Shraddha offerings! | Anusasana-Parva-Section-90 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 90)
பதிவின் சுருக்கம் : சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படுவனவற்றை எவ்வகைப் பிராமணர்களுக்குக் கொடுக்கலாம்; பந்திக்குத் தகுந்த, தகாத பிராமணர்கள் யாவர் என்பவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை எவ்வகைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் என்பது குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கொடை குறித்த விதிகளை அறிந்த க்ஷத்திரியன், (கொடையளிக்கும்போது) ஒருபோதும் பிராமணர்களைச் சோதிக்கக்கூடாது. எனினும், தேவ மற்றும் பித்ரு வழிபாட்டுச் செயல்கள் {கர்மங்கள்} அனைத்திலும் பரிசோதனை செய்வது முறையே எனச் சொல்லப்படுகிறது.(2)
மனிதர்கள், தேவர்களிடம் இருந்து வரும் பக்தியால் நிறையும்போது மட்டுமே பூமியில் அவர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள். எனவே ஒருவன் தேவர்களுக்கே கொடையளிப்பதாகக் கருதி, பிராமணர்கள் அனைவருக்கும் கொடையளித்த பிறகே தேவர்களை அணுக வேண்டும்.(3) எனினும் சிராத்தங்களில், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு நுண்ணிறிவுமிக்க மனிதன், (சிராத்த சடங்குகளைச் செய்வதற்குத் துணை புரியவும், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளைக் கொடையளிக்கவும் தக்க) பிராமணர்களைச் பரிசோதித்தறிய வேண்டும். அத்தகைய ஆய்வு அவர்களுடைய பிறப்பு, நடத்தை, வயது, தோற்றம், கல்வி, பெற்றோரின் உன்னத நிலை ஆகியவை தொடர்புடையதாக இருக்க வேண்டும்.(4)
பிராமணர்களில் சிலர் தாங்கள் அமர்ந்த பந்தியைக் கெடுப்பவர்களாகவும், சிலர் அதைப் புனிதப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ! மன்னா, பந்தியில் தவிர்க்கப்பட வேண்டிய பிராமணர்கள் யாவர் என்பதைச் சொல்கிறேன், கேட்பாயாக[1].(5) சூதுநிறைந்தவனாகவோ, கருவைக் கொன்ற குற்றம் புரிந்தவனாகவோ, காச நோய் கொண்டவனாகவோ, விலங்குகளை வளர்ப்பவனாகவோ, வேத கல்வியற்றவனாகவோ, கிராமத்தின் பொதுப் பணியாளனாகவோ {ஊர்ப் பொதுவுக்கு ஏவல் தொழில் செய்பவனாகவோ}, கடன் கொடுத்து, அதில் வரும் வட்டியைக் கொண்டு வாழ்பவனாகவோ, பாடகனாகவோ, அனைத்துப் பொருட்களை விற்பவனாகவோ,(6) தீ வைப்பவனாகவோ, நஞ்சு கொடுப்பவனாகவோ, காமத்தரகு தொழில்புரிபவனாகவோ, சோமத்தை விற்பவனாகவோ, கைவரைநூல் {கைரேகை சாஸ்திர} அறிஞனாகவோ, மன்னனிடம் பணிசெய்பவனாகவோ {அரசு ஊழியனாகவோ}, எண்ணெய் விற்பவனாகவோ, வஞ்சகனாகவோ, பொய் உறுதி மொழியேற்பவனாகவோ,(7) தந்தையிடம் சச்சரவு செய்பவனாகவோ, தன் வீட்டில் தன் மனைவியின் கள்ளக்காதலைப் பொறுத்துக் கொள்பவனாகவோ {வேறு புருஷனை வைத்திருக்கும் மனைவியுள்ளவனாகவோ}, சபிக்கப்பட்டவனாகவோ, கள்வனாகவோ, ஏதோவொரு கைத்தொழில் செய்து பிழைப்பவனாகவோ,(8) வேடம் தரிப்பவனாகவோ {நடிகனாகவோ}, நடத்தையில் வஞ்சனையுள்ளவனாகவோ, நண்பர்களென அழைக்கப்படுபவர்களுக்குப் பகையாக நடப்பவனாகவோ {நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவனாகவோ}, பிறன்மனை நயப்பவனாகவோ, சூத்திரர்களின் ஆசானாகவோ {நோன்பு நோற்காதவர்களுக்குக் கற்பிப்பவனாகவோ}, ஆயுதந்தரிக்கும் தொழிற் செய்பவனாகவோ,(9) (வேட்டைக்காக) நாய்களுடன் திரிபவனாகவோ, நாயால் கடிபட்டவனாகவோ, மூத்த சகோதரர்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவனாகவோ, விருத்தசேதனம் செய்து கொண்டவனாகவோ {தோல் நோயுள்ளவனாகவோ / தொழுநோயாளியாகவோ}[2], தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனாகவோ,(10) நடிகனாகவோ, ஒரு தேவனை {தெய்வத்தை} அலங்கரித்து {பூஜை செய்து} வாழ்பவனாகவோ, கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களின் சேர்க்கைகளைக் கணிப்பதன் மூலம் வாழ்பவனாகவோ {ஜோதிடனாகவோ} இருப்பவர்கள் பந்தியில் தவிர்க்கப்படத் தகுந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(11)
[1] பிராமணர்கள் உணவூட்டப்படும்போது அவர்கள் நீண்ட வரிசையில் அமர வைக்கப்படுவார்கள். தீமைகளால் களங்கப்பட்டவர்கள் அந்த வரிசையில் தவிர்க்கப்பட வேண்டும். வரிசையில் இருந்து {அப்படிப்பட்ட பிராமணர்களை} அவ்வாறு தவிர்ப்பது {அவர்களுக்கு} முற்றிலும் சட்டப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] கங்குலியில் "விருத்த சேதனம் செய்து {ஆண்குறியின் முன்தோலை நறுக்கிக்} கொண்ட ஒருவன் என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "பரிவித்தியும் தோல்ரோகமுள்ளவன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தொழுநோயாளி" என்றிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் அத்தகைய பிராமணர்களால் உண்ணப்பட்டால், அவை (பித்ருக்களின் வயிற்றை நிரப்புவதற்குப் பதிலாக) ராட்சசர்களின் வயிற்றை நிரப்புமென வேதமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(12) ஒரு சிராதத்தத்தில் உண்ட பிறகு, அன்றைய வேதகல்வியைத் தவிர்க்காதவனும், அந்த நாளில் ஒரு சூத்திரப் பெண்ணுடன் பாலினக் கலவி புரிந்தவனுமான ஒருவன், தன்னுடைய அத்தகைய செயல்களின் விளைவாகத் தன்னுடைய பித்ருக்கள் ஒரு மாத காலத்திற்குச் சாணத்தில் கிடக்க நேரிடும் என்பதை அறிய வேண்டும்.(13) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள், சோமத்தை விற்கும் பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை மனிதவுடற் கழிவுகளாக {மலஜலமாக} மாறும்; மருத்துவத் தொழில் பழகும் ஒருபிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை சீழாகவும், குருதியாகவும் மாறும்; தேவனை அலங்கரித்து {பூஜை செய்து} வாழும் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் எக்கனியையும் {எப்பலனையும்} கொடுக்கத் தவறும்; வட்டித் தொழிலில் வாழ்பவனுக்குக் கொடுக்கப்பட்டால் புகழ்க்கேட்டுக்கு வழிவகுக்கும்;(14) வணிகத்தில் ஈடுபடும் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவை இம்மையிலும், மறுமையிலும் கனி {பலன்} கொடுக்காது. விதவையான தாய்க்கு (இரண்டாம் கணவன் மூலம்) பிறந்த பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டால், அவை சாம்பலில் ஊற்றப்படும் ஆகுதிகளைப் போலக் கனியற்றவையாகிவிடும்.(15)
(சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும்) ஹவ்யகவ்யங்களை, தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாதவர்களும், தங்கள் வகைக்குரிய நல்லொழுக்க விதிகளைப் பின்பற்றாதவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பவர்கள், மறுமையில் எவ்வித பலனையும் அத்தகைய கொடைகள் உண்டாக்காததைக் காண்பார்கள்.(16) இத்தகைய மனிதர்களின் இயல்புகளை அறிந்தும், அவர்களுக்கு இத்தகைய பொருட்களைக் கொடையளிக்கும் சிறுமதியாளன், தன்னுடைய நடத்தையால் தன் பித்ருக்களை மறுமையில் மனிதக் கழிவுகளை உண்ணச் செய்கிறான்.(17) பிராமணர்களில் இழிந்தவர்களான இவர்கள் பந்தியில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறிவாயாக. சூத்திரர்களுக்குப் போதிக்கும் சக்தியற்ற பிராமணர்களும் அதே வகையைச் சார்ந்தவர்களே.(18) குருடனாக இருக்கும் பிராமணன் பந்தியில் உள்ள அறுபது பேரைக் களங்கப்படுத்துகிறான்; ஆண்மையற்ற ஒருவன் நூறு பேரைக் களங்கப்படுத்துகிறான். ஓ! மன்னா, வெண்குஷ்டம் கொண்டவன், எத்தனை பேரைப் பார்ப்பானோ அத்தனை பேரையும் களங்கப்படுத்துகிறான்.(19) தலையைத் துணியால் மூடிக் கொண்டும், தெற்கு நோக்கி அமர்ந்தும், கால்களில் பாதுகைகளை அணிந்த நிலையிலும் சிராத்தங்களில் உண்ணப்படும் எதுவும், அசுரர்களையே நிறைவடையச் செய்யும்.(20)
வன்மத்துடனும், மதிப்பில்லாமலும் கொடுக்கப்படும் எதுவும், அசுர இளவரசனின் (பலியின்) பங்காகிறது என்று பிரம்மனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது.(21) நாய்களையும், பந்தியைக் கெடுக்கும் இத்தகைய பிராமணர்களையும், சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் தங்கள் கண்களைச் செலுத்த அனுமதிக்கக்கூடாது. இந்தக் காரணத்திற்காக, பிறர் பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட இடங்களிலேயே சிராத்தங்கள் நடத்தப்பட வேண்டும். அந்த இடத்தில் எள்ளைத் தூவி {இறைத்து} வைத்திருக்க வேண்டும்.(22) எள் இல்லாமல் செய்யப்படும், அல்லது ஒரு மனிதனால் கோபத்துடன் செய்யப்படும் சிராத்தத்தில் ராட்சசர்களாலும், பிசாசங்களாலும் ஹவி களவாடப்படும்.(23) பந்தியில் தவிர்க்கப்படத் தகுந்தவனை உண்ண அழைத்து சிராத்தம் செய்யும் மூடன், ஒப்பீட்டளவில் {அத்தகைய} ஒருவனால் பார்க்கப்படும் பிராமணர்களின் எண்ணிக்கை அளவுக்கான {அந்த சிராத்தத்திற்குரிய} பலனை இழப்பான்.(24)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பந்தியைப் புனிதப்படுத்துபவர்கள் யாவர் என்பதை இப்போது சொல்கிறேன், கேட்பாயாக. பரிசோதனையின் மூலம் அவர்களை நீ கண்டறிய வேண்டும்.(25) தூய அறிவு, வேத கல்வி, நோன்புகள், நியமங்களையும், நல்ல மற்றும் அற நடத்தையையும் கொண்ட பிராமணர்கள் அனைவரும் அனைத்தையும் புனிதப்படுத்துபவர்களாக அறியப்பட வேண்டும்.(26) பந்தியில் அமரத் தகுந்தவர்கள் யாவர் என்பதைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். நான் இப்போது குறிப்பிடும் வகையில் நீ அவர்களை அறிந்து கொள்ளலாம். மூன்று நாசிகேதங்கள்[3], ஐந்து வேள்வி நெருப்புகள்[4], ஐந்து சுபர்ணங்கள்[5], (வேத அங்கங்களெனும்) ஆறு கிளைகள் ஆகியவற்றை அறிந்தவனும்,(27) வேதங்களைப் போதித்த தந்தைமாரின் வழித்தோன்றலும், சந்தங்களை நன்கறிந்தவனும், ஜியேஷ்ட சாமத்தை அறிந்தவனும்[6], பெற்றோரின் ஆளுகைக்குக் கீழ்ப்படிந்தவனும், வேதங்களை அறிந்தவனும், பத்துத் தலைமுறை மூதாதையர்களைக் கொண்டவனும்,(28) தான் மணந்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே அவர்களுடைய பருவகாலங்களில் கலவிபுரிபவனும், அறிவாலும், வேதத்தாலும், நோன்புகள் மற்றும் நியமங்களாலும் தூய்மையடைந்தவனுமான ஒரு பிராமணன் பந்தியைப் புனிதப்படுத்துகிறான்.(29)
[3] கும்பகோணம் பதிப்பில் திரிநாசிகேதன் என்ற அடிக்குறிப்பில் "நாசிகேதமென்ற அக்னியில் மூன்று காலம் அக்னிஹோத்திரம் செய்பவன் என்பர் சிலர்; வேதத்தில் நாசிகேதமென்ற பெயருள்ள மூன்று அத்யாயங்களை அத்தியயனம் செய்தவன் என்பர் வேறு சிலர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில் உள்ள அடிக்குறிப்பில், "யமன் நசிகேதனுக்கு வேள்வி நெருப்பைக் குறித்துக் கற்பித்தான். ஒருவேளை இங்கே குறிப்பிடப்படும் மூன்று என்பது யமனின் வீட்டில் மூன்று நாட்கள் இருந்து அவன் பெற்ற மூன்று வரங்களைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும். ஈமச் சடங்கின் {சிராத்தத்தின்} ஒவ்வொரு செயலும் மும்முறை செய்யப்படுகிறது. நசிகேதனைக் குறித்துச் சொல்லும் மூன்று உரைகள் என இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சூத்திர இலக்கியம் பரிந்துரைக்கிறது" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில் பஞ்சாக்நியுடையவன் என்ற அடிக்குறிப்பில், "கார்ஹபத்தியம், ஆஹவனீயம், தக்ஷிணம், ஸப்யம், ஆவஸத்யம் என்னும் ஐந்து அக்னிகளையுடைய அக்னிஹோத்ரி" என்றிருக்கிறது.[5] கும்பகோணம் பதிப்பில் திரிஸுபர்ணன் எனும் அடிக்குறிப்பில், "ரிக் வேதத்தில் ஸுபர்ணமென்னும் மூன்று மந்திரம் தெரிந்தவன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுபர்ணம் என்ற சொல் குறிப்பிடப்படும் மூன்று ஸ்லோகங்களைக் குறிப்பிடுவதாக இஃது இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.[6] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சாம வேதத்தின் ஒரு குறிப்பிட்ட பெயர்" என்றிருக்கிறது.
அதர்வசிரசை {அதர்வண வேதத்தைப்} படிப்பவனும்[7], பிரம்மச்சரிய நடைமுறைகளை நோற்பதில் அர்ப்பணிப்புள்ளவனும், அற நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளனும், வாய்மை நிறைந்தவனும், அறவொழுக்கம் ஒழுகுபவனும், தன் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளை முறையாக நோற்பவனும்,(30) களைப்படையும் வகையில் தீர்த்த நீர்நிலைகளில் நீராடுதவற்கு முயற்சி செய்பவனும், உரிய மந்திரங்களுடன் வேள்விகளைச் செய்து இறுதி நீராடலைச் செய்தவர்களும்,(31) கோபத்தின் ஆளுகையில் இருந்து விடுபட்டவர்களும், கலக்கமடையாதவர்களும், மன்னிக்கும் இயல்பைக் கொண்டவர்களும் {பொறுமைசாலிகளும்}, புலனடக்கத்துடன் கூடிய தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான மனிதர்கள் சிராத்தங்களுக்கு அழைக்கப்பட வேண்டும்.(32) இவர்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் வற்றாததாகிறது. உண்மையில் இவர்களே பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாவர். உயர்ந்த அருளைக் கொண்ட வேறு சிலரும் பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாகக் கருதப்பட வேண்டும்.(33)
[7] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதர்வசிரஸென்னும் அதர்வண வேதத்தின் உபநிஷத்தைப் பிரம்மசாரி விரதத்தோடு அத்தியயனஞ்செய்தவன்" என்றிருக்கிறது.
அவர்கள் யதிகள், மோக்ஷ அறத்தைக் குறித்து அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளர்கள், அற்புத நோன்புகளை முறையாக நோற்பவர்கள், குவிந்த மனத்தோடு (புனித) வரலாறுகளை முதன்மையான பிராமணர்களுக்கு உரைப்பவர்கள் ஆவர் {இவர்களும் பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாகக் கருதப்பட வேண்டும்}.(34) பாஷ்யங்களை {சாத்திர விரிவுரைகளை} அறிந்தவர்கள், இலக்கணக் கல்வியில் அர்ப்பணிப்புள்ளவர்கள், புராணங்களைப் படிப்பவர்கள், தர்மசாத்திரங்களைப் படிப்பவர்கள்,(35) (தர்ம சாத்திரங்கள் மற்றும் புராணங்களைப் படித்துவிட்டு) அவற்றில் விதிக்கப்பட்டுள்ள தரத்தில் செயல்படுபவர்கள், ஆசானின் வசிப்பிடத்தில் (குறிப்பிட்ட காலம்) வாழ்ந்தவர்கள், பேச்சில் வாய்மை நிறைந்தவன், ஆயிரங்களைக் கொடையளித்தவன்,(36) வேதங்கள், சாத்திரங்கள், தத்துவச் சூத்திரங்கள் அனைத்திலும் {இவை அனைத்தின் அறிவில்} முதன்மையானவர்கள் ஆகியோர் தாங்கள் காணும் தொலைவுக்குரிய அளவில் அப்பந்தியைப் புனிதப்படுத்துபவர்களாவர்.(37) பந்தியில் அமர்பவர்கள் அனைவரையும் அவர்கள் புனிதப்படுத்துவதாலேயே அவர்கள் பந்திகளைப் புனிதப்படுத்துபவர்கள் {பந்தி பாவனர்} என்றழைக்கப்படுகிறார்கள். வேத ஆசிரியராக இருந்த தந்தையின் வழித்தோன்றலும், தானே வேத ஆசிரியராக இருப்பவனுமாகிய ஒரே ஒருவனே கூடத் தன்னைச் சுற்றிலும் முழுமையாக ஏழு மைல்களை {இரண்டரை குரோசங்கள் தொலைவைப்} புனிதப்படுத்துகிறான் என்று பிரம்மஞானிகள் சொல்கிறார்கள்.(38) ரித்விக்காக இல்லாதவன், வேத ஆசிரியராக இல்லாதவன் ஆகியோர் ஒரு சிராத்தத்தில் முதன்மையான இருக்கையில் அமர்ந்தால், அங்கே இருக்கும் பிற ரித்விக்குகளின் அனுமதியோடே அவன் (தனது அச்செயலின் மூலம்) பந்தியில் அமர்ந்திருப்போர் அனைவரின் பாவங்களை எடுத்துக் கொள்கிறான்.(39) மறுபுறம், வேதங்களை அறிந்தவனும், பந்தியைக் கெடுக்கவல்லதாகக் கருதப்படும் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் (சிராத்தத்தில் முதன்மையான இருக்கையில் அமர்வதன் மூலம்) வீழ்ந்துவிட்டவனாகக் கருதப்பட மாட்டான். அத்தகைய மனிதன் நிச்சயம் அப்பந்தியைப் புனிதப்படுத்துபவனாகவே இருப்பான்.(40)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தக் காரணங்களுக்காகவே சிராத்தங்களுக்கு அழைப்பதற்கு முன் நீ பிராமணர்களை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். தன் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவர்களையும், நல்ல குடும்பங்களில் பிறந்தவர்களையும், பெருங்கல்வி கற்றவர்களையும் மட்டுமே நீ அழைக்க வேண்டும்.(41) தன் நண்பர்களுக்கு உணவூட்ட மட்டுமே சிராத்தங்களைச் செய்பவனுடைய ஹவி, தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்யாமல் சொர்க்கத்திற்கு உயர்வதில் தவறுகிறது.(42) தான் செய்யும் சிராத்தங்களில் (தகுந்த மனிதர்களை அழைத்து அவர்களுக்கு உணவூட்டுவதில் முறையான கவனம் செலுத்தாமல்) நண்பர்களையும், உறவினர்களையும் மட்டுமே திரட்டும் ஒருவன் (துன்பங்கள் மற்றும் தடைகளில் இருந்து விடுபட்டு ஒளியூட்டப்பட்ட பாதையாக இருக்கும்) தேவ பாதையில் நடக்கத் தவறுகிறான். நண்பர்களை மட்டுமே திரட்டி, சிராத்தம் செய்யும் மனிதன், சொர்க்கத்திற்கு உயர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உண்மையில், நண்பர்களைக் கவனிக்கும் நிகழ்வாகச் சிராத்தங்களை மாற்றும் மனிதன், கட்டியிருந்த சங்கலி அறுபடும்போதே, தான் அமர்ந்திருந்த கொம்பில் இருந்தும் விடுபடும் பறவையைப் போலவே அவன் சொர்க்கத்திலிருந்து தொடர்பறுந்தவனாகி விடுவான்[8].(43) எனவே, சிராத்தம் செய்பவன் (அத்தகைய நிகழ்வுகளின்போது) தன் நண்பர்களைக் கௌரவிக்கக்கூடாது. வேறு சந்தர்ப்பங்களில் அவர்களை ஒன்றாகத் திரட்டி, அவர்களுக்குச் செல்வக்கொடை அளிக்கலாம். சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும் ஹவியும், கவியும் நண்பர்களாகவும், பகைவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும் இல்லாதவர்களுக்கே அளிக்கப்பட வேண்டும்.(44) வறண்ட நிலத்தில் விதை விதைத்தால் அது முளைக்காததைப் போலவோ, விதைக்காதவன் விளைச்சலின் பங்கைப் பெறாததைப் போலவோ சிராத்தக் காணிக்கைகளும், தகாத மனிதனால் உண்ணப்பட்டால் இம்மையிலும், மறுமையிலும் எப்பலனையும் உண்டாக்காது[9].(45)
[8] "சொர்க்கமென்பது ஒருவனுடைய செயலின் விளைவாகவே அமைகிறது என்பது கருத்து. அஃது அவனுடைய செயல்களின் பலன்களோடு தொடர்புடையது. சொர்க்கத்தில் இருந்து விழும் மனிதனும், தன் செயல்களின் பலன்களில் இருந்து தொடர்பறுந்த சொர்க்கமும் ஒன்றே. எனவே, அத்தகைய வீழ்ந்த மனிதன், சொர்க்கத்தில் இருந்து தொடர்பறுந்தவன், விலங்கு {சங்கிலி} அறுபட்டுக் கொம்பில் இருந்து விடுபடும் பறவை போன்றவனாவான். இந்த உவமையைப் புரிந்து கொள்வது மிகச் சிரமமாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சிராத்தத்தினால் சினேகம் சம்பாதிப்பவன் பிடிப்பற்ற அரசம்பழம்போல ஸ்வர்க்கலோகத்திலிருந்து கீழே விழுவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் மக்களை ஒன்றுதிரட்டுவதற்காகவே ஈமச் சடங்கைச் செய்யும் மனிதன் புலன் பற்றுகளில் இருந்து ஒருபோதும் விடுபடுவதில்லை. அவன் சொர்க்கலோகத்தில் இருந்து விலகியிருக்கிறான்" என்றிருக்கிறது. இங்கே கும்பகோணம் பதிப்பு தெளிவாக இருப்பது போலத் தெரிகிறது.[9] கும்பகோணம் பதிப்பில், "களர் மண்ணில் விதைத்த விதை முளையாமலும், விதைத்தவன் அதன் பலனையடையாமலும் போவது போலவே தகுதியற்றவர்கள் புசிக்கும் சிராத்தம் இம்மையிலும் மறுமையிலும் பயன்படாது" என்றிருக்கிறது.
வேத கல்வியற்ற பிராமணன், புல் அல்லது வைக்கோல் எரிவதால் உண்டாகும் நெருப்பைப் போன்றிருந்து, விரைவில் அத்தகை நெருப்பைப் போலவே அணைந்து போகிறான். வேள்வி நெருப்பின் சாம்பலில் ஆகுதிகளை ஊற்றக்கூடாது என்பதைப் போலவே சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளை அத்தகைய ஒருவனுக்கு {வேத கல்வியற்ற பிராமணனுக்குக்} கொடுக்கக்கூடாது.(46) சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் (தகுந்த மனிதர்களுக்குக் கொடையளிக்கப்படுவதற்குப் பதிலாக) {சிராத்தங்களைச்} செய்பவர்களுக்குள்ளேயே பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்போது, அவை பிசாசங்களுக்கான கொடைகளாகக் கருதப்படும் நிலையை அடைகின்றன. அத்தகைய காணிக்கைகள் தேவர்களையோ, பித்ருக்களையோ நிறைவடையச் செய்வதில்லை. மறுவுலகை அடைவதற்குப் பதிலாக அவை, கன்றையிழந்து கொட்டிலுக்குள் திரியும் பசுவைப் போல இங்கேயே சுற்றித் திரிகின்றன.(47) வேள்வி நெருப்பு அணைந்து உண்டாகும் சாம்பலில் ஊற்றப்படும் நெய் ஆகுதியானது தேவர்களையோ, பித்ருக்களையோ ஒருபோதும் அடையாததைப் போலவே, ஒரு நர்த்தகருக்கோ, பாடகருக்கோ, அளிக்கப்படும் கொடை, அல்லது வஞ்சகனுக்கோ, பொய்யனுக்கோ கொடுக்கப்படும் தக்ஷிணையும் ஒரு பலனையும் உண்டாக்குவதில்லை.(48) பொய்யனுக்கோ, வஞ்சகனுக்கோ அளிக்கப்படும் தக்ஷிணையானது, கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் எந்த நன்மையையும் அளிப்பதில்லை. அத்தகைய தக்ஷிணை அழிவைத் தருவதும், நிந்தனைக்குரியதுமாகும். அதைச் செய்யும் மனிதனின் பித்ருக்கள் தேவர்களின் பாதையில் இருந்து விழ நேரிடும்.(49)
ஓ! யுதிஷ்டிரா, கடமைகள் அனைத்தையும் அறிந்த முனிவர்களால் நிறுவப்பட்ட எல்லைகளுக்குள்ளேயே எப்போதும் நடப்பவர்களும், தங்கள் திறனில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களுமான மனிதர்களையே தேவர்கள் பிராமணர்களாக அறிகிறார்கள்.(50) ஓ! பாரதா, வேத கல்வி, அறிவு, தவம், செயல்கள் {கர்மங்கள்} ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களை முனிவர்கள் என்றறிய வேண்டும். சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் அறிவில் அர்ப்பணிப்புள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிராமணர்களைக் குறித்து ஒருபோதும் தவறாகப் பேசாதவர்களையே மனிதர்களாகக் கருத வேண்டும்.(52) சபைக்கூட்டங்களுக்கு மத்தியில் நேரும் உரையாடல்களில் பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசும் மனிதர்களுக்குச் சிராத்த நிகழ்வுகளில் ஒருபோதும் உணவு அளிக்கப்படக்கூடாது. ஓ! மன்னா, பிராமணர்கள் பழிக்கப்பட்டால், அவர்கள் தங்களைப் பழித்தவனின் மூன்று தலைமுறைகளை அளித்துவிடுவார்கள்[10].(53) ஓ! மன்னா, இதுவே வைகானச முனிவர்களின் அறிக்கையாகும். வேதங்களை அறிந்த பிராமணர்களை ஒரு தொலைவிலேயே கண்டுவிட முடியும்.(54) ஒருவன் பிராமணர்களை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சிராத்தங்களில் அத்தகையவர்களுக்கே காணிக்கை அளிக்க வேண்டும். ஓ! பாரதா, ஆயிரமாயிரம் போலிப் பிராமணர்களுக்கு உணவூட்டுவதால் விளையும் பலனை, வேத அறிவுள்ள ஒரேயொரு பிராமணனுக்கு உணவூட்டுவதன் மூலம் ஒருவன் அடைந்துவிடலாம்" என்றார் {பீஷ்மர்}.(55)
[10] "அஃதாவது, அத்தகைய செயலின் விளைவால், பழித்தவன், அவனுடைய தந்தை மற்றும் அவனுடைய மகன் ஆகியோருக்கு அழிவு நேரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 90ல் உள்ள சுலோகங்கள் : 55
ஆங்கிலத்தில் | In English |