Tirthas in the body! | Anusasana-Parva-Section-108 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 108)
பதிவின் சுருக்கம் : தீர்த்தங்களும், தூய்மைகளும் எவை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தீர்த்தங்கள் அனைத்திலும் எது முதன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. உண்மையில், எந்தத் தீர்த்தத்தால் பெருந்தூய்மை உண்டாகிறது என்பதையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(1)
[1] "தீர்த்தம் என்ற சொல் புனித நீர் என்ற பொருளைக் கொண்டது என ஏற்கனவே (சாந்தி பர்வத்தில்) விளக்கப்பட்டிருக்கிறது. நீரில்லாமல் தீர்த்தமோ, ஆறோ, தடாகமோ, கிணறோ இருக்க முடியாது. எனினும், பீஷ்மர் இந்தச் சொல்லுக்கு வேறு பொருளைக் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்துத் தீர்த்தங்களும் பலன்கொண்டவையே என்பதில் ஐயமில்லை. எனினும், ஞானம் கொண்ட மனிதர்களுக்குத் தீர்த்தமும், தூய்மையும் எது என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) நித்திய வாய்மையைப் பின்பற்றும் ஒருவன், ஆழங்காண முடியாததும், களங்கமற்றதும், தூய்மையானதும், வாய்மையையே நீராகக் கொண்டதும், புத்தியையே தடாகமாகக் கொண்டதுமான மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராட வேண்டும்[2].(3) ஒருவன் இத்தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் தூய்மையின் வடிவில் அடையப்படும் கனிகளே {பயன்களே}, பேராசையிலிருந்து விடுதலை, நேர்மை, வாய்மை, (நடத்தையில்) மென்மை, கருணை, எந்த உயிரினத்துக்கும் தீங்கிழையாமை, தற்கட்டுப்பாடு மற்றும் அமைதி {மன அடக்கம்} ஆகியவையாகும்.(4) பற்றுகளில் இருந்து விடுபட்டவர்கள், செருக்கற்றவர்கள், (இன்பதுன்பம், புகழ்பழி, வெப்பம்குளிர் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவர்கள், மனைவி, பிள்ளைகள், வீடுகள், தோட்டங்கள் முதலியவை இல்லாதவர்கள், தூய்மையுடன் கூடியவர்கள், பிறரால் கொடுக்கப்படும் பிச்சையில் மட்டுமே வாழ்பவர்கள் ஆகியோர் தீர்த்தங்களாகக் கருதப்படுகிறார்கள்.(5)
[2] "இம்மொழி குறீயீடுகள் நிறைந்ததாகும். ‘மானஸம்’ என்ற சொல்லின் மூலம் உயர்ந்ததும், புனிதமானதும், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்களை ஈர்ப்பதுமான இமாலயத் தடாகத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இங்கே பயன்படுத்தப்படும் அந்தச் சொல் ஆன்மாவைக் குறிப்பிடுகிறது. எவராலும் அதன் மூலத்தைக் காண முடியாத விளைவால் அஃது ஆழங்காண முடியாததாக இருக்கிறது. அஃது இயல்பாகவே தூய்மையானதாகவும், களங்கமற்றதாகவும் இருக்கிறது. வாய்மையை நீராகவும், புத்தியைத் தடாகமாகவும் கொண்டிருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது. ஒருவேளை வாய்மையை நீராகக் கொண்ட புத்தியானது, {மானஸம் என்ற} அந்தப் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தத்தின் ஒரு பகுதியாகப் புஷ்கரம் இருப்பதைப் போலவே இந்தத் தீர்த்தத்தின் ஒரு பகுதியாக அமைகிறது என்று சொல்லப்படுவதாகப் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸத்யமென்னும் துறையும், தைரியமென்னும் மடுவுமாகவுள்ள ஆழமும், பரிசுத்தமும், தெளிவுமான மனமென்னும் தீர்த்தத்தில் அழியாத ஸத்வகுணத்தைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
அனைத்துப் பொருட்களின் உண்மையை அறிந்தவனும், நான், எனது என்ற {அகங்காரக்} கருத்தில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் உயர்ந்த தீர்த்தமாகச் சொல்லப்படுகிறான்[3]. தூய்மைக்கான குறியீடுகளைத் தேடும்போது உன் பார்வை இந்தக் குணங்களில் (அஃதாவது இந்தக் குணங்கள் இருக்கும் இடத்தில் தூய்மை இருக்கும், இல்லாத இடத்தில் தூய்மை இல்லை என்று கொள்வதற்காக) எப்போதும் செலுத்தப்பட வேண்டும்.(6) சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்கள் கழுவப்பட்ட ஆன்மாவைக் கொண்டோர், (புறத்) தூய்மை மற்றும் தூய்மையின்மைகளைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுக்கு முன்மொழிந்து கொண்ட முடிவுகளைப் பின்தொடர்பவர்கள்,(7) அனைத்தையும் துறந்தவர்கள், அனைத்தையும் அறிந்தவர்கள், அண்டப் பார்வை கொண்டவர்கள், தூய ஒழுக்கம் கொண்டவர்கள் ஆகியோர் தூய்மை செய்யும் சக்தி படைத்த தீர்த்தங்களாகக் கருதப்படுகின்றனர்.(8) அங்கங்கள் நீரில் நனைந்ததால் மட்டுமே ஒரு மனிதன் கழுவப்பட்டவனாகக் கருதப்படமாட்டான். மறுபறம் அவன் தன்மறுப்பால் தன்னைக் கழுவிக் கொண்டால் அவன் கழுவப்பட்டவனாகக் கருதப்படுவான். அத்தகைய மனிதனே அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.(9) கடந்த காலத்தைக் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளாதவர்கள், உண்மையில், ஆசையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் உயர்ந்த தூய்மையைக் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(10)
[3] "நான் எனது என்ற கருத்தில் இருந்து விடுபட்ட ஒருவன் தன்னை அனைத்து உயிரினங்களுடன் அடையாளம் காண்கிறான். தான் என்ற கருத்து அவனுள் அழிந்து விடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அறிவே தனிச்சிறப்புள்ள உடல்தூய்மையாக அமைவதாகச் சொல்லப்படுகிறது. அதே போல ஆசையில் இருந்து விடுதலையும் மன உற்சாகமும் அவ்வாறே சொல்லப்படுகிறது.(11) ஒழுக்கத்தூய்மையானது, மனத்தூய்மையில் அடங்கியிருக்கிறது. புனித நீர்நிலைகளில் செய்யப்படும் தூய்மைச் சடங்குகளால் ஒருவன் அடையும் தூய்மை தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.(12) சுடர்மிக்க மனத்துடன், பிரம்ம அறிவு என்ற நீரில், மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் ஒருவனால் செய்யப்படும் தூய்மைச்சடங்குகளே வாய்மையறிந்தோருக்கு உண்மையான தூய்மைச்சடங்குகளாகும்.(13) உண்மையான ஒழுக்கத்தூய்மை கொண்டவனும், அனைவரிடமும் முறையான அணுகுமைறையைப் பாதுகாப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவுனும், உண்மையில் (தூய) குணங்களும் தகுதியும் கொண்டவனுமான மனிதனே உண்மையில் தூய்மையானவனாகக் கருதப்படுகிறான்.(14) நான் சொன்ன இவையே உடலில் உள்ள தீர்த்தங்களாகச் சொல்லப்படுகின்றன. பூமியில் அமைந்திருக்கும் புனிதத் தீர்த்தங்களையும் சொல்கிறேன் கேட்பாயாக.(15)
உடலின் தனிச்சிறப்புள்ள குணங்கள் புனிதமானவையாகச் சொல்லப்படுவதைப் போலவே, பூமியில் உள்ள குறிப்பிட்ட இடங்களும், குறிப்பிட்ட நீர்நிலைகளும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(16) தீர்த்தங்களின் பெயர்களைச் சொல்வதன் மூலமும், அங்கே தூய்மைச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், அவ்விடங்களில் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிப்பதன் மூலமும் ஒருவனுடைய பாவங்கள் கழுவப்படுகின்றன.. உண்மையில், இவ்வாறு பாவங்கள் கழுவப்பட்ட மனிதன், இவ்வுலகை விட்டுச் செல்லும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17) அறவோரின் தொடர்புடையதன் விளைவாகவும், அந்த இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நீர்நிலைகளில் உள்ள பூமியின் சிறப்புத்திறன்களின் மூலமும், பூமியில் குறிப்பிட்ட பகுதிகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.(18) மனோதீர்த்தங்கள் பூமியில் உள்ளவற்றைக் காட்டிலும் தனியானவையும், வேறுபட்டவையுமாகும். இரண்டிலும் நீராடும் மனிதன் தாமதமில்லாமல் வெற்றியை அடைகிறான்.(19) முயற்சியில்லாத பலம், அல்லது பலமில்லாத முயற்சி ஆகியவற்றால் தனியாக எதையும் நிறைவேற்ற முடியாமல், இவை சேர்ந்திருக்கும்போதே அனைத்தையும் நிறைவேற்ற முடிவதைப் போலவே,(20) உடலில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதும், பூமியில் உள்ள தீர்த்தங்களால் அளிக்கப்படுவதுமான தூய்மையுடன் கூடிய ஒருவன் உண்மையில் தூய்மையடைந்து வெற்றியை அடைகிறான். இரண்டு மூலங்களில் இருந்தும் பெறப்படும் தூய்மையே சிறந்ததாகும்" என்றார் {பீஷ்மர்}.(21)
அநுசாஸனபர்வம் பகுதி – 108ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |