Taraka's slaughter! | Anusasana-Parva-Section-86 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 86)
பதிவின் சுருக்கம் : குமரனுக்கு முலையுண்ணக் கொடுத்த கார்த்திகைப் பெண்கள்; தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் குமரனுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்கள்; தாரகன் கொல்லப்பட்டது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, வேத கேள்வியில் குறிப்பிடப்படுவதும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்புடையதுமான பொற்கொடையால் உண்டாகும் பலன்களைக் குறித்து விரிவாகச் சொன்னீர்.(1) பொன்னின் தோற்றம் குறித்தும் நீர் சொன்னீர். இப்போது தாரகனின் அழிவு குறித்து எனக்குச் சொல்வீராக.(2) ஓ! மன்னா, அந்த அசுரன் தேவர்களால் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான் என நீர் சொன்னீர். அவனுடைய அழிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விரிவாக எனக்குச் சொல்வீராக.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, தாரகன் கொல்லப்பட்டதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன். அதைக் கேட்பதில் என் ஆவல் பெரிதாக இருக்கிறது" என்றான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, (தாரகனின் ஆற்றல் மூலமும், கங்கை அக்னியின் வித்தைக் கைவிட்ட நடத்தையின் மூலமும்) பெரும் துன்பத்தில் இருந்த தேவர்களும், முனிவர்களும், கிருத்திகை அறுவரிடமும் அந்தப் பிள்ளையை வளர்க்கத் தூண்டினர்.(5) தெய்வீக மங்கையரில் (அவர்களைத் தவிர வேறு) எவரும் அக்னியின் வித்தைத் தங்கள் கருவறையில் தாங்கும் சக்தி கொண்டவர்களாக இல்லை.(6) பெரும் சக்தி கொண்ட அக்னியின் வித்தைக் கைவிட்ட பிறகு அதைத் தாங்கத் தயாராக இருந்த அந்தத் தேவிகளிடம் நெருப்பின் தேவன் பெரும் நிறைவடைந்திருந்தான்.(7) ஓ! மன்னா, அக்னியின் சக்தி ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு (கருவறைக்குச் செல்லும்) வழியில் வைக்கப்பட்டபோது, கிருத்திகைகள் அறுவரும், தங்கள் கருவறையில் கொண்ட ஒவ்வொரு பகுதியையும் பேணி வளர்க்கத் தொடங்கினர்.(8)
எனினும், உயர் ஆன்மக் குமாரன் அவர்களின் கருவறைகளில் வளரத் தொடங்கியபோது, அவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்ட அவர்களது உடல்கள் (சொர்க்கத்திலோ, பூமியிலோ) எங்கும் அமைதியைக் காணத் தவறின.(9) அவர்களது உடல்களால் சக்தியால் நிறைக்கப்பட்டு ஈனும் காலமும் இறுதியாக வந்தது. ஓ! மனிதர்களின் இளவரசே, அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கருவை ஈன்றனர்.(10) ஆறு வெவ்வேறு கருவறைகளில் தாங்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதிகள் அனைத்தும் வெளியே வந்ததும் ஒன்றாகின. பூமாதேவி அப்பிள்ளையை, பொற்குவியலில் இருந்து எடுத்தாள்.(11) உண்மையில், சிறந்த வடிவத்தில் இருந்த அந்தப் பிள்ளை, நெருப்பின் தேவனை {அக்னியைப்} போலக் காந்தியுடன் சுடர்விட்டான். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், காண்பதற்கினிய நாணற்காடுகளில் வளரத் தொடங்கினான்.(12)
காந்தியில் காலைச் சூரியனைப் போல இருந்த அவர்களது பிள்ளையைக் கிருத்திகைகள் கண்டனர். அன்பால் நிறைந்தவர்களாக, உண்மையில் அவனிடம் அதிக அன்புடன் கூடிய அவர்கள் தங்கள் முலைகள் உண்ணக் கொடுத்து அவனை வளர்க்கத் தொடங்கினர்.(13) கிருத்திகைகளுக்குப் பிறந்து அவர்களாலேயே வளர்க்கப்பட்டதால் மூவுலகங்களிலும் அவன் கார்த்திகேயன் என்று அறியப்படலானான். ருத்திரனிடமிருந்து விழுந்த வித்தில் உதித்த அவன் ஸ்கந்தன் எனப் பெயரிடப்பட்டான், தனிமையான நாணற்காட்டில் பிறந்ததால் அவன் குஹன் (ரஹஸ்யமாகப் பிறந்தவன்) என்ற பெயராலும் அழைக்கப்பட்டான்.(14) முப்பத்து மூன்று தேவர்கள், (உடல்வடிவங்களுடன் கூடிய) திசைப்புள்ளிகள், அவற்றுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {திக்பாலர்கள்}, ருத்திரன், தாத்ரி {தாதா}, விஷ்ணு, யமன், பூஷன், அர்யமன், பகன்,(15) அம்சன், மித்திரன், ஸாத்தியர்கள், வாசவன் {இந்திரன்}, வசுக்கள், அசுவினிகள், நீர், காற்று, ஆகாயம், சந்திரமாஸ், நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள், சூரியன்,(16] உடல்வடிவத்தோடு கூடிய ரிக், சாமம், யஜுஸ்கள் அனைத்தும் சுடர்மிக்கத் தழல்களின் தேவனுடைய {அக்னியுடைய} மகனான அந்த அற்புதமான பிள்ளையைக் காண அங்கே வந்தனர்.(17)
ஆறு தலைகளைக் கொண்டவனும், பனிரெண்டு கண்களைக் கொண்டவனும், பிராமணர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனும், குமாரன் என்றழைக்கப்படுபவனுமான அந்தப் பிள்ளையின் புகழை முனிவர்களும், கந்தர்வர்களும் பாடினர்.(18) அவனது தோள்கள் அகலமாக இருந்தன, அவனுக்குப் பனிரெண்டு கரங்கள் இருந்தன, அவனுடைய காந்தி நெருப்புக்கும், ஆதித்தியனுக்கும் ஒப்பானதாக இருத்தது. நாணற்புதரில் நீண்டு கிடக்கும் அக்குழந்தையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும்,(19) பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, அந்தப் பேரசுரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினர். தேவர்கள் அவனுக்கு உற்சாகமூட்ட பல்வேறு வகைகளிலான பொம்மைகளையும், பொருட்களையும் கொண்டு வந்தனர்.(20) அவன் குழந்தையைப் போல விளையாடியபோது, அவனுக்குப் பல்வேறு வகைப் பொம்மைகளும், பறவைகளும் கொடுக்கப்பட்டன. சிறந்த இறகுகளைக் கொண்டவனான கருடன், பலவண்ண தோகைகளை உடைய தன் பிள்ளையான மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(21)
ராட்சசர்கள் அவனுக்குப் பன்றியையும், எருமையையும் கொடுத்தனர். அருணன் அவனுக்கு, கடுங்காந்தியைக் கொண்ட சேவலொன்றைக் கொடுத்தான்.(22) சந்திரமாஸ் செம்மறியாட்டையும், ஆதித்தியன் தன் பளபளக்கும் கதிர்களையும் கொடுத்தனர். பசுக்கள் அனைத்தின் தாயான சுரபி அவனுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுத்தாள்.(23) அக்னி அவனுக்குப் பல நற்குணங்களைக் கொண்ட வெள்ளாடு ஒன்றைக் கொடுத்தான். ஐலன் அவனுக்குப் பெரும் அளவிலான மலர்களையும் கனிகளையும் கொடுத்தான். சூதன்வான் அவனுக்கு ஒரு வண்டியையும், அளவிலாத கூபரம் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான்.(24) வருணன் கடலில் விளையும் பல சிறந்த மங்கலப் பொருட்களைஉம், சில யானைகளையும் கொடுத்தான். தேவர்களின் தலைவன், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் பல்வேறு வகைப் பறவைகள்,(25) இரைதேடும் பயங்கர விலங்குகள், மற்றும் பல்வேறு வகைக் குடைகள் பலவற்றையும் கொடுத்தான். பெரும் கூட்டங்களாக இருந்த ராட்சசர்களும், அசுரர்களும் அந்தப் பலமிக்கப் பிள்ளையின் பின்னால் அணிவரிசையில் நடக்கத் தொடங்கினர்.(26)
அக்னியின் மகன் வளர்வதைக் கண்ட தாரகன், பல்வேறு வகைகளில் அவனை அழிக்க முயன்றாலும் அந்தப் பலமிக்கத் தேவனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.(27) சரியான நேரத்தில் தேவர்கள் தனிமையில் (நாணற்காட்டில்) அக்னிக்குப் பிறந்த மகனை தங்கள் படைத்தலைவனாக நிறுவினர். அசுரன் தாரகன் தங்களை ஒடுக்கு வருவது குறித்தும் அவனுக்குச் சொன்னார்கள்.(28) தேவர்களின் படைத்தலைவன் வளர்ந்ததும், பெரும் பலத்தையும், சக்தியையும் கொண்டவனாக இருந்தான். காலத்தில் அந்தக் குஹன் தன் தடுக்கப்பட முடியாத ஈட்டியை {வேலைக்} கொண்டு தாரகனைக் கொன்றான்.(29) உண்மையில், குமரன் அந்த அசுரனை விளையாட்டு போல எளிமையாகக் கொன்றான். தாரகனைக் கொன்ற பிறகு அவன் தேவர்களின் தலைவனை மூவுலகங்களின் அரசாட்சியில் மீண்டும் நிறுவினான்.(30)
வலிமையும், ஆற்றலும் கொண்ட அந்தத் தேவர் படைத்தலைவன் அழகிலும், காந்தியிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தான். பலமிக்க ஸ்கந்தன், தேவர்களின் பாதுகாவலனாகி, சங்கரனுக்கு ஏற்புடையதைச் செய்தான்.(31) பாவகனின் சிறப்புமிக்க மகன், தங்க வடிவம் கொண்டவனாக இருந்தான். உண்மையில் குமாரனே எப்போதும் தேவர்களின் படைத்தலைவனாக இருந்தான்.(32) நெருப்பு தேவனுடைய பலமும், சக்தியுமாக இருந்த தங்கம் கார்த்திகேயனுடன் (ஒரே வித்தில்) பிறந்ததாகும். எனவே, தங்கமானது, உயர்வானதும், மங்கலமானதும், மதிப்புமிக்கதும், சிறந்ததும், வற்றாத பலனைக் கொண்டதுமாக இருக்கிறது.(33) ஓ! குரு குலத்தின் மகனே, இவ்வாறே பழங்காலத்தில் பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} வசிஷ்டர் சொன்னார். எனவே, ஓ! மனிதர்களின் மன்னா, பொற்கொடை அளிப்பாயாக.(34) ராமர் {பரசுராமர்}, பொற்கொடை அளித்ததன் மூலம் தம் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, இறுதியாகப் பிற மனிதர்களால் அடைய முடியாத சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைந்தார்" என்றார் {பீஷ்மர்}.(35)
அநுசாஸனபர்வம் பகுதி – 86ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |