Brighu, Angiras & Kavi! | Anusasana-Parva-Section-85b | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 85)
பதிவின் சுருக்கம் : பிரம்மனின் வேள்வியில் பிறந்தவர்கள்; மஹாதேவனின் மகனான பிருகு; அக்னியின் மகனான அங்கிரஸ்; பிரம்மனின் மகனான சுக்கிரன்; பிருகு, அங்கிரஸ் மற்றும் சுக்கிர சந்ததிகள்; பொற்கொடையளிப்பவர்கள் அடையும் கதி...
வசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், "ஓ! ராமா, பரமாத்மாவோடு அடையாளம் காணப்படும் பெரும்பாட்டனின் சாதனை குறித்த பிரம்ம தரிசனம் என்றழைக்கப்படும் இவ்வரலாற்றை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(87) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, தேவர்களில் முதன்மையானவனும், அச்சந்தர்ப்பத்தில் வருணனின் வடிவை ஏற்றவனுமான தலைவன் ருத்திரன் பழங்காலத்தில் செய்த வேள்விக்கு(88) அக்னியைத் தலைமையாகக கொண்ட தேவர்களும் முனிவர்களும் வந்தனர். (உடல்வடிவத்துடன் கூடிய) வேள்வி அங்கங்கள் அனைத்தும், உடல்வடிவத்துடன் கூடிய வஷத் என்றழைக்கப்படும் மந்திரமும் அந்த வேள்விக்கு வந்தன.(89) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான சாமங்களும், யஜுஸ்களும் தங்கள் உடல்வடிவத்துடன் அங்கே வந்தன. சொற்களை உச்சரிக்கும் வதிகளால் அலங்கரிக்கப்பட்ட ரிக் வேதமும் அங்கே வந்தது.(90) லக்ஷணங்கள், ஸ்வரங்கள், ஸ்தோபங்கள், நிருக்தங்கள், ஸ்வரங்களின் வகைகள், ஓங்கார அசை, நிக்ரகம், பிரக்கிரகம் ஆகியவை அனைத்தும் மஹாதேவனின் கண்களில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டன.(91) உபநிஷத்துகள், வித்யை, சாவித்திரி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை அனைத்தும் அங்கே வந்து சிறப்புமிக்கச் சிவனால் ஆதரிக்கப்பட்டன.(92)
அனைவரிலும் பலமிக்க அத்தலைவன் {சிவன்} அப்போது தனக்குள் தானே ஆகுதிகளை ஊற்றினான். உண்மையில், பிநாகைபாணி பலவகை வடிவங்களைக் கொண்ட அந்த வேள்வியை அழகானதாகத் தெரியச் செய்தான்.(93) சொர்க்கம், ஆகாயம், பூமி, வானம் அவனே. அவன் பூமியின் தலைவன் என அழைக்கப்படுகிறான். தடங்கல்கள் அனைத்தையும் ஆளும் தலைவன் அவனே. அவன் ஸ்ரீயுடன் கூடியவன், மேலும் அவன் சுடர்மிக்கத் தழல்களின் தேவனோடு {அக்னியோடு} அடையாளம் காணப்படுகிறான்.(94) அந்தச் சிறப்புமிக்கத் தேவன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான். பிரம்மன், சிவன், ருத்திரன், வருணன், அக்னி, பிரஜாபதி ஆகியோரும் அவனே. அவனை உயிரினங்கள் அனைத்தின் மங்கலத் தலைவனாவான்.(95) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, (உடல்வடிவம் கொண்ட) வேள்வி, தவம், கலவிச் சடங்குகள், கடும் நோன்புகளுடன் சுடர்விடும் திக்ஷா தேவி, பல்வேறு திசைப்புள்ளிகள் மற்றும் அவற்றைத் தலைமை தாங்கும் தேவர்கள், அவர்களின் மகள்கள், தெய்வீக அன்னையர் ஆகியோர் அனைவரும் ஒரே திரளாக ஒன்றாகப் பசுபதியிடம் வந்தனர்.(96,97)
உண்மையில் வருணனின் வடிவத்தை ஏற்றிருந்த உயர் ஆன்ம மஹாதேவனின் வேள்வியைக் கண்ட அவர்கள் அனைவரும் மிகவும் நிறைவடைந்திருந்தனர். பேரழகுடன் கூடிய தெய்வீகக் காரிகையரைக் கண்டு பிரம்மனின் வித்து வெளியேறி பூமியில் விழுந்தது.(98) அந்த வித்துப் புழுதியில் விழுந்ததன் விளைவால், பூஷன் (சூரியன்), அந்தவித்தின் துகள்களோடு கலந்த மண்ணைத் தன் கையால் பூமியில் இருந்து எடுத்து வேள்வி நெருப்புக்குள் விட்டான்.(99) அதே வேளையில், சுடர்மிக்கத் தழல்களுடனும், புனித நெருப்புடனும் கூடிய வேள்வி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. (ஹோத்ரியாக) பிம்மன் நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்தான். இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும்பாட்டன் ஆசையால் தூண்டப்பட்டான் (எனவே அவனது வித்து வெளிவந்தது).(100) ஓ! பிருகுக்களைத் திளைக்கச் செய்பவனே, அந்த வித்து வெளிவந்ததும், வேள்விக் கரண்டியில் அதை எடுத்த அவன், சுடர்மிக்க நெருப்பில் தேவையான மந்திரங்களுடன் ஆகுதி நெய்யாக அஃதை ஊற்றினான்.(101) பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் அந்த வித்திலிருந்தே நான்கு வகை உயிரினங்களை இருப்புக்குள் எழச் செய்தான். பெரும்பாட்டனின் வித்தானது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களுடன் கூடியதாக இருந்தது. அதில் உள்ள ரஜஸ் குணத்திலிருந்து பிரவிருத்தி, அல்லது செயற்கோட்பாட்டுடன் கூடிய அசையும் உயிரனங்கள் அனைத்தும் உண்டாகின.(102) தமஸ் குணத்திலிருந்து அசைவற்ற உயிரினங்கள் அனைத்தும் தோன்றின. எனினும், அந்தவித்துக்குள் வசித்த சத்வ குணம் இரு வகை இருப்புகளுக்குள் நுழைந்தது. அந்தச் சத்வ குணம், தேஜஸ் அல்லது ஒளியின் இயல்பாக (புத்தியுடன் அடையாளங் காணப்படுவதா) இருக்கிறது[5].(103)
[5] "சகுனம் என்பது சத்வத்தைக் குறிக்கிறது. தேஜஸ் புத்தியோடு அடையாளங்காணப்படுகிறது. புத்தியானது ஒளியைப் போலவே அனைத்துப் பொருட்களையும் கண்டுபிடிக்கிறது. மேலும் வெளியின் {ஆகாயத்தின்} இயல்பைக் கொண்ட சத்வம் அண்ட வடிவம் கொண்டதாகவும், நீக்கமற நிறைந்திருப்பதாகவும் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அனைத்து உயிரினங்களிலும் உள்ள சத்வ குணமானது, எது சரி, எது தவறு என்பதைக் காட்டும் ஒளியோடு அடையாளம் காணப்படுகிறது. பிரம்மனின் வித்தானது இவ்வாறு வேள்வி நெருப்பில் ஆகுதியாக ஊற்றப்பட்ட போது, ஓ! வலிமைமிக்கவனே, அதிலிருந்து மூவர் இருப்புக்குள் எழுந்தனர்.(104) தத்தமது காரணங்களினால் வந்த குணங்களைக் கொண்டவர்களும், சிறந்த உடல்களைக் கொண்டவர்களுமாக மூன்று ஆண்கள் {புருஷர்கள்} உண்டானார்கள். (பிரிக் என்றழைக்கப்படும்) நெருப்பின் தழல்களில் இருந்து முதலில் எழுந்ததன் காரணமாக ஒருவர் பிருகு என்ற பெயரில் அழைக்கப்பட்டார். (அங்காரம் என்றழைக்கப்படும்) எரியும் கரித்துண்டிலிருந்து {தணலிலிருந்து} இரண்டாமவர் வந்ததால் அவர் அங்கிரஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.(105) அணைந்த கரித்துண்டு குவியலில் இருந்து {தணலின் ஒளியிலிருந்து} மூன்றாமவர் வந்ததால், கவி {சுக்கிராச்சாரியர்} என்ற பெயரில் அவர் அழைக்கப்பட்டார். உடலில் இருந்து தழல்கள் வெளிப்பட முதலில் வந்தவர் பிருகு என்றழைக்கப்பட்டார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.(106)
வேள்வி நெருப்பின் கதிர்களில் இருந்து மரீசி என்ற மற்றொருவரும் எழுந்தார். மரீசியில் இருந்து (பின்னர்) கசியபர் எழுந்தார். (எரியும்) கரித்துண்டில் இருந்து அங்கிரஸ் எழுந்தார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அந்த வேள்வியில் பரப்பப்பட்டிருந்த குசப்புற்களில் {தர்ப்பைகளில்} இருந்து வாலகில்யர்கள் என்றழைக்கப்படும் (மிகக் குறுகியவர்களான) முனிவர்கள் உண்டாகினர். ஓ! பெரும்பலம் கொண்டவனே, அதே குசப்புற்களில் {தர்ப்பைகளில்} இருந்தே அத்ரி உண்டானார். நெருப்பின் சாம்பலில் இருந்து, தவங்களுடன் கூடியவர்களும், வேதங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், சிறந்த சாதனைகள் அனைத்தும் கொண்டவர்களும், மறுபிறப்பாள முனிவர்களுமான வைகானசர்கள் தோன்றினர்.(108,109) அக்னியின் கண்களில் இருந்து பேரழகு மேனியுடன் அசுவினி இரட்டையர்கள் தோன்றினர். இறுதியாக அவனது காதுகளில் இருந்து பிரஜாபதிகள் அனைவரும் தோன்றினர்.(110)
அக்னியுடைய உடலின் மயிர்க்கால்களில் {வியர்வைத் துளைகளில்} இருந்து முனிவர்கள் உண்டாகினர். அவனது வியர்வையில் இருந்து சந்தங்களும் {வேதங்களும்}, அவனது பலத்திலிருந்து மனமும் உண்டாகின. இதன் காரணமாகவே அக்னியானவன், அனைத்துத் தேவர்களும் ஒன்றுதிரண்ட வடிவம்(11) என வேதமறிந்த முனிவர்களால் வேத அதிகாரத்தின் வழிகாட்டுதற்படி சொல்லப்படுகிறான். அக்னியின் தழல்களை உயிருடன் வைத்திருக்கும் மரத்துண்டுகள் மாதங்களாகக் கருதப்படுகின்றன. விறகு அளிக்கும் சாரம் பிறைநாட்களாக {பக்ஷங்களாக} அமைகின்றன.(112) அக்னியின் ஈரல் பகல் இரவு என்றழைக்கப்படுகிறது அவனது கடும் ஒளி முஹுர்த்தங்களாக அழைக்கப்படுகின்றன. அக்னியின் குருதியே ருத்திரர்களின் ஊற்றுக்கண்ணாகக் கருதப்படுகிறது. அவனது குருதியில் இருந்து மைத்ரதேவதைகள் என்ற தங்க நிறம் கொண்ட தேவர்கள் உண்டாகிறார்கள்[6].(113) அவனது புகையில் இருந்து வசுக்கள் உண்டாகினர். அவனது தழல்களில் இருந்து ருத்திரர்களும், பிரகாசத்துடன் கூடிய (பனிரெண்டு) ஆதித்தியர்களும் உண்டாகினர்.(114) ஆகாயத்தில் நிறுவப்பட்டுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் பிற விண்மீன்கள் ஆகியவை அக்னியின் (எரியும்) கரித்துண்டுகளாகக் கருதப்படுகின்றன. அண்டத்தை முதலில் படைத்தவன் அக்னியையே பரப்பிரம்மமாகவும், நித்தியமானவனாகவும், அனைத்து விருப்பங்களையும் அருள வல்லவனாகவும் அறிவித்தான்.(115) இஃது உண்மையில் ஒரு புதிராகும்.
[6] கும்பகோணம் பதிப்பில், "வருணனுடைய ஆறின தீயே (கரி) இரவு பகல்களும் முகூர்த்தங்களுமாயிற்று. அக்னியின் சிவந்த நிறத்தை ருத்திரருடையதென்று சொல்லுகின்றனர். அதிலிருந்து கனகம் {தங்கம்} உண்டாயிற்று. அந்தக் கனகமானது மைத்திரம் (சிநேகத்தைத் தருவது) என்றறியத்தக்கது" என்றிருக்கிறது.
இந்தப் பிறவிகள் அனைத்தும் உண்டான பிறகு, (வேள்விக்காக) வருண வடிவத்தை ஏற்றிருந்த மஹாதேவன், பவனனைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனிடம்,(116) "இந்தச் சிறந்த வேள்வி என்னுடையதாகும். நானே இதன் கிரஹபதி. வேள்வி நெருப்பில் இருந்து முதலில் உண்டான மூவரும் என்னுடையவராவர். அவர்கள் என் வாரிசுகளாகக் கருதப்படுவர் என்பதில் ஐயமில்லை. வானை அதிகாரம் செய்யும் தேவர்களே இஃதை அறிவீராக. அவர்கள் இவ்வேள்வியின் கனிகளாவர் {பயன்களாவர்}" என்றான் {சிவன்}.(117)
அக்னி, "இந்த வாரிசுகள் என் அங்கங்களில் இருந்து பிறந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உயிர்பெற என்னையே சார்ந்திருக்கின்றனர். எனவே, அவர்கள் என் பிள்ளைகளாகவே கருதப்பட வேண்டும். வருணனின் வடிவில் உள்ள மஹாதேவன் இக்காரியத்தில் பிழை செய்கிறான்" என்றான்.(118)
இதன்பிறகு, "உயிரினங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும், உலகங்கள் அனைத்தின் தலைவனுமான பிரம்மன், "இவர்கள் என் பிள்ளைகளாவர். வேள்வி நெருப்புக்குள் ஊற்றபட்ட வித்து என்னுடையதாகும்.(119) நானே இவ்வேள்வியை நிறைவேற்றியவன். என்னில் இருந்து வெளிவந்த வித்தை வேள்வி நெருப்புக்குள் ஊற்றியவன் நானே. கனியானது, எப்போதும் வித்தை நட்டு வைத்தவனுக்கே உரியதாகும். என்னுடைய வித்தே இந்த மூவரின் பிறப்புக்கு அடிப்படைக் காரணமாகும்" என்றான்.(120)
பெரும்பாட்டனிடம் சென்ற தேவர்கள், தலைவணங்கி, மதிப்புடன் கைகூப்பியவாறு அவனிடம்,(121) "ஓ! சிறப்புமிக்கவரே, நாங்கள் அனைவரும், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் உம் வாரிசுகளே ஆவோம். ஓ! ஐயா, (வாரிசு குறித்த காரியத்தில்) சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட அக்னி,(122) சிறப்பும் பலமும்மிக்க மஹாதேவன் ஆகியோரின் விருப்பங்கள் நிறைவேறட்டும்" என்றனர்.
இந்த வார்த்தைகளின் மூலம், சூரியப் பிரகாசத்துடன் கூடியவரும், முதலில் பிறந்தவருமான பிருகு, பிரம்மனுக்குப் பிறந்தவராகவே இருந்தாலும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் ஆட்சியாளனும், வருண வடிவில் இருந்தவனுமான பலமிக்க மஹாதேவனே அவரை {பிருகுவைத்} தன் சொந்த பிள்ளையாகப் பெற்றுக் கொண்டான். பிறகு பெரும்பாட்டன் {பிரம்மன்} அங்கிரஸ் அக்னியின் மகனாக வேண்டும் என நினைத்தான்.(123,124) அனைத்து உண்மைகளை அறிந்த பெரும்பாட்டன் பிறகு கவியை {சுக்கிரரைத்} தன் மகனாக எடுத்துக் கொண்டான். பூமியில் மக்கள் பெருகுவதற்காக உயிரினங்களை உண்டாக்கும் காரியத்தில் ஈடுப்பட்டவரும், பிரஜாபதிகளில் ஒருவராகக் கருதப்படுபவருமான பிருகு, அதுமுதல் வருணனின் வாரிசாக {வாருணி என்று} அழைக்கப்பட்டார்.(125) அனைத்து செழிப்பையும் கொண்ட அங்கிரஸ் அக்னியின் வாரிசாக {ஆக்னேயர் என்று} அழைக்கப்பட்டார், கொண்டாடப்படும் கவி {சுக்கிரன்} பிரம்மனின் பிள்ளையாக அறியப்பட்டார். முறையே அக்னியின் தழல்கள் மற்றும் கரித்துண்டுகளில் இருந்து உண்டான பிருகுவும், அங்கிரஸும் உலகில் பேரினங்களையும் குலங்களையும் உண்டாக்கியவர்களானார்கள்.(126) உண்மையில், பிருகு, அங்கிரஸ் மற்றும் கவி ஆகியோரே பிரஜாபதிகளாகவும், பல குலங்கள் மற்றும் இனங்களை உண்டாக்கியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அனைவரும் இம்மூவரின் பிள்ளைகளே. ஓ! பலமிக்க வீரா, இஃதை அறிவாயாக.(127)
பிருகு தமக்கு இணையான தகுதிகளையும், சாதனைகளையும் கொண்ட ஏழு மகன்களைப் பெற்றார். சியவனர், வஜ்ரசீர்ஷர், சுசி, ஔர்வர்,(128) வரமளிக்கும் சுக்ரர், விபு {வரேண்யர்}, ஸவனர் என்பதே அவர்கள் பெயர்கள். இவர்கள் எழுவர். அவர்கள் பிருகுவின் பிள்ளைகளாதலால் பார்க்கவர்களாவார்கள். அவர்கள் தங்கள் மூதாதையான பிருகு, வருண வடிவில் இருந்த மஹாதேவனால் தத்தெடுக்கப்பட்டதால் வாருணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பிருகு குலத்தைச் சேர்ந்தவர்களாவர்.(129)
அங்கிரஸ் எட்டு மகன்களைப் பெற்றார். அவர்களும் வாருணர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள் பிருஹஸ்பதி, உதத்தியர் {உசத்தியர்}, வயஸ்யர், சாந்தி,(130) தீரர் {கோரர்}, விருபர், ஸம்வர்த்தர், எட்டாவதாக ஸுதன்வா என்ற பெயர்களைக் கொண்டவராவர். இந்த எண்மரும் அக்னியின் வாரிசுகளாகக் கருதப்படுகின்றனர். அனைத்துத் தீமைகளில் இருந்து விடுபட்ட அவர்கள் அறிவுக்கு மட்டுமே அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.(131)
பிரம்மனால் எடுத்துக் கொள்ளப்பட்ட கவியின் மகன்களும் வாருணர்கள் என்ற அறியப்படுகிறார்கள். எண்ணிக்கையில் எண்மரான அவர்கள் அனைவரும் (மணம்செய்து கொள்ளாமல் வாழும் வாழ்வை நோற்காமல்) இனங்களையும், குலங்களையும் உண்டாக்கினார்கள். இயல்பில் மங்கலர்களான இவர்கள் அனைவரும் பிரம்மத்தை அறிந்தவர்களாக இருந்தனர்.(132) கவியுடைய எட்டு மகன்களின் பெயர்கள், கவி, காவியர், திருஷ்ணு {விஷ்ணு}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட உசநஸ் {சுக்கிரர்}, பிருகு, விரஜர் {வருணன்}, காசி {காசியபர்}, அனைத்துக் கடமைகளையும் அறிந்த உக்ரர் {அக்னி} ஆகும்.(133) இவர்களே கவியின் எட்டு மகன்களாவர். இவர்களின் மூலமே மொத்த உலகத்திலும் மக்கள் பெருகினர். அவர்கள் அனைவரும் பிரஜாபதிகளாவர், அவர்களின் மூலமே பல சந்ததிகள் உண்டாக்கப்பட்டன.(134) ஓ! பிருகு குலத் தலைவா, இவ்வாறே மொத்த உலகமும், அங்கிரஸ், கவி மற்றும் பிருகுவின் சந்ததியால் பெருகியது.(135) ஓ! கல்விமானான பிராமணா, பலமிக்கவனும், வேள்விக்காக வருணனின் வடிவில் இருந்தவனும், பரமனுமான தலைவன் மஹாதேவனே முதலில் கவியையும், அங்கிரஸையும் தத்தெடுத்தவர். எனவே, அவர்கள் இருவரும் வருணனாகக் கருதப்படுகின்றனர்.(136) வேள்வி ஆகுதிகளை உண்பவனும், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்டவனுமான தேவன் அதன் பிறகே அங்கிரஸைத் தத்தெடுத்தான். எனவே, அங்கிரஸின் சந்ததி அக்னி குலத்திற்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது.(137)
பழங்காலத்தில் தேவர்கள், பெரும்பாட்டனான பிரம்மனை நிறைவடையச் செய்து, அவனிடம், "(பிருகு, அங்கிரஸ், கவி மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களைக் குறிப்பிட்டு) அண்டத்தின் தலைவர்களான இவர்கள் எங்கள் அனைவரையும் காக்கட்டும்.(138) அவர்கள் அனைவரும் (பூமியில் பெருகும்) வாரிசுகளை உண்டாக்குபவர்களாட்டும். அவர்கள் அனைவரும் தவம் செய்பவர்களாட்டும். உமது அருளால் இவர்கள் அனைவரும் (யாரும் வசிக்க முடியாத காடாகிவிடாமல்) உலகத்தைக் காக்கட்டும்.(139) இவர்கள் தங்கள் சக்தியால் பெரும் குலங்களையும், இனங்களையும் உண்டாக்கி சக்தியில் பெருகட்டும். இவர்கள் அனைவரும் வேதங்களின் ஆசான்களாகவும் பெரும் செயல்களைச் செய்பவர்களாகவும் ஆகட்டும். இவர்கள் அனைவரும் தேவர்களின் நண்பர்களாகட்டும். உண்மையில் இவர்கள் அனைவரும் மங்கலம் நிறந்திருக்கட்டும். இவர்கள் பெரும் இனங்களையும் குலங்களையும் நிறுவுபவர்களாகவும், பெரும் முனிவர்களாகவும் ஆகட்டும். பெரும் தவம் செய்பவர்களாகவும், உயர்ந்த பிரம்மச்சரியத்தில் அர்ப்பனிப்புமிக்கவர்களாகவும் ஆகட்டும்.(141) ஓ! பெரும் பலம் கொண்டவரே {பிரம்மாவே}, நாங்களும், இவர்கள் அனைவரும் உமது சந்ததியே. ஓ! பெரும்பாட்டனே, தேவர்களையும், பிராமணர்களையும் படைத்தவர் நீரே.(142) மரீசியே உமது முதல் வாரிசு. பார்க்கவர்கள் என்று அழைக்கப்படும் யாவரும் உமது சந்ததியே. (நாங்களும் அவ்வாறே ஆகிறோம்). ஓ! பெரும்பாட்டனே, இந்த உண்மையைக் கண்டு நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி ஆதரிப்போம்.(143) இவ்வழியில் இவர்கள் அனைவரும் தங்கள் சந்ததியைப் பெருக்கி, அண்ட அழிவுக்குப் பிறகு ஒவ்வொரு படைப்பின் போதும் உம்மை நிறுவட்டும்" என்றனர்.(144)
இவ்வாறு சொல்லப்பட்டவரும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான பிரம்மன், அவர்களிடம், "அவ்வாறே ஆகட்டும். நான் உங்கள் அனைவரிடமும் நிறைவடைந்தேன்" என்றார். தேவர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே சென்றான்.(145) பழங்காலத்தில், தேவர்களில் அனைவரிலும் முதன்மையானவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான வேள்விக்காரணத்திற்காக வருண வடிவத்தை ஏற்றிருந்தவனுமான மஹாதேவனின் வேள்வியில் இதுவே நடந்தது.(146) அக்னியே பிரம்மனாவான். அவனே பசுபதியுமாவான். அவன் சர்வனுமாவான். அவன் ருத்திரனுமாவான். அவன் பிரஜாபதியுமாவன்[7]. தங்கம் அக்னியின் வாரிசு என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(147) (வேள்வி காரியங்களுக்கு) நெருப்பு அடையப்பட முடியாத போது, தங்கம் அதற்கு மாற்றாக இருக்கிறது. வேத திறன்தேர்வின் மூலம் கொடுக்கப்படும் குறியீடுகளால் வழிநடத்தப்படுபவனும், அதிகாரங்களை அறிந்தவனும், நெருப்போடு தங்கம் அடையாளம் காணப்படுவதை அறிந்தவனுமான ஒருவன் இவ்வழியிலேயே செயல்படுவான்.(148)
[7] "இது பிரம்மன் மற்றும் மஹாதேவனின் பல்வேறு பெயர்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேள்வி செய்பவன், தரையில் குசப்புற்களை {தர்ப்பங்களை} பரப்பி வைத்து விட்டு அதில் தங்கத்தை வைத்து, அதில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். எறும்புப்புற்றின் துளைகளிலும், வெள்ளாட்டின் வலக்காதிலும்,(149) சமமான தரைப்பகுதியிலும், தீர்த்தங்களின் நீரிலும், பிராமணன் கையிலும் ஆகுதிகள் ஊற்றப்பட்டால், அதனால் நிறைவடையும் சிறப்புமிக்க நெருப்பின் தேவன் {அக்னி}, தன் பெருக்கத்திற்காகவும், தன் மூலம் தேவர்கள் பெருக்கத்திற்காகவுமான ஆதாரமாக இதைக் கருதுவான்.(150) எனவேதான் தேவர்கள் அனைவரும் அக்னியைத் தங்கள் புகலிடமாகக் கொண்டு அவனிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் என நாம் கேள்விப்படுகிறோம். அக்னி பிரம்மனில் இருந்து உதித்தான், அக்னியில் இருந்து தங்கம் உதித்தது.(151) எனவே, பொற்கொடையளித்து அறம் நோற்கும் மனிதர்கள், தேவர்கள் அனைவரையும் கொடையளித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(152) பொற்கொடை அளிக்கும் மனிதன் மிக உயர்ந்த கதியை அடைகிறான். சுடர்மிக்கப் பிரகாச உலகங்கள் அவனுடையவையாகும். உண்மையில், ஓ! பார்க்கவா, அவன் சொர்க்கத்தில் மன்னர்களுக்கு மன்னனாக நிறுவப்படுகிறான்.(153)
சூரியன் எழும்போது உரிய மந்திரங்களுடன் விதிப்படி பொற்கொடை அளிக்கும் மனிதன், கெட்ட கனவுகளால் முன்னறிவிக்கப்படும் தீய விளைவுகளை அகற்றுவதில் வெல்கிறான்.(154) சூரியன் எழுந்ததும் {முதல் சந்திப்பொழுதில்}, பொற்கொடை அளிக்கும் மனிதன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான். நடுப்பகலில் பொற்கொடை அளிப்பவன், எதிர்காலப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(155) இரண்டாம் சந்திப்பொழுதில் {மாலை வேளையில்} ஆன்ம அடக்கத்துடன் பொற்கொடை அளிக்கும் ஒருவன் பிரம்ம, வாயு, அக்னி, சோம தேவர்களுக்குரிய உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(156) அத்தகைய மனிதன் இந்திரனுக்கு உரிய பேரின்ப உலகங்களின் மங்கலப் புகழை ஈட்டுகிறான். இவ்வுலகில் பெரும்புகழை அடையும் அவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து இன்பத்திலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறான்.(157)
உண்மையில், அத்தகைய மனிதன் மகிழ்ச்சிகரமான உலகங்கள் பலவற்றை அடைந்து, புகழிலும், மகிமையிலும் ஒப்பற்றவனாகத் திகழ்கிறான். தடையற்ற பாதையைக் கொண்ட அவன், விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்வதில் வெல்வான்.(158) அவன் அடையும் உலகங்களில் இருந்து ஒருபோதும் விழ நேராமல், அவன் ஈட்டிய மகிமை பெரிதாகும். உண்மையில், பொற்கொடை அளிப்பதன் மூலம் ஒருவன் எண்ணற்ற இன்ப உலகங்களை அடைந்து நித்திய இன்பத்தை அனுபவிப்பான்.(159) சூரியன் எழும்போது நெருப்பை மூட்டி, ஒரு குறிப்பிட்ட நோன்பு நோற்கும் நோக்கில் பொற்கொடை அளிக்கும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(160) தங்கம் அக்னியோடு அடையாளங்காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, பொற்கொடை பேரின்பத்தை விளைவிக்கும். விரும்பப்படுபவையும், இதயத்தைத் தூய்மைப்படுத்துபவையுமான சாதனைகளும் பலன்களையும் அடைவதற்குப் பொற்கொடையானது வழிவகுக்கிறது.(161)
ஓ! பாவமற்றவனே, இவ்வாறு பொன்னின் தோற்றத்தைக் குறித்து உனக்குச் சொன்னேன். ஓ! பலமிக்கவனே, ஓ! பிருகு குலத்தைத் திளைக்கச் செய்பவனே, கார்த்திகேயன் எவ்வாறு வளர்ந்தான் என்பதை அறிவாயாக.(162) நீண்ட காலத்திற்குப் பிறகு கார்த்திகேயன் வளர்ந்தான். ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அதன் பிறகு அவன் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அனைவராலும் தேவ படையின் தளபதியாக {படைத்தலைவனாகத்} தேர்ந்தெடுக்கப்பட்டான்.(163) ஓ! பிராமணா, அவன் உலகங்கள் அனைத்திலும் நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டுத் தேவர்களின் தலைவனுடைய ஆணையின் பேரில் தைத்தியன் தாரகனையும், அசுரர்கள் பலரையும் கொன்றான்.(164) ஓ! பெரும் வலிமை கொண்டவனே, பொற்கொடை அளிப்பதன் பலன்களைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன். எனவே, ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நீ பொற்கொடை அளிப்பாயாக" என்றார் {வசிஷ்டர்}".(165)
பீஷ்மர் தொடர்ந்தார், "இவ்வாறு வசிஷ்டரால் சொல்லப்பட்டவரும், பேராற்றல் கொண்டவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்குப் பொற்கொடை அளித்து, தம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தார்.(166) ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறே நான் பொற்கொடை குறித்த அனைத்தையும், பொன்னின் தோற்றம் குறித்தும் சொன்னேன்.(167) எனவே, நீ பிராமணர்களுக்கு அபரிமிதமாகப் பொற்கொடை அளிப்பாயாக. உண்மையில், ஓ! மன்னா, பொற்கொடையளிப்பதன் மூலம் நீ நிச்சயம் உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவாய்" {என்றார் பீஷ்மர்}.(168)
அநுசாஸனபர்வம் பகுதி – 85ஆ வில் உள்ள சுலோகங்கள் : 87-168
ஆங்கிலத்தில் | In English |