The merits of Shraddha performed under different constellations! | Anusasana-Parva-Section-89 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 89)
பதிவின் சுருக்கம் : சிராத்தங்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் செய்யப்பட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை சசபிந்துவுக்குச் சொன்ன யமன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, வெவ்வேறு நட்சத்திரங்களில் விரும்பினால் செய்ய வேண்டிய {கட்டாயமில்லா} சிராத்தங்களைக் குறித்து மன்னன் சசபிந்துவிடம் யமன் சொன்னதை உனக்குச் சொல்லப்போகிறேன்; கேட்பாயாக[1].(1)
[1] "அனைத்து அறச் செயல்களும் ஒன்று "நித்யம்" அல்லது "காம்யம்" என்ற வகையில் இருக்கின்றன. நித்ய வகையில் வரும் செயல்கள் கட்டாயமானவையும், எந்தப் பலனையும் தராதவையும், செய்யாமல் விட்டால் பாவம் தரக்கூடியவையுமாகும். காம்ய வகையில் வரும் செயல்கள் கட்டாயமில்லாதவை, பலன் கொடுக்கவல்லவை, செய்யாமல் விட்டால் பாவத்தைத் தராதவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எப்போதும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன், புனித நெருப்பை நிறுவி ஒரு வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன் நோயில் இருந்து விடுபட்டு, தன் பிள்ளைகளுடன் சொர்க்கத்திற்கு உயர்கிறான்.(2)
பிள்ளைகளைப் பெற விரும்புபவன், ரோகிணி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும், அதே வேளையில் சக்தியைப் பெற விரும்புபவன் மிருசீரிஷ நட்சத்திரத்தில் சிராத்தம் செய்ய வேண்டும். ஆர்த்திரா {திருவாதிரை} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒரு மனிதன் கடும் செயல்களைச் செய்தவனாகிறான் {அவன் கொடுஞ்செய்கையுள்ளவனாவான்}.(3)
புனர்பூசத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் உழவில் லாபம் ஈட்டுவான். வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் விருப்பமுள்ள மனிதன் புஷ்யத்தில் {பூசத்தில்} சிராத்தம் செய்ய வேண்டும்.(4)
அஷ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் அதைச் செய்யும் ஒருவன், வீரமைந்தர்களைப் பெறுகிறான். மகத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் தன் இனத்தில் சிறந்தவனாகிறான்.(5)
பால்குனியில் {பூரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் நற்பேறு பெறுகிறான். பிந்தைய பால்குனத்தில் {உத்தரத்தில்} அதைச் செய்பவன் பல பிள்ளைகளைப் பெறுகிறான்; ஹஸ்த நட்சத்திரத்தில் அதைச் செய்பவன் தன் விருப்பங்கள் கனியும் நிலையை அடைகிறான்.(6)
சித்திரை மாதத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் பேரழகுடன் கூடிய பிள்ளைகளைப் பெறுகிறான். ஸ்வாதி நட்சத்திரத்தில் அதைச் செய்வதன் மூலம் ஒருவன் வணிகத்தில் லாபம் ஈட்டுகிறான்.(7)
பிள்ளைகளைப் பெற விரும்பும் மனிதன், விசாக நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் தன் விருப்பம் கனியும் நிலையை அடைகிறான். அனுராதாவில் {அனுஷத்தில்} செய்வதன் மூலம் ஒருவன் மன்னர்களுக்கு மன்னனாகிறான் {சக்கரவர்த்தியாகிறான்}.(8)
ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, ஜியேஷ்ட {கேட்டை} நட்சத்திரத்தில் பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் பக்தியுடனும், பணிவுடனும் காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் அரசுரிமையை அடைகிறான்.(9)
மூல நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் ஒருவன் உடல் நலத்தை அடைகிறான், ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்பவன், சிறந்த புகழை ஈட்டுகிறான். ஆஷாதத்தில் {பூராடத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் கவலைகள் அனைத்தில் இருந்து விடுபட்டு மொத்த உலகத்தையும் சுற்றுவதில் வெல்கிறான்.(10)
அபிஜித் {உத்திராடம்} நட்சத்திரத்தில் அதைச்செய்வதன் மூலம் ஒருவன் உயர்ந்த ஞானத்தை அடைகிறான். சிரவணத்தில் {திருவோணம்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் இவ்வுலகத்தில் இருந்து செல்லும்போது மிக உயர்ந்த கதியை அடைகிறான்.(11)
தனிஷ்ட {அவிட்டம்} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்யும் மனிதன் ஒரு நாட்டின் ஆட்சியாளனாகிறான். வருணனால் தலைமைதாங்கப்படும் நட்சத்திரத்தில் (சதபிஷ {சதயம்} நட்சத்திரத்தில்} அதைச் செய்வதன் மூலம் ஒருவன் மருத்துவராக வெற்றி அடைகிறான்.(12)
முந்தைய பாத்திரபத {பூரட்டாதி} நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் பெரும் அளவிலான வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும் உடைமையாக அடைகிறான்; அதையே பிந்தைய பாத்திரபதத்தில் {உத்திரட்டாதியில்} செய்யும்போது அவன் ஆயிரம் பசுக்களை அடைகிறான்.(13)
ரேவதி நட்சத்திரத்தில் சிராத்தம் செய்வதன் மூலம் ஒருவன் அதிகமான வெண்கல மற்றும் தாமிரப் பாத்திரங்களைச் செல்வமாக அடைகிறான். அஸ்வினியில் செய்வதன் மூலம் அவன் பல குதிரைகளை அடைகிறான். அதே வேளையில் பரணியில் செய்தால் அவன் நீண்ட வாழ்நாளை {ஆயுளைப்} பெறுகிறான்.(14)
சிராத்தம் குறித்த இந்த விதிமுறைகளைக் கேட்ட மன்னன் சசபிந்து, அதன்படியே செயல்பட்டு, மொத்த உலகையும் அடக்குவதில் எளிதாக வென்று {உலகம் முழுவதும்} ஆட்சி செலுத்தினான்" என்றார் {பீஷ்மர்}.(15)
அநுசாஸனபர்வம் பகுதி – 89ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |