Sinful births! | Anusasana-Parva-Section-111 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 111)
பதிவின் சுருக்கம் : அறம் எவ்வாறு ஒருவனைப் பின்தொடர்கிறது; உயிர்வித்து எவ்வாறு உண்டாகிறது; ஜீவன் எவ்வாறு பிறந்து வளர்கிறது; உடலைக் கைவிடும்போது, ஜீவன் எவ்வாறு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது; பல்வேறு செயல்களின் விளைவால் ஜீவன் அடையும் பல்வேறு வடிவங்களிலான பிறவிகள் குறித்து யுதிஷ்டிரனுக்கும் பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்து பெரும் ஞானம் கொண்டவரே, எவற்றின் விளைவாக மனித உயிரினங்கள் மறுபிறவி எனும் பயணத்தில் சுழல்கின்றனவோ அந்தச் சிறந்த விதிகளை நான் அறிய விரும்புகிறேன்.(1) ஓ! மன்னா, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதால் மனிதர்கள் உயர்ந்த சொர்க்கத்தை அடைகின்றனர்? எவ்வொழுக்கத்தைப் பின்பற்றினால் ஒருவன் நரகில் மூழ்குகிறான்?(2) மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற செயலற்ற இறந்த உடலைக் கைவிட்டு, மக்கள் மறுஉலகத்திற்குச் செல்லும்போது, அவர்களைப் பின்தொடர்பவை எவை?" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும் சிறப்புமிக்கவருமான பிருஹஸ்பதி அதோ வருகிறார். நீ அவரிடமே இதைக் கேட்பாயாக. இக்காரியம் ஒரு நித்திய புதிராகும்.(4) இக்காரியத்தை வேறு யாராலும் விளக்க முடியாது. பிருஹஸ்பதியைப் போன்ற பேச்சாளர் வேறு எவரும் இல்லை" என்றார்".(5)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், "பிருதையின் மகனும் {யுதிஷ்டிரனும்}, கங்கையின் மகனும் {பீஷ்மரும்} இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தபோது, தூய்மையான ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவருமான பிருஹஸ்பதி ஆகாய வழியில் அவ்விடத்திற்கு வந்தார்.(6) திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனும், வேறு அனைவரும் எழுந்து நின்று, உரிய கௌரவங்களுடன் பிருஹஸ்பதியை வரவேற்றனர். உண்மையில், அவர்கள் தேவர்களின் ஆசானுக்கு {பிருஹஸ்பதிக்கு} அளித்த வழிபாடு சிறப்புமிக்கதாக இருந்தது.(7) பிறகு தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரன், சிறப்புமிக்கவரான பிருஹஸ்பதியை அணுகி, உண்மையை அறிய விரும்பி உரிய வடிவில் கேள்வியைக் கேட்டான்.(8)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, நீர் கடமைகளை மற்றும் சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவராவீர். உண்மையில மனித உயிரினங்களின் நண்பன் யார் என்பதை எனக்குச் சொல்வீராக.(9) தந்தை, தாய், மகன், ஆசான், உற்றார் உறவினர், நண்பர்கள் என்றழைக்கப்படுபவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உண்மையில் ஒரு மனித உயிரினத்தின் நண்பனாக {துணையாக} இருப்பது யார்? ஒருவன் மரக்கட்டையையோ, மண்ணாங்கட்டியையோ போன்ற தன் இறந்த உடலைக் கைவிட்டு அடுத்த உலகிற்குச் செல்கிறான். அங்கே அவனைப் பின்தொடர்ந்து செல்வது யார்?" என்று கேட்டான்.(10)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஒருவன் தனியாகவே பிறக்கிறான்; தனியாகவே இறக்கிறான்; தான் சந்திக்கும் சிரமங்கள் அனைத்தையும் அவன் தனியாகவே கடக்கிறான்; தனக்கு ஏற்படும் எந்தத் துன்பத்தையும் அவன் தனியாகவே அனுபவிக்கிறான்.(11) இச்செயல்களில் உண்மையில் ஒருவனுக்கு எவனும் துணைவனல்ல. தந்தை, தாய், சகோதரன், மகன், ஆசான், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்,(12) ஒரு கணம் மட்டுமே துக்கமடைந்து, இறந்த உடலை மரத்துண்டையோ, மண்ணாங்கட்டியையோ போன்று கைவிட்டு, தங்கள் சொந்த காரியங்களைப் பார்க்க வேறு முகமாகச் செல்வார்கள்.(13) அவர்கள் அனைவராலும் இவ்வாறு கைவிடப்பட்ட உடலை அறம் மட்டுமே பின்தொடர்கிறது. எனவே, அறம் மட்டுமே ஒருவனுடைய நண்பன், அறம் மட்டுமே அனைவராலும் நாடப்பட வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(14) அறத்துடன் கூடியவன் சொர்க்கத்தால் அமைந்த உயர்ந்த கதியை அடைகிறான். அவன் அறமற்றவனாக இருந்தால் நரகை அடைகிறான்.(15) எனவே, புத்தியுள்ள மனிதன் நீதிமிக்க வழிமுறைகளில் வெல்லப்பட்ட செல்வத்தைக் கொண்டு அறமீட்டுவதற்கு எப்போதும் முயல வேண்டும். மறுமையில் உயிரினங்களுக்கு ஒரே உற்ற நண்பன் அறம் மட்டுமே ஆகும்.(16) அதிக அறிவில்லாதவனும், ஆசையால் மதிமயங்கியவனுமான ஒரு மனிதன், பேராசை, மயக்கம் {அறியாமை}, கருணை, அச்சம் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு வேறொருவருக்காகவாவது முறையற்ற செயல்களில் ஈடுபடுவது காணப்படுகிறது.(17) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றுமே வாழ்வின் கனியாகின்றன. ஒருவன் ஒழுங்கற்றவற்றிலும், பாவத்திலிம் இருந்து விடுபடுவதன் மூலம் இம்மூன்றையும் அடைய வேண்டும்" என்றார்.(18)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "சிறப்புமிக்க உம்மால் பேசப்பட்டதும், உயர்ந்த நன்மையைத் தருவதும், அறம் நிறைந்ததுமான சொற்களைக் கவனமாகக் கேட்டேன். நான் இப்போது (மரணத்திற்குப் பிறகான) உடலின் இருப்பு குறித்து அறிய விரும்புகிறேன்.(19) ஒரு மனிதனின் சடலம் நுட்பமானதாகவும், வெளிப்படா {புலப்படாத்} தன்மை கொண்டதாகவும் ஆகிறது. அறத்தால் எவ்வாறு அதைப் பின்தொடர முடியும்?" என்று கேட்டான்.(20)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, "பூமி {நிலம்}, காற்று, ஆகாயம், நீர், ஒளி, மனம், யமன் (இறந்தோரின் மன்னன்), புத்தி, ஆன்மா, பகல், இரவு ஆகிய அனைத்தும் சேர்ந்து வாழும் உயிரினங்கள் செய்யும் நன்மைகள் (மற்றும் தீமைகளை) சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. (இறக்கும்போது) இவற்றைக் கொண்ட அறமானது அந்த உயிரினத்தைப் பின்தொடர்கிறது.(21,22) ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, உயிர், தோல், எலும்புகள், இறைச்சி, உயிர்வித்து, குருதி ஆகியவற்றை உடல் இழக்கும் அதே நேரத்தில் அவையும் அதை விட்டு அகல்கின்றன.(23) தகுதியுடன் (மற்றும் குறையுடனும்) கூடிய ஜீவன், (இந்த உடல் அழிந்த பிறகு) மற்றொன்றை அடைகிறது. ஜீவன் அந்த உடலை அடைந்ததும், ஐம்பூதங்களின் தலைமைத் தேவர்கள் அவனது நற்செயல்களையும், தீச்செயல்களையும் சாட்சியாகக் காண்கின்றனர்.(24) நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்? அறத்துடன் கூடியதாக இருந்தால் ஜீவன் மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்மை மற்றும் மறுமை குறித்து வேறென்ன நான் உரையாட வேண்டும்?" என்று கேட்டார்.(25)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "சிறப்புமிக்க நீர் அறம் எவ்வாறு ஜீவனைத் தொடர்கிறது என்று சொன்னீர். உயிர்வித்து எவ்வாறு தோன்றுகிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றான்.(26)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, உடலில் வசிக்கும், பூமி, காற்று, ஆகாயம், நீர், ஒளி, மனம் ஆகிய தேவர்கள் உண்ணும் உணவு அவர்களை நிறைவடையச் செய்கிறது. ஓ! ஏகாதிபதி, ஓ! தூய ஆன்மாவே, ஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐம்பூதங்களும் நிறைவடையும்போது, அவர்களுடைய உயிர்வித்து உண்டாகிறது.(28) ஆண் மற்றும் பெண்ணுக்கிடையில் ஒரு கலவிச் செயல் நடைபெறும்போது, வெளியே பாயும் உயிர்வித்துக் கருவை உண்டாக்குகிறது. இவ்வாறு நீ கேட்டதற்கு நான் விளக்கமளித்தேன். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" என்று கேட்டார்.(29)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, கருத்தரித்தல் எவ்வாறு நடைபெறுகிறது. பிறவி எடுக்கும் ஜீவன் (உடலைப் பெறுவதன் மூலம்) எவ்வாறு வளர்கிறது என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(30)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, "ஜீவன் உயிர்வித்துக்குள் நுழைந்த உடனேயே, அவன் ஏற்கனவே சொல்லப்பட்ட பூதங்களால் நிறைகிறான். ஜீவன் அவற்றில் இருந்து பிரியும் போது மறுகதி (மரணம்) அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(31) அந்தப் பூதங்கள் அனைத்துடன் சேரும் ஜீவன் அதன் விளைவாக உடலைப் பெறுகிறான். அந்தப் பூதங்களின் தலைமைத் தேவர்கள், அவனுடைய நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் சாட்சியாகக் காண்கிறார்கள். நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" என்று கேட்டார்.(32)
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, தோல், எலும்பு, மற்றும் இறைச்சியைக் கைவிட்டு அந்தப் பூதங்கள் அனைத்துமற்ற ஜீவன், இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் எதில் வசிக்கிறது?" என்று கேட்டான்.(33)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, தன் செயல்கள் {கர்மங்கள்} அனைத்துடன் கூடிய ஜீவன் விரைவாக உயிர்வித்துக்குள் நுழைந்து, பெண்களின் பருவநீரைப் பெற்றுக் காலத்தில் பிறப்பை அடைகிறான்.(34) பிறந்த பிறகு, ஜீவனானவன் யமனின் தூதுவர்களிடம் இருந்து துன்பத்தையும் மரணத்தையும் பெறுகிறான். உண்மையில், துன்பதுயரம் நிறைந்த மறுபிறவிச் சுழல் அவனுடைய மரபுரிமையாகும்.(35) ஓ! மன்னா, உயிருடன் கூடிய ஜீவன் இவ்வுலகில் தான் பிறந்த கணம் முதல் (முற்பிறவி சார்ந்த) தன் சொந்த செயல்களின் அறம் (மற்றும் அதற்கு முரணானவற்றைச்) சார்ந்து இன்புறவும், துன்புறவும் செய்கிறான்.(36) ஒரு ஜீவன், தான் பிறந்த நாள் முதல் தன் சக்திக்குத் தகுந்தபடி அறத்தையே பின்பற்றினால், அவன் மறுபிறவி எடுக்கும்போது தடங்கலில்லாத மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(37) மறுபுறம், தடங்கலில்லாமல் அறத்தைப் பின்பற்றாமல் அவன் பாவம்நிறைந்து செயல்பட்டால், மறுபிறவியில் அவன் முதலில் தன் அறத்தின் வெகுமதியாக மகிழ்ச்சியை அறுவடை செய்து, அதன் பிறகு துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறான்.(38) மறத்துடன் கூடிய ஜீவன், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குச் சென்று அங்கே பெருந்துன்பத்தை அனுபவித்து, பிறகு இடைநிலை உயிரின வகையில் தன் பிறப்பை எடுக்கிறான்.(39) ஜீவன் மடமையில் மயக்கமடைந்து செய்யும் பல்வேறு செயல்களால் எவ்வாறு பல்வேறு வகை உயிரினங்களாகப் பிறப்பை அடைகின்றனர் என்று வேதங்கள், சாத்திரங்கள் மற்றும் (புனித) வரலாறுகளில் அறிவிக்கப்பட்டுள்ளதைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(40)
மானிடர்கள் பயங்கரமான யமலோகத்தை அடைகின்றனர். ஓ! மன்னா, அவ்வுலகத்தில் அனைத்துத் தகுதிகள் நிறைந்வையும், தேவர்களின் வசிப்பிடமாக இருப்பதற்குத் தகுந்தவையுமான இடங்கள் இருக்கின்றன.(41) மேலும் அவ்வுலகத்தில், விலங்குகள் மற்றும் பறவைகள் வசிக்கும் பகுதிகளைவிட இழிந்த இடங்களும் இருக்கின்றன. உண்மையில், (மகிழ்ச்சியைப் பொறுத்தவரையில்) பிரம்மலோகத்திற்கு இணையான தகுதிகளைக் கொண்ட இடங்களும் யமலோகத்தில் இருக்கின்றன.(42) உயிரினங்கள், தங்கள் செயல்களால் கட்டப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றன. இதன் பிறகு, பெரும் துன்பமும், பயங்கரமும் நிறைந்த கதியை ஒரு மனிதன் எவற்றின் விளைவால் அடைவானோ அந்தச் செயல்களையும், இயல்புகளைம் நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(43,44)
நான்கு வேதங்களையும் கற்ற ஒரு மறுபிறப்பாளன், அறியாமையில் மயக்கமடைந்து, வீழ்ந்துவிட்ட மனிதனிடம் இருந்து கொடையை ஏற்றால் அவன் கழுதையாகப் பிறப்பை அடைகிறான்.(45) அவன் ஒரு கழுதையாகப் பதினைந்து வருடங்கள் வாழ்வான். பிறகு அந்தக் கழுதை வடிவத்தைக் கைவிட்டு, அவன் ஓர் எருதாகப் பிறந்து ஏழு வருடங்கள் வாழ்வான்.(46) பிறகு மாட்டு வடிவத்தையும் கைவிட்டு அவன் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசனாக {பிரம்மராட்சசனாகப்} பிறப்பை எடுக்கிறான். மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசனாக {பிரம்ம ராட்சசனாக} மூன்று மாதங்கள் வாழும் அவன் (தன் அடுத்தப் பிறவியில்) தன் பிராமண நிலையை மீட்கிறான்.(47)
வீழ்ந்துவிட்ட மனிதனின் வேள்வியைச் செய்து கொடுக்கும் ஒரு பிராமணன், இழிந்த புழுவாகப் பிறப்பான். ஓ! பாரதா, அவன் இவ்வடிவில் பதினைந்து வருடங்கள் வாழ்வான்.(48) புழுவின் நிலையில் இருந்து விடுபடும் அவன் அடுத்ததாக ஒரு கழுதையாகப் பிறக்கிறான். கழுதையாகப் பதினைந்து வருடங்கள் வாழும் அவன், அடுத்ததாக அதே அளவு காலம் ஒரு காட்டுப்பன்றியாக வாழ்கிறான்.(49) அதன் பிறகு ஒரு சேவலாகப் பிறந்து, அவ்வடிவிலேயே ஐந்து வருடங்கள் வாழ்ந்த பிறகு அதே அளவு வாழ்நாள் காலம் கொண்ட ஓநாயின் பிறப்பை அடைக்கிறான். அடுத்ததாக ஒரு நாயாகப் பிறந்து, ஒரு வருட காலம் அவ்வாறு வாழ்ந்த பிறகு அவன் மனித நிலையை மீட்டெடுக்கிறான்.(50)
ஆசானுக்குத் தீங்கிழைக்கும் குற்றம்புரிந்த மூடச் சீடன், இவ்வுலகில் மூன்று மாற்றங்களுக்கு நிச்சயம் உட்பட வேண்டும்.(51) ஓ! ஏகாதிபதி, அத்தகையவன் முதலில் ஒரு நாயாகிறான். அதன் பிறகு இரைதேடும் விலங்காகி அதன் பிறகு அவன் ஒரு கழுதையாகிறான். கழுதை வடிவில் வாழும்போது அவன் ஒரு பிசாசைப் போலப் பெருந்துன்பத்துடன் சில காலம் திரிய வேண்டும். அந்தக் காலம் முடிந்ததும் அவன் ஒரு பிராமணனாகப் பிறப்பை அடைவான்.(52)
ஆசானின் மனைவியுடன் கூடா உறவுகொள்ள நினைக்கும் பாவம் நிறைந்த சீடன், அத்தகைய பாவம் நிறைந்த இதயத்தின் விளைவாக இவ்வுலகில் பல கடும் வடிவங்களை எடுக்க வேண்டும்.(53) முதலில் நாயாகப் பிறந்து மூன்று வருடம் வாழ வேண்டும். பிறகு மரணம் வரும்போது நாயின் வடிவத்தைத் கைவிட்டு ஓர் இழிந்த புழுவாகப் பிறக்க வேண்டும்.(54) இவ்வடிவில் ஒருவன் ஒரு வருடம் வாழ வேண்டும். அந்த வடிவத்தை விட்டதும் அவன் மறுபிறப்பாள மனிதனாகத் தன் நிலையை மீட்பதில் வெல்வான்.(55)
ஓர் ஆசான், தன் மகனைக் போன்றவனான சீடனைக் காரணமே இல்லாமல் கொன்றுவிட்டால், தன் பங்குக்கான வேண்டுமென்றே செய்யப்பட்ட அத்தகைய பாவச் செயலால் அவர் இரை தேடும் விலங்காகப் பிறக்க வேண்டும்.(56)
ஓ! மன்னா, தந்தை மற்றும் தாயை அவமதிக்கும் மகன், தன் மனித வடிவை விட்டகலும்போது, கழுதை வகையிலான ஒரு விலங்கின் வடிவில் பிறக்கிறான்.(57) அந்தக் கழுதை வடிவில் அவன் பத்து வருட காலம் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் முதலையாகப் பிறந்து ஒரு வருடம் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் மனித வடிவை அடைவான்.(58)
எந்த மகனிடம் பெற்றோர் கோபமடைவார்களோ, அவன் அவர்களிடம் தான் கொண்டுள்ள தீய எண்ணங்களின் விளைவால் ஒரு கழுதையாகப் பிறப்பான்.(59) அவன் கழுதையாகப் பத்து மாதங்கள் வாழ வேண்டும். அதன் பிறகு அவன் நாயாகப் பிறந்து பதினான்கு மாதங்கள் அவ்வாறு வாழ வேண்டும். அதன் பிறகு ஒரு பூனையாகப் பிறந்த அவ்வடிவில் ஏழுமாதங்கள் வாழ்ந்து அதன் பிறகு தன் மனித நிலையை அவன் மீட்பான்.(60)
பெற்றோரைப் பழித்துப் பேசுபவன் ஒரு சாரிகமாக {ஆமையாகப்} பிறக்க வேண்டும். ஓ! மன்னா அவர்களை அடிக்கும் ஒருவன் ஓர் ஆமையாகப் பிறப்பான்.(61) ஆமையாகப் பத்து வருடம் வாழும் அவன் அதன் பிறகு ஒரு முள்ளம்பன்றியாகப் பிறப்பான். அதன்பிறகு ஒரு பாம்பாகப் பிறந்து அவ்வடிவிலேயே ஆறு மாதங்கள் வாழ்ந்து பிறகு தன் மனித நிலையை அவன் மீட்பான்.(62)
அரசத் தலைவன் தரும் உணவை உண்டு, தன் தலைவனின் விருப்பங்களுக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்யும் மனிதன் இவ்வாறான மடமையில் {அறியாமையில்} மயங்கி தன் மரணத்திற்குப் பிறகு ஒரு குரங்காகப் பிறக்கிறான்.(63) பத்து வருடங்கள் குரங்காக வாழ்ந்து அதன் பிறகு ஐந்து வருடங்கள் எலியாக வாழ்கிறான். அதன் பிறகு ஒரு நாயாகி அவ்வடிவத்தில் ஆறுமாத காலம் வாழ்ந்த பிறகே அவன் தன் மனித நிலையை மீட்பதில் வெல்கிறான்.(64)
தன்னிடம் நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டவற்றைக் கையாடல் செய்யும் மனிதன், நூறு வடிவமாற்றங்களுக்கு {நூறு பிறவிகளுக்கு} உட்பட வேண்டும். இறுதியாக அவன் ஓர் இழிந்த புழுவாகப் பிறப்பான்.(65) ஓ! பாரதா, அவ்வகையில் {புழுவாகவே} அவன் பதினைந்து வருடங்கள் வாழ வேண்டும். இவ்வழியில் தன் பெரும்பாவம் தீர்ந்ததும் அவன் தன் மனித நிலையை மீட்பதில் வெல்வான்.(66)
பிறருக்கு எதிராக வன்மத்துடன் இருக்கும் மனிதன் தன் மரணத்திற்குப் பிறகு சார்ங்ககனாகப் பிறக்கிறான்[1]. நம்பிக்கை துரோகம் செய்த தீய புத்தி கொண்ட மனிதன் ஒரு மீனாகப் பிறக்கிறான்.(67) ஓ! பாரதா, எட்டு வருடங்கள் மீனாக வாழ்ந்த பிறகு மானாகப் பிறவி எடுக்கிறான். மானாக நான்கு மாதங்கள் வாழ்ந்த பிறகு அவன் வெள்ளாடாகப் பிறவி எடுக்கிறான்.(68) ஒரு முழு வருடம் கழிந்ததும் அவன் தன் ஆட்டுடலைக் கைவிட்டு ஒரு புழுவாகப் பிறக்கிறான். அதன் பிறகு அவன் மனித நிலையை அடைவதில் வெல்கிறான்.(69)
[1] கும்பகோணம் பதிப்பில், "அந்தப் புழு ஜன்மத்தில் பதினைந்து வருஷமிருந்து பாவத்தையொழித்துப் பிறகு மானிடனாகப் பிறக்கிறான். அப்போது பொறாமைக்காரனும், இகழத்தக்கவனுமான சண்டாளனாகப் பிறந்து துயரப்படுகிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் சார்ங்ககப் பறவை என்றிருக்கிறது.
நெல், யவம், எள், உழுந்து, கொள்ளு, கடுகு, கடலை, கலாயம், பச்சைப்பயறு, கோதுமை, அதசி (காயா) மற்றும் வேறு வகைத் தானியங்களையும் ஆசையினால் களவாடும் அறிவுகெட்ட, வெட்கங்கெட்ட மனிதன் பெருச்சாளியாகப் பிறக்கிறான்.(70,71) சில காலம் அப்பிறவியில் வாழ்ந்து பிறகு ஒரு காட்டுப் பன்றியாகப் பிறவியடைகிறான். காட்டுப்பன்றியாகப் பிறவியெடுக்கும் அவன் உடனடியாக நோயால் இறக்கிறான்.(72) ஓ! மன்னா, தன் பாவத்தின் விளைவால் அந்த மூட மனிதன் அடுத்ததாக ஒரு நாயாகப் பிறக்கிறான். ஐந்து வருடங்கள் நாயாக வாழும் அவன் மனித நிலையை மீண்டும் அடைகிறான்.(73)
மற்றொரு மனிதனின் மனைவியுடன் கூடாவுறவு கொண்ட ஒருவன் ஓநாயாகப் பிறவிஎடுக்கிறான். அடுத்தடுத்து அவன் நாய், நரி மற்றும் கழுகின் வடிவங்களை ஏற்கிறான். அடுத்ததாகப் பாம்பு, கங்கம் மற்றும் நாரையின் வடிவை ஏற்கிறான்.(74) ஓ! மன்னா, அறியாமையால் மயக்கப்பட்டு, சகோதரனுடைய மனைவியுடன் பாலினக் கலவி புரிந்த பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட மனிதன், ஆண் குயிலாகப் பிறந்து அவ்வடிவத்திலேயே ஓர் ஆண்டு முழுவதும் வாழ வேண்டும்.(75) காமத்தினால் நண்பனின் மனைவி, அல்லது ஆசானின் மனைவி, அல்லது மன்னனின் மனைவியுடன் பாலினக் கலவி புரிபவன், தனது மரணத்திற்குப் பிறகு காட்டுப்பன்றியாகப் பிறக்கிறான்.(76) அதன்பிறகு அவன் ஐந்து வருடங்கள் முள்ளம்பன்றியாகவும், பத்து வருடங்கள் ஓநாயாகவும் வடிவங்களை ஏற்கிறான். அடைத்த ஐந்து வருடங்கள் பூனையாகவும், அடுத்தப் பத்து வருடங்கள் சேவலாகவும் பிறக்கிறான். மூன்று மாதங்கள் எறும்பாகவும், ஒரு மாதம் புழுவாகவும் பிறந்து வாழ்கிறான். இந்த வடிவமாற்றங்களை அடைந்து அடுத்ததாக அவன் பதினான்கு வருடங்கள் இழிந்த புழுவாக வாழ்கிறான்.(78) அத்தகைய தண்டனையின் மூலம் அவனது பாவம் தீர்ந்ததும் மீண்டும் அவன் மனித நிலையை அடைகிறான்.(79)
ஓ! பெரும்பலம் கொண்டவனே, ஒரு திருமணமோ, ஒரு வேள்வியோ, கொடைச்செயல்களோ நடைபெறும்போது அதற்குத் தடையேதும் ஏற்படுத்தும் மனிதன் தன் அடுத்தப் பிறவியில் இழிந்த புழுவாகப் பிறக்கிறான்.(80) ஓ! பாரதா, அவ்வடிவத்திலேயே அவன் பதினைந்து வருடங்கள் வாழ்கிறான். அத்தகைய துன்பத்தின் மூலம் அவனது பாவம் கழிந்ததும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(81)
ஓ! மன்னா, முதலில் ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு, பிறகு இரண்டாம் கணவனுக்கும் கொடுப்பவன் இழிந்த புழுக்களுக்கு மத்தியில் பிறப்பான்.(82) ஓ! யுதிஷ்டிரா, அத்தகைய வடிவத்தை ஏற்று அவன் பதிமூன்று வருட காலம் வாழ்கிறான். அத்தகைய துன்பத்தின் மூலம் தன் பாவம் தீரும் அவன், மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(83)
தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ சடங்குகளைச் செய்யாமல் அல்லது முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் நீர்க்காணிக்கையளிக்காமல் உண்ணும் மனிதன் ஒரு காகமாகப் பிறக்கிறான்.(84) நூறு வருடங்கள் காகமாக வாழும் அவன் அடுத்ததாகச் சேவலின் வடிவை ஏற்கிறான். அதற்குப் பிறகு ஒரு மாதம் அவன் பாம்பாக வடிவ மாற்றம் கொள்கிறான். அதன் பிறகே அவன் மனித நிலையை மீண்டும் அடைகிறான்.(85)
தந்தையைப் போன்றவனான அண்ணனை அவமதிப்பவன், தன் மரணத்திற்குப் பிறகு நாரை வகைகளில் பிறக்கிறான்.(86) அவ்வடிவத்தில் அவன் இரண்டு வருடங்கள் வாழ்கிறான். காலத்தின் முடிவில் அந்த வடிவத்தைக் கைவிடும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(87)
ஒரு பிராமணிப் பெண்ணுடன் பாலினக் கலவி வைத்துக் கொள்ளும் சூத்திரன், தன் மரணத்திற்குப் பிறகு ஒரு காட்டுப் பன்றியாகப் பிறப்பை அடைகிறான்.(88) ஓ! மன்னா, அப்பிறவியை அடைந்தவுடனேயே அவன் நோயால் இறக்கிறான். அந்த இழிந்தவன் அடுத்ததாகத் தன் கொடும்பாவத்தின் விளைவால் ஒரு நாயாகப் பிறக்கிறான்.(89) தன் பாவம் தீர்ந்தமும் நாயின் வடிவைக் கைவிடும் அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான். பிராமணிப் பெண்ணிடம் சந்ததியை உண்டாக்கும் சூத்திரன் தன் மனித வடிவை விட்டதும் பெருச்சாளியாக மறுபிறவியை அடைகிறான்.(90)
ஓ! மன்னா, செய் நன்றி மறந்த குற்றவாளியான மனிதன், யமலோகத்திற்குச் சென்று, இறந்தோரின் கடும் மன்னனின் {யமனின்} சீற்றத்தால் தூண்டப்படும் {யம}தூதுவர்களின் கைகளில் வலிநிறைந்த கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறான்.(91) கனமான சுத்தியல்களுடன் கூடிய தடிகள், உலக்கைகள், கூர்முனை சூலங்கள், கொடிய தீக்குடம், கத்திகளை இலைகளாகக் கொண்ட பயங்கரக் காடு, கொதிக்கும் மணல், இரும்பு முட்கள்(92) ஆகியவையும், ஓ! பாரதா, இன்னும் அதிகமான கருவிகளையும் அத்தகைய மனிதன் யமலோகத்தில் தாங்க வேண்டியிருக்கும்.(93) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இறந்தோரின் கொடும் மன்னனின் உலகத்தில் இத்தகைய பயங்கரத் தண்டனைகளை அடையும் நன்றிகெட்ட மனிதன் இழிந்த ஒட்டுண்ணியாக மீண்டும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஓ! பாரதா, அதன்பிறகு அவன் அருவருக்கத்தக்க ஒட்டுண்ணியாக ஐந்து வருடங்கள் வாழ்கிறான். அதன் பிறகு கருவறைக்குள் நுழைந்து பிறப்பிற்கு முன்பே முன்முதிர்ந்து இறக்கிறான்.(95) அதன் பிறகு அவன் நூறு முறை அடுத்தடுத்து கருவறைக்குள் நுழைகிறான். உண்மையில் நூறு மறுபிறவிகளுக்குப் பிறகு அவன் மனிதனுக்கும், உயிரற்ற இயற்கைக்கும் இடைப்பட்ட இடைநிலை வகை உயிரினமாகப் பிறக்கிறான்.(96) பல வருடங்கள் பெருந்து துன்பத்தை அனுபவிக்கும் அவன் பிறகு முடியற்ற ஆமையாகப் பிறக்கிறான்.(97)
தயிரைத் திருடும் மனிதன் நாரையாகப் பிறக்கிறான். மீனைக் களவு செய்பவன் குரங்காகப் பிறக்கிறான். தேனைக் களவு செய்யும் புத்தியுள்ள மனிதன் ஒரு பூச்சியாகப் பிறக்கிறான்.(98) கனிகள், கிழங்குகள் மற்றும் பண்டங்களைக் களவு செய்பவன் எறும்பாகிறான். மொச்சைக் கொட்டையைக் களவு செய்பவன் ஹலகோலகமாக {நீண்ட வாலுள்ள புழுவாக} மாறுகிறான்.(99) பாயஸம் களவும் செய்தவன் அடுத்தப் பிறவியில் தித்திரி பறவையாக {ஊர்க்குருவியாகப்} பிறக்கிறான். மாவுப் பண்டத்தைக் களவு செய்பவன் {கும்போலூகம் என்றழைக்கப்படும்} மலைக்கோட்டானாகப் பிறக்கிறான்.(100) இரும்பைக் களவு செய்யும் சிறுமதி கொண்ட மனிதன் ஒரு பசுவாகப் பிறக்கிறான். வெண்கலத்தைக் களவு செய்யும் சிறு மதிகொண்ட மனிதன் ஹாரீத இனப் பறவையாக {பச்சைக் குருவியாகப்} பிறக்கிறான்.(101) வெள்ளிப்பாத்திரம் களவு செய்தவன் புறாவாகப் பிறக்கிறான். பொற்பாத்திரம் களவு செய்வதன் மூலம் அவன் இழிந்த புழுவாகப் பிறக்கிறான்.(102) பட்டுத்துணியைக் களவு செய்தவன் கிருகரமாக {கிருகலமெனும் உயிரினமாகப்} பிறக்கிறான். சிவப்புப்பட்டாலான துணியைக் களவு செய்தவன் வர்த்தகையாக {வர்த்திகை எனும் பறவையாக} மாறுகிறான்.(103)
நூலாடைகளைக் களவு செய்பவன் கிளியாகப் பிறக்கிறான். நுண்ணிழைத்துணியைக் களவு செய்பவன் தன் உடலைக் கைவிட்டதும் ஒரு வாத்தாகப் பிறக்கிறான்.(104) பஞ்சுத் துணியைக் களவு செய்பவன் நாரையாகப் பிறக்கிறான். சணலாலான ஆடைகளைக் களவு செய்பவன் தன் அடுத்தப் பிறவியில் செம்மறியாடாகப் பிறக்கிறான்.(105) நார்மடித்துணியைக் களவு செய்பவன் முயலாகப் பிறக்கிறான். பல்வேறு வகை வண்ணப் பொருட்களைக் களவு செய்பவன் மயிலாகப் பிறக்கிறான்.(106) சிவப்பு ஆடைகளைக் களவு செய்பவன் ஜீவஜிவக {சகோரப்} பறவையாகப் பிறக்கிறான். இவ்வுலகில் உள்ள (சந்தனம் முதலிய) களிம்புகளையும், நறுமணப் பொருட்களையும் பேராசையால் களவு செய்யும் மனிதன் மூஞ்சூறாகப் பிறக்கிறான். மூஞ்சூறின் வடிவை ஏற்றுப் பதினைந்து வருடங்கள் வாழ்கிறான்.(107,108) அதன் பிறகு தன் பாவத்தைக் கழித்த பிறகு அவன் மனிதனாகப் பிறக்கிறான். பாலைக் களவு செய்பவன் நாரையாகப் பிறக்கிறான்.(109) ஓ! மன்னா, மதிகெட்டுப்போய் எண்ணெயைக் களவும் செய்யும் மனிதன் எண்ணெயை உண்டு வாழும் விலங்கின் வடிவில் {தைலபாயி எனும் உயிரினமாக [வௌவாலாக / கறப்பான்பூச்சியாகப்]} பிறக்கிறான்.(110)
தான் நன்கு ஆயுதம் தரித்தவனாக, ஆயுதந்தரிக்காதவனான மற்றொருவனை, அவனுடைய செல்வத்தை அடைவதற்காகவோ, அவனிடம் கொண்ட பகையுணர்ச்சியாலோ கொல்லும் இழிந்தவன், தன் மனித உடலைக் கைவிட்ட பிறகு ஒரு கழுதையாகப் பிறக்கிறான்.(111) கழுதை வடிவை ஏற்று இரண்டு வருட காலம் வாழ்ந்து ஆயுத முனையால் அவன் இறப்பைச் சந்திக்கிறான். இவ்வழியில் தன் கழுதை உடலைக் கைவிடும் அவன் அடுத்தப் பிறவியில் (பகைவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்ட) கவலை நிறைந்த மானாகப் பிறக்கிறான்.(112) மானாகப் பிறந்து ஒரு வருடம் கழிந்ததும் அவன் ஆயுத முனையில் தன் உயிரை விடுவான். இவ்வாறு மானின் வடிவைக் கைவிடும் அவன் அடுத்ததாக மீனாகப் பிறந்து, நான்கு மாதம் கழிந்ததும் வலையால் இழுக்கப்படுவதன் விளைவால் இறப்பான். அடுத்தப் பிறவியில் இரைதேடும் விலங்காக அவன் பிறப்பான். பத்து வருடங்கள் அவ்வடிவில் வாழும் அவன், பிறகு சிறுத்தையாகப் பிறந்து ஐந்து வருடகாலம் வாழ்கிறான்.(114) காலம் கொண்டுவரும் மாற்றத்தால் தூண்டப்படும் அவன் அந்த வடிவத்தையும் கைவிட்டு, பாவம் தீர்ந்ததும், மீண்டும் மனித வடிவைப் பெறுகிறான்.(115)
பெண்ணைக் கொல்லும் சிறுமதி கொண்ட மனிதன் யமலோகத்திற்குச் சென்று பல்வேறு வகைத் துன்ப துயரங்களை அனுபவிப்பான். பிறகு முழுமையாக அவன் இருபத்தோரு வடிவ மாற்றங்களைப் பெறுவான்.(116) ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அவன் அருவருக்கத்தக்க ஓர் ஓட்டுண்ணியாகப் பிறப்பான். ஒட்டுண்ணியாக இருபது வருடங்கள் வாழ்ந்த பிறகு அவன் மீண்டும் மனித நிலையை அடைகிறான்.(117)
உணவைக் களவு செய்வதன் மூலம் ஒருவன் வண்டாகப் பிறப்படைகிறான். வேறு வண்டுகளின் துணையுடன் பல மாதங்கள் வாழும் அவன் தன் பாவம் தீர்ந்ததும் மீண்டும் மனித நிலையை அடைகிறான். நெல்லைத் திருடுவதன் மூலம் ஒருவன் பூனையாகிறான்.(118,119) எள் கலந்த உணவைத் திருடும் மனிதன் தான் திருடிய உணவின் அளவுக்குத் தகுந்தபடி பெரிய அல்லது சிறிய எலியாகிறான்.(120) அவன் தினமும் மனிதர்களைக் கடிக்கிறான், அதன் விளைவாக அவன் பாவம் நிறைந்தவனாகப் பல்வேறு மறுபிறவிகளின் சுழலில் பயணிக்கிறான். நெய்யைத் திருடும் மதிகெட்ட மூடன் ஈயாகப் பிறக்கிறான்.(121) மீனைக் களவு செய்யும் இழிந்தவன், காக்கையாகப் பிறக்கிறான். உப்பைக் களவு செய்யும் ஒருவன், பேசும் கிளியாகப் பிறக்கிறான்.(122) நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்டவற்றை அபகரிக்கும் மினதன், வாழ்வுக்காலம் குறைந்தவனாக இறந்து மீன்களுக்கு மத்தியில் பிறக்கிறான்.(123) சில காலம் மீனாக வாழும் அவன் இறந்ததும் மீண்டும் மனித வடிவை அடைகிறான். மனித நிலையை அடைந்தாலும் அவன் குறுகிய வாழ்நாளையே பெறுகிறான்.(124) ஓ! பாரதா, உண்மையில் பாவங்களை இழைக்கும் ஒருவன், மனிதர்களுக்கும், காய்கறிகளுக்கும் இடைப்பட்ட நிலையான இடைநிலை வகையில் தன் பிறப்பை அடைகிறான். தங்கள் இதயத்தையே அதிகாரமாகக் கொண்ட மக்கள் முற்றாக அறமறியாதவர்களாக இருக்கிறார்கள்(125)
பல்வேறு பாவச்செயல்களைச் செய்து தொடர்ந்த நோன்புகள் மற்றும் பக்திச் செயல்பாடுகள் மூலம் அவற்றைத் தணிக்க முயலும் மனிதர்கள், இன்பதுன்பங்களை அடைந்து இதயத்தில் பெரும் கவலையுடன் வாழ்கிறார்கள்.(126) பாவம் நிறைந்த ஒழுக்கம் கொண்டவர்களும், பேராசை மற்றும் அறியாமைக்கு வசப்படுகிறவர்களும், தொடர்பு கொள்ளத்தகாத மிலேச்சர்களாகப் பிறக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(127) மறுபுறம், தங்கள் பிறவிகள் தோறும் பாவங்களைத் தவிர்க்கும் மனிதர்கள், அனைத்து வகைப் பிணியில் இருந்து விடுபட்டு, வடிவ அழகுடன் கூடியவர்களாகச் செல்வத்தை அடைகிறார்கள்.(128)
மேற்குறிப்பிட்ட வழியில் செயல்படும் பெண்களும் அதே வகையிலேயே பிறப்பை அடைவார்கள். உண்மையில் அவர்கள் நான் குறிப்பிட்ட விலங்குகளின் துணைகளாகப் பிறப்பை அடைகின்றனர்.(129)
ஓ! பாவமற்றவனே, பிறரின உடைமைகளை அபகரிப்பதில் தொடர்புடைய குற்றங்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இக்காரியம் குறித்து நான் உனக்கு மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.(130) ஓ! பாரதா, வேறு காரியம் குறித்த குற்றங்களைக் குறித்து மற்றொருமுறை கேட்பாயாக. ஓ! மன்னா, நான் இவற்றைப் பிரம்மனிடம் இருந்து கேட்டிருக்கிறேன்.(131) அவர் தேவர்களுக்கு மத்தியில் இது குறித்து உரையாடியபோது இவையனைத்தையும் மகிழ்வூட்டும் வகையில் கேட்டேன். உண்மையில் நீ கேட்டது அனைத்தையும் விரிவாகச் சொல்லிவிட்டேன்.(132) ஓ! ஏகாதிபதி, இவை யாவற்றையும் கேட்டு நீ உன் இதயத்தை எப்போதும் அறத்தில் நிலைநிறுத்துவாயாக" என்றார் {பிருஹஸ்பதி}.(133)
அநுசாஸனபர்வம் பகுதி – 111ல் உள்ள சுலோகங்கள் : 133
ஆங்கிலத்தில் | In English |