Meritorious end! | Anusasana-Parva-Section-119 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 119)
பதிவின் சுருக்கம் : வியாசரால் நற்கதியடைந்த புழுவைப் போலவே, குருக்ஷேத்திரத்தில் மடிந்த க்ஷத்திரியர்க்ள அனைவரும் நற்கதியையே அடைந்ததாக யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, புழு நிலையைக் கைவிட்டு பெருஞ்சக்தியைக் கொண்ட க்ஷத்திரியனாகப் பிறந்த மனிதன், தன் முந்தைய வடிவ மாற்றங்களை நினைவு கூர்ந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(1) அறம் மற்றும் செல்வத்தை நன்கறிந்த க்ஷத்திரியன் செய்த கடுந்தவங்களைக் கண்டவரும், தீவில் பிறந்தவரும், பிராமணர்களில் முதன்மையானவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் சென்றார்.(2)
வியாசர், "ஓ! புழுவே, க்ஷத்திரிய வகைக்கான தவம் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதாகும். க்ஷத்திரிய வகையின் இந்தக் கடமைகளையே உனக்கு விதிக்கப்பட்ட தவமாக நீ கருதுவாயாக. அதன்பிறகு நீ பிராமண நிலையை அடைவாய்.(3) எது சரி, எது தவறு என்பதை உறுதி செய்து, உன் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டு, அனைத்து உயிரினங்களையும் முறையாகப் பேணி வளர்த்துப் பாதுகாத்து, நல்ல ஆசைகள் அனைத்தையும் நியாயமாக நிறைவேற்றி, புனிதமற்ற அனைத்தையும் திருத்துவாயாக.(4) தூய்மையடைந்த ஆன்மாவாகவும், மனநிறைவுள்ளவனாகவும் இருந்து கொண்டு அறப் பயிற்சியில் அர்ப்பணிப்புடன் இருப்பாயாக. இவ்வழியில் உன் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் நீ உன் உயிர் மூச்சை விடும்போது ஒரு பிராமணனாவாய்" என்றார்".(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, அவன் காடுகளுக்குச் சென்று ஓய்ந்திருந்தாலும், பெரும் முனிவரின் சொற்களைக் கேட்ட பிறகு தன் குடிமக்களை அறம்சார்ந்து பேணி வளர்க்கவும், பாதுகாக்கவும் தொடங்கினான்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பிறகு அந்தப் புழுவானவன், தன் குடிமக்களைப் பாதுகாத்தக் கடமையின் விளைவாக க்ஷத்திரிய உடலைக் கைவிட்டு ஒரு பிராமணனானான்.(7) அவன் பிராமணனானதைக் கண்டவரும், கொண்டாடப்பட்ட முனிவரும், பெரும் ஞானம் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்} அவனிடம் வந்தார்.(8)
வியாசர் {புழுவானவனிடம்}, "ஓ! பிராமணர்களின் தலைவா, ஓ! அருளப்பட்டவனே, (மரணத்தில் உள்ள அச்சத்தால்) வருந்தாதே. அறம்சார்ந்து செயல்படுபவன் மதிப்புமிக்கப் பிறவியை அடைகிறான். மறுபுறம் நியாயமில்லாமல் செயல்படுபவன் தாழ்ந்த மற்றும் இழிந்த பிறவியை அடைகிறான். ஓ! அறமறிந்தவனே, ஒருவன் செய்யும் பாவத்தின் அளவுக்குத் தகுந்த துன்பத்தையே ஒருவன் அடைகிறான்.(9) எனவே, ஓ! புழுவானவனே, மரணத்தில் உள்ள அச்சத்தினால் வருந்தாதே. அறம் இழப்பு குறித்தது மட்டுமே நீ அஞ்ச வேண்டிய ஒன்றாகும். எனவே நீ அறம் பயில்வதைத் தொடர்வாயாக" என்றார்.(10)
புழுவானவன் {வியாசரிடம்}, "ஓ! புனிதமானவரே, உமது அருளால் நான் மகிழ்ச்சிக்கு மேலான இன்பநிலைகளை அடைந்தேன். அறத்தில் தன் வேர்களைக் கொண்ட செழிப்பை நான் அடைந்திருப்பதால் என் பாவங்கள் ஒழிந்து விட்டதாக நினைக்கிறேன்" என்றான்".(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தப் புனித முனிவரின் ஆணையின் பேரில் அடைதற்கரிய பிராமண நிலையை அடைந்த அந்தப் புழுவானவன், ஆயிரம் வேள்வித்தூண்களால் {யாகஸ்தம்பங்களால்} பூமியில் சுவடுகளை உண்டாக்கினான்(12) பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன், பிரம்மலோகத்திலேயே தன் வசிப்பிடத்தை அடைந்தான். உண்மையில், ஓ! பிருதையின் மகனே, அந்தப் புழுவானவன், வியாசரின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் செயல்களின் விளைவால் உயர்ந்த நிலையான நித்திய பிரம்மத்தையே அடைந்தான்.(13) சக்தியுடன் முயன்று, (குருக்ஷேத்திரக் களத்தில்) தங்கள் உயிர்மூச்சுகளை விட்ட க்ஷத்திரியக் காளைகள் அனைவரும் பலன்மிக்க {புண்ணியமான} கதிகளையே அடைந்தனர். எனவே, ஓ! மன்னா, நீ அவர்களுக்காக வருந்தாதே" என்றார் {பீஷ்மர்}.(14)
அநுசாஸனபர்வம் பகுதி – 119ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |