History of Shraddha! | Anusasana-Parva-Section-91 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 91)
பதிவின் சுருக்கம் : சிராத்தம் உண்டான வரலாறு மற்றும் சிராத்தத்தில் கைவிட வேண்டியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "சிராத்தம் என்பது முதலில் யாரால், எந்த நேரத்தில் கருதப்பட்டது? அதன் சாரம் என்ன? {அது எவ்வகையானது?} பிருகு மற்றும் அங்கிரஸின் வழித்தோன்றல்கள் மட்டுமே உலகத்தில் இருந்த நேரத்தில் எந்த முனிவர் சிராத்தத்தை நிறுவினார்?(1) சிராத்தத்தில் எச்செயல்களைச் செய்யக் கூடாது? கிழங்குகளும், கனிகளும் காணிக்கையளிக்கப்படும் சிராத்தங்கள் யாவை? சிராத்தங்களில் என்ன வகை அரிசி தவிர்க்கப்பட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, சிராத்தம் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது, அறிமுகம் செய்த காலம், அந்தச் சடங்கின் சாரம் {வகை}, அதைக் கருதிய முனிவர் யார் என்பனவற்றைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! குரு குலத்தவனே, சுயம்புவான பிரம்மனில் இருந்து அத்ரி உண்டானார். அத்ரியின் குலத்தில் தத்தாத்ரேயர் என்ற பெயரில் ஒரு முனிவர் பிறந்தார்.(4) தத்தாத்ரேயர், தவத்தையே செல்வமாகக் கொண்டவரும், நிமி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார். நிமி, பெரும் மேனியழகைக் கொண்ட ஸ்ரீமான் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றார்.(5) முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கழிந்ததும், கடுந்தவங்களைச் செய்தவரான ஸ்ரீமான் காலத்தின் ஆளுகைக்கு வீழ்ந்து, இவ்வுலகை விட்டுச் சென்றார்.(6) அவரது தந்தையான நிமி, சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் சடங்கின் படி தூய்மைக்கான கர்மங்களைச் செய்து, தன் மகனின் இழப்பையே தொடர்ந்து நினைத்துக் கொண்டு பெருந்துயரில் நிறைந்திருந்தார்[1].(7)
[1] "இந்தத் தூய்மை சடங்குங்கள் வழக்கமான இரங்கற்காலத்திற்குப் பிறகு செய்யும் சிரைத்தல், நீராடல் மற்றும் புதிய துணிமணிகளை உடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்தக் கவலையின் காரணத்தை நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்ம நிமி, பதினான்காம் சந்திர நாளில் {சதுர்த்தசியில்} (உணவு பானம் உள்ளிட்ட) ஏற்புடைய பல்வேறு பொருட்களைத் திரட்டினார். அடுத்தக் காலையில் அவர் படுக்கையில் இருந்து எழுந்தார்.(8) துயரமிக்க இதயத்துடன் உறக்கத்தில் இருந்து எழுந்த அவர், ஒரு பொருளில் அஃது {இதயம்} ஈர்க்கப்பட்டிருப்பதிலிருந்து விலகுவதில் வென்றார். அவரது புத்தியானது வேறு காரியங்களில் சுறுசுறுப்பாக இயங்கத் தொங்கியது.(9) அப்போதுதான் அவர் குவிந்த கவனத்துடன் சிராத்தம் செய்யும் கருத்தை அடைந்தார். தவங்களையே செல்வமாகக் கொண்ட அந்தத் தவசியால், கனிகள் மற்றும் கிழங்குகள் உள்ளிட்ட தமது உணவுப் பொருட்கள் அனைத்தும், தமக்கு ஏற்புடைய அனைத்து வகைத் தானியங்களும் மிகக் கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டன.(11) புதுநிலவு {அமாவாசை} நாளில் அவர் துதிக்கத்தக்க எண்ணற்ற பிராமணர்களை (தமது ஆசிரமத்திற்கு அழைத்தார்). பெரும் ஞானம் கொண்ட நிமி அவர்களை (குசப் புற்களாலான) இருக்கைகளில் அமரச் செய்து, அவர்களை வலம் வந்து கௌரவித்தார்.(12) தன் வசிப்பிடத்திற்கு அழைத்து வந்த ஏழு பிராமணர்களை அணுகிய அந்தப் பலமிக்க நிமி, உப்பு கலக்காத சியாமாக அரசியாலான {சாமையரிசியாலான} உணவை அவர்களுக்குக் கொடுத்தார்.(13) உணவுண்டு கொண்டிருந்த அந்தப் பிராமணர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் தெற்கு நோக்கிய நுனிகளைக் கொண்ட எண்ணற்ற குசப்புற்கள் {தர்ப்பங்கள்} அவர்களது பாதங்களை நோக்கி வைக்கப்பட்டன.(14) தூய உடல், மனம் மற்றும் குவிந்த கவனத்துடன் கூடிய நிமி, குறிப்பிட்ட வகையில் அந்தப் புனிதப் புற்களை வைத்து, இறந்து போன மகனின் பெயரையும், அவனது குடும்பத்தையும் {கோத்திரத்தையும்} சொல்லி அவனுக்கு அரிசி பிண்டத்தை அளித்தார் {பிண்டப் பிரதானம் செய்தார்}.(15)
முனிவர்களில் முதன்மையான அவர் {நிமி}, இதைச் செய்துவிட்டு, (தம் அறிவுக்கு எட்டிய வரையிலும்) எந்தச் சாத்திரத்திலும் விதிக்கப்படாத செயலைச் செய்துவிட்டோமெனக் கருதி வருத்தத்தால் நிறைந்தார். உண்மையில் இவ்வாறு வருத்தத்தால் நிறைந்த அவர், தாம் செய்ததை நினைக்கத் தொடங்கினார்.(16) "ஐயோ, இதற்கும் முன்பு முனிவர்களால் ஒருபோதும் செய்யப்படாததைச் செய்திருக்கிறேன். (விதிக்கப்படாத ஒரு செயலைச் செய்து வினோதமான சடங்குகளை அறிமுகம் செய்தவன் என்ற வகையில்) பிராமணர்களின் சாபங்களை எவ்வாறு நான் தவிர்க்கப் போகிறேன்" என்று அவர் நினைத்தார்.(17) அப்போது அவர் தம் குலத்தின் அசல் மூதாதையரை நினைத்தார். அவர் நினைத்த மாத்திரத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்ட அத்ரி அங்கே வந்தார்.(18) இறப்பற்றவரான அத்ரி, மகன் நிமித்தமாகத் துன்பத்தில் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் அவரை {நிமியைக்} கண்டு, ஏற்புடைய ஆலோசனைகளின் மூலம் அவருக்கு ஆறுதல் வழங்கினார்.(19)
அவர் {அத்ரி} அவரிடம் {நிமியிடம்}, "ஓ! நிமியே, உன்னால் செய்யப்பட இந்தச் சடங்கு பித்ருக்களைக் கௌரவிக்கும் ஒரு வேள்வியாகும். ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவனே, அச்சமேதும் உனதாக வேண்டாம். பழங்காலத்தில் பெரும்பாட்டனே {பிரம்மாவே} இதைக் கண்டடைந்தார்.(20) நீ செய்த இந்தச் சடங்கு சுயம்புவாலேயே விதிக்கப்பட்டதாகும். சுயம்புவை {பிரம்மாவைத்} தவிர வேறு எவரால் சிராத்தத்திற்கான இந்தச் சடங்கை விதிக்க இயலும்?(21) ஓ! மகனே, சிராத்தங்கள் குறித்து விதிக்கப்பட்ட அந்தச் சிறந்த விதியை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மகனே, சுயம்புவால் விதிக்கப்பட்டதையே நீயும் பின்பற்றுவாயாக. முதலில் நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவனே, மந்திரங்களின் உதவியுடன் புனித நெருப்பில் முதலில் கரணம் செய்த பிறகு, அடுத்ததாக ஒருவன் நெருப்பின் தேவனுக்கும் {அக்னிக்கும்}, சோமன் வருணன் போன்ற தேவர்களுக்கும் எப்போதும் ஆகுதிகளை ஊற்ற வேண்டும்.(23) அடுத்ததாகப் பித்ருக்களின் துணைவர்களான விஸ்வேதேவர்களுக்கும் சுயம்பு காணிக்கைகளில் {அவிர்ப்பாகத்தில்} ஒரு பகுதியை விதித்தார்.(24)
சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளைத் தாங்கும் தேவியான பூமாதேவியும் அப்போது வைஷ்ணவி, காசியபி, வற்றாதவள் {அக்ஷயை} என்ற பெயர்களில் புகழப்பட வேண்டும்.(25) சிராத்தத்திற்கான நீர் இறைக்கப்படும்போது, பெரும்பலம் கொண்டவனான வருணன் புகழப்பட வேண்டும். ஓ! பாவமற்றவனே, அதன் பிறகு அக்னி மற்றும் சோமன் ஆகிய இருவரும் மதிப்புடன் இருப்புக்கு அழைக்கப்பட்டு (ஆகுதிகளால்) நிறைவடையச் செய்யப்பட வேண்டும்.(26) பித்ருக்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் தேவர்கள் சுயம்புவாலேயே படைக்கப்பட்டனர். உயர் ஆன்மாவைக் கொண்ட உஷ்மபர்களும் அவராலேயே படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்குகள் {அவிர்ப்பாகங்கள்} விதிக்கப்பட்டிருக்கின்றன.(27) சிராத்தங்களில் இந்தத் தேவர்கள் அனைவரும் துதிக்கப்படுவதன் மூலம், {துதிப்பவரின்} மூதாதையர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். சுயம்புவால் படைக்கப்பட்டவர்களான மேலே குறிப்பிடப்படும் பித்ருக்கள் எண்ணிக்கையில் எழுவராவர்.(28) அக்னியைத் தங்கள் வாயாகக் கொண்டிருக்கும் விஸ்வேதேவர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இப்போது சிராத்தங்களில் அளிக்கப்படும் காணிக்கைகளின் பங்குகளுக்கு {அவிர்ப்பாகங்களுக்குத்} தகுந்த உயர் ஆன்ம தேவர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(29)
பலன் {ஸஹன்}, திருதி {கிருதி}, விபாப்மன், புண்ணியக்ருத், பாவனன், பார்ஷ்னி {கிராம்யன்}, க்ஷேமன் {க்ஷேம்யன்}, ஸமூஹன், திவ்யஸானு,(30) விவஸ்வத் {விவஸ்வான்}, வீரியவத் {வீர்யவான்}, ஹ்ரீமத் {ஸ்ரீமான்}, கீர்த்திமத் {கீர்த்திமான்}, கிருதன், ஜிதாத்மன், முனிவீர்யன், தீப்தரோமன், பயங்கரன்,(31) அனுகர்மன், பிரதீதன் {பிரீதன்}, பிரதாத்ரி {பிரதாதா}, அம்சுமான், சைலாபன், பரமன், குரோதி, தீரோஷ்ணி, பூபதி,(32) ஸ்ரஜஸ் {ஸ்ரஜன்}, வஜ்ரின் {வஜ்ரீ}, வரி ஆகியோர் நித்திய விஷ்வேதேவர்களாவர். வித்யுத்வர்ச்சஸ், ஸோமவர்ச்சஸ், ஸூர்யஸ்ரீ என்ற பெயர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர்.(33) அவர்களுக்கு மத்தியில் உள்ளவர்களான ஸோமபன், ஸூர்யஸாவித்ரன், தத்தாத்மன், புண்டரீயகன், உஷ்ணீநாபன், நபோதன், விஷ்வாயு, தீப்தி,(34) சமூஹரன், ஸுரேசன், வியோமாரி, சங்கரன், பவன், ஈசன், கர்த்திரி {கர்த்தா}, கிருதி, தக்ஷன், புவனன், திவ்யகர்மக்ருத்,(35) கணிதன், பஞ்சவீர்யன், ஆதித்யன், ரஷ்மிமத் {ரஷ்மிவான்}, ஸப்தக்ருத், ஸோமவர்ச்சஸ், விஷ்வக்ருத், கவி,(36) அனுகோப்திரி {அனுகோப்தா}, சுகோப்திரி {ஸுகோப்தா}, நப்திரி {நப்தா}, ஈஷ்வரன் ஆகிய இவர்கள் அனைவரும் விஸ்வேதேவர்களாவார்கள். நித்தியமானவர்களான அவர்கள், காலத்தில் நேர்வது அனைத்தையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.(37)
கோத்ரவம் {கேழ்வரகு}, புலகம் என்றழைக்கப்படும் தானிய வகைகளைச் சிராத்தத்தில் காணிக்கையளிக்கக்கூடாது. சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பெருங்காயம் சேர்ந்த உணவு வகைகள், கிழங்குகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு {உள்ளி},(38) முருங்கை, மலையாத்தி, {கஞ்சா, பூசணி வகைகள்}, நஞ்சு தடவிய கணைகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சி, பரங்கிக்காய், சுரைக்காய், கரியுப்பு வகைகள் அனைத்தும் காணிக்கையளிக்கப்படக்கூடாது.(39) ஊர்ப்பன்றி இறைச்சி, வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சி, கருஞ்சீரகம், இந்துப்பு வகைகள், சீதபாகியென்னும் கீரை,(40) முளை, இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டி செய்யப்படும் பலகாரங்கள், சிங்காரக் கொட்டை {சிருங்காடகம்} ஆகியவை சிராத்தத்தில் கைவிடப்பட வேண்டியவை ஆகும். சிராத்தங்களில் அளிக்கப்படும் அனைத்துக் காணிக்கைகளிலும் அனைத்து வகை உப்புகளும், நாவற்கனிகளும் கைவிடப்பட வேண்டும்.(41) உமிழப்பட்ட, கண்ணீர் விழுந்த பொருட்கள் யாவும் சிராத்தங்களில் கொடுக்கப்படக்கூடாது[2]. பித்ருக்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில், அல்லது ஹவ்யகவ்யங்களோடு தேவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில் சுதர்சனம் என்றழைக்கப்படும் கீரை தவிர்க்கப்பட வேண்டும்.(42) இவை கலந்த ஹவி பித்ருக்களால் ஏற்கப்படுவதில்லை. சிராத்தம் நடைபெறும் இடங்களில் சண்டாளனும், ஸ்வபசனும் {சக்கிலியனும்} தவிர்க்கப்பட வேண்டும்;(43) மஞ்சள் கலந்த துணிகளை அணிந்திருப்பவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், (வரம்புமீறலுக்காக) விலக்கப்பட்டவர்கள், பிராமணக் கொலைக் குற்றவாளிகள், கலப்பு பிராமணன், விலக்கப்பட்ட மனிதனின் உறவினர் ஆகியோரும் தவிர்க்கப்பட வேண்டும். சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருந்து ஞானம் கொண்ட மனிதர்களால் இவர்கள் அனைவரும் விலக்கப்பட வேண்டும்" என்றார் {அத்ரி}.(44)
[2] கும்பகோணம் பதிப்பில், "சிராத்தத்தில் தும்மலையும், அழுகையையும் விட வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
பழங்காலத்தில், தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும், சிறப்புமிக்கவருமான அத்ரி, தம் குலத்தைச் சேர்ந்த முனிவர் நிமியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு சொர்க்கத்திலுள்ள பெரும்பாட்டனின் சபைக்குத் திரும்பிச் சென்றார்" என்றார் பீஷ்மர்.(45)
அநுசாஸனபர்வம் பகுதி – 91ல் உள்ள சுலோகங்கள் : 45
ஆங்கிலத்தில் | In English |