Denial of meat! | Anusasana-Parva-Section-114 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 114)
பதிவின் சுருக்கம் : நான்கு வகை அஹிம்ஸை; புலால் மறுத்தல் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதன்பிறகு, பெரும் சக்தி கொண்டவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், கணைப்படுக்கையில் கிடக்கும் பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, வேதங்களின் அதிகாரத்தினால் வழிநடத்தப்படும் முனிவர்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் அனைவரும் கருணையையே தன் குறியீடாகக் கொண்ட அறத்தை மெச்சுகிறார்கள்.(2) ஆனால், ஓ! மன்னா, நாம் உம்மிடம் கேட்பது என்னவென்றால்: சொல், எண்ணம், செயல் ஆகியவற்றில் பிறருக்குத் தீங்கிழைத்த மனிதன், துன்பத்தில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் எவ்வாறு வெல்கிறான்?" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிரம்மத்தை ஓதுபவர்கள், கருணை, அல்லது தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை} நான்கு வகையானது என்று சொல்லியிருக்கின்றனர். இந்த நான்கு வகைகளில் ஒன்று நோற்கப்படாவிட்டாலும் கருணையறம் {அஹிம்ஸை} நோற்கப்பட்டதாகாது என்று சொல்லப்படுகிறது.(4) நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் யாவும் மூன்று கால்களில் நிற்க இயலாததைப் போலவே கருணையறத்தாலும் நான்கு வகைகளில் ஒன்றில்லாவிட்டாலும் நிற்க இயலாது.(5) பிற உயிரினங்களின் காலடித்தடங்கள் அனைத்தையும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதைப் போலவே வேறு அறங்கள் அனைத்தும் கருணையறத்தில் {அஹிம்ஸையில்} உள்ளடங்கிவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. செயல்கள், சொற்கள் மற்றும் எண்ணங்களின் மூலமாக ஒருவன் தீங்கிழைக்கும் குற்றவாளியாகிறான்[1].(6,7)
[1] "ஒரு கொலையைச் செய்வதன் மூலம் ஒருவன் குற்றவாளியாகிறான். பிறரை கொலை செய்யச் செய்வதன் மூலமும் ஒருவன் குற்றவாளியாகிறான். மனத்தால் ஒரு கொலைச் செயலைச் செய்தவனும் குற்றவாளியே ஆகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தொடக்கத்திலேயே அதை மனத்தில் இருந்து அகற்றும் ஒருவன் அடுத்ததாக அதைச் சொல் மற்றும் எண்ணத்தில் இருந்தும் விலக்க வேண்டும். இவ்விதியின்படி இறைச்சியுண்பதைத் தவிர்க்கும் ஒருவன் மூன்று வழிகளில் {எண்ணம், சொல் மற்றும் செயல் வழிகளில்} தூய்மையடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(8) பிரம்மம் ஓதுபவர்கள் (இறைச்சியுண்ணும் பாவத்திற்கான) மூன்று காரணங்களைக் குறிப்பிடுவதாகக் கேள்விப்படுகிறோம். அந்தப் பாவம் மனம், சொற்கள் மற்றும் செயல்களில் பற்றியிருக்கலாம்.(9) இந்தக் காரணத்தினாலேயே தவங்களுடன் கூடிய ஞானம் கொண்ட மனிதர்கள் இறைச்சி உண்பதைத் தவிர்க்கிறார்கள். ஓ! மன்னா, இறைச்சியுண்பதால் ஏற்படும் குற்றங்களை {தோஷங்களை} உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(10)
பிற விலங்குகளின் இறைச்சியானது ஒருவனுடைய மகனின் சதையைப் போன்றதாகும். அறியாமையில் மயங்கி இறைச்சியுண்ணும் மூடன், மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான்.(11) தந்தையும், தாயும் இணைவதால் சந்ததி உண்டாகிறது. அதே வகையிலேயே ஓர் ஆதரவற்ற, பாவம் நிறைந்த இழிந்தவன் இழைக்கும் கொடுமையே, பெரும் துன்பம் நிறைந்த மறுபிறவிகளைக் கொண்ட சந்ததியை மீண்டும் மீண்டும் உண்டாக்குகிறது.(12) சுவையுணர்வு அல்லது சுவையின் அறிவுக்குக் காரணமாக நாக்கு இருப்பதைப் போலவே, பற்றானது சுவையிலிருந்தே உண்டாகிறது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன[2].(13) நன்கு தோல்நீக்கப்பட்டு, உப்புடனோ, உப்பில்லாமலோ சமைக்கப்படும் இறைச்சியை ஒருவன் எவ்வடிவில் உண்டாலும், அது படிப்படியாக மனத்தை ஈர்த்து, அதற்கு அவனை அடிமையாக்குகிறது.(14)
[2] "இறைச்சி உண்பதன் மூலம் ஒருவனுடைய இறைச்சியுண்ணும் ஆசை அதிகரிக்கிறது. இவ்வாறே இறைச்சியில் சுவை அல்லது விருப்பம் உண்டாகிறது. எனவே சிறந்த நடைமுறை முற்றிலும் தவிர்ப்பதே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இறைச்சியுண்டு வாழும் மூட மனிதர்களால் (தெய்வீகப்) பேரிகைகள், மிருதங்கங்கள், யாழ் மற்றும் தந்திக்கருவிகளின் இனிய இசையைக் கேட்பதில் எவ்வாறு வெல்ல முடியும்?(15) உணரப்பட முடியாதது, விவரிக்க முடியாதது, கற்பனை செய்ய முடியாதது என இறைச்சி குறித்து {இல்லாததைச்} சொல்லும் ஊனுண்பவர்கள் அதன் சுவையில் மயக்கமடைந்து அதை உயர்வாக மெச்சுகிறார்கள்.(16) இவ்வாறு இறைச்சியைப் புகழ்வதும் பாவம் நிறைந்ததாகும். பழங்காலத்தில், அறவோர் பலர், தங்கள் உடலின் சதையைக் கொடுத்து, பிற உயிரினங்களின் சதையைக் காத்தார்கள். பலன்தரும் அத்தகைய செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்கள்.(17) ஓ! ஏகாதிபதி, இவ்வழியில் கருணையறமானது, நான்கு கருத்துகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்ட கருணையறத்தைச் சொன்னேன்" என்றார் {பீஷ்மர்}[3].(18)
[3] தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். (திருக்குறள் 251)
அநுசாஸனபர்வம் பகுதி – 114ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |