Elder and younger brothers! | Anusasana-Parva-Section-105 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 83)
பதிவின் சுருக்கம் : அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் நடந்து கொள்ளும் முறை; தந்தைக்குரிய மதிப்பு; தாயின் மகிமை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அண்ணன் தன் தம்பியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தம்பிகள் தங்கள் அண்ணனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, நீ எப்போதும் உன் தம்பிகளிடம் அண்ணனுக்குரிய முறையில் நடந்து கொள்வாயாக. இந்தச் சகோதரர்களுக்கிடையில் நீயே எப்போதும் மூத்தவனாக இருக்கிறாய். ஓர் ஆசான் தன் சீடர்களிடம் எப்போதும் பின்பற்ற வேண்டிய உயர்ந்த ஒழுக்கத்தையே நீ உன் தம்பிகளிடம் பின்பற்றுவாயாக.(2) ஓர் ஆசான் ஞானமில்லாதவராக இருந்தால், சீடன் மதிப்புமிக்க வகையிலோ, முறையான வழியிலோ அவரிடம் நடந்து கொள்ள மாட்டான். ஓ! பாரதா, அந்த ஆசான் தூய்மையையும், உயர்ந்த ஒழுக்கத்தையும் கொண்டவராக இருந்தால், அந்தச் சீடனும் அதே வகை ஒழுக்கத்தை அடைவதில் வெல்வான்.(3) மூத்த சகோதரன் சில வேளைகளில் தன் தம்பிகள் செய்யும் செயல்களைக் கண்டு குருடனாகவும், தான் ஞானம் கொண்டவனாக இருப்பினும் சில வேளைகளில் அவர்கள் செய்யும் செயல்களைப் புரிந்து கொள்ளாதவன் போலவும் இருக்க வேண்டும். தம்பிகள் வரம்புமீறி குற்றம் புரிந்தால் அண்ணன் மறைமுக வழிமுறைகளில் அவர்களைத் திருத்த வேண்டும்.(4) சகோதரர்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து, அண்ணன் நேரடியாகவோ, வெளிப்படையான வழிமுறைகளிலோ தன் தம்பியைத் திருத்தினால், ஓ! குந்தியின் மகனே, அத்தகைய நல்ல புரிந்துணர்வைக் காண்பதால் கவலையில் பீடிக்கப்படும் பகைவர்கள், அவர்களுக்குள் வேற்றுமையை விளைவித்து, சகோதரர்களைப் பிரிப்பதில் தங்களை நிறுவிக் கொண்டு, அவர்களுக்கு ஒற்றுமையின்மை உண்டாக்க எப்போதும் முனைவார்கள்.(5)
ஓர் அண்ணனே, குடும்பத்தின் செழிப்பை அதிகரிக்கவோ, முற்றிலும் அழிக்கவோ செய்வான். அண்ணன் அறிவில்லாதவனாகவும், தீய நடத்தை கொண்டவனாகவும் இருந்தால், அவன் மொத்த குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டு வருவான்.(6) தம்பிகளுக்குத் தீங்கு செய்யும் அண்ணன் மூத்தவனாகக் கருதப்படாமல், தன் குடும்ப உடைமையில் உள்ள தன் பங்கை இழந்து, மன்னனால் அடக்கப்படத் தகுந்தவனாகிறான்.(7) வஞ்சகமாகச் செயல்படும் மனிதன், துன்பமும், அனைத்து வகைத் தீமைகளும் நிறைந்த உலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதனின் பிறப்பு, பிரம்பு மலர்களைப் போலவே எந்தப் பயனுமில்லாததாகும்[1].(8) பாவம் நிறைந்த மனிதன் பிறக்கும் குடும்பமானது அனைத்து வகைத் தீமைகளுக்கும் ஆட்படுகிறது. அத்தகைய மனிதன் புகழ்க்கேட்டைக் கொண்டு வருகிறான், மேலும் அந்தக் குடும்பத்தின் நற்செயல்கள் அனைத்தும் மறைந்து போகும்.(9) தீச்செயல்களில் ஈடுபடும் சகோதரர்கள் குடும்ப உடைமையில் உள்ள தங்கள் பங்குகளை இழக்கிறார்கள். அத்தகைய வழக்கில், அண்ணனானவன் யௌதுக {தன் மனைவி குடும்பத்தின் மூலம் வந்த சீதன} உடைமையில் எந்தப் பங்கையும் தன் தம்பிகளுக்குக் கொடுக்காமல் மொத்தத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.(10)
[1] "பிரம்பு மலர்களைத் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப் பிடுங்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தந்தைவழி உடைமைகளைப் பயன்படுத்தாமல் ஓர் அண்ணன் தொலைவான இடத்திற்குச் செல்வதன் மூலம் எந்த உடைமையையும் ஈட்டினால் அவன் அத்தகைய உடைமைகளில் தன் தம்பிகளுக்கு எந்தப் பங்கையும் கொடுக்காமல் அவற்றைத் தன் சொந்த பயன்பாட்டுக்கே கொள்ளலாம்.(11) பிரியாத சகோதரர்கள், (தங்கள் தந்தையின் வாழ்நாள் காலத்திலேயே) குடும்ப உடைமைகளைப் பிரித்துக் கொள்ள விரும்பினால், தந்தையானவன் தன் மகன்கள் அனைவருக்கும் அவற்றைச் சமப் பங்குகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.(12) அண்ணன், பாவச்செயல்களைச் செய்பவனாகவும், எந்தச் சாதனைக்காகவும் பிரித்தறியப்பட முடியாதவனாகவும் இருந்தால் அவன் தன் தம்பிகளால் அவமதிக்கப்படுவான். மனைவியோ, தம்பியோ பாவம் நிறைந்தவர்களாக இருந்தாலும் அப்போதும் அவள் அல்லது அவனின் நலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.(13) அறத்தின் உச்சவினையை {பலாபலன்களை} அறிந்த மனிதர்கள் அறமே உயர்ந்த நன்மை என்று சொல்கிறார்கள். ஓர் உபாத்யாயர் {தலைமை ஆசிரியர்} பத்து ஆச்சார்யர்களைவிட {ஆசிரியர்களைவிட} உயர்ந்தவர். தந்தையானவர் பத்து உபாத்யாயர்களுக்கு இணையானவர்.(14) ஒரு தாயானவள், பத்து தந்தைக்கோ, மொத்த பூமிக்கோ இணையானவள். தாயினும் பெரியோர் யாருமில்லை. உண்மையில் அவள் தனக்கு உரிய மதிப்புகள் அனைத்தையும் கடந்திருப்பவள்[2].(15)
[2] "ஓர் ஆச்சார்யர் ஒரு சாதாரண ஆசிரியராவார். வேதங்களைக் கற்பிப்பவர் ஓர் உபாத்யாயர் என்றழைக்கப்படுகிறார். ஓர் உபாத்யாயர் பத்து ஆச்சாரியர்களைவிடப் பெரியவராவார். மேலும், ஒரு தந்தையானவர் உபாத்யாயரைவிடப் பத்து மடங்கு மதிக்கத்தகுந்தவராவார். தாயைப் பொறுத்தவரையில் தந்தைக்குரியதைவிடப் பெரிய மதிப்புக்குத் தகுந்தவள். ஒரு தாய் மொத்த பூமிக்கே இணையானவளாவாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேலும் மற்றொரு அடிக்குறிப்பில், "மனு சாத்திரம் 1:140,41ல் ஆச்சாரியர் என்பவர் ’கைம்மாறேதுமின்றி வேதங்கள் அனைத்தையும் கற்பிப்பவர்’ என்றும், மறுபுறம் ஓர் உபாத்யாயர் என்பவர் ’தன் வாழ்வுக்காக ஒரு குறிப்பிட்ட வேதத்தைக் கற்பிப்பவர்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறாயின் ஆச்சாரியரே உபாத்யாயரைவிட மேம்பட்டவர் என்றாகும். ஆனால் இங்கே மஹாபாரதத்தின் படி உபாத்யாயரே மேம்பட்டவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இதன் காரணமாகவே மக்கள் ஒரு தாயை அதிக மதிப்புக்குத் தகுந்தவளாகக் கருதுகிறார்கள். ஓ! பாரதா, தந்தை மூச்சை நிறுத்தியதும் அண்ணனே தந்தையாகக் கருதப்பட வேண்டும்.(16) அண்ணனே அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து, அவர்களைப் பாதுகாக்கவும், பேணி வளர்க்கவும் வேண்டும். தம்பிகள் அனைவரும் அவனை வணங்கி அவனது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.(17) உண்மையில் அவர்கள், தங்கள் தந்தை உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தார்களோ அப்படியே அவனை {அண்ணனைச்} சார்ந்து வாழ வேண்டும். ஓ! பாரதா, தந்தையும், தாயுமே உடலைப் படைக்கின்றனர்.(18) எனினும், ஆச்சாரியார் விதிக்கும் பிறவியே உண்மையில் மங்காததாகவும், அழிவில்லாததாகவும், உண்மையான பிறவியாகவும் கருதப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓர் அக்காள் {தமக்கை} ஒரு தாயைப் போன்றவளாவாள். குழந்தைப் பருவத்தில் பாலூட்ட {உணவூட்டக்} கூடியவளானதால் அண்ணனின் மனைவியும் {அண்ணியும்} ஒரு தம்பிக்குத் தாயைப் போன்றவளே ஆவாள்[3]" என்றார் {பீஷ்மர்}.(19)
[3] கும்பகோணம் பதிப்பில், "ஜ்யேஷ்ட சகோதரன் மனைவியும் அவன் குழந்தையாயிருக்கையில் அவளிடம் ஸ்தன்யபானம் செய்திருப்பானாயின் தாயைப் போலவேயாவாள்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 105ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |