அதில் அமரக்கூடாது. ஒருவன் நிர்வாண நிலையிலோ, இரவிலோ ஒருபோதும் நீராடக்கூடாது.(51) புத்தியுள்ள ஒருவன் நீராடிய பிறகு தன் உறுப்புகளைத் தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது. முதலில் நீராடாமல் ஒருபோதும் {சந்தனம் போன்ற} களிம்புகளைத் தன் உடலில் பூசக்கூடாது. நீராடிய பிறகு அவன் ஒருபோதும் தன் ஆடையை (காய வைக்கும் நோக்கில்) காற்றில் அசைக்கக்கூடாது.(52) ஒருவன் ஒவ்வொரு நாளும் ஈரமான ஆடைகளை உடுத்தக்கூடாது. அவன் தான் அணியும் மலர்மாலைகளை எடுக்கக்கூடாது. அதேபோல வெளிப்புற ஆடைகளுக்கு மேல் அத்தகைய மாலைகளை ஒருபோதும் அணியக்கூடாது.(53) ஒருவன் பெண்ணுக்கான இயக்க மாறுபாட்டு {வீட்டுக்கு விலக்கான} காலத்தில் அவளுடன் பேசவும் கூடாது. அவன் இயற்கையின் அழைப்புகளுக்கு (பயிர் விளையும்) களத்திலோ {வயலிலோ}, மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அருகிலோ பதிலளிக்கக்கூடாது {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடாது}[8].(54) ஒருவன் நீர்வெளியில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. ஒருவன் எந்த உணவையும் உண்ணும் முன்பு மூன்று முறைகள் தன் வாயைக் கழுவ வேண்டும்.(55)
[8] கும்பகோணம் பதிப்பில், "பூமாலைகளைத் தொங்கவிடவும், வெளிப்படச் சூட்டிக் கொள்ளவுங்கூடாது. தூரஸ்திரீயுடன் ஒருகாலும் ஸம்பாஷணை செய்யலாகாது. வயலிலும், வழியினருகிலும் மலவிஸர்ஜனம் செய்யலாகாது. ஜலத்திலும், தேவாலயத்திலும், பசுக்கூட்டத்திலும், நாற்சந்தியிலும், பயிர்களிலும், ஜனங்கள் தங்குமிடத்திலும் ஒருபோதும் மலமூத்திர விஸர்ஜனங்களைச் செய்யலாகாது" என்றிருக்கிறது.
உணவு உண்டு முடித்த பிறகு அவன் மூன்று முறையும், மீண்டும் இரண்டு முறையும் {ஆக மொத்தம் ஐந்து முறைகள்} தன் வாயையைக் கழுவ வேண்டும். ஒருவன் பேச்சைக்கட்டுப்படுத்திக் கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ணும் உணவை நிந்திக்காமல் உண்ண வேண்டும்.(56) ஒருவன் தான் உண்பதற்காகத் தனக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் உணவில் எப்போதும் மிச்சம் வைக்க வேண்டும். தன் உணவை உண்டு முடித்ததும் ஒருவன் நெருப்பை மனத்தால் தீண்ட வேண்டும்[9]. ஒருவன் கிழக்குத் திசை நோக்கி உண்டால் அவன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாவான். தெற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெரும் புகழை அடைவான்.(57) மேற்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பெருஞ்செல்வத்தை அடைகிறான். வடக்கு நோக்கி உண்பதன் மூலம் ஒருவன் பேச்சில் வாய்மை நிறைந்தவனாகிறான். ஒருவன் தன் உணவை உண்ட பிறகு மேலுடலின் துளைகள் அனைத்தையும் நீரால் துடைக்க வேண்டும்.(58) அதே போல அனைத்து அங்கங்களையும், உந்தியையும், உள்ளங்கைகளையும் நீரால் கழுவ வேண்டும். ஒருவன் உமியின் மீதோ, மயிரின் மீதோ, சாம்பலின் மீதோ, எலும்புகளின் மீதோ ஒருபோதும் அமரக்கூடாது.(59) ஒருவன், மற்றொருவன் நீராடிய, பயன்படுத்தி நீரை எக்காரணத்தினாலும் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் தேவர்களைத் தணிவைடையச் செய்வதற்கு ஹோமத்தை எப்போதும் செய்து, சாவித்திரி மந்திரங்களையும் உரைக்க வேண்டும்.(60)
[9] கும்பகோணம் பதிப்பில், "அன்னம் புசிப்பதற்கு முன்னும் பின்னும் மும்மூன்று முறை ஜலத்தை ஆசமனம் செய்ய வேண்டும். இரண்டு தரம் வாயைத் துடைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் மௌனத்தோடு கிழக்குமுகமாக அன்னத்தைத் தூஷிக்காமல் சாப்பிட வேண்டும். மனப்பூர்வமாய்ச் சிறிது எறிய வேண்டும். புசித்த பிறகு அக்நியைத் தொட வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "தணற்சூட்டில் கையைக் காய்ச்சி கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
ஒருவன் எப்போதும் அமர்ந்தே உண்ண வேண்டும். ஒருபோதும் நடந்து கொண்டே உண்ணக்கூடாது. ஒருவன் நின்ற நிலையில் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது. சாம்பலிலோ, மாட்டுக் கொட்டிலிலோ அவன் ஒருபோதும் இயற்கையின் அழைப்புக்குப் பதிலளிக்கக்கூடாது.(61) ஒருவன் உண்ண அமர்வதன் முன்னர்த் தன் பாதங்களைக் கழுவ வேண்டும். ஒருவன் ஈரக்கால்களுடன் ஒருபோதும் அமரவோ, உறங்குவதற்காகப் படுக்கவோ கூடாது. கால் கழுவிய பிறகு அமர்ந்து உண்ணும் ஒருவன் நூறு வருடங்கள் வாழ்கிறான்.(62) ஒருவன் தூய்மையற்ற நிலையில் இருக்கும்போது, பெருஞ்சக்தி கொண்ட நெருப்பு, பசு மற்றும் பிராமணன் என்ற மூவரையும் ஒருபோதும் தீண்டக்கூடாது. இந்த விதியைக் கடைப்பிடிப்பதால் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்.(63) மாசுள்ள நிலையில் இருக்கும்போது பெருஞ்சக்தி கொண்ட சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் மூன்றிலும் கண்களைச் செலுத்தக்கூடாது.(64) ஓர் இளைஞனின் வீட்டிற்கு, மதிக்கத்தகுந்த ஒரு முதியவர் வந்தால், அவனுடைய {அந்த இளைஞனின்} உயர் மூச்சுகள் மேல்நோக்கிச் செல்கின்றன. அவன் எழுந்து நின்று, தன் விருந்தினரை முறையாக வணங்கும்போதே அதைத் திரும்பப் பெறுகிறான்.(65)
முதியவர்கள் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் அவர்களைக் கண்டதும் தன் கரத்தால் இருக்கை அளிக்க வேண்டும். அந்த முதியவர் அமர்ந்த பிறகு, தானும் அமர்ந்து கூப்பிய கரங்களுடன் இருக்க வேண்டும். ஒரு பெரியவர் சாலையில் செல்லும்போது அவன் அவரைப் பின்தொடர வேண்டுமேயன்றி அவருக்கு முன் நடக்கக்கூடாது.(66) ஒருவன் கிழிந்த, அல்லது உடைந்த இருக்கையில் அமரக்கூடாது. அவன் உடைந்த வெண்கலப் பாத்திரத்தை மீண்டும் பயன்படுத்தாமல் அதைக் கைவிட வேண்டும். ஒருவன் மேலாடை அணிந்து தன் உடலை மூடாமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. அவன் நிர்வாண நிலையில் ஒருபோதும் நீராடக் கூடாது. நிர்வாண நிலையில் ஒருபோதும் உறங்கக்கூடாது[10].(67) அடுத்தவர் உணவில் எஞ்சியவற்றையும், தட்டுகளையும் ஒருவன் ஒருபோதும் தீண்டக்கூடாது. உயிர் மூச்சுகள் அனைத்தும் தலையிலியே குவிந்திருப்பதாகச் சாத்திரங்களில் சொல்லப்படுவதால், ஒருவன் தான் தூய்மையற்ற {மாசுள்ள} நிலையில் இருக்கும்போது ஒருபோதும் மற்றொருவனின் தலையைத் தீண்டக்கூடாது.(68) ஒருவன் ஒருபோதும் மற்றொருவரின் தலையைத் தாக்கவோ, மற்றொருவனின் மயிரைப் பற்றவோ கூடாது. இரண்டு கைகளையும் சேர்த்து ஒருவன் தன் தலையைச் சொறியக்கூடாது.(69) ஒருவன் நீராடும்போது, மீண்டும் மீண்டும் தன் தலையை நீரில் மூழ்கச் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது ஒருவனுடைய வாழ்நாளைக் குறைக்கும். நீரில் தலை மூழ்கி நீராடியவன் அதன் பிறகு தன்னுடலின் எந்தப் பகுதியிலும் எண்ணெய் பூசக் கூடாது.(70)
[10] கும்பகோணம் பதிப்பில், "உடைந்த ஆசனத்தில் உட்காரலாகாது. உடைந்த வெண்கலப் பாத்திரத்தைத் தள்ளிவிட வேண்டும். ஒற்றை வஸ்திரத்துடன் புசிக்கலாகாது. வஸ்திரமில்லாமல் ஸ்நானம் செய்யத்தகாது. வஸ்திரமில்லாமலும் சுத்தமில்லாமலும் படுக்கவும் தூங்கவும் கூடாது" என்றிருக்கிறது.
ஒருவன் சிறிதளவு எள்ளை உண்ணாமல் ஒருபோதும் உணவு உண்ணக்கூடாது[11]. ஒருவன் தூய்மையற்றிருக்கும் காலத்தில் ஒருபோதும் (வேதங்களையோ, வேறு சாத்திரங்களையோ) கற்பிக்கக்கூடாது. அதேபோலத் தூய்மையற்றிருக்கும்போது ஒருவன் கற்கவும் கூடாது.(71) புயல் எழும்போது, சுற்றுச்சூழலில் கெட்ட வாடை ஊட்புகும்போதோ ஒருவன் வேதங்களைக் குறித்து நினைக்கக்கூடாது. பழைய வரலாற்றை அறிந்தவர்கள் பழங்காலத்தில் யமனால் பாடப்பட்ட காதையை உரைக்கிறார்கள். தூய்மையற்றவனாயிருக்கையில் ஓடுபவனோ, அத்தகைய சூழ்நிலையில் வேதங்கற்பவனோ, உண்மையில் மறுபிறப்பாள பிராமணனே ஆனாலும் தகாத காலங்களில் வேதம்படிப்பவன் தன் வேதத்தை இழந்து தன் வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான்.(72-74) எனவே, தடைசெய்யப்பட்ட காலங்களில் குவிந்த கவனத்துடன் ஒருவன் ஒருபோதும் வேதங்கற்கக்கூடாது.
[11] கும்பகோணம் பதிப்பில், "ஸாரமெல்லாம் போன எள் பிண்ணாக்கைப் புசிக்கலாகாது" என்றிருக்கிறது.
சூரியனை நோக்கியோ, சுடர்மிக்க நெருப்பை நோக்கியோ, பசுவை நோக்கியோ, ஒரு மறுபிறப்பாள மனிதனை நோக்கியோ, சாலையிலோ இயற்கையில் அழைப்புக்குப் பதில் சொல்பவன் குறைந்த காலமே வாழ்கிறான். பகல் வேளையில் இயற்கையின் அழைப்புகள் இரண்டுக்கும் வடக்கு நோக்கி பதிலளிக்க வேண்டும் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டும்}.(75,76) இரவில் அவ்வழைப்புகளுக்குத் தெற்கு நோக்கி பதிலளிக்கலாம். இவ்வாறு செய்வதால் ஒருவன் தன் வாழ்நாளைக் குறைத்துக் கொள்வதில்லை. நீண்ட நாள் வாழ விரும்பும் ஒருவன், பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் பாம்பு ஆகிய மூன்றும் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் ஒருபோதும் அலட்சியம் செய்யவோ, அவமதிக்கவோ கூடாது. இம்மூன்றும் கடும் நஞ்சுமிக்கவையாகும். பாம்பு கோபமடைந்தால் தனக்குக் குற்றமிழைத்தவனைத் தன்னுடைய ஒரே ஒரு பார்வையால் மட்டுமே கூட எரித்துவிடும்.(77,78) க்ஷத்திரியன் கோபப்பட்டாலும் தன் கோபத்துக்குத் தகுந்த பொருளாக இருப்பவனைக் கண்டவுடன் தன் சக்தியால் எரித்துவிடுவான். இவ்விருவரை விடப் பலவானான பிராமணன், தன் கோபத்திற்குரிய பொருளாக இருப்பவனை மட்டுமல்லாமல் அவனுடைய மொத்த குலத்தையும், பார்வையால் மட்டுமல்லாமல் எண்ணத்தாலேயே அழித்து விடுவான்.(79) எனவே, ஞானம் கொண்ட ஒருவன், இம்மூவரிடமும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஒருவன் தன் ஆசானிடம் ஒருபோதும் எந்தச் சச்சரவிலும் ஈடுபடக்கூடாது. ஓ! யுதிஷ்டிரா, ஆசான் கோபமடைந்தால் உரிய கௌரவங்களுடன் அவர் தணிவடையச் செய்யப்பட வேண்டும். ஆசான் சொல்வது மொத்தமும் தவறாக இருந்தாலும், ஒருவன் அவரைப் பின்பற்றிக் கௌரவிக்கவே வேண்டும்.(81) ஆசானுக்கு எதிராக அவதூறு பரப்புவது அவ்வாறு செய்பவர்களின் வாழ்வை ஐயமில்லாமல் எரிக்கும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவாகச் சென்று இயற்கையின் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும். ஒருவன் தன் வசிப்பிடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே தன் கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்.(82) ஒருவன் தன் உணவில் எஞ்சியவற்றையும், பாத்திரங்களையும் {இலைகளையும்} தன் வசிப்பிடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் வீச வேண்டும். உண்மையில் தன் நன்மையில் விருப்பம் உள்ளவன் இவை யாவற்றையும் செய்ய வேண்டும். ஒருவன் சிவப்பு மலர்களாலான மாலைகளை அணியக்கூடாது. உண்மையில் ஞானம் கொண்ட வருவன் வெள்ளை நிற மலர்களாலான மாலைகளையே அணிய வேண்டும்.(83) ஓ! பெரும் வலிமையுள்ளவனே, தாமரையையும், அல்லியையும் புறக்கணித்தாலும், நீரியில் விளைவதாக இருந்தால் ஒருவன் தன் தலையில் சிவப்பு மலரையும் சூடலாம்[12].(84) தங்கத்தாலான மாலை எந்தச் சூழ்நிலையிலும் தூய்மையற்றதாகாது. ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு நீரில் கலந்த நறுமணப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.(85)
[12] கும்பகோணம் பதிப்பில், "ராஜனே, தெரிந்தவர்கள் சிவப்புமாலைகளை அணியலாகாது. தாமரை கருநெய்தல்களைத் தவிர மற்றவற்றில் வெள்ளை மாலைகளையே தரிக்க வேண்டும். தலையில் சிவப்புப் புஷ்பத்தையும், காட்டுப் புஷ்பங்களையும் சுட்டிக் கொள்ளலாம். சண்பகப்பூமாலைக்கு ஒருகாலும் தோஷமில்லை. ராஜனே ஒவ்வொருநாளும் ஸ்நானம் செய்த பிறகு புதிய சந்தனத்தைப் பூசிக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
ஒருவன் அடி உறுப்புகளை மறைப்பதற்கு மேலாடையையும், மேல் உறுப்புகளை மறைப்பதற்குக் கீழாடைகளையும் ஒருபோதும் அணியக்கூடாது. அதே போலப் பிறர் உடுத்திய ஆடைகளையும் ஒருபோதும் அவன் அணியக்கூடாது. மேலும், பக்கவாட்டில் இரு விளிம்புகள் இல்லாத ஆடைகளை ஒருவன் உடுத்தக்கூடாது.(86) ஓ! மன்னா, ஒருவன் படுக்கைக்குச் செல்லும்போது வேறு உடையை உடுத்த வேண்டும். சாலையில் பயணிக்கும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும். அதே போலத் தேவர்களை வழிபடும்போது அவன் வேறு உடையை உடுத்த வேண்டும்.(87) புத்தியுள்ள மனிதன் தன் அங்கங்களில் பிரியங்கு {தினை}, சந்தனம், வில்வம் {வில்வக்காய்}, தகரம் {ஒரு நறுமணப்பொருள் / நந்தியார்வட்டை}, கேஸரம் {கரிசலாங்கண்ணி} ஆகியவற்றாலான களிம்புகளைப் பூச வேண்டும்.(88) உண்ணாவிரதம் நோற்கும் ஒருவன், நீராடுவதன் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஆபரணங்கள் மற்றும் களிம்புகளால் தன் மேனியை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் எப்போதும் பாலினக்கலவியைத் தவிர்க்க வேண்டும்.(89) ஓ! ஏகாதிபதி, ஒருவன் தன் சொந்தக்காரனாகவே இருந்தாலும், ஒரே பதவி கொண்டவனாகவே இருந்தாலும் ஒரே தட்டில் ஒருபோதும் உண்ணக்கூடாது. விலக்கப்பட்ட காலத்தில் உள்ள பெண்ணால் தயாரிக்கப்பட்ட உணவையும் ஒருபோதும் உண்ணக்கூடாது.(90)
ஒருவன் சாறு எடுக்கப்பட்ட எந்த உணவையும் உண்ணவோ, அப்படிப்பட்ட பானத்தைப் பருகவோ கூடாது. அதே போல, ஒருவன் உண்ணும் உணவை விருப்பத்துடன் பார்க்கும் மனிதர்களுக்கு ஒரு பகுதியைக் கொடுக்காமல் ஒருபோதும் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தூய்மையற்ற ஒருவனுடைய அருகில் அமரக்கூடாது. அதே போல அறத்தில் முதன்மையானவர்கள் அருகிலும் அவன் அமரக்கூடாது.(91) அறச்செயல்களில் தடை செய்யப்பட்டிருக்கும் உணவுகள் அனைத்தையும் வேறு சந்தர்ப்பங்களிலும் ஒருபோதும் உண்ணக்கூடாது. தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், அரசமரக் கனி மற்றும் ஆலங்கனிகளையும், சணல் இலைகளையும் மற்றும் அத்திக்கனிகளையும் ஒருபோதும் உண்ணக்கூடாது. வெள்ளாடுகள், பசுக்கள் மற்றும் மயிலின் இறைச்சியை ஒருபோதும் உண்ணக்கூடாது.(92,93) உலர்ந்த இறைச்சியையும், பழைய இறைச்சியையும் ஒருவன் உண்ணக்கூடாது. புத்தியுள்ள மனிதன் எவனும் உப்பைத் தன் கையில் எடுத்து ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போல, இரவில் தயிர் மற்றும் கரைத்தமாவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருவன் தவிர்க்க வேண்டும். ஒருவன் காலையில் ஒரு முறையும், மாலையில் ஒருமுறையும் தவிர உள்ள இடைவெளியில் உணவனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.(94,95)
மயிர் காணப்படும் எந்த உணவையும் ஒருவன் ஒருபோதும் உண்ணக்கூடாது. அதே போலப் பகைவனின் சிராத்தத்திலும் ஒருவன் உண்ணக்கூடாது. ஒருவன் அமைதியாக உண்ண வேண்டும்; மேலாடையால் தன் மேனியை மறைத்துக் கொள்ளாமல், அமராமல் ஒருபோதும் உண்ணக்கூடாது.(96) எந்த உணவையும் வெறுந்தரையில் இட்டு உண்ணக்கூடாது. அமர்ந்த நிலை தவிர வேறு எந்த நிலையிலும் ஒருபோது உண்ணக்கூடாது. ஒருவன் உண்ணும்போது எந்த ஒலியையும் உண்டாக்கக்கூடாது. புத்தியுள்ள மனிதன் தன் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு முதலில் நீரையும், உணவையும் காணிக்கை அளித்து, இவ்வாறு விருந்தினருக்குத் தொண்டாற்றிய பிறகே தான் உண்ண அமர வேண்டும். நண்பர்களுடன் வரிசையில் அமர்ந்து, நண்பர்களுக்குக் கொடுக்காமல் எந்த உணவையும் உண்பவன் கடும் நஞ்சை உண்பதாகச் சொல்லப்படுகிறது. நீர், பாயஸம், மாவு, தயிர், நெய், தேன் ஆகியவற்றைப் பொறுத்தவரையில்,(97-99) ஒருவன் பருகிய பிறகு, அல்லது உண்டபிறகு எஞ்சியவற்றை ஒருபோதும் பிறருக்குக் கொடுக்கக்கூடாது. ஓ! மனிதர்களின் தலைவா, ஒருவன் எந்த உணவையும் ஐயத்துடனே உண்ணக்கூடாது[13].(100)
[13] "ஐயங்கொள்வதற்குச் சில உதாரணங்கள் : இவ்வுணவு செரிக்குமா? இது தூய்மையானதா? அளவு அதிகமானாதா? என நினைப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நன்மையை விரும்பும் ஒருவன், உணவை நிறைவு செய்த பிறகு ஒருபோதும் தயிரைக் குடிக்கக்கூடாது. உணவு உண்ட பிறகு ஒருவன் தன் வாயையும் முகத்தையும் தன் (வலக்) கரத்தால் மட்டுமே கழுவிக் கொண்டு, சிறிதளவு நீரை எடுத்து வலக்காலின் பெருவிரலை அதில் மூழ்கச் செய்ய வேண்டும்.(101) கழுவிய பிறகு, உச்சந்தலையைத் தன் (வலக்) கரத்தால் தீண்ட வேண்டும். அடுத்ததாகக் குவிந்த கவனத்துடன் நெருப்பைத் தீண்ட வேண்டும்.(102) இந்த விதிமுறைகள் அனைத்தையும் நோற்பது எவ்வாறு என்பதை அறிந்த மனிதன், தன் உற்றார் உறவினரில் முதன்மையான இடத்தை அடைவதில் வெல்கிறான். உணவை உண்டு முடித்த ஒருவன், தன் மூக்கு, கண்கள், காதுகள், உந்தி மற்றும் தன் இரு கரங்களையும் நீரால் கழுவ வேண்டும்.(103) எனினும், அவன் தன் கரங்களை ஈரமாக வைத்துக் கொள்ளக்கூடாது. கட்டைவிரலின் நுனியில் இருக்கு அடிவரை உள்ள இடத்தில் பிரம்மம் என்றறியப்படும் புனிதமான தீர்த்தம் இருக்கிறது.(104) சுண்டு விரலின் {கட்டைவிரலில் இருந்து ஐந்தாம் விரலின்} பின்பகுதியில் தேவ தீர்த்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! பாரதா, கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் {ஆட்காட்டி விரல்}ஆகியவற்றுக்கிடையில் உள்ள இடைவெளியானது, விதிப்படி நீரைத் தீண்டிய பிறகு பித்ரு சடங்குகளைச் செய்வதில் பயன்படுத்தப்பட வேண்டும்[14]. ஒருவன் பிறரை அவதூறு செய்வதில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. அதேபோல ஏற்பில்லா {இனிமையற்ற} எதையும் சொல்லக் கூடாது.(105, 106)
[14] "சிராத்தத்தில் சில பொருட்களைக் காணிக்கையளிக்கும்போது, வலக்கரத்தின் இந்தப் பகுதியில் அந்தப் பொருட்களை வைத்து, பித்ருக்களுக்கான மந்திரங்களை உரைத்துக் காணிக்கையளிக்கப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தன் நன்மையில் விருப்பமுள்ள ஒருவன், பிறரின் கோபத்தைத் தூண்ட ஒருபோதும் முனையக்கூடாது. ஒருவன், தன் வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட ஒருவனிடம் உரையாட முனையக்கூடாது. அத்தகைய மனிதனைப் பார்ப்பதே தவிர்க்கப்பட வேண்டும்.(107) ஒருவன் வீழ்ந்துவிட்ட மனிதனிடம் ஒருபோதும் தொடர்பு கொள்ளக்கூடாது. அத்தகைய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் அவன் நீண்ட வாழ்நாளை அடைவதில் வெல்கிறான். ஒருவன் பகல் வேளையில் பாலினக் கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. கன்னிகை, வேசி அல்லது மலடியுடன் ஒருபோதும் கலவி கொள்ளக்கூடாது.(108) விலக்குக் காலம் முடிந்து நீராடாத ஒரு பெண்ணுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடக்கூடாது. அறச்செயல்களின் நோக்கில் பல்வேறு அங்கங்களைக் கழுவிய பின்னர் ஒருவன் தன் உதடுகளை மும்முறையும், மீண்டும் இருமுறையும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அவன் தூய்மையடைந்து அறச்சடங்குகளுக்குத் தகுந்தவனாகிறான். பல்வேறு புலனுறுப்புகளையும் ஒருமுறை கழுவி விட்டு, மொத்த உடலிலும் நீர் தெளிக்கப்பட வேண்டும்.(110) இதைச் செய்த பிறகு ஒருவன் வேத விதிகளுக்கு ஏற்புடைய வகையில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும்.
ஓ! குரு குலத்தவனே, ஒரு பிராமணனுக்குரிய நன்மைக்கும், தூய்மைக்குமான துப்புரவு செயல்கள் எவை என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. உண்பதற்கு முன்பும், பின்பும், தூய்மை தேவைப்படும் அனைத்துச் செயல்களிலும் ஒரு பிராமணன், பிரம்ம தீர்த்தம் என்றைழைக்கப்படும் பகுதியில் நீரை வைத்து ஆசமனம் செய வேண்டும்[15].(112) தொண்டையில் இருந்து ஒரு துகளை வெளியேற்றினாலோ, உமிழ்ந்தாலோ ஒருவன் வாயைக் கழுவினால்தான் தூய்மையடைவான். ஒருவன் முதிர்ந்தவராக உள்ள உறவினரையோ, ஏழையாக உள்ள நண்பனையோ தன் வீட்டில் நிறுவி, அவரும் தன் குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு அவரை ஆதரிக்க வேண்டும்[16]. இதைச் செய்வதன் மூலம் ஒருவன் புகழையும், நீண்ட வாழ்நாளையும் பெறுவதில் வெல்கிறான். ஒருவனுடைய வீட்டில் புறாக்கள் {பாராவதங்கள் / மாடப்புறாக்கள்} மற்றும் ஆண், பெண் கிளிகள் நிறுவப்படும்போது அஃது {அவ்வீடு} அருள் நிலையால் நிறையும்.(114) ஒருவனுடைய வீட்டில் இருந்தால், துயரை விலக்குவதில் இவை வெல்லும். கரப்பான்பூச்சிகளும் அதையே செய்யும். மின்மினிப்பூச்சிகள், பினந்தின்னிக் கழுகுகள், காட்டுப்புறாக்கள் {கபோதங்கள்}, வண்டுகள் ஆகியன(115) ஒருவனுடைய வீட்டுக்குள் நுழையவோ அங்கு வசிக்கவோ முனைந்தால், தேவர்களைத் தணிவடையச் செய்யும் செயல்கள் செய்யப்பட வேண்டும். அவையும், மீன்கொத்திகளும் தீய சகுனங்களைக் காட்டும் உயிரினங்களாகும்.(116)
[15] "சரியாகச் சொல்லப் போனால் ஆசமனம் என்பது கழுவுதல் கிடையாது. ஒருவன் உண்டதும் ஆசமனம் செய்ய வலியுறுத்தப்படுவது கழுவும் செயலையே சுட்டுகிறது. இருப்பினும், அறச்செயல்களைத் தொடங்கும்போது செய்யப்படும் ஆசமனச் சடங்கென்பது உதடுகளையும், இன்னும் சில பகுதிகளையும் நீரால் தொடுவதை மட்டுமே உள்ளடக்கியதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[16] கும்பகோணம் பதிப்பில், "வயது முதிர்ந்தவன், சுற்றத்தவன், சினேகிதன், கணவனில்லாத ஸகோதரி, ஆசாரியர், உயர்குலத்தோன், பண்டிதன் இவர்கள் ஏழையாயிருந்தால் தன்னால் கூடியவரையில் இவர்களைக் காப்பாற்ற வேண்டும். இவர்களை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அது தனத்தையும், ஆயுளையும் கொடுக்கும்" என்றிருக்கிறது.
ஒருவன் உயர் ஆன்ம மனிதர்களின் ரகசியங்களை வெளியிடக்கூடாது; அவன் தடைசெய்யப்பட்ட பெண்களுடன் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது. மேலும் மன்னனின் மனைவியிடமோ, ராணியின் நண்பர்களுடனோ அத்தகைய கலவியில் ஈடுபடக்கூடாது.(117) ஓ! யுதிஷ்டிரா, மருத்துவர்கள், பிள்ளைகள், முதிர்ந்தவர்கள், பணியாட்கள் ஆகியோரிடம் ஒருபோதும் நெருக்கம் பாராட்டக்கூடாது. நண்பர்கள், பிராமணர்கள் மற்றும் தன்னிடம் பாதுகாப்பு நாடுபவர்கள் ஆகியோரை எப்போதும்அவன் ஆதரிக்க வேண்டும். ஓ! மன்னா, இதைச் செய்வதால் அவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஞானம் கொண்ட ஒருவன் தன் நன்மையில் விருப்பம் கொண்டவனாக இருந்தால், ஒரு பிராமணர்கள் மற்றும் தொழிலில் திறன்மிக்க ஒரு பொறியாளர் {சிற்பி} ஆகியோரின் துணையுடன் கட்டப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும்[17]. ஓ! மன்னா, மாலை சந்திப் பொழுதில் ஒருவன் உறங்கக்கூடாது. அத்தகைய காலத்தில் ஒருவன் எத்துறையின் ஞானத்தையும் அடையப் படிப்பதிலும் ஈடுபடக்கூடாது.(118-120) புத்திமானான ஒருவன் அத்தகைய நேரத்தில் ஒருபோதும் உண்ணக்கூடாது. இவ்வழியில் செயல்படுவதால் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான். ஒருவன் பித்ருக்களைக் கௌரவிக்கும் எந்தச் சடங்கையும் ஒருபோதும் இரவில் செய்யக்கூடாது. ஒருவன் உணவு உண்ட பிறகு தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.(121) தன் முன்னேற்றத்தில் விருப்பமுள்ள ஒருவன் இரவில் நீராடக்கூடாது. ஓ! பாரதா, இரவில் மாவை உண்பதையும் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(122)
[17] "நிலத்தைத் தேர்ந்தெடுப்பது, வீடு நிலைகொள்ள வேண்டிய பரிமாணங்களை நிர்ணயிப்பது, கட்டடம் கட்டுவதற்கான பணியைத் தொடங்குவதற்கு நாள் குறிப்பது ஆகியவற்றில் பிராமணரின் உதவி தேவைப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உணவு மற்றும் பானங்களில் எஞ்சியவையும், தேவர்களுக்கு வழிபாடு செய்யப் பயன்படுத்திய மலர்களையும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இரவில் விருந்தினரை அழைத்து, நிறைவடையும் அளவுக்கு உண்ணச் சொல்லி அதீத மதிப்புடன் அவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது. அதே போல, தானும் நிறைவடையும் அளவுக்கு இரவில் உண்ணக்கூடாது.(123) ஒருவன் ஒரு பறவைக்கு உணவூட்டிய பிறகு (அதை உண்பதற்காகக்) கொல்லக்கூடாது. ஞானம் கொண்ட ஒருவன், ஓ! பாரதா, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவளும், மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், சரியான வயதைக் கொண்டவளுமான ஒரு கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும். அவளிடம் பிள்ளைகளைப் பெற்று, அந்த வழிமுறையின் மூலம் தன் குலத்தைத் தழைக்கச் செய்து,(124,125) ஓ! ஏகாதிபதி, தன் மகன்கள் பொது அறிவையும், குடும்பப் பழக்க வழக்கங்களின் அறிவையும் அடைவதற்காக அவர்களை ஒரு நல்ல ஆசானிடம் அனுப்பி வைக்க வேண்டும். ஒருவன் பெறும் மகள்களை, மதிப்பிற்குரிய குடும்பங்களைச் சார்ந்தவர்களும், புத்தி கொண்டவர்களுமான இளைஞர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.(126) ஓ! பாரதா, குடும்ப மரபுரிமைகளில் ஒரு பகுதியை மகன்களுக்கான வாழ்வாதாரமாகக் கொடுத்து அவர்களை அவற்றில் நிறுவ வேண்டும். பித்ருக்கள் அல்லது தேவர்களைக் கௌரவிக்கும் எந்தச் செயலில் ஈடுபடும் முன்பும் ஒருவன் தன் தலையை நீரில் மூழ்கச் செய்து நீராட வேண்டும்.(127)
ஒருவன் தன் சொந்த திதியில் {தான் பிறந்த அதே திதியில்} ஒருபோதும் சிராத்தம் செய்யக்கூடாது. ஓ! பாரதா, (முந்தைய அல்லது பிந்தைய) பாத்ரபதங்கள் {பூரட்டாதி, உத்தரட்டாதி ஆகிய} இரண்டிலும், கிருத்திகை நட்சத்திரத்திலும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது.(128) கடுமையானவையாகக் கருதத்தக்க (அஷ்லேஷம் {ஆயில்யம்} முதலிய) நட்சத்திரங்களிலும், கணக்கீட்டில் பகையாகத் தெரிபவை எதனிலும் ஒருபோதும் சிராத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது. உண்மையில் இவ்வகையில் கணிய {ஜோதிட} சாத்திரங்களில் தடை செய்யப்பட்ட இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் {சிராத்தம் செய்வதற்குத்} தவிர்க்கப்பட வேண்டும்.(129) ஒருவன் நாவிதர் முடி மழிக்கும்போது கிழக்கையோ, வடக்கையோ நோக்கி இருக்க வேண்டும். ஓ! பெரும் மன்னா, அவ்வாறு செய்வதால் நீண்ட வாழ்நாளை அடைவதில் அவன் வெல்கிறான்.(130) ஓ! பாரதர்களின் தலைவா, ஒருவன், பிறரைக் குறித்த அவதூறு பேசுவது, தன்வெறுப்பில் தன்னைத் தானே கடிந்து கொள்வது ஆகியவற்றில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறரை அவதூறு செய்வதும், தன்னையே தூற்றிக் கொள்வதும் பாவம் நிறைந்த செயல்களாகும்.(131) அங்கக் குறைபாடு உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஒரு கன்னிகையே இருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரே பிரவரங்களைக் கொண்ட {ஒரே கோத்திரத்தில் பிறந்த} பெண் தவிர்க்கப்பட வேண்டும்; ஒழுங்கற்ற உறுப்புகளைக் கொண்ட பெண்ணும், தன் தாய் சார்ந்த குலத்தில் பிறந்த பெண்ணும் தவிர்க்கப்பட வேண்டும்.(132)
ஞானம் கொண்ட ஒருவன், முதிய பெண், காட்டு வாழ்க்கை வாழ இல்லற வாழ்வுமுறையைக் கைவிட்டவள், கணவனுக்கு உண்மையுள்ள பெண், நலமற்ற பிறப்புறுப்புகளைக் கொண்டவள் ஆகியோரிடம் ஒருபோதும் பாலினக் கலவியில் ஈடுபடக்கூடாது.(133) மஞ்சள் நிறம் கொண்டவள், தொழுநோயால் பீடிக்கப்பட்டவள், வலிப்புநோய் உள்ள குடும்பத்தில் பிறந்தவள், பிறப்பு மற்றும் பழக்க வழக்கங்களில் தாழ்ந்தவள்,(134) சிவித்ரி (தொழுநோய்} என்றழைக்கப்படும் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள், விரைவில் மரணம் நேரும் குலத்தில் பிறந்தவள் ஆகியோரையும் திருமணம் செய்து கொள்வது தகாது. மங்கலக் குறியீடுகளைக் கொண்டவளும், பல்வேறு வகைத் தகுதிகளை நிறைவு செய்பவளும்,(135) ஏற்புடையவளும் {இனிமையானவளும்}, அழகானவளுமான ஒரு கன்னிகையே திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் தன்னை விட உயர்ந்த குடும்பம் அல்லது குறைந்தது சமமான குடும்பத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.(136) தன் செழிப்பை விரும்பும் ஒருவன், தாழ்ந்த வகை {வர்ணப்} பெண்ணையோ, தான் பிறந்த வகையில் {வர்ணத்தில்} இருந்து வீழ்ந்துவிட்ட பெண்ணையோ ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. கவனமாக நெருப்பை மூட்டும் ஒருவன், வேதங்கள் அறிவித்திருக்கும், அல்லது பிராமணங்கள் {வேதசடங்குகள்} விதித்திருக்கும் அனைத்துச் செயல்களையும் நிறைவேற்ற வேண்டும். ஒருவன் ஒருபோதும் பெண்களுக்குத் தீங்கிழைக்க முனையக்கூடாது. மனைவிகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.(137,138)
வன்மம் எப்போதும் வாழ்வைக் குறுக்கும். எனவே, ஒருவன் வன்மம் வளர்ப்பதை எப்போதும் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதில் உறக்கம் வாழ்வைக் குறுக்குகிறது. சூரியன் எழுந்த பிறகும் உறங்குவது வாழ்வை குறுக்குகிறது.(139) சந்திப் பொழுதுகள், இரவின் தொடக்கத்திலும் உறங்குபவன், தூய்மையற்ற நிலையில் உறங்கச் செல்பவன் ஆகியோர் தங்கள் வாழ்வைக் குறைத்துக் கொள்கின்றனர். பிறன்மனைநயத்தல் எப்போதும் வாழ்வைக் குறுக்குகிறது. ஒருவன் சவரம் செய்த பிறகு தூய்மையற்ற நிலையில் இருக்கக்கூடாது[18].(140) ஓ! பாரதா, மாலைப்பொழுதில் ஒருவன் படிப்பதையோ, வேதம் உரைப்பதையோ, உண்பதையோ, நீராடுவதையோ கவனமாகத் தவிர்க்க வேண்டும்.(141) மாலை சந்தி வரும்போது ஒருவன் எச்செயலையும் செய்யாமல் தியானத்திற்காகத் தனது புலன்கள் அனைத்தையும் திரட்ட வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் நீராடிய பிறகு பிராமணர்களை வணங்க வேண்டும்.(142)
[18] "இங்கே செய்தி என்னவெனில், ஒருவன் சவரசம் செய்த உடன் நீராடச் சொல்லப்படுகிறான். சவரம் செய்த பிறகு நீராடும் வரை ஒருவன் தூய்மையற்றவனாகவே கருதப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில் ஒருவன் தேவர்களை வழிபடுவதற்கு முன்னரும், ஆசானை மரியாதையாக வணங்குவதற்கு முன்னரும் நீராட வேண்டும். ஒருவன் அழைக்கப்படாமல் ஒருபோதும் வேள்விக்குச் செல்லக்கூடாது. உண்மையில், ஒருவன் வேள்வி எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் காண்பதற்கு மட்டுமே விரும்பினால் அவன் அழைப்பில்லாமலேயே அங்கே செல்லலாம். ஒருவன் (ஏதோ ஓர் காரணத்திற்காக) அழைப்பில்லாமல் ஒரு வேள்விக்குச் சென்றாலும், அவ்வகையில் வேள்வி செய்பவனிடம் இருந்து அவன் உரிய வழிபாட்டைப் பெறவில்லையெனில் அவனுடைய வாழ்வுக் காலம் குறைகிறது. அந்நியர் பகுதிகளுக்கு ஒருவன் தனித்துப் பயணம் செல்லக்கூடாது. அதே போல இரவில் எந்த இடத்திற்கும் தனித்துச் செல்லக்கூடாது.(143,144) மாலை வருவதற்கு முன்பே ஒருவன் தன் வீட்டிற்குத் திரும்பி அதற்குள்ளேயே இருக்க வேண்டும். ஒருவன் தனது தாய், தந்தை மற்றும் ஆசானின் ஆணைகள் நன்மை விளைவிக்குமா, இல்லையா என்று தீர்மானிக்காமலேயே அவற்றுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். ஓ! மன்னா, ஒருவன் பெருங்கவனத்துடன் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் கவனிக்க வேண்டும்.(145,146) ஓ! மன்னா, யானை, குதிரை மற்றும் தேர் ஏற்றப் பயிற்சிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். இவற்றைக் கவனமாகக் கவனிக்கும் மனிதன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(147)
அத்தகைய மன்னன் பகைவர்களால் வெல்லப்படமுடியாதவனாகி தன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரில் தன்னைவிடச் சிறந்தவன் யாருமின்றி அவர்களை ஆள்வதில் வெல்கிறான். அத்தகைய நிலைய அடைபவனும், குடிமக்களைக் காக்கும் கடமையைக் கவனமாகச் செய்பவனுமான மன்னன் ஒருபோதும் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டான்.(148) ஓ! மன்னா, காரண அறிவியல், சொல்லறிவியல், கந்தர்வர்களின் அறிவியல், கலை என்ற பெயரில் அறியப்படும் அறிவின் அறுபத்துநான்கு கிளைகளையும் {கலைகளையும்} நீ அடைய வேண்டும்.(149) ஒருவன் நாள்தோறும் புராணங்கள், இதிகாசங்கள், மற்றும் உயர் ஆன்மா மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள் ஆகியவற்றை மனத்தில் கொள்ள வேண்டும்.(150) ஒருவனுடைய மனைவி விலக்கப்பட்ட காலத்தைக் கடக்கும்போது ஒருவன் அவளுடன் ஒருபோதும் கலவியில் ஈடுபடாமல், உரையாடுவதற்கு அவளை அழைக்காமலும் இருக்க வேண்டும். ஞானம் கொண்ட மனிதன், நான்காம் நாளில் தூய்மைக்காக நீராடிய பிறகே அவளுடைய தோழமையை ஏற்க வேண்டும்.(151) விலக்குக் காலம் முதலில் தோன்றியதில் இருந்து ஐந்தாம் நாளில் ஒருவன் கலவியில் ஈடுபட்டால் அவன் மகளைப் பெறுகிறான். ஆறாம் நாளில் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் மகனை அடைகிறான். ஞானம் கொண்ட மனிதன், கலவி காரியத்தில் (ஒற்றைப்படை, இரட்டைப்படை என்ற) இவ்விதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.(152)
திருமணத்தின் மூலமாக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். ஒருவன் தன் சிறந்த சக்தியின்படி வேள்விகளில் தேவர்களைத் துதித்து, பல்வேறு வகைப் பொருட்களை வேள்வி தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(153) ஓ! மன்னா, இல்லற வாழ்வுமுறைக்காக {கிருஹஸ்தாஸ்ரமத்திற்காக} விதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ஒருவன் காட்டுத்துறவியின் {வானப்ரஸ்தாஸ்ரம} வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். நீண்ட காலம் வாழ்வதில் வெல்லும் மனிதர்களின் குறியீடுக்ள அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்.(154) ஓ! யுதிஷ்டிரா, என்னிடம் இருந்து கேட்கப்படாமல் எஞ்சியிருப்பதை நீ மூன்றுவேதங்களையும் நன்கறிந்த மனிதர்களின் வாய்களில் இருந்து கேட்க வேண்டும். ஒழுக்கமே செழிப்பின் வேர் என்பதை நீ அறிய வேண்டும். ஒழுக்கமே புகழை அதிகரிக்கிறது.(155) ஒழுக்கமே வாழ்நாளையும் நீட்டிக்கிறது. ஒழுக்கமே தீமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் அழிக்கிறது. ஒழுக்கமே அனைத்து வகை ஞானங்களுக்கும் மேன்மையானது எனச் சொல்லப்படுகிறது.(156) ஒழுக்கமே அறத்தை உண்டாக்குகிறது, அறமே வாழ்வை நீட்டிக்கிறது. ஒழுக்கமே புகழையும், நீண்ட வாழ்நாளையும், சொர்க்கத்தையும் விளைவிக்கிறது. ஒழுக்கமே (அனைத்து வகை நன்மைகளையும் கொண்டு வருவதற்குத்) தேவர்களைத் தணிவடையச் செய்யும் பெருந் திறன்மிக்கச் சடங்காகும். சுயம்புவான பிரம்மனே ஒருவன் அனைத்து வகை மனிதரிடமும் கருணை காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(157)
அநுசாஸனபர்வம் பகுதி – 104ல் உள்ள சுலோகங்கள் : 157
ஆங்கிலத்தில் | In English |