A Sudra possessed of great wealth! | Anusasana-Parva-Section-117 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 117)
பதிவின் சுருக்கம் : ஒரு புழுவைக் கண்ட வியாசர்; புழுவின் முற்பிறவிக் கதை; முற்பிறவியில் பெருந்தனம் படைத்த சூத்திரனாய் இருந்தது; அந்தப் புழுவுக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இறக்க விரும்பியோ, வாழ விரும்பியோ பல மனிதர்கள் தங்கள் உயிர்களை (போர் எனும்) பெரும் வேள்வியில் விடுகின்றனர். ஓ! பாட்டா, அவர்கள் அடையும் கதியென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) போரில் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கவலை நிறைந்த ஒன்றாகும். ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, செழிப்பாக இருந்தாலும், வறுமையில் இருந்தாலும், இன்பமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் உயிரை விடுவது மனிதர்களுக்குக் கடினமானது என்பதை நீர் அறிவீர். நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பது என் கருத்தாகும். இதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக" என்றான்.(2,3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, செழிப்பிலோ, வறுமையிலோ, மகிழ்ச்சியிலோ, துக்கத்திலோ இவ்வுலகிற்கு வரும் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கேற்றபடியே வாழ்கின்றன[1].(4) அதன் காரணத்தைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா நீ என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி சிறப்பானதாகும்.(5) ஓ! மன்னா, இது தொடர்பாகத் தீவில் பிறந்த முனிவருக்கும் {வியாசருக்கும்}, தவழும் புழுவுக்கும் இடையில் முற்காலத்தில் நடந்த ஒரு பழைய உரையாடலை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(6) பழங்காலத்தில் கல்விமானான பிராமணரும், தீவில் பிறந்தவரும், பிரம்மத்தோடு அடையாளம் காணப்படுபவருமான கிருஷ்ணர் {வியாசர்} உலகில் திரிந்து கொண்டிருந்த போது, தேர்கள் கடந்து செல்லும் சாலையில் ஒரு புழு வேகமாகச் செல்வதைக் கண்டார்.(7) அந்த முனிவர் ஒவ்வொரு உயிரினத்தின் நடைமுறையையும், ஒவ்வொரு விலங்கின் மொழியையும் அறிந்தவராவார். அனைத்தையும் அறிந்த அவர் அந்தப் புழுவின் இச்சொற்களைச் சொன்னார்.(8)
[1] கும்பகோணம் பதிப்பில், "செல்வம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஸுகமிருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த ஸம்ஸாரத்தில் ஜனித்த பிராணிகளெல்லாம் எந்த எண்ணத்தினால் ஆசை வைத்திருக்கின்றன என்பதற்குக் காரணத்தை என்னிடம் கேள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "செழிப்பிலோ, வறுமையிலோ, நன்மையிலோ தீமையிலோ இவ்வாழ்வுச்சுழலில் பிறக்கும் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தைப் பின்பற்றுகின்றன" என்றிருக்கிறது.
வியாசர், "ஓ! புழுவே, பேரச்சத்துடன் நீ மிக விரைவாகச் செல்வதாகத் தெரிகிறது. நீ எங்கே ஓடுகிறாய், எதைக் கண்டு அஞ்சுகிறாய் என்பதை எனக்குச் சொல்" என்றார்.(9)
அந்தப் புழு {வியாசரிடம்}, "பெருந்தேர் ஒன்றின் சடசடப்பொலியைக் கேட்டு நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன். ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அதன் முழக்கம் கடுமையாக இருக்கிறது. அது கிட்டத்தட்ட {அருகில்} வந்துவிட்டது. ஒலி கேட்கிறது. அஃது என்னைக் கொல்லாதா? இதற்காகவே நான் தப்பி ஓடுகிறேன். காளைகளின் ஒலியை மிக அருகில் கேட்கிறேன். அவை சாரதியின் சாட்டையின் கீழ் கடும் மூச்சு விட்டுக் கொண்டே கடும் சுமையைச் சுமந்து வருகின்றன. அந்தக் காளைகளைச் செலுத்தும் மனிதர்கள் வெளியிடும் பல்வேறு ஒலிகளையும் நான் கேட்கிறேன்.(12) புழு வகையில் பிறந்திருக்கும் எங்களைப் போன்ற உயிரினங்களால் அவ்வொலிகள் கேட்கத்தகாதனவாகும். இதன் காரணமாகவே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்தச் சூழ்நிலையில் இருந்து நான் தப்பிச் செல்கிறேன்.(13) அனைத்து உயிரினங்களும் வலிநிறைந்த மரணத்தை உணர்கின்றன. வாழ்வு என்பது அடைதற்கரிய உடைமையாகும். எனவே, மகிழ்ச்சியான நிலையில் இருந்து துன்ப நிலைக்குச் செல்ல நான் விரும்பவில்லை. எனவே நான் அச்சத்தால் தப்பி ஓடுகிறேன்" என்றது".(14)
பீஷ்மர் தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டதும், தீவில் பிறந்தவரான வியாசர், "ஓ! புழுவே, நீ எங்கே மகிழ்ச்சியாக இருப்பாய்? நீ இடைநிலை வகையைச் சார்ந்த உயிரினமாக இருக்கிறாய். மரணம் உனக்கு மகிழ்ச்சி நிறைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(15) ஓ! புழுவே, ஒலி, தீண்டல், சுவை, மணம், மற்றும் பல்வேறு வகையான சிறந்த இன்பங்களை நீ அறியமாட்டாய். மரணம் உனக்கு நன்மையானது என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.(16)
புழு {வியாசரிடம்}, "ஓர் உயிரினம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அதில் பற்றுக் கொள்கிறது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, இந்த வகைப் பிறப்பிலும் நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதற்காகவே நான் வாழ விரும்புகிறேன்.(17) இந்தச் சூழ்நிலையிலும் என் உடல் தேவைகளுக்கு ஏற்ற இன்பங்கள் இருக்கின்றன. மனிதர்களும், அசைவற்ற {உயிரற்ற} பொருட்களில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் வெவ்வேறு இன்பங்களைக் கொண்டிருக்கின்றனர்.(18) என் முந்தைய பிறவியில் நான் மனிதனாக இருந்தேன். ஓ! பலமிக்கவரே, நான் செல்வம் நிறைந்த ஒரு சூத்திரனாக இருந்தேன். நான் பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இல்லை. நான் கொடூரனாகவும், ஒழுக்கத்தில் இழிந்தவனாகவும், அநியாய வட்டிக்குப் பணம் தருபவனாகவும் இருந்தேன்.(19) நான் பேச்சில் கடுமை மிகுந்தவனாகவும் இருந்தேன். வஞ்சிப்பதையே ஞானமாகக் கருதினேன். அனைத்து உயிரினங்களையும் நான் வெறுத்தேன். எனக்கும் பிறருக்கும் இடையில் உண்டான உடன்படிக்கைகளில் உள்ள சாக்குபோக்குகளைப் பயன்படுத்திப் பிறருக்குச் சொந்தமானவற்றை எப்போதும் அபகரித்து வந்தேன்.(20)
கொடியவனான நான், பசித்ததும் என் வயிற்றை நிறைத்துக் கொண்டு, பணியாட்களுக்கும், என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.(21) தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நம்பிக்கையுடனும், மதிப்புடனும் அவர்களுக்கு எந்த உணவையும் ஒருபோதும் அர்ப்பணிக்காத பேராசைக்காரனாக நான் இருந்தேன்.(22) பாதுகாப்பை நாடி அச்சத்துடன் என்னிடம் வந்த மனிதர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்காமல் திசைமாற்றிச் செல்ல வைத்தேன். தங்கள் அச்சத்தை விலக்க வேண்டி என்னிடம் வந்தவர்களுக்கு நான் எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை.(23) வேறு மக்களுக்குச் சொந்தமான செல்வம், தானியங்கள், மனைவிகள், அவர்களது அன்புக்குரியவை, பருகும் பானங்கள், நல்ல மாளிகைகள் ஆகியவற்றைக் கண்டு காரணமேயில்லாமல் அவர்களிடம் பொறாமை கொள்வேன்.(24) அவர்களுக்கு வறுமையையே நான் விரும்பினேன். என் ஆசைகளைக் கனியும் நிலையால் மகுடம் சூட்ட உறுதி அளித்த அந்த ஒழுக்கத்தையே பின்பற்றி, மற்றவர்களின் அறம், பொருள் மற்றும் இன்பங்களை அழிக்க முனைந்தேன்.(25)
என்னுடைய அந்த முற்பிறவியில் பெரிய கொடுமைகளையும், அதே போன்ற ஆசைகளை நிறைவேற்றும் செயல்களையும் செய்தேன். அந்தச் செயல்களை நினைவுகூரும் நான் அன்புக்குரிய மகனை இழந்து துயரப்படும் ஒருவனைப் போல வருத்தத்திற்கும் துன்பத்திலும் நிறைகிறேன்.(26) என்னுடைய இந்தச் செயல்பாடுகளின் விளைவால் நற்செயல்கள் என்ன கனிகளைத் தரும் என்பதை அறிந்தவனாக நான் இல்லை. எனினும், நான் வயது முதிர்ந்த என் தாயை வழிபட்டு வந்தேன், ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிராமணரையும் வழிபட்டேன்.(27) {நல்ல} பிறவியையும், சாதனைகளையும் கொண்ட அந்தப் பிராமணர், ஒருமுறை தமது பயணங்களின் போது என் வீட்டிற்கு விருந்தினராக வந்தார். நான் அவரை மதிப்புடனும், விருந்தோம்பலுடனும் வரவேற்றேன். அந்தச் செயலுக்கான பலனின் விளைவால் என் நினைவு என்னைக் கைவிடாதிருக்கிறது.(28) என்னுடைய அந்தச் செயலின் விளைவால் மீண்டும் நான் மகிழ்ச்சியை மீட்டெடுப்பேன் என நினைக்கிறேன். ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். என் நன்மைக்கானது என்ன என்பதை அன்புடன் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டது.(29)
அநுசாஸனபர்வம் பகுதி – 117ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |