History of gold! | Anusasana-Parva-Section-85a | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 85)
பதிவின் சுருக்கம் : அக்னியை விரட்டிச் சென்று பிடித்த தேவர்கள்; தேவர்களால் வேண்டப்பட்ட அக்னி; அக்னி கங்கையைக் கருவூட்டியது; அதை மேருமலையின் சாரலில் விட்ட கங்கை; தத்தெடுத்துக் கொண்ட கிருத்திகை தேவி; தங்கமும், கந்தனும் பிறந்த கதை...
தேவர்கள் {பிரம்மனிடம்}, "ஓ! பலமிக்கவரே, உம்மிடம் இருந்து வரங்களைப் பெற்றவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் பீடித்து வருகிறான். அவனுக்கு மரணத்தை விதிப்பீராக.(1) ஓ! பெரும்பாட்டனே, ஓ! சிறப்புமிக்கவரே, அவனிடம் இருந்த எழும் பேரச்சத்திலிருந்து எங்களை மீட்பீராக. உம்மைத் தவிரே வேறு புகலிடம் எங்களுக்குக் கிடையாது" என்றனர்.(2)
பிரம்மன், "நான் அனைத்து உயிரினங்களிடமும் சமமாகவே நடந்து கொள்கிறேன். எனினும், நீதியற்றதை என்னால் ஏற்க இயலாது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் எதிரியான தாரகன் விரைவில் அழிவை அடைவான்.(3) தேவர்களில் முதன்மையானோரே, வேதங்களும், நித்திய கடமைகளும் அடியோடு அழிக்கப்படாது. இக்காரியத்தில் நான் முறையான விதியைச் செய்திருக்கிறேன். உங்கள் இதய நோய் விலகட்டும்" என்றான்.(4)
தேவர்கள் {பிரம்மனிடம்}, "நீர் வரமளித்ததன் விளைவாலும் அந்தத் திதியின் மகன் தன் வலிமையில் செருக்குற்றிருக்கிறான். அவன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். பிறகு எவ்வாறு அவனைக் கொல்ல முடியும்?(5) ஓ! பெரும்பாட்டனே, தேவர்களாலோ, அசுரர்களலோ, ராட்சசர்களாலோ கொல்லப்பட முடியாதவகையில் அவன் உம்மிடம் இருந்து வரம்பெற்றிருக்கிறான்.(6) முற்காலத்தில் செய்த வினையின் விளைவால் தேவர்கள் பெருகாதவாறு ருத்திரனின் மனைவியால் {உமாதேவியால்} சபிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓ! அண்டத்தின் தலைவா, "நீங்கள் சந்ததியைப் பெற மாட்டீர்கள்" என்பதே அவள் விதித்திருக்கும் சாபமாகும்" என்றார்கள்.(7)
பிரம்மன், "தேவர்களில் முதன்மையானோரே, அந்தத் தேவி சபித்தபோது அக்னி அங்கில்லை. அவனே தேவர்களின் எதிரியை அழிக்கும் சந்ததியைப் பெறப் போகிறான்.(8) தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் மற்றும் இறகு படைத்த உயிரினங்கள் அனைத்தையும் கடந்தவனாகவும், ஒரு முறை ஏவினாலே எதிரியைக் கலங்கடிக்கும் ஆயுதமான ஈட்டியுடன் கூடியவனுமான அக்னியின் வாரிசு {ஸ்கந்தன்}, எவனை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அந்தத் தாரகனை அழிப்பான். உண்மையில் உங்கள் எதிரிகள் யாவரும் அவனால் அழிக்கப்படுவார்கள்.(9,10)
ஆசை என்பது அழிவற்றது. காமம் என்ற பெயரில் அறியப்படும் அந்த ஆசையும், அக்னியின் சுடர்மிக்க வடிவில் விழுந்த ருத்திரனுடைய வித்தின் ஒரு பகுதியும் ஒன்றே.(11) வலிமைமிக்கதும், இரண்டாவது அக்னிக்கு ஒப்பானதுமான அந்தச் சக்தியானது, தேவர்களின் எதிரிகளை அழிக்கக்கூடிய ஒரு வாரிசை உண்டாக்குவதற்காக அக்னியால் கங்கையில் விடப்படும்.(12) அக்னி உமையின் சாபத்திற்கு உள்ளாகவில்லை. அந்தச் சாபம் இடப்பட்ட போது வேள்வி ஆகுதிகளை உண்பவன் அங்கே இல்லை.(13) எனவே, நெருப்பின் தேவனை {அக்னி தேவனைத்} தேடுங்கள். அவனை இப்பணியில் நிறுவுங்கள். பாவமற்றவர்களே, தாரகனை அழிக்கு வழிமுறைகளை நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.(14)
சக்தியுடையவர்களின் சாபங்கள், சக்தியுடையவர்களிடம் எந்த விளைவையும் உண்டாக்காமல் தவறிப் போகும். பலமான சக்தியுடன் தொடர்பேற்படும்போது வேறு சக்திகள் பலவீனமடையும்.(15) தவங்களுடன் கூடியோர், அழிவற்றவர்களாக இருப்பவர்களும், வரமளிக்க இயன்றவர்களுமான தேவர்களையே அழிக்கத்தகுந்தவர்களாவர். பழங்காலத்தில் தோன்றிய விருப்பம், அல்லது ஆசை, அல்லது காமம் அனைத்து உயிரினங்களிடமும் அழிவற்றதாக இருக்கிறது.(16) அக்னி அண்டத்தின் தலைவனாவான். அவன் புரிந்து கொள்ளப்படவோ, விளக்கப்படவோ இயலாதவன். விரும்பிய எங்கும் செல்லவல்லவனும், அனைத்திலும் இருப்பவனுமான அவனே அனைத்தையும் படைத்தவனுமாவான். அவன் உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வாழ்கிறான். பெரும்பலம் கொண்ட அவன் {அக்னி} ருத்திரனைவிடவும் மூத்தவனாவான்.(17) பெரும் சக்தியின் திரளாக இருப்பவனும், வேள்வி ஆகுதிகளை உண்பவனுமான அவனைத் தேடுங்கள். அந்தச் சிறப்புமிக்கத் தேவன் உங்கள் இதயங்களில் உள்ள விருப்பத்தை நிறைவேற்றுவான்" என்றான் {பிரம்மன்}.(18)
பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மத் தேவர்கள், தங்கள் நோக்கம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதன் விளைவால் உற்சாகமிக்க இதயங்களுடன் நெருப்பின் தேவனை {அக்னிதேவனைத்} தேடிச் சென்றனர்.(19) தேவர்களும், முனிவர்களும், மூவுலகங்களின் ஒவ்வொரு பகுதிக்கும் அக்னியை நினைத்துக் கொண்டே அவனைக் காண விரும்பி தேடிச் சென்றனர்.(20) ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே {பரசுராமா}, தவமும், செழிப்பும் உடைவயர்களும், உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான அந்த உயர் ஆன்மாக்கள் {தேவர்கள்} அனைவரும் அண்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றனர்.(21) எனினும், வேள்வி ஆகுதிகளை உண்பவன் {அக்னி} தனக்குள்ளேயே தன்னை மறைத்துக் கொண்டதால் அவர்களால் அவனைக் காண முடியவில்லை. அந்த நேரத்தில், நீரில் வாழும் ஒரு தவளையானது, அக்னியின் சக்தி சுட்டதன் விளைவால் பாதாள லோகத்தின் ஆழத்தில் இருந்து உற்சாகமற்ற இதயத்துடன் தரையில் தோன்றியது.(22)
அச்சிறு உயிரினம் {தவளை}, அச்சத்தால் துளைக்கப்பட்டவர்களும், நெருப்பின் தேவனைக் காணும் ஆவலில் உள்ளவர்களுமான அந்தத் தேவர்களிடம்,(23) "தேவர்களே அக்னி இப்போது பாதாள லோகத்தில் வசித்து வருகிறான். அந்தத் தேவனின் சக்தியால் எரிக்கப்பட்டு, அதைத் தாங்கிக் கொள்ள இயலதாவனாகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.(24) தேவர்களே, வேள்வி ஆகுதிகளைத் தாங்கிச் செல்லும் சிறந்தவன் {அக்னி} இப்போது நீருக்கடியில் இருக்கிறான். நாங்கள் அனைவரும் அவனது சக்தியால் எரிக்கப்படுகிறோம்.(25) உங்களுக்கு அவனால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமெனில் அங்கே செல்வீராக. உண்மையில் அங்கே செல்வீராக. எங்களைப் பொறுத்தவரையில், அக்னி மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நாங்கள் இவ்விடத்தைவிட்டுத் தப்பிச் செல்லப் போகிறோம்" என்றது. இவ்வளவையும் சொல்லிவிட்டு அந்தத் தவளை நீருக்குள் குதித்தது.(27)
வேள்வி ஆகுதிகளை உண்பவன் {அக்னி} அந்தத் தவளையின் நயவஞ்சகத்தை அறியவந்தான். அவ்விலங்கிடம் வந்த அவன், அதன் மொத்த {தவளை} இனத்தையும் சபிக்கும் வகையில், "இது முதல் நீங்கள் சுவைப் புலன் இழந்தவர்களாக இருப்பீர்கள்" என்றான்.(28) தவளைகளுக்கு இந்தச் சாபத்தைக் கொடுத்து விட்டு அவன் அந்த இடத்தைவிட்டு அகன்று வேறு இடத்திற்கு வெகு வேகமாகச் சென்றான். உண்மையில் அந்தப் பலமிக்கத் தேவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.(29) ஓ! பிருகுக்களில் சிறந்தவனே, தங்களுக்குச் செய்த தொண்டின் காரணமாகத் தவளைகள் அடைந்த பரிதாப நிலையைக் கண்ட தேவர்கள் அவற்றுக்கு அருள் புரிய விரும்பினார்கள். அது தொடர்பான அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன். ஓ! வலிய கரங்களைக் கொண்ட வீரா, நான் சொல்வதைக் கேட்பாயாக.
தேவர்கள், "அக்னியின் சாபத்தால் நாக்குகளை இழந்து, அதன் காரணமாகச் சுவை உணர்வு இல்லாதிருந்தாலும், பல்வேறு வகை வாக்குகளைச் சொல்ல இயன்றவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.(31) உணவு இல்லாமல், தன்னினைவு இல்லாமல், களைத்து, வற்றிப் போய், உயிரற்ற ஒன்றைப் போலப் பொந்துகளுக்குள் வாழ்ந்தாலும், பூமி உங்கள் அனைவரையும் தாங்கிக் கொள்ளும் {ஆதரிக்கும்}.(32) இரவு நேரத்திலும், அனைத்தும் அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்தாலும் உங்களால் உலவ இயலும்" என்றனர்.
தவளைகளிடம் இதைச் சொன்ன தேவர்கள், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட தேவனைக் கண்டுபிடிக்கப் பூமியின் ஒவ்வொரு பகுதிக்கும் மீண்டும் செல்லத் தொடங்கினர். எனினும், அவர்களது முயற்சிகள் அனைத்திற்கும் பிறகும் அவர்கள் அவனை அடையத் தவறினார்கள்.(33)
அப்போது, ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, சக்ரனின் யானையின் அளவுக்குப் பெரியதும், வலிமைமிக்கதுமான மற்றொரு யானை, தேவர்களிடம், "அக்னி இப்போது அரச மரத்திற்குள் வசித்து வருகிறான்" என்றது.(34)
ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, சினத்தால் தூண்டப்பட்ட அக்னி, யானைகள் அனைத்தையும் சபிக்கும் வகையில், "உங்கள் நாவுகள் தலைகீழாக மாறிப் போகட்டும்" என்றான்.(35)
யானைகளால் சுட்டிக்காட்டப்பட்ட நெருப்பின் தேவன் இவ்வாறே யானைகள் அனைத்தையும் சபித்துவிட்டு, சில காலம் வன்னி மரத்தில் வசித்திருக்கலாம் என்றெண்ணி அதன் இதயத்திற்குள் நுழைந்தான்.(36) ஓ! பலமிக்க வீரா, ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவனே, யானைகளின் பிரதிநிதி ஒன்று செய்த தொண்டில் நிறைவடைந்தவர்களும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான தேவர்கள் யானைகளுக்குக் காட்டிய அருளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(37)
தேவர்கள், "யானைகளே, மாறிப் போன இந்நாவைக் கொண்டே அனைத்தையும் உண்பீர்கள். இந்த நாவுகளைக் கொண்டே தெளிவற்ற உரத்த குரலைக் கொடுக்க இயன்றவையாக இருப்பீர்கள்" என்றனர்.(38)
