The Excellence of gifts! | Anusasana-Parva-Section-120 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 120)
பதிவின் சுருக்கம் : ஞானம், தவம், தானம் ஆகியவற்றின் சிறப்பைக் குறித்து மைத்ரேயருக்கும் வியாசருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஞானம், தவங்கள் மற்றும் கொடைகள் என்ற மூன்றில் எது மேன்மையானது? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, இதை எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக மைத்ரேயருக்கும், தீவில் பிறந்தவரான கிருஷ்ணருக்கும் {வியாசருக்கும்} இடையில் நடந்த உரையால் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! மன்னா, ஒரு காலத்தில் தீவில் பிறந்தவரான கிருஷ்ணன் {வியாசர்}, யாருக்கும் தெரியாமல் உலகில் திரிந்து கொண்டிருந்த போது, வாராணசிக்கு {காசிக்குச்} சென்று முனிவர்களின் குலத்தில் பிறந்தவரான மைத்ரேயரிடம் பணி செய்தார்.(3) முனிவர்களில் முதன்மையான மைத்ரேயர், வியாசர் வருவதைக் கண்டு, அவரை முறையான சடங்குகளுடன் வழிபட்டபிறகு, அவருக்கு ஓர் இருக்கையை அளித்து, சிறந்த உணவையும் அவருக்கு உண்ணக் கொடுத்தார்.(4) உயர் ஆன்மக் கிருஷ்ணர் {வியாசர்}, உடலுக்கு நலந்தருவதும், அனைத்து வகை நிறைவையும் உண்டாக்குவதுமான அந்த நல்ல உணவை உண்ட பிறகு அங்கே அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக உரக்கச் சிரித்தார்.(5)
கிருஷ்ணர் {வியாசர்} சிரிப்பதைக் கண்ட மைத்ரேயர், "ஓ! அற ஆன்மாவே, உமது சிரிப்புக்கான காரணம் என்ன? நீர் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய தவசியாவீர். நீர் பெருமகிழ்ச்சியில் இருப்பவராகத் தெரிகிறீர்.(6) உம்மைத் தலைவணங்கி வழிபட்டுக் கேட்கிறேன் என் தவ வலிமை என்ன? உமது உயர்ந்த அருள் என்ன?(7) நான் செய்யும் செயல்கள் நீர் செய்வதில் இருந்து வேறுபட்டனவாகும். நீர் உயிர் மூச்சைக் கொண்டிருந்தாலும் ஏற்கனவே முக்தியடைந்தவராவீர். எனினும், நான் இன்னும் விடுதலை அடையவில்லை. இவ்வளவு இருந்தாலும் எனக்கும் உமக்கும் பெரும் வேறுபாடு இல்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் பிறப்பாலும் வேறுபடுகிறேன்" என்றார்[1].(8)
[1] இங்கே சொல்லப்படும் பிருதக ஆத்மன் என்பது உபாதிகளுடன் கூடிய ஆத்மா கொண்டவரைக் குறிக்கும். சுகாத்மன் என்பது உபாதிகள் அனைத்தையும் கடந்த ஆத்மா கொண்டவரைக் குறிக்கும். கும்பகோணம் பதிப்பில், "உமக்குத் தவப் பாக்யமும், எனக்குச் சுகபாக்யமுமிருக்கின்றன. ஐயா, மஹானுபாவரே, தவச் செல்வத்திற்கும், ஸுகத்தைத் தரும் பொருட்செல்வத்திற்கும் தனித்தனிச் செய்கைகளிருக்கின்றன. தனித்தனி நடைத்தைகளாகிய இவ்விரண்டிற்குமுள்ள வித்தியாஸம் சிறிதென்று நான் நினைக்கிறேன். தவச்செல்வம் எல்லா நன்மைகளையும் சேர்ப்பதனால் சிறந்ததென்றும் நினைக்கிறேன்" என்றிருக்கிறது.
வியாசர் {மைத்ரேயரிடம்}, "என்னை நிறைத்திருக்கும் இந்த ஆச்சரியம், மிகைப்படச் சொல்வது போலத் தெரியும் ஒரு விதியில் இருந்தும், மக்கள் புரிந்து கொள்ளும் முரண்பட்ட கூற்றிலிருந்தும் எழுகிறது. வேதங்களின் அறிக்கை உண்மையில்லை என்பது போலத் தெரிகிறது. ஆனால் வேதங்கள் ஏன் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்?[2](9) மனிதனுக்கான சிறந்த நோன்புகளாக அமையும் மூன்று தடங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஒருவன் ஒருபோதும் தீங்கிழைக்கக்கூடாது; அவன் எப்போதும் வாய்மையே பேச வேண்டும்; அவன் கொடையளிக்க வேண்டும்.(10) வேத அறிவிப்புகளைப் பின்பற்றிப் பழங்காலத்து முனிவர்கள் இதை அறிவித்தனர். பழங்காலத்தில் இருந்தது போலவே இந்தத் தடையாணைகளைக் கேட்டு நம் காலத்திலும் அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும்.(11) விதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் செய்யப்படும் சிறு கொடையும் பெரும் கனிகளை விளைவிக்கும். தாகம் நிறைந்த மனிதனுக்கு நேர்மையான இதயத்துடன் நீ சிறிதளவு நீரைக் கொடுத்திருக்கிறாய்.(12) ஓ! பலமிக்கவனே, தாகத்திலும், பசியிலும் இருந்த நீ இத்தகைய உணவை எனக்குக் கொடுத்ததன் மூலம் பல வேள்விகளைச் செய்த ஒருவனைப் போல உயர்ந்த இன்ப லோகங்களை வென்றிருக்கிறாய்.(13) உனது புனிதக் கொடையாலும், உனது தவங்களாலும் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அறமே உனது பலம். அறமே உனது தோற்றம்.(14) அறமே நீ வெளியிடும் நறுமணமாக இருக்கிறது. உனது செயல்கள் அனைத்தும் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன். ஓ! மகனே, கொடையானது, புனித நீர்நிலைகளில் தூய்மைச் சடங்குகளைச் செய்வதையும், அனைத்து வேத நோன்புகளை நிறைவேற்றுவதையும் விட மேன்மையானதாகும்.(15)
[2] "கைநிறைய நீரைக் கொடையடிப்பதால் கூட ஒருவன் நூறு வேள்விகள் செய்தவன் அடையும் இடத்தை அடைந்துவிடலாம் என்று சொல்லப்படுகிறது. மிகைப்படச் சொல்லப்படுவது போலத் தெரியும் இந்த விதியும், அதற்கு முரணாகத் தெரியும் வேத ஆசிரியர்களின் கூற்றுகளும் என்னை ஆச்சரியத்தால் நிறைக்கின்றன. வேதங்கள் நூறு வேள்விகளைச் செய்யாமல் அத்தகைய இடத்தை ஒருவனால் அடைய முடியாது என்று சொல்கின்றன. மக்கள் தகுந்த மனிதர்களுக்கு உரிய நேரங்களில் அளிக்கும் சிறிய கொடைகளாலும் அதை அடைகின்றனர் என்பதால் இது பொய்யாகத் தெரிகிறது எனப் பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பொருளை மிகுதியாகச் செலவழித்ததனாலும், மிகுதியாக இன்சொற்சொன்னதனாலும் எனக்கு நகையுண்டாயிற்று. வேத வாக்கியம் பொய்யாமா? வேதம் ஏன் பொய் சொல்லும்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
உண்மையில், ஓ! பிராமணா {மைத்ரேயா}, கொடையானது, புனிதச் செயல்கள் அனைத்திலும் மங்கலமிக்கதாகும். அனைத்துப் புனிதச் செயல்களையும் விட அது பலன்மிக்கதாக இல்லாதிருந்தால், அதன் மேன்மை குறித்த கேள்வியே இருந்திருக்க முடியாது.(16) நீ மெச்சும் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தும் கொடைக்கருகில் நிற்காது. கொடையானது ஐயமில்லாமல் உயர்ந்த பலன் நிறைந்தது என நான் கருதுகிறேன்.(17) கொடையளிக்கும் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பாதையே ஞானிகள் நடக்கும் பாதையாக இருக்கிறது. கொடையளிப்பவர்கள் உயிர்மூச்சையே கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அறமாக அமையும் கடமைகள் அவற்றிலேயே {கொடைகளிலேயே} நிறுவப்பட்டுள்ளன.(18) வேதங்களை நன்கு கற்பதும், புலன்களை அடக்குவதும், அண்டந்தழுவிய துறவறம் கொள்வதும் போலவே கொடையும் மிக மேன்மையான பலனைக் கொண்டதாகும்.(19) ஓ! மகனே, கொடையளிக்கும் கடமையை நீ செய்ததன் விளைவால் மகிழ்ச்சியில் இருந்து பெரும் மகிழ்ச்சியை அடைவாய். (இந்தக் கடமையைப் பயிலும்) புத்தியுள்ள மனிதன் நிச்சயம் மகிழ்ச்சியில் இருந்து உயர்ந்து பெரும் மகிழ்ச்சியை அடைவான்.(20)
நாம் இது போன்ற நேரடி நிகழ்வுகள் பலவற்றைச் சந்தித்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. செழிப்புடன் கூடிய மனிதர்கள் செல்வத்தை அடைவதிலும், கொடைகளை அளிப்பதிலும், வேள்விகளைச் செய்வதிலும் அதன் மூலம் விளையும் மகிழ்ச்சியை ஈட்டுவதிலும் வெல்கின்றனர்.(21) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இன்பத்தைத் தொடர்ந்து துன்பமும், துன்பத்தைத் தொடர்ந்து இன்பமும் இயற்கையாக நடைபெறுவதே எப்போதும் காணப்படுகிறது[3].(22) ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் மனிதர்களுக்கு மூன்றுவகை ஒழுக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கின்றனர். சிலர் அறவோராகவும்; சிலர் பாவம் நிறைந்தவர்களாகவும்; சிலர் அறவோராகவும் அல்லாமல், பாவிகளாகவும் அல்லாமல் இருக்கின்றனர்.(23) பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள மனிதனின் ஒழுக்கம் இரண்டாகவும் கருதப்படுவதில்லை. அவனது பாவங்கள் பாவங்களாகவே கருதப்படுவதில்லை. தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதனும் (அந்தக் கடமைகளை நோற்பதால்) அறவோனாகவோ, பாவியாகவோ கருதப்படுவதில்லை.(24)
[3] "உடல் சார்ந்த இன்பங்களில் ஈடுபடுபவர்கள் இறுதியாகத் துன்பத்தை அடைகின்றனர். கடுந்தவங்களைப் பயில்பவர்கள் தங்கள் வெகுமதியாக இன்பத்தைச் சந்திக்கின்றனர் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேள்விகள், கொடைகள், தவங்கள் ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களே அறவோராகக் கருதப்படுகின்றனர். எனினும், இவர்களில் பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பவர்களும், அவற்றுடன் நட்பற்றவர்களும் பாவிகளாகவே கருதப்படுகின்றனர்.(25) சில மனிதர்கள் பிறர் உடைமைகளை அபகரிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் நரகில் விழுந்து, துன்பத்தைச் சந்திப்பார்கள். ஈடுபாடில்லாமல் {அக்கறையில்லாமல்} மனிதர்கள் செய்யும் பிற செயல்கள் அனைத்தும் அறமாகவோ, பாவமாகவோ கருதப்படுவதில்லை.(26) நீ விளையாடுவாயாக, வளர்வாயாக, உற்சாகமாயிருப்பாயாக, கொடையளிப்பாயாக, வேள்விகளைச் செய்வாயாக. ஞானிகளோ, தவசிகளோ உன்னைவிடச் சிறந்தவராகமாட்டார்" என்றார் {வியாசர்}.(27)
அநுசாஸனபர்வம் பகுதி – 120ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |