Merits of fast! | Anusasana-Parva-Section-106 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 106)
பதிவின் சுருக்கம் : உபவாஸங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து அங்கிரஸ் சொன்னது; வேள்விகளுக்கு இணையான பலன்களை அளிக்கக்கூடிய குறிப்பிட்ட உபவாஸங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, அனைத்து வகை {வர்ண} மனிதர்களும், மிலேச்சர்களும் நோன்புகள் நோற்கும் இயல்பினராகத் தெரிகிறார்கள். எனினும், இதன் காரணத்தை நாம் அறிந்ததில்லை.(1) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் மட்டுமே நோன்புகள் {விரதங்கள்} நோற்க வேண்டும் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஓ! பாட்டா, உண்ணாநோன்புகளை {உபவாஸங்களை{ நோன்பதன் மூலம் பிற வகை {வர்ண} மக்கள் எவ்வாறு பலனை ஈட்டுவார்கள்?(2) ஓ! மன்னா, நோன்புகளும் {விரதங்களும்}, உண்ணாநோன்புகளும் {உபவாஸங்களும்} அனைத்து வகை {வர்ண} மக்களும் எவ்வாறு நோற்கிறார்கள்? உண்ணாநோன்பு நோற்பதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் அடையும் கதி என்ன?(3) உண்ணாவிரதங்கள் பெரும்புகலிடங்களாக இருப்பவை, உயர்ந்த பலன்களைத் தரவல்லவை என்று சொல்லப்படுகிறது. ஓ! மனிதர்களின் இளவரசே, நோன்புகள் நோற்கும் மனிதனால் இவ்வுலகில் ஈட்டப்படும் கனியென்ன? ஒருவன் அறமீட்டும் வழிமுறைகள் என்னென்ன? ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஒருவன் சொர்க்கத்தையும், பலன்களையும் அடைவதில் வெல்லும் வழிமுறைகள் என்னென்ன?(5) ஓ! மன்னா, உண்ணாநோன்பு நோற்ற பிறகு ஒருவன் ஏன் கொடையளிக்க வேண்டும்? இன்பத்துக்கு வழிவகுக்கும் நோக்கங்களை அடைவதில் வெல்ல ஒருவன் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன?" என்று கேட்டான்".(6)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், "தர்மதேவனால் உண்டானவனும் {யுதிஷ்டிரன்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், தம்மிடம் இவ்வாறு சொன்னவனுமான குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், சாந்தனுவின் மகனுமான பீஷ்மர் பின்வரும் சொற்களில் பதிலளித்தார்.(7)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, விதிப்படி நோன்புகள் {விரதங்கள்} நோற்பதால் உண்டாகும் உயர்ந்த பலன்களை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(8) ஓ! பாரதா, நீ இன்று கேட்ட இதே கேள்விகளை நான் உயர்ந்த தவத் தகுதியைக் கொண்ட முனிவர் அங்கிரசிடம் கேட்டிருக்கிறேன்.(9) இவ்வாறு என்னால் கேட்கப்பட்டவரும், வேள்வித்தீயில் உண்டானவருமான அந்தச் சிறப்புமிக்க முனிவர், விதிப்படி செய்யும் உண்ணாநோன்புகளை நோற்பது குறித்து இவ்வாறு என்னிடம் சொன்னார்.(10)
அங்கிரஸ் {பீஷ்மரிடம்}, "ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் பொறுத்தவரையில் ஒரே சீராக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பது {உபவாஸம் இருப்பது} அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், ஓ! மனிதர்களின் தலைவா, ஓரிரவு உண்ணா நோன்பு {உபவாஸம்}, ஈரிரவு, மூவிரவு உண்ணா நோன்புகளே அவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. (மூன்று இரவுகளைக் கடந்து அவர்கள் {பிராமணர்களும், க்ஷத்திரியகளும்} உண்ணாவிரதமிருக்கக்கூடாது).(11) வைசியர்களையும், சூத்திரர்களையும் பொறுத்தவரையில் உண்ணாநோன்புக்கான அவர்களது கால அளவு ஓரிரவே ஆகும். மடமையினால் {அறியாமையினால்} அவர்கள் ஈரிரவு அல்லது மூவிரவு உண்ணாநோன்புகளை நோற்றால், அத்தகைய உண்ணா நோன்புகள் அவர்களது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.(12) உண்மையில், (குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்) அவர்களுக்கு ஈரிரவு உண்ணாநோன்புகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், கடமைகளை அறிந்தவர்களும், அவற்றை நோற்பவர்களுமான மனிதர்களால் அவர்களுக்கு மூவிரவு உண்ணாநோன்புகள் விதிக்கப்படவில்லை[1].(13) ஓ! பாரதா, ஞானம் கொண்ட மனிதன், தன் புலன்களையும், ஆன்மாவையும் அடக்கி, ஐந்தாம் சந்திர நாள் {பஞ்சமி}, ஆறாம் சந்திரநாள் {சஷ்டி} மற்றும் முழு நிலவு {பௌர்ணமி} நாள் ஆகியவற்றில் இரண்டு வேளை உணவில் ஒன்றைத் தவிர்த்து உண்ணா நோன்பிருந்தால் அவன் மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும் {பொறுமையுள்ளவனாகவும்}, மேனியழகு கொண்டவனாகவும், சாத்திரங்களை அறிந்தவனாகவும் ஆகிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் பிள்ளையற்றவனாகவோ, ஏழையாகவோ ஆவதில்லை.(14,15)
[1] கும்பகோணம் பதிப்பில், "வைசியர்களும், சூத்திரர்களும் அறியாமையினால் மூன்று தினம் அல்லது இரண்டு தினம் உபவாஸம் செய்வராயின் அவ்வுபவாஸங்களுக்குப் பலனில்லை. நாலாவது காலத்தில் புசிப்பதை விடுவதுதான் வைசியனுக்கும் சூத்திரனுக்கும் விதிக்கப்பட்டிருப்பது. அவர்களுக்கு மூன்று தின உபவாஸம்தர்மந்தெரிந்த வைதிகர்களால் விதிக்கப்படவில்லை" என்றிருக்கிறது. நாலாவது காலம் என்பதன் அடிக்குறிப்பில், "பிராத, ஸங்கவ, மத்தியான்ன, அபரான்ன என்னும் நாலு காலங்களையும் தள்ளி ஸாயங்காலத்தில் அதாவது, இருபத்தைந்து நாழிகைக்கு மேல் புஜிப்பது" என்றிருக்கிறது.
ஐந்து மற்றும் ஆறாம் சந்திர நாட்களில் {பஞ்சமி, சஷ்டிகளில்} தேவர்களைத் துதித்து வேள்விகளைச் செய்பவன், தன் குடும்பத்தினர் அனைவரையும் கடந்து, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு உணவூட்டுவதில் வெல்கிறான். தேய்பிறையின் எட்டாம் மற்றும் பதினான்காம் சந்திரநாட்களில் {அஷ்டமி மற்றும் சதுர்த்தசியில்} உண்ணாநோன்புகளை {உபவாசம்}[2] நோற்பவன் அனைத்து வகைப் பிணிகளில் இருந்தும் விடுபட்டுப் பெரும் சக்தியை அடைகிறான். மார்கசீரிஷம் என்றழைக்கப்படும் மாதம் {மார்கழி மாதம்} முழுவதையும் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவைத்தவிர்த்துக் கழிப்பவன்,(16,17) மதிப்புடனும், அர்ப்பணிப்புடனும் பிராமணர்களுக்கு உணவூட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். அத்தகைய மனிதன் செழிப்புடன் கூடியவனாகிறான், அனைத்து வகைத் தானியங்களும் அவனுடையதாகின்றன.(18) அவன் சக்தியுடன் கூடியவனாகிறான். உண்மையில், அத்தகைய மனிதன், தன் களங்களில் {வயல்களில்} இருந்து அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்து, பெருஞ்செல்வத்தையும், அதிகத் தானியங்களையும் அடைகிறான்.(19) ஓ! குந்தியின் மகனே, ஒவ்வொரு நாளும் இரு வேளை உணவுகளில் ஒன்றைத் தவிர்த்து பௌஷ மாதம் {தை மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், பெரும் நற்பேற்றுடன் கூடியவனாகி, ஏற்புடைய பண்புகளையும், பெரும்புகழையும் அடைகிறான்.(20)
[2] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு வேளை போஜனத்தை உபவாஸமென்று கொள்க" என்றிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இரு வேளை உணவில் ஒன்றைத் தவிர்த்து மாக மாதம் {மாசி மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பை அடைந்து, தன் சுற்றத்தாருக்கு மத்தியில் திறன்மிக்க நிலையை அடைகிறான்.(21) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு பகதைவத மாதம் {பங்குனி மாதம்} முழுவதையும் கழிப்பவன், பெண்களுக்குப் பிடித்தமானவனாகி, அவர்களை உடனடியாகத் தன் வசப்படுத்துவான்.(22) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு சைத்ர மாதம் {சித்திரை மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த குடும்பத்தில் பிறப்பை அடைந்து, பொன், ரத்தினங்கள் மற்றும் முத்துக்களின் வளம்பெறுபவனாகிறான்.(23) புலனடக்கத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு வைசாக மாதம் {வைகாசி மாதம்} முழுவதையும் கழிப்பது, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தன் சுற்றத்தாருக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(24) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு ஜய்ஷ்ட மாதம் {ஆனி மாதம்} முழுவதையும் கழிப்பவன், உயர்ந்த நிலையையும், பெருஞ்செல்வத்தையும் அடைவதில் வெல்கிறான். அது {இவ்வாறு நோற்பது ஒரு} பெண்ணாக இருந்தால், அவளும் அதே வெகுமதியையே அறுவடை செய்கிறாள்.(25)
ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு ஆஷாத மாதம் {ஆடி மாதம்} முழுவதையும் கழிப்பவன், அதிகத் தானியங்களையும், பெருஞ்செல்வத்தையும், பெரும் சந்ததியையும் அடைகிறான்.(26) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு சிரவண மாதம் {ஆவணி மாதம்} முழுவதையும் கழிப்பவன், எங்கே வசிக்க நேர்ந்தாலும் அபிஷேக கௌரவங்களைப் பெற்று, தான் ஆதரிக்கும் உற்றார் உறவினருக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைவான்.(27) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு பிரோஷ்தபத மாதம் {புரட்டாசி மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், பெரும் செல்வத்துடன் கூடியவனாகி, நிலைத்துப் பெருகும் செல்வாக்கையும் அடைவான்.(28) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு அஷ்வின் மாதம் {ஐப்பசி மாதம்} முழுவதையும் கழிக்கும் மனிதன், ஆன்ம மற்றும் உடல் தூய்மையை அடைந்து, விலங்குகளையும், அபரிமிதமான வாகனவகைகளையும், பெரிய சந்ததியையும் பெறுவான்.(29) ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறை உணவுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு கார்த்திகா மாதம் {கார்த்திகை மாதம்} முழுவதையும் கழிப்பவன், பெரும் வீரத்தையும், பல மனைவிகளையும், பெரும்புகழையும் அடைவான்.(30)
ஓ! மனிதர்களின் தலைவா, நான் இப்போது பனிரெண்டு மாதங்களில் நோன்புகள் நோன்பதன் மூலம் மனிதர்கள் என்னென்ன பலன்களை அடைவார்கள் என்பதை விவரமாகச் சொன்னேன். ஓ! மன்னா, இனி, ஒவ்வொரு சந்திர நாளுக்கும் உரிய விதிகள் என்ன என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(31) ஒவ்வொரு நாளும் அரிசியைத் தவிர்த்து, ஒவ்வொரு அரைத்திங்களின் {பக்ஷத்தின்} முடிவிலும் அதை {அரிசியை} உட்கொண்டால் அவன் பெரும் எண்ணிக்கையிலான பசுக்களையும், பெரும் சந்ததியையும், நீண்ட வாழ்நாளையும் அடைவான்.(32) ஒவ்வொரு மாதமும் மூன்று இரவுகள் எனப் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து உண்ணாநோன்பை நோற்பவன், போட்டிக்கு எதிரி இல்லாமல், ஒரே உயரத்திற்கு வளர முயற்சிக்கும் வேறு எவராலும் எந்தக் கவலையும் உண்டாகாமல் தன் உற்றார் உறவினர் மற்றும் துணைவர்களுக்கு மத்தியில் மேன்மையான நிலையை அடைவான்.(33) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் சொல்லும் இந்த விதிகள் பனிரெண்டு வருடங்களுக்குப் பின்பற்றப்பட வேண்டியவையாகும். உன் சார்பு அதை நோக்கி வெளிப்படட்டும்.(34)
முற்பகலில் ஒரு முறையும், மாலைக்குப் பிறகு ஒருமுறையும் உண்டு, இடைவெளியில் பருகுவதை (அல்லது எதையும் உண்பதைத்) தவிர்த்து, அனைத்து உயிரினங்களிடமும் கருணையை நோற்று, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் தெளிந்த நெய்யை ஆகுதியாக ஊற்றும் மனிதன்(35) ஆறுவருடங்களில் நிச்சயமான வெற்றியை அடைகிறான். இதில் ஐயமேதும் கிடையாது. அத்தகைய மனிதன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை ஈட்டுகிறான்.(36) பலன்களுடன் கூடியவனாக அனைத்துக் களங்கங்களிலிருந்தும் விடுபடும் அவன், ஆடல் மற்றும் பாடல் ஒலிகளை எதிரொலிக்கும் அப்ஸரஸ்களின் உலகத்தை அடைந்து, பேரழகுடன் கூடிய ஆயிரம் காரிகையரின் துணையுடன் தன் நாட்களைக் கடத்துவான்.(37) உருக்கப்பட்ட பொன்னின் நிறத்தாலான தேரைச் செலுத்திச் செல்லும் அவன் பிரம்மலோகத்தில் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான். அந்தப் பலன் தீர்ந்ததும் பூமிக்குத் திரும்பும் அத்தகைய மனிதன் மேன்மையான நிலையை அடைகிறான்.
ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு வேளை உணவுக்கு மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு {அவ்வாறே} தொடர்ந்து ஒரு வருடத்தைக் கழிக்கும் மனிதன்(39) அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான். இறந்த பிறகு சொர்க்கத்திற்கு உயரும் அவன் அங்கே பெரும் கௌரவங்களைப் பெறுகிறான்.(40) அந்தப் பலன் {புண்ணியம்} தீர்ந்ததும் பூமிக்கும் திரும்பு அவன் மேன்மையான நிலையை அடைகிறான்.
தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஒவ்வொரு நான்காம் நாளிலும் உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தி,(41) அனைத்து வகையிலும் தீங்கிழைக்காதவனாக இருந்து, பேச்சில் வாய்மையில் பற்றுக் கொண்டு, தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.(42) இறப்புக்குப் பிறகு சொர்க்கத்திற்கு உயரும் அத்தகைய மனிதன் அங்கே உயர்ந்த வெகுமதிகளை அடைகிறான்.
ஓ! குந்தியின் மகனே, தொடர்ந்து ஐந்து நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஆறாம் நாளில் மட்டுமே உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தும் மனிதன்,(43) குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது சக்கரவாகங்கால் இழுக்கப்படும்.(44) அத்தகைய மனிதன் முழுமையாக நாற்பதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.
தொடர்ந்து ஏழு நாட்கள் உண்ணாநோன்பு நோற்று ஒவ்வொரு எட்டாம் நாளிலும் உணவை உண்டு மொத்த வருடத்தையும் கடத்தும் ஒருவன்,(45) கவாமய வேள்வி செய்த பலனை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது, அன்னங்களாலும், நாரைகளாலும் இழுக்கப்படும்.(46) அத்தகைய மனிதன் ஐம்பதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.
ஓ! மன்னா, ஒவ்வொரு அரைத்திங்கள் {பக்ஷகாலம்} இடைவெளிகளில் மட்டுமே உண்டு ஒரு வருடத்தைக் கடத்தும் ஒருவன்,(47) ஆறு மாதங்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருந்ததன் பலனை அடைகிறான். இது சிறப்பு மிக்க அங்கிரஸால் சொல்லப்பட்டதாகும். அத்தகைய மனிதன் அறுபதாயிரம் வருட காலம் சொர்க்கத்தில் வசிப்பான்.(48) ஓ! மன்னா அவன் ஒவ்வொரு காலையிலும் வீணைகள், வல்லகிகள் மற்றும் புல்லாங்குழல்களின் {வேணுவின்} இனிய இசையால் படுக்கையில் இருந்து எழுப்பப்படுவான்.(49)
ஓ! ஏகாதிபதி, ஒவ்வொரு மாதம் முடியும்போதும் சிறிதளவு நீரை மட்டுமே பருகி ஒரு வருடத்தைக் கடத்தும் ஒருவன் விஷ்வஜித் வேள்வி செய்ததன் பலனை அடைவான்.(50) அத்தகைய மனிதன் சிங்கங்கள் மற்றும் புலிகளால் இழுக்கப்படும் தேரைச் செலுத்துவான். அவன் எழுபதாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் வசித்து அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புற்றிருப்பான்.(51) ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு மாதத்திற்கும் அதிகமாக எந்த உண்ணாநோன்பும் விதிக்கப்படவில்லை. ஓ! பிருதையின் மகனே, கடமைகளை அறிந்தவர்களான தவசிகளால் அறிவிக்கப்பட்ட உண்ணாநோன்பின் விதி இதுவே ஆகும்.(52) ஒவ்வொரு பிணியில் இருந்தும் விடுபட்டு நோயால் பீடிக்கப்படாமல் ஓர் உண்ணாநோன்பை நோற்கும் மனிதன், உண்மையில் ஒவ்வொரு நோன்பினாலும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(53) அத்தகைய மனிதன் அன்னங்களால் இழுக்கப்படும் தேரில் சொர்க்கத்திற்கு உயர்கிறான். பலத்துடன் கூடிய அவன், நூறாயிரம் வருடங்கள் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் இன்புறுகிறான்.(54) அழகிய குணங்களைக் கொண்ட நூறு அப்சரஸ்கள் அவனுக்குப் பணிவிடை செய்து அவனோடு விளையாடுவார்கள்.(55) அந்தக் காரிகையரின் காஞ்சிகள் {மேகலைகள்} மற்றும் நுபுரங்களின் {சிலம்புகளின்} ஒலியால் அவன் ஒவ்வொரு காலையிலும் படுக்கையில் இருந்து எழுப்பப்படுவான்.(56) அத்தகைய மனிதன் ஆயிரம் அன்னங்களால் இழுக்கப்படும் தேரைச் செலுத்திச் செல்வான். நூற்றுக்கணக்கான அழகிய காரிகைகள் நிறைந்த உலகத்தில் வசித்துப் பெரும் மகிழ்ச்சியில் அவன் நேரத்தைக் கடத்துவான்.(57)
சொர்க்கத்தை விரும்பும் மனிதன், பலவீனத்தை அடையும்போது பலமடையவோ, காயம்படும்போதும், காயம் ஆறவோ, நோய்வாய்ப்படும்போது குணப்படுத்தும் மருந்துகளையோ, கோபத்திலிருக்கும் போது பிறரின் ஆறுதல்களையோ, செல்வம் செலவழிந்ததன் மூலம் வறுமையால் உண்டாகும் கவலைகளைத் தணிக்கவோ விரும்புவதில்லை.(58,59) அனைத்து வகைப் பண்புகளை இழந்து இவ்வுலகை விட்டுச் செல்லும் அவன், சொர்க்கத்திற்குச் சென்று, அனைத்து வகை ஆபரணங்களாலும் தன் மேனி பளபளக்க, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்களைச் செலுத்துகிறான். அங்கே, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்து, நூற்றுக்கணக்கான அழகிய காரிகையருக்கு மத்தியில் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிக்கிறான்(60)
உண்மையில், உணவையும் இவ்வுலக இன்பங்களையும் தவிர்க்கும் அவன் இவ்வுடலைவிட்டு அங்கன்று, தவங்களின் கனியாகச் சொர்க்கத்திற்கு உயர்கிறான். அங்கே தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நலமும், மகிழ்ச்சியும் அடைந்து, தன் மனத்தில் எழும் விருப்பம் எதுவும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படுகிறான்.(61) அத்தகைய மனிதன் தங்கநிறம் கொண்டதும், காலை சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும் முத்துக்கள் மற்றும் வைடூரியங்கள் பதிக்கப்பட்டதும், வீணைகள் மற்றும் முரஜங்களின {முரசுகளின்} இசையை எதிரொலிப்பதும், கொடிகள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக மணிகளின் கிங்கிணிகளை எதிரொலிப்பதுமான ஒரு தெய்வீகத் தேரைச் செலுத்திச் செல்வான்.(62,63) அத்தகைய மனிதன், தன் உடலில் உள்ள வியர்வைத் துளைகளின் எண்ணிக்கை அளவு வருட காலம் சொர்க்கத்தில் அனைத்து வகை மகிழ்ச்சிகளையும் பெற்று இன்புற்றிருப்பான்.(64)
வேதத்தைவிட மேன்மையான சாத்திரமேதும் இல்லை. தாயைவிட மதிக்கத் தகுந்த மனிதர் வேறு யாரும் இல்லை. அறத்தைவிட மேன்மையான உடைமை {லாபம்} வேறேதும் இல்லை. உண்ணாநோன்பை விட மேன்மையான தவம் ஏதும் இல்லை.(65) பிராமணர்களை விடப் புனிதமானதெனச் சொர்க்கத்திலோ, பூமியிலோ வேறேதும் இல்லை. அதே வகையில் உண்ணாநோன்புகள் நோற்பதைவிட மேன்மையான வேறு தவம் ஏதுமில்லை.(66) உண்ணாநோன்புகளின் மூலமே தேவர்கள் சொர்க்கவாசிகளாவதில் வென்றனர். உண்ணா நோன்புகளின் மூலமே முனிவர்கள் உயர்ந்த வெற்றியை அடைந்தனர்.(67)
விஷ்வாமித்திரர், ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு முறை உணவில் மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு ஆயிரம் தேவ வருடங்களைக் கழித்ததன் விளைவாகவே அவர் பிராமண நிலையை அடைந்தார்.(68) மன்னிக்கும் பண்பைக் கொண்ட சியவனர், ஜமதக்னி, வசிஷ்டர், கௌதமர், பிருகு ஆகிய பெரும் முனிவர்கள் அனைவரும் உண்ணாநோன்புகள் நோற்றன் மூலமே சொர்க்கத்தை அடைந்தனர்.(69) பழங்காலத்தில் அங்கிரஸ் இவ்வாறே பெரும் முனிவர்களுகுக அறிவித்தார். உண்ணாநோன்புகளின் பலனை மற்றொருவனுக்குக் கற்பிக்கும் மனிதன் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க மாட்டான்.(70) ஓ! குந்தியின் மகனே, உண்ணா நோன்புகள் குறித்த விதிகள் பெரும் முனிவரான அங்கிரசிடம் இருந்தே முறையான வரிசையில் உண்டாகின. இவ்விதிகளை நாள் தோறும் படிப்பவன் அல்லது அவற்றைப் படிக்கக் கேட்பவன் அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.(71) அத்தகைய மனிதன் ஒவ்வொரு துன்பத்தில் இருந்து மட்டும் விடுபடுவதோடல்லாமல் அவனுடைய மனமானது எவ்வகைக் களங்கத்தாலும் தீண்டப்பட முடியாததாகிறது. அத்தகைய மனிதன், மனிதர்களையும் தவிர அனைத்து உயிரினங்களின் ஒலிகளையும் புரிந்து கொள்வதில்வென்று, நித்திய புகழை அடைந்து, தன் வகையில் முதன்மையானவனாகிறான்" என்றார் {பீஷ்மர்}.(72)
அநுசாஸனபர்வம் பகுதி – 106ல் உள்ள சுலோகங்கள் : 72
ஆங்கிலத்தில் | In English |