Pre-eminence of gold! | Anusasana-Parva-Section-84 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 84)
பதிவின் சுருக்கம் : தங்கத்தின் தோற்றம்; பொன்தானத்தின் முன்சிறப்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, பலன் நிறைந்த பசுக்கொடை குறித்து எனக்குச் சொன்னீர். கடமைகளை நோற்பவர்களான மன்னர்களின் வழக்கில் அக்கொடை பெரும் பலன்மிக்கதாகும்.(1) கோன்மை {அரசுரிமை} எப்போதும் துன்பம் நிறைந்ததாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அது சுமக்கப்பட இயலாததாகும். பொதுவாகவே மன்னர்கள் மங்கல கதிகளை அடையத் தவறுகிறார்கள்.(2) எனினும், எப்போதும் நிலக்கொடை அளிப்பதன் மூலம் அவர்கள் தங்களை (தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும்) தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறார்கள். ஓ! குரு குலத்தின் இளவரசரே, பல கடமைகளைக் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர்.(3) பழங்காலத்தில் மன்னன் நிருகன் பசுக்கொடையளித்ததையும் எனக்குச் சொன்னீர். பழங்காலத்தில் முனிவர் நாசிகேதர் செய்த செயல்களின் பலன்களையும் எனக்குச் சொன்னீர்.(4)
அனைத்து வேள்விகளிலும், உண்மையில் அனைத்து வகை அறச்செயல்களிலும் நிலத்தையோ, பசுவையோ, பொன்னையோ கொடையளிக்க வேண்டும் என்று வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளில் விதிக்கப்பட்டிருக்கிறது.(5) எனினும், ஸ்ருதிகள் தக்ஷிணைகள் அனைத்திலும் மிக மேன்மையானதும், சிறந்ததும் பொன்னே என்று அறிவிக்கின்றன. ஓ! பாட்டா, இக்காரியம் குறித்து உண்மையில் நீர் சொல்ல விரும்புகிறேன்.(6) பொன் என்றால் என்ன? அஃது உண்டானது எவ்வாறு? அஃது எப்போது இருப்புக்கு வந்தது? அதன் சாரம் என்ன? அதற்குத் தலைமை தாங்கும் தேவன் யார்? அதன் கனிகள் {பலன்கள்} என்னென்ன? அனைத்திலும் முதன்மையானதாக அஃது ஏன் கருதப்படுகிறது?(7) ஞானிகள் பொற்கொடையை மெச்சும் காரணம் என்ன? அனைத்து வேள்விகளிலும் பொன்னே சிறந்த தக்ஷிணையாகக் கருதப்படுவதற்கான காரணம் என்ன?(8) நிலம் மற்றும் பசுக்களை விடப் பொன்னே தூய்மையாக்குவதில் மேன்மையானதாக ஏன் கருதப்படுகிறது? உண்மையில் அஃது ஏன் மேன்மையான தக்ஷிணையாகக் கருதப்படுகிறது? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, என்னால் புரிந்து கொள்ள முடிந்த அளவுக்குப் பொன்னின் தோற்றம் தொடர்புடைய சூழ்நிலைகளை விரிவாகச் சொல்கிறேன், குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(10) பெருஞ்சக்தி கொண்ட என் தந்தை சாந்தனு இவ்வுலகை விட்டுச் சென்றபோது, நான் அவரது சிராத்தத்தைச் செய்யக் கங்காத்வாரத்திற்குச் சென்றேன்.(11) அங்கே சென்றதும் என் தந்தையின் சிராத்தத்தைத் தொடங்கினேன். என் தாயான ஜானவி அங்கே வந்து எனக்குப் பேருதவி புரிந்தாள்.(12) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பல தவசிகளை அழைத்து அவர்களை என் முன் அமரச் செய்து, நீர்க்கொடை மற்றும் பிற கொடைகள் உள்ளிட்ட தொடக்கச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினேன்.(13) குவிந்த மனத்துடன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தொடக்கச் சடங்குகள் அனைத்தையும் செய்து ஈமப்பிண்டத்தை முறையாகக் கொடையளிப்பதில் என்னை நிறுவிக் கொண்டேன்.(14) அப்போது, ஓ! மன்னா, தரையைத் துளைத்துக் கொண்டு நான் விரித்து வைத்திருந்த குசப் புற்களின் ஊடாக அங்கதங்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய கரம் எழுவதை நான் கண்டேன்.(15) தரையில் இருந்து எழும் அந்தக் கரத்தைக் கண்ட நான் ஆச்சரியத்தில் நிறைந்தேன். உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் கொடுக்க இருந்த பிண்டத்தை ஏற்பதற்காக என் தந்தையே வந்ததாக நான் எண்ணினேன்.(16)
பிறகு, சாத்திர ஒளியில் சிந்தித்தபோது, யாருடைய சிராத்தம் செய்யப்படுகிறதோ அவருடைய கையில் பிண்டத்தைக் கொடுக்கக்கூடாது என்று வேதங்களில் தோன்றும் விதி எனக்குத் திட நம்பிக்கையை அளித்தது. எவருடைய ஈமச் சடங்குகள் நடைபெறுகிறதோ அம்மனிதரின் கரத்தில் ஈமப் பிண்டத்தை ஒருபோதும் கொடுக்கக்கூடாது என்ற என் மனத்தில் இவ்வாறே ஒரு திடமான நம்பிக்கை எழுந்தது. பித்ருக்கள் பிண்டத்தைப் பெறுவதற்காகக் காணத்தக்க வடிவங்களில் வருவதில்லை. மறுபுறம், அதற்கெனப் பூமியில் விரிக்கப்பட்ட குசப்புற்களிலேயே அதை வைக்க வேண்டுமென விதி சொல்கிறது. என் தந்தையின் இருப்பைக் குறிப்பதாக அமைந்த அந்தக் கரத்தை அலட்சியம் செய்துவிட்டு,(17-19) பிண்டம் அளிக்கும் முறையைக் குறித்த சாத்திர அதிகாரத்தைச் சார்ந்த உண்மை விதியை நினைவகூர்ந்து, என் முன்னே பரப்பி வைக்கப்படிருந்த குசப்புற்களிலேயே முழுப் பிண்டத்தையும் காணிக்கையிட்டேன்.(20) ஓ! மனிதர்களின் இளவரசே, நான் செய்தது சாத்திர விதிக்கு முற்றிலும் இணக்கமானது என்பதை அறிவாயாக. ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு என் தந்தையின் கரம் எங்கள் பார்வையில் இருந்து மறைந்து போயிற்று.(21)
அவ்விரவு நான் உறங்கிய போது, என் கனவில் பித்ருக்கள் தோன்றினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே} என்னிடம் நிறைவடைந்த அவர்கள், இச்சொற்களில், "நாங்கள் உன்னிடம் நிறைவடைந்தோம்.(22) விதியில் பற்றுடன் இருப்பதை நீ இன்று வெளிப்படுத்தினாய். சாத்திர விதிகளில் இருந்து நீ வழுவாததைக் கண்டு நாங்கள் நிறைவடைந்தோம். ஓ! மன்னா, சாத்திர விதிகள் உன்னால் பின்பற்றப்பட்டதால் மேலும் அதிகாரமிக்கவையாகிவிட்டன.(23) இத்தகைய உன் நடத்தையின் மூலம், நீ உன் அதிகாரத்தையும், சாத்திரங்கள், வேத திறன், பித்ருக்கள், முனிவர்கள், பெரும்பாட்டனான பிரம்மன், பெரியோர்களான பிரஜாபதிகள் ஆகியோரின் அதிகாரங்களையும் கௌரவித்துப் பராமரித்திருக்கிறாய். சாத்திரப் பற்றுப் பராமரிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நீ இன்று மிகச் சரியாகச் செயல்பட்டிருக்கிறாய்.(24,25) நீ நிலக்கொடையும், பசுக்கொடையும் அளித்தாய். நீ பொற்கொடையும் அளிப்பாயாக. பொற்கொடை தூய்மைடையச் செய்தவதில் பெரியதாகும். ஓ! கடமைகளை நன்கறிந்தவனே, அத்தகைய உன் செயல்பாடுகளின் மூலம் நாங்களும், உன்னுடைய மூதாதையர் அனைவரும் எங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைவோம் என்பதை அறிவாயாக. அத்தகைய கொடைகள் மூதாதையரிலும், வழித்தோன்றல்களிலும் பத்து தலைமுறையினரை மீட்கின்றன" என்றார்கள். என் கனவில் தோன்றிய என் மூதாதையரால் சொல்லப்பட்ட சொற்கள் இவையே. ஓ! மன்னா, பிறகு விழிப்படைந்த நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன்.(26-28)
உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் பொற்கொடை அளிப்பதில் என் இதயத்தை நிலைநிறுத்தினேன். ஓ! ஏகாதிபதி, இப்போது இந்தப் பழைய வரலாற்றைக் கேட்பாயாக.(29) இது மிகுந்த பாராட்டுக்குரியதும், கேட்பவரின் வாழ்நாள் காலத்தை நீட்டிப்பதும் ஆகும். இது முதலில் ஜமதக்னியின் மகனான ராமருக்கு {பரசுராமருக்கு} உரைக்கப்பட்டது. பழங்காலத்தில் பெருங்கோபத்தில் நிறைந்த ஜமதக்னியின் மகன் ராமர்,(30) பூமியின் பரப்பில் இருந்து இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தார். வீரரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவருமான ராமன், மொத்த பூமியையும் அடக்கிய பிறகு, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் அனைவராலும் புகழப்படுவதும், அனைத்து விருப்பமும் கனியும் நிலையை அருளவல்லதுமான குதிரை வேள்வியைச் செய்தற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.(31,32) அந்த வேள்வியானது அனைத்து உயிரினங்களையும் தூய்மையடையச் செய்து, அதைச் செய்தவரின் சக்தி மற்றும் காந்தியையும் மேம்படுத்துகிறது. பெருஞ்சக்தி கொண்ட ராமர் அந்த வேள்வியைச் செய்ததன் மூலம் பாவமற்றவரானார்.(33) எனினும், அந்த முதன்மையான வேள்வியைச் செய்த உயர் ஆன்ம ராமர் முற்றிலும் மென்மையான இதயத்தை அடையத் தவறினார்.(34) பிருகு குல ராமர், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவர்கள் மற்றும் தேவர்களிடமும் சென்று அவர்களிடம் கேள்வி கேட்டார். பின்னிரக்கம் மற்றும் கருணையால் நிறைந்திருந்த அவர், அவர்களிடம், "உயர்ந்த அருளைக் கொண்டவர்களே, கடுஞ்செயல் புரிந்த மனிதர்களையும் தூய்மையாக்குவது எது என்பதை அறிவிப்பீராக" என்றார்.
இவ்வாறு அவரால் சொல்லப்பட்டவர்களும், வேதங்கள் மற்றும் சாத்திரங்களை முழுமையாக அறிந்தவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் அவரிடம்,(35,36) "வேத அதிகாரங்களால் வழிநடத்தப்பட்டுக் கல்விமான்களான பிராமணர்கள் அனைவரையும் நீ கௌரவிப்பாயாக. சில காலத்திற்கு இவ்வொழுக்கத்தைப் பின்பற்றிய பிறகு, உன்னைத் தூய்மை செய்து கொள்வதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை மறுபிறப்பாள முனிவர்களிடம் மீண்டும் கேட்பாயாக.(37) அந்தப் பெரும் ஞானிகள் உனக்குத் தரும் ஆலோசனையைப் பின்பற்றுவாயாக" என்றனர்.
பிறகு, பெருஞ்சக்தி கொண்டவரும், பிருகுக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் {பரசுராமர்}, வசிஷ்டர், அகஸ்தியர், கசியபர் ஆகியோரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்கும் வகையில், "பிராமணர்களில் முதன்மையானோரே, என் இதயத்தில் எழும் விருப்பம் இதுவே. உண்மையில் என்னைத் தூய்மை செய்து கொளவதில் வெல்வது எவ்வாறு?(38,39) எந்தச் செயல்கள் மற்றும் சடங்குகளின் மூலம் இதைச் செய்யலாம்? அல்லது கொடையின் மூலம் எட்டப்படும் என்றால், என்னுடைய இவ்விருப்பம் நிறைவேற எப்பொருள் கொடையளிக்கப்பட வேண்டும்? அறவோரில் முதன்மையானோரே, தவத்தையே செல்வமாகக் கொண்ட நீங்கள் எனக்கு உதவ விரும்பினால் என்னைத் தூய்மை செய்து கொள்வதில் நான் வெல்வது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக" என்றார்.(40)
முனிவர்கள், "ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, பாவம் செய்த மனிதன் பசு, நிலம் மற்றும் செல்வத்தைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைகிறான். இதையே நாம் கேள்விப்படுகிறோம்.(41) தூய்மையடைவதற்கு பெரிதும் உதவுவதாகக் கருதப்படும் மற்றொரு கொடையும் இருக்கிறது. ஓ! மறுபிறப்பாள முனிவா, நாங்கள் சொல்வதைக் கேட்பாயாக. அப்பொருள் சிறந்ததும், அற்புதத் தன்மை நிறைந்ததும், நெருப்பின் சந்ததியுமாக இருக்கிறது.(42) பழங்காலத்தில் அக்னி தேவன் உலகமனைத்தையும் எரித்தான். அவனது வித்தில் இருந்தே பிரகாச நிறம் படைத்த பொன் உண்டானது என நாம் கேள்விப்படுகிறோம். பொற்கொடை அளிப்பதன் மூலம் உன் விருப்பம் கனியும் நிலையால் நிச்சயம் மகுடம் சூட்டப்படுவாய்" என்றனர்.(43)
அப்போது, கடும் நோன்பைக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான வசிஷ்டர் குறிப்பாக, "ஓ! ராமா {பரசுராமா}, நெருப்பின் காந்தியைக் கொண்ட பொன் முதலில் இருப்பில் உதித்தது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக.(44) அந்தப் பொன்னே உனக்குப் பெரும் பலனை அளிக்கும். கொடையளிக்கப்படுவதில் பொன் மிகவும் மெச்சப்படுகிறது. தங்கம் என்றால் என்ன? அஃது எங்கிருந்து வந்தது? அது மேன்மையான தன்மைகளைப் பெற்றது எவ்வாறு? என்பனவற்றையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(45) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இவை குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக. பொன்னானது நிச்சயம் நெருப்பு மற்றும் சோமனின் சாரமாகும் என்பதை அறிவாயாக.(46)
செம்மறியாடு (அக்னிலோகத்துக்கு வழிவகுப்பதால்) நெருப்பாக (அக்னியாக) இருக்கிறது; வெள்ளாடு (வருணலோகத்துக்கு வழிவகுப்பதால்) வருணனாக இருக்கிறது; குதிரை (சூரியலோகத்துக்கு வழிவகுப்பதால்) சூரியனாக இருக்கிறது; யானைகள் (நாகலோகத்துக்கு வழிவகுப்பதால்) நாகர்களாக இருக்கின்றன; எருமைகள் (அசுரலோகத்துக்கு வழிவகுப்பதால்) அசுரர்களாக இருக்கின்றன;(47) கோழிகளும், பன்றிகளும் (ராட்சசலோகத்துக்கு வழிவகுப்பதால்) ராட்சசர்களாக இருக்கின்றன; ஓ!பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே. பூமி (வேள்வியின் பலனுக்கும், கோலோகத்துக்கும், வருணலோகத்துக்கும், சோமலோகத்துக்கும் வழிவகுப்பதால்) வேள்வியாக, பசுவாக, நீராக, சோமனாக இருக்கின்றன. இதையே ஸ்மிருதிகள் அறிவிக்கின்றன.(48) மொத்த அண்டத்தையும் கடைந்த போது திரளான ஒரு சக்தி கண்டடையப்பட்டது. அந்தச் சக்தியே பொன்னாகும். எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவா, (நான் ஏற்கனவே குறிப்பிட்ட) இந்தப் பொருட்கள் அனைத்துடனும் ஒப்பிடும்போது நிச்சயம் பொன்னே மேன்மையானது. அது விலைமதிப்புமிக்க, உயர்ந்த, சிறந்த பொருளாகும்.(49)
இதன் காரணமாகவே தேவர்களும், கந்தர்வர்களும், உரகர்களும், ராட்சசர்களும், மனிதர்களும் பிசாசங்களும் அதைக் கவனத்துடன் பற்றிக் கொள்கின்றனர்.(50) ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமா}, இவர்கள் அனைவரும் தங்கத்தை மகுடங்களாகவும், தோள்வளைகளாகவும், பலவகை ஆபரணங்களாகவும் மாற்றி அவற்றின் துணையுடனே ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.(51) ஓ! மனிதர்களின் இளவரசே[1], இதன் காரணமாகவே பொன்னானது தூய்மைப்படுத்தும் நிலம், பசு மற்றும் பிற வகைப் பொருட்கள் அனைத்தையும் காட்டிலும் மிகுந்த தூய்மைப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.(52) ஓ! பலமிக்க மன்னா, பொற்கொடையே உயர்ந்த கொடையாகும். அது நிலம், பசு மற்றும் பிற பொருட்களைக் கொடையளிப்பதைக் காட்டிலும் மேலான புகழைத் தருவதாகும்.(53)
[1] இது யுதிஷ்டிரனைக் குறிப்பிடுவதாகும், பரசுராமருக்கு வசிஷ்டர் சொல்வது போலச் சொல்லி வரும்போது, திடீரெனப் பீஷ்மர் நேரடியாகவே யுதிஷ்டிரனிடம் பேசுகிறார் என்று கொள்ளலாம்.
ஓ! தேவப் பிரகாசம் கொண்டவனே, பொன்னானது நித்தியமாகத் தூய்மைப்படுத்தும் பொருளாகும். அதுவே தூய்மைப்படுத்துவனவற்றில் முதன்மையானதாக இருப்பதால் பிராமணர்களில் முதன்மையானோருக்கு நீ அதைக் கொடையளிப்பாயாக.(54) தக்ஷிணைகள் அனைத்திலும் பொன்னே சிறந்ததாகும். பொன்னைக் கொடையளிப்பவர்கள் அனைத்தையும் கொடையளிப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(55) உண்மையில், பொன்னைக் கொடையளிப்பவர்கள் தேவர்களைக் கொடையளிப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அனைத்து தேவர்களும் சேர்ந்தவன் அக்னியாவான், தங்கம் அக்னியையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது.(56) எனவே, தங்கத்தைக் கொடையளிப்பவன் தேவர்கள் அனைவரையும் கொடையளித்தவனாகச் சொல்லப்படுகிறான். எனவே, ஓ! மனிதர்களின் தலைவா, பொற்கொடையைவிட உயர்ந்த கொடை வேறேதும் இல்லை" என்றார் {வசிஷ்டர்}.(57)
வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், "ஓ! மறுபிறப்பாள முனிவா, ஓ! ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனே, தங்கத்தின் முன்சிறப்புகளை மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(58) ஓ! பிருகு குலத்தின் மகனே, நான் இதை முன்பு புராணத்தில் கேட்டிருக்கிறேன். இது பிரஜாபதியின் பேச்சையே பிரதிபலிக்கிறது.(59) ஓ! பிருகு குலத்தின் மகனே, சிறப்புமிக்கவனும், உயர் ஆன்மாவைக் கொண்டவனும், திரிசூலபாணியுமான ருத்திரனுக்கும், அவனது மனைவியான {உமா} தேவிக்கும் முதன்மையான மலையான ஹிமவத்தின் {இமயத்தின்} சாரலில் திருமணம் முடிந்த பிறகு, சிறப்புமிக்கவனும், உயர் ஆன்மா கொண்டவனுமா அந்தத் தேவன் {சிவன்}, தேவியுடன் தன்னைக் கலக்க விரும்பினான்.
