Re-births! | Anusasana-Parva-Section-118 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 118)
பதிவின் சுருக்கம் : புழுவானது அடுத்தடுத்து வெவ்வேறு பிறவிகள் அடைந்ததைக் கண்ட வியாசர்...
வியாசர், "ஓ! புழுவே, ஒரு புண்ணியச் செயலின் விளைவாலேயே இடைநிலை உயிரின வகையில் பிறந்திருந்தாலும் நீ மதிமயங்காமலிருக்கிறாய். ஓ! புழுவே, நான் செய்த அந்தச் செயலின் விளைவாலேயே நீ மதிமயங்காமலிருக்கிறாய்[1].(1) என் தவ வலிமையின் விளைவாலேயே நானும் குற்றமுள்ள ஓர் உயிரினத்திற்கு என்னைக் காணச் செய்து அதைக் காக்க இயன்றவனாயிருக்கிறேன். தவ வலிமையைவிடப் பலமிக்க வலிமை வேறேதும் இல்லை.(2) ஓ! புழுவே, நீ உன் முற்பிறவியில் செய்த தீச்செயல்களின் மூலமே புழுக்களின் வகையில் பிறப்பெடுத்திருக்கிறாய் என்பதை அறிவேன். எனினும், நீ அறத்தையும், தகுதியையும் ஈட்ட நினைத்தால் உன்னால் அவற்றை அடைய முடியும்.(3) தேவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், இந்தச் செயற்களத்தில் தங்களால் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே இன்பத்தையும், துன்பத்தையும் அடைகிறார்கள். மனிதர்களுக்கு மத்தியிலும் அறச்செயல்கள் செய்யப்படும்போது கனியின் மேல் உள்ள விருப்பத்தாலேயே அவை செய்யப்படுகின்றன (கனியை விரும்பாமலல்ல). ஒருவன் அடைய நினைக்கும் சாதனையானது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்ற விருப்பத்தாலேயே வேண்டப்படுகிறது.(4)
[1] "அந்தப் புழுவால் ஏதோ ஒரு புண்ணியச் செயலின் விளைவாகவே முற்பிறவி நிகழ்வுகளை நினைவுகூர இயல்கிறது என இந்தத் தவசி {வியாசர்} சொல்ல வருகிறார். அந்தப் புண்ணியச் செயலானது, நற்பேறு பெற்ற அந்தப் புழுவால் இந்தத் தவசியைக் காண முடிந்ததுதான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புழுவே, நீ திர்யக்ஜாதியிலிருந்தும் நல்ல கர்மத்தினால் பூர்வஜன்மஞானம் தவறாமலிருக்கிறாய். நீ தவறாமலிருப்பது என் காரியம்தான். நான் என் தவ வன்மையால் பார்ப்பதனாலேயே உன்னைக் காப்பாற்றுகிறேன்" என்றிருக்கிறது.
(முற்பிறவியில்) கல்விமானாகவோ, அறியாமையுடன் கூடிய உயிரினமாகவோ, பேச்சும், புத்தியும், கைகளும், கால்களும் அற்றிருப்பது உண்மையில் அனைத்துமற்றிருப்பதே ஆகும்.(5) ஒரு மேன்மையான பிராமணன் ஆகிறவன், வாழும்போது புனித மந்திரங்களைச் சொல்லி சூரியன் மற்றும் சந்திர தேவர்களைத் துதிக்கிறான். ஓ! புழுவே, நீ அந்த நிலையை அடைவாய்.(6) அந்த நிலையை அடைந்ததும் நீ இன்ப நுகர்பொருட்களாக மாற்றப்பட்ட பூதங்கள் அனைத்தையும் அனுபவிப்பாய். நீ அந்த நிலையை அடையும்போது நான் உனக்குப் பிரம்மத்தைப் போதிப்பேன். அல்லது, நீ விரும்பினால் உனக்கு வேறெந்த நிலையையும் நான் அளிப்பேன்" என்றார் {வியாசர்}.(7)
வியாசரின் சொற்களை ஏற்றுக் கொண்ட அந்தப் புழு சாலையை விட்டு அகலாமல் அங்கேயே இருந்தது. அதே வேளையில், அந்தத் திசையில் வந்து கொண்டிருந்த பெரிய வாகனம் அந்த இடத்திற்கு வந்தது.(8) அந்தப் புழு, சக்கரங்களின் தாக்குதலில் துண்டுகளாகக் கிழிந்து தன் உயிர்மூச்சை விட்டது. இறுதியாக அளவிலா பலம் கொண்ட வியாசரின் அருள் மூலம் க்ஷத்திரிய வகையில் பிறந்த அது {அந்தப் புழு}(9) அந்தப் பெரும் முனிவரைக் காணச் சென்றது. அது க்ஷத்திரியனாவதற்கு முன், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான், பறவை,(10) சண்டாளன், சூத்திரன் மற்றும் வைசியன் என்ற பல்வேறு வகைகளில் பிறந்திருந்தது. உண்மையைச் சொல்லும் முனிவரிடம் தன் பல்வேறு வடிவமாற்றங்களைக் குறித்துச் சொல்லி, முனிவர் தன்னிடம் காட்டிய கருணையை நினைவுகூர்ந்த அந்தப் புழு (இப்போது க்ஷத்திரியனாக மாறியிருப்பது) தன் கரங்களைக் கூப்பி அந்த முனிவரின் கால்களில் விழுந்து தன் தலையால் அவற்றைத் தீண்டியது {அந்த க்ஷத்திரியன் தன் தலையால் அம்முனிவரின் பாதங்களைத் தீண்டினான்}.(11)
அந்தப் புழு, "அனைவராலும் விரும்பப்படுவதும், நன்கறியப்பட்ட பத்துக் குணங்களைக் கொண்டிருந்தால் அடையக்கூடியதுமான உயர்ந்த நிலையில் இப்போது நான் இருக்கிறேன்[2]. உண்மையில், முன்பு ஒரு புழுவாக இருந்த நான் இவ்வாறே ஒரு இளவரசனின் நிலையை அடைந்திருக்கிறேன்.(12) பெரும்பலம் கொண்டவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் என்னைத் தங்கள் முதுகுகளில் சுமந்து செல்கின்றன. என் தேர்களில் உயர்ந்த வகையைச் சார்ந்த காம்போஜ குதிரைகள் பூட்டப்படுகின்றன.(13) ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட எண்ணற்ற வாகனங்களும் என்னைச் சுமக்கின்றன. நான் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் இறைச்சியுடன் கூடிய உணவை உண்கிறேன்.(14) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே, அனைவராலும் வழிபடப்படும் நான் இனிமையற்ற காற்று வீச முடியாத இனிமை நிறைந்த அறைகளில் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் நான் உறங்குகிறேன்.(15) ஒவ்வொரு இரவிலும் கொஞ்ச நேரம், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தேவர்கள் தங்கள் தலைவனான இந்திரனை இனிமையாகப் புகழ்வதைப் போலவே என்னைப் புகழ்கிறார்கள்.(16) முன்பு புழுவாக இருந்த நான், வாய்மையில் உறுதியுள்ளவரும், அளவிலா சக்தி கொண்டவருமான உமது அருளின் மூலம் இப்போது அரச வகையில் பிறந்திருக்கிறேன்.(17) ஓ! பெரும் ஞானியே, நான் உமக்குத் தலைவணங்குகிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு ஆணையிடுவீராக. உமது தவப் பலத்தின் மூலம் விதிக்கப்பட்டே இந்த மகிழ்ச்சியான நிலை இப்போது எனதாகியிருக்கிறது" என்றது {க்ஷத்திரியனாக மாறியிருந்த அந்தப் புழு}.(18)
[2] கும்பகோணம் பதிப்பில், "நான் புழுவாக இருந்து ராஜபுத்திரனானேனே, இது நான் விரும்பின ஒப்பற்ற நிலைமை. இது பத்துத் தடவைகளால் எனக்குக் கிடைத்தது" என்றிருக்கிறது.
வியாசர், "ஓ! மன்னா, மதிப்பை வெளிப்படுத்தும் பல்வேறு சொற்களால் நீ இன்று என்னை வழிபட்டாய். புழுவாக மாறியிருந்த உன் நினைவு மறைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவே இப்போது தோன்றியிருக்கிறது[2].(19) நீ முற்பிறவியில் ஈட்டிய பாவம் இன்னும் அழிக்கப்படவில்லை. முற்பிறவியில் சூத்திரனாக இருந்தபோது செல்வத்தில் பேராசை கொண்டவனும், நடத்தையில் கொடூரனும், பிராமணர்களுக்குப் பகைவனுமாக இருந்து அந்தப் பாவங்களை ஈட்டினாய்.(20) உன்னால் என்னைப் பார்க்க முடிந்தது. அது நீ புழுவாக இருந்தபோது செய்த செயலுக்கான பலனே ஆகும். என்னை வணங்கி வழிபட்டதன் விளைவாக, பசுக்களுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போர்க்களத்தில் உன் உயிர்மூச்சைவிட்டு, நீ மேலும் உயர்ந்தெழுந்து க்ஷத்ததிரிய வகையில் இருந்து பிராமண நிலையை அடைவாய்.(21,22) ஓ! இளவரசே, அதிக இன்பத்தை அனுபவித்தும், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தும் சொர்க்கத்தை அடைந்து, நித்திய பிரம்மம் ஆவாய். அந்த முற்றான இன்ப நிலையே உனதாகும்.(23) இடைநிலை வகைகளில் (விலங்குகளாகப்) பிறப்பவர்கள் (எழும்போது) சூத்திரர்களாகிறார்கள். சூத்திரன் வைசியன் என்ற நிலைக்கு உயர்ந்தெழுகிறான்; வைசிய் க்ஷத்திரியனாகிறான். தன் வகைக்கான கடமைகளை வெளிப்படுத்துவதில் செருக்கு கொள்ளும் க்ஷத்திரியன், பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான். அறவொழுக்கத்தைப் பின்பற்றும் பிராமணன், பேரின்பம் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்" என்றார் {வியாசர்}".(24)
[2] கும்பகோணம் பதிப்பில், "இப்போது நீ உன் வாக்குகளினால் இஷ்டப்படி என்னைப் பூஜித்தாய். அருவருக்கத்தக்க புழு ஜன்மத்தையடைந்த ஞாபகம் இப்போது உனக்கிருக்கிறதே" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 118ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |