Havis for Sraddha! | Anusasana-Parva-Section-88 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 88)
பதிவின் சுருக்கம் : சிராத்தத்தில் ஆகுதிகளாகப் பயன்படுத்தத் தகுந்த பொருட்களையும், அவற்றின் பலன்களையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பெரும்பலம் கொண்டவரே, பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் எந்தப் பொருள் வற்றாததாகிறது என்பதை எனக்குச் சொல்வீராக. மேலும் (காணிக்கை அளிக்கப்படும்) எந்த ஹவிஸ் {ஆகுதி பொருள்} காலத்திற்கும் நீடித்திருக்கிறது? உண்மையில் (கொடுக்கப்பட்டால்) நித்தியத் தன்மையை அடைவது எது?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர், "ஓ! யுதிஷ்டிரா, சிராத்த சடங்கை அறிந்த மனிதர்கள், சிராத்த நோக்கில் தகுந்ததெனக் கருதும் ஹவிஸ்கள் {வேள்வி நெருப்பில் இடத்தக்க பொருட்கள்} எவை என்பதையும், அவை ஒவ்வொன்றினாலும் விளையும் பலன்களையும் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, எள், அரிசி, வாற்கோதுமை, உளுந்து, நீர், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றைக் கொண்டு சிராத்தம் கொடுக்கப்பட்டால் ஒரு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருப்பார்கள்.(3) அதிக அளவிலான எள்ளைக் கொண்டு சிராத்தம் செய்யப்பட்டால், அத்தகைய சிராத்தம் வற்றாததாகிறது என மனு சொல்லியிருக்கிறார். அனைத்து வகை உணவுகளிலும், எள்ளே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.(4) சிராத்தங்களில் மீன்கள் காணிக்கையளிக்கப்பட்டால், இரண்டு மாத காலம் வரை பித்ருக்கள் நிறைவடைந்திருக்கின்றனர். {செம்மறி} ஆட்டிறைச்சியினால் மூன்று மாதங்கள் வரையும், முயலிறைச்சியினால் அவர்கள் நான்கு மாதங்கள் வரையும் நிறைவடைந்திருக்கின்றனர்.(5)
ஓ! மன்னா, வெள்ளாட்டு இறைச்சியால் ஐந்து மாதங்கள் வரையும், பன்றியிறைச்சியால் ஆறு மாதங்கள் வரையும், பறவைகளின் இறைச்சியால் ஏழு மாதங்கள் வரையும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(6) பிருஷதம் {புள்ளிமான்} என்றழைக்கப்படும் மான்களில் இருந்து கிடைக்கும் இறைச்சியால் எட்டு மாதங்கள் வரையும், ருருவிடம் {கறுப்பு மானில் இருந்து} கிடைக்கும் இறைச்சியால் ஒன்பது மாதங்கள் வரையும், கவய {மற்றொரு வகை மான்} இறைச்சியால் பத்து மாதங்கள் வரையிலும் அவர்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(7) எருமை இறைச்சியால் அவர்கள் பதினோரு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றனர். சிராத்தத்தில் அளிக்கப்படும் மாட்டிறைச்சியால் அவர்கள் ஒரு முழு வருடத்திற்கு நிறைவடைந்திருக்கிறார்கள்.(8) மாட்டிறைச்சியைப் போலவே நெய்யுடன் கலந்த பாயசம் பித்ருக்களுக்கு மிகவும் ஏற்புடையதாகும். வாத்ரீநச இறைச்சியால் பித்ருக்கள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் அளவுக்கு நிறைவடைந்திருக்கிறார்கள்[1].(9) பித்ருக்கள் இறந்த சந்திர நாளில் {திதியில்} ஆண்டுதோறும் காண்டாமிருகத்தின் இறைச்சி காணிக்கையளிக்கப்பட்டால் அது வற்றாததாகிறது. காலசாகம் என்றழைக்கப்படும் கீரை {அறைக்கீரை}, காஞ்சன மலரின் இதழ்கள், வெள்ளாட்டிறைச்சி ஆகியவை காணிக்கையளிக்கப்பட்டால் அவையும் வாற்றாதவையாகின்றன.(10)
[1] "வாத்ரீநசம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. ஒருவேளை இது பெரிய காளையாகவோ, ஒருவகைப் பறவையாகவோ, ஆடாகவோ இருக்கக்கூடும். பெருமளவில் காளையாகவே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எருமை மாம்ஸத்தினால் பதினொரு மாதங்களும் பிதிருக்களுக்குத் திருப்தியுண்டாகும். கோமாம்ஸத்தோடு சிராத்தம் செய்தால் ஒரு வருஷம் திருப்தியுண்டாகுமென்று சொல்லப்படுகிறது. நெய்யுடன் சேர்ந்த பாயஸமானது கோமாம்ஸத்தைப் போன்றது. விருஷபத்தின் மாம்ஸத்தினால் பனிரெண்டு வருஷம் பிதிரு திருப்தியுண்டாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "எருமை இறைச்சியால் மூதாதையர் பதினோரு மாதங்கள் இன்புற்றிருக்கின்றனர். மாட்டிலிருந்து உற்பத்தியாகுபவை ஈமச்சடங்கில் கொடுக்கப்பட்டால், நிறைவானது ஒரு வருடம் முழுவதும் நீடித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. மாட்டில் இருந்து உற்பத்தியாகும் பொருளைப் பாயசத்துடனும், நெய்யுடனும் கலந்து கொடுக்கலாம். வாத்ரீநச இறைச்சியால் நிறைவானது பனிரெண்டு வருடங்கள் வரை நீடித்திருக்கும்" என்றிருக்கிறது. மாட்டில் இருந்து உற்பத்தியாகும் பொருள் என்பதன் அடிக்குறிப்பில், "நாம் இம்மொழிபெயர்ப்புக்காக இவ்வாறு கூறவில்லை. இந்த உரையில் இறைச்சி குறித்துச் சொல்லப்படவில்லை. அது பசுவில் உற்பத்தியாகும் பொருள் என்றே கூறுகிறது" என்றிருக்கிறது. பாத்ரீநசம் என்பதன் அடிக்குறிப்பில், "ஒரு வேளை பெரிய பறவை ஒன்றாக இருக்கலாம்" என்றிருக்கிறது. இங்கே பிபேக்திப்ராயின் அடிக்குறிப்புக் கவனத்தில் கொள்ளத்தக்கது. மூலத்தில் "yathā gavyaṃ tathāyuktaṃ pāyasaṃ sarpiṣā saha vādhrīṇasasya māṃsena tṛptir dvādaśa vārṣikī" என்று இருக்கிறது. http://sacred-texts.com/hin/mbs/mbs13088.htm கவ்யம் என்பது பசுவின் உற்பத்திப் பொருளைக் குறிக்கும். மாமிம் (māṃsena) என்ற சொல் இதில் கையாளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. வாத்ரீநச (காளை / பெரிய பறவை) மாமிசமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக உண்மையில் பித்ருக்களாலேயே பாடப்பட்ட சில ஸ்லோகங்கள் (இவ்வுலகில்) பாடப்படுகின்றன. இவை பழங்காலத்தில் சனத்குமாரரால் சொல்லப்பட்டவை.(11) {அந்த ஸ்லோகங்கள்}, "எங்கள் குலத்தில் பிறந்தவன் எவனும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்கையில் {தக்ஷிணாயனத்தில்}, மக நட்சத்திரத்தின் கீழ் வரும் (தேய்பிறையின்) பதிமூன்றாம் நாளில் {திரயோதசியில்} எங்களுக்கு நெய் கலந்த பாயசம் கொடுக்க வேண்டும்.(12) எங்கள் குலத்தில் பிறந்த ஒருவன், நோன்பு நோற்பவனைப் போலவே, மக நட்சத்திரத்தின் கீழ் வெள்ளாட்டு இறைச்சியையோ, காஞ்சன மலரின் இதழ்களையோ {எங்களுக்குக்} காணிக்கையளிக்க வேண்டும். அவன், ஒரு யானையின் நிழலால் மறைக்கப்படும் இடத்தில் உரிய சடங்குகளுடன் நெய் கலந்த பாயசத்தை எங்களுக்குக் காணிக்கையளிக்கும் வகையில் அர்ப்பணிக்க வேண்டும்" {என்று சொல்கின்றன}[2].(13)
[2] கும்பகோணம் பதிப்பில், "தக்ஷிணாயனத்தில் மகநக்ஷத்திரம் கூடின திரயோதசியில் நெய்யுடன் சேர்ந்த பாயஸத்தைச் சால்வை முதலிய கம்பளத்தோடும், பொன் வெள்ளி முதலிய தக்ஷிணையோடும் நியமம் தவறாமல் கஜச் சாயையில் அதன் காதுக் காற்றாலே விசிறப்பட்டவையாகக் கொடுத்துச் சிராத்தம் செய்பவன் நமது குலத்திற்பிறப்பானா? ஒருவன் அநேகபுத்திரர்களை விரும்ப வேண்டும். ஏனெனில், உலகங்களில் பெயர் பெற்றதும் சிராத்தத்தை அக்ஷயமாகச் செய்வதுமாகிய அக்ஷயவடமென்னும் ஆலமரமிருக்கும் கயைக்கு ஒருவனாவது போவனே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உத்தராயணத்தின்போது, மக {மாசி} மாத பதிமூன்றாம் நாளில், எங்கள் குலத்தில் பிறந்த ஒருவன் நெய்யுடன் கலந்த பாயஸத்தை எங்களுக்குக் கொடுக்க வேண்டும். மக நட்சத்திரத்தன்று நோன்புகள் நோற்கும் ஒருவன் எங்களுக்கு வெள்ளாட்டு இறைச்சியுடன் காஞ்சன மலர் இதழ்களைக் காணிக்கை அளிக்க வேண்டும். ஹஸ்த நட்சத்திரத்தன்று, அவன் சடங்குகளுக்கு இணக்கமான வகையில், கொன்றை மர இலைகளால் செய்யப்பட்ட துடைப்பத்தைப் பயன்படுத்தி இதை {நெய்யுடன் கலந்த பாயசத்தைக்} காணிக்கை அளிக்க வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "மொழிபெயர்ப்பதில் நாம் கொஞ்சம் சுதந்திரம் எடுத்திருக்கிறோம். உண்மையில் இந்த உரையை மொழிபெயர்த்தால் யானையின் (ஹஸ்தி) நிழல் என்ற பொருள் வரும். இது எப்பொருளையும் தருவதாகத் தெரியாததால் நாம் ஹஸ்தி என்பதை ஹஸ்தம் என்று எடுத்துக் கொள்கிறோம்" என்றிருக்கிறது.
பல மகன்களைப் பெற ஆசைப்பட வேண்டும், ஏனெனில் அவர்களில் ஒருவனாவது, எது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறதோ, எதன் கிளைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும் வற்றானவாகின்றனவோ அந்த ஆலமரம் நிற்கும் கயைக்கு (தன் மூதாதையருக்குச் சிராத்தம் செய்வதற்காகச்) செல்வான்[3].(14) சிறிதளவு நீர், கிழங்குகள், கனிகள், இறைச்சி, அரிசி ஆகியவற்றைத் தேனில் கலந்து ஆண்டுதோறும் {குறிப்பிட்ட மூதாதையரின்} இறந்த நாளில் காணிக்கையளித்தால் அவை வற்றாதனவாகின்றன" என்றார் {பீஷ்மர்}.(15)
[3] "இந்த நாள்வரையிலும் கூட கயையின் புனிதத்தன்மை உலகளாவிய அளவில் இந்துக்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்படுகிறது. அங்கே, ‘அக்ஷயம்’ அல்லது வற்றாத ஆலம் என்றழைக்கப்படும் ஆலமரத்தின் கீழ் சிராத்தங்கள் செய்யப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 88ல் உள்ள சுலோகங்கள் :15
ஆங்கிலத்தில் | In English |