Abstention from cruelty! | Anusasana-Parva-Section-116 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 116)
பதிவின் சுருக்கம் : இறைச்சி உண்பதால் கிட்டும் பலன்கள்; உயிரின் மதிப்பு; இறைச்சியுண்பதால் நேரும் பாவம்; கொல்லாமையின் சிறப்புகள் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஐயோ, பல்வேறு வகை உணவுகளைக் கைவிட்டு இறைச்சியை மட்டுமே உண்ணும் கொடூர மனிதர்கள், உண்மையில் பெரும் ராட்சசர்களைப் போன்றோரே.(1) ஐயோ, அவர்கள் இறைச்சியை {துய்த்து மகிழ்வதைப்} போலப் பல்வேறு வகைப் பண்டங்களையும், பல்வேறு வகைக் கீரைகளையும், சுவைமிக்கச் சாறுகளுடன் கூடிய பல்வேறு வகைக் கண்டங்களையும் துய்த்து மகிழ்வதில்லை.(2) இந்தக் காரணத்தினால் இக்காரியத்தில் என் புத்தி மயங்குகிறது. சுவையைப் பொறுத்தவரையில் இறைச்சியோடு ஒப்பிடத்தக்கது வேறேதும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.(3) எனவே, ஓ! பலமிக்கவரே, ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இறைச்சியைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன, இறைச்சியை உண்பதால் உண்டாகும் குற்றங்கள் என்ன என்பதைக் கேட்க விரும்புகிறேன்.(4) நீர் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர். கடமைகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இது குறித்து நீர் எனக்கு முழுமையாகச் சொல்வீராக. உண்மையில், எது உண்ணத்தக்கது, எது உண்ணத்தக்கதல்ல என்பதை எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, இறைச்சி என்பது என்ன, அஃது என்ன சாரத்தாலானது, அதைத் தவிர்ப்பதால் உண்டாகும் பலன்கள் மற்றும் இறைச்சியை உண்பதால் ஏற்படும் குற்றங்கள் ஆகியவற்றை எனக்குச் சொல்வீராக" என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. சுவையின் நோக்கில் இறைச்சிக்கு மேன்மையானது இந்தப் பூமியில் ஏதும் கிடையாது. மெலிந்தவருக்கோ, பலவீனருக்கோ, நோயால் பீடிக்கப்பட்டவருக்கோ, பாலினக்கலவிக்கு அடிமையாயிருப்பவருக்கோ, பயணத்தால் களைப்படைந்தவருக்கோ இறைச்சியைவிட மிக நன்மையானது வேறேதும் இல்லை.(8) இறைச்சி மிக விரைவாகப் பலத்தை அதிகரிக்கச் செய்கிறது. அது பெரும் வளர்ச்சியை விதிக்கிறது. ஓ! பகைவர்களை எரிப்பவனே, இறைச்சியைவிட மேன்மையான உணவேதும் கிடையாது.(9) ஆனால், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அதைத் தவிர்க்கும் மனிதர்களுக்குக் கிட்டும் பலன்கள் பெரியனவாகும். நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(10)
மற்றொரு உயிரினத்தின் இறைச்சியைக் கொண்டு தன் சதையைப் பெருக்க விரும்பும் மனிதனைவிட அற்பனும், கொடூரனும் வேறெவனும் இல்லை.(11) இவ்வுலகில் தன் உயிரைவிட அன்புக்குரியது ஓர் உயிரினத்திற்கு வேறேதும் இல்லை. எனவே, (மதிப்புமிக்க அந்த உடைமையை எடுக்காமல்) ஒருவன் தன் உயிரைப் போலவே பிறரின் உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும்.(12) ஓ! மகனே, சதையே உயிர்வித்தின் தோற்றுவாய் என்பதில் ஐயமேதும் இல்லை. அதை உண்பதில் பெரும் குற்றமும், அதைத் தவிர்ப்பதில் நன்மையும் இருக்கின்றன.(13) எனினும், வேத விதிகளின் படி புனிதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதன் மூலம் எக்குற்றமும் இழைக்கப்படுவதில்லை. வேள்விகளுக்காகவே விலங்குகள் உண்டாக்கப்பட்டன என்று கேள்விப்படுகிறோம். வேறு எந்த வழியிலும் இறைச்சியை உண்பவர்கள் ராட்சச நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.(14) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஆற்றலைப் பயன்படுத்தி அடையப்பட்ட இறைச்சியை உண்பதில் அவர்கள் எக்குற்றத்தையும் இழைப்பதில்லை.(15)
ஓ! மன்னா, பழங்காலத்தில் காட்டின் மான்கள் அனைத்தும் அகஸ்தியரால் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டன. எனவே, மானை வேட்டையாடுவது நிந்திக்கப்படுவதில்லை.(16) ஒருவன் தன் உயிரைப் பணயம் வைக்காமல் எந்த வேட்டையையும் செய்ய முடியாது. அங்கே விலங்கு கொல்லப்படுகிறது, அல்லது வேட்டைக்காரன் கொல்லப்படுகிறான்.(17) எனவே, ஓ! பாரதா, அரசமுனிகளே கூட வேட்டையாடினர். அத்தகைய ஒழுக்கத்தால் அவர்கள் பாவமேதும் இழைப்பதில்லை. உண்மையில் அந்த நடைமுறை பாவம் நிறைந்ததாகக் கருதப்படுவதில்லை.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டும் நடைமுறையில் உண்டாகும் பலனுக்கு இணையாக இம்மையிலோ, மறுமையிலோ வேறேதும் இல்லை.(19) கருணைகொண்ட மனிதனுக்கு எந்த அச்சமும் கிடையாது. கருணையுடன் கூடிய தீங்கற்ற மனிதர்களே இம்மையையும், மறுமையையும் அடைகிறார்கள்.(20)
கடமைகளை அறிந்த மனிதர்கள், கொடூரம் தவிர்ப்பதைக் குறியீடாகக் கொண்ட அறமே அறமென அழைக்கத்தகுந்தது எனச் சொல்கிறார்கள். தூய ஆன்மா கொண்ட மனிதன், தன் ஆன்மா கருணை கொள்ளும் செயல்களை மட்டுமே செய்வான்.(21) தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் இறைச்சி ஹவி {ஹவிஸ்} (உண்ணத்தக்கது) என்று அழைக்கப்படுகிறது. கருணையில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறரிடம் கருணையாக நடந்து கொள்பவனுமான மனிதனுக்கு எவ்வுயிரினத்திடமிருந்தும் அச்சமேதும் கிடையாது {உண்டாகாது}.(22) உயிரினங்கள் அனைத்தும் {பின்வரும்} இத்தகைய ஓர் உயிரினத்திற்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று நான் கேள்விப்படுகிறோம். ஒருவன் காயமடைந்தாலோ, வீழ்ந்துவிட்டாலோ, நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தாலோ, பலவீனமடைந்திருந்தாலோ, அடிபட்டிருந்தாலோ அவன் எந்நிலையில் இருந்தாலும், அனைத்து உயிரினங்களும் அவனைப் பாதுகாக்கவே செய்யும். உண்மையில், அவன் சமமான தரையில் இருந்தாலும், சமமற்றதரையில் திருந்தாலும் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவை இவ்வாறே செயல்படுகின்றன. பாம்புகளோ, காட்டு விலங்குகளோ, பிசாசங்களோ, ராட்சசர்களோ அவனை ஒருபோதும் கொல்வதில்லை[1].(23,24) பிறரை அச்சத்தில் இருந்து விடுவித்தவன் அஞ்சுவதற்கான சூழ்நிலைகள் எழும்போது அவன் அச்சத்தில் இருந்து விடுபடுகிறான். உயிர்க்கொடையைவிட மேன்மையான எக்கொடையும் இதற்கும் முன்பும் இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதுமில்லை.(25)
[1] கும்பகோணம் பதிப்பில், "எவன் தயையை முதன்மையாகக் கருதி எல்லாப்பிராணிகளுக்கும் அபயமளிக்கிறானோ அவனுக்கு அந்தப் பிராணிகள் அபயங்கொடுக்கின்றனவென்று கேட்டிருக்கிறோம். மேடுபள்ளங்களிலும், ஸம பூமியிலும் அவன் புண்பட்டாலும், தடைபட்டாலும், விழுந்தாலும், தண்ணீரில் நனைந்தாலும், அடிபட்டாலும் எல்லாப்பிராணிகளும் காப்பாற்றும். துஷ்ட மிருகங்களும், பிசாசங்களும், ராக்ஷஸர்களும் அவனைக் கொல்வதில்லை" என்றிருக்கிறது.
ஒருவனுக்குத் தன் உயிரைவிட அன்புக்குரியது வேறேதும் இல்லை என்பது நிச்சயமான ஒன்றாகும். ஓ! பாரதா, மரணமானது அனைத்து உயிரினங்களுக்கும் துன்பமாகவோ, தீமையாகவோ ஆகிறது.(26) மரணத்திற்கான காலம் வரும்போது, அனைத்து உயிரினங்களின் மொத்த சட்டகமும் நடுங்குவதே காணப்படுகிறது. இந்த உலகப்பெருங்கடலில், கருப்பையில் பிறக்கும் போதும், மூப்பின்போதும் பல்வேறு வகைப் பிணிகளைத் தாங்கிக் கொண்டு,(27) உயிரினங்கள் தொடர்ந்து போவதும் வருவதும் காணப்படுகிறது. ஒவ்வொரு உயிரினமும் மரணத்தால் பீடிக்கப்படுகிறது. கருப்பையில் வசித்திருக்கும்போது அனைத்து உயிரினங்களும் சிறுநீர், சளி {வியர்வை}, மலம் ஆகியவற்றின் காரமான, புளிப்பான, கசப்பான, வலிநிறைந்த உணர்வுகளை உண்டாக்கக்கூடிய, தாங்கிக் கொள்வதற்குக் கடினமான நீர்மச்சாறுகளில் {ரசங்களில்} சமைக்கப்படுகின்றன {வேகின்றன}. அங்கே அவை கருப்பையில் ஆதரவற்ற நிலையில் வசித்து, மீண்டும் மீண்டும் கிழிக்கப்படவும், துளைக்கப்படவும் செய்கின்றன(28,29). இறைச்சியில் பேராசை கொண்டவர்கள், அத்தகைய ஆதரவற்ற நிலையில் மீண்டும் மீண்டும் கருப்பையில் சமைக்கப்படுவது காணப்படுகிறது. பல்வேறு வகைப் பிறவிகளை அடையும் அவை, கும்பீபாகம் என்றழைக்கப்படும் நரகத்தில் சமைக்கப்படுகின்றன.(30)
அவை அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு இவ்வழியில் மீண்டும் மீண்டும் பயணம் செய்கின்றன. ஒருவன் இவ்வுலகத்திற்கு வரும்போது அவனுடைய உயிரைவிட மிக அன்புக்குரியது வேறேதும் இல்லை.(31) எனவே தூய ஆன்மா கொண்ட ஒருவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். ஓ! மன்னா, தான் பிறந்ததிலிருந்து அனைத்து வகை இறைச்சியையும் தவிர்க்கும் மனிதன்,(32) சொர்க்கதில் பெரும் அளவிலான இடத்தை அடைவான் என்பதில் ஐயமில்லை. உயிரில் விருப்பமுள்ளவர்களாக இருந்தாலும், விலங்குகளின் இறைச்சியை உண்பவர்கள்,(33) தாங்கள் உண்ணும் விலங்குகளாலேயே உண்ணப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. இதுவே என் கருத்தாகும். ஓ! பாரதா, "என்னை உண்டவனை நான் பதிலுக்கு உண்ணப்போகிறேன்" என்பதே மாம்ஸம் என்ற குணமாகிறது[2]. கொலைகாரன் எப்போதும் கொல்லப்படுவான். அவனுக்குப் பிறகு {கொல்லப்பட்டதை} உண்பவனும் அதே விதியைச் சந்திக்கிறான்.(35)
[2] கும்பகோணம் பதிப்பில், "உயிருக்கு ஆசைப்படும் பிராணிகளின் மாம்ஸங்களைத் தின்பவர் அந்தப் பிராணிகளாலேயே தின்னப்படுவாரென்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பாரதனே, ‘மாம்=என்னை’ என்றும், ‘ஸம்=அவன்’ என்றும் பொருளுள்ள இரண்டு பதங்கள் சேர்ந்து "மாம்ஸம்" என்றாயிருப்பது, "என்னை அவன் பக்ஷிப்பதனால் அவனை நான் பக்ஷிப்பேன்" என்று பிராணிகளின் கருத்தைக் குறிப்பிடுவதாகத் தெரிந்து கொள்" என்றிருக்கிறது.
(இப்பிறவியில்) மற்றொருவனிடம் பகையுடன் செயல்படுபவன், மற்றொருவனால் செய்யப்படும் அதே போன்ற செயல்களுக்குப் பலியாகிறான். எந்த உடலிலும் ஒருவன் செய்யும் எந்தச் செயல்களினாலும்(36) அவன் அவ்வுடல்களில் எழும் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்[3]. கொடூரந்தவிர்த்தலே {கொல்லாமையே} உயர்ந்த அறமாகும்.(37) கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த கொடையாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த தவமாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த வேள்வியாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த பலமாகும்.(38) கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த நண்பனாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த மகிழ்ச்சியாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த உண்மையாகும். கொடூரந்தவிர்த்தல் உயர்ந்த ஸ்ருதியாகும்.(39)
[3] "ஒருவன் மனித உடலுடன் இருக்கும்போது மற்றொருவனுக்குத் தீங்கிழைத்ததன் விளைவால், அவன் தன் மனித உடலில் துன்பதைத அடைவான். ஒருவன் புலியாக மாறி ஒரு மானைக் கொல்கிறான். அவன் செய்த அச்செயலின் விளைவுகளால் அவன் புலியாக மீண்டும் பிறக்கும் துன்ப நிலையை அடைய வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அனைத்து வேள்விகளிலும் அளிக்கப்படும் கொடைகள், புனித நீர்நிலைகள் அனைத்திலும் செய்யப்படும் தூய்மைச் சடங்குகள், சாத்திரங்களில் குறிப்பிடப்பட்ட அனைத்து வகைக் கொடைகள் ஆகிய இவை அனைத்தையும் செய்வதனால் ஒருவன் அடையும் பலனையும் கொடூரந்தவிர்த்தல் {கொல்லாமை} (மேற்சொன்ன அனைத்தின் பலன்களையும்) அளிக்கிறது.(40) கொடூரந்தவிர்க்கும் மனிதன் செய்யும் தவங்கள் வற்றாதனவாகின்றன. கொடூரந்தவிர்க்கும் மனிதன் எப்போதும் வேள்விகளைச் செய்பவனாகக் கருதப்படுகிறான். கொடூரந்தவிர்க்கும் மனிதன் அனைத்து உயிருக்கும் தந்தையும், தாயும் போன்றவனாவான்.(41) ஓ! குரு குலத்தின் தலைவா, இவையே கொடூரந்தவிர்ப்பதால் {அஹிம்ஸையால்} உண்டாகும் சில பலன்களாகும். ஒருவன் நூறுவருடங்கள் சேர்ந்தாற்போலப் பேசினாலும் அதைச் செய்வதால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது" என்றார் {பீஷ்மர்}.(42)
அநுசாஸனபர்வம் பகுதி – 116ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |