Abstention from injury! | Anusasana-Parva-Section-113 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 113)
பதிவின் சுருக்கம் : அறத்தின் ஆறு வாயில்கள் மற்றும் அஹிம்ஸை குறித்து பிருஹஸ்பதிக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பிருஹஸ்பதியிடம்}, "தீங்கிழையாமை {கொல்லாமை}, வேத சடங்குகளைச் செய்தல், தியானம், புலனடக்கம், தவங்கள், ஆசான்களுக்குக் கீழ்ப்படிந்து தொண்டாற்றல் ஆகியவற்றில் ஒருவனுக்குப் பெரும் பலனைத் தரக்கூடியது எது?" எனக் கேட்டான்.
பிருஹஸ்பதி {யுதிஷ்டிரனிடம்}, "இந்த ஆறும் பலன்நிறைந்தவையே ஆகும். இவை அறத்தின் வெவ்வேறு வாயில்களாகும். நான் அது குறித்து இப்போது சொல்லப் போகிறேன். ஓ! பாரதர்களின் தலைவா, அவற்றைக் கேட்பாயாக.(2) மனிதர்களுக்கான உயர்ந்த நன்மை எது என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன். அண்டம் சார்ந்த கருணை அறத்தை {கொல்லாமையைப்} பயிலும் மனிதன் உயர்ந்த நன்மையை அடைகிறான்.(3) காமம், கோபம், பேராசை ஆகிய மூன்று குற்றங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் மனிதன் (கருணை அறத்தைப் பயின்று) வெற்றியை அடைகிறான்[1].(4)
[1] "காமம், குரோதம் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் ச என்ற எழுத்தைப் பயன்படுத்தியிருப்பது. பேராசை என்ற உட்குறிப்பைத் தருகிறது. பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள் இதில் பிழை செய்திருக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மனிதன் எல்லாப்பிராணிகள் விஷயத்திலும் த்ரிதண்டத்தை வைத்துக் கொண்டு காமக்குரோதங்களையடக்கிப் பரிசுத்தனாக இருப்பதனால் நன்மையை அடைவான்" என்றிருக்கிறது.
தன் மகிழ்ச்சிக்கான நோக்கில் தீங்கற்ற பிற உயிரினங்களைத் தண்டக் கோல் கொண்டு கொல்பவன், ஒருபோதும் மறுமையில் மகிழ்ச்சியை அடைய மாட்டான்.(5) அனைத்து உயிரினங்களையும் தானாகவே கருதி, தன்னைப் போலவே அவற்றிடம் நடந்து கொள்ளும் மனிதன், தண்டக்கோலை வைத்து, முற்றிலும் தன் கோபத்தை அடக்கி மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொண்டு, அவை அனைத்தையும் தானாகவே பார்ப்பவன், தன் பின்னே சுவடுகளை விடாததால் நிலையான வசிப்பிடத்தை விரும்பும் தேவர்களும் அவனது பாதையை உறுதி செய்வதில் மயக்கமடைகிறார்கள்[2].(7) ஒருவன் தனக்குத் தீங்கு எனக் கருதுவதை மற்றவனுக்கு ஒருபோதும் செய்யக்கூடாது. இதுவே அறத்தின் சுருக்கமான விதியாகும். வேறு வழியில் செயல்படும் ஒருவன் ஆசைக்கு வசப்படுவதன் மூலம் அறமற்ற {அதர்மம் செய்யும்} குற்றவாளியாகிறான்.(8)
[2] கும்பகோணம் பதிப்பில், "எல்லாப்பிராணிகளையும் தானாகப் பார்ப்பவன் போகும் வழியில் கால்வைக்க இடமில்லாமல் இடத்தை வேண்டும்போது தேவர்களும் வழியில் நிற்கத் துணியார்" என்றிருக்கிறது.
கொடை மறுத்தல் மற்றும் பெறல், இன்பம் மற்றும் துன்பம், ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை ஆகியவற்றில் ஒருவன் தன்னையே உவமையாகக் கொண்டு அவற்றின் விளைவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.(9) ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைக்கும்போது, தீங்குக்குள்ளானவன் திரும்பி தீங்கிழைத்துவனுக்குத் தீங்கிழைக்கிறான். அதே போலவே, ஒருவன் மற்றொருவனைப் பேணி வளர்க்கும்போது, அவ்வாறு வளர்ப்பவனைப் பிறர் பேணி வளர்ப்பார்கள். ஒருவன் தனக்கான ஒழுக்க விதியை இதன்படியே கட்டமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நுட்பமான வழியில் நான் அறம் என்றால் என்ன என்பதை உனக்குச் சொல்லியிருக்கிறேன்" என்றார் {பிருஹஸ்பதி}".(10)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அந்தத் தேவர்களின் ஆசான் {பிருஹஸ்பதி}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இதைச் சொல்லிவிட்டு, எங்கள் கண் முன்பே சொர்க்கத்திற்குச் செல்ல மேல்நோக்கி உயர்ந்தார்".(11)
அநுசாஸனபர்வம் பகுதி – 113ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |