Agni helping digestion! | Anusasana-Parva-Section-92 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 92)
பதிவின் சுருக்கம் : சிராத்தம் செய்த முனிவர்கள்; செரிமானம் அடையாத தேவர்களும், பித்ருக்களும்; துணை செய்த அக்நி; ஹோமத்தோடு சிராத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மேற்குறிப்பிட்ட வகையில் நிமி செயல்பட்டபிறகு, விதிகளில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி (சிராத்தம் என்றழைக்கப்படும்) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலான வேள்வியைப் பெருமுனிவர்கள் அனைவரும் செய்யத் தொடங்கினர்.(1) கடமைகள் அனைத்தையும் செய்வதில் உறுதியாகவுள்ள முனிவர்கள் சிராத்தங்களைச் செய்து, புனித நீர் காணிக்கைகளை (பித்ருக்களுக்குக்) கவனமாக அளிக்கத் தொடங்கினர்.(2) எனினும், அனைத்து வகை {வர்ண} மனிதர்களாலும் (பித்ருக்களுக்கு) அளிக்கப்படும் காணிக்கைகளின் விளைவாக, அவ்வுணவைப் பித்ருக்கள் செரிக்கத் தொடங்கினர்.(3) விரைவில் அவர்களும், தேவர்களும் செரியாமையால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், அனைத்து மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிய உணவுக் குவியல்களால் பீடிக்கப்பட்ட அவர்கள் {பித்ருக்களும், தேவர்களும்} சோமனிடம் சென்றனர்.(4)
சோமனை அணுகிய அவர்கள், "ஐயோ, சிராத்தங்களில் எங்களுக்கு அளிக்கப்படும் உணவின் விளைவால் உண்டான எங்கள் துன்பம் பெரிதாக இருக்கிறது. எங்கள் சுகத்திற்குத் தேவையானதை நீ விதிப்பாயாக" என்றனர்.(5)
அவர்களிடம் சோமன், "தேவர்களே, சுகமடைய விரும்புபவர்களே, நீங்கள் சுயம்புவின் {பிரம்மனின்} வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அவர் உங்களுக்கான நன்மையைச் செய்வார்" என்று பதிலளித்தான்.(6)
ஓ! பாரதா, சோமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும் மேரு மலைகளின் சிகரத்தில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனிடம் சென்றனர்.(7)
தேவர்கள், "ஓ! சிறப்புமிக்கவரே, வேள்விகளிலும், சிராத்தங்களிலும் எங்களுக்கு அளிக்கப்படும் உணவால் நாங்கள் பெரிதும் பீடிக்கப்படுகிறோம். ஓ! தலைவா, எங்களுக்கு அருள்புரிந்து எங்களுக்கான நன்மையைச் செய்வீராக" என்று கேட்டனர்.(8)
அவர்களுடைய சொற்களைக் கேட்ட சுயம்பு {பிரம்மன்} அவர்களிடம் மறுமொழியாக, "இதோ என்னருகில் அக்னி தேவன் அமர்ந்திருக்கிறான். அவனே உங்களுக்கான நன்மையைச் செய்வான்" என்றான்.(9)
அக்னி, "ஐயன்மீர், சிராத்தம் செய்யப்படும்போது, நமக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை நாம் சேர்ந்தே உண்போம். அக்காணிக்கைகளை என்னுடன் சேர்ந்து நீங்கள் உண்டால், அவற்றை எளிதிற் செரிப்பதில் வெல்வீர் என்பதில் ஐயமில்லை" என்றான்.(10)
நெருப்பு தேவனின் இச்சொற்களைக் கேட்ட பித்ருக்களின் இதயம் சுகமடைந்தது. இக்காரணத்தினாலேயே, ஓ! மன்னா, சிராத்தங்களில் காணிக்கை அளிக்கப்படும்போது, முதல் பங்கானது நெருப்பு தேவனுக்கு அளிக்கப்படுகிறது.(11) ஓ! மனிதர்களின் இளவரசே, சிராத்தத்தில் காணிக்கைகளின் முதல் பங்கு நெருப்பு தேவனுக்கு அளிக்கப்பட்டால், மறுபிறப்பாள வகையில் பிறந்த ராட்சசர்களால் அத்தகைய சிராத்தத்திற்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது[1].(12) சிராத்தத்தில் நெருப்பு தேவனைக் கண்டதும் ராட்சசர்கள் அதனைவிட்டுத் தப்பி ஓடுவார்கள். சிராத்த சடங்கென்பது, முதலில் பிண்டத்தை (இறந்துபோன) தந்தைக்கு அளிப்பதாகும். அடுத்ததாக மற்றொன்று பாட்டனுக்கு அளிக்கப்பட வேண்டும்.(13) அடுத்ததாக ஒன்று பூட்டனுக்கு {பெரும்பாட்டனுக்கு} வழங்கப்பட வேண்டும். இதுவே சிராத்த விதியாகும். ஒவ்வொரு பிண்டம் கொடுக்கப்படும் போதும், அந்தக் கொடையாளி குவிந்த கவனத்துடன் சாவித்திரி மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(14) இந்த மந்திரமானது பித்ருக்களுக்குப் பிடித்தவனான சோமனிடமும் சொல்லப்பட வேண்டும். பருவகாலம் தொடங்கிய ஒரு பெண், அல்லது காதறுந்த ஒருவன் ஆகியோர் சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருக்க அனுமதிக்கப்படக்கூடாது. அதேபோல, சிராத்தம் செய்யும் மனிதனின் கோத்திரத்தைத் தவிர வேறு கோத்திரப்பெண்ணையும் அங்கே கொண்டுவரக்கூடாது[2].(15)
[1] "ராவணன் மற்றும் புலஸ்திய குலத்தில் பிறந்த பிற ராட்சசர்கள் பிரம்மராட்சசர்கள் அல்லது மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசர்கள் என்று அறியப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்[2] "இந்த நாள் வரையிலும் கூட, சிராத்தம் செய்பவரின் கோத்திரத்தைச் சார்ந்த அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் காணிக்கைக்கான அரிசியைச் சமைக்க அனுமதிக்கப்படுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஒருவன் தன் பித்ருக்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி அவர்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிக்க வேண்டும். உண்மையில், வழியில் ஓர் ஆறு வரும்போது ஒருவன் தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து அவர்களை நிறைவடைச் செய்ய வேண்டும்.(16) முதலில் தன் சொந்த குலத்தைச் சேர்ந்த மூதாதையருக்கு நீர்க்காணிக்கைகளை அளித்துவிட்டு, அதன் பிறகே (இறந்து போனவர்களான) தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அத்தகைய காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(17) ஒருவன் ஓர் ஓடையைப் பலவண்ணங்களிலான இரு எருதுகள் பூட்டப்பட்ட தேரில் கடக்கும்போதோ, ஓர் ஓடையைப் படகுகளில் கடக்கும் போதோ அவனுடைய பித்ருக்கள் நீர்க்காணிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள்.(18) இதையறிந்தவர்கள் எப்போதும் பித்ருக்களுக்குக் குவிந்த கவனத்துடன் நீர்க்காணிக்கைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் அமாவாசை நாளில் ஒருவன் இறந்து போன தன் மூதாதையருக்குக் காணிக்கை அளிக்க வேண்டும்.(19)
பித்ருக்களிடம் அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் வளர்ச்சி, நீடித்த வாழ்வு, சக்தி, செழிப்பு ஆகியன அனைத்தும் அடையத்தக்கவையாகின்றன. பெரும்பாட்டனான பிரம்மன், புலஸ்தியர், வசிஷ்டர், புலஹர்,(20) அங்கிரஸ், கிரது, பெரும் முனிவரான கசியபர் ஆகிய இவர்கள், ஓ! குரு குலத்தின் இளவரசே, யோகப் பேராசன்களாகக் கருதப்படுகிறார்கள்.(21) அவர்கள் பித்ருக்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, இதுவே சிராத்தம் குறித்த உயர்ந்த சடங்காகும். பூமியில் செய்யப்படும் சிராத்தங்களின் மூலம் ஒருவனுடைய குலத்தைச் சேர்ந்த, இறந்து போனவர்கள், துன்பநிலையில் இருந்து விடுபடுகிறார்கள்.(22) ஓ! குரு குல இளவரசே, இவ்வாறே சிராத்த விதிகள் குறித்துச் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் விளக்கிச் சொன்னேன்" என்றார் {பீஷ்மர்}.(23)
அநுசாஸனபர்வம் பகுதி – 92ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |