The merits of Sraddha! | Anusasana-Parva-Section-87 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 87)
பதிவின் சுருக்கம் : நீத்தார் வழிபாட்டுக்குரிய விதிகள் மற்றும் ஒவ்வொரு திதியிலும் சிராத்தம் செய்வதன் பலன் ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! அற ஆன்மாவே, நான்கு வகைக்கான கடமைகள் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர். அதுபோலவே, ஓ! மன்னா, (இறந்து போன மூதாதையருக்கான) சிராத்தம் {நீத்தார் வழிபாடு} தொடர்பான விதிகள் அனைத்தையும் இப்போது எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்".(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டதும், அந்தச் சாந்தனுவின் மகன் {பீஷ்மர்}, விதிகளுக்கு இணக்கமாகச் சிராத்தம் தொடர்பான பின் வரும் சடங்கை அறிவிப்பதில் தம்மைத் தாமே நிறுவிக் கொண்டார்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, சிராத்த சடங்கு குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக. ஓ! எதிரிகளை எரிப்பவனே, மங்கலமானதும், புகழத்தக்கதும், புகழையும், சந்ததியையும் உண்டாக்கவல்லதுமான அந்தச் சடங்கு, பித்ருக்களைக் கௌரவிப்பதில் ஒரு வேள்வியாகக் கருதப்படுகிறது.(3) தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, கந்தர்வர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, பிசாசங்கள் அல்லது கின்னரர்களோ எவராக இருந்தாலும் ஒருவன் பித்ரு வழிபாட்டை எப்போதும் செய்ய வேண்டும்.(4) மக்கள் பித்ருக்களை முதலில் வழிபடுவதும், அதன் பிறகு தேவர்களைத் துதித்து அவர்களை நிறைவடையச் செய்வதும் காணப்படுகிறது. எனவே, ஒருவன் மிகக் கவனமாக எப்போதும் பித்ரு வழிபாட்டைச் செய்ய வேண்டும்[1].(5)
[1] "பித்ருக்கள் புதுநிலவன்று {அமாவசையன்று} வழிபடப்பட வேண்டும் என்றும், தேவர்கள் வளர்பிறையின் முதல்நாளன்று {பிரதமையன்று} வழிபடப்பட வேண்டும் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார். அல்லது வளர்பிறையில் வேறு எந்த நாளாக இருந்தாலும் பித்ரு வேள்வி அல்லது சிராத்தமே முதலில் செய்யப்பட வேண்டும்; தேவ வேள்வி அல்லது இஷ்டி அடுத்து செய்யப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா, பித்ருக்களைக் கௌரவிக்கும் சிராத்தத்தைப் பின்னர்ச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தப் பொதுவிதி (புதுநிலவு {அமாவாசை} நாளின் பிற்பகலில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் சிராத்தம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்) ஒரு சிறப்பு விதியால் தடுக்கப்பட்டிருக்கிறது[2].(6) (இறந்து போன) பாட்டனார்கள் {மூதாதையர்கள்} எந்த நாளில் சிராத்தம் செய்தாலும் நிறைவடைவார்கள்[3]. எனினும், (பின்பற்றத் தகுந்த சூழ்நிலைகளை நோக்கில் கொண்டு சிராத்தங்களைச் செய்யும்) குறிப்பிட்ட சந்திர நாட்களின் {திதிகளின்} நிறைகுறைகளை இப்போது சொல்லப் போகிறேன். (7) ஓ! பாவமற்றவனே, எந்த நாட்களில் சிராத்தங்களைச் செய்தால் என்ன கனிகள் அடையப்படும் என்பது குறித்துச் சொல்லப் போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(8)
[2] "சிராத்தமானது புது நிலவு நாளின் பிற்பகல் வேளையில் செய்யப்பட வேண்டும் என்ற சிறப்பு விதி இருக்கிறது. தேவர்கள் வளர்பிறையின் முதல் நாளில் துதிக்கப்பட வேண்டும். எனவே இந்தச் சிறப்பு விதியால் சிராத்தமானது, தேவ வழிபாட்டைப் பின்தொடராமல் முன்பே செய்யப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] இதன் பிறகு கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகச் செய்தி இருக்கிறது. அது பின்வருமாறு, "பிண்டங்கொடுத்துச் செய்யப்படும் சிராத்தத்தை மாதந்தோறும் {அமாவாசையில்} செய்ய வேண்டும். கிருகஸ்தனான பிராம்மணன் அமாவாஸ்யையில் பிதிரு யாகத்தைச் செய்ய வேண்டும். மாதந்தோறும் பிண்டதானத்தோடு செய்யும் தர்சஸ்ராத்ததைத்தான் அந்வாஹார்யமென்று வித்வான்கள் நினைக்கின்றனர். பரிசுத்தனாய்க் கைகூப்பிக் கொண்டு சிரத்தையுடன் மாமிசத்தினால் அந்தச் சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
வளர்பிறையின்[4] ஒன்றாம் நாளில் {பிரதமையில்} பித்ருக்களைத் துதிப்பதன் மூலம் ஒருவன், விரும்பத்தக்க சாதனைகளைச் செய்யும் பிள்ளைகள் பலரைப் பெறவல்ல அழகிய மனைவிகளைத் தன் வசிப்பிடத்தில் அடைவான்.(9)
[4] கும்பகோணம் பதிப்பில் வளர்பிறை என்ற குறிப்பு இல்லை. உண்மையில் பின்வரப்போகும் ஸ்லோகங்களில் உள்ள திதிகளும் கும்பகோணம் பதிப்பில் வளர்பிறை என்ற குறிப்பில்லை. அது பின்வருமாறு, "எந்தத் தினங்களில் சிராத்தங்களைச் செய்வதினால் என்ன பலன்கள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் உள்ளபடி சொல்வேன். அதை என்னிடம் தெரிந்து கொள். பிரதமையில் பிதிருக்களைப் பூஜிப்பதனால் அழகான பிள்ளைகளைப் பெறுமான ஸ்திரீகளைத் தன் கிருஹத்தில் அடைவான். துவிதியையில் பிதிரு சிராத்தம் செய்வதனால் வீட்டில் பெண்கள் பிறப்பார்கள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் "சுக்லபக்ஷத்தின் முதல் நாள்" என்று சொல்லப்படுவதால் வளர்பிறை என்ற குறிப்பு இருக்கிறது. இப்பகுதியின் 19ம் ஸ்லோகத்தில் வளர்பிறையைவிடத் தேய்பிறையே சிறப்பு என்ற குறிப்பு உள்ளது.
வளர்பிறையின் இரண்டாம் நாளில் {துவிதியையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் மகள்கள் பலரை அடைகிறான். மூன்றாம் நாளில் {திருதியையில்} அதைச் செய்பவன் பல குதிரைகளை அடைகிறான். நான்காம் நாளில் {சதுர்த்தியில்} அதைச் செய்பவன் (வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் போன்ற) சிறு விலங்குகளின் பெரும் மந்தையைத் தன் வீட்டில் அடைகிறான்.(10)
ஓ! மன்னா, ஐந்தாம் நாளில் {பஞ்சமியில்} சிராத்தம் செய்பவர்கள் மகன்கள் பலரை அடைகிறார்கள். ஆறாம் நாளில் {சஷ்டியில்} சிராத்தம் செய்வோர் பெரும் காந்தியை அடைகிறார்கள்.(11)
ஏழாம் நாளில் {சப்தமியில்} அதைச் செய்யும் ஒருவன் பெரும் புகழை அடைகிறான். எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அதைச் செய்யும் ஒருவன் வணிகத்தில் பெரும் லாபங்கள் ஈட்டுகிறான்.(12)
ஒன்பதாம் நாளில் {நவமியில்} அதைச் செய்யும் ஒருவன் பிளவில்லாத {ஒற்றைக்} குளம்பைக் கொண்ட விலங்குகள் பலவற்றை அடைவான். பத்தாம் நாளில் {தசமியில்} அதைச் செய்யும் ஒருவன் பசுக்கள் என்ற பெருஞ்செல்வத்தை அடைகிறான்.(13)
பதினொன்றாம் நாளில் {ஏகாதசி} அதைச் செய்யும் ஒருவன் துணிமணிகள் மற்றும் (பித்தளை மற்றும் பிற உலோகங்களாலான) பாத்திரங்கள் போன்ற செல்வத்தை அடைகிறான். அத்தகைய மனிதன் பிரம்ம காந்தியுடன் கூடிய மகன்கள் பலரையும் அடைவான்.(14)
பனிரெண்டாம் நாளில் {துவாதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், விரும்பினால் வெள்ளி மற்றும் தங்கத்தினாலான பல்வேறு வகை அழகிய பொருட்களை எப்போதும் காண்பான்.(15)
பதிமூன்றாம் நாளில் {திரையோதசியில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன், தன் இனத்தில் சிறப்புமிக்கவனாவான். பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} சிராத்தம் செய்பவனுடைய குடும்பத்தில் உள்ள இளையோர் அனைவரும் {புருஷர்கள் அனைவரும் இளமைப் பருவத்திலேயே} மரணமடைவார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மனிதன் போரில் சிக்குவான். புதுநிலவு நாளில் {அமாவாசையில்} சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைவான்.(16,17)
தேய்பிறையில் பத்தாம் நாள் {தசமி} தொடங்கி, (தசமி தொடங்கி அமாவாசை வரை வரும் நாட்களில்) பதினான்காம் நாளை {சதுர்த்தசியை} மட்டும் விட்டுவிட்டு வரும் அனைத்து நாட்களும் சிராத்தம் செய்வதற்கு மெச்சத்தகுந்த நாட்களே. தேய்பிறையின் மற்ற நாட்கள் {தேய்பிறையில் பிரதமை தொடங்கி நவமி வரையுள்ள நாட்கள்} அவ்வாறானவை அல்ல {சிராத்தம் செய்யத் தகுந்தவை அல்ல}.(18) மேலும், சிராத்த காரியங்களில் வளர்பிறையைவிடத் தேய்பிறை சிறந்ததாக இருப்பதைப் போலவே, முற்பகலைவிட, நாளின் பிற்பகலே சிறப்பானதாகும்[5]" என்றார் {பீஷ்மர்}.(19)
[5] கும்பகோணம் பதிப்பில், "கிருஷ்ண பக்ஷத்தில் சதுர்த்தசியைத் தவிர மற்றத் தசமி முதலான திதிகள் சிராத்தத்திற்குச் சிறந்தவை; மற்றவை அவ்வளவு சிறந்தவையல்ல. சிராத்தத்திற்குக் கிருஷ்ணபக்ஷமானது சுக்கிலபக்ஷத்தைவிட எப்படி விசேஷமோ அப்படியே முற்பகலைவிடப் பிற்பகல் விசேஷம்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 87ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |