Gift of food! | Anusasana-Parva-Section-112 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 112)
பதிவின் சுருக்கம் : பாவத்தைப் போக்கும் வழிமுறைகள்; அறத்தின் துணையுடன் அடையப்படும் கதிகள்; அன்னதானத்தின் சிறப்பு; அறத்தின் ஆறு வாயில்கள் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, மறம் அல்லது பாவத்தின் கதியென்ன? என எனக்குச் சொன்னீர். ஓ! பேசுபவர்களின் முதன்மையானவரே, அறத்தின் கதியென்ன? என இப்போது கேட்க விரும்புகிறேன்.(1) பல்வேறு பாவச் செயல்களைச் செய்தபின் எந்தச் செயல்களின் மூலம் மக்கள் இவ்வுலகில் {இம்மையில்} மங்கல கதியை அடைகிறார்கள்? எந்தச் செயல்களின் மூலம் மக்கள் சொர்க்கத்திலும் {மறுமையிலும்} மங்கல கதியை அடைகிறார்கள்?" என்று கேட்டான்.(2)
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, "பிறழ்மனத்துடன் பாவம்நிறைந்த செயல்களைச் செய்த ஒருவன் மறத்தின் ஆளுகைக்கு வசப்பட்டு அதன் விளைவாக நரகத்திற்குச் செல்கிறான்.(3) மனத்தின் அறியாமையால் பாவச்செயல்களைச் செய்த மனிதன், மனந்திருந்தி வேதனையடைந்து தன் இதயத்தை (தேவர்களை) தியானிப்பதில் நிறுவினால், அவன் தன் பாவங்களின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதில்லை.(4) ஒருவன் எந்த அளவுக்கு {தான் செய்த பாவத்தைக் குறித்து நினைத்து} வருந்துகிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(5) ஓ! மன்னா, பாவத்தை இழைத்த மனிதன், கடமைகளை அறிந்த பிராமணர்களின் முன்னால் அவற்றை அறிவித்தால் அந்தப் பாவங்களில் இருந்து எழும் அவதூறுகளிலிருந்து உடனே அவன் தூய்மையடைகிறான்.(6) இதன்படி ஒருவன் முழுமையாகவோ, வேறு வகையிலோ தன் பாவங்களைக் குவிந்த மனத்துடன் அறிக்கையிட்டால் அவன் பழைய சட்டையில் இருந்து விடுபெறும் பாம்பைப் போல அந்தப் பாவத்தில் இருந்து முழுமையாகவோ, வேறுவகையிலோ விடுபடுகிறான்.(7) குவிந்த மனத்துடன் ஒரு பிராமணனுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை அளித்து, (தேவனிடம்) மனதைக் குவிப்பதன் மூலம் ஒருவன் மங்கல கதியை அடைகிறான்.(8)
ஓ! யுதிஷ்டிரா, பாவச்செயல்களை இழைத்த குற்றவாளியாகவே இருந்தாலும் எக்கொடைகளை அளித்தால் அவன் பலன் கொண்டவனாகிறான் என்பதைச் சொல்லப் போகிறேன்.(9) கொடைகள் அனைத்திலும் உணவுக்கொடையே {அன்னதானமே} சிறந்ததெனக் கருதப்படுகிறது. பலனை அடைய விரும்பும் ஒருவன் நேர்மையான இதயத்துடன் உணவுக்கொடையளிக்க வேண்டும்.(10) உணவே மனிதர்களுக்கு உயிர் மூச்சுகளை அளிக்கிறது. அதிலிருந்துதான் உயிரினங்கள் பிறக்கின்றன. உயிரினங்களைக் கொண்ட உலகங்கள் அனைத்தும் உணவிலேயே நிறுவப்பட்டுள்ளன. எனவே உணவு மெச்சப்படுகிறது.(11) தேவர்கள், முனிவர்கள், பித்ருகள் மற்றும் மனிதர்கள் அனைவரும் உணவைப் புகழ்கின்றனர். பழங்காலத்தில் மன்னன் ரந்திதேவன் உணவுக்கொடை அளித்ததற்காகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(12)
நியாயமாக அடையப்பட்ட நல்ல உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கொடுக்க வேண்டும்.(13) ஓராயிரம் பிராமணர்களுக்கு உற்சாகம் நிறைந்த இதயத்துடன் உணவைக் கொடையளித்த மனிதன் இடைநிலை வகையில் {விலங்கு, பறவை, பூச்சிகளாக} ஒருபோதும் பிறக்க மாட்டான்.(14) ஓ! மனிதர்களின் தலைவா, பத்தாயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டிய ஒருவன், மறத்தில் {அதர்மத்தில்} இருந்து தூய்மையடைந்து யோக நடைமுறைகளில் அர்ப்பணிப்புள்ளவன் ஆகிறான்.(15)
வேதங்களை அறிந்த ஒரு பிராமணன், பிச்சையில் தனக்குக் கிடைத்த உணவை வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒரு பிராமணனுக்குக் கொடையளித்தால் இம்மையில் {இவ்வுலகில்} மகிழ்ச்சியடைவதில் வெல்கிறான்.(16)
ஒரு க்ஷத்திரியன், எந்தப் பிராமணனின் உடைமைகளையும் அபகரிக்காமல், தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பலத்தைப் பயன்படுத்தி அடைந்த உணவை வேத அறிவு கொண்ட முதன்மையான பிராமணர்களுக்குக் கொடையளித்தால், ஓ! பாண்டுவின் மகனே, ஓ! அற ஆன்மாவே, அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் அவன் தான் செய்த பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17,18)
ஒரு வைசியன், தன் களத்தின் {வயலின்} விளைச்சலை ஆறு சமமான பங்குகளாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை பிராமணர்களுக்குக் கொடுத்தால், அவன் அத்தகைய ஒழுக்கத்தின் மூலம் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(19)
ஒரு சூத்திரன், கடும் உழைப்பாலும், உயிரைப் பணயம் வைத்தும் ஈட்டப்பட்ட உணவைப் பிராமணர்களுக்குக் கொடையளித்தால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(20)
உடல் பலத்தைப் பயன்படுத்தி, எந்த உயிரினத்திற்கும் எத்தீங்கையும் செய்யாமல் ஈட்டிய உணவை பிராமணர்களுக்குக் கொடையளிக்கும் மனிதன் தனக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பதில் வெல்கிறான்.(21) நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட உணவை வேத ஞானம் கொண்ட பிராமணர்களுக்கு உற்சாகமாகக் கொடையளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) அறத்தின் பாதையில் நடப்பதன் மூலம் ஒருவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். பெருஞ்சக்தியைக் கொடுக்க வல்ல உணவைக் கொடையளிப்பவன் பெருஞ்சக்தி கொண்டவனாகிறான்.(23) ஈகையாளர்களால் அமைக்கப்பட்ட பாதையிலேயே ஞானம் கொண்டவர்கள் எப்போதும் நடக்கிறார்கள். உணவு கொடையளிப்பவர்கள் உயிரைக் கொடையளிப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அத்தகைய கொடையின் மூலம் அவர்கள் அடையும் பலன் நித்தியமானதாகும்.(24) எனவே ஒருவன் அனைத்துச் சூழ்நிலைகளிலும், நியாயமான முறைகளில் உணவை ஈட்ட முனைந்து, அவ்வாறு ஈட்டப்பட்டவற்றைத் தகுந்த மனிதர்களுக்கு எப்போதும் கொடையளிக்க வேண்டும். உயிரினங்களின் உலகிற்கு உணவே பெரும்புகலிடமாகும்.(25)
உணவுக் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் ஒருபோதும் நரகத்திற்குப் போக மாட்டான். எனவே, ஒருவன் நியாயமான வழிமுறைகளில் ஈட்டப்பட்ட உணவை எப்போதும் கொடையளிக்க வேண்டும்.(26) ஓர் இல்லறத்தான் ஒரு பிராமணனுக்கு உணவுக் கொடையளித்தபிறகே எப்போதும் உண்ண வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உணவுக் கொடையளிப்பதன் மூலம் அந்த நாளை கனிநிறைந்ததாக்க வேண்டும்.(27) ஓ! மன்னா, கடமைகள் {தர்மங்கள்}, சாத்திரங்கள் மற்றும் புனித வரலாறுகளை அறிந்தவர்களான ஆயிரம் பிராமணர்களுக்கு உணவூட்டும் மனிதன்,(28) நரகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை, இவ்வுலகில் மீண்டும் திரும்பும் வகையில் மறுபிறவியை அடைவதுமில்லை. அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அடையும் அவன் மறுமையில் பேரின்பத்தை அனுபவிக்கிறான்.(29) அக்கதைய பலனை அடையும் அவன், கவலையில் இருந்து விடுபட்டு, வடிவ அழகு, பெரும்புகழ் மற்றும் செல்வத்தை அடைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(30) இவ்வாறு உணவுக் கொடையின் உயர்ந்த பலன்கள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். {வேற எந்த} அறம், பலன்கள் மற்றும் கொடைகள் அனைத்தின் வேராகவும் இதுவே இருக்கிறது" என்றார் {பிருஹஸ்பதி}.(31)
அநுசாஸனபர்வம் பகுதி – 112ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |