Abstain from eating meat! | Anusasana-Parva-Section-115 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 106)
பதிவின் சுருக்கம் : இறைச்சி உண்பதால் உண்டாகும் கெடுதிகளையும், அதைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்களையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தீங்கிழையாமையே உயர்ந்த அறம் என நீர் பலமுறை சொல்லிவிட்டீர். எனினும், பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் நடைபெறும் சிராத்தங்களில், மனிதர்கள் தங்கள் நன்மைக்காகப் பல்வேறு வகை இறைச்சிகளைக் காணிக்கையளிக்கின்றனர்.(1) சிராத்த விதிகளைக் குறித்து நீர் முன்னர் பேசிக் கொண்டிருந்தபோது அதைச் சொன்னீர். எனினும், ஓர் உயிரினத்தைக் கொல்லாமல் எவ்வாறு இறைச்சியை எடுக்க முடியும்? எனவே உமது அறிவிப்புகள் முரணுள்ளவையாகத் தெரிகின்றன.(2) இறைச்சி தவிர்க்கும் கடமை குறித்து என் மனத்தில் ஓர் ஐயம் எழுந்துள்ளது. இறைச்சி உண்பதன் மூலம் ஒருவன் இழைக்கும் குற்றங்கள் என்ன அவன் வெல்லும் பலன்கள் என்ன?(3) ஓர் உயிரினத்தைத் தானே கொன்று உண்பவன் செய்யும் குற்றங்கள் என்ன? பிறரால் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியை உண்பவன் அடையும் பலன்கள் என்ன? வேறொருவனுக்காக ஓர் உயிரினத்தைக் கொல்பவன் அடையும் பலன் அல்லது செய்யும் குற்றம் என்னென்ன?(4) ஓ! பாவமற்றவனே, நீர் இது குறித்து விரிவாக உரையாட வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த நித்திய அறத்தை நிச்சயத்தன்மையுடன் நான் உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன்?(5) ஒருவன் நீடித்த வாழ்வை எவ்வாறு அடைகிறான்? ஒருவன் எவ்வாறு பலத்தை அடைகிறான்? ஒருவன் அங்கங்களில் குறையின்மையை எவ்வாறு அடைகிறான்? உண்மையில், ஒருவன் சிறந்த குறியீடுகளுடன் கூடியவனாக எவ்வாறு ஆகிறான்?" என்று கேட்டான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குருகுலக் கொழுந்தே, இறைச்சி தவிர்ப்பதால் உண்டாகும் பலன் என்ன என்பது குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக. இந்தத் தலைப்பில் உண்மையில் உள்ள சிறந்த விதிகளை அறிவிக்கப் போகிறேன் கேட்பாயாக.(7) அழகு, பழுதற்ற அங்கங்கள், நீடித்த வாழ்நாள், புத்தி, மனோபலம், உடல்பலம், நினைவுசக்தி ஆகியவற்றை விரும்பும் உயர் ஆன்ம மனிதர்கள் தீங்கிழைக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.(8) ஓ! குரு குலத்தின் கொழுந்தே, இத்தலைப்பில் முனிவர்களுக்கிடையில் எண்ணற்ற உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, அவர்களது கருத்தென்ன என்பதைக் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, நோன்பில் நிலைத்திருந்து ஒவ்வொரு மாதமும் குதிரை வேள்விகளில் தேவர்களைத் துதிப்பவன் அடையும் பலனானது, தேன் மற்றும் இறைச்சியைக் கைவிடுபவன் அடையும் பலனுக்கு இணையானதாகும்.(10)
தெய்வீக முனிவர்கள் எழுவர், வாலகில்யர்கள், சூரியக்கதிர்களைப் பருகும் முனிவர்கள் {மரீசிபர்கள்} மற்றும் பெரும் ஞானம் கொண்டவர்கள் அனைவரும் இறைச்சி தவிர்ப்பதை மெச்சுகின்றனர்.(11) இறைச்சி உண்ணாத மனிதன், அல்லது உயிரினங்களைக் கொல்பவன், அல்லது அவற்றைக் கொல்லச் செய்பவன் அனைத்து உயிரினங்களின் நண்பனாவன் எனச் சுயம்புவான மனு சொல்லியிருக்கிறார்.(12) அத்தகைய மனிதன் எந்த உயிரினத்தினாலும் ஒடுக்கப்பட முடியாதவனாகிறான். அவன் அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் அனுபவிக்கிறான். அதையும் தவிர, அவன் அறவோரின் ஏற்பையும், புகழ்ச்சியையும் அனுபவிக்கிறான்.(13) அற ஆன்மா கொண்ட நாரதர், பிற உயிரினங்களின் சதையை உண்டு தன் சதையை அதிகரிக்க விரும்பும் மனிதன் துன்பத்தைச் சந்திக்கிறான் என்று சொல்லியிருக்கிறார்.(14) தேனையும், இறைச்சியையும் தவிர்க்கும் மனிதன், கொடைகள், வேள்விகள் மற்றும் தவங்களுக்குக் கிடைக்கும் பலனை அடைகிறான் என்று பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார்.(15)
என் கணிப்பின்படி, நூறு வருட காலம் ஒவ்வொரு மாதமும் குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிப்பவன், தேன் மற்றும் இறைச்சியைத் தவிர்ப்பவன் ஆகிய இருவரும் இணையானவர்களே.(16) இறைச்சியைத் தவிர்ப்பதன் விளைவால் ஒருவன் எப்போதும் தேவர்களைத் துதிப்பவனாகவோ, எப்போதும் பிறருக்குக் கொடையளிப்பவனாகவோ, எப்போதும் கடுந்தவங்களைச் செய்பவனாகவோ கருதப்படுகிறான்.(17) ஓ! பாரதா, இறைச்சி உண்டு வந்த மனிதன் பிற்பாடு அதைக் கைவிட்டால், அத்தகைய செயலின் மூலம் அவன், வேதங்கள் அனைத்தையும் படிப்பதாலோ, அல்லது வேள்விகள் அனைத்தையும் செய்வதாலோ பெற முடியாத பெரும் பலனை அடைகிறான்.(18) இறைச்சியின் சுவையை அறிந்த பிறகு ஒருவனுக்கு அதைக் கைவிடுவது மிகவும் கடினமாகும். உண்மையில், அனைத்து உயிரினங்களிடமும் அச்சத்தை விலக்கி உறுதியளிக்கும் நோன்பான இறைச்சியைத் தவிர்க்கும் இந்த உயர்ந்த நோன்பை நோற்பது அத்தகைய மனிதனுக்கு மிகக் கடினமாகும்.(19) முழு உறுதி என்ற தக்ஷிணையை உயிரினங்கள் அனைத்திற்கும் அளிக்கும் கல்விமானான ஒருவன் இவ்வுலகில் உயிர் மூச்சுகளைக் கொடையளிப்பவனாகக் கருதப்படுவான் என்பதில் ஐயமில்லை.(20)
ஞானம் கொண்ட மனிதர்கள் மெச்சும் உயர்ந்த அறம் இதுவே. ஒருவனுடைய உயிர்மூச்சு தனக்கு எவ்வளவு அன்புக்குரியதோ, அதே போலப் பிற உயிரினங்களின் உயிர் மூச்சுகளும் அவற்றின் அன்புக்குரியவையே.(21) புத்தியையும், தூய ஆன்மாக்களையும் கொண்ட மனிதர்கள், பிறர் தன்னிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்களோ அதே போல அவர்கள் பிற உயிரினங்களிடம் நடந்து கொள்வார்கள். கல்விமான்களும், முக்தியின் வடிவிலான உயர்ந்த நன்மையை அடைய முனைபவர்களுமான மனிதர்கள் கூட மரண அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களல்ல என்பது காணப்படுகிறது.(22) களங்கமில்லாதவையும், உடல் நலம் கொண்டவையுமான உயிரினங்களைக் கொல்வதன் மூலம் வாழும் இழிந்த பாவிகளால் அவை கொல்ல முனையப்படும்போது, உயிரில் விருப்பமுள்ளவையுமான அவற்றைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(23) ஓ! ஏகாதிபதி, இந்தக் காரணத்திற்காக இறைச்சியைத் தவிர்ப்பது, அறம், சொர்க்கம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு உயர்ந்த புகலிடமாகும்.(24) தீங்கிழையாமை {கொல்லாமை} உயர்ந்த அறமாகும். மேலும் அஃது உயர்ந்த தவமுமாகும். மேலும் அனைத்துக் கடமைகளும் உண்டாகும் உயர்ந்த உண்மையுமாகும்.(25)
புல், கல் அல்லது மரத்திலிருந்து சதையைக் கொள்ள முடியாது. ஓர் உயிரினம் கொல்லப்படாத வரை அதைக் கொள்ள முடியாது. அதனால்தான் சதையை உண்பது குற்றமாகிறது.(26) ஸ்வாஹா, ஸ்வதா, அமுதம் ஆகியவற்றால் வாழும் தேவர்கள் வாய்மைக்கும், நேர்மைக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். எனினும், சுவையுணர்வை நிறைவடையச் செய்யும் மனிதர்கள் ஆசை குணம் {ரஜோ குணம்} கொண்ட ராட்சசர்களாக அறியப்பட வேண்டும்.(27) ஓ! மன்னா, இறைச்சியைத் தவிர்க்கும் மனிதன், இரவிலோ, பகலிலோ, இரு சந்திப் பொழுதுகளிலோ காட்டுக்குச் சென்றாலும், அடைதற்கரிதான இடங்களுக்குச் சென்றாலும், நகரங்களின் திறந்தவெளிகள், மனிதர்களின் சபைகள் ஆகியவற்றுக்குச் சென்றாலும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களிலோ, காட்டு விலங்குகள் மற்றும் பாம்புகளிடம் பேரச்சம் உள்ள இடங்களிலோ ஒருபோதும் அஞ்சும் நிலை அவனுக்கு ஏற்படாது.(28,29) அனைத்து உயிரினங்களும் அவனிடம் பாதுகாப்பை நாடும். அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நம்பிக்கைக்குரிய பொருளாகிறான். அவன் பிறருக்கு எந்தக் கவலையையும் உண்டாக்காமல், தானும் ஒருபோதும் கவலையடையாமல் இருக்கிறான்.(30)
இறைச்சி உண்பதற்கு எவரும் இல்லையென்றால், உயிரினங்களைக் கொல்வதற்கும் யாரும் இருக்க மாட்டார்கள். உயிரினங்களைக் கொல்லும் மனிதன், இறைச்சியுண்ணும் மனிதர்களுக்காகவே அவற்றைக் கொல்கிறான்.(31) சதை உண்ணத்தகாததாகக் கருதப்பட்டால் உயிரினங்கள் ஒருபோதும் கொல்லப்படாது. உண்பவனின் நிமித்தமாகவே இவ்வுலகில் உயிரினங்கள் கொல்லப்படுகின்றன.(32) ஓ! பெரும் காந்தி கொண்டவனே, உயிரினங்களைக் கொல்லும் மனிதர்கள் அல்லது கொல்லச் செய்யும் மனிதர்களால் வாழ்நாள் காலம் குறைக்கப்படுவதால் தன் நன்மையை விரும்பும் மனிதன் நிச்சயம் இறைச்சியை முற்றிலும் கைவிட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(33) உயிரினங்களைக் கொல்வதில் ஈடுபடும் கொடூரர்கள், தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் ஒருபோதும் பாதுகாவலர்களைக் காண மாட்டார்கள். அத்தகைய மனிதர்கள் இரைதேடும் விலங்குகளைப் போல எப்போதும் துன்பத்தையும், வாட்டத்தையும் அடைவார்கள்.(34) பேராசை, அல்லது பலம் மற்றும் சக்திக்காக என்ற புத்தி மயக்கம், அல்லது பாவம் நிறைந்தவர்களின் துணையின் மூலமே பாவம் செய்யும் இயல்பு மனிதர்களிடம் வெளிப்படுகிறது.(35)
பிறரின் சதை (உண்பதன்) மூலம் தன் சதையை அதிகரித்துக் கொள்ள முனையும் மனிதன் இவ்வுலகத்தில் பெருந்துன்பத்துடன் வாழ்ந்து, இறந்த பிறகு அக்கறையில்லாத பல்வேறு இனங்கள் மற்றும் குலங்களில் பிறப்பை எடுக்கிறான்.(36) நோன்புகளை நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களுமான உயர்ந்த முனிவர்கள், இறைச்சியைத் தவிர்ப்பது புகழத்தக்கது, புகழையும், சொர்க்கத்தையும் உண்டாக்கத்தக்கது தன்னளவிலேயே பெரும் ஈடாக {பாவக்கழிப்பாக} இருப்பது என்று சொல்கிறார்கள்.(37) ஓ! குந்தியின் மகனே, பழங்காலத்தில் மார்க்கண்டேய முனிவர் இறைச்சி உண்பதன் குற்றங்களைக் குறித்து உரையாடியபோது நான் கேட்டேன்.(38) வாழ விரும்பினாலும் {அதை} உண்பவனாலோ, பிறராலோ கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியை உண்பவன், கொலை என்ற அந்தக் கொடூரச் செயலுக்கான பாவத்தை இழைத்தவனாகிறான்.(39) இறைச்சியை விலைக்கு வாங்குபவன், தன் செல்வத்தின் மூலம் உயிரினங்களைக் கொல்பவனாகிறான். இறைச்சியுண்பவன், உண்ணும் அத்தகைய செயலின் மூலம் உயிரினங்களைக் கொல்பவனாகிறான். உயிரினங்களைக் கட்டுபவன், அல்லது பிடிப்பவனோ, உண்மையில் கொல்வன் ஆகியோர் கொலைகாரர்களாவர். இவையே மூவகைக் கொலைகளாகும்.(40)
இறைச்சி உண்ணாதவனானாலும், கொலைச்செயலை அங்கீகரிப்பவன் கொலைக்கான பாவத்தால் களங்கமடைகிறான்.(41) இறைச்சியைத் தவிர்ப்பதன் மூலம் உயிரினங்கள் அனைத்திடமும் கருணையைக் காட்டும் ஒருவன், எந்த உயிரினத்தாலும் துன்பறுத்தப்பட இயலாதவனாக, நீண்ட வாழ்நாளையும், முற்றான நலம் மற்றும் மகிழ்ச்சியையும் அடைகிறான்.(42) இறைச்சியைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன், தங்கம், பசுக்கள் மற்றும் நிலக்கொடையளிக்கும் ஒருவன் அடையும் பலனைவிட மேன்மையானது என நாம் கேள்விப்படுகிறோம்.(43) வேள்விகளில் அர்ப்பணிக்கப்படாதவையும், எனவே ஒன்றுக்குமில்லாமல் கொல்லப்பட்டவையும், விதிகளின் துணையுடன் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கையளிக்கப்படாதவையுமான விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் ஒருவன் உண்ணக்கூடாது. அத்தகைய இறைச்சியை உண்ணும் மனிதன் நரகத்திற்குச் செல்வான் என்பதில் சிறு ஐயமும் கிடையாது.(44) வேள்விகளில் அர்ப்பணிக்கப்பட்டவையும், பிராமணர்களுக்கு உணவூட்டும் நோக்கத்திற்காகக் கொல்லப்பட்டவையுமான விலங்குகளில் இருந்து பெறப்பட்டதன் விளைவால் புனிதமடைந்த இறைச்சியை ஒருவன் உண்டால் அவன் சிறு குற்றத்தையே இழைக்கிறான். வேறு வகையில் நடந்து கொண்டால் அவன் பாவத்தால் களங்கப்படுகிறான்.(45)
இறைச்சியை உண்பவர்களுக்காக உயிரினங்களைக் கொல்லும் இழிந்தவன் பெரும் பாவத்தை இழைக்கிறான். அதை உண்பவன் அடையும் பாவமும் மிகப் பெரியதாகும். வேதங்களில் விதிக்கப்பட்ட அறச்சடங்குகள் மற்றும் வேள்விகளின் பாதையைப் பின்பற்றினாலும், இறைச்சி உண்ணும் ஆசையால் ஓர் உயிரினத்தைக் கொல்லும் மனிதர்களில் இழிந்தவன், நிச்சயம் நரகவாசியாவான்.(47) இறைச்சி உண்டவனாக இருந்தாலும் பிற்பாடு அதைத் தவிர்ப்பவன், பாவத்தைத் தவிர்பதன் விளைவால் பெரும்பலனை அடைகிறான்.(48) இறைச்சியை அடைய ஏற்பாடு செய்பவன், அந்த ஏற்பாடுகளை அங்கீகரிப்பவன், கொல்பவன், விற்பவன் அல்லது வாங்குபவன், சமைப்பவன், உண்பவன் ஆகியோர் அனைவரும் இறைச்சியுண்பவர்களாகவே கருதப்படுகிறார்கள்.(49) புராதனமானதும், முனிவர்களால் துதிக்கப்படுவதும், வேதங்களில் நிறுவப்பட்டுள்ளதும், விதிசமைப்பவனாலேயே அறிவிக்கப்பட்டதைச் சார்ந்திருப்பதுமான மற்றொரு ஆணையை இப்போது சொல்லப் போகிறேன்.(50)
செயல்களையே குறியீடுகளாகக் கொண்ட அறமானது, இல்லறத்தாருக்கு {கிருஹஸ்தாஸ்ரமத்தாருக்கு} விதிக்கப்பட்டிருக்கிறதேயன்றி முக்தியை {விடுதலையை} விரும்பும் மனிதர்களுக்கல்ல என்று சொல்லப்பட்டிருக்கிறது.(51) மந்திரங்களால் புனிதமாக்கப்பட்டதும், வேத விதிகளின் படி பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் சடங்குகளில் முறையாக அர்ப்பிக்கப்பட்டதுமான இறைச்சி தூய்மையானது என மனுவே சொல்லியிருக்கிறார்.(52) வேறு இறைச்சிகள் அனைத்தும், பயனற்ற கொலையால் அடையப்பட்ட வகையின் கீழேயே வருவதால் அவை உண்ணத்தகாதவையாகவும், நரகத்திற்கும், புகழ்க்கேட்டுக்கும் வழிவகுப்பவையாகவும் இருக்கின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே, விதியால் அங்கீகரிக்கப்படாத வழிமுறைகளின் மூலம் அடையப்பட்ட எந்த இறைச்சியையும் ஒரு ராட்சசனைப் போல ஒருவன்உண்ணக்கூடாது. உண்மையில், விதியால் அங்கீகரிக்கப்படாததும், பயனற்ற கொலையால் அடையப்பட்டதுமான இறைச்சியை ஒருபோதும் ஒருவன் உண்ணக்கூடாது.(53,54) அனைத்து வகைத் துன்பங்களையும் தவிர்க்க விரும்பும் மனிதன், ஒவ்வொரு உயிரினத்தின் இறைச்சியையும் தவிர்க்க வேண்டும்.(55)
பழங்காலத்தில், மறுமையில் பலன்மிக்க உலகங்களை அடைய விரும்பிய மனிதர்கள் தங்களால் அர்ப்பணிக்கப்படும் விலங்குகளாகக் கருதி வித்துகளைக் கொண்டு வேள்விகளைச் செய்தார்கள்.(58) இறைச்சியுண்ணும் முறைமையில் ஐயங்களால் நிறைந்த முனிவர்கள், சேதியின் ஆட்சியாளனான வசுவிடம் அவற்றைத் தீர்க்கும்படி கேட்டுக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி, மன்னன் வசு இறைச்சி உண்ணத்தகாதது என்பதை அறிந்திருந்தாலும், அது உண்ணத்தக்கது என்று பதிலளித்தான்.(57) அந்தக் கணமே வசு ஆகாயத்தில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். அதன் பிறகு அவன் தன் கருத்தை மீண்டும் சொன்னதால் அவன் பூமிக்கும் கீழே மூழ்கிப் போனான்.(58) மனிதர்கள் அனைவருக்கும் நன்மை செய்ய விரும்பிய உயர் ஆன்ம அகஸ்தியர், தன் தவங்களின் மூலம் மான் வகையிலான காட்டு விலங்குகள் அனைத்தையும் என்றும் தேவர்களுக்கு அர்ப்பணித்தார்.(59) எனவே, அவ்விலங்குகளைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கயளிப்பதில் புனிதப்படுத்த வேண்டியதில்லை. விதிப்படி இறைச்சியைப் படைக்கும்போது பித்ருக்கள் நிறைவடைகின்றனர்.60)
ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! பாவமற்றவனே, நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக. ஓ! ஏகாதிபதி இறைச்சியைத் தவிர்ப்பதில் முற்றான மகிழ்ச்சி இருக்கிறது.(61) நூறுவருடங்கள் கடுந்தவம் இருப்பவன், இறைச்சியைக் கைவிடுபவன் ஆகிய இருவரும் அடையும் பலனைப் பொறுத்தவரையில் இணையானவர்களே. இதுவே என் கருத்தாகும்.(62) குறிப்பாகக் கார்த்திகை மாத வளர்பிறையில் ஒருவன் தேன் மற்றும் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். இதைச் செய்வதில் பெரும்பலன் விதிக்கப்பட்டிருக்கிறது.(63) மழைக்காலத்தின் நான்கு மாதங்களில் இறைச்சியைத் தவிர்க்கும் ஒருவன், சாதனை, நீண்ட வாழ்நாள், புகழ் மற்றும் வலிமை என்ற நன்மதிப்புமிக்க அருள்களை அடைகிறான்.(64) கார்த்திகை மாதம் முழுவதும் அனைத்து வகை இறைச்சியையும் தவிர்ப்பவன், அனைத்து வகைத் துன்பங்களையும் கடந்து முற்றான மகிழ்ச்சியில் வாழ்கிறான்.(65)
மாதங்கள் அல்லது அரைத்திங்கள்கள் {பக்ஷங்கள்} ஒரே நீளத்தில் இறைச்சியைத் தவிர்ப்பவர்கள், கொடைமையைத் தவிர்ப்பதன் விளைவால் தங்களுக்காக விதிக்கப்பட்ட பிரம்மலோகத்தை அடைகிறார்கள்.(66) ஓ! பிருதையின் மகனே, பழங்காலத்தில் தங்களையே அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாக அமைத்துக் கொண்டவர்கள், ஆத்மா, அனாத்மா ஆகிய பொருட்கள் அனைத்தின் உண்மைகளை அறிந்த மன்னர்கள் பலர், கார்த்திகை மாதம் முழுவதும், அல்லது அந்த மாதத்தின் வளர்பிறைக் காலம் முழுவதும் இறைச்சியைத் தவிர்த்தார்கள்.(67) அவர்கள், நாபாகன், அம்பரீஷன், உயர் ஆன்ம கயன், ஆயு, அநரண்யன், திலீபன், ரகு, பூரு,(68) கார்த்தவீரியார்ஜுனன், அநிருத்தன், நஹுஷன், யயாதி, நிருகன், விஷ்வக்சேனன், சசபிந்து,(69) யுவநாசுவன், உசீநரன் மகனான சிபி, முசுகுந்தன், மாந்தாத்ரி {மாந்தாதா}, ஹரிச்சந்திரன் ஆகியோராவர்.(70)
வாய்மையையே எப்போதும் சொல்வாயக. பொய்மையை ஒருபோதும் சொல்லாதே. வாய்மையே நித்திய கடமையாகும். இந்த வாய்மையின் மூலம் தான் ஹரிச்சந்திரன் இரண்டாம் சந்திரமாஸை {சந்திரனைப்} போலச் சொர்க்கத்தில் திரிந்து வருகிறான்.(71) ஸ்யேனசித்ரன், ஸோமகன், விருகன், ரைவதன், ரந்திதேவன், வஸு, ஸ்ருஞ்சயன்,(72) கிருபன், பரதன், துஷ்யந்தன், கரூசன், ராமன், அலர்க்கன், நளன், விசயகாஸ்வன், நிமி, பெரும் நுண்ணறிவுமிக்க ஜனகன்,(73) ஐலன், பிருது, வீரஸேனன், இக்ஷ்வாகு, சம்பு, ஸ்வேதன், ஸகரன்,(74) அஜன், துந்து, ஸுபாஹு, ஹரியசுவன், க்ஷுபன், பரதன் ஆகிய மன்னர்கள் பிறரும்,(75) ஓ! ஏகாதிபதி, கார்த்திகை மாதத்தில் இறைச்சியை உண்ணாமல், அதன் விளைவாகச் சொர்க்கத்தை அடைந்து,(76) செழிப்புடன் கூடியவர்களாக, கந்தர்வர்களால் துதிக்கபட்டு, பேரழகு கொண்ட ஆயிரம் காரிகையரால் சூழப்பட்ட நிலையில் பிரம்மலோகத்தில் பிரகாசமாகச் சுடர்விடுகிறார்கள்.(77)
தீங்கிழையாமை எனும் சிறந்த அறத்தைப் பயிலும் உயர் ஆன்ம மனிதர்கள், சொர்க்க வாசத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(78) பிறந்த காலத்தில் இருந்து தேன், இறைச்சி மற்றும் மதுவைத் தவிர்க்கும் அறம் சார்ந்த மனிதர்கள் முனிவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(79) இறைச்சியைத் தவிர்க்கும் அறத்தைப் பயில்பவன் அல்லது பிறர் கேட்கச் சொல்பவனுமான மனிதன் வேறு வகைகளில் மிகத் தீய ஒழுக்கம் கொண்டவனாக இருந்தாலும் நரகத்திற்குச் செல்லமாட்டான்.(80)
ஓ! மன்னா, (அடிக்கடி) இறைச்சி தவிர்த்தல் குறித்தவையும், புனிதமானவையும், முனிவர்களால் துதிக்கப்படுபவையுமான இந்த விதிகளைப் படிப்பவன், அல்லது படிக்கக் கேட்பவன்,(81) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைவதன் விளைவால் பேரின்பத்தை அடைகிறான். அவன் தன் உற்றார் உறவினருக்கு மத்தியில் சிறப்பான நிலையை அடைகிறான் என்பதில் ஐயமில்லை.(82) துயரில் பீடிக்கப்படும்போது அதை அவன் எளிதாகக் கடக்கிறான். தடைகளால் தடுக்கப்படும்போது அவன் மிக மிக எளிமையாக அதிலிருந்து விடுபடுவதில் வெல்கிறான்.(83) அத்தகைய மனிதன் இடைநிலை வகைகளான விலங்குகளாகவோ, பறவைகளாகவோ ஒருபோதும் பிறவியை அடைவதில்லை. மனித குலத்தில் அவன் பேரழகுடன் கூடிய மனிதனாகப் பிறக்கிறான். ஓ! குரு குலத்தின் தலைவா, அவன் பெருஞ்செழிப்பையும், பெரும்புகழையும் பெற்றிருப்பான்.(84) ஓ! மன்னா, இவ்வாறு முனிவர்களால் அமைக்கப்பட்ட பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி அறங்கள் இரண்டின் விதிகளுடன் சேர்ந்தாற்போல இறைச்சி தவிர்த்தல் குறித்து உனக்குச் சொல்லியிருக்கிறேன்" என்றார் {பீஷ்மர்}.(85)
அநுசாஸனபர்வம் பகுதி – 115ல் உள்ள சுலோகங்கள் : 85
ஆங்கிலத்தில் | In English |