கவலை நிறைந்த தேவர்கள் அனைவரும் ருத்திரனை அணுகினார்கள். மஹாதேவனிடமும், வரமளிக்கும் அவனது மனைவியான உமைக்கும் மதிப்புடன் தலைவணங்கி, சேர்ந்து அமர்ந்திருக்கும் அவர்களை நிறைவடையச் செய்த அவர்கள், ஓ! பிருகு குலத்ததைத் தழைக்கச் செய்பவனே, ருத்திரனிடம், "ஓ! சிறப்புமிக்கவனே, ஓ! பாவமற்றவனே, தேவியுடன் நீ கலப்பது என்பது,(60-62) தவங்களுடன் கூடிய ஒருவனுக்கும், தவங்களுடன் கூடிய மற்றொருவருக்கும் இடையே ஏற்படும் கடும் கலவியாகும். உண்மையில், ஓ! தலைவா, இது பெரும் சக்தி கொண்ட ஒருவனுக்கும், அதற்குச் சற்றும் குறையாத சக்தியுடன் கூடிய மற்றொருவருக்கும் இடையில் ஏற்படும் கலவியாகும். ஓ! சிறப்புமிக்கவனே, நீ தடுக்கப்பட முடியாத சக்தியுடன் கூடியவன். உமாதேவியும், தடுக்கப்பட முடியாத சக்தியைக் கொண்டவள்.(63) ஓ! சிறப்புமிக்கத் தேவா, இந்தக் கலவியால் உண்டாகும் சந்ததி நிச்சயம் பெரும்வலிமை கொண்டதாகவே இருக்கும். உண்மையில், ஓ! பலமிக்கத் தலைவா, அந்தச் சந்ததி மூவுலகங்களிலும் எதையும் எஞ்சவிடாமல் அனைத்துப் பொருட்களையும் எரித்துவிடும்.(64)
ஓ! அண்டமனைத்தின் தலைவா, ஓ! பெரிய கண்களைக் கொண்டவனே, மூவுலகங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தில், உன் முன்பு நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் இந்தத் தேவர்களுக்கு ஒரு வரத்தை அருள்வாயாக.(65) ஓ! பலமிக்கவனே, சந்ததிக்குரிய வித்தாகும் இந்த உயர்ந்த சக்தியைக் கட்டுப்படுத்துவாயாக.(66) உண்மையில், இந்தச் சக்தி மூவுலகங்களில் உள்ள சக்திகள் அனைத்தின் சாரமாகும். நீங்கள் இருவரும் கலக்கும் செயலின் மூலம் இந்த அண்டத்தை நிச்சயம் எரிப்பீர்கள்.(67) உங்கள் இருவருக்கும் பிறக்கும் சந்ததி நிச்சயம் தேவர்களைப் பீடிக்க வல்லதாக இருக்கும். ஓ! பலமிக்கவனே, பூமாதேவியோ, ஆகாயமோ, சொர்க்கமோ, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தோகூட உன் சக்தியைத் தாங்க முடியாது என உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.(68,69) ஓ! பலமிக்கவனே, ஓ! சிறப்புமிக்கத் தேவா, நீ எங்களுக்குத் துணைபுரிவதே உனக்குத் தகும். ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உமாதேவியிடம் நீ ஒரு மகனைப் பெறாமல் இருப்பதிலேயே அந்த உதவி அடங்கியிருக்கிறது.(70) எனவே, கடுமையானது, பலமிக்கதுமான உன் சக்தியைப் பொறுமையுடன் தடுப்பாயாக" என்றனர்.
ஓ! மறுபிறப்பாள முனிவா, அப்படிச் சொன்ன தேவர்களிடம், காளை மாட்டைத் தன் சின்னமாகக் கொண்ட மஹாதேவன், "அப்படியே ஆகட்டும்" என்று பதிலளித்தான். இவ்வாறு சொன்னவனும், காளையைத் தன் வாகனமாகக் கொண்டவனுமான அந்தத் தேவன், தன் உயிர் வித்தை மேலிழுத்தான் {மேல்நோக்கச் செய்தான்}.(71,72) அந்தக் காலம் முதலே அவன் (உயிர்வித்தை மேல்நோக்கி இழுத்தவன் என்ற பொருள் கொண்ட) ஊர்த்தவரேதஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறான். எனினும் ருத்திரனின் மனைவி, உற்பத்தியைத் தடுத்த தேவர்களின் முயற்சியால் பெருஞ்சினமடைந்தாள்.(73) எதிர் பாலினமாக இருந்ததன் விளைவால் (கோபத்தைச் சிறிது கட்டுப்படுத்த முடியாதவளாக) அவள் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி, "என் தலைவர் என்னிடம் சந்ததியை உண்டாக்க விரும்பிய போது, அக்காரியத்தில் அவரை நீங்கள் எதிர்த்தீர்கள், அச்செயலின் விளைவால், தேவர்களே நீங்கள் மகனற்றவர்கள் ஆவீர்கள். உண்மையில், என்னிடம் சந்ததி பிறப்பை நீங்கள் எதிர்த்தீர்கள்,(75) எனவே, உங்களுக்குச் சந்ததி உண்டாகாமல் போகட்டும்" என்றாள்.
ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்நேரத்தில் நெருப்பின் தேவன் {அக்னி} அங்கே இல்லை.(76) அந்தத் தேவியுடைய சாபத்தின் விளைவாகவே தேவர்கள் பிள்ளையற்றவர்களானார்கள். அவர்களால் வேண்டப்பட்ட ருத்திரன், ஒப்பற்ற பலத்துடன் கூடிய தன் சக்தியை {வீரியத்தைத்} தானே தாங்கிக் கொண்டான்.(77) எனினும், அதிலொரு சிறு பகுதி அவனுடைய உடலில் இருந்து வெளியேறி பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த அந்த வித்தானது, சுடர்மிக்க நெருப்பில் குதித்து மிக ஆச்சரியகரமாக (அளவிலும், சக்தியிலும்) வளரத் தொடங்கியது.(78) ருத்திரனின் சக்தி, பெரும்பலமிக்க மற்றொமொரு சக்தியுடன் கலந்து ஒரே சாரமானது {ஒளியில் ஒளி சேர்ந்து ஒன்றாகிவிட்டது}. அதே வேளையில், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரும்,(79) தாரகன் என்ற பெயரைக் கொண்ட அசுரனால் நன்றாக வாட்டப்பட்டனர். ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத்துகள், அசுவினிகள்,(80) சத்யஸ்கள் ஆகியோரனைவரும், அந்தத் திதியின் மகனுடைய ஆற்றலின் விளைவால் மிகவும் பீடிக்கப்பட்டனர். அழகிய தேர்கள் மற்றும் மாட மாளிகைகளுடன் கூடிய தேவலோகங்கள் அனைத்தும்,(81) முனிவர்களின் ஆசிரமங்கள் ஆகியவையும் அசுரர்களால் அபகரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடியவர்களாகப் பலமிக்கவனும், சிறப்புமிக்கவனும், மங்கா மகிமை கொண்டவனுமான பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள்" {என்றார் வசிஷ்டர்}.(82)
அநுசாஸனபர்வம் பகுதி – 84ல் உள்ள சுலோகங்கள் : 82
ஆங்கிலத்தில் | In English |