Merits of Sacrifces & fast! | Anusasana-Parva-Section-107 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 107)
பதிவின் சுருக்கம் : யாகம் செய்ய இயலாதவர்கள் உபவாஸங்களின் மூலமே யாக பலனை அடைவது குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! உயர் ஆன்ம பாட்டா, வேள்விகள் குறித்தும், இம்மையிலும், மறுமையிலும் அவை அளிக்கும் பலன்கள் குறித்தும் விவரமாக எங்களுக்குச் சொன்னீர்.(1) ஓ! பாட்டா, வேள்விகளில் பல்வேறு வகையான பொருட்களைப் பெரிய அளவில் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவற்றை ஏழை மக்களால் செய்ய முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.(2) ஓ! பாட்டா, வேள்விகளால் உண்டாகும் பலன்களை மன்னர்கள் மற்றும் இளவரசர்களால் மட்டுமே அடைய முடியும். செல்வமும், திறனுமற்றுத் தனியாக, ஆதரவற்றவர்களாக வாழும் மக்களால் அந்தப் பலன்களை அடைய இயலாது.(3) ஓ! பாட்டா, வேள்விகள் செய்வதால் உண்டாகும் பலன்களைக் கொண்டவையும், வழிமுறையற்றவர்களாலும் செய்யக்கூடியவையுமான செயல்களைப் பொறுத்தவரையில் விதிகள் என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, கேட்பாயாக. முனிவர் அங்கிரஸால் முதலில் வெளியிடப்பட்டதும், ஆன்மாவுக்குப் பலன்மிக்க உண்ணாநோன்புகள் தொடர்புடையதுமான நான் சொன்ன விதிமுறைகள் (இம்மையிலும், மறுமையிலும் அவை கொண்டு வரும் கனிகளைப் பொறுத்தவரையில்) வேள்விக்குச் சமமானதாகவே கருதப்படுகின்றன.(5) முற்பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் உணவுண்டு, அதன் இடைவெளியில் எந்த உணவையோ, பானத்தையோ உட்கொள்ளாமல், தொடர்ந்து ஆறு வருடங்கள் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றும் மனிதன் ஐயமில்லாமல் வெற்றியை அடைகிறான். அத்தகைய மனிதன், மறுமையில் உருக்கிய தங்கத்தின் நிறத்திலான தேரையும், ஒரு வசிப்பிடத்தையும் அடைந்து, பிரஜாபதியின் உலகத்தில் பத்து லட்சம் வருடங்கள் தெய்வீக காரிகையரின் துணையுடனும், ஆடல் மற்றும் பாடலொலிகள் எதிரொலிக்க, நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசிப்பான்.(6-8)
ஒவ்வொரு நாளும் ஒரேயொரு வேளை உணவில் தன்னை அடக்கிக் கொண்டு, தான் மணந்த மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் கலவியை எப்போதும் தவிர்த்து மூன்று வருடங்களைக் கடத்துபவன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9) அத்தகைய மனிதன், வாசவனுக்கு {இந்திரனுக்குப்} பிடித்தமானதும், அபரிமிதமான பொற்கொடை அளிக்கப்பட்டதுமான ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். வாக்கில் வாய்மை பயின்று, கொடைகள் அளித்து, பிராமணர்களை மதித்து, வன்மத்தைத் தவிர்த்து,(10) மன்னிக்கும் குணத்தை அடைந்து, தற்கட்டுப்பாட்டுடன் கோபத்தை வெல்லும் மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான். மேகம் போன்ற வெண்ணிறம் கொண்டதும், அன்னங்களால் இழுக்கப்படுவதுமான தேரைச் செலுத்திக் கொண்டு, அப்சரஸ்களின் துணையுடன் லட்சோபலட்சம் ஆண்டுகள் வாழ்கிறான்.
ஒரு முழு நாள் உண்ணாநோன்பிருந்து, இரண்டாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு,(11,12) மொத்த வருட காலமும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன், உண்மையில், அத்தகைய நோன்பை நோற்று, ஒவ்வொரு நாளும் சூரியன் எழுவதற்கு முன்பு படுக்கையில் இருந்து எழுந்து, ஒவ்வொரு நாளும் தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்(13) அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தகைய மனிதன் அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்பட்ட தேரை அடைகிறான்.(14) அவன், மிக அழகிய காரிகைகள் சூழ இந்திரலோகத்தில் வசிக்கிறான்.
{இரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து,} மூன்று நாளைக்கொரு முறை மட்டுமே உணவை உண்டு,(15) மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன், உண்மையில் இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலையிலும் சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்து தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்,(16) அதிராத்ர வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் மயில்கள், அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் தேரை அடைகிறான்.(17) (தெய்வீக) முனிவர்கள் எழுவரின் உலகங்களுக்குச் செல்லும் அவன், பேரழகுடைய அப்சரஸ்கள் சூழ அங்கேயே தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்கிறான். அத்தகைய வாசம் முழுமையாக மூன்று பத்ம வருடங்கள் நீடித்திருப்பதாக நன்கு அறியப்பட்டுள்ளது[1].(18)
{இரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து,} மூன்று நாளைக்கொரு முறை மட்டுமே உணவை உண்டு,(15) மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன், உண்மையில் இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலையிலும் சூரியன் எழுவதற்கு முன்பு எழுந்து தன் நெருப்பைக் கவனித்துக் கொள்பவன்,(16) அதிராத்ர வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் மயில்கள், அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் தேரை அடைகிறான்.(17) (தெய்வீக) முனிவர்கள் எழுவரின் உலகங்களுக்குச் செல்லும் அவன், பேரழகுடைய அப்சரஸ்கள் சூழ அங்கேயே தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்கிறான். அத்தகைய வாசம் முழுமையாக மூன்று பத்ம வருடங்கள் நீடித்திருப்பதாக நன்கு அறியப்பட்டுள்ளது[1].(18)
[1] "ஒரு பத்மம் என்பது மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இத்தகைய சொல்லின் பொருளைச் சரியாக எடுத்துக் கொள்வதை விட, முந்தைய ஸ்லோகங்களின் படி லட்சோபலட்சம் வருடங்கள் என்று கொள்வது சிறப்பு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முப்பது கோடி வருஷங்களுக்குப் பின்புதான் அவன் திரும்புவானென்று அறிகின்றனர்" என்றிருக்கிறது.
தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாநோன்பிருந்து, நான்காம் நாளில் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, தன் புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றுபவன்,(19) வாஜபேய வேள்வி செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் அடையும் தேரானது, இந்திரனைத் தங்கள் தந்தையாகக் கொண்டவர்களும், பேரழகுடன் கூடியவர்களுமான தெய்வீக காரிகையரால் நிறைந்திருக்கும்.(20) அவன் லட்சோபலட்சம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் வசித்திருந்து, தேவர்களின் தலைவனுடைய விளையாட்டுகளைக் கண்டு பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பான்.(21)
தொடர்ந்து நான்கு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஐந்தாம் நாளில் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(22) பேராசையின்றி, வாய்மை பேசி, பிராமணர்களை மதித்து, அனைத்து வகைத் தீங்குகளை விட்டும் விலகி, பாவம் மற்றும் வன்மத்தைத் தவிர்த்து வாழ்பவன், வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.(23) அவன், தங்கத்தால் அமைக்கப்பட்டதும், அன்னங்களால் இழுக்கப்படுவதும், பல சூரியன்கள் ஒன்றாக எழுந்தால் உண்டாகும் பிரகாசத்துடன் கூடியதுமான தேரைச் செலுத்துகிறான். அதுதவிர, தூய வெண்ணிறத்தாலான மாடமாளிகை ஒன்றையும் அடைகிறான். அங்கே அவன் முழுமையாக ஐம்பத்தோரு பத்ம வருடங்கள் பெரும் மகிழ்ச்சியோடு வாழ்கிறான்[2].(25)
[2] கும்பகோணம் பதிப்பில், "நூறு கோடி வருஷங்கள் அவன்ஸுகமாக வசிப்பான்" என்றிருக்கிறது.
ஐந்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஆறாம் நாளில் மட்டுமே உணவு உண்டு, மொத்த வருடமும் ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(26) தன்னைத் தூய்மை செய்து கொள்ள ஒரு நாளைக்கு மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து, தன் வேண்டுதல்களைச் சொல்லி வழிபட்டு, தன்னொழுக்கத்தில் வன்மம் இல்லாமல் பிரம்மச்சரிய வாழ்வை வாழும் ஒருவன் கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(27) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்க நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதும், அன்னங்கள் மற்றும் மயில்களால் இழுக்கப்பட்டதுமான ஒரு சிறந்த தேரை அவன் அடைகிறான்.(28) அப்சரஸ்களின் மடியில் உறங்கும் அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் காஞ்சிகள் {மேகலைகள்} மற்றும் நுபுரங்களின் {சிலம்புகளின்} இனிய கிங்கிணியால் விழிப்படையச் செய்யப்படுகிறான்.(29) அவன் பதினெட்டுப் பத்மங்கள் மற்றும் இரண்டு பதாகங்கள் தவிர ஆயிரத்து முன்னேறு கோடி வருடங்கள் அத்தகைய மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வான்.(30) அத்தகைய மனிதன் ஐயாயிரம் கரடிகளின் உடல்களில் உள்ள மயிர்களின் எண்ணிகை அளவுக்கான வருடங்கள் பிரம்மலோகத்தில் அனைவராலும் கௌரவிக்கப்பட்டு வசித்து வருவான்[3].(31)
[3] "கிட்டத்தட்ட எண்ணமுடியாத எண்ணிக்கையிலான வருடங்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆயிரத்தறுநூற்றெண்பது கோடியே ஐந்து லக்ஷம் வருஷங்களும், நூறு கரடியின் தேகத்தில் உள்ள ரோமங்கள் எவ்வளவோ அவ்வளவு வருஷ காலமும் பிரம்மலோகத்தில் பூஜிக்கப்படுகிறான்" என்றிருக்கிறது.
ஆறு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, ஒவ்வொரு ஏழாம் நாளிலும் ஒரு வேளை மட்டுமே உண்டு, முழுமையாக ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு நாளும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(32) பேச்சை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பை நோற்று, மலர்கள், களிம்புகள், தேன் மற்றும் இறைச்சிப் பயன்பாட்டைத் தவிர்த்து இருப்பவன்,(33) மருத்துகள் மற்றும் இந்திரனின் உலகங்களை அடைகிறான். அவன் தன் மனத்தில் எழும் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்பட்டு, தெய்வீகக் காரிகையரால் பணிசெய்யப்பட்டு, துதிக்கப்படுகிறான்.(34) அபரிமிதமான தங்கத்தைக் கொடையளிக்கும் ஒரு வேள்வி செய்த பலனை அவன் அடைகிறான். மேற்சொன்ன உலகங்களுக்குச் செல்லும் அவன் அங்கே எண்ணற்ற வருடங்கள் பெரும் மகிழ்ச்சியில் வாழ்கிறான்.(35)
அனைவரிடமும் பொறுமை காத்து, ஏழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, மொத்த வருடதில் ஒவ்வொரு எட்டு நாளும் உண்டு, புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றி, தேவர்களை முறையாக வழிபடுபவன்,(36) பௌண்டரீக வேள்வி செய்த உயர்ந்த பலன்களை அடைகிறான். அவன் தாமரையின் நிறம் கொண்ட தேரைச் செலுத்துவான்.(37) அத்தகைய மனிதன், இளமையும் அழகும் கொண்டவர்களும், மிக ஏற்கத்தக்க வகையிலான குணங்களையும், பார்வைகளையும் கொண்டவர்களும் கரிய நிறம் கொண்ட சிலரும், தங்க போன்ற நிறம் கொண்ட சிறரும், சியாமைகள் சிலரும் எனப் பெரும் எண்ணிக்கையிலான காரிகையரை அடைகிறான்[4].(38)
[4] "இந்தியத் தொன்மவியல் மற்றும் வரலாறுகளில் பேரழகுடைய பெண்கள் சிலர் கருப்பு நிறம் கொண்டவர்களாகவே சொல்லப்பட்டுள்ளனர். பாண்டவர்களின் ராணியான திரௌபதி கரிய நிறத்தவளாக இருந்தாள் அவள் கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டாள். சியாமைகள் என்றழைக்கப்படும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களது உடலானது குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும், கோடைக்காலத்தில் குளிந்ததாக்குவும் இருக்கும் அவர்களுடைய நிறம் புடம்போட்ட தங்கம்போன்றது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு ஒன்பதாம் நாளிலும் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு, நாள்தோறும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன்,(39) ஆயிரம் குதிரைவேள்விகள் செய்த உயர்ந்த பலனை அடைகிறான். அவன் சொர்க்கத்தில் செலுத்தும் தேரானது ஒரு தாமரையைப் போன்ற அழகுடையதாக இருக்கும்.(40) எப்போதும் அவன், தெய்வீக மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், நடுப்பகல் சூரியன் அல்லது சுடர்மிக்க நெருப்பின் தழல்களுடைய பிரகாசத்துடன் கூடியவர்களுமான ருத்ரனுடைய பெண்களின் துணையுடன் தேர்களில் பயணம் செய்வான்.(41) ருத்ரனின் உலகங்களை அடைந்து அங்கே அவன் எண்ணற்ற வருடங்கள் பெரும் மகழ்ச்சியில் வாழ்வான்.(42)
ஒன்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு பத்தாவது நாளும் ஒரேயொரு வேளை உணவை உண்டு, நாள்தோறும் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுபவன்,(43) ஆயிரம் குதிரை வேள்விகள் செய்த உயர்ந்த பலனைப் பெற்று, அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் கவரவல்ல அழகுடன் கூடிய பிரம்மனின் மகன்களுடைய துணையையும் அடைகிறான்.(44) இத்தகைய அழகுடன் கூடிய இந்தக் காரிகையரில் தாமரையைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிலரும், அதே மலரின் நீல வகையிலான நிறத்தைக் கொண்ட சிலரும் எப்போதும் அவனை இன்பத்துடன் வைத்திருக்கிறார்கள்.(45) அழகாக வலம் வருவதும், ஆவர்த்தம் என்றழைக்கப்படும் அடர்த்தியான மேகம் போலத் தெரிவதும், பெருங்கடலின் அலைக்கு ஒப்பாகச் சொல்லப்படுவதுமான ஓர் அழகிய தேரை அவன் அடைவான்.(46) முத்து மற்றும் ரத்தினச்சரங்களின் கிங்கிணியையும், சங்கின் இனிய முழக்கங்களையும் எப்போதும் எதிரொலிக்கும் அந்த வாகனம், படிகம் மற்றும், வைரங்களால் அமைக்கப்பட்ட தூண்களாலும், அதே பொருட்களால் கட்டப்பட்ட பீடத்துடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.(47) அன்னங்கள் மற்றும் நாரைகளால் இழுக்கப்படும் அத்தகைய தேரில் பயணம் செய்யும் அவன் சொர்க்கத்தில் கோடானகோடி வருடங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.(48)
பத்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, மொத்த வருடத்தில் ஒவ்வொரு பதினோராம் நாளிலும் நெய்யை மட்டுமே உண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி,(49) சொல்லாலோ, எண்ணத்தாலோ அடுத்தவரின் மனைவிகளின் மேல் ஒருபோதும் ஆசை கொள்ளாதவனும், தன் தாய்க்காகவும், தந்தைக்காகவும் கூட ஒருபோதும் பொய் பேசாதவனுமான ஒருவன்,(50) பெரும்பலம் கொண்ட மஹாதேவன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் காண்பதில் வெல்வான். அத்தகைய மனிதன் ஓராயிரம் குதிரை வேள்விகள் செய்த உயர்ந்த பலனை அடைகிறான்.(51) அவன் சுயம்புவான பிரம்மனின் தேர் தன்னை அழைத்துச் செல்ல வருவதைக் காண்பான். பசும்பொன் மோன்ற பிரகாசத்துடனும், பேரழகுடனும் கூடிய தெய்வீகக் காரிகையரின் துணையுடன் அவன் அதை {அந்தத் தேரைச்} செலுத்துவான்.(52) யுகநெருப்பின் காந்தியுடன் சுடர்விடும் அவன் சொர்க்கத்தின் தெய்வீக மாளிகையில் முழுமையான மகிழ்ச்சியுடன் எண்ணற்ற வருடங்கள் வாழ்வான்.(53) அந்த எண்ணற்ற வருடங்களும் அவன், தேவர்களாலும், தானவர்களாலும் துதிக்கப்படும் ருத்திரனுக்குத் தலைவணங்கி இன்பமாக வாழ்வான்.(54) அத்தகைய மனிதன் ஒவ்வொரு நாளும் அந்தத் தேவனைக் காண்பான்.
பதினோரு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பனிரெண்டாம் நாளில் மட்டும் சிறிதளவு நெய்யை மட்டுமே உண்டு,(55) மொத்த வருடமும் இவ்வொழுக்கத்தை நோற்கும் மனிதன், அனைத்து வேள்விகளையும் செய்த பலன்களை அடைவதில் வெல்வான். அவன் செலுத்தும் தேர் பனிரெண்டு சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக இருக்கும்.(56) பெரும் மதிப்புமிக்க ரத்தினங்கள், முத்துகள் மற்றும் பவளங்களால் அலங்கரிக்கப்பட்டதும், இன்னிசை முழங்கும் அன்னங்கள், பாம்புகள், மயில்கள் மற்றும் சக்கரவாகங்களால் செறிவூட்டப்பட்டதும், பெரிய குவிமுக மாடங்களால் அழகூட்டப்பட்டதுமான பிரம்மலோகத்தை அடைந்து அங்கே வசிக்கிறான்.(57,58) ஓ! மன்னா, அந்த வசிப்பிடம் (பணிவிடை செய்யக் காத்திருக்கும்) ஆண்கள் மற்றும் பெண்களால் எப்போதும் நிறைந்திருப்பதாகும். அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான முனிவர் அங்கிரஸ் (இத்தகைய நோன்பிற்கான கனிகளாக) இதையே சொல்லியிருக்கிறார்.(59)
பனிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதிமூன்றாம் நாளில் சிறிதளவு நெய்யுண்டு, மொத்த வருடமும் இவ்வழியிலேயே தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், தெய்வீக வேள்வி {தேவஸத்ர வேள்வி} செய்த பலனை அடைவதில் வெல்கிறான்.(60) அத்தகைய மனிதன், புதிதாய் மலர்ந்த தாமரையின் நிறத்தைக் கொண்டதும், பசும்பொன்னாலும், ரத்தினக்குவியல்களாலும் அலங்கரிக்கப்பட்ட {ரக்தபத்மோதயம் என்றழைக்கப்படும்} ஒரு தேரை அடைகிறான்.(61) அவன், தெய்வீகக் காரியர்களால் நிறைந்ததும், அனைத்து வகைத் தேவ ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக நறுமணங்கள் கமழ்வதும், அனைத்து வகை இன்பங்களையும் கொண்டதான மருத்துகளின் உலகத்தை அடைகிறான்.(62) அவன் அந்த மகிழ்ச்சிகரமான உலகத்தில் வசிக்கும் வருடங்களின் எண்ணிக்கை எண்ணற்றதாகும்[5].(63) கந்தர்வர்களின் இனிய குரல், இசையொலி, பணவங்கள் ஆகியவற்றால் ஆறுதலடையும் அவன் பேரழகுடன் கூடிய காரிகைகளால் தொடர்ந்து மகிழ்ச்சியூட்டப்படுவான்.(64)
[5] "உண்மையில் ஒரு பெரிய எண்ணிக்கைக் கொடுக்கப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே சொல்கிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்விடத்தில் இரண்டு சங்குகள், இரண்டுபதாகைகள், நூறாயிரம் பத்மம், அவ்வளவு ஸமுத்திரம் என்னும் எண்களுள்ள பிரளயங்களும் கல்பங்களும் வஸிப்பான்" என்றிருக்கிறது. சங்கு என்பதன் அடிக்குறிப்பில், "பத்துலக்ஷம்கோடி" என்றும், பத்மம் என்பதன் அடிக்குறிப்பில், "நூறுகோடி" என்றும், ஸமுத்திரம் என்பதன் அடிக்குறிப்பில் "நூறுலக்ஷம்" என்றும் இருக்கிறது. மூலத்தில், "தத்ர ஶங்குபதாகம் ச யுகா³ந்தம் கல்பம ஏவ ச அயுதாயுதம் ததா² பத்³மம் ஸமுத்³ரம் ச ததா² வஸேத" என்றிருக்கிறது.
பதிமூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து பதினான்காம் நாளில் சிறிதளவு நெய்யும் உண்டு, முழு வருடமும் இவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன் மஹாமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்[6].(65) விவரிக்கமுடியாத அழகைக் கொண்டவர்களும், தோற்றத்தில் இளமையாகவே இருப்பதால் வயதை ஊகித்தறிய முடியாதவர்களும், அனைத்து ஆபரணங்கள் மற்றும் சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தெய்வீகக் காரிகையர், அவனது பயணங்களில் அவனைப் பின் தொடரத் தேர்கள் பலவற்றில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.(66) ஒவ்வொரு காலையிலும், அன்னங்களின் மெல்லிய குரல், நுபுரங்களின் {சிலம்புகளின்} கிங்கிணி, காஞ்சிகளின் {மேகலைகளின்} இனிய ஒலி ஆகியவற்றால் படுக்கையில் இருந்து அவன் எழுப்பப்படுவான். உண்மையில், கங்கையின் கரைகளில் உள்ள மணலின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்கள் அத்தக தெய்வீகக் காரிகையர் பணிவிடை செய்யும் மேன்மையான வசிப்பிடத்தில் அவன் வசித்திருப்பான்.(67)
[6] "இந்த வேள்வி மனிதக் கொலையையும் உள்ளடக்கியது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
புலன்களை அடக்கி, ஓர் அரைத்திங்கள் {ஒரு பக்ஷ காலம்} உண்ணா நோன்பிருந்து, பதினாறாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உட்கொண்டு, இவ்வழியில் மொத்த வருடமும் தன்னைத் தாங்கிக் கொண்டு, நாள்தோறும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(68,69) ஓராயிரம் ராஜசூய வேள்விகள் செய்த உயர்ந்த பலன்களை அடைகிறான். அவன் செலுத்தும் தேரானது பேரழகுடன் கூடியதாகவும், அன்னங்கள் மற்றும் மயில்களால் இழுக்கபடுவதாகவும் இருக்கும். முத்துமாலை மற்றும் பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், அனைத்து வகை ஆபரணங்களும் பூண்ட தெய்வீகக் காரிகையரின் கூட்டத்தால் நிறைந்ததும்,(71) ஒற்றைத் தூணையும், நான்கு வளைவுகளையும், மிக மங்கலமான ஏழு பீடங்களையும் கொண்டதும், ஆயிரம் கொடிகளுடன் கூடியதும், இசையொலியை எதிரொலிப்பதும்,(72) தெய்வீக குணங்களையும், தேவர்களின் குணங்களையும் கொண்டதும், ரத்தினங்கள், முத்துகள், பவளங்கள் ஆகியவை நிறைந்ததும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு தேரைச் செலுத்தும் அத்தகைய மனிதன், அவ்வாகனத்தை இழுக்க யானைகளையும், காண்டாமிருகங்களையும் கொண்டு ஆயிரம் யுகங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்திருப்பான்.(73)
பதினைந்து நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதினாறாம் நாளில் ஒரு வேளை உணவை உண்டு, இவழியில் மொத்த ஆண்டும் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், சோம வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(74) சொர்க்கத்திற்குச் செல்லும் அவன் சோமனுடைய மகள்களின் துணையுடன் வாழ்கிறான். சோமனைப் போலவே இனிய நறுமணக் களிம்புகளால் அவனது உடலில் நறுமணம் கமழும் அவன் தான் விரும்பும் இடத்திற்கு உடனே செல்லும் சக்தியையும் அடைகிறான்.(75) மிக அழகிய குணங்களையும், ஏற்புடைய நடத்தையுயும் கொண்ட காரிகையர் பணிசெய்ய, அனைத்து வகை இன்பங்களுடன் கூடியவனாகத் தேரில் அமர்ந்திருப்பான்.(76) அவன் இத்தகைய இன்பங்களைக் கணக்கில்லாத ஆண்டுகள் அனுபவிப்பான்[7].(77)
[7] "உண்மையில் ஒரு பெரிய எண்ணிக்கைக் கொடுக்கப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே சொல்கிறார். கும்பகோணம் பதிப்பில், "விமானத்திலிருந்து காட்சிக்கினியவர்களும், இனிய சொல்லுள்ளவர்களுமான பெண்களினால் பூஜிக்கப்பெற்றுக் காமஸுகங்களினால் உபசரிக்கப் பெறுகிறான். ஆயிரத்துப் பதினான்கு கோடி மஹாகல்பங்கள் அங்கேயே பலனை அனுபவிப்பான்" என்றிருக்கிறது.
பதினாறு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, பதினேழாம் நாளில் சிறிதளவு நெய்யை உண்டு, ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு. ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(78) வருண, இந்திர, ருத்திர, மருத்து, உசானஸ, பிரம்ம லோகங்களுக்குச் செல்கிறான்.(79) அங்கே அவன் தெய்வீகக் காரிகையரால் பணிவிடை செய்யப்பட்டு, புர்புவன் என்றழைக்கப்படும் தெய்வீக முனிவரின் காட்சியைப் பெற்று மொத்த அண்டத்தையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவில்) அடக்குகிறான்.(80) தேவர்களின் தேவனுடைய {பிரம்மனின்} மகள்கள் அங்கே அவனுக்கு மகிழ்ச்சியூட்டுகிறார்கள். ஏற்புடைய {இனிய} நடத்தை கொண்டவர்களும், அனைத்து ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்தக் காரிகையர் முப்பத்திரண்டு வடிவங்களை ஏற்கவல்லவர்களாவர்.(81) ஆகாயத்தில் சூரியனும், சந்திரனும் நகரும் வரை, ஞானம் கொண்ட அந்த மனிதனும் அமுதத்தைப் பருகியபடியே அந்த இன்ப உலகத்தில் வசித்திருப்பான்[8].(82)
[8] கும்பகோணம் பதிப்பில் இப்பத்தி முழுவதும், "பதினேழாவது நாள் வந்த போது அன்னத்தைப் புசித்து நித்தியம் அக்நிஹோத்திரங்களைச் செய்து கொண்டு பனிரெண்டு மாஸங்களுமிருப்பவன் வருணன், இந்திரன், ருத்திரர்கள் இவர்களின் லோகங்களையும் அடைந்து காற்றுப்படுகையிற்படுத்துப் பிரம்மலோகத்திற்கும் செல்வான். அங்கே தேவகன்னிகைகளினால் ஆஸனங்கொடுத்து உபசரிக்கப்படுவான். அவன் தேவரிஷியாயிருந்து பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் இம்மூன்று லோகங்களிலுமுற்ற எல்லாப் பொருட்களையும் பிரத்யக்ஷமாகப் பார்ப்பான். அங்கே அழுகும், இன்சொல்லுமுள்ளவர்களாகிய தேவர்க்கும் மேலான தேவரான பிரம்மதேவரின் கன்னிகைகள் முப்பத்திருவர் நன்றாக அலங்காரம் செய்து கொண்டு அவனை மகிழ்விப்பார்கள். ராஜனே, ஆகாயத்தில் சந்திரனும், சூரியனும் எந்தக் காலம் வரை ஸஞ்சரிக்கின்றனரோ அந்தக் காலம் வரையில் அந்தச் சிறந்த மனவுறுதியுள்ளவன் அமிருதத்திற்கொப்பான சுவைகளையுண்டு ஸஞ்சரிப்பான்" என்றிருக்கிறது.
பதினேழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பதினெட்டாம் நாளில் ஒரேயொரு வேளை மட்டும் உணவை உண்டு, அவ்வழியிலேயே மொத்த ஆண்டும் தன்னைத் தாங்கிக் கொள்பவன் அண்டத்திலுள்ள ஏழு உலகங்களையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவிற்குள்} அடக்கிவிடுவான்.(83) அவன் தன் தேரில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஏற்புடைய சடசடப்பொலியைக் கொண்டவையும், ஆபரணங்களாலும், அழகாலும் சுடர்விடும் தெய்வீகக் காரிகைகளால் செலுத்தப்படுபவையுமான தேர்க்கூட்டங்களால் எப்போதும் பின்தொடரப்படுவான்.(84) தெய்வீகமானதும், பேரழகுடன் கூடியதுமான தன் வாகனத்தைப் பெரும் மகிழ்ச்சியில் இன்புற்றவாறே அவன் செலுத்திக் கொண்டிருப்பான். அது சிங்கங்களாலும், புலிகளாலும் இழுக்கப்பட்டு மேகவொலியைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்கும்.(85) அவன் அத்தகைய இன்ப உலகத்தில், அமுதம் போன்ற இனிய சுவையுள்ளவற்றை உண்டு ஆயிரம் கல்பங்கள் வாழ்வான்.(86)
பதினெட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, பத்தொன்பதாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு ஒரு முழுமையான வருடம் இதே வழியில் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், இந்த அண்டத்திலுள்ள ஏழு உலகங்களையும் தன் உற்றறியும் திறனுக்குள் {அறிவுக்கு எட்டிய தொலைவிற்குள்} அடக்கிவிடுவான்.(87) அவன் அடையும் உலகத்தில் அப்சரஸ்களின் எண்ணற்ற இனக்குழுக்கள் வசிக்கின்றன, அது கந்தர்வர்களின் இனிய குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவன் செலுத்தும் தேர், சூரியப் பிரகாசத்தைக் கொண்டதாகும்.(88) அனைத்துக் கவலையில் இருந்தும் விடுபட்ட இதயத்துடன் கூடிய அவனிடம் தெய்வீகக் காரிகையரில் முதன்மையானோர் பணி செய்வார்கள். தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், அழகிய வடிவைக் கொண்டவனாகவும் அவன் கோடானுகோடி ஆண்டுகள் அத்தகைய இன்பத்தில் வாழ்ந்திருப்பான்.(89)
பத்தொன்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு இருபதாம் நாளில் மட்டும் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடமும் இவ்வழியிலேயே தன்னைத் தாங்கிக் கொண்டு, எப்போதும் பேச்சில் வாய்மையைப் பின்பற்றி, வேறு (சிறந்த) சடங்குகளையும் பின்பற்றி,(90) இறைச்சியைத் தவிர்த்து, பிரம்மச்சரிய வாழ்வை நோற்று, அனைத்து உயிரினங்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்து வாழும் மனிதன், பரந்து விரிந்தவையும், பெரும் மகிழ்ச்சியைக் கொண்டவையுமான ஆதித்தியர்களின் உலகங்களை அடைகிறார்கள்.(91) அவன் தன் தேரில் பயணம் மேற்கொள்ளும்போது, தெய்வீக மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்ட கந்தர்வகள் மற்றும் அப்சரஸ்களால் செலுத்தப்படும் தேர்க்கூட்டங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.(92)
இருபது நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தோராம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு, தன் புனித நெருப்பில் ஒவ்வொரு நாளும் ஆகுதிகளை ஊற்றுபவன்,(93) உசானஸ், சக்ரன், அஸ்வினிகள் மற்றும் மருத்துகளின் உலகங்களை அடைந்து, பெருமளவிலான தடங்கலில்லா மகிழ்ச்சியுடன் அங்கே வாழ்கிறான்.(94) எந்த வகைக் கவலையையும் அறியாத அவன், தன் பயணங்களில் முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தெய்வீகக் காரிகையரில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்டு, பலத்துடன் கூடியவனாக ஒரு தேவனைப் போலவே அங்கே விளையாடிக் கொண்டிருப்பான்.(95)
இருபத்தோரு நாட்கள் உண்ணாநோன்பிருந்து இருபத்திரண்டாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு முழு வருடம் தன்னைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை உற்றி,(96) எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்வதைத் தவிர்த்து, பேச்சில் வாய்மையில் பற்றுக் கொண்டு, வன்மத்தில் இருந்து விடுபட்டு வாழும் மனிதன் வசுக்களின் உலகை அடைந்து, சூரியப் பிரகாசம் கொண்டவனாகிறான்.(97) விரும்பிய இடம் எங்கும் செல்லும் சக்தியைக் கொண்டவனாக அமுதத்தைப் பருகி, முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்களை அணிந்து கொண்டு, தெய்வீகக் காரிகையரின் துணையுடன் இன்பத்தில் அவன் விளையாடிக் கொண்டிருப்பான்.(98)
இருபத்திரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்துமூன்றாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடம் இவ்வழியில் தன்னைத் தாங்கிக் கொண்டு, இவ்வாறே தன் உணவுமுறையை வகைமை செய்து கொண்டு, தன் புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் மனிதன்,(99) காற்றுதேவன் {வாயு}, உசானஸ் மற்றும் ருத்திரனின் உலகங்களை அடைகிறான். விரும்பிய எந்த இடத்திற்கும் செல்லவல்லவனாகத் திரியும் அவன் அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்களால் வழிபடப்படுகிறான்.(100) முதன்மையான தேரைச் செலுத்திக் கொண்டு, தன் மேனியை தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்ளும் அவன், அந்தப் பேரின்ப நிலையில் தெய்வீகக் காரிகையரின் துணையுடன் எண்ணற்ற வருடங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(101)
இருபத்துமூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இருபத்துநான்காம் நாளில் சிறிதளவு நெய்யையுண்டு, இவ்வழியில் ஒரு முழு வருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொண்டு, தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(102) மேனியில் தெய்வீக ஆடைகளையும், மாலைகளையும் பூண்டு, தெய்வீக நறுமணங்களையும், களிம்புகளையும் பூசிக் கொண்டு, பெரும் மகிழ்ச்சியுடன் ஆதித்தியர்களின் உலகங்களில் எண்ணற வருடங்கள் வசிக்கிறான்.(103) தங்கத்தால் அமைந்ததும், பேரழகுடன் கூடியதும், அன்னங்களால் இழுக்கப்படுவதுமான சிறந்த தேரைச் செலுத்தும் அவன், ஆயிரமாயிரம் தெய்வீகக் காரியரின் துணையுடன் இன்பத்தில் திளைத்திருக்கிறான்.(104)
இருபத்து நான்கு நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இருபத்தைந்தாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வாறு ஒரு முழுவருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன், முதன்மையான வகையைச் சார்ந்ததும், அனைத்து வகை இன்பங்கள் நிறைந்ததுமான ஒரு தேரை அடைவதில் வெல்கிறான்.(105) அவனுடைய பயணங்களில், சிங்கங்கள் மற்றும் புலிகளால் இழுக்கப்படுபவையும், மேகமுழக்கம் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்குபவையும், தெய்வீகக் காரிகையரால் செலுத்தப்படுபவையும், பசும்பொன்னால் ஆனவையும், பேரழகுடன் கூடியவையுமான தேர்க்கூட்டங்களால் அவன் பின் தொடரப்படுவான். பேரழகுடன் கூடிய ஒரு சிறந்த தெய்வீகத் தேரைச் செலுத்தும் அவன்,(106,107) நூற்றக்கணக்கான தெய்வீகக் கன்னிகையரின் துணையுடன், அமுதம் போன்ற இனிமையான சுவைமிக்கவற்றை உண்டு ஓராயிரம் கல்பங்கள் அவ்வுலகங்களில் வசித்திருப்பான்.(108)
இருபத்தைந்து நாட்கள் உண்ணா நோன்பிருந்து இருபத்தாறாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை மட்டுமே உண்டு, இத்தகைய உணவு நடைமுறையை நோற்று ஒரு முழு வருடமும் இவ்வாறு தன்னைத் தாங்கிக் கொண்டு,(109) (உலகப் பொருட்களின்) பற்றுகளில் இருந்து விடுபட்டு, தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்து, நாள்தோறும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் அருள்நிறைந்த மனிதன், அப்சரஸ்களால் வழிபடப்பட்டு, ஏழு மருத்துகள் மற்றும் வசுக்களின் உலகங்களை அடைவான்.(110) அவன் பயணம் மேற்கொள்ளும்போது, சிறந்த படிகங்களால் ஆனவையும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அவனுக்கு அனைத்து வகை மதிப்புகளை அளிக்கும் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களால் செலுத்தப்படும் தேர்க்கூட்டங்கள் அவனைப் பின்தொடர்ந்து செல்லும். இத்தகைய இன்பநிலையில், தெய்வீக சக்தியுடன் கூடியவனாக இரண்டாயிரம் யுகங்கள் அந்த உலகங்களில் வசிக்கிறான்.(111,112)
இருபத்தாறு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தேழாம் நாள் ஒரேயொரு வேளை உணவுண்டு, இவ்வழியில் ஒரு முழு வருடத்திற்குத் தன்னைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றும் மனிதன்,(113) பெரும் பலனை ஈட்டி, தேவர்களிடம் இருந்து பெரும் கௌரவங்களைப் பெற்றுச் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அங்கே வசிக்கும் அவன் அமுதம் உண்டு, அனைத்து வகைத் தாகங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்து வகை இன்பங்களை அனுபவிப்பான்.(114) ஓ! மன்னா, அனைத்துக் களங்கங்களில் இருந்து தூய்மையடைந்த ஆன்மாவுடன், பேரழகுடன் கூடிய தெய்வீகத் தேரில் பயணம் மேற்கொள்ளும் அவன், தெய்வீக முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் வகையில் அங்கே தன்னைத் தாங்கிக் கொள்வான்.(115) பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், உயர்ந்த ஏற்புடைய நடத்தையுடன் கூடிய தெய்வீகக் காரிகையரின் துணையுடன் மூவாயிரம் யுகங்கள் மற்றும் கல்பங்களுக்கு அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருக்கிறான்.(116)
இருபத்தேழு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தெட்டாம் நாள் ஒரே ஒரு வேளை உணவை உண்டு, இவ்வழியில் ஒரு வருடம் முழுவதும் புலன்கள் மற்றும் ஆன்மாவை நன்கு கட்டுப்படுத்தித் தன்னைத் தாங்கிக் கொள்பவன்,(117) தெய்வீக முனிவர்கள் அடைவதற்கு இணையான மிகப்பெரும் பலனை அடைவான். இன்பத்திற்குரிய அனைத்து வகைப் பொருட்களுடன் பெரும் சக்தியையும் கொண்டு அவன் நடுப்பகல் சூரியனைப் போலப் பிரகாசிக்கிறான்.(118) மிக மென்மையான குணங்களைக் கொண்டவர்களும், பிரகாசமான நிறத்தையும், பருத்த கொங்கைகளையும், சிறுத்த இடையையும், {வாழைபோன்ற} வழவழப்பான தொடைகளையும் கொண்டவர்களும், தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான விளையாட்டுக் காரிகைகள்,(119) அனைத்து வகை இன்பப் பொருட்களுடன் கூடியதும், சூரியப் பிரகாசம் கொண்டதும், இனிமை நிறைந்ததுமான சிறந்த தேரை அவன் செலுத்திக் கொண்டிருக்கும்போது, ஆயிரமாயிரம் கல்பங்கள் அவனுக்கு மகிழ்வூட்டுகின்றனர்.(120)
இருபத்தெட்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து, இருபத்தொன்பதாம் நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, ஒரு முழு வருடமும் இவ்வழியில் தன்னைத் தாங்கிக் கொண்டு, பேச்சில் வாய்மையுடன் இருக்கும் மனிதன்,(121) தெய்வீக முனிவர்களாலும், அரசமுனிகளாலும் வழிபடப்படுபவையும், பெரும் மகிழ்ச்சி நிறைந்தவையுமான மங்கல உலகங்களை அடைகிறான். சூரியன் மற்றும் சந்திரனின் பிரகாசத்துடன் கூடியதும், பசும்பொன்னாலானதும், அனைத்து வகை ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், மெல்லிசை பாடும் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்களால் செலுத்தப்படுவதுமான தேரை அடைகிறான்.(122,123) அங்கே அவன் அனைத்து வகைத் தெய்வீக ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மங்கலக் காரிகைகளால் பணிவிடை செய்யப்படுகிறான். இனிய இயல்புகளையும், ஏற்புடைய குணங்களையும் கொண்டவர்களும், பெரும் சக்தியுடன் கூடியவர்களுமான இவர்கள் தங்கள் துணையால் அவனுக்கு மகிழ்வூட்டுகிறார்கள்.(124) இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும், பெரும்சக்தியையும், சுடர்மிக்க நெருப்பின் காந்தியையும் கொண்ட அவன், தேவனைப் போல ஒளிர்ந்து, சிறப்புகள் அனைத்தையும் கொண்ட தேவ வடிவை அடைகிறான்.(125) அவன் வசுக்கள், மருத்துகள், சாத்யஸ்கள், அஸ்வினிகள், ருத்திரர்கள் மற்றும் பிரம்மலோகங்களை அடைகிறான்.(126)
ஒரு முழு மாதம் உண்ணாநோன்பிருந்து, பின்தொடரும் மாதத்தின் முதல்நாளில் ஒரேயொரு வேளை உணவை உண்டு, இவ்வழியிலேயே ஒரு வருடம் முழுவதும் தன்னைத் தாங்கிக் கொண்டு, அனைத்தையும் சம பார்வையுடன் பார்த்து வரும் மனிதன், பிரம்மலோகத்தையே அடைகிறான்.(127) அங்கே அவன் அமுதம் பருகி வாழ்கிறான். பேரழகுடன் கூடியவனாகவும், அனைவருக்கும் ஏற்புடையவனாகவும் இருக்கும் அவன், ஆயிரங்கதிர் கொண்ட சூரியனைப் போலவே சக்தியிலும், செழிப்பிலும் ஒளிர்கிறான்.(128) யோகத்தில் அர்ப்பணிப்புடன், தெய்வீக ஆடைகள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக நறுமணப் பொருட்கைளயும், களிம்புகளையும் பூசிக் கொண்டு, சிறு துன்பத்தையும் அறியாமல் தன் நேரத்தைப் பெரும் மகிழ்ச்சியுடன் கடத்துகிறான். பிரகாசத்தில் சுடர்விடும் காரிகையரின் பணியை ஏற்றுத் தன்னுடைய தேரில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(129) தெய்வீக முனிவர்கள் மற்றும் ருத்திரர்களின் மகள்களான அந்தக் காரிகையர், மதிப்புடன் அவனைத் துதிப்பார்கள்.(130) மிக இனிமையான, மிக ஏற்புடைய பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், பல்வேறு வகை இனிய பேச்சுகளைக் கொண்டவர்களுமான அவர்கள், பல்வேறு வகைகளிலும், வழிகளிலும் பணிவிடை செய்து மகிழ்வூட்டுவார்கள்.(131) அவன் பயணங்கள் மேற்கொள்ளும்போது, (நுட்பமாக அமைந்திருக்கும் பொருட்களால்) ஆகாயத்தின் நிறத்தில் தெரியும் தேரைச் செலுத்திச் செல்கிறான். அவனுக்குப் பின்னால், சந்திரனைப் போலத் தெரியும்தேர்களும், அவனுக்கு முன்னால் மேகங்களுக்கு ஒப்பான தேர்களும்ம், வலப்புறத்தில் சிவப்பு வண்ணத் தேர்களும், அவனுக்குக் கீழே நீல நிறத் தேர்களும், அவனுக்கு மேலே பல்வேறு வண்ணங்களிலான தேர்களும் பின்தொடர்கின்றன[9]. அவன் எப்போதும் தனக்குப் பணிவிடை செய்பவர்களால் துதிக்கப்படுகிறான்.(132,133). பெரும் ஞானம் கொண்ட அவன், பூமியில் ஜம்புத்வீபம் என்றழைக்கப்படும் பகுதியில் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் பொழியும் மழைத்துளிகளின் அளவுக்கான வருடங்கள் பிரம்மலோகத்தில் வாழ்வான்.(134) உண்மையில், ஒரு தேவனின் பிரகாசத்தைக் கொண்ட அவன், மழைக்காலங்களில் பூமியில் விழும் மழைத்துளிகளின் அளவுக்கான வருடங்கள் கலப்பற்ற இன்ப நிலையைக் கொண்ட அந்த உலகத்தில் வாழ்வான்.(135)
[9] கும்பகோணம் பதிப்பில், "பின்னே சந்திரனைப் போலவும், வடபுறத்தில் மேகம் போலவும் பிரகாசிப்பதும், தென்புறத்தில் சிவந்த நிறமுள்ளதும், அடிவாரத்தில் கறுத்த உருவமுள்ளதும், மேலே பல நிறங்களுள்ளதும், ஆகாயத்திற்கும் சூரியனுக்கும் வைடூரியக் கல்லுக்கும் ஒப்புள்ளதுமான தேவ விமானத்திற்குக் கொண்டாடப்பட்டுத் தனியாயில்லாமல் வஸிப்பான்" என்றிருக்கிறது.
ஒரு மாதம் முழுவதும் உண்ணாநோன்பிருந்து, பின்வரும் மாதத்தின் முதல்நாளில் உண்டு, இவ்வழியில் பத்து வருடங்கள் தன்னைத் தாங்கிக் கொள்ளும் மனிதன் பெரும் முனிவன் என்ற தகுதியை அடைகிறான். அவன் இப்பிறவியில் செய்த செயல்களின் வெகுமதியாகச் சொர்க்கத்திற்குச் செல்லும்போது வடிவத்தில் எந்த மாற்றத்திற்கும் உட்பட வேண்டியதில்லை.(136) உண்மையில், பேச்சைத் தவிர்த்து, தன்மறுப்பைப் பயின்று, கோபத்தையும், பாலியல் பசியையும், உண்ணும் ஆசையையும் அடக்கி, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்று, இரு சந்திப் பொழுதுகளிலும் முறையாகத் துதிப்பதன் மூலம் ஒருவன் இந்நிலையை அடைகிறான்.(137) இவற்றையும், இதுபோன்ற நோன்புகளையும் நோற்று இவ்வழியில் உண்பதன் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் மனிதன், ஆகாயம் போன்ற களங்கமற்றவனாகி, சூரியனைப் போலப் பிரகாசிக்கிறான்.(138) ஓ! மன்னா, அத்தகைய மனிதன், தன் சொந்த உடல் வடிவத்துடனேயே சொர்க்கத்திற்குச் சென்று, தேவனைப் போல விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.(139)
ஓ! பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறே நான் உண்ணாநோன்புகளின் கனிகளை {பயன்களைச்} சார்ந்த வேள்விகளின் சிறந்த விதிகளை ஒன்றன்பின் ஒன்றாக உனக்குச் சொன்னேன்[10].(140) ஓ! பிருதையின் மகனே, (வேள்விகளைச் செய்ய இயலாத) ஏழை மக்கள், இவற்றின் மூலம் (உண்ணா நோன்புகளை நோற்பதன் மூலம்) {வேள்வி செய்த} கனிகளை அடைவார்கள். உண்மையில், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓர் ஏழை மனிதனும் தேவர்களையும், பிராமணர்களையும் வழிபட்டுவரும் அதே வேளையில், இந்த உண்ணா நோன்புகளை நோற்பதன் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றனர். இவ்வாறே உண்ணாநோன்புகள் குறித்த விதிகளை விரிவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(141,142) நோன்புகளை நோற்பவர்கள், விழிப்புணர்வு நிறைந்தவர்கள், தூயவர்கள், உயர் ஆன்மாக்கள், செருக்கில் இருந்தும், அனைத்து வகைக் கருத்து முடிவுகளில் இருந்தும் விடுபட்டவர்கள், அர்ப்பணிப்புள்ள புத்திமான்கள், பாதையில் இருந்து வழுவாமல் நோக்கத்தில் நிலைத்திருந்து தங்கள் முடிவை உறுதியுடன் பின்பற்றுபவர்கள் ஆகியோரிடம் ஒருபோதும் ஐயங்கொள்ளலாகாது" என்றார் {பீஷ்மர்}.(143)
[10] "வேள்விகள் தங்கள் ஆன்மாவாகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட உண்மையான சடங்குகளையோ, பல்வேறு வகையான உண்ணாநோன்புகளையோ கொண்டிருக்கின்றன. இரண்டும் இணையான பலன்களையே தரவல்லவை என்பதால் உண்ணாநோன்புகள் நோற்பது வேள்விகளைச் செய்வதற்குச் சமமானதே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், உபவாஸங்களுடைய பலனாகக் கிடைக்கும் உத்தமமான யாகவிதியை உனக்கு வரிசையாகச் சொன்னேன்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 107ல் உள்ள சுலோகங்கள் : 143
ஆங்கிலத்தில் | In English |