இவ்வாறு யானைகளுக்கு அருள் வழங்கிய சொர்க்கவாசிகள் மீண்டும் அக்னியைத் தேடிச் சென்றனர். உண்மையில், அரச மரத்தைவிட்டுவெளியே வந்த நெருப்பின் தேவன் வன்னி மரத்தின் இதயத்திற்குள் நுழைந்தான்.(39) அக்னியின் இந்தப் புதிய வசிப்பிடத்தையும் ஒரு கிளி வெளிப்படுத்தியது. தேவர்கள் அந்த இடத்திற்குச் சென்றார்கள். கிளியின் நடத்தையில் சினம் மூண்ட சுடர்மிக்கத் தழல்களின் தேவன் {அக்னி}, மொத்த கிளி இனத்தையும் சபிக்கும் வகையில், "இந்நாள் முதல் நீங்கள் பேசும் சக்தியை இழப்பீர்கள்" என்றான்.(40)
உண்மையில், வேள்வி ஆகுதிகளை உண்பவனால் கிளிகள் அனைத்தின் நாவுகளும் புரட்டப்பட்டன. கிளியால் சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் அக்னியைக் கண்டு, அதன் மீது விதிக்கப்பட்ட சாபத்தையும் கண்ட தேர்கள், அந்தப் பாவப்பட்ட உயிரினத்திடம் கருணை கொண்டு,(41) "நீ கிளியாக இருப்பதன் விளைவால், உன் பேச்சு சக்தி முழுவதையும் இழக்க மாட்டாய். உன் நாவு புரட்டப்பட்டிருந்தாலும், கி என்ற எழுத்துடன் கூடிய பேச்சைக் கொண்டிருப்பாய்.(42) ஒரு குழந்தையையோ, ஒரு முதியவரையோ போன்று உன் பேச்சு இனிமையாகவும், தெளிவில்லாமலும், அற்புதமாகவும் இருக்கும்" என்றனர்.
கிளியிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு, வன்னி மரத்தின் இதயத்திற்குள் இருக்கும் நெருப்பின் தேவனைக் கண்ட தேவர்கள்,(43) அஃதை அறச்சடங்குகள் அனைத்திலும் நெருப்புண்டாக்குவதற்கான புனித விறகாக்கினர். அந்தக் காலத்தில் இருந்துதான் வன்னி மரத்திற்குள் வசிக்கும் வகையில் நெருப்பு காணப்படுகிறது.(44) மனிதர்கள், (வேள்விகளில்) நெருப்புண்டாக்குவத்றகு முறையான வழிமுறையாக வன்னிமரத்தையே கருதுகின்றனர். பாதாள லோகத்தில் உள்ள தண்ணீரும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.(45) ஓ! பிருகு குலத்தவனே, அந்தக் கொதி நீரே, மலையூற்றுகளில் கக்கப்படுகிறது. அக்னி அதில் சில காலம் வசித்ததன் விளைவால் அவனது சக்தியின் மூலம் அவை வெப்பமடைந்தன.(46)
அதே வேளையில் அக்னி, தேவர்களைக் கண்டு வருந்தினான். அவன் தேவர்களிடம், "என்ன காரணத்திற்காக இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டான். தேவர்களும், பெரும் முனிவர்களும் அவனிடம், "நாங்கள் உன்னை ஒரு குறிப்பிட்ட பணியில் நிறுவ விரும்புகிறோம். அதை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(48) அதைச் செய்வதனால் உனக்கும் மிகப் பெரிய நன்மை உண்டாகும்" என்றனர்.(49)
அக்னி, "உங்கள் காரியம் என்ன என்பதை எனக்குச் சொல்லுங்கள். தேவர்களே நான் அதை நிறைவேற்றுவேன். நீங்கள் விரும்பும் எந்தக் காரியத்திலும் நிறுவப்படவே எப்போதும் நான் விரும்புகிறேன். எனவே தயங்காமல் ஆணையிடுவீராக" என்றான்.(50)
தேவர்கள், "பிரம்மனிடம் பெற்ற வரத்தின் விளைவால் செருக்கால் நிறைந்திருப்பவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அசுரன் இருக்கிறான். அவனது சக்தியின் மூலம் அவன் எங்களை ஒடுக்கிப் பீடிக்கிறான். அவனது அழிவை நீ விதிக்க வேண்டும்.(51) ஓ! ஐயா, ஓ! உயர் அருளைக் கொண்ட பாவகா, இந்தத் தேவர்களையும், பிரஜாபதிகளையும், முனிவர்களையும் நீ காப்பாயாக.(52) ஓ! பலமிக்கவனே, ஓ! வேள்வி ஆகுதிகளைச் சுமப்பவனே, அந்த அசுரனிடமுள்ள எங்கள் அச்சங்களை எல்லாம் விலக்கக்கூடியவனும், உன் சக்தியுடன் கூடியவனுமான ஒரு வீர மகனைப் பெறுவாயாக.(53) நாங்கள் பெருந்தேவியான உமையால் சபிக்கப்பட்டிருக்கிறோம். உன் சக்தியைவிட எங்களுக்குப் புகலிடம் வேறேதும் இல்லை. எனவே, ஓ! பலமிக்கத் தேவா, எங்கள் அனைவரையும் நீ காப்பாயாக" என்றனர்.(54) இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறப்புமிக்கவரும், வேள்வி ஆகுதிகளைச் சுமப்பதில் தடுக்கப்பட முடியாதவனுமான அவன்{அக்னி}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பாகீரதி என்ற வேறு பெயரால் அழைக்கப்படும் கங்கைக்குச் சென்றான்.(55)
அக்னியானவன், அவளோடு (ஆன்மக்) கலவி புரிந்து, அவளைக் கருவுறச் செய்தான். உண்மையில் (விறகும் ஊட்டப்பட்டு, காற்றின் துணையும் இருக்கும் போது) அக்னி வளர்வதைப் போலவே அக்னியின் வித்தும் கங்கையின் கருவறைக்குள் வளரத் தொடங்கியது.(56) அந்தத் தேவனின் சக்தியால் கங்கையின் இதயம் மிகவும் கலக்கமடைந்தது. உண்மையில், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் பெரும் துன்பத்தை அனுபவித்தாள்.(57) சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட தேவன், பெருஞ்சக்தி கொண்ட தன் வித்தைக் கங்கையின் கருவறைக்குள் விடும்போது, ஒரு குறிப்பிட அசுரன் (தன் சொந்த காரியம் எதற்காகவோ) அச்சுறுத்தும் வகையில் முழக்கமிட்டான்.(58) (அவளை அச்சுறுத்துவதற்காக அல்லாமல்) தன் சொந்த காரியத்திற்காக அந்த அசுரனால் வெளியிடப்பட்ட அச்சுறுத்தும் முழக்கத்தால், மிகவும் கலக்கமடைந்த கங்கையின் கண்கள் அச்சத்தால் உருளத் தொடங்கின, அவளது கலக்கத்தை வெளிப்படுத்தின.(59) தன்னினைவை இழந்த அவள், தன் உடலையும், தன் கருவறைக்குள் உள்ள வித்தையும் தாங்கிக் கொள்ள முடியாதவளானாள். சிறப்புமிக்கத் தேவனின் சக்தியால் கருவூட்டப்பட்டிருத ஜானுவின் மகள் {கங்கை} நடுங்கத் தொடங்கினாள்.(60)
ஓ! கல்விமானான பிராமணா {பரசுராமா}, அவள் தன் கருவறையில் சுமக்கும் வித்தின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சுடர்மிக்க நெருப்பின் தேவனிடம், "ஓ! சிறப்புமிக்கவரே, என்னால் இனியும் உமது வித்தை என் கருவறையில் சுமக்க முடியாது.(61) உண்மையில், உமது வித்தின் மூலம் நான் மிகவும் பலவீனமடைந்திருக்கிறேன். முன்பிருந்த உடல்நலம் இப்போதில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! பாவமற்றவரே, மிகவும் கலக்கமடைந்திருக்கும் எனது இதயம் எனக்குள் இறந்தேவிட்டது.(62) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, இன்னியும் என்னால் உமது வித்தைச் சுமக்க முடியாது. எனக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தின் காரணமாகவே நான் அதை விடப்போகிறேனேயன்றி உறுதியின்மையால் அல்ல.(63) ஓ! சுடர்மிக்கத் தழல்களின் சிறப்புமிக்கத் தேவா, உண்மையில் உமது வித்துடன் என் மேனி தொடர்பில் இல்லை. ஓ! பெருங்காந்தி கொண்டவரே, நமது கலவி, தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக நுட்பமாக நேர்ந்ததே அன்றி, சதைக்காக அல்ல.(64) ஓ! வேள்வி ஆகுதிகளை உண்பவரே, (நான் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட) இந்தச் செயலால் கிட்டும் பலனெதுவும் உம்மையே சேர வேண்டும். உண்மையில், இச்செயலின் அறமோ, மறமோ உம்மையே சாரவேண்டும் என்று நினைக்கிறேன்" என்றாள்.(65)
நெருப்பின் தேவன், அவளிடம், "என் வித்தைச் சுமப்பாயாக. உண்மையில், என் சக்தியுடன் கூடிய கருவைச் சுமப்பாயாக. அது பெரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.(66) நீ மொத்த பூமியையும் தாங்கிக் கொள்ளக் கூடியவளாவாய். இந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ளாததன் மூலம் உனக்கு எதுவும் கிடைக்காது" என்றான்.(67)
நெருப்பின் தேவனாலும், வேறு தேவர்களாலும் அறிவுறுத்தப்பட்டாலும் ஓடைகளில் முதன்மையான அவள் {கங்கை}, மலைகள் அனைத்திலும் முதன்மையான மேருவின் சாரலில் அந்த வித்தை விட்டாள்.(68) (ஏதோ வகையில்) அந்த வித்தைத் தாங்கிக் கொள்ள முடிந்தாலும், (அக்னியும், ருத்திரனும் ஒன்றென்பதால்) ருத்திரனின் சக்தியால் ஒடுக்கப்பட்ட அவளால், எரியும் சக்தியின் விளைவால் அந்த வித்தை அதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(69)
ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பெருந்துன்பத்துக்குப் பிறகு நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தச் சுடர்மிக்க வித்தை அவள் கைவிட்ட பிறகு, அக்னி அவளைக் கண்டு,(70) அந்த ஓடைகளில் முதன்மையானவளிடம், "நீ கைவிட்ட கரு நலமாக இருக்கிறதா? ஓ! தேவி, அஃது எந்த நிறத்தில் இருந்தது? அஃது என்ன வடிவத்தில் தெரிந்தது? அஃது எத்தகைய சக்தியைக் கொண்டிருந்தது? அதைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்றான்.(71)
கங்கை {அக்னியிடம்}, "அந்தக் கரு தங்க நிறத்தில் இருந்தது. ஓ! பாவமற்றவனே, அதன் சக்தியில் உம்மைப் போல இருந்தது. முற்றிலும் களங்கமற்றதாக, சுடர்மிக்கக் காந்தியுடனும், சிறந்த நிறத்துடனும் கூடிய அது மொத்த மலையையே ஒளியூட்டியது.(72) ஓ! தவசிகள் அனைவரிலும் முதன்மையானவரே, அதன் மணம் தாமரைகளும், நெய்தல்களும் உள்ள மடுக்களின் மணம் போலவும், கடப்ப மலர்களின் மணம் போலவும் குளிர்ச்சியாக இருந்தது.(73) சூரியனின் கதிர்களின் மூலம், மலையில் உள்ள பொருட்களும், தாழ்நிலமும் பொன்னாக மாறுவதாகத் தோன்றுவதைப் போலவே அந்தக் கருவைச் சுற்றிலும் இருந்த அனைத்தும் அதன் காந்தியால் தங்கமாக மாறிவிட்டதாகத் தெரிந்தது.(74) உண்மையில், அந்தக் கருவின் காந்தியானது, மலைகளிலும், ஆறுகளிலும், ஊற்றுகளிலும் வெகு தொலைவுக்குப் பரவியிருக்கிறது.(75) உண்மையில், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகங்களும் அதன் மூலம் ஒளியூட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஓ! வேள்வி ஆகுதிகளைச் சுமக்கும் சிறப்புமிக்கவரே, உமது பிள்ளை இவ்வகையிலேயே இருக்கிறான்.(76) சூரியனையோ, சுடர்மிக்க உம்மைப் போன்றோ, அழகில் இரண்டாம் சோமனைப் போன்றோ அவன் இருக்கிறான்" என்றாள் {கங்கை}. இச்சொற்களைச் சொன்ன அந்தத் தேவி அங்கேயே, அப்போதே மறைந்து போனாள்.(77)
ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, பெருஞ்சக்தியைக் கொண்டவனான பாவகனும் {அக்னியும்}, தேவர்களின் காரியத்தை நிறைவேற்றிவிட்டு தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டான்.(78) இச்செயலின் விடைக்கான விளைவாலேயே முனிவர்களும், தேவர்களும், நெருப்பின் தேவனுக்கு ஹிரண்யரேதஸ் என்ற பெயரை அளித்தனர்[1].(79) (கங்கைக் கைவிட்ட பிறகு) அந்த வித்தைப் பூமி தாங்கிய காரணத்தால் அவளும் வசுமதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்.[2] அதேவேளையில், பாவகனிடம் இருந்து பிறந்து, குறிப்பிட்ட காலம் கங்கையால் தாங்கப்பட்டு,(80) நாணற்காட்டில் விழுந்த அந்தக் கருவானது, வளரத் தொடங்கி இறுதியாக ஓர் அற்புத வடிவை அடைந்தது. கிருத்திகை நட்சத்திரத்திற்குத் தலைமை தாங்கும் தேவி எழுஞாயிறுக்கு ஒப்பான அந்த வடிவைக் கண்டாள்.(81) அது முதல் அவள் தன் முலையை உண்ணக் கொடுத்து தன் மகனாகவே அந்தப் பிள்ளையை வளர்க்கத் தொடங்கினாள். இந்தக் காரணத்தினாலேயே சிறந்த காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை அவளது பெயரைக் கொண்டு கார்த்திகேயன் என்று அழைக்கப்படலானான்.(82) ருத்திரனின் உடலில் இருந்து வெளிய விழுந்த வித்தில் இருந்து அவன் வளர்ந்ததால், அவன் ஸ்கந்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். அவனது பிறப்புச் சம்பவம் தனிமையான நாணற்காட்டில் அனைவரின் பார்வைக்கும் மறைவில் நடந்ததால் அவன் குஹன் என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.
[1] "ஹிரண்யரேதஸ் என்றால் தங்கத்தையே உயிர்வித்தாகக் கொண்டது என்று பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "வசுமதி என்றால் செல்வத்துடன் கூடியவள் என்ற பொருளைத் தரும். தங்கமாக இனங்காணப்படுவதும், பூமியில் விழுந்ததும் தாங்கிக் கொள்ளப்பட்டதுமான அக்னியின் வித்து, உயர்ந்த வகைச் செல்வமாகக் கருதப்படும் காரணத்தால் பூமி வசுமதி என்று அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வழியிலேயே சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய வாரிசாகவே தங்கம் இருப்புக்கு வந்தது[3].(83) எனவே அந்தத் தங்கமே பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகக் காணப்பட்டு, தேவர்களின் ஆபரணங்களானது. இந்தச் சூழ்நிலையில் இருந்து அந்தத் தங்கம், ஜாதரூபம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது[4].(84) விலைமதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகவும், ஆபரணங்களுக்கு மத்தியில் முதன்மையானதாகவும் அது {தங்கம்} இருக்கிறது. தூய்மைப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் அதிகத் தூய்மைப்படுத்துவதும், மங்கலப் பொருட்கள் அனைத்திலும் அதிக மங்கலமானதாகவும் அஃது இருக்கிறது. தங்கமானது, அனைத்தின் தலைவனும், பிரஜாபமதிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அக்னியே ஆகும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, புனிதப் பொருட்கள் அனைத்திலும் அதிகப் புனிதம் வாய்ந்தது தங்கமே. உண்மையில் தங்கமானது, அக்னி மற்றும் சோமனின் சாரத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது" {என்றார் வசிஷ்டர்}.(86)
[3] "ஸ்கந்தன் எந்தப் பெயர் ஸ்கன்ன அல்லது வெளியே வீழ்ந்த என்ற சொல்லில் இருந்து பெறப்படுகிறது. குஹன் என்பது ரகசியமாகும். காட்டில் ரகசியமாகப் பிறந்ததால் அவனுக்கு இந்தப் பெயர் சூட்டப்படுகிறது. அவன் இன்னும் பல பெயர்களைக் கொண்டவனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "ஜாதரூபம் என்பது, அக்னியிடம் பிறந்த பிறகு ஏற்ற அற்புத வடிவத்தைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 85அ வில் உள்ள சுலோகங்கள் : 86
ஆங்கிலத்தில் | In English |