The merit acquired by taker! | Anusasana-Parva-Section-121 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 121)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் பெருமை; தகாதோருக்குக் கொடுக்கப்படும் உணவுக் கொடை கொடுத்தவனையும், பெறுபவனையும், உணவையும் கெடுப்பது ஆகியவற்றை வியாசருக்குச் சொன்ன மைத்ரேயர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், செயல்களை வழிபடுபவரும், பெருஞ்செழிப்புடைய குலத்தில் பிறந்தவரும், பெருங்கல்வி கொண்டவரும், ஞானியுமான மைத்ரேயர் இந்தச் சொற்களை அவரிடம் சொன்னார்.(1)
மைத்ரேயர் {வியாசரிடம்}, "ஓ! பெரும் ஞானியே, நீர் சொன்னதில் எந்த ஐயமுமில்லை. ஓ! பலமிக்கவரே, உமது அனுமதியுடன் நான் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.(2)
வியாசர் {மைத்ரேயரிடம்}, "ஓ! மைத்ரேயா, ஓ! பெரும் ஞானியே, நீ என்ன சொல்ல வேண்டுமோ, என்ன வழியில் சொல்ல வேண்டுமோ அதைச் சொல், நான் அதைக் கேட்க விரும்புகிறேன்" என்றார்.(3)
மைத்ரேயர் {வியாசரிடம்}, "கொடை குறித்து நீர் சொன்ன சொற்கள் குற்றமில்லாதவையும், தூய்மையுடையவையுமாகும். உமது ஆன்மா ஞானத்தாலும், தவத்தாலும் தூய்மையடைந்தது என்பதில் ஐயமில்லை.(4) உமது ஆன்மா தூய்மை அடைந்ததன் விளைவால் நான் அறுவடை செய்யும் பெரும் நன்மை இதுவே. என் புத்தியின் துணையால் உயர்ந்த தவங்களுடன் கூடியவராகவே நான் உம்மைக் காண்கிறேன்.(5) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் உம்மைப் போன்ற மனிதர்களைக் காண்பதன் மூலம் மட்டுமே செழிப்பை அடைகிறோம். உமது அருளாலும், நான் செய்த செயல்களின் இயல்பாலும் அது {செழிப்பு} உண்டாகிறது என்று நான் நினைக்கிறேன்.(6) தவங்கள், வேதஞானம், தூய குலத்தில் பிறப்பு ஆகிய காரணங்களாலேயே ஒருவன் பிராமணனாகிறான். ஒருவன் இந்த மூன்று குணங்களையும் வெளிப்படுத்தும்போதே அவன் மறுபிறப்பாளனாக அழைக்கப்படுகிறான்.(7)
பிராமணர்கள் நிறைவடைந்தால், பித்ருக்களும், தேவர்களும் நிறைவடைகின்றனர். வேதமறிந்த பிராமணனை விட உயர்ந்தது வேறேதும் இல்லை.(8) பிராமணன் இல்லாவிட்டால் மொத்தமும் இருளாகவே இருக்கும். எதையும் அறிய முடியாது. நான்கு வகையும் {வர்ணங்களும்} நீடித்திருக்காது. அறம் மறம், வாய்மை பொய்மை, ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு மறைந்து போகும்.(9) நன்கு உழப்பட்ட நிலத்தை {பண்பட்ட நிலத்தை} மனிதர்கள் காணும்போது அவர்கள் அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். அதேபோல, பெருங்கல்வி படைத்த பிராமணனுக்குக் கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் பெரும்பலனை அறுவடை செய்கிறான்.(10) கொடைகளை ஏற்க வேத அறிவும், நல்லொழுக்கமும் கொண்ட பிராமணன் இல்லாவிட்டால் செல்வந்தர்கள் கொண்ட செல்வத்திற்குப் பயனேதும் இல்லை.(11)
அறியாமை கொண்ட பிராமணன், தனக்கு அளிக்கப்பட்ட உணவை உண்பதன் மூலம், (கொடுத்தவனுக்கு எந்தப் பலனையும் உண்டாக்காததால்) தான் உண்டதை அழிக்கிறான். உண்ணப்பட்ட உணவானது (உண்பவன் தனக்கு அளிக்கப்பட்டதை உண்டதன் மூலம் பாவத்தை ஈட்டுவதால்) உண்டவனை அழிக்கிறது. தகுந்த மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதே உண்ணத்தகுந்தது என்று முறையாக அழைக்கப்படும், மற்ற வழக்குகள் அனைத்திலும், அதைப் பெறுபவன் கொடையாளியின் கொடையைக் கெடுத்து, முறையில்லாமல் உண்பதன் மூலம் தானே அழிவையும் அடைகிறான்[1].(12)
[1] கும்பகோணம் பதிப்பில், "இப்படியே ஞானமில்லாதவன் அன்னத்தைக் கெடுக்கிறான். அந்த அன்னமும் ஞானமில்லாதவனைக் கெடுக்கிறது. தெரியாதவன் எந்த அன்னத்தைப் புஜித்துக் கெடுக்கிறானோ அந்த அன்னம் மற்றொருவனாகிய அன்னம் போடுகிறவனையும் கெடுக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அறியாமை கொண்ட பிராமணன் உண்ணும்போது அவன் தான் உண்ணும் உணவையும் அழிக்கிறான், அதைக் கொடுத்த கொடையாளியையும் அழிக்கிறான். அத்தகைய அறியாமை கொண்டவன், உணவையும் அழிக்கிறான். உண்பவனையும் அழிக்கிறான்" என்றிருக்கிறது.
கல்விமானான பிராமணன் தான் உண்ணும் உணவை வசப்படுத்துபவன் ஆகிறான் {செரிக்கிறான்}. அதை உண்ட பிறகு அவனே வேறு உணவைத் தோற்றுவிக்கிறான் {உணவைப் பெருகச் செய்கிறான்}. எவனுடைய உணவு, பிள்ளைகளின் பெற்றோர்களை அவர்களை ஈன்றெடுக்க இயன்றவர்களாக்கியதோ அவனே அவர்களுக்குரியவன் {அந்தப் பிள்ளைகளுக்குரியவன்} என்பதால் அறியாமை கொண்டவன் தனக்கு அளிக்கப்படும் உணவை உண்பதன் மூலம் தான் ஈன்றெடுக்கும் பிள்ளைகளிடம் உள்ள தன் உரிமையை இழக்கிறான். அடுத்தவரின் உணவை உண்பவர்கள், அந்த உணவை வெல்லும் பலமற்றவர்களாகும்போது இந்த நுட்பமான களங்கம் ஏற்படுகிறது[2].(13) கொடையளிப்பதன் மூலம் ஒரு கொடையாளி அடையும் பலனானது, உணவை ஏற்பதன் மூலம் அதைப் பெற்றுக் கொள்பவன் அடையும் பலனுக்கு ஈடானதாகும். கொடையாளியும், ஏற்பவனும் இணையான அளவில் ஒருவரையொருவர் சாந்தவர்களாக இருக்கிறார்கள். இதையே முனிவர்களும் சொல்லியிருக்கின்றனர்.(14)
[2] கும்பகோணம் பதிப்பில், "வித்வான் அன்னத்தைப் புஜித்தால் அவன் மறுபடியும் அதை விருத்தி செய்யுந்திறமையுள்ளவனென்று சொல்லுகின்றனர். அவனும் அந்த அன்னத்தினால் விருத்தியாகிறான். ஆதலால், இந்த வேறுபாடு நுட்பமானது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கல்விமானான ஒரு தலைவன் உணவைச் செரிக்கிறான் அத்தலைவன் அதை மீண்டும் உற்பத்தி செய்கிறான். கல்வியறிவில்லாத போது அந்த உணவு மீண்டும் உண்டாக்கப்படுவதில்லை. இந்த வேறுபாடு நுட்பமானதாகும்" என்றிருக்கிறது.
வேத அறிவும், ஒழுக்கமும் கொண்ட பிராமணர்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே இருக்கும் மக்கள் கொடைகளின் புனிதக் கனிகளை ஈட்ட இயன்றவர்களாகவும், இம்மையிலும், மறுமையிலும் அவற்றை அனுபவிக்கத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(15) தூய குலத்தில் பிறந்தவர்களும், தவங்களில் பேரர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், கொடையளிப்பவர்களும், வேதங்கற்பவர்களுமான மனிதர்கள் பெரும் மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.(16) அந்த நல்லோரே ஒருவன் மயங்காமல் நடக்கக்கூடிய பாதையை அமைத்தவர்கள் ஆவர். அந்த மனிதர்களே பிறரைச் சொர்க்கத்திற்கு வழிநடத்தக்கூடியவர்களாவர். வேள்விச் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு நித்தியமாக வாழ்ந்து வருபவர்கள் அம்மனிதர்களே" என்றார் {மைத்ரேயர்}".(17)
அநுசாஸனபர்வம் பகுதி – 121ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |