The specialty of penance! | Anusasana-Parva-Section-122 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 122)
பதிவின் சுருக்கம் : தவத்தின் சிறப்பு மற்றும் இல்லறக் கடமைகளை நோற்பதன் அவசியம் ஆகியவற்றை மைத்ரேயருக்குச் சொன்ன வியாசர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்தப் புனிதமானவர் {வியாசர்}, மைத்ரேயருக்குப் பதிலளிக்கும் வகையில், "நீ ஞானத்துடன் இருப்பது நற்பேறே. உன் புத்தி இவ்வகையில் இருப்பதும் நற்பேறே.(1) நல்லோர் எப்போதும் அறம் சார்ந்த குணங்கள் அனைத்தையும் உயர்வாகவே மெச்சுகின்றனர். தனிப்பட்ட அழகு, இளமை மற்றும் செழிப்பு ஆகியவை உன் நற்பேறின் காரணமாகவே உன்னை மூழ்கடிக்காமல் இருக்கின்றன.(2) தேவர்கள் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக இதை உனக்குச் செய்திருக்கின்றனர். கொடையை விட (திறனில்) மேன்மையானதைக் குறித்து உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இருக்கும் சாத்திரங்கள் மற்றும் அறம் சார்ந்த உடன்படிக்கைகள் எதுவும், உலகில் காணப்படும் (அற) நாட்டங்கள் எதுவும் வேதங்களின் வழிகாட்டலுக்கு இணங்க முறையான வரிசைப்படி உண்டாகின்றன.(4)
அவற்றைப் பின்பற்றியே நான் கொடையை {தானத்தை} மெச்சுகிறேன். நீயோ தவங்களையும், வேத ஞானத்தையும் புகழ்கிறாய். தவங்கள் புனிதமானவையே. ஒருவன் வேதங்களையும், சொர்க்கத்தையும் அடையும் வழிமுறைகளாகத் தவங்கள் இருக்கின்றன.(5) தவம் மற்றும் அறிவின் துணையுடன் ஒருவன் நாம் கேள்விப்பட்டிருக்கும் உயர்ந்த கனிகளை அடைகிறான். தவங்களின் மூலமே ஒருவன் தன் பாவங்களையும், தீமைகள் அனைத்தையும் அழிக்கிறான்.(6) எந்த நோக்கத்துடன் ஒருவன் தவம் செய்தாலும் அவன் தவங்களின் விளைவால் அதற்கான கனியை அடைகிறான் என நாம் கேள்விப்படுகிறோம்.(7) நிறைவேற்றக் கடினமான எதையும், வெல்லக் கடினமான எதையும், அடைவதற்கு அரிதான எதையும், கடப்பதற்கு அரிதான எதையும் தவங்களின் உதவியுடன் அடையலாம். அனைத்திலும் தவங்களே மிக மேன்மையான வலிமையைக் கொண்டிருக்கின்றன.(8)
மது அருந்துபவனோ, பிறரின் உடைமைகளை வலுக்கட்டாயமாக அபகரிப்பவனோ, கருவைக் கொன்ற குற்றவாளியோ, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவனோ எவனும் தவத்தின் உதவியால் அவற்றைக் கடப்பதில் வெல்கிறான். உண்மையில் ஒருவன் தவங்களின் மூலம் இந்தப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(9) ஞானங்கள் அனைத்துடன் கூடிய உண்மையான பார்வையைக் கொண்டவன் ஒருவனும், எவ்வகையைச் சார்ந்த தவசி ஒருவரும் நிகரானவரே. ஒருவன் இவர்கள் இருவரையும் எப்போதும் வணங்க வேண்டும்.(10) வேதங்களையே தங்கள் செல்வமாகக் கொண்ட மனிதர்கள் அனைவரும் வழிபடப்பட வேண்டும். அதே போலத் தவங்களுடன் கூடிய மனிதர்கள் அனைவரும் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களே. கொடையாளிப்பவர்கள் மறுமையில் மகிழ்ச்சியையும், இம்மையில் பெருஞ்செழிப்பையும் அடைகின்றனர்.(11) இவ்வுலகின் அறவோர், உணவுக் கொடை அளிப்பதன் மூலம் இவ்வுலகையும், மேன்மையான இன்ப நிலைகளைக் கொண்ட பிரம்மலோகம் முதலிய பிற உலகங்களையும் அடைகிறான்.(12)
அனைவராலும் துதிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைத் துதிக்கின்றனர். எங்கும் கௌரவிக்கப்படும் மனிதர்களும் கொடையாளிகளைக் கௌரவிக்கின்றனர். கொடையாளி எங்குச் சென்றாலும் புகழப்படுகிறான்.(13) செயல்களைச் செய்பவனும், அவற்றைத் தவிர்ப்பவனும், செய்யும் செயல்களுக்கும், செய்யாதவற்றுக்கும் தகுந்த அளவில் பலனை அடைகிறார்கள். ஒருவன் மேலுலகத்தில் வசித்தாலும், பாதாள லோகத்தில் வசித்தாலும் அவன் எப்போதும் தன் செயல்களுக்குத் தகுந்த இடங்களையே அடைகிறான்.(14) உன்னைப் பொறுத்தவரையில், நீ புத்தி, நற்பிறப்பு, வேத ஞானம் மற்றும் கருணை கொண்டவனாக இருப்பதால் நீ விரும்பும் உணவு மற்றும் பானம் எதையும் நிச்சயம் அடைவாய்.(15) ஓ! மைத்ரேயா, நீ இளைஞனாக இருக்கிறாய். நோன்புகளை நோற்கிறாய். அறத்தில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய். நீ முதலில் இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை என்னிடம் இருந்து அறிந்து கொள்வாயாக.(16)
தான் மணந்து கொண்ட மனைவியிடம் நிறைவாக இருக்கும் கணவனைக் கொண்டதும், தன் கணவனிடம் நிறைவாக உள்ள மனைவியைக் கொண்டதுமான வீட்டில் எல்லா மங்கல விளைவுகளும் உண்டாகும்.(17) உடலில் உள்ள புழுதி நீரால் கழுவப்படுவதைப் போலவே நெருப்பின் காந்தியால் இருள் விலகுவதைப் போலவே, கொடைகள் மற்றும் தவங்களால் பாவம் கழுவப்படுகிறது.(18) ஓ! மைத்ரேயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. இங்கிருந்து அமைதியுடன் செல்வாயாக. நான் சொன்னதை உன் மனத்தில் கொள்வாயாக. அப்போது நீ பலன்கள் பலவற்றை அறுவடை செய்வாய்" என்றார் {வியாசர்}.(19)
அப்போது மைத்ரேயர் சிறப்புமிக்கவரான தமது விருந்தினரை {வியாசரை} வலம் வந்து, அவருக்குத் தலைவணங்கி, தன் கரங்களை மதிப்புடன் கூப்பி, "ஓ! புனிதமானவரே, நீரும் அருளப்பட்டிருப்பீராக" என்றார்".(20)
அநுசாஸனபர்வம் பகுதி – 122ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |