Vishnu and fasts! | Anusasana-Parva-Section-109 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 109)
பதிவின் சுருக்கம் : பனிரெண்டு மாதங்களில், பனிரெண்டு பெயர்களால் விஷ்ணுவைத் துதிப்பதன் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, இவ்வுலகில் அனைத்து வகை உண்ணா நோன்புகளிலும் உயர்ந்ததும், நன்மையானதும், குறிப்பிடத்தக்கதுமான பலன் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஒருவன் எதைச் செய்வதன் மூலம் ஐயமில்லாமல் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான் என்பதைச் சுயம்புவே பாடியிருக்கிறான் கேட்பாயாக.(2)
மார்கசீரிஷம் {மார்கழி} என்றழைக்கப்படும் மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனைக், கேசவனாக {கேசவன் என்று சொல்லி} வழிபடும் மனிதன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து கழுவப்பட்டு, ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.(3)
அதே வகையில், பௌஷ {தை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை நாராயணனாக வழிபடும் மனிதன், உயர்ந்த வெற்றியை அடைந்து, வாஜபேய வேள்வியைச் செயத பலனை அடைகிறான்.(4)
மாக {மாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மாதவனாக வழிபடும் மனிதன், தன் குலத்தை (துன்பத்தில் இருந்து) மீட்டு, ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான்[1].(5)
[1] "அத்தகைய மனிதன், இறந்து போன தன் மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் தான் அடையும் பலனின் மூலம் அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் மறுமையில் விடுவிப்பான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பால்குன {பங்குனி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை கோவிந்தனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகத்திற்குச் சென்று அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைகிறான்.(6)
சைத்ர {சித்திரை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை விஷ்ணுவாக வழிபடும் மனிதன், தேவர்களின் உலகிற்குச் சென்று, பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைகிறான்.(7)
வைசாக {வைகாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} அதேபோன்ற உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை மதுசூதனனாக வழிபடும் மனிதன், சோமனின் உலகிற்குச் சென்று அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்.(8)
ஜய்ஷ்ட (ஆனி) மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (பலியின் வேள்வியில்) அண்டத்தையே தன் மூன்று அடிகளால் மறைத்தவனாக {திரிவிக்கிரமனாக} வழிபடும் மனிதன், பெரும் மகிழ்ச்சியுடன் அப்சரஸ்களுடன் விளையாடிக் கொண்டு கோமேத வேள்வி செய்த பலனை அடைகிறான்.(9)
ஆஷாத {ஆடி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை (அசுர மன்னன் பலியியை வஞ்சித்த) வாமனனாக வழிபடும் ஒருவன், அப்சரஸ்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டே, நரமேத வேள்வியின் பலன்களை அடைகிறான்[2].(10)
[2] "நரமேத வேள்வியில் ஒரு மனிதன் காணிக்கயளிக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சிரவண {ஆவணி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ஸ்ரீதரனாக வழிபடும் ஒருவன், தான் இன்பத்தில் விளையாடும் சொர்க்கத்தில் ஓர் அழகிய தேரை அடைந்து, பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.(11)
பாத்ரபத {புரட்டாசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, மொத்த பகலும், இரவும் கிருஷ்ணனை ரிஷிகேசனாக {ஹ்ருஷீகேசனாக} வழிபடும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைந்து, சௌத்ராமணி வேள்வி செய்த பலன்களை அடைவான்.(12)
அஸ்வினி {ஐப்பசி} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனைப் பத்மநாபனாக வழிபடும் ஒருவன், ஆயிரம் பசுக்கள் கொடையளிக்கப்பட்டும் செய்யப்பட்ட வேள்வியின் பலன்களை ஐயமில்லாமல் கொடுக்கும்.(13)
கார்த்திகா {கார்த்திகை} மாதத்தின் பனிரெண்டாம் சந்திர நாளில் {துவாதசியில்} உண்ணா நோன்பிருந்து, கிருஷ்ணனை தாமோதரனாக வழிபடும் ஒருவன், அனைத்து வேள்விகளையும் செய்த மொத்த பலன்களையும் ஐயமில்லாமல் அடைகிறான்.(14)
இவ்வழியில் மொத்த வருடமும் கிருஷ்ணனை புண்டரீகாக்ஷனாகத் துதிப்பவன் பெரும் அளவினால தங்கத்தை அடைந்து, தன் முற்பிறவிகளின் சம்பவங்களை நினைவுகூரும் சக்தியை அடைகிறான்.(15)
அதேபோல, ஒவ்வொரு நாளும் கிருஷ்ணனை உபேந்திரனாக வழிபடும் ஒருவன் அவனோடு அடையாளம் காணப்படும் நிலையை அடைகிறான். இவ்வழியில் கிருஷ்ணனை வழிபட்ட பிறகு, ஒருவன் தன் நோன்பை முடிவுக்குக் கொண்டு வந்து, எண்ணற்ற பிராமணர்களுக்கு உணவூட்டி, நெய்யாலான கொடைகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.(16)
புராதனமானவனும், சிறப்புமிக்கவனுமான விஷ்ணுவே, இவ்வகை உண்ணாநோன்புடன் தொடர்புடைய மேன்மையான பலன்களைக் கொண்ட வேறு உண்ணாநோன்பு ஏதுமில்லை என்று சொல்லியிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}".(17)
அநுசாஸனபர்வம் பகுதி – 109ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |