Vishnu and fasts! | Anusasana-Parva-Section-110 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 110)
பதிவின் சுருக்கம் : அழகு செல்வம் முதலியவற்றை அடைவதற்குச் செய்ய வேண்டிய சந்திர நோன்பு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குருகுலப் பாட்டனும், வயதில் முதிர்ந்தவரும், அப்போது கணைப்படுக்கையில் கிடந்தவருமான பீஷ்மரிடம் சென்ற பெரும் ஞானம் கொண்ட யுதிஷ்டிரன் பின்வரும் கேள்வியைக் கேட்டான்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, வடிவ அழகு, செழிப்பு, ஏற்புடைய இயல்பு ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு அடைகிறான்? உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு ஈட்டுகிறான்? ஒருவன் எவ்வாறு மகிழ்ச்சியுடன் கூடியவனாகிறான்?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மார்கசீரிஷ {மார்கழி} மாதத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் கூடியிருக்கும் நாளில் அதே நட்சத்திரத்தை {மூல நட்சத்திரத்தையே} பாதங்களாகவும், ரோகிணியைக் கணுக்கால்களாகவும்,(3) அசுவினியை முழங்கால்களாகவும், இரண்டு ஆஷாதங்களை {பூராட உத்தராடங்களைத்} தொடைகளாகவும், பால்குனிகள் {பூரம் உத்தரங்களைக்} குதமாகவும், கிருத்திகையை இடுப்பாகவும்,(4) பாத்ரபதங்களை {பூரட்டாதி உத்தரட்டாதிகளை} உந்தியாகவும், ரேவதியை வயிற்றுப் பகுதியாகவும், தனிஷ்டையை {அவிட்டத்தை} முதுகாகவும், அனுராதாவை {அனுஷத்தை} வயிறாகவும்,(5) விசாகத்தை இரு தோள்களாகவும், ஹஸ்தத்தை இரு கைகளாகவும், புனர்வசுவை {புனர்பூசத்தை} விரல்களாகவும், அஸ்லேஷத்தை {ஆயில்யத்தை} நகங்களாகவும்,(6) ஜியேஷ்டையை {கேட்டையைக்} கழுத்தாகவும், சிரவணத்தை {திருவோணத்தைக்} காதுகளாகவும், புஷ்யத்தை {பூசத்தை} வாயாகவும், ஸ்வாதியைப் பற்கள் மற்றும் உதடுகளாகவும்,(7) சதாபிஷத்தை {சதயத்தைச்} புன்னகையாகவும், மகத்தை மூக்காகவும், மிருகசீர்ஷத்தைக் கண்களாகவும், சித்திரையை நெற்றியாகவும்,(8) பரணியைத் தலையாகவும், ஆர்த்திராவை {திருவாதிரையை} மயிராகவும் {கேசமாகவும்} கொண்டிருக்கும் {நிலவுக்கான} சந்திர விரதம் தொடங்கப்பட வேண்டும் {தியானம் செய்ய வேண்டும்}. அந்த நோன்பின் முடிவில், வேதமறிந்த பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்கப்பட வேண்டும்.(9)
அந்நோன்பின் கனியாக ஒருவன், செழிப்பு, மேனி அழகு, அறிவைத் தரும் நற்பேறு ஆகியவற்றைக் கொண்டவனாகிறான். உண்மையில், அத்தகைய நோன்பின் விளைவாக முழு நிலவைப் போலவே அவன் (அனைத்து வகை நற்குணங்களும்) நிறைந்தவனாகிறான்" என்றார் {பீஷ்மர்}.(10)
அநுசாஸனபர்வம் பகுதி – 110ல் உள்ள சுலோகங்கள் : 10
ஆங்கிலத்தில் | In